Thursday, 26 September 2013

The Shawshank Redemption:

குற்றங்கள் பெருகிவரும் சூழலில் அதற்கான தண்டனைகளைப் பற்றி சூடான விவாதங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் இன்றைய காலச்சூழலில், இந்த திரைப்படத்தைக் காண நேர்ந்தது எதிர்பாராத நிகழ்வாக இருக்கலாம். ஆனால், இந்த The shawshank Redemption எனக்குள் ஏற்படுத்தியுள்ள கேள்விகளை அகழ்வாராய்ச்சி செய்யும் போது நிகழ்வு எதிர்பாராததாகவே இருந்தாலும், மிகமிக அவசியமான ஒரு நிகழ்வாகவே எனக்குப்படுகிறது. 1994ல் ஹங்கேரிய பிறப்பும் அமெரிக்க வாழ்கையும் கொண்ட Frank Darabond என்ற இயக்குநரால் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தைப் பார்த்தால் உங்களுக்கும் அதேவிதமான கேள்விகள் எழுவதை தவிர்க்க இயலாது.


Stephen King என்ற எழுத்தாளரால் Rita Hayworth and Shawshank Redemption  என்ற பெயரில் எழுதப்பட்ட நாவல்தான் Frank Darabond அவர்களால் திரைப்படமாக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் maine என்னும் மாகாணத்தில் உள்ள Shawshank என்னும் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை Andy Dufresne என்னும் தனிமனிதனின் வாழ்க்கையின் ஊடாக திரைப்படம் சொல்லிச் செல்கிறது..


Andy Dufresne (டிம் ராபின்ஸ்) என்னும் வங்கி மேலாளன் தன் மனைவியையும் அவளது காதலனையும் சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக, பரோலில் கூட வெளியே வர முடியாத இரட்டை ஆயுள்தண்டனை அனுபவிக்கும் குற்றவாளி. ஆனால் அவனுக்கோ தான் குற்றம் செய்யவில்லை என்ற எண்ணம்.. இருப்பினும் தான் குடிபோதையில் இருந்ததாலும், சாட்சிகள் எல்லாம் அவனுக்கு எதிராக இருந்ததாலும் தண்டனை விதிக்கப்பட்டு Shawshank சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறான். அங்கு அவனுக்கு பல விசித்திரமான அனுபவங்கள் கிடைக்கின்றன. இருப்பினும் அங்கு 20 வருடங்களாக தண்டனை அனுபவித்தும் பரோல் மறுக்கப்படும் கைதியான Red (மோர்கன் ஃப்ரிமேன்) உடன் அவனுக்கு நட்பு ஏற்படுகிறது.. இந்த இரு மனிதர்களின் நட்பின் ஊடாக கைதிகள் சிறைக்குள் வரும் போதும், சிறையில் இருக்கும் போதும், சிறையை விட்டுச் செல்லும் போதும் அவர்களது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை மிகமிக துல்லியமாக விளக்குகிறது இந்த திரைப்படம். இது தவிர்த்து Andy என்னும் தனிமனிதனின் வாழ்க்கையிலும் எதிர்பார்க்க முடியாத பல திருப்பங்கள் நடக்கின்றன.. அதைப் பற்றிப் பேசப் போனால் அது படம் பார்க்கும் உங்களுக்கான சுவாரஸ்யத்தைக் கெடுத்துவிடும் என்பதால் அதை இங்கு தவிர்க்கிறேன்…


திரைப்படத்தின் மையமாக நான் பார்க்கின்ற விசயங்கள் இரண்டு. ஒன்று வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை விதைக்கும் தருணங்கள். இரண்டாவது வாழ்க்கையின் மீதான அவநம்பிக்கையை விதைக்கும் தருணங்கள்… இந்தப் பதிவினை நான் நம்பிக்கையின் பின்புலத்தில் முடிக்க விரும்புவதால் முதலில் அவநம்பிக்கையை விதைக்கின்ற தருணங்கள் கடந்து போகின்ற இடங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்…

பெரும்பாலும் வாழ்க்கையின் மீதான அவநம்பிக்கையை, தனிமனிதன் தன் வாழ்க்கையின் மீது தானாகவே விதைத்துக் கொள்வதில்லை.. ஏதோ ஒரு காரணத்தால் நண்பர்களாளோ, எதிரிகளாளோ, சமூகத்தாலோ அல்லது சில நேரங்களில் அரசாங்கத்தாலோ விதைத்துக் கொள்ள தூண்டப்படுகிறான்.. அல்லது விதைத்துக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகிறான்… பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையில் இதுதான் நடைமுறை. இதேதான் இந்த திரைப்படத்திலும் நடக்கிறது… அந்த அவநம்பிக்கையை விதைத்துக் கொள்கின்ற கதாபாத்திரத்துக்கு உதாரணமாக படத்தில் வருகின்ற பெரும்பாலான கதாபாத்திரத்தைக் கூறலாம். ஆனால் அதில் எனக்கு மிகமிக முக்கியமாகத் தோன்றும் இரண்டு கதாபாத்திரங்களைப் பற்றி பேச விழைகிறேன்.


அதில் முதல் கதாபாத்திரம் Brooke என்னும் பெரியவர். தான் செய்த குற்றத்துக்கு தண்டனையாக 50 ஆண்டுகால வாழ்க்கையை ஜெயிலில் கழித்தவர். அவரது உலகமே அந்த Shawshank சிறைச்சாலையாக சுருங்கிப் போய்விடுகிறது. சற்றுப் படித்தவர் என்பதற்காக அவருக்கு அங்கு கொடுக்கப்பட்ட பணி நூலக மேற்பார்வை. அந்தப் பணியை மிகமிக சந்தோசமாக செய்து கொண்டு தன் வாழ்க்கையை கழிக்கும் அவர் பறவைக் கூட்டில் இருந்து கீழே விழுந்த ஒரு காக்கை குஞ்சை தன் பாக்கெட்டில் வைத்து உணவளித்து வளர்த்து வருகிறார். அது பறக்கின்ற நிலைக்கு வந்த பின்னரும் அவருடனே ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது… அப்படிப்பட்ட சூழலில் அவருக்கு விடுதலை கிடைத்துவிட்டதாக சக கைதி ஒருவன் சேதி கொண்டு வருகிறான்… அவனை அந்த வயதானப் பெரியவர் என்ன செய்கிறார் தெரியுமா….? கண்ணீர் மல்க அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே கட்டி அணைத்து அவனது இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமழை பொழிவது இல்லை… மாறாக அவனை ஒரு கத்தியைக் கொண்டு கொலை செய்ய முயல்கிறார்….! ஏன்……????


இங்குதான் இந்த திரைப்படம் எனக்குள் எழுப்பும் முதலாவது கேள்வி எழும்புகிறது…? நாம் எதனை விடுதலை என்று கூறிக் கொள்கிறோம்…? 50 வருடமாக தனக்கான ஒரு உலகத்தை சிறைச்சாலைக்கு உள்ளாகவாக சிருஷ்டித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனை, பறவைக் கூட்டில் இருந்து தவறிக் கீழே விழுந்த ஒரு பறவைக் குஞ்சை காப்பாற்றப் பரிதவிக்கும் ஒரு பாசமுள்ள வயோதிகனை.. அவனது கூட்டில் இருந்து பிய்த்து, 50 ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து, பூமியை விட வேகமாக சுழலப் பழகிக் கொண்ட இந்த உலக மக்கள் நடுவே  உலவ விடுவதைத்தான் நாம் விடுதலை…. சுதந்திரம் என்று கூறிக் கொண்டு இருக்கிறோமா..?

இந்த திரைப்படம் எனக்குள் எழுப்பும் இரண்டாவது கேள்வியும் இங்குதான் எழும்புகிறது… இந்த உலகத்தில் நாம் ஒருவனை தவறு செய்தவனாக எண்ணிக் கொண்டு, அவனுக்கு நாம் தண்டனை தர முனையும் போது அவனை அனுப்புவதற்கு இந்த உலகத்தில் பல சிறைச்சாலைகள் இருக்கின்றன.. ஆனால் தண்டனை முடிந்து வெளியே வரும் போது நம் பாணியில் சொல்லப் போனால் விடுதலை அடைந்து வரும் அவனுக்கு இந்த பரந்த உலகத்தில் வாழ்வதற்கு எங்கு இடம் இருக்கிறது..? தண்டனை தரும் போது வரவேற்று ஏற்றுக் கொள்ளும் சிறைச்சாலையைப் போல் விடுதலையானவனை விருப்பமுடன் ஏற்றுக்கொள்ளும் இடமும் இந்த உலகத்தில் இருக்கிறதா…?

இது தவிர்த்து இன்னொரு விசயமும் தலையாயதாகப்படுகிறது. கணிப்பொறி கால்குலேட்டர் கண்டுபிடிப்புகளுக்கு முன்னர் நாம் போடுகின்ற வட்டிக் கணக்குகளில் மனித தவறுகள் அதாவது Human errors என்பதற்கு கண்டிப்பாக இடமிருக்கும். இன்றும் நம்மிடம் வட்டிக் கணக்குகளுக்கு உதவும் கணிப்பொறி மட்டும்தானே உள்ளது. வாழ்க்கைக் கணக்குக்கு உதவும் கணிப்பொறிகள் இல்லையே..? இந்த வாழ்க்கைக்கணக்குகளில் மனித தவறுகளுக்கு இடமிருப்பதை நாம் ஏன் பொருட்படுத்துவதே இல்லை. சுருங்கக் கூறினால், நாம் தீர விசாரித்து நீதியாக தண்டனை வழங்கிய வழக்குகளில் மனித தவறுகள் இருந்து, அதனால் ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையுமே பறிபோனால் அதற்கு யார் பொறுப்பு…? இந்த இடத்தில் தான் நாம் தவறென்றும், தண்டனை என்றும், விடுதலை என்றும் கூறிக் கொண்டு இருக்கும் நீதி தேவதையின் நியாயத் தீர்ப்பு தராசுகளில் பல ஊற்றுக் கண்கள் இருப்பதை உணர தலைப்பட முடியும்..


கதைக்கு வருவோம்… விடுதலை கிடைத்த Brooke தன்னிடம் வளர்ந்த காக்கையை அதற்கான புது உலகத்துக்குள் பறக்கவிட்டு விட்டு, தன்னுடைய புது உலகத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறார்… ஆனால் அந்த காக்கையைப் போல் அவருக்கொன்றும் இளவயதில்லையே..? அவரால் அதிஅவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு ஒட்ட முடிவதில்லை.. சக கைதியை கொன்றுவிட்டு சிறைக்குள்ளேயே இருக்க நினைத்ததைப் போல் வெளியிலும் யாரையாவது கொன்றுவிட்டு மீண்டும் ஜெயிலுக்குப் போய் விடுவோமா என்று எண்ணுகிறார்… அதற்கு அவரது மனம் இடம் கொடுக்காததால் வேறுவழியின்றி இறுதியில் தன்னையே கொன்று கொல்கிறார்… இப்படி அவரது எதிர்காலத்தின் மீதான அவநம்பிக்கையை அவருக்கு விதைத்தது யார்…?

இதில் இரண்டாவது கதாபாத்திரமாக நான் பேச நினைப்பது Red (மோர்கன் ஃப்ரீமேன்) கதாபாத்திரத்தை. மோர்கனும் ஒரு கட்டத்தில் பரோலில் வெளி வரும்போது அவரும் இதே போன்ற ஒரு பிரச்சனையை சந்திக்கிறார். அவரும் மறுபடி ஒரு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விடுவோமா என்றுகூட எண்ணுகிறார்... இந்த இடத்தில் தான் ஒருமுறை ஜெயிலுக்குப் போனவர்கள் மறுபடி மறுபடி ஜெயிலுக்குப் போவது, தவறுகளைத் திருத்திக் கொள்ளாததாலா…? அல்லது வெளி உலகத்தோடு ஒன்றி வாழமுடியாத, வாழ்க்கை மீதான அவநம்பிக்கையினாலா என்ற சந்தேக முரண் எழும்புகிறது… அவரும் கூட ஒரு கட்டத்தில் தன் வாழ்க்கையை வாழ முடியாத இயலாமையால், அவநம்பிக்கையால் தற்கொலை எண்ணத்தை எடுக்கும் போதும், அவருக்கு நம்பிக்கையை விதைப்பது நண்பன் Andyன் வார்த்தைகள் மட்டுமே…

ஆம்… வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை விதைக்கும் கதாபாத்திரமாக நாயகன் Andyன் கதாபாத்திரம். அது நம் எல்லோருக்குமே ஒரு பாடம். நாமும் வாழ்நாளில் எத்தனையோ இடங்களில் நம்பிக்கை தளர்ந்து போய் அடுத்து என்ன செய்வது என்று யோசித்திருப்போம்..? நம் எல்லோருக்குமே Andy சொல்கின்ற பாலபாடம் அந்த நம்பிக்கையை மீண்டும் கையில் எடுங்கள் என்பதைத்தான்… மேற்சொன்னதுபோல் நம் வாழ்க்கையில் அவநம்பிக்கையை விதைக்க போட்டி போட்டுக் கொண்டு பலர் வரலாம்… ஆனால் நம்பிக்கையை விதைக்க எண்ணினால் அது நம்மேல் உண்மையான அக்கறை கொண்ட ஒருவரால் அல்லது நம்மால் மட்டுமே முடியும் என்பதை உணர்த்தும் கதாபாத்திரம்.. எந்த இடத்திலுமே தன் மீது கொண்ட நம்பிக்கையை அந்த கதாபாத்திரம் இழப்பதே இல்லை… ஓரினச் சேர்க்கையாளர்கள் சிறையில் அவனை துன்புறுத்தும் போதும், வார்டன் கடுமையாக நடந்து கொள்ளும் போதும், தனக்கான எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டதாக, இரண்டு மாத காலங்களுக்கு இருட்டறையில் அவனை அடைக்கும் போது உணரும் போதும் அவன் அந்த நம்பிக்கையை இழப்பதில்லை… லைப்ரரியை விரிவாக்க உதவி வேண்டி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் கடிதம் எழுதுவதும், தன் விடுதலைக்காக தொடர்ச்சியாக 19 ஆண்டுகள் இடைவிடாமல் போராடும் போதும் அவனுக்கு இருக்கும் ஒரே பிடிப்பு அந்த நம்பிக்கை மட்டுமே..


இவை தவிர்த்து நடிப்பு என்று பார்க்கும் போது டிம் ராபின்ஸன், மோர்கன் ஃப்ரிமேன் இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.. தாமஸ் நீயுட்டனின் அற்புதமானப் பிண்ணனி இசை பல இடங்களில் உணர்வுகளைக் கடத்தும் அற்புதமான ஒரு மீடியமாக இருக்கிறது. டேராபாண்டின் இயக்கமும்  ரோஜர் டெக்கின்ஸின் ஒளிப்பதிவும் ஒரு வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்த ஒரு திருப்தியை ஏற்படுத்தும் நேர்த்தி உடையவையாக விளங்குகிறது.


ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் இழக்காத சொத்தாக வைத்திருக்க வேண்டிய நம்பிக்கையையும், கைதிகளின் பிரச்சனைகளையும் ஒருசேரப் பேசி, கைதிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை மற்றும் விடுதலை போன்ற பிரச்சனைகளை கேள்விக்குள்ளாக்கி விவாதிக்கத் தூண்டும் இந்த திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது, I SAW THE DEVIL போன்ற திரைப்படங்களில் வரும் கொடூரக் குற்றவாளிகளை என்ன செய்வது என்ற எண்ணமும் எழாமல் இல்லை… இருப்பினும் இந்த விசயங்கள் விவாதிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை… I SAW THE DEVIL தொடர்பான விவாதங்களை அடுத்த பதிவில் பேசலாம்…


வாழ்க்கையின் நம்பிக்கையை இழக்கும் எந்த தருணத்திலும் தைரியமாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்… Andyக்கு வந்த ஒரு மோசமான சூழலை விட ஒரு மோசமான சூழல் நமக்கு வரப்போவதில்லை என்பது நிச்சயம்… எனவே படம் முடியும் போது நாம் தொலைத்திருந்த நம்பிக்கையை கண்டிப்பாக மீட்டெடுக்கலாம்.. ஆனால் அதற்கு கொஞ்சம் பொறுமையும் முக்கியம்.. ஏனென்றால் The Shawshank Redemption உங்களை எல்லா இடத்திலும் குதூகலிக்கச் செய்யும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் அல்ல.. சற்று பொறுமையோடு பார்க்க வேண்டிய வாழ்க்கை…. சித்திரம்…

1 comment: