Friday 10 January 2014

ஜில்லா:

ஜில்லா படத்தின் இயக்குநர் நேசனுக்கு இது இரண்டாவது படம்.. முருகா என்னும் படம் கொடுத்தவர்.. வெகுநாட்களுக்குப் பின்னர் தன் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி இருக்கிறார்.. எனக்கு முருகா படம் ஓரளவுக்கு பிடித்திருந்தது.. மேலும் விஜய், மோகன்லால் கூட்டணி வேறு என்பதால் படத்தின் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததும் உண்மை.. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் வீரத்தை ஒப்பிடுகையில் ஜில்லாவின் கதை சற்று உசத்தி தான்.. ஆனால் அதைக் கொடுத்த விதத்தில் தான் ஜில்லா சற்றே பின்தங்குகிறது..


மிக சுவாரஸ்யமான ஒன்லைன் தான்… அடியாட்களின் ஆடுகளத்தில் ஒரு ஜில்லாவையே தங்களின் கண்ட்ரோலில் வைத்திருக்கும் வளர்ப்பு அப்பனும் மகனுமான மோகன்லால் விஜய் கூட்டணிக்கு இடையே.. மோதல் வருகிறது.. அந்த மோதல் உருவாவதற்கான ஆரம்பகட்ட சுவாரஸ்ய முரண்கள் அழகானது… அந்த மோதலுக்குப் பின் அவர்கள் இருவரின் உறவு என்னானது என்பது மீதிக்கதை… கதையை இன்னும் கூட கொஞ்சம் விரிவாகச் சொல்லலாம்.. ஆனால் முதல்பாதியின் சின்ன சின்ன சுவாரஸ்ய முடிச்சுகளை அது கெடுக்கக் கூடும் என்பதால் அதை தவிர்க்கிறேன்…

விஜய் ஏற்கனவே இதுபோல் சில படங்கள் செய்துவிட்டார் என்றாலும், தன் வளர்ப்பு அப்பாவை எதிர்க்க வேண்டிவரும் அந்த சூழல்தான் இவருக்கு புதிது.. தன் தகப்பனை எதிர்க்கும் போதும், தன் தங்கையின் கல்யாணத்துக்கு அழைப்பு இல்லாமல் போகும் போதும் அளவான அழகான நடிப்பு.. அதுபோல் ஆக்சன் செண்டரிலும் வழக்கமான டான்ஸ் ஏரியாவிலும் ஏகமாக ஸ்கோர் செய்யும் விஜய் சறுக்கியது என்னவோ வழக்கம் போல் நடிப்பில் தான்.. எதையும் அலட்டிக் கொள்ளாத.. ஒரு ஊதாரித்தனமான நடிப்பு போக்கிரியில் கைகொடுத்தது என்றால், அதன் கதைக்களம் அப்படி.. இங்கு யார் சொன்னார்களோ..? அல்லது யாருமே சொல்லவில்லையோ என்னவோ..? படு சீரியஸான இடத்தில் கூட அவரது உதறலான பாடி லாங்க்வேஜும், அசால்டாக செய்வதாக நினைத்துக் கொண்டு அசால்ட் செய்திருக்கும் வசன உச்சரிப்பும் தான் மிக முக்கியமான மைனஸ்…


வளர்ப்பு அப்பாவாக மோகன்லால்.. அவரது நடிப்பு பெரிதாக தீனி போடக்கூடிய கதாபாத்திரம் இல்லை… இருப்பினும் ஒவ்வொரு ப்ரேமிலும் அவர் இருக்கும் போது எல்லோரையும் தவிர்த்து அவரைத் தேடித்தான் கண்கள் போகின்றது.. அந்த ஆக்ரோசமான நடிப்பும்.. அந்த கர்ஜனையும் அவரது கதாபாத்திரத்தை மிகவும் உயிரோட்டமுள்ளதாக மாற்றுகிறது… ஆனால் என்னைக் கேட்டால் இன்னும் கூட இவருக்கான கதைக்களத்தை விரித்திருக்கலாம் என்றே சொல்லுவேன்..

ஜோடியாக காஜல்.. அந்த யூனிபார்மில் இவரைப் பார்க்க சகிக்கவில்லை… படு அபத்தமாக இருந்தது… மேலும் இவரது பிருஷ்டத்தில் கைவைப்பது போல் வருகின்ற காட்சிகளும் எந்த அவசியத்திற்காக வைக்கப்பட்டது என்று விளங்கவே இல்லை.. அதிலும் சூரி சம்மந்தப்பட்ட காமெடி என்று சொல்லிக் கொள்ளும் காட்சிகள் எல்லாம் ரொம்பவே சுமார்.. இப்படி சூரி, காஜல் வரும் காட்சிகளை வெகுவாக கத்தரி போட்டிருந்தாலே படத்தின் சுவாரஸ்யம் பல மடங்கு பெருகி இருக்கும்… அதிலும் விஜய் ஸ்கூல் ஸ்டூடண்டுக்கு ட்ரெய்னிங் எடுக்கும் காட்சிகளெல்லாம் தேவையே இல்லை…


இமானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் பரவாயில்லை.. எனக்கென்னவோ ஏற்கனவே அவரது படங்களில் கேட்ட பாடல்களை மீண்டும் கேட்பது போல்தான் இருந்தது.. புதிதாக ஒன்றும் இல்லை… வழக்கம் போல் பிண்ணனி இசையில் ரொம்பவே சுத்தம்..

இப்படி கதையாகவும் திரைக்கதையாகவும் ஆட்சியைப் பிடிக்கும் ஜில்லா டெபாஷிட் இழப்பதெல்லாம் ஆங்காங்கே விஜயின் நடிப்பு, வேகத்தடையாக வரும் பாடல்கள் மற்றும் அதன் நீண்ட நேர பயணத்தில் தான்.. ஒரு அரை மணி நேரத்தை ட்ரிம் செய்திருந்தால் இன்னும் பிரகாசமாக ஜொலித்திருக்கும் ஜில்லா… மொத்தத்தில் ஜில்லா ஒரு ரவுண்டு போய் வரலாம்… பாதகமில்லை…

No comments:

Post a Comment