Friday 10 January 2014

வீரம்:

வீரம் அஜீத்துக்கு மற்றொரு வெற்றிப்படம் என்று இப்பொழுதே சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. ஏனென்றால் அஜீத்தின் அதிதீவிர ரசிகர்களை திருப்திபடுத்துவதோடு மட்டுமல்லாமல், சாதாரண பார்வையாளர்களையும் ஓரளவிற்காவது திருப்திபடுத்துவதற்கான (குறிப்பாக வெறுப்பேற்றாத) காட்சிக் கோர்வைகளால் படம் தொகுக்கப்பட்டு இருப்பதே அதற்கு காரணம். இந்தப் படத்தின் கதை என்று எந்தப்படத்தையும் குறிப்பாக கைநீட்ட முடியாமல் போனாலும் இந்தப் படத்தில் கொஞ்சம், அந்தப் படத்தில் கொஞ்சம் என்று சிலபல படங்களை நாம் மேற்கோள் காட்டமுடியும்.. இவ்வளவு ஏன் தமன்னா நடித்து மிகப்பெரிய வெற்றி என்று சொல்லப்பட்ட ஒரு படத்தின் முதல்பாதியையும் இரண்டாம் பாதியையும் மாற்றிப் போட்டால்.. உங்களுக்கு வீரம் கிடைக்கும்.. இது தவிர்த்து ரஜினிகாந்த் விஜயகாந்த என்று பலர் நடித்த ஒன்லைனரை நாம் வீரத்தின் கதைக்கருவில் எளிதாக அடையாளம் காணக்கூடும்… இவர்களது நோக்கம் வித்தியாசமான படம் எடுப்பதல்ல… வெற்றிப்படம் எடுப்பது… அந்த நோக்கத்தில் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்… எனவே இங்கு இந்தப்படத்தின் வெற்றி எப்படி சாத்தியமானது என்பதையே நாம் அலசப் போகிறோம்…


முதலில் நான் படம் பார்த்த சூழலை சொல்லிவிடுகிறேன்.. திரையரங்கில் அஜீத்தின் அதீதீவிர ரசிகர்களின் ஆளுகைக்கு கீழ் நான் அமிழ்ந்து போய் இருந்தேன்… காட்சிக்கு காட்சி கைதட்டல்களாலும் விசில்களாலும் என் செவியை செவிடாக்கி கொண்டிருந்தனர்… இதுபோன்ற கூட்டத்தில் உட்கார்ந்து படம் பார்ப்பதில் சில அசெளகரியங்கள் இருக்கின்றன.. காதை காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதை சொல்லவில்லை.. சுற்றியிருப்போரின் ஆரவாரமிக்க ஆனந்த அலைவரிசை நம்மிடையே படம் சார்ந்த சில நேர்மறையான பாதிப்புகளை மிகமெல்லிய மென் அதிர்வுகளாக ஏற்படுத்திவிடவும் வாய்ப்புண்டு.. அதுமட்டும் அல்ல.. இதுபோன்ற சூழலில் தான் நீங்கள் இசைக்கு இருக்கும் பேராற்றலையும் உணர முடியும்.. மிக சாதாரணமான ஒரு காட்சி கூட.. இதுபோன்ற ஒரு ஆரவாரமிக்க சூழலில் இசையின் துணையுடன் அதிஅற்புதமான காட்சியாக மாறி சில மணித்துளிகள் உங்களை பாதிக்கக்கூடிய அபாயங்கள் இதில் உண்டு.. திரையரங்கில் இருந்து வெளிவந்தப் பிறகும்கூட அதையே பற்றி நீங்கள் யோசிக்கும் போதுதான்.. உங்களால் அந்த மாயவலையிலிருந்து வெளிவரமுடியும்.. அப்படி வெளிவராவிட்டால் இறுதிவரை உங்களுக்கு அதுவொரு அதிஅற்புதமான காட்சியாகத்தான் காட்சியளிக்கும்.. இந்த அனுபவமே படம் எனக்குப் பிடித்துப் போனதற்கு முதற்காரணமாக இருக்கலாம்..


தமிழின் முண்ணனி மாஸ் ஹீரோக்களான ஒரு நால்வரை மட்டும் இப்போது நம் செளகரியத்துக்காக எடுத்துக் கொள்வோம்… ரஜினி, கமல், அஜித், விஜய்.. இதில் யார் நடித்த திரைப்படமாக இருந்தாலும் சரி.. அவர்களின் அதிதீவிர ரசிகர்களுக்கு அவர்கள் மட்டுமே திரையை நிறைத்துக் கொண்டிருந்தால் போதும்.. அவர்களின் அதிதீவிர ரசிகன் அத்திரைப்படத்தை வெற்றிபெற எந்த பிரயத்தனம் வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பான்… ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வெற்றி அந்த தீவிரரசிகன் மட்டும் தீர்மானிக்கக் கூடிய எளிதான காரியம் அல்ல.. அதற்கு ஒரு சாமானிய ரசிகனின் குறைந்த பட்ச பங்களிப்பும் தேவையாக இருக்கிறது… சாமானிய ரசிகன் அவர் எப்பேர்ப்பட்ட மாஸ் ஹீரோவாக இருந்தாலும், சதாகாலமும் அவர் மட்டுமே திரை முழுவதும் வியாபித்திருப்பதை விரும்பமாட்டான்… இவர்கள் அந்தத் திரையில் எதிர்பார்ப்பது கொஞ்சமே கொஞ்சமேனும் கதையையும் அந்தக் கதையை சொல்லும் செய்முறையான திரைக்கதையில் குறைந்தபட்ச சுவாரஸ்யத்தையும் தான்…. காட்சிக்கு காட்சி கதையை நகர்த்துவதைப் போன்ற அதிபுத்திசாலித்தனம் நிரம்பிய திரைக்கதையல்ல.. குறைந்தபட்ச சுவாரஸ்யம் கொண்ட திரைக்கதை தான்..!!!!! அவர்களின் இந்த மிகச்சிறிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படங்கள் தான் பெரும்பாலும் வெற்றிபெற்றிருக்கின்றன… அதில் வீரமும் அடக்கம்.. வெற்றிக்கான இரண்டாவது காரணம் இதுவே…

தனிநபர் துதிபாடல் போன்ற காட்சிகளை கதைக்கு தேவையே இல்லாமல் திணிப்பதும், நாயகன் நடந்து கொண்டே இருப்பதோ… அடியாட்கள் பறந்து கொண்டே இருப்பது போன்ற சாமானியனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் காட்சிகளுக்கு அறவே தடைவிதித்ததும்… படத்தின் வெற்றியில் பங்களித்திருக்கின்றன…


அதுதவிர்த்து மற்றொரு முக்கியமான அம்சம், ஸ்கீரினில் தனக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று எண்ணாமல், கதையை நகர்த்திச் செல்லும் பிற முக்கிய கதாபாத்திரங்களிலும் முக்கியத்துவத்தை ஏற்றி இருப்பதும்... வெற்றிக்கான ரகசியம் என்று நினைக்கிறேன்.. இந்த வெற்றி ரகசியத்தை அஜீத்தின் சமீபகால வெற்றிப்படங்கள் எல்லாவற்றிலும் பார்க்க முடியும்… இதுதவிர்த்து மிகமுக்கியமாக நம்பும்படியான ஆக்சன் சண்டை காட்சிகளும்.. அதற்கு பொருந்திப் போவது போன்ற அஜீத்தின் ஆஜானுபாகுவான தோற்றமும் தான்… அதிலும் குறிப்பாக அந்த ட்ரெயின் சண்டைக் காட்சியின் ஒளிப்பதிவும், அந்த காட்சிகளுக்காக அஜீத் எடுத்திருக்கும் ரிஸ்க்கும் உண்மையிலேயே வீரம்தான்…

அஜீத், தமன்னா, சந்தானம், நாசர், விதார்த், தம்பி ராமையா, ரமேஷ் கண்ணா, அதுல் குல்கர்னி, இளவரசு, மயில்சாமி, அப்புகுட்டி, தேவதர்ஷினி அபிநயா என்று ஒரு பெரும் பட்டாளமே இருந்தாலும், கதையை நகர்த்துவதற்கான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் உறுத்தவில்லை.. படம் பார்க்கும் போது ஆங்காங்கே சந்தானமும், தம்பி ராமையாவும் சிரிக்க வைத்ததாய் நினைவு… என்ன செய்து சிரிக்க வைத்தார்கள் என்று நினைவில் இல்லை.. தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்களை விட பிண்ணனி இசை அட்டகாசம்… பாடல்களை குறைத்திருந்தால் படம் இன்னும் க்ரிஸ்பாக இருந்திருக்கும்.. இருப்பினும் பிண்ணனி இசை மட்டுமே அந்த ஆக்சன் ப்ளாக்குக்கான டெம்போவை அணையாமல் பார்த்துக் கொள்கிறது..


வீரம் படத்தில் இரண்டாம் பாதியில் வரும் அந்த முக்கியமான சுவாரஸ்யத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால், படத்தில் ஒன்றுமே இல்லை.. படம் மிகச்சாதாரணமான ஒரு படமாக மாறியிருக்கும்.. ஆனாலும் இப்படியெல்லாம் நம்மை அதிகமாக யோசிக்கவே விடாமல், இரண்டரை மணி நேரமும் நம்மை கட்டிப் போடும் இடத்தில் தான் வீரம் வெற்றிக்கொடி நாட்டுகிறது..



6 comments:

  1. //தனிநபர் துதிபாடல் போன்ற காட்சிகளை கதைக்கு தேவையே இல்லாமல் திணிப்பதும், நாயகன் நடந்து கொண்டே இருப்பதோ… அடியாட்கள் பறந்து கொண்டே இருப்பது போன்ற சாமானியனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் காட்சிகளுக்கு அறவே தடைவிதித்ததும்… படத்தின் வெற்றியில் பங்களித்திருக்கின்றன…///

    100% உண்மை பாஸ்....நானும் இதையே தான் எண்ணினேன்... :-)

    ReplyDelete
  2. super....super hit film...another one block buster movie thala...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. as a kamal fan.....i would likes 2 encourage siva and team for this film....... i liked arrambam but i enjoyed veeram.....siva may hav a bright future..... esp his direction and screenplay gets the applause from cini lovers......i wan u 2 join with kamal & it should be vasoolraja mbbs 2 for us...10q

    ReplyDelete
  5. great analysis .. all are good points .. appreciate it

    ReplyDelete