Thursday, 21 February 2013

அம்மா எனக்கொரு வரம் கொடு
அம்மா……
உனை விட்டு
தூரமாய் வந்திருக்கிறேன்..
தூசி படிந்த நகரத்துக்கு…..

துரைப்பாக்கம் தொழிற்பேட்டையில்தான் வேலை
பணிச்சுமை அதிகமில்லை…
பசிச்சுமை தான்….

கிழமைகூட நினைவில்லை..

நம்வீட்டு குழம்பில்
கிழமையின் பெயர் எழுதியிருக்கும்
புளிக்குழம்பு என்றால் திங்கள்
பருப்புகுழம்பு என்றால் செவ்வாய்
கருவாட்டுகுழம்பு என்றால் புதன்
பயத்துக்குழம்பு என்றால் வியாழன்
சாம்பார் என்றால் வெள்ளி
கீரை ரசம் என்றால் சனி
அசைவமென்றால் அது
ஞாயிறு

இங்கு எல்லாமே எனக்கு
வெள்ளிக்கிழமைகள்

பருப்பில்லாத சாம்பார்
பழகிக் கொண்டேன்…

இன்று
வெள்ளி வெறுத்துப் போய்
சனிக்கு மாறிவிட்டேன்…

காலையென்றால்
நாலு இட்லி ஒரு வடை

இரவென்றால்
மூணு தோசை

உன் கைபக்குவம் தேடி
அலைந்த நாட்களில்
என் காலுக்கு பக்குவம்
செய்யவேண்டியதாயிற்று…

கடைசியில் என் நண்பன்
சொன்னான் ஒர் முகவரி…
500கீமி தள்ளிப் போக வேண்டுமாம்…
அது நம்வீட்டு முகவரி…
என்ன இடக்கு பார்த்தாயா அவனுக்கு….
 ம்ம்ம்ம்……..

நல்ல சாப்பாடு சாப்பிட்டு
நாலு மாதம் ஆகிறது…
ஊரிலிருந்து வந்தும் தான்…..

உன்னிடம் சொன்னால்
அழுது ஆர்பரிப்பாய்
கண்ணீரால் காய் நகர்த்துவாய் – அது
கல்யாணத்தில் செக் வைக்கும்…
வேண்டாம்…. வேண்டாம்…..

இல்லை
உன்னையும் கூட்டிச்செல் என அடம்பிடிப்பாய்..
நான் நரகத்திற்கு உன்னை வாவென்று
எப்படியழைப்பேன்….

நீயாவது சொர்க்கத்தில் இரு…
உனைக் காணும் சாக்கில் – அவ்வபோது
நான் கால் பதிக்க கூடும்..

உன் மீன் குழம்பு நினைவில்
ஒரு ஹோட்டலில் நுழைந்துவிட்டேன்..
உட்கார்ந்த இடத்துக்கும் சேர்த்து காசு
சாப்பிட்ட காசை உன் கையில் கொடுத்தால்
மூன்று நாள் நான் அமிர்தம் உண்ணலாம்…
மனம் கேட்கவில்லை.. போகட்டும்…
வயிறாவது நிறையுமே…
உண்டு வெளியே வந்தால்…
இரண்டுமே எரியத் தொடங்கியது…
வெறுத்துப் போனேன்…

நீ சமைக்கும்
நெத்திலி மீன் குழம்பு
காலி ஃப்ளவர் கூட்டு
வெண்டைக்காய் பொறியல்
வறுத்த ஈரல்
பருப்பு தண்ணி கலந்த ரசம்….
எண்ணெய் மிதக்கும் ஊறுகாய்…
எல்லாமே கனவிலும் வந்து போனது…

ஊன் உயிர் தூண்ட..
ஊருக்கு கிளம்பிவிட்டேன்…

கோயிலில் நுழைபவன் மனம்
சுத்தமாவதைப் போல்
சுயநலமில்லா உனைக் காண
பேருந்தில் வரும் போது…
என் ஆசைகள் எல்லாம்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
உதிர்ந்துவிட்டன போலும்..

நீயோ……
படையலால் எனை மூழ்கடித்தாய்..
பக்கத்துக்கு ஒரு பதார்த்தம் படைத்தாய்…
நுழைந்ததுமே நுங்கு பதினி
படுக்கைக்கு முன்பின் பால்
இளைப்பாறும் போது இளநீர்
விடிந்ததுமே விறால்மீன்
அடைந்ததும் ஆப்பம்பால்…
படுத்திருந்தால் பணியாரம்
உட்கார்ந்திருந்தால் உளுந்துவடை
நின்றிருந்தால் நீராகாரம்
எழுந்துகொண்டால் எழுமிச்சை சாறு
பிரியும் தருணம் பிரியாணி
அப்பப்பா…

தாகத்தில் வந்தவன் தடாகத்தில் விழுந்ததைப் போல்…
திக்குமுக்காடிப் போனேன்…
தின்னத்தான் முடியவில்லை…
மாயா பஜார் கனவோடுதான் வந்தேன்…
மஞ்சக் காமாலைக்கு பத்தியம் இருந்தவனைப் போல்
உண்டுவிட்டு
ஊரைவிட்டு போய் கொண்டிருக்கிறேன்…

அசதியில் உறங்கிவிட்டேன்.. 
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
உதிர்ந்த ஆசைகள் எல்லாம்
ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக் கொண்டன போலும்…
மீன் குழம்பும்
கருவாட்டுக் குழம்பும்
கனவில் நடனமாடுகின்றது….
திடுக்கிட்டு விழித்தேன்….
மீண்டும் பசிக்கத் தொடங்கியது…

அம்மா…
வரம் கொடுக்க தவமிருக்கும் தேவதையல்லவா நீ
எனக்கு ஒரு வரம் கொடு
அடுத்தமுறை 
நான் ஊருக்கு வரும்போது 
கொஞ்சமாவது
நீ சுயநலத்தோடு இருப்பதாகவும்…
உனக்கென சில ஆசைகளை
வளர்த்துக்கொள்வதாகவும்
வரம் கொடு….
என் ஆசைகள் உதிராமல்
வீடு வந்து சேரட்டும்…
ஏனென்றால் உன் மகன்
நீ சமைத்ததை உண்ண….
பசித்திருக்கிறேன் தாயே……


Monday, 11 February 2013

விஸ்வரூபம்:தமிழ் சினிமாவில் பல காரணங்களுக்காக மறக்கப்படாமல் இருக்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும் இந்த விஸ்வரூபம். பட ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகள். முதலில் செல்வராகவன் இயக்குவதாக இருந்து, பின்னர் அவர் நீங்கிக் கொள்ள, கமலே இயக்குவது என முடிவானது. ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளிலேயே பட்ஜெட் 40கோடியை நெருங்க, மிரண்டு போன தயாரிப்பு தரப்பு விலகிக்கொள்ள முடிவு செய்யவே, கமல் தன் சொத்துக்களை முதலீடாகக் கொண்டு ராஜ்கமல் ப்ரொடக்சன் மூலமாக தயாரிப்பையும் ஏற்று படவேலைகளை தொடர்ந்தார்.

படப்பிடிப்பு முடிந்து ரீலீஸுக்கு தயாரான நேரத்தில் கமல் படத்தை நேரடியாக டிடிஹெச்ல் ரீலீஸ் செய்ய முயல, விநியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்கொடி தூக்க.. பிரச்சனை மீண்டும் தொடங்கியது. இந்தப் பிரச்சனையை ஒருவாறு சமாளித்து முதலில் தியேட்டரில் தான் படம் ரீலீஸ், ஒரு வாரத்திற்குப் பிறகே டிடிஹெச்ல் ஒளிபரப்பாகும் என்கின்ற ரீதியில் சமாதான உடன்படிக்கை கையெழுத்தாக, அந்நேரத்தில் கமல் என்ன நினைத்தாரோ, படத்தை முன்கூட்டியே இஸ்லாமிய மதத்தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியாக காண்பிக்க மீண்டும் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

படத்தில் முஸ்லீம்களையும் இஸ்லாமிய மதத்தையும் புண்படுத்துவது போல் காட்சியமைப்புகள் இருப்பதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று பிரச்சனை வெடித்தது. இதை எதிர்த்து கமல் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய.. அதே நேரத்தில் அவசரகதியில் படம் வெளியாக எல்லா மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாய் செய்தி கசிய விசயம் மிகப்பெரிய சென்சேஷனானது. விரக்தியின் உச்சிக்கு சென்ற கமல் நான் எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன்.. இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று அறிவித்ததை தொடர்ந்து கமல் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிக்க தொடங்கினர். இதை தொடர்ந்து காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கியது. அது வரை ஏதோ ஒருகாரணத்துக்காக அமைதிகாத்த தமிழ் திரையுலகின் சில புள்ளிகள் மட்டும் கமலுக்கு ஆதரவாக வாய் திறக்க.. “கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக…” விசயம் செல்வதை லேட்டாக உணர்ந்த தமிழக அரசின் தலைமையும் கொஞ்சம் இறங்கிவர, படம் இப்போது சம்பந்தப்பட்ட சில காட்சிகளின் தணிக்கைக்கு பின்னர் வெளியாகி இருக்கிறது.

கமலுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இது ரொம்பவே ஸ்பெசலான படம். கதைகளன், திரைக்கதை, எடிட்டிங், இசை, கலை, கேமரா, மேக்கிங்க் என தமிழ்சினிமா தொடத்துடிக்கும் சில உச்சங்களை இந்தப்படம் தொட்டு வந்திருக்கிறது.

படம் பெரும்பாலான மக்கள் பார்த்திருப்பார்கள் என்பதால், கதையை பற்றி சற்று விரிவாக பேசுவதில் எந்த பாதகமும் இல்லை என்று நினைக்கிறேன். இந்தியன் ஆர்மியை சேர்ந்த விகாஷ் இப்ராகிம் காஷ்மீரி(கமல்) நேட்டோ படை(அமெரிக்க இங்கிலாந்து கூட்டுப்படை பிரிவு)க்கு உளவு வேலை பார்க்க தாலீபன் தீவிரவாத குழுவுடன் இணைகிறார். அங்கு தாலீபன்கள் பிடித்து வைத்திருக்கும் அமெரிக்க வீரர்களை கண்டுபிடிக்க உதவுகிறார். பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நடைபெற இருக்கும் சீசியம் அணுக்கதிர் வீச்சு பேரழிவை தடுத்து நிறுத்தவும் விகாஷின் டீம் அமெரிக்காவின் FBI க்கு உதவுகிறது…! தப்பிச் சென்ற தலிபான் இனத் தலைவர் உமரின் அடுத்த குறி இந்தியா என்பதால் இந்த விஸ்வரூப போராட்டம் தொடரும் என்ற டைட்டிலுடன் படம் முடிகிறது.

நான் – லீனியர் டைப்பில் அமைந்த ஸ்கீரின்ப்ளே. அதை நான் சற்று லீனியர் முறையிலேயே சொல்ல முயலுகிறேன்.. தொர்கா நெடுஞ்சாலை (பாகிஸ்தானாக இருக்கலாம்…) எல்லைப்பகுதியில் காட்டப்படும் ஒரு காகித பிரசுரத்தில் இந்திய ராணுவத்தால் தேடப்படும் தீவிரவாதி இந்த விகாஷ் காஷ்மீரி என்று கமல் படம் காட்டப்படுகிறது. அவனை தாலீபான் தலைவர் உமர் தாலீபானில் சேர்த்துக்கொள்ள காஷ்மீரி அல்கொய்தாவிற்கு ட்ரெய்னிங்க் கொடுக்கிறான். அப்போது நேட்டோ படைக்கு அமெரிக்க வீரர்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தையும் காட்டிக் கொடுக்கிறான், மேலும் அமெரிக்கப்படை தாக்குதலின் போது உமரின் குடும்பம் அழிகிறது. காஷ்மீரியின் உண்மை முகத்தை தெரிந்துகொண்ட உமர் அவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயல, காஷ்மீரி தப்புகிறான்.

தன் குடும்பத்தை இழந்து வன்மத்தோடு அலைந்து கொண்டிருக்கும் உமர், அமெரிக்காவில் இருந்து கொண்டே, அங்கு அணுக்கதிர் வீச்சு தொடர்பான நாச வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான். விகாஷ் காஷ்மீரி உமரின் நம்பிக்கையான கையாளாக தாலீபானில் இருந்த போது உமருடனான உரையாடலின் மூலம் அவனது திட்டங்களை ஓரளவுக்கு அறிந்து வைத்திருக்கும் விகாஷ், இந்த நாச வேலைகளை தடுக்க அமெரிக்காவில் விஸ்வநாத் என்ற பெயருடன், கதக் நாடக கலைஞர் என்கின்ற போர்வையில் இயங்கிக் கொண்டிருக்கிறான். அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக வேர் கவுஸ் பற்றி துப்புத் துலக்க சென்ற போது, விஸ்வநாத்தை கண்காணிக்க அவரது மனைவி நிருபமாவால் அனுப்பப்பட்ட டிடெக்டிவ் விஸ்வநாத்தை பிந்தொடர்ந்து மாட்டிக் கொள்கிறான்.

டிடெக்டிவ் மூலமாக விஸ்வநாத்தை நெருங்கும் உமர், விஸ்வநாத் தான் காஷ்மீரி என்று தெரிந்துகொண்டு அவனைக் கொல்ல முயல, அதில் இருந்து தப்பிக்கும் காஷ்மீரி(கமல்) உமரின் திட்டத்தை எப்படி தன் டீம் மற்றும் FBI துணையுடன் முறியடித்தார் என்பது க்ளைமாக்ஸ்.

படத்தின் ஆரம்பத்தில் சற்றே பெண் தன்மையுடன் அறிமுகமாகும் கமலஹாசனின் விஸ்வநாத் என்னும் கேரக்டர் அருமை. போன் அடிக்கும் போதும், வேக வைத்த சிக்கனை எடுக்க ஓடும் போதும் அந்த நடையில் காட்டும் நளினம் கமலின் முத்திரை. தன் மனைவி தன்னைக் கண்காணிக்க அனுப்பி இருக்கும் நபரிடம் இருந்து தன்னை மறைத்துக் கொள்ள அவர் ஓடும் போது உடுத்தியிருக்கும் ஆடையில் கூட அத்தனை பெர்பெக்‌ஷன். பரூக்கிடம் ‘நான் சொல்லுவேன்.. ஆனா நீங்க என்ன நம்பணும்’ என்று கண்சிமிட்டுவது என பெண் தன்மையிலும் ஆணுக்கான அடையாளமாக உச்சஸ்தாயியில் அடித்தொண்டையில் இருந்து ஆரம்பித்து, அரபு மொழியில் நமாஸ் செய்யத் தொடங்கி, கண் இமைக்கும் பொழுதில் அனைவரையும் காலி செய்துவிட்டு தப்பிச் செல்லும் காட்சியிலும் படம் ஹைஸ்பீடில் பயணிக்கத் தொடங்குகிறது. கமல் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்வது கூட கிளிசேவாகிவிடும் என்பதால் அதை தவிர்க்கிறேன்.

கமலின் மனைவி நிருபமாவாக பூஜாகுமார். சொல்லிக் கொள்ளும்படியான ரீ-எண்ட்ரீ. வாய்ஸ் மாடுலேசன்களில் கமலின் ட்ரெய்னிங்க் நன்றாகவே தெரிகிறது. வயது வித்தியாசம் அதிகமுள்ள, பெண் தன்மையுடன் வளைய வரும் தன் கணவனை வெறுக்கும் கதாபாத்திரம். நீயூக்ளியார் ஆங்காலஜிஸ்ட் ஆக பணிபுரியும் இடத்தில் தன் மேலதிகாரி விரித்த வலையில் விழும் நிருபமா, தன் கணவனை பிரிய அவன் தரப்பிலும் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், ஒரு டிடெக்டிவ் கொண்டு கமலை கண்காணிக்கிறார். தன் உயிரை தன் கணவன் விஸ்வரூபம் எடுத்து காப்பாற்றும் காட்சியிலும், தன் கணவன் ஜனாதிபதியுடன் உரையாடுவதை கண்டு பெருமிதம் கொள்ளும் இடங்களிலும் பூஜாகுமார் கொள்ளை அழகு.

தாலிபன் தலைவன் உமராக வருபவரின் நடிப்பு செம்ம ஷார்ப். சின்ன சின்ன பார்வைகளில் கூட தன் கோபம், வெறுப்பு, இயலாமை, சோகம் இவைகளை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக தன் கூட்டத்தில் ஒரு துரோகி இருக்கிறான் என்று அவனை உணர்ச்சிவசப்பட்டு அடிக்கும் இடத்திலும், அவனுக்கு பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் போடும் போது எந்த உணர்ச்சியையும் காட்டாமல் புறாக்களுக்கு வாயில் உணவை திணிக்கும் காட்சியிலும் எக்செலண்டான நடிப்பு.

நாசருக்கும், ஆண்ட்ரியாவுக்கும் சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் இல்லை. படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆப்கன் குகைகளும், மலைத் தொடர்களும், கிராமங்களும் அச்சு அசல் ஆப்கானிஸ்தானை நம் கண்முன் நிறுத்துகின்றன. உமரின் இளைய மகன் நாசரை கமல் ஊஞ்சலாட்ட முயற்சிப்பதும், அவன் தான் ஒரு குழந்தை இல்லை என்று மறுத்து ஓடுவதும், ஜிகாதியாக போகப் போகும் உமரின் மூத்தமகன் அந்த ஊஞ்சலில் அமர்ந்து தன்னை தள்ள சொல்லும் காட்சியும். அவன் தற்கொலை தாக்குதலுக்கு தயாராகி விடைபெறும் போது காட்டப்படும் வாசல் கதவு போன்ற ப்ரேமும் கமலின் புத்திசாலித்தனத்திற்கு நல்ல உதாரணம். முதலாவது ஃபைட் ப்ளாக்கின் மேக்கிங் க்ளாசிக் ரகம்.

ஏகப்பட்ட டெக்னாலஜி தொடர்பான விசயங்கள், “ஹைஜேக் ரேடர், சீசியம், தும்பி கேமரா, புறா விடு கதிர்வீச்சு, முகலாய கத்தி, நேட்டோ படை என பாமர ரசிகனுக்கு புரியாத பல விசயங்கள் படத்தில் உண்டு. பெரும்பாலான விசயங்களை கமல் ஹாவ் வேயில் ஓப்பன் செய்வதால் பல ரசிகர்கள் என்ன நடக்கின்றது என்றே புரியாமல் புலம்புவதை கேட்கமுடிந்தது.அதுபோல் தான் சில வசனங்களும்.. எல்லோருக்குமே புரிந்துவிடாது. ஒளிப்பதிவாளர் ஷானு வர்கீஸ், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா மற்றும் எடிட்டிர் மகேஷ் என அனைத்து டெக்னீசியன்களுக்கும் ஒரு முக்கியமான அடையாளம் இந்த விஸ்வரூபம்.

சங்கர் லாய் இசானின் இசையில் ஏற்கனவே பல பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும், “அணு விதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணுக்கதிர்தான்…” பாடல் மனதை ஏதோ செய்தது என்பது உண்மை. ஆங்காங்கே பிண்ணனியிசையும். படம் நெடுக கமலின் ட்ரேட் மார்க் வசனங்கள், உதாரணமாக ‘என்ன அமெரிக்கால மழ பெய்யாது’ ‘எங்க அம்மாவ எனக்கு புறந்ததில இருந்தே தெரியும்..’ ‘எந்த கடவுள்..?’ ‘அசுரனோட சாவ கொண்டாடுறதில என்ன தப்பு…? அத அவன் பொண்டாட்டி புள்ளட்ட போய் சொல்லிப்பாரு…’ ’நாங்க சிலுவைலெல்லாம் அறைய மாட்டோம்… கடல்ல மூழ்கடிச்சிருவோம்…’

இப்படி படத்தை சிலாகிக்க பல இடங்கள் இருந்தாலும்………. சில குறைகளும் கண்ணுக்கு தெரியாமல் இல்லை. மிக முக்கியமாக சிலர் அங்கலாய்க்கிறார்கள்… மிக நுணுக்கமாக ஆப்கன் மக்களின் வாழ்க்கையை கமல் சித்தரித்திருக்கிறார் என்று. மன்னிக்கவும் சத்தியமாக எனக்கு அப்படி தோன்றவில்லை… அவர்களது வாழ்க்கையே எப்போதும் துப்பாக்கியும் தோட்டாக்களும் நிரம்பியது தானா…? இவைகளை தவிர்த்து அவர்களிடம் வாழ்வியலுக்கான கூறுகள் ஏதுமே இல்லையா…? சிறுவர்கள் விளையாடினால் கூட ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டுதான் விளையாடுவார்கள் என்பதுதான் அந்த நுண்ணிய அவதானிப்பா…?

ஒரு அமெரிக்க படைவீரன் ஒரு பெண்ணை சுட்டுவிட்டு நொந்து கொள்வது போல் ஒரு காட்சியமைப்பு. இதன் மூலமாக இயக்குநர் என்ன சொல்ல வருகிறார். அமெரிக்கர்கள் சிறு குழந்தைகள் மற்றும் பெண்களை போரின் போது கொல்லமாட்டார்கள் என்பதா…? ஆனால் அடுத்த காட்சியிலேயே அவர்கள் அனுப்பும் லாஞ்சர் வீட்டை தரைமட்டமாக்கி சிறுவர்களையும் பெண்களையும் அழிக்கிறது… இதற்கு என்ன பொருள்…? இரண்டு விதமான மனிதர்களும் அவர்களது படையில் உண்டு என்று சொல்ல வருகீறீர்களா…? அது அவ்வாறெனில் தாலீபன் தரப்பில் அந்த தர்க்க நியாயத்தை பதிவு செய்யாதது ஏன்…?

தாலீபன்களின் சில குறைபாடுகளை நான் மறுக்கவில்லை… சில குழந்தைமனம் கொண்ட இளைஞர்களை தற்கொலைபடையாக மாற்றுவதும், பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை கூட தர மறுப்பதும், சில நல்ல விசயங்களை கூட கண்மூடித்தனமாக எதிர்ப்பதையும் காட்சியாக காட்டியிருப்பது வரவேற்கதக்கது. ஆனால் அவர்கள் தரப்பில் யாருமே நல்லவர் இல்லை என்பது போன்ற ஒரு மாயபிம்பத்தை மறைமுகமாக ஏற்படுத்த முனைந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாடல் வரிகளில் உள்ள நடுநிலைத்தன்மை கூட காட்சியமைப்புகளில் இல்லை. உதாரணமாக “டாலர் தேசத்தில் சமதர்மம் கிடையாது…” “போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை.. போர்தான் எங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டது…” “அணு விதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணுக்கதிர்தான்….” போன்ற வரிகளில் உள்ள நடுநிலைத்தன்மையை ஆராய்ந்தால் அது புரியும்.

தாலீபன் மற்றும் ஆப்கனின் குறைகளையும், அவர்கள் செய்யும் தவறுகளையும் அப்பட்டமாக பிரதிபலிக்கும் விஸ்வரூபம், அவர்கள் தரப்பு நியாயத்தை பதிவு செய்யாதது ஏன்…? பதிவு செய்ய விருப்பமில்லையா.? அல்லது இந்திய அரசாங்கம் அதை அனுமதிக்காதா….? அப்படி அனுமதிக்காத பட்சத்தில், அதை பகடி செய்வது போல் விகாஷ் காஷ்மீரி இப்படி பேசுவது போல் ஒரு வசனமாவது வைத்திருக்கலாமே… “உங்கள் தரப்பு நியாயத்தைப் பேச எங்கள் அரசாங்கம் என்னை அனுமதிக்கவில்லை….” என்று.

ஒரு கலைஞனாக எதை சொல்ல வேண்டும், எதை சொல்ல வேண்டியதில்லை என்று தீர்மானிக்கும் உரிமை கூட எனக்கு இல்லையா.. என்றெல்லாம் கேட்டு தப்பித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் இதில் நீங்கள் பேசி இருப்பது ஒரு சமூக(இஸ்லாமிய சமூகமல்ல) பிரச்சனையை.. எனவே இருபக்க நியாயத்தையும் நீங்கள் பேசியிருக்க வேண்டும்.. அப்படி பேசாததால் சில விஷமிகள் நீங்கள் ஒரு சாரருக்கு சாதகமாக படம் எடுத்திருக்கிறீர்கள் என வசைபாட ஏதுவான சூழலை உருவாக்கியிருக்கிறீர்கள்… அமெரிக்க தாலீபன் அரசியலைப் பற்றி எதுவுமே அறியாத சாதாரண மக்களின் மனதில் இந்த திரைப்படம் தாலீபன் தரப்பு தவறுகளை மட்டும் மிக அழுத்தமாக பதிவு செய்வதால், அவர்கள் தாலீபன் மற்றும் ஆப்கன் தரப்பில் மட்டுமே தவறு இருக்கிறது. அதைத்தான் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் தட்டிக் கேட்கின்றன என்கின்ற தவறான அடிப்படை சிந்தனைக்குள் மாட்டிக் கொள்ளக்கூடும். இது ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மீதான இன துவேசம் வளர காரணமாகக்கூடிய அபாயம் இருக்கிறது. வேறு யாராக இருந்தாலும் நாங்கள் இதனை அவர்களிடம் எதிர்பார்த்திருக்க மாட்டோம்…. நீங்கள் உலக அரசியல் அறிந்தவர் என்பதால் மட்டுமல்ல….

“ஒரு ஓநாய் தரப்பு நியாயத்தையே ஹேராமில் உரக்க சொல்லி அதனை எல்லார் மனதிலும் அழுத்தமாக பதிய வைத்தவர் அல்லவா நீங்கள்..” எனவே ஒரு தரப்பு நியாயத்தை பேசாமல் விட்டதை எதேச்சையான நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை…, ஏனென்றால் நீங்கள் தானே சொன்னீர்கள் “மனமிருந்தால் மார்க்க பந்து….”

இருப்பினும் மொகலாய கத்தி, அந்த இரண்டு பொம்மைகள்(யூகமே), ஆண்ட்ரியா கதாபாத்திரம், டாக்கின்ஸ் கொண்டு வந்து சேர்த்த வீடியோ ஆதாரம் போன்ற விசயங்கள் இரண்டாம் பாகத்தில் முக்கியபங்கு வகிப்பதைப் போல் சிறிதேனும் ஆப்கன் தரப்பு நியாயத்தையும் சொல்வீர்கள் என்ற நம்பிக்கையும் சிறிது இருக்கிறது.

Sunday, 3 February 2013

டேவிட்:


மணிரத்னத்தின் உதவி இயக்குநர். மேலும் இவர் முதல்படமாக எடுத்த சைத்தான் படம் ஹிந்தியால் நன்றாகப் போனது. இரண்டாவது படத்திலேயே இரண்டு மாஸ் ஹீரோக்களின் கால்சீட்டைப் பெற்று அதை இந்தியிலும் தமிழிலும் செய்கிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறியது. அப்படி ஒரு கதையை சொல்லி இரண்டு ஹீரோக்களின் கால்சீட்டையும் வாங்கி இருக்கிறாரே.. கண்டிப்பாக படம் மினிமம் கேரண்டியுடன் இருக்கும் என்று நம்பித்தான் போனேன்.


ஆரம்பத்தில் ஜீவாவின் கேரக்டரைஷேசனும், ஆங்காங்கே வரும் சில வசனங்களும் நச்சென்று இருக்க.. லேசாய் நம்பிக்கை துளிர்த்தது. ஆனாலும் விக்ரமின் போர்சன் ஏனோ ஆரம்பத்தில் இருந்தே ஒட்டவேயில்லை. சரி போக போக ஏதாவது கதை சொல்வார்கள் என்று உட்கார்ந்திருந்தால் ”கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை” தான் இருந்தது. போதையிலிருந்த டேவிட் (விக்ரம்) கேரக்டர் கடைசிவரை தானும் தெளியாமல் நம்மையும் தெளிய விடாமல் துரத்தி துரத்தி அடிக்கிறது. சரி இதை விட்டொழித்து நாம் ஜீவா போர்சனிலாவது பயணிப்போம் என்று முயன்றால் அதிலும் ஏகத்துக்கு தடை.


டேவிட் என்னும் பெயர் கொண்ட விக்ரமின் கதை. கல்யாண நாளில் மணப்பெண் காதலனுடன் ஓடிவிட.. கல்யாணம் ஆகாமல் தவிக்கிறார் விக்ரம். தன் நண்பன் ஒருவன் காது கேளாத, ஊமைப் பெண்ணை காதலிப்பதாக சொல்ல.. அவளுக்கு உதவ சென்ற இடத்தில் அவள் நட்பு ரீதியில் ஒரு முத்தம் வைக்க.. அதை காதலின் அச்சாரமாக நினைத்து அவளை திருமணம் செய்ய விக்ரம் முயல… அதற்கு துணைபோகிறார் விக்ரமின் நண்பியாக வரும் மசாஜ் பார்லர் நடத்தும் தபு. கடைசியில் கல்யாணம் நடந்ததா இல்லையா..?

டேவிட் என்னும் ஜீவாவின் கதை. பெரிய கிட்டாரிஸ்ட் ஆக நினைப்பவர். அப்பா சுவிசேசத்தில் தன் வாழ்க்கையை கழிப்பவர். இந்து மத அரசியல் தீவிரவாதிகளால் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றார் என்ற பெயரில் நடுரோட்டில் அடித்து அவமானப்படுத்தப்படும் தந்தை நாசரை பார்த்து வெதும்பும் மகன், தன் அப்பா அப்படி நடக்கவேயில்லையே.. பின்பு ஏன் அடித்தார்கள் என்று பதில் தே……..டி…..!!!!!!!!!!!!!!! அலைகிறார் ஜீவா. அவர்களும் பதில் மட்…….டும் சொ……ல்லி!!!!!!!!!! அனுப்ப முனையும் போது ஜீவா என்ன முடிவு எடுத்தார் என்பது மீதிக்கதை.


நல்ல விசயங்கள் என்று பார்த்தால், ஆங்காங்கே வரும் சில வசனங்கள், உதாரணமாக, ”தொலைஞ்ச ஆட்ட இங்க தேடி போனோம்ணா… மீதி ஆடெல்லாம் பிரியாணி தான்” “டேவிட் உன் கல்யாணம் நின்னதுக்காக நான் அழுகல… ஓடிப்போன என் பணத்தையும் தூக்கிட்டு போய்ட்டா…” “ஓ வீடு ஓடி போயிருச்சா…” சொல்லலாம். மேலும் சாண்டாக்ளாஸ் மூகமூடியை மாட்டிக் கொண்டு விக்ரம் செய்யும் சில சேஷ்டைகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால் இவை மட்டுமே ஒரு திரைப்படத்திற்கு போதாதே…
தன் தந்தையை அடித்தவர்களை தேடிச் சென்று ஏன் அடித்தீர்கள் என்று விசாரிக்கும் ஜீவாவின் செயல்கள் எல்லாம் பயங்கர அமெச்சூர்தனம்.. ஜீவாவின் கதை நடப்பது 1999ல், விக்ரமின் கதை நடப்பது 2010ல். இந்த இரண்டு நிகழ்வையும் க்ளைமாக்ஸ் என்னும் புள்ளியில் இணைத்து க்ளைமாக்ஸை காமெடியாக மாற்றி இருப்பார்கள். ஆனால் அந்த காமெடி க்ளைமாக்ஸை பார்க்கும் போது ஏனோ கொலைவெறி வருகிறது.


மீயூசிக் அநிருத்தையும் சேர்த்து ஆறு பேர் செய்திருக்கிறார்கள். ரிமோவின் இசையில் கோவாலில் இரவு நேரத்தில் அந்த படகு பயணத்தில் விக்ரம் மற்றும் செர்வானி இடையிலான அந்தப் பாடல் மட்டும் ரசிக்கும்படி உள்ளது. மற்ற எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ரத்னவேலு மற்றும் பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு சொல்லிக் கொள்ளும்படி இருக்கிறது. சில கேமரா கோணங்கள் அற்புதமாக இருக்கிறது. குறிப்பாக அந்த தென்னை மரத்தில் இருவர் அமர்ந்து தண்ணியடிக்கும் போது அடியில் ஒரு படகு க்ராஸ் ஆவதைக் கூறலாம்.


ஒரு நல்ல டயலாக்கை வைத்துக் கொண்டு படம் செய்வது எப்படி என்பதை விளக்குவதற்காக செய்யப்பட்ட முயற்சியோ என்று சந்தேகிக்க தோணுகிறது. இந்த ஒரு டயலாக்கில் இருக்கும் கதையை நம்பியா இரண்டு மாஸ் ஹீரோக்களும் தங்களது கால்சீட்டை வீணடித்தார்கள் என்று நினைக்கும் போது மயக்கமே வருகிறது.

பிறகு

ஆசிரியர் - பூமணி
பதிப்பகம்: காலச்சுவடு
பிரிவு: நாவல் / இலக்கியம்

தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான பூமணியின் ஆகச் சிறந்த படைப்பு இந்த “பிறகு.”

வரலாறு சார்ந்த புத்தகங்கள், தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள், வீட்டு குறிப்புகள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள், ஜோதிடம் மற்றும் கல்வியல் சார்ந்த புத்தகங்கள் இவைகளோடு ஒப்பிடுகையில் நாம் ஏனோ நாவல் சார்ந்த புத்தகங்களை எளிதாக புறக்கணிக்கிறோம். இந்த புறக்கணிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது, இந்த நாவலை வாசிப்பதன் மூலம் நான் பெரிதாக என்ன தெரிந்து கொள்ளமுடியும், அதில் ஒரு கதையை தவிர வேறு என்ன இருக்கிறது என்கின்ற ஒரு மேம்போக்கான பார்வையே ஆகும். நாவல் வாசிப்பு குறித்தான நம் சமூகத்தின் பார்வை பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது. நம்மில் பலரும் அதனை ஒரு சுவாரஸ்யமான கதையாடல் இருக்கிறது என்று நண்பர்கள் பரிந்துரைக்கும் போதோ அல்லது பிரயாணங்களின் போது அருகில் இருப்போரின் இம்சையில் இருந்து தப்பிப்பதற்காகவோ அல்லது நேரத்தை கொல்வதற்கு வேறு ஏதும் வழி இல்லாத போதோ தான் நாவலை நாம் கையில் எடுக்கிறோம்.

வரலாற்றை தெரிந்து கொள்வதில் நமக்கு உள்ள ஆர்வம் கூட நாவல் வாசிப்பில் இருப்பதில்லை. நாம் விரும்பி வாசிக்கும் வரலாறு எதை தாங்கி வருகிறது. ஒரு அரசனின் கதை, ஒரு பேரரசின் கதையை, போர்களின் வெற்றி தோல்வியை, வரலாற்று சிறப்புமிக்க இடங்களின் வரலாற்றை இவைகளைதானே.. மொத்தத்தில் இந்த வரலாறு சுமந்து வருவது அரசனின் வாழ்க்கையை.

நாவல்களோ நம்மைப் போன்ற சாதாரண மக்களின் வாழ்க்கையை சுமந்து வருகிறது. எப்படி ஒரு வரலாற்று புனைவுகள் முற்றிலும் உண்மையாகவும், முற்றிலும் பொய்யாகவும் இருக்காது என்று வரையறை செய்கிறோமோ அதே இலக்கணம் நாவலுக்கும் பொருந்தும்.
ஏதோ ஒரு அரசனின் வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் காட்டுகின்ற முனைப்பை, நம் மூதாதையரின் வாழ்க்கையை, நம்முடைய வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் நாம் காட்டுவதே இல்லை. அதை நாம் ஒரு கதையாகவே எளிதில் கடந்து செல்ல முயல்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.

எப்படி ஒரு வரலாற்று புத்தகத்தை படிக்கும் போது நாம் மன்னராட்சியில் இருந்து மக்களாட்சி முளைத்த வரைபடத்தை புரிந்து கொள்கிறோமோ, அது போல் அதிகமான நல்ல நாவல்களை எடுத்து வாசிக்கும் போதுதான் சாதாரண மக்களின் வாழ்க்கையில் நடந்த சமூக மாற்றத்தின் வாழ்க்கையோட்டத்தை நாம் ஓரளவேனும் புரிந்து கொள்ளமுடியும். அதன் மூலம்தான் இன்றைய சமூகத்தின் அச்சுறுத்தும் அவலங்களான மதம், சாதி, அரசியல், தீண்டாமை, பெண்ணடிமை மற்றும் உளவியல் சார்ந்த மனிதமனங்களின் முரண்பாடு போன்றவற்றின் மூலவித்தை கண்டறிந்து அதில் நாம் கடந்துவந்த தூரத்தையும் கடக்கவேண்டிய தூரத்தையும் தீர்மானிக்க முடியும். அதற்காகவேணும் சற்று நாவலும் வாசிப்போமே…

பிறகு மையக்கதை:
1975ம் காலகட்டத்தில் எழுதப்பட்ட இந்த நாவல், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசும்  முதல் நாவலாக இலக்கியவட்டத்தில் சிலாகிக்கப்பட்டது என்னவோ 1990களின் தொடக்கத்தில்தான். சுதந்திரம் அடைந்து 25ஆண்டுகளில் நடைபெற்ற மாற்றங்களை துணை கதாபாத்திரங்களின் மூலம் ஜோடனைகளாகக் கொண்டு சக்கிலியகுடியில் வாழும் அழகிரி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மனிதனின் வாழ்க்கையை பேசுகிறது இந்த நாவல்.

அழகிரி:
கோவில்பட்டியை அருகாமையில் கொண்ட மணலூத்து என்னும் கிராமத்தின் சக்கிலியக்குடி என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில், துரைசாமிபுரத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு குடியேற்றப்படுகிறான் செருப்புத் தைப்பதை தொழிலாக கொண்ட அழகிரி. நோய்வாய்பட்ட மனைவி காளி, இரண்டு வயது மகள் முத்துமாரியுடன் வரும் அவன் இரண்டு வருடங்களில் தன் மனைவியை இழக்கிறான். மாட்டு தாவணியில் (மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டல்ல… மாட்டுதாவணி என்பது மாடு விற்கும் சந்தை) சந்தித்த ஆவடையை தன் துணையாக சேர்த்துக் கொண்டு, தன் மகளை கரைசேர்க்க அவன் படும் பாடே கதை.

ஆவடை:
அப்பன் ஒரு குடிகாரன். வயதுக்கு வந்த பெண்ணை வேலைக்கு அனுப்பி அதில் வரும் பணத்தைக் கொண்டே குடித்துக் கொண்டு திரிபவன். தன் மகளுக்கு ஒரு கல்யாணம் செய்து கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவன். ஒரு கட்டத்தில் அழகிரி மாட்டு தாவணியில் ஆவுடையிடம் தன் கதையை சொல்லி, தன்னை கட்டிக்கிறாயா என்று அவளிடம் கேட்க, அன்று சாயந்தரம் வரை அதைப்பற்றி யோசித்தவள், அன்று இரவு அந்த இடத்தை விட்டு அழகிரி கிளம்பும் போது, தன் அப்பனிடம் எதையுமே கூறிக் கொள்ளாமல் அழகிரியுடன் கிளம்பிவிடுகிறாள். அன்று முதல் முத்துமாரியை தன் சொந்த மகளாக நினைத்து அவளுக்காகவே தன் மொத்த வாழ்க்கையையும் கழிக்கும் அவள், தனக்கென்று ஒரு பிள்ளையை பெத்துக் கொள்வதே இல்லை.. முத்துமாரிக்கு பின்னர் தன் பேரப்பிள்ளைகளை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறாள்.

முத்துமாரி:
முத்துமாரியின் நிலை மிகமிக மோசம். வயதுக்கு வந்து சிறிது நாட்களிலேயே தன்னை ஏன் கட்டிக் கொடுக்கிறார்கள். தான் ஏன் இந்த ஊரை விட்டு போக வேண்டும். தெரியாத ஆட்களுடன் எப்படி வாழ்வது என்று குழம்புகிறாள். அதை வெளிப்படுத்தும் தைரியம் அவளுக்கு இருப்பது இல்லை. வைரவன் என்பவனுக்கு அவளை திருமணம் செய்ய, ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. திடீரென்று பட்டாளத்துக்கு போன வைரவனின் பழக்கவழக்கம் மாறத் தொடங்குகிறது. லீவுக்கு வீட்டுக்கு வரும் அவன், மாடு மேய்க்கும் தொழில் செய்யும்  அவள் சுத்தமாக இருப்பதில்லை என்று அவளை அடிக்கிறான். அவள் உடல் வீசுவதாக குற்றம் கூறுபவன் அழகிரியையும் திட்ட, இவளும் கோபத்தில் பதிலுக்கு திட்ட வீட்டை விட்டு விரட்டுகிறான். மகனை தன்னோடு வைத்துக் கொண்டு அவளை, பெரியோர் முன்னிலையில் விவாகரத்து செய்கிறான்.

மகனைப் பிரிந்த துக்கத்தில் வாடும் முத்துமாரிக்கு அழகிரி மற்றொரு திருமணம் செய்ய நினைக்க அவள் அஞ்சுகிறாள். முனியாண்டியுடன் திருமணம் நடக்கிறது. முனியாண்டி அன்பாக நடந்துகொள்கிறான். பெண் குழந்தை பிறக்கிறது. எல்லோரும் முத பிள்ள பொண்ணா புறந்தது வீட்டுக்கு நல்லது என்று சொல்லிச் செல்ல, அவள் மனம் புழு போல் துடிக்கிறது. முதல் பிள்ளை ஆம்பள புள்ள.. என்ற வார்த்தை நெஞ்சை முட்ட.. அவளுக்கு கண்ணீர் வழிகிறது. முதல் குழந்தை சுடலையின் நினைப்பு மனதில் பலமாய் அறைகிறது.

வைரவன் பட்டாளத்தில் வேறு ஒரு பெண்ணை சேர்த்துக் கொண்டான் என்றும் அவளுடைய மாமனார் முத்துமுருங்கன் தான் சுடலையை பார்த்துக் கொள்கிறார் என்றும் சேதி வருகிறது. சில நாளில் முத்துமுருங்கனும் இறந்து விட.. இழவுக்கு தன் கைக்குழந்தையை வீட்டிலேயே விட்டு சென்ற முத்துமாரி, திரும்பும் போது சுடலையுடன் திரும்ப.. கோபம் கொண்ட முனியாண்டி முத்துமாரியை மாரில் எட்டி உதைத்து வீட்டை விட்டு அனுப்புகிறான்… உடல் வலியோடு, மன வலியும் சேர்ந்து கொள்ள.. அவள் பெரும் குரல் எடுத்து அழுகிறாள்.. செய்வதறியாது சுடலையும் சுவரோரமாய் நின்று அழுகிறான்… அவள் வாழ்க்கை என்னவானது….?

கருப்பன்:
தாயும் தந்தையும் பேதியில் இறந்துவிட.. அநாதையாய் சுற்றித் திரியும் கருப்பன் மணலூத்துக்கு வந்து சேர, அழகிரி அவனுக்கு கஞ்சி ஊற்றி, ஊரில் மாடு மேய்க்கும் வேலை வாங்கித் தருகிறான். ஊரில் இருக்கும் மாடுகளை அவன் மேய்த்துக் கொண்டிருக்கிறான்.. ஒரு கட்டத்தில் ஊரில் மழை இல்லாமல் போனதற்கு கருப்பன் தான் காரணம் என்று ஊர் அவனை குற்றம் சாட்ட.. அவன் ஊரில் நன்றாக மழை பெய்த போதும் தான் இங்குதானே இருந்தேன் என்று வாதிடுகிறான்… பின்பு எதையோ நினைத்தவனாய், எனக்கு எதுக்கு பேதி வந்து சாகாமல் இருந்தேன்.. அல்லது அவுகளாது என் மூக்குல சாம்பல போட்டு கொன்னுருக்க கூடாதா.. எங்க அப்பன் ஆத்தாகூடயே நானும் போயிருக்கலாம்ல… என்று அழுகிறான்.

அவனை கந்தையாவும் அழகிரியும் சமாதானம் செய்ய, புது வேட்டியாது எடுத்துக் குடுப்பாகலா.. என்று கருப்பன் கேட்க.. அவர்கள் ஆம் என்று சொல்ல.. சந்தோசமாக ஒத்துக் கொள்கிறான்.. அவனுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்றி ஊரை சுற்றிவர, அவன் இடுப்பில் கட்டி இருந்த புது வேட்டியை பார்த்துக் கொண்டிருந்தான்.. மாடு மேய்க்கும் போது மாடில் ஏறி சவாரி செய்பவனுக்கு, கழுதையில் சவாரி செய்வது ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை.

காவக்காரர் கந்தையா:
ஊரில் பெரும்காணிக்கு சொந்தகாரராக இருந்து, தன் நிலப்பட்டாக்களை அப்பையாவிடம் அநியாய வட்டிக்கு அடகுவைத்து ஏமாந்து நிலங்களை இழந்தவர். இப்போது அவரது நிலத்துக்கே காவல் வேலை செய்து கிடைக்கும் கூலியைக் கொண்டு பிழைப்பு நடத்துகிறார். ஊரில் இருக்கும் ஏழை பாழைகளுக்கு நியாயம் கிடைக்க போராடும் ஒரே ஒரு மனிதர்.

சக்கணனும் சித்திரனும்:
சக்கணன் வயதானவன், சித்திரன் உடம்பில் வீக்க நோய் வந்து கேவி கேவி நடப்பவன்.. இருவரும் ஜோடியாகத்தான் ஊருக்குள் திரிபவர்கள். இவர்கள் வாயிலாக ஊர் தொடர்பான பல கதைகளும் பகடியாக விரிகின்றது. ஊரில் முத குடிவந்தவுக யாரு என்று கேட்கும் சித்திரனுக்கு சக்கணன் சக்கிலியகுடிதான் என்று பதில் சொல்லிவிட்டு மணலூத்து என்னும் ஊர் உருவாகிய வரலாற்றை கூறுகிறான்.. மேலும் நண்டை பிடிக்க நரி செய்யும் தந்திரத்தையும், குளத்தாங்கரை ஆலமரத்தில் அடையும் பறவைகளை பிடிக்க சக்கணன் என்ன செய்வான் என்கின்ற தந்திரத்தையும் ஒருமுறை மாடு மேய்க்க போன சக்கணன் கிடைக்காக போட்டிருந்த ஆட்டுக்கு கிடைக்குள் மழைக்காக ஒதுங்கப் போய் எப்படி நரியிடம் மாட்டிக் கொண்டான் என்பதும், பின்பு அதிலிருந்து எப்படி தப்பித்தான் என்பதும் சுவாரஸ்யமான கதைகள். இது போன்ற இன்னும் பல விசயங்களை இவர்கள் வாயிலாக விவரிக்கிறார் ஆசிரியர்.

சுதந்திர பேச்சு:
சுதந்திர அடைந்ததை சில மக்கள் எப்படி பார்த்தார்கள் என்பதும், சுதந்திர போராட்டம் குறித்தான விழிப்புணர்ச்சி தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் எந்த அளவுக்கு இருந்தது என்பதும் கீழ்கண்ட உரையாடல் மூலம் தெரிந்து கொள்ளலாம்…

“சொயராச்சியம் வந்திருச்சாம்.. ஏதோ கெடாரம் கெடச்சமாதிரி ரெண்டு மூணு வீட்ல கொண்டாடுறாக.. இவுகளுக்கு என்னதான் கிடைச்சிச்சோ..”

”நானும் அத கேக்கணும்னே இருந்தே.. நமக்கு விடுதல வந்திருச்சின்னு பேசிக்கிறாகளே நாம என்ன செயில்லயா இருந்தோம்…”

“விடுதலனா செயில்ல ரொம்பநாளா இருக்காகளே அவுகளுக்காருக்கும்.. ஒரு பேச்சுக்காகசுட்டி எல்லாரவும் சேத்து சொல்லீருப்பாக…”

“சரி அப்படியே வெச்சிக்குருவோம் அதுக்காக ஏன் வெள்ளக்காரன வெளியேத்தணுமிங்காக… இவுகளுக்கு அவன் என்ன செஞ்சான்…”

“அதுக்கில்லண்ணே எங்கயோ எவனோ தாட்பூட்னு திரிஞ்சா இவுகளுக்கென்ன.. அன்னைக்கு பேசுறாக விடுதல வந்தாச்சுன்னா ஆருவிட்லயும் ஆரும் கூசாம கஞ்சித்தண்ணி குடிக்கலாமாம்.. எல்லாருக்கும் சோத்து கஸ்டமே வராதாம்…”

இப்படியும் சில மக்களின் எண்ணவோட்டங்கள் இருந்திருக்கிறது. இதுமட்டுமல்ல.. இது போக முதன்முதலில் ஊருக்கு மின்சாரம் வந்த போது என்னமாதிரியான பிரச்சனைகள் வந்தது, ஊருக்கு இரண்டு விதமான கட்சி கம்பங்கள் நிறுவப்பட்ட போது அது எப்படி ஒரு பிரளயமாக உருவெடுத்து காவல்காரர் கந்தையாவை தாக்கியது, தேர்தலை எதிர் கொண்ட மக்களின் மனோபாவம் எப்படி இருந்தது, அவர்கள் தேர்தலை எப்படி சந்தித்தார்கள் என்று நாம் அறிந்து கொள்ள பல விசயங்களையும் தாங்கி நிற்கிறது இந்த ”பிறகு” நாவல். 

இங்கு தெலுங்கு பேசும் மக்கள் பரவலாக இருப்பது போல் வாசிப்பின் போது புலனாகிறது. மேலும் இதில் தாழ்த்தப்பட்ட மக்களும் சில இடங்களில் தெலுங்கு பேசுகின்றனர். இது அங்கு வசிக்கும் நாய்க்கர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தினாலா அல்லது எப்படி என்ற கேள்வி எழும்புகிறது. இதற்கான விடை நமக்கு வேறு எங்காவது எப்போதாவது கிடைக்ககூடும்.

மேலும் இந்த நாவலை நாம் வாசித்து முடிக்கும் போது இதில் இலையோடி இருக்கும் அரசியல், சாதி, பெண்ணியம் மற்றும் தீண்டாமை தொடர்பான உண்மை நிலையையும் தெரிந்து கொள்வதுடன், கோவில்பட்டி வட்டார வழக்கு மொழியையும் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடியும்..

Friday, 1 February 2013

கடல்:


இராவணன் படத்தின் படுதோல்விக்கு பிறகு வரும் மணிரத்னத்தின் அடுத்த படம் என்கின்ற எதிர்பார்ப்பு. மேலும் கார்த்திக் தன் மகன் கெளதமை மணிரத்னத்தின் இயக்கத்தில் தான் வெளிப்படுத்த வேண்டும் என்று காத்திருந்து, அறிமுகப்படுத்தியது, முதலில் கதாநாயகியாக சமந்தா புக் செய்யப்பட்டு பின்னர் தோல்வியாதி காரணமாக நீக்கப்பட்டார் என சொல்லப்பட, அதெல்லாம் இல்லை ராதாவின் கைங்கர்யத்தால் தான் நாயகி மாற்றப்பட்டது, கார்த்திக்கின் ஆதரவுடன் தன் இளைய மகள் துளசியின் அறிமுகத்தை மணிரத்னம் படத்திலேயே ஏற்படுத்திக் கொண்டார் ராதா என படத்தைப் பற்றி ஏகப்பட்ட கதைகள் கோலிவுட்டில் வலம்வந்து கொண்டிருந்தன.

இந்த கதையெல்லாம் எதற்கு என்று நீங்கள் கேட்டீர்களானால் நான் சொல்லிக் கொள்ளவிரும்புவது ஒன்றுதான். ஏனென்றால் இதிலெல்லாம் கதை இருக்கிறது. அதையும் மீறி கதையை நம்புவதற்கு வலுவான அடிப்படையும் காரணமும் இருக்கிறது.. (வதந்தியிலும் கூட..) பாருங்கள் தோல்விக்கு பின் வெற்றிபெற வேண்டும் என்கின்ற மணி சாரின் துடிப்பு,(ஒரு கதை) நல்ல இயக்குநரின் படத்தில் அறிமுகமாக வேண்டும் என்ற கெளதமின் காத்திருப்பு(ஒரு கதை), சமந்தாவுக்கு சூழ்நிலையால் பறிபோன அரிய வாய்ப்பு..(ஒரு கதை)!, துளசிக்கு நாயகி வாய்ப்பு கிடைத்ததன் பிண்ணனியில் நடந்த காய்நகர்ததலோ அல்லது அதிர்ஷ்டமோ…(பல கதை)? இவையெல்லாமே கதைகள் தான்.. இப்படி கடல் படத்தைப் பற்றியே பல கதைகள் இருக்க, படத்தில் கதையே இல்லாமல் போனதுதான் பெரும் சோகம்…

கதையென்று ஒன்று உண்டு என்று யாரும் வாதிட முன் வந்தால் அவர்கள் கதையென்று இதைத்தான் கூறுவார்கள். அர்ஜீன் அரவிந்தசாமி இருவருக்குமான நீயா..? நானா..? என்கின்ற போர்தான் கதை. இருவருமே கிறிஸ்துவ மத போதகராவதற்குரிய பட்டம் பயில வந்தவர்கள், அங்கு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் பெர்க்மான்ஸ்(அர்ஜீன்)சை, நேர்மையாக இருக்கும் சாம்(அரவிந்தசாமி) கண்டிக்க.. இருவருக்குமான முட்டல் தொடங்குகிறது. என்னுடைய சூழ்நிலைதான் என்னை கெட்டவனாகவும், உன்னுடைய சூழல் தான் உன்னை நல்லவனாகவும் வைத்திருக்கிறது. உன்னுடைய சூழலையும் மாற்றி உன்னையும் பாவத்தின் குழியில் தலைகுப்புற தள்ளுகிறேன்.. என்று அரவிந்தசாமியிடம் சபதமிட்டு படிப்பையும் முடிக்காமல் பாதியிலேயே வெளியேறுகிறார் அர்ஜீன். இதுதான் படத்தின் மையக்கரு. இதைக் கொண்டு அவர்கள் மிகச்சிறந்த ஒரு கதையை சொல்லியிருக்கலாம். ஆனால் ஜெயமோகனை வைத்துக் கொண்டும் அது சாத்தியப்படாமல் போனது எப்படி என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

இப்படி ஆரம்பிக்கும் படத்தை பாதியில் அநாதியாக விட்டுவிட்டு கடலோர கிராமத்தில் மற்றொரு கதையை தொடங்குகிறார்கள். அங்கு பாலியல் தொழில் செய்த பெண்ணுக்கு பிறந்த தில்லை என்கின்ற சிறுவன், தன் தாயின் மறைவுக்கு பின்னர், தான் தகப்பன் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் ஒருவனை அண்ட அவன் இவனை அடித்து துரத்த, அதே கிராமத்தில் இவன் அநாதையாக, ஒரு பொறுக்கியாக வளர்ந்து நிற்கிறான். அந்த ஊருக்கு பாதிரியாராக வந்து சேரும் அரவிந்தசாமி அவனை அரவணைத்து, அவன் வாழ்க்கையை மாற்ற, அவனுக்கு பியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது. இப்போது மீண்டும் இங்கு வந்து சேர்கிறார் அர்ஜீன். அடுத்து என்ன நடந்தது என்பதை ஒரு நீண்ட கப்பல் பயணம் போல் ஆசுவாசமாக சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே படத்தைப் பார்க்கின்ற பார்வையாளரின் மனது எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை இயக்குநர் தீர்மானித்துவிட வேண்டும். ஆனால் கடல் திரைப்படத்திலோ பார்வையாளனின் மனது நடுக்கடலில் வழிதெரியாமல் அகப்பட்டவனைப் போன்றே திக்கு தெரியாமல் பயணிக்கிறது.

பெரும்பாலும் மணிரத்னம் படங்களில் ஒரு கதாபாத்திரத்தின் இயல்பு எத்தகையது என்பதும், அவனது தேவை என்ன என்பதும் மிக தெளிவாக ஆடியன்ஸ்க்கு புரிந்துவிடும். ஆனால் இதில் அர்ஜீனின் கேரக்டரைஷேசன் அதற்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறது. அவர் எதற்காக மிஷினரி ஊழியம் சார்ந்த படிப்பு படிக்க வந்தார்..? அவரது குடும்ப சூழ்நிலையிலுள்ள பிரச்சனை என்ன…? ஏன் அவர் அப்படிபட்ட ஒரு மனிதனாக வளர்ந்தார்..? அரவிந்தசாமி புகார் கூறாத நிலையிலும் அவர் ஏன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறுகிறார்..? அது அவராக எடுக்கும் முடிவுதானே..? அப்படி இருக்கையில் குடும்பத்தில் உள்ள நபர்களின் மரணத்துக்கு அரவிந்தசாமி எப்படி காரணமாக முடியும்..? அரவிந்தசாமிதான் காரணம் என்று அர்ஜீன் நினைக்க தொடங்கினாலும் அவர் எங்கு இருக்கிறார் என்று தேடும் முயற்சியில் கூட அர்ஜீன் ஏன் இறங்குவதில்லை..? படத்தில் அர்ஜீன் செய்யும் சில தந்திரங்கள்…!? உங்கள் சபதத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் இவ்வளவுதானா என்னும் சளிப்பையே ஏற்படுத்துகின்றன. இவைகள் ஆரம்பத்தில் அர்ஜீன் விட்ட சவாலுக்கு தர்க்க ரீதியிலாக சரியான பதில் சொல்லும் காட்சிகள் இல்லையே..? இப்படி பல உறுத்தல்கள்.

படத்தில் தில்லை என்னும் தாமஸாக வரும் கெளதமின் பின்புல வாழ்க்கையை ஆடியன்ஸ் மனதில் பதிய வைத்ததைப் போல் அர்ஜீனின் வாழ்க்கையை பதிய வைத்திருந்தால் அவரது கேரக்டருக்கான நியாயமாவது கிடைத்திருக்கும். தில்லை மற்றும் பியாவின் காதல் எபிசோட் அர்ஜீனின் சபதத்திற்கு எப்படி உதவியது என்றே தெரியவில்லை. திரைக்கதையில் இந்த இரண்டுக்குமான முடிச்சி ஏனோ துருத்திக் கொண்டு இருப்பதை தவிர்க்க முடியவில்லை.

கெளதமின் நடிப்பு ஓகே ரகம்தான். இவரும் யாரிடம் இருந்து கத்துக் கொண்டாரோ பல இடங்களில் பெருங்குரல் எடுத்து கத்துவதையே நடிப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். நடனத்தில் மட்டும் கார்த்திக்கை மிஞ்சுகிறார். நடிப்பில் இல்லை. துளசி(பியா) இளவயது ராதாவை ஞாபகபடுத்துகிறார். சில ப்ரேம்களில் அழகாகவும், சில ப்ரேம்களில் அசிங்கமாகவும் தெரிகிறார். உடம்புதான் பீப்பாய் போலத் தெரிகிறது. குழந்தைதனமான கதாபாத்திரம் என்பதால் சில இடங்களில் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது.  அர்ஜீனின் நடிப்பும் அரவிந்தசாமியின் நடிப்பும் திருப்தி கொடுத்தாலும் அவர்களது கேரக்டரைஷேசன் நெருடுவதால் மனதில் நிற்கவில்லை.

படத்திற்கு பாடல்களும், பிண்ணனியிசையும் பெரிய ப்ளஸ். படத்தில் ஏற்படும் தொய்வை ஆங்காங்கே வரும் பாடல்கள் ஈடுசெய்வதுடன் ஆறுதலாகவும் இருக்கிறது. யூ டியூபிலும், பேஸ் புக்கிலும் அதிகமாக ஹிட்டடித்த ”அடியே” சாங்கின் பிக்சரேஷன் படுமோசம். ராஜீவ் மேனனின் கேமரா வழக்கம் போல் கடலோர அழகை அள்ளி வந்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் ஒளிப்பதிவு நேர்த்தி. ஆரம்பத்தின் சில காட்சிகளில் வசனத்திலும் கதையிலும் பெரிதாக எதிர்பார்க்க வைத்த மணிரத்னமும் ஜெயமோகனும் கடைசியில் ரொம்பவே ஏமாற்றிவிட்டார்கள்.