Saturday, 25 January 2014

கோலி சோடா:

நம்மை அதிகமாக யோசிக்கவே விடாமல், திரையில் வரும் கதாபாத்திரத்துக்காக பார்வையாளனை அதீதமாக உருக வைத்து, உணர்ச்சிவசப்படுத்தி, கதையில் ஒரு குறிப்பிட்ட காரியம் நடக்க வேண்டும் என்று நம்மை ஏங்க வைத்து, அதை எந்த ஏமாற்றமும் தராமல் நடத்தியும் காட்டி, பார்வையாளனை சந்தோசமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் கோலி சோடா வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.. இத்திரைப்படம் மிகப் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.. ஆனால் என்னை இத்திரைப்படம் பெரிதாக ஈர்க்கவில்லை.. அதற்கு மிகமுக்கிய காரணமாக இருப்பது, யதார்த்தமான ஒரு நான்கு சிறுவர்களின் வாழ்க்கையை, யதார்த்தத்தை மீறியதாக சுவாரஸ்யம் கலந்த ஒரு கற்பனை கதையாக படைத்து, அந்த கற்பனையிலேயே நம்மை லயிக்கச் செய்து, அந்தக் கற்பனையிலேயே நம்மை மனநிறைவும் அடையச் செய்து, யதார்த்தத்தின் வலிகளை உணரவேவிடாமல் நம்மை விரட்டியடித்து, புனைவு வகை கதைகளில் இத்திரைப்படம் தன்னையும் நிறுத்திக் கொண்டதுதான்….


கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தும் நான்கு சிறுவர்கள்.. பெற்றோர்கள் என்று அவர்களுக்கு யாரும் கிடையாது… உழைப்பதும் பிழைப்பதுமாக நகரும் அவர்களது வாழ்க்கை கேலியும் ஆர்ப்பாட்டமுமாக நகர்ந்து கொண்டிருக்க.. வாலிப வயோதிகத்தின் காரணமாக, அவர்களும் காதல் என்னும் சித்து விளையாட்டுக்களை கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.. அதன் விளைவால் தங்கள் எதிர்காலம் குறித்து அவர்கள் யோசிக்கத் தூண்டப்படுகிறார்கள்.. கோயம்பேடு மார்க்கெட்டில் பழக்கடை நடத்திவரும் ஆச்சி, எப்போதும் இவர்களை அனுசரனையாக நடத்தக்கூடியவர்.. அவரே இப்போதும் இவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார்.. அவருக்கு இவர்கள் வயதையொத்த ஒரு மகளும் உண்டு.. ஆச்சியின் வேண்டுகோளால் கோயம்பேடு மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுப்பவனும், மார்க்கெட்டையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் ஆன நாயுடு இவர்களுக்கு உதவ முன்வருகிறான்… அதன் மூலம் அந்த நான்கு சிறுவர்களுக்கும் ஒரு புதிய அடையாளம் கிடைக்கிறது.. ஆனால் அதன் ஆயுள் குறைவு… அவர்களின் அடையாளத்துக்கு வரும் ஆபத்து.. அவர்களின் உயிருக்கும் ஆபத்தாக மாறுகிறது… அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பது மீதிக்கதை..


படத்தின் ஆரம்பத்தில் இருந்து அந்த நான்கு சிறுவர்கள், கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கள் வாழ்க்கையை ஓட்டும் அந்த அற்புதமான வாழ்வியலும், அவர்களோடு மாயாவியாக இணைந்து கொள்ளும் அண்ணாச்சி செய்யும் லூட்டிகளும் மனதுக்கு மிக நெருக்கமானவை.. அது போல் அந்த வான்மதி கதாபாத்திரத்தின் வார்ப்பும், அதற்கான தேர்வும் அது போன்ற பெண்களின் சாத்தியக்கூறுகளும் அவ்வளவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை… அதுபோல்தான் அந்த வான்மதி கதாபாத்திரம் பேசும் வசனங்களும்.. அதுபோல் கவனிக்க வேண்டிய மற்றொரு கதாபாத்திரம் ஆச்சியின் கதாபாத்திரம்.. மிகமிக இயல்பான கதாபாத்திரம்.. அந்த நான்கு சிறுவர்களையும் தனது பிள்ளைகளைப் போல் நினைத்து வழிநடத்தும் கதாபாத்திரம்.. இவைகளும் சமூகத்தை சீரழிப்பவையும், தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான காட்சியாக மாறி நிற்கும் குடி கூத்து போன்ற காட்சிகளை முற்றிலும் தவிர்த்து இருப்பதும்தான்… கோலிசோடாவின் மிக முக்கிய ப்ளஸ்.


இப்படி மேற்சொன்ன காட்சிகளின் வழியாக மிக இயல்பாக பயணித்துக் கொண்டிருந்த கதை.. இயல்பை மீறுகின்ற இடங்களின் ஆரம்பமாக சிறுவர்கள் ஆற்றுகின்ற எதிர்வினை செயல்களில் இருந்து சொல்லத் தொடங்கலாம்.. நான்கு சிறுவர்களுக்கும் நாயுடுவின் ஆட்களுக்கும் ஏற்படுகின்ற அந்த முரண்பாடுகள் கூட ஓரளவுக்கு இயல்புத் தன்மை வாய்ந்தவை தான்.. அதுபோல் திரைக்கதைக்கான சில சுவாரஸ்ய முடிச்சுகளும் நயமாகத்தான் இருக்கின்றது.. ஆனால் அதற்குப் பிறகு நடக்கும் காட்சிகள் தான் நம்பகத்தன்மையை முற்றிலுமாக கெடுத்து, இது ஒரு வாழ்க்கையை காட்சிப்படுத்தும் யதார்த்த சினிமா அல்ல… ஒரு மிகச் சாதாரணமான கேளிக்கை சினிமா என்பதை நமக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது.. அதனால் மிகப்பெரிய மோசம் ஒன்றும் இல்லை.. ஆனால் எனக்கு சினிமாவை ஒரு கேளிக்கையாக மட்டும் அணுகும் வழக்கமில்லை என்பதுதான் பிரச்சனை… அதற்காக கேளிக்கை சினிமாவே வேண்டாம், தேவையில்லை என்று சொல்லவில்லை.. ஆனால் அதில் கொஞ்சமேனும் நம்பகத்தன்மையும் ஒரு புதுமை இருக்க வேண்டும் என்றே சொல்லுகிறேன்.. கோலி சோடாவில் கூட அந்த நான்கு சிறுவர்கள் இருக்கின்ற இடத்தில் ஒரே ஒரு மாஸ் ஹீரோவை நிறுத்திப் பார்த்தால் வழக்கமாக நாம் பார்த்த பல மசாலா படங்களுக்கும் கோலி சோடாவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்றே தோன்றும்… இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்.. ஒரே ஒரு புதுமை.. அங்கு ஒரே ஒரு மாஸ் ஹீரோ… இங்கு நான்கு சிறுவர்கள் அவ்வளவுதான்… இதே சூழலியல் வாழ்க்கையை பேசிய படமான அங்காடித் தெருவில் ஒரு வாழ்க்கை, ஒரு வலி, ஒரு யதார்த்தம் என எல்லாமே இருந்தது.. ஆனால் அதே போன்ற சூழலைக் கொண்ட இந்த நான்கு சிறுவர்களின் வாழ்க்கையில் மிதமிஞ்சிய கற்பனை கனவுகள் மட்டுமே இருக்கிறது…நடிப்பாகப் பார்த்தால் எந்த கதாபாத்திரத்திடம் குறை சொல்ல முடியாத நடிப்பு… இந்த விசயத்தில் விஜய் மில்டன் நன்றாகவே தேரியிருக்கிறார்.. பசங்க படத்தில் நடித்த அனுபவம் அந்த நான்கு சிறுவர்களுக்கும் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.. ஆச்சியாக நடித்திருக்கும் சுஜாதா சிவக்குமார், மாயாவியாக வரும் இமான் அண்ணாச்சி, மயிலாக வரும் விஜய் முருகன், வான்மதியாக நடித்திருக்கும் அந்தப் பெண் என எல்லோருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.. மேலும் இயக்குநர் பாண்டியராஜின் நறுக்கென தைக்கும் மிக இயல்பான வசனங்களும், விஜய் மில்டனின் வித்தியாசமான கோணங்களைக் கொண்ட கேமராவும் மிக தத்ரூபமாக இருக்கின்றது.. அதுபோல் கானா பாலாவின் ஈர்ப்பான குரலில் ஒலிக்கும் கானா பாடல்களும் கதைத்தன்மையை இன்னும் கொஞ்சம் இயல்பாக்குகின்றன..

ஆனாலும்…. குடி ஒரு போதை என்பது நமக்குத் தெரியும்… அது போல உணர்ச்சிவசப்படுவதும் கூட ஒரு போதை தான்… என்பதை நாம் புரிந்து கொள்வது மிகமிக கடினம்… ஏனென்றால் ஒரு கொலைகாரன் கொலை செய்வதும்.. உணர்ச்சிவசப்பட்ட ஒரு மனநிலையில் தான்… அந்த உணர்ச்சி வசப்பட்ட மனநிலை மனிதனை யோசிக்கவே விடாது… இதை நாம் அனுபவ பூர்வமாக உணர்வது.. அனுதாப அலையால் ஒரு கட்சியை ஜெயிக்க வைத்துவிட்டு.. அதற்குப்பின் அந்தக் கட்சி ஆட்சி நடத்தும் காலங்களில் தான்.. அதுபோலத்தான் கோலி சோடாவும்… திரையரங்கில் நான் பார்க்கும் போது… பல இடங்களில் அது என்னை உணர்ச்சிவசப்படுத்தி நான் இருக்கையில் குற்றவுணர்வோடு குதித்துக் கொண்டிருந்தேன்…. ஆனால் திரையரங்கில் இருந்து வெளிவந்து சில நிமிடங்களில் அந்த உணர்ச்சிகள் வடிந்து விட்டது… இப்போது யோசித்துப் பார்க்கும் போது எல்லாமே மடமைகளாகத் தெரிகிறது…


இருப்பினும் நீங்கள் திரைப்படம் பாருங்கள்… எதையுமே யோசிக்காமல் பாருங்கள்.. அதற்கு தேவை இருக்காது… திரைப்படம் உங்களை யோசிக்க விடாது… படம் பார்க்கும் போது உங்களுக்கு திரைப்படம் பிடிக்கலாம்.. வெளியில் வந்து நீங்கள் யோசிக்கத் தொடங்கும் போது உங்களுக்கு படம் பிடிக்காமலும் போகலாம்… அல்லது பிடித்தும் இருக்கலாம்… மொத்தத்தில் இயக்குநராக விஜய் மில்டனுக்கு ஒரு நல்ல படத்தைக் கொடுத்த திருப்தி இருக்கலாம்… ஆனால் என்னைப் பொருத்தவரை இது வணிக வெற்றியை ஓரளவுக்கு சாத்தியப்படுத்திய மற்றொரு சாதாரண வணிகப் படமாகத்தான் காட்சி தருகிறது…

Friday, 24 January 2014

கிம் கி டுக் வரிசை – 1

முந்தைய பதிவில் சொன்னது போல் இந்தப் பதிவில் இருந்து திரைப்பட இயக்குநர்களின் வரிசை தொடங்குகிறது. முதலாவதாக நாம் காண இருப்பது தென் கொரிய இயக்குநரான கிம் கி டுக் அவர்களின் படங்களைப் பற்றி..

(பி.கு: பெருவாரியான கிம் கி டுக்கின் படங்கள் அறம், நன்மை, நல்லது, ஒழுக்கம், நெறிமுறை, கட்டுப்பாடு, கற்பு இப்படி எந்தவிதமான மரபு எல்லைகளிலும் அடங்காமல், பரந்துபட்ட பெருவெளியில் இயங்கக் கூடியவை. மேற்சொன்ன தரவுகளை தங்கள் வாழ்வில் வழுவாமல் கடைபிடித்து வரும் மக்களுக்கு மேலோட்டமான பார்வையில் இவரது படங்கள் ஒருவிதமான ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது திண்ணம். அதனால் நீங்கள் கிம் கி டுக் வரிசையை புறக்கணித்துவிடலாம்.. ஆனாலும் என்னைப் பொறுத்தவரை இவரது படங்கள் பரிசுத்தமான அன்பால் நிரம்பி வழிபவை.. அன்பின் எதிர்முனையாக ஆயுதமேந்திய வன்மம் இருப்பதும் தவிர்க்க முடியாதது.. கிம்மின் படங்கள் இந்த இரண்டாலும் நிரம்பி வழிபவை.. அந்த இரண்டில் நாம் இறுதியாக எதைப் பெற்றுக் கொள்கிறோம் என்பது நம்மைப் பொறுத்த விசயம்… எனவே தயங்குபவர்கள் புறக்கணிக்கலாம்… தயக்கமில்லாதவர்கள் பின்தொடரலாம் என வலியுறுத்துகிறேன்… கிம் கி டுக் என்னும் மாபெரும் கலைஞன் புனைந்து வைத்திருக்கும் உலகிற்குள் நாம் பயணிப்போம்…)

கிம் கி டுக் வரிசை – 1


A person's current personality of love, hatred, jealousy, rage or a murderous intent and so on is formed upon genetic elements, education, the environment and a family a person grows in.
                                                                                                                           KimKi-duk 

BIRDCAGE INN:

பெரும்பாலான கிம் கி டுக்கின் கதைமாந்தர்கள் வாழ்வில் புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட, அன்புக்காக ஏங்கக்கூடிய, பரவலான மக்களால் கண்டுகொள்ளப்படாத வாழ்க்கையை வாழ்பவர்களாகவே இருப்பார்கள்.. 1998ல் வெளியான பேர்ட் கேஜ் இன்ன் என்னும் இத்திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.. சமூகத்தில் பாலியல் தொழில் புரியும் 23 வயதே நிரம்பிய ஒரு சிறுபெண் எதிர்கொள்ளும் உளவியல் சார்ந்த சிக்கல்களை, நம் பொதுபுத்தி சார்ந்த உளவியல் கேள்விகளோடு எதிர்கொண்டு விளம்புகிறது இத்திரைப்படம்.திரைப்படங்களின் குறியீடு சார்ந்த விவாதங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டு, அதை கேலிக்குரியதாக்கி நாம் வம்பளந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் கிம் கி டுக்கின் படங்களை குறியீடுகள் தொடர்பான விவாதங்கள் இல்லாமல் நகர்த்துவது கடினம்.. ஏனென்றால் இவரது படங்கள் வெறும் ஓவியம் போன்ற அற்புதமான காட்சித் தொகுப்புகளாலும், ஆழமான குறியீடுகளாலுமே நிரம்பி இருக்கின்றது.. வசனங்கள் என்பது மொத்தத்தில் ஒரு பக்கத்தை தாண்டினாலே அது அதிசயம்.. டீக்கடையில் டீக் குடிக்க அமர்கின்ற நாயகன், ஏன் இடது கையால் டீ க்ளாஸை பிடித்திருந்தான், ஏன் அவனது தோளின் வலது புறத்தில் ஓர் ஜோல்னாப் பை தொங்கியது என்பது போன்ற ஆழமான அவசியமற்ற குறியீடுகள் அல்ல இவரது படங்களில் வரும் குறியீடுகள்.. அவை கதையின் மையத்தை நாம் புரிந்து கொள்ள இருள் சூழ்ந்த திரைவெளியில் நமக்காக ஆங்காங்கே அடுக்கி வைக்கப்படும் ஒளி அடுக்குகள்..

எனவே அந்தக் குறியீடுகளுடனும், அவற்றை நான் எவ்வாறு புரிந்து கொண்டேன் என்பதான விளக்கங்களுடனும் சேர்ந்தே நாம் கதைக்குள் பயணிப்போம்.. தென்கொரியாவின் ஒர்  கடற்கரையொட்டி இருக்கின்ற நகரத்தின் ஒரு விடுதிக்கு வந்து சேர்கிறாள் ஒரு இளம்பெண். (Jin a) அங்கு ஒரு குடும்பம் வசிக்கிறது.. அது தவிர்த்து ஒரு மூன்று நான்கு அறைகள்.. கணவன் மனைவி. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்(Hye-me).. மகளுக்கு இந்தப் பெண்ணின் வயதிருக்கும்.. படித்துக் கொண்டிருப்பவள், மகன் இளையவன்… அந்த இல்லத்தரசி புதிதாக வந்த இளம்பெண்ணை அம்மா என்று அழைக்கும்படி கூறுகிறாள்.. ஆக இது எல்லாமே ஒரு செட்-அப்.. நம் ஊர் சம்பிரதாயப்படி வெளியில் இருந்து பார்ப்பதற்கு அங்கு ஒரு குடும்பம் வசிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி, அதற்குள் விபச்சாரம் செய்யும் அதேவகை நுட்பம்தான்… நம்மூர் வழக்கப்படியே அங்கும் போலீசுக்கு இந்த நுட்பங்கள் தெரியும்… காசு வாங்கிக் கொண்டு கடமையை செய்வார்கள் போலும்.. கதையின் களம் மட்டும்தான் இது.. கதையல்ல..


கதை..? பரத்தமையை தொழிலாக செய்யும் விருந்தாளி பெண்ணுக்கும்(jin-a) அங்கே வசித்து வரும் அதே வயதொத்த பள்ளி சென்று கல்வி கற்கும் பெண்ணுக்கும்(Hye-me) இடையேயான கலாச்சார, கற்புநிலை முட்டல் மோதல்களும் அதன் வழியாக கிடைக்கின்ற முடிவும் தான் மொத்த கதையும்.. தன் வீட்டில்  தங்கியிருக்கும் jin-aவை Hye-mi ஆரம்பத்தில் இருந்தே வெறுக்கிறாள்.. அவள் வீட்டுக்குள் வருவதை தான் விரும்பவில்லை என்பதை குறிப்பால் உணர்த்துவதைப் போல், அவளை வெளியே நிறுத்தி கதவை சாத்துவதும், தன் டூத்பேஸ்ட்டை அவளை தொட அனுமதிக்காததும், அவள் தொட்ட உணவை புறக்கணிப்பதுமாக Hye-mi பெரும்பாலான காட்சிகளில் Jin-a வை வதைத்துக் கொண்டே இருக்கிறாள்.. இதற்கு காரணமாக காட்சிப்படுத்தப்படுவது.. ஒன்று அவளுக்கு தன் வீட்டில் அந்த தொழில் நடப்பது பிடிக்கவில்லை என்பதும், தன் காதலனுக்கு அந்த உண்மை தெரிந்தால் அவன் தன்னை புறக்கணித்துவிடுவானோ என்ற பயவுணர்வும், அதையும் தாண்டி இந்த இளம் வயதில் இப்படி ஒரு தொழிலில் இவள் ஈடுபடுகிறாளே என்கின்ற மேலதிகமான வெறுப்புணர்ச்சியுமே… இதனால் Hye-mi கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் Jin-a வை செயல்களால் வதைப்பதோடு மட்டும் அல்லாமல் வார்த்தைகளாலும் வதைக்கிறாள்.. “உன் பிரிவு வேறு, என் பிரிவு வேறு..” நீ வாழ்கின்ற கீழ்த்தரமான வாழ்க்கையை எல்லோராலும் வாழ முடியாது..” “உனக்கு எல்லாமே எளிது..” என அவளது வசைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது…


இந்த சித்ரவதைகள் போதாதென்று, அவளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு கயவாளியும் அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு, தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிறான்.. Hye-mi யின் தகப்பனுக்கும் ஒரு கட்டத்தில் வேறுவழியின்றி Jin-a இரையாகிறாள்.. Hye-mi யின் தமையனும் கெஞ்சி கூத்தாடி தன் முதல் காம அனுபவத்தைப் அவளிடம் இருந்து பெற்றுக் கொள்கிறான்.. இதுபோக அத்துமீறி வன்புணர்ச்சி செய்யும் சிலரால் அவள் காயமடைவதோடு, ஆணுறை இன்றி புணர்ந்த ஒருவனின் காரியத்தால் கருவுருகிறாள்.. இப்படி அவள் வாழ்வில் துன்பம் என்னும் சூறாவளி சுழன்று சுழன்று அடிக்கிறது… இருப்பினும் Hye-mi யின் தகப்பனும் தமையனும் ஓரளவுக்கு jin-a வுக்கு ஆறுதலாக இருக்கிறார்கள்.. இந்நிலையில் தன் காதலனை வீட்டுக்கு தான் அழைத்து வருவதால், அன்று இரவு கொஞ்ச நேரம் jin-a வீட்டில் இருக்கக்கூடாது என்று அவளை வெளியே அனுப்ப… அதை தாங்கிக் கொள்ள முடியாமல், Jin-a எடுக்கின்ற  முடிவும் அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும் நம் ஒழுக்க ரீதியிலான கோட்பாடுகளை அதீதமாக சீண்டிப் பார்ப்பவை.. அதை நீங்களே திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்…

இதில் Hye-mi யின் கதாபாத்திரத்தை நாம் நம் சமூகத்தின் பிரதியாக வைத்து ஒப்பிட்டுப் பார்க்கலாம்.. Hye-mi யின் குடும்பத்துக்குள் Jin-a ஒரு நபராக வாழ்வதைப் போலத்தானே நம் சமூகத்துக்குள் பாலியல் தொழில் செய்பவர்களும் ஒரு குடும்பமாக வாழ்கின்றார்கள்.. அவர்களை நம் சமூகம் Hye-mi பூதாகர கண் கொண்டுதானே இன்னும் பார்க்கிறது.. அவர்கள் இந்தத் தொழில் செய்பவர்கள் தான் என்று தெரிந்துவிட்டால் அவர்களை வார்த்தைகளாலும் செயல்களாலும் வாட்டுவதில் நாம் Hye-mi யைவிட எந்தவகையிலும் குறைந்தவர்கள் இல்லைதானே… அவர்களை கீழ்தரமாக சித்தரித்துக் கொள்வதும், நம்மை நாமே மேலானவர்களாக காட்டிக் கொள்வதும், நம்மை மேலானவர்களாக நம்பிக் கொள்வதும் எவ்வளவு கீழ்த்தரமான செயல்… இப்போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அடைந்திருக்கும் மேன்மையான, மேட்டிமையான, உயர்தர சொகுசு நிலைக்கு முழுக்க முழுக்க நீங்கள் மட்டுமே காரணம் என்று மனசாட்சிக்கு விரோதம் இன்றி உங்களால் கூற முடியுமா…? முடியாதுதானே… அப்படி இருக்கும்பட்சத்தில் நம் சமூகத்தில் சிலர் கீழ்தரமான, மோசமான, பொருளாதாரத்தில் தாழ்ந்த ஒரு நிலையை அடைந்ததற்கு எப்படி அவர்கள் மட்டுமே முழுக்க முழுக்க பொறுப்பாக முடியும்… இதில் அவர்களை நினைத்து நாம் அவமானப்படவும்.. நம்மை நினைத்து நாம் பெருமிதம் கொள்ளவும் என்ன இருக்கிறது….??

சரி.. அதை விடுங்கள்… Hye-mi யின் குடும்பத்தில் இருந்து Jin-a வை தேடிச் செல்லும் அவளது தகப்பனும் தமையனும் அவள் மூலமாக சந்தோசம் அடைகின்றனர்.. அப்படியானால் Hye-mi யின் குடும்பத்தில் வசிப்பவர்களுக்கும் தானே Jin-a வின் தேவை இருக்கிறது… அதற்காகத்தானே அவள் உருவாக்கப்படுகிறாள்… இது நம் சமூகத்துக்கும் பொருந்தும் தானே.. போலி முகமூடி அணிந்து கொண்டு, இருள் பரவியதும் நம் சமூகத்தில் இருந்து, பாலியல் தொழில் செய்யும் குடும்பத்தை நோக்கிச் செல்லும் நம் சமூகம் சார்ந்த வாடிக்கையாளர்களுக்காகத்தானே.. அப்படி ஒரு அங்கம் இயங்குகிறது.. அப்படியானால் அப்படி ஒரு அமைப்பு உருவாக்கத்தில் நமக்குத்தானே பெரிய பங்கு இருக்கிறது…. உண்மை இப்படி இருக்க…. அவர்களை மட்டும் கேலிக்குரியவர்களாகவும், கேவலத்துக்கு உரியவர்களாகவும் ஆக்குவது எப்படி சரியாகும்..? இந்த இரண்டுமே இத்திரைப்படம் நமக்குள் ஏற்படுத்தும் இரண்டு முக்கியமான கேள்விகள்…

இவை தவிர்த்து குறியீடுகளாக காட்டப்படும் பிம்பங்கள் மிகமிக அசாத்தியமானது.. படத்தின் ஆரம்பக் காட்சியில் உடைந்த ஒரு மீன் ஜாடியில் நீரின்றி ஒரு தங்கமீன் தவித்துக் கொண்டிருக்கிறது… அதன் அருகே இருக்கும் ஒரு குட்டி ஆமை மெதுமெதுவாக நகர்ந்து சாலைக்கு வந்துவிடுகிறது… அதை Jin-a பிடித்து நீர்ப்பரப்பில் விடுகிறாள்.. ஆமை நீந்திச் செல்கிறது.. இதுதான் படத்தின் ஆரம்பக் காட்சி.. இதை எந்தவிதமான காரணமும் இன்றி கிம் கி டுக் படமாக்கி இருக்கிறார் என நம்ப நான் தயாராக இல்லை.. ஏதோ சொல்ல வருகிறார்.. அது என்ன..? என்னைப் பொறுத்தவரை அந்த ஆமையை விட தங்கமீன் மீதே என் கவனம் செல்கிறது.. ஏனென்றால் அதுவே படத்தில் தொடர்ச்சியாக வருகிறது… ஒரு வேளை இப்படி இருக்கலாம்… மீன் நீரில் மட்டுமே இருக்க முடியும்… ஆமையோ நீர் நிலம் இரண்டிலும் இருக்கமுடியும்… என ஆரம்பிக்கத் தெரிந்தாலும் அதை முடிக்கத் தெரியவில்லை..

ஆனால், இதில் வரக்கூடிய அந்த தங்கமீனை நான் பாலியல் தொழில் செய்யும் அந்தப் பெண்களுக்கான குறியீடாகவே சொல்லுவேன்.. ஏனென்றால் Jin-a அந்த கடற்கரை நகருக்கு வரும் போது ஒரு பெண் எதிர்படுகிறாள்… அவள் மீது Jin-a தெரியாமல் மோதிவிடும் போது அவள் கையில் இருக்கும் தங்கமீன் கொண்ட மீன் பாக்கெட் தவறி விழுந்துவிடுகிறது… தண்ணீர் அனைத்தும் கீழே கொட்டியதால், மீன் மண் தரையில் கிடந்து துடிக்கிறது.. அந்தப் பெண் செய்வதறியாது திகைக்க… Jin-a உடனடியாக அந்தப் பாக்கெட்டை விரித்து தன் வாட்டர் பாட்டிலில் இருந்து நீரை பாக்கெட்டில் கொட்டி, அந்த மீனை எடுத்து போடுகிறாள்.. மீன் நீந்தத் தொடங்க… அந்தப் பெண் அதை வாங்கிக் கொண்டு, Jin-a வந்திறங்கிய அதே டாக்ஸியில் ஏறிச் செல்கிறாள்… Jin-a திரும்பி BIRDCAGE INN என்னும் அந்த விடுதிக்கு வந்து அவளுக்காக ஒதுக்கப்பட்ட அந்த அறைக்குள் நுழைய… அங்கு ஒரு பழைய போட்டோ கிடக்கிறது… அது அந்த மீன் கொண்ட சென்ற பெண்ணின் போட்டோ.. அதற்கு அருகே மீன் தொட்டி நீரின்றி மீன் இன்றி காலியாக இருக்கிறது… இந்தக் காட்சி எதற்காக…? ஏன் மோத வேண்டும்..? ஏன் தண்ணீர் கீழே கொட்ட வேண்டும்..? ஏன் Jin-a வாட்டர் பாட்டில் நீரால் அதை நிரப்ப வேண்டும்…? மிக அற்புதமான குறியீடு.. அவர்கள் அழகுக்காக ரசிக்கப்படும் தங்கமீன்கள்… அவ்வபோது நீர் மாற்றப்படுவது போல் இடம் மாற்றப்படும் அவ்வளவே..

அடுத்து இரண்டு காட்சிகள் கழித்து Jin-a கையில் நீர் நிரம்பிய ஒரு பாக்கெட்டில் தங்கமீனை வாங்கி வந்திருப்பாள்.. அது போக குழம்பு வைப்பதற்கும் மீன் வாங்கி வந்திருப்பாள்… அதே நேரம்… Hye-mi யின் தகப்பன் வாசல் சுவற்றில் மீன் படங்களை வரைந்து கொண்டிருப்பான்… அவனருகே அமரும் Jin-a ஒரு நண்டு படத்தை வரைவாள்… இந்தக் காட்சியும் காரணம் இல்லாமலா வைக்கப்பட்டு இருக்கும்… கண்டிப்பாக இல்லை.. இதை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன்… மீனாக பிறப்பதையே நம்மால் தீர்மானிக்க முடியாத போது, சமையலுக்கான மீனாகப் பிறந்து ஒருவனுக்கு உணவாகி இறப்பதோ.. அல்லது பலருக்கும் சந்தோசம் கொடுக்கும் தங்கமீனாக இருந்து இறப்பதோ நாம் எப்படி தீர்மானிக்க முடியும் என்னும் கேள்வியை எழுப்பும் இடமாக நான் பார்க்கிறேன்… இதில் சாதாரண பெண்களுக்கான குறியீடாக சமையலுக்கான மீனும், பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கான குறியீடாக தங்கமீனும் இருப்பதாக பார்க்கிறேன்.. மேலும் அதை தொடர்ந்து வரும் காட்சியில் Hye-mi யின் தகப்பன் அவளை வன்புணர்ச்சி செய்யும் போது, அவள் கையில் இருக்கும் மீன் பாக்கெட் தெறித்து, நீரின்றி மீன் துடித்துக் கொண்டிருக்கும்.. Jin-a வோ தரையில் துடித்துக் கொண்டிருப்பாள்.. மீன் சாகப் போகும் தருணத்தில் Hye-mi யின் தகப்பன் jin-a வைவிட்டு நீங்குவான்.. அவள் தட்டுதடுமாறி மீனை எடுத்து மீன் ஜாடியில் போடுவாள்… மீன் ஓடத் துவங்குவதாக அந்தக் காட்சி முடியும்..

இது தவிர்த்து Hye-mi யின் சகோதரன் மீனைப் பார்ப்பதாக சொல்லிக் கொண்டு உள்ளே வந்து இவளைத் தான் பார்ப்பான்.. மேலும் Hye-mi முதன்முறையாக ஜின்-ஆவின் அறைக்குள் வரும்போதும் மீனைப் பார்த்தவுடன் தான் அவளுக்கு Jin-a வின் நினைவு வரும்.. அன்புக்காக ஏங்கி தவிக்கும் Jin-a ஒரு கட்டத்தில் தனக்கு சண்டை போட்டுக் கொள்ளக் கூட ஒரு காதலன் இல்லையே என்று சொல்லும் இடமும், Hye-mi யை ஒரு தோழியாக மாற்ற முயன்று அவள் தோற்கின்ற இடத்தில் மனம் உடைந்து அழுவதும், மீன் தொட்டியில் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கும் அந்த மீனையே பார்த்துக் கொண்டிருக்கும் போதும், இது போன்ற பெண்களின் வாழ்க்கை ஒரு குறுகிய வெளிக்குள் அடைக்கப்பட்டு இருப்பதும், அவர்கள் தங்களின் தனிமையை எண்ணி கலங்குவதும், மைய நீரோட்ட வாழ்க்கையில் தங்களை அவர்கள் கலக்க முனைவதும், அதற்கு தடையாக இருக்கும் சமூக காரணிகளைக் கண்டு அவர்கள் கோபத்தில் வெடிப்பதும், குற்றமாக, இழிவாக, அசுத்தமாக நாம் கற்பிதம் கொள்ளும் செயல்களை அவர்கள் ஆர்ப்பரிப்புடன் அங்கீகரிப்பதுமாக இதுபோன்ற பெண்களின் உள்ளக்கிடக்கையை அற்புதமாக படம் பிடிக்கிறது இத்திரைப்படம்…


அவர்கள் ஒரு குறுகிய மீன் தொட்டி போன்ற ஒடுக்கப்பட்ட சூழலுக்குள் வாழ விரும்பாமல், சாதாரண மக்களைப் போல் மைய நீரோட்டத்தோடு கலந்து சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள்… மேலும் நாம் அவர்களை புறக்கணிப்பதும், விமர்ச்சிப்பதும் அவர்களை காயப்படுத்துவதோடு அல்லாமல் அவைகளை செய்வதற்கு நமக்கு எந்த அறுகதையும் கிடையாது என்பதையும் மிகத் தெளிவாக விளக்குகிறது Birdcage inn.. தன் போராட்டத்தின் கடைசியாக தனக்கு கிடைக்காத சுதந்திரத்தை தன் மீனுக்காவது கொடுக்க நினைத்து அதனை பரந்த நீர்வெளியில் சுதந்திரமாக நீந்தவிட்டு, தன் கைகளை அறுத்துக் கொள்கிறாள்… Jin-a..


Jin-a வின் நிலையை Hye-mi அறிந்து கொள்ளும் இடங்கள் மிகவும் கவித்துவமானவை.. Hye-mi தன் வாழ்க்கைக்கும் Jin-a வின் வாழ்க்கைக்கும் எந்தவிதத்திலும் ஒற்றுமை இல்லை என்று எண்ணுபவள்.. மேலும் தான் கல்வி கற்பவள் என்பதில் மேட்டிமை சார்ந்த திமிறும் அவளுக்கு உண்டு.. ஆனால் எப்போது Jin-a வின் அறையில் நுழைந்து அவளது பள்ளிகால போட்டோக்களைப் பார்த்தாலோ அப்பொழுதே அவளது எண்ண ஓட்டங்கள் மாறத் தொடங்கிவிடுகிறது… இவளும் என்னைப் போன்று படித்தவளா..? என்று அதிர்ச்சியடையும் அவள் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை புரிந்து கொள்வதோடு, முதன்முதலாக இருவரது வாழ்க்கையிலும் ஒற்றுமையை கண்டுகொள்கிறாள்.. அவளது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய துணிகிறாள்… அதை மாசு மறுவற்ற மனதோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் ஒரு கட்டத்தில் அடைவதோடு, அவளுக்காக கண்கலங்கவும் செய்கிறாள்.. அதுவரை காமம் என்னும் செயலின் மேல் அவளுக்கு ஏற்பட்ட வெறுப்பும் மெல்ல மெல்ல அகலத் தொடங்க… அதன் தேவையை புரிந்து கொள்கிறாள்.. அதோடு நிற்காமல் அவளை தன் தோழியாக ஏற்றுக் கொண்டு, அவளது வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து பார்க்கவும் துணிகிறாள்…


தன்னை Hye-mi மதிப்பதையும், தனக்காக கண் கலங்குவதையும், தன்னையும் ஒரு மனுஷியாக மதித்து அவர்களது குடும்பத்தில் ஏற்றுக் கொண்டதையும் தான் விரும்பியதைப் போல், மைய நீரோட்ட வாழ்க்கையோடு இணைந்ததை நினைத்து Jin-a சந்தோசம் கொள்கிறாள்… Jin-a மற்றும் Hye-mi இருவருமே மீன் தொட்டிக்குள் இல்லாமல், ஒரு பெரிய நீர்ப்பரப்பில் சுதந்திரமாக நீந்திச் செல்லும் தங்கமீன்களாக மாறி நீர்ப்பரப்பின் மேற்ப்புரம் அமர்ந்திருக்க… ஒரு கட்டத்தில் Jin-a வால் தொட்டியில் இருந்து நீர்ப்பரப்பில் விடப்பட்ட தங்கமீன் மேற்பரப்பில் நீந்திக் கொண்டு இருக்கிறது… அதை இருவரும் சேர்ந்து ரசிப்பதாக திரைப்படம் முடிவடைகிறது..


இப்படி காமம், வெறுப்பு, அன்பு, என கலந்துப்பட்ட உணர்வுகளால் ஒரு அற்புதமான காண்பனுவத்தைக் கொடுக்கிறது இத்திரைப்படம். ஒரு கட்டத்தில் Hye-mi யின் தகப்பனும் தமையனும் Jin-a வை பயன்படுத்திக் கொண்டாலும், அவளை அவர்கள் துன்புறுத்துவதில்லை.. மேலும் அவர்களே அவளுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார்கள்.. அவளும் அதையே காரணமாக்கி அவர்களை வதைப்பதும் இல்லை… மேலும் Jin-a வை பின் தொடர்ந்து வரும் அந்த கயவனும் முடிவில் தன் காதலையே வெளிப்படுத்திச் செல்கிறான்… மேலும் ஆரம்பக் காட்சியில் கையில் மீனுடன் செல்லும் பெண் விடுதியில் இருந்து செல்லும் பெண் என்பதையும், jin-aவும் Hye-miயும் ஒன்றாக தெருவில் நடந்து வரும்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இவள் தன் வீட்டுக்கு வந்தவளாக இருக்குமோ என்பதை யூகிக்கும் இடமும் அற்புதமான கற்பனை. Jin-a வாக நடித்திருக்கும் Lee ji-eun மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.. உதடுகளில் லிப்ஸ்டிக் தடவிக் கொண்டு தெனாவட்டாக நடந்துவந்து உண்மையைப் போட்டு உடைக்கும் இடத்திலும், அறை வாங்கிய வலியோடு அழுது கொண்டே உணவு உண்ணும் அந்தக் காட்சியிலும், வாக்மேனை திருப்பிக் கொடுக்கும் Hye-mi யை அறைந்துவிட்டு மனம் உடைந்து அழும் போதும் அற்புதமான நடிப்பு… ஓரிரு இடங்களிலே வந்து செல்லும் இசையாக இருந்தாலும் மிக அற்புதமான பிண்ணனி இசை… கிம் கி டுக்கின் படங்களில் கண்டிப்பாக தவறவிடக்கூடாத படங்களில் இதுவும் ஒன்று… நான் புரிந்து கொண்ட சில தவறாகவும் இருக்கலாம்… படம் பார்த்துவிட்டு வாருங்கள் மீண்டும் விவாதிப்போம்….

அடுத்தப் பதிவு
கிம் கி டுக்கின் ”THE BOW (2005)”

                                                                              

திரைப்பட இயக்குநர்கள் வரிசை:

திரைப்படங்களை வெறும் கேளிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் பார்க்கும் பார்வையாளர்கள் ஒரு ரகம். திரைப்படங்கள் மீது தீவிரமான காதல் கொண்ட மனநிலையில் இயங்குபவர்கள் இன்னோரு ரகம். இதில் நான் இரண்டாவது ரகத்தில் இருப்பதாய் நம்பிக் கொண்டு இருப்பவன்.. இந்த இரண்டாவது ரகத்திலும் இரண்டு வகைமைகள் உண்டு.. ஒன்று திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற சுயம் சார்ந்த ஆசையால் சினிமாவின் மீது ஏற்பட்ட தீவிரமான காதல் மனம் கொண்டவர்கள்.. இன்னொன்று தமிழ் சினிமாவின் தரம் உயர வேண்டுமே என்ற பொதுவெளி சார்ந்த ஆசையால் சினிமாவின் மீது தீராத விமர்சன மனநிலையோடு இயங்குபவர்கள்.. இதில் எனக்கு எந்த ஆசை என்று கேட்டால் இரண்டின் மீதும் என்றே சொல்லுவேன்…


”சினிமா பார்க்கப்படுவதோ கேட்கப்படுவதோ அல்ல.. அது உணரப்படுவது” என்ற வாக்கியங்களில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவன் நான்.. ”நான் பெரும்பாலான திரைப்படங்களைப் பார்ப்பது எப்படி திரைப்படம் எடுப்பது என்று கற்றுக்கொள்வதற்காக மட்டுமன்றி, எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக்கொள்வதற்குத்தான்…” என்று சொன்னால் அது ஓரளவுக்கு உணர்ச்சி ததும்பிய மனநிலையில் பேசியதாகத் தோற்றம் தந்தாலும், நிச்சயமாக அதில் உண்மை இருக்கிறது.. இது திரைப்படங்கள் தவிர்த்து இலக்கியங்களுக்கும் பொருந்தும்.. என் போன்ற மனிதர்களுக்கு ஒரு இரண்டரை மணி நேர திரைப்படமோ, ஒரு இருபது மணி நேர நாவலோ, எதுவாக இருந்தாலும் அது நாம் கேள்விப்படாத, கடந்துவராத, யோசித்துப் பார்க்காத, வாழ்ந்து பார்க்க வாய்ப்பேயில்லாத ஒரு வாழ்க்கையை அந்த குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் வாழ்ந்து பார்ப்பதற்கான ஒரு தளமாகவே காட்சியளிக்கிறது.. அது பெரும்பாலான நேரங்களில் விடை காண முடியாத ஆனால் கண்டிப்பாக விடை காண வேண்டிய பல கேள்விகளை எனக்குள் எழுப்பிக் கொண்டே இருக்கிறது..

ஆனால் என்னளவில் ஒரு திரைப்படத்தை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று.. தற்போது வெளிவந்துள்ள ”மேதைகளின் குரல்கள்” என்ற இயக்குநர்களின் நேர்காணல் தொகுப்பு புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இயக்குநர் சத்தியஜித்ரேவின் வார்த்தைகளில் சொல்வதானால் “இயக்குநர் ஒருவருக்கு மட்டுமே அவரது படைப்பு எப்படிப்பட்டது என்று தெரியும்..” இந்த வாக்கியத்தை நான் கடந்து வரும் போதுதான் ஒரு படைப்பை புரிந்து கொள்வதற்கு முன் அந்த படைப்பாளனை ஓரளவுக்காவது புரிந்து கொள்வது சர்வ அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்.. அதன் மூலமாக அவரது படைப்புகளை தொடர்ச்சியாக அணுகும் போது, அவரது படைப்புகளின் உள் சாராம்சங்களை அவரது மனநிலையில் இருந்து கொஞ்சமேனும் நம்மால் உள்வாங்க முடியும் என்றும் நம்புகிறேன்.. மேலும் ஜெமோவின் இலக்கிய-விவாதிப்பு தொடர்பான ஒரு கட்டுரையில், ”ஒரு இலக்கிய விவாதிப்பின் மூலம் அந்த இலக்கியம் மறைத்து வைத்திருக்கும் ஒரு அரிய உண்மையை அந்த வாசகர்கள் ஒவ்வொரு பக்கமிருந்தும் திறக்கிறார்கள்..” என்று அவர் கூறியிருப்பார்.. இது இலக்கியவெளி தவிர்த்து திரைவெளிக்கும் பொருந்தும்..

என் நோக்கமும் இப்போது அதுதான்… ஒரு குறிப்பிட்ட திரைஆளுமையை எடுத்துக் கொண்டு, அவரது திரைப்படங்களை தொடர்ச்சியாக விவாத்தித்து, அந்த விவாதங்களின் இறுதியில் அந்த திரையாளுமையின் வாழ்க்கையையும், அவரது நேர்காணலையும் வாசிப்பதன் மூலம் நாம் அவரது படைப்பு சார்ந்த சாராம்சங்களை மிகச் சரியாக உள்வாங்கிக் கொள்ள முயற்சிப்பதே.. இங்கு நம் நோக்கம். முதலிலேயே அவரது வாழ்க்கை மற்றும் நேர்காணலை படித்துவிடுவது, நமக்கு அவரது படைப்புகள் சார்ந்து ஒரு முன்முடிவை கொடுத்துவிடும் என்பதாலும், காட்சிகள் சார்ந்து நாம் சிந்திப்பதை அது மட்டுப்படுத்திவிடும் என்பதாலும் அது போன்ற தரவுகளை இறுதியாக தொகுக்கத் திட்டம்.. திரைப்படம் சார்ந்த பதிவுகளின் வாயிலாக என் கருத்துக்களையும், கருத்துரைகளின் மூலமாக நீங்கள் முரண்படும் இடங்களையும் கொடுத்து ஒரு விரிவான விவாதத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.. இது தனிப்பட்ட முறையில் எனக்கும், வாசிக்கும் ஒரு சிலருக்கும் உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் இதை முன்னெடுக்கிறேன்..

அதன் ஆரம்பமாக எவராலும் எந்தவகையிலும் புறக்கணிக்க முடியாத தென்கொரிய இயக்குநரான கிம்-கி-டுக்கிலிருந்து இந்தக் கட்டுரை தொடங்க இருக்கிறது.. இது எந்த தர அடிப்படையிலும் எடுக்கப்பட்ட முடிவல்ல… என் கைவசம் இருக்கும் அவரது படங்களின் தொகுப்புகள் மட்டுமே யாரை முதலில் எழுதுவது என்பதை தீர்மானிக்கும் காரணியாக தொடருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. அதன் தொடர்ச்சியாக கீழ்காணும் இயக்குநர்களின் திரைப்படங்கள் பதிவுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.. அதில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது… மாற்றம் இருப்பின் தெரிவிக்கப்படும்.. இந்தப் பட்டியல் நிறைவடைந்தவுடன் அடுத்தப் பட்டியல் கொடுக்கப்படும்.. தற்போது எடுத்துக் கொண்ட இயக்குநர்களின் பட்டியல் முறையே…
  1.   கிம் கி டுக்
  2.   குவாண்டின் டொரொண்டினோ
  3.   ரிட்லி ஸ்காட்
  4.   கோயன் பிரதர்ஸ்
  5.   க்ளைண்ட் ஈஸ்ட்வுட்
  6.   கய் ரிச்சி
  7.   வூடி ஆலன்

    -------
    -------

இவை சார்ந்த பதிவுகள் தொடர்ச்சியாக வெளிவரும் அதேபட்சத்தில், சில தவிர்க்கமுடியாத தமிழ் திரைப்படம் சார்ந்த பதிவுகளும், சில தவிர்க்க முடியாத சூழலில் மிக முக்கியமான உலக திரைப்படங்கள் சார்ந்த பதிவுகளும் தொடர்ச்சியாக வரும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்..

Monday, 20 January 2014

37-வது சென்னை புத்தகக் கண்காட்சி- 2

சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.

1.       ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்
நக்கீரன் பதிப்பகம்
2.       இயற்கை செய்திகள் சிந்தனைகள்
.முகமது அலி
3.       அழியும் பேருயிர்: யானைகள்
.முகமது அலி
4.       கானுயிர் வேங்கை
கே.உல்லாஸ் கரந்த், தியோடர் பாஸ்கரன்
5.       ஒற்றை வைக்கோல் புரட்சி
மசானபு ஃபுகோகா
6.       இயற்கைக்கு திரும்பும் பாதை
மசானபு ஃபுகோகா
7.       அறியப்படாத தமிழகம்
தொ.பரமசிவன்
8.       உயிர்ப்புதையல்: காடும் காடு சார்ந்த இடமும்
கோவை சதாசிவம்
9.       எங்கே எது தவறாகிப் போனது
கிரண் பேடி
10.    .பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள்
.பிச்சமூர்த்தி
11.    உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்
கோபிநாத் மொகந்தி
12.    கொல்லப்படுவதில்லை
மைத்ரேயி தேவி(வங்க நாவல்-சாகித்ய விருது
13.    தென் காமரூபத்தின் கதை
இந்திரா கோஸ்வாமி
14.    மூடுபனிச் சிறையில் வண்ணங்கள்
கோவிந்த மிஸ்ரா(இந்தி-சாகித்ய விருது)
15.    தந்தை கோரியோ
ஒனோரே தெ பல்சாக்
16.    குறத்தி முடுக்கு
ஜி.நாகராஜன்
17.    உலகசினிமா வரலாறு பாகம்-1
அஜயன் பாலா
18.    பிக்சல்
சி.ஜெ.ராஜ்குமார்
19.    மேதைகளின் குரல்கள் உலகசினிமா இயக்குநர்களின் நேர்காணல்கள்
ஜா.தீபா
20.    ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல்
கான்ஸ்தந்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி
21.    நடிப்பு அகம் புறம்
சுரேஷ்வரன்
22.    தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
விட்டல் ராவ்
23.    மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்
பரத்வாஜ் ரங்கன்
24.    புருஸ்லீ சண்டையிடாத சண்டை வீரன்
அபிலாஷ்
25.    மார்லன் ப்ராண்டோ
அஜயன் பாலா
26.    இன்னொருவனின் கனவு- சினிமா கட்டுரைகள்.
குமரகுருபரன்
27.    திரைக்கதை எழுதுவது எப்படி
சுஜாதா
28.    புதிய அலை இயக்குநர்கள்
வெ.ஸ்ரீராம்
29.    இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன
ராஜ்சிவா
30.    நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
ஜெயமோகன்
31.    வன உரிமைச் சட்டம்
பெ.சண்முகம்
32.    மருந்தென வேண்டாவாம்
கு.சிவராமன்
33.    கீழை நாட்டுக் கதைகள்
மார்கெரித் யூர்ஸ்னார்
34.    கடவு
திலீப் குமார்
35.    சிறுகதைகளும் குறுநாவல்களும்
அந்தோன் சேகவ்
36.    அறைகள் நிறைய உள்ள வீடு
குட்டி ரேவதி
37.    மெளனியின் கதைகள்
மெளனி, தொகுப்பு கி..சச்சிதானந்தம்
38.    அந்தோன் சேகவ் மூன்று ஆண்டுகள்
அந்தோன் சேகவ்
39.    தமஸ்
பீஷ்ம ஸாஹ்னி, வெங்கட் சாமிநாதன் (சாகித்ய விருது, ஹிந்தி)
40.    களவு காமம் காதல்
சாம் நாதன்
41.    என் பெயர் சிவப்பு
ஓரான் பாமுக்
42.    மதில்கள்
வைக்கம் முகம்மது பஷீர், நீல பத்மநாபன்
43.    வனவாசி
விபூதி பூஷண் வந்த்யோபாத்யாய
44.    பின்தொடரும் நிழலின் குரல்
ஜெயமோகன்
45.    காடு
ஜெயமோகன்
46.    வெள்ளையானை
ஜெயமோகன்

இவை தவிர்த்து பூவுலகின் நண்பர்கள் பதிப்பகத்தில் சுற்று சூழலியல் தொடர்பான (சிறியதே அழகு) புத்தகங்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.. அதையும் வாங்கி இருக்கிறேன்… வாங்கவேண்டும் என்று நினைத்திருந்த ஒரு சில புத்தகங்கள் விடுபட்டுவிட்டன.. தற்போது இவைகளைப் படித்து முடித்துவிட்டு….!!!!!!!??? அவைகளைப் பற்றி யோசிக்கத் திட்டம்… இந்தப் புத்தாண்டு இனிதாகுக….