Thursday, 21 February 2013

அம்மா எனக்கொரு வரம் கொடு
அம்மா……
உனை விட்டு
தூரமாய் வந்திருக்கிறேன்..
தூசி படிந்த நகரத்துக்கு…..

துரைப்பாக்கம் தொழிற்பேட்டையில்தான் வேலை
பணிச்சுமை அதிகமில்லை…
பசிச்சுமை தான்….

கிழமைகூட நினைவில்லை..

நம்வீட்டு குழம்பில்
கிழமையின் பெயர் எழுதியிருக்கும்
புளிக்குழம்பு என்றால் திங்கள்
பருப்புகுழம்பு என்றால் செவ்வாய்
கருவாட்டுகுழம்பு என்றால் புதன்
பயத்துக்குழம்பு என்றால் வியாழன்
சாம்பார் என்றால் வெள்ளி
கீரை ரசம் என்றால் சனி
அசைவமென்றால் அது
ஞாயிறு

இங்கு எல்லாமே எனக்கு
வெள்ளிக்கிழமைகள்

பருப்பில்லாத சாம்பார்
பழகிக் கொண்டேன்…

இன்று
வெள்ளி வெறுத்துப் போய்
சனிக்கு மாறிவிட்டேன்…

காலையென்றால்
நாலு இட்லி ஒரு வடை

இரவென்றால்
மூணு தோசை

உன் கைபக்குவம் தேடி
அலைந்த நாட்களில்
என் காலுக்கு பக்குவம்
செய்யவேண்டியதாயிற்று…

கடைசியில் என் நண்பன்
சொன்னான் ஒர் முகவரி…
500கீமி தள்ளிப் போக வேண்டுமாம்…
அது நம்வீட்டு முகவரி…
என்ன இடக்கு பார்த்தாயா அவனுக்கு….
 ம்ம்ம்ம்……..

நல்ல சாப்பாடு சாப்பிட்டு
நாலு மாதம் ஆகிறது…
ஊரிலிருந்து வந்தும் தான்…..

உன்னிடம் சொன்னால்
அழுது ஆர்பரிப்பாய்
கண்ணீரால் காய் நகர்த்துவாய் – அது
கல்யாணத்தில் செக் வைக்கும்…
வேண்டாம்…. வேண்டாம்…..

இல்லை
உன்னையும் கூட்டிச்செல் என அடம்பிடிப்பாய்..
நான் நரகத்திற்கு உன்னை வாவென்று
எப்படியழைப்பேன்….

நீயாவது சொர்க்கத்தில் இரு…
உனைக் காணும் சாக்கில் – அவ்வபோது
நான் கால் பதிக்க கூடும்..

உன் மீன் குழம்பு நினைவில்
ஒரு ஹோட்டலில் நுழைந்துவிட்டேன்..
உட்கார்ந்த இடத்துக்கும் சேர்த்து காசு
சாப்பிட்ட காசை உன் கையில் கொடுத்தால்
மூன்று நாள் நான் அமிர்தம் உண்ணலாம்…
மனம் கேட்கவில்லை.. போகட்டும்…
வயிறாவது நிறையுமே…
உண்டு வெளியே வந்தால்…
இரண்டுமே எரியத் தொடங்கியது…
வெறுத்துப் போனேன்…

நீ சமைக்கும்
நெத்திலி மீன் குழம்பு
காலி ஃப்ளவர் கூட்டு
வெண்டைக்காய் பொறியல்
வறுத்த ஈரல்
பருப்பு தண்ணி கலந்த ரசம்….
எண்ணெய் மிதக்கும் ஊறுகாய்…
எல்லாமே கனவிலும் வந்து போனது…

ஊன் உயிர் தூண்ட..
ஊருக்கு கிளம்பிவிட்டேன்…

கோயிலில் நுழைபவன் மனம்
சுத்தமாவதைப் போல்
சுயநலமில்லா உனைக் காண
பேருந்தில் வரும் போது…
என் ஆசைகள் எல்லாம்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
உதிர்ந்துவிட்டன போலும்..

நீயோ……
படையலால் எனை மூழ்கடித்தாய்..
பக்கத்துக்கு ஒரு பதார்த்தம் படைத்தாய்…
நுழைந்ததுமே நுங்கு பதினி
படுக்கைக்கு முன்பின் பால்
இளைப்பாறும் போது இளநீர்
விடிந்ததுமே விறால்மீன்
அடைந்ததும் ஆப்பம்பால்…
படுத்திருந்தால் பணியாரம்
உட்கார்ந்திருந்தால் உளுந்துவடை
நின்றிருந்தால் நீராகாரம்
எழுந்துகொண்டால் எழுமிச்சை சாறு
பிரியும் தருணம் பிரியாணி
அப்பப்பா…

தாகத்தில் வந்தவன் தடாகத்தில் விழுந்ததைப் போல்…
திக்குமுக்காடிப் போனேன்…
தின்னத்தான் முடியவில்லை…
மாயா பஜார் கனவோடுதான் வந்தேன்…
மஞ்சக் காமாலைக்கு பத்தியம் இருந்தவனைப் போல்
உண்டுவிட்டு
ஊரைவிட்டு போய் கொண்டிருக்கிறேன்…

அசதியில் உறங்கிவிட்டேன்.. 
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
உதிர்ந்த ஆசைகள் எல்லாம்
ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக் கொண்டன போலும்…
மீன் குழம்பும்
கருவாட்டுக் குழம்பும்
கனவில் நடனமாடுகின்றது….
திடுக்கிட்டு விழித்தேன்….
மீண்டும் பசிக்கத் தொடங்கியது…

அம்மா…
வரம் கொடுக்க தவமிருக்கும் தேவதையல்லவா நீ
எனக்கு ஒரு வரம் கொடு
அடுத்தமுறை 
நான் ஊருக்கு வரும்போது 
கொஞ்சமாவது
நீ சுயநலத்தோடு இருப்பதாகவும்…
உனக்கென சில ஆசைகளை
வளர்த்துக்கொள்வதாகவும்
வரம் கொடு….
என் ஆசைகள் உதிராமல்
வீடு வந்து சேரட்டும்…
ஏனென்றால் உன் மகன்
நீ சமைத்ததை உண்ண….
பசித்திருக்கிறேன் தாயே……


No comments:

Post a Comment