Sunday, 23 March 2014

குக்கூ:

எனக்கு ராஜுமுருகனைப் பிடிக்கும்.. ஏனென்றால் எனக்கு வட்டியும் முதலும் ரொம்பப் பிடிக்கும்… இயக்குநராகும் கனவில் இயங்கிக் கொண்டிருக்கும் எனக்கு “வட்டியும் முதலும் தந்த அதிர்ச்சி அளப்பரியது..” அதற்கு காரணங்கள் உண்டு. எனக்குள் அத்திப்பூத்தாற் போல் எப்போதாவது பளிச்சிடும் முரணான கதைச்சரடுகளையும், கதைமாந்தர்களையும் நான் கண்ணின் மணியைப் போல் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வரும் போது, அதே கனவுகளுடன் இயங்கி வரும் இந்த ராஜுமுருகன் அண்ணன், அவருக்குத் தெரிந்த அத்தனைக்(பெரும்பாலான) கதைகளையும் கதைமாந்தர்களையும் இப்படி கட்டவிழ்த்து பொதுவெளியில் அலையவிடுகிறாரே… இவர் தனக்கென்று எந்தக் கதையையும் பொத்திவைக்க மாட்டாரா…? என்றும் இவருக்கு மட்டும் எப்படி வாழ்க்கையில் இத்தனை நபர்களையும், இத்தனை சம்பவங்களையும் கடந்து வரும் வரம் கிடைத்தது… அதற்காக இவர் இருந்த தவம் என்ன..? என்றெல்லாம் பல ஐயங்கள் எனக்குள் உழன்று கொண்டே இருந்தது… அதனாலயே மீண்டும் ஒரு முறை வட்டியும் முதலும் முழு புத்தகத்தையும் படித்துவிட்டுத்தான் படத்துக்குச் செல்ல வேண்டும்… படம் பார்க்கும் போதே புத்தகத்தில் உள்ள சம்பவங்களோடு அதனை ஓப்பீடும் செய்ய வேண்டும்… என்ற தீராத மன உறுதியுடன் இருந்தேன்… ஆனால் தொடர்ந்துபட்ட வேலைகளால் அதன் முதல் பத்து அத்தியாயங்கள், ஏறத்தாழ 120 பக்கங்களை மட்டுமே கடக்கமுடிந்தது.. ஏனென்றால் அவற்றை அவ்வளவு எளிதாக புரட்டிக் கொண்டே சென்றுவிட முடியாது…. ஒவ்வொரு பக்கமும் அவ்வளவு கணம்… வெளிவந்த விமரிசனங்களும் திரைப்படத்தை விரைவாகப் பார்க்கவேண்டும் என்று உந்தித் தள்ள… நேற்றே திரைப்படத்தைப் பார்த்துவிட்டேன்… பார்த்ததில் இருந்து இன்று இலக்கியமுகாம் கூட்டத்தின் இடைவேளை பகுதிகளின் போதுகூட அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்…. அப்போது தான் ஒன்று புரிந்தது… அது..


நம் சமூகம் அடிமைத்தளையிலேயே அமிழ்ந்திருக்க விரும்பும் ஒரு சமூகம்.. நம் சமூகத்தில் எல்லா மனிதர்களும் ஏதோ ஒன்றுக்கு அடிமையாக இருந்து கொண்டே இருக்கிறோம்… அது ஒரு பொருளுக்கோ..? மனிதருக்கோ…? படைப்புக்கோ…? ஏதோ ஒன்றுக்கு… அது மனிதர் என்கின்றபட்சத்தில் அந்த மனிதர் ஒரு மதத் தலைவராகவோ, ஒரு அரசியல் தலைவராகவோ, ஒரு விளையாட்டு வீரனாகவோ, ஒரு கதாநாயகனாகவோ, ஒரு இயக்குநராகவோ, ஒரு இசையமைப்பாளராகவோ. அல்லது ஒரு எழுத்தாளனாகவோ இப்படி யாராகனாலும் இருக்கலாம்…. அவர் என்ன செய்தாலும் அதைக் கண்மூடித் தனமாக ஆதரிப்பது…. சரியென்று வாதிடுவது… முன்னர் நாம் பேசிய வார்த்தைக்கு எப்படி உண்மையானவனாக இருந்தோமோ…? அப்படி இப்போதும் நாம் பேசும் வார்த்தைக்கு உண்மையானவனாக இல்லாமல், முன்னர் நாம் பேசிய அதே வார்த்தைக்கே அடிமையாக மட்டுமே இருப்பது…. அப்படிப்பட்ட சிலரை சமீபத்தில் ராஜூமுருகன் “வட்டியும் முதலும்” மூலம் சம்பாதித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது…

நான் முதல்பாராவில் வட்டியும் முதலும் பற்றிப் பேசியதும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாத உண்மை… மூன்றாவது பாராவில் ”குக்கூ” பற்றிப் பேசிக் கொண்டிருப்பதும் அதே மாதிரியான உண்மைதான்… ஒரு திரைப்படத்தை நாம் எதற்காகப் பாராட்ட வேண்டும்…? ஓர் அற்புதமான கதை சொல்லும் முறைக்காக பாராட்டலாம், இந்த சமூகம் இதுவரை யோசித்திராத மாற்றுக் கோணத்தை திறந்துவைத்தால் பாராட்டலாம்… இந்த சமூகம் பேசுவதற்கே அச்சப்படும் கூச்சப்படும் விசயங்களால், ஏற்படும் பிரச்சனைகளை ஒரு திரைப்படம் முகத்தில் அறைவதைப் போல் பேசினால் பாராட்டலாம்… இதுவரை இந்த சமூக மக்கள் யோசித்துக்கூட பார்க்காத ஒரு பிரிவு மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக நம் முன் விரித்துக் காட்டி, அவர்களின் சிந்தனையை திசை திருப்பினால் பாராட்டலாம்…. அல்லது இதுபோன்ற தரமான இன்னபிற சில விடுபட்ட காரணங்களுக்காகவும் பாராட்டலாம்… ஆனால் இங்கு என்னுடைய கேள்வி, மேற்சொன்னக் காரணங்களில் எந்தக் காரணத்தை முன்வைத்து நாம் குக்கூவை பாராட்ட முனைகிறோம் என்பதே..?

நம் தமிழ்சினிமா இதுவரை காட்டியே இராத கண்பார்வையற்ற மக்களின் வாழ்வியலை காட்டுவதால், என்று காரணம் சொன்னால், காட்டப்பட்டது மக்களின் வாழ்வியலா..? காதலர்களின் வாழ்வியலா..? என்று கேட்பேன்.. நீங்கள் புத்திசாலித்தனமாக இரண்டு கண் தெரியாத காதலர்களின் வாழ்வியல் என்று சொன்னால், அந்த வாக்கியத்தில் அமைந்திருக்கும் வாழ்வியல் என்ற வார்த்தைக்கு நீங்களாவது தயவுசெய்து எனக்குப் புரியும் படி அர்த்தம் சொல்லுங்கள் என்று கேட்பேன்…. நண்பா… கண் தெரியாதவர்களுக்கு கனவு என்பது வெறும் சத்தம், வர்ணம் என்பது இசைக் குறிப்பைப் போன்றது, அவர்கள் மூக்கால் வாசனையை நுகர்வார்கள், தொடுவதன் மூலம் ஒருவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க முனைவார்கள்.. இப்படி கண் தெரியாத மக்களின் வாழ்வியலை அவர் சொல்லத்தானே செய்கிறார் என்று நீங்கள் சொன்னால், உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்…

தயவுசெய்து சுஜாதா எழுதிய “பார்வை” என்ற சிறுகதையை படித்துப் பாருங்கள்… மேலே வாழ்வியல் தடமாக நாம் சொன்ன நான்கு தடங்களையும் சொல்லி, அதுதவிர்த்து இன்னும் இரண்டு சொல்லப்படாத தடங்களையும் வெறும் பத்தே பக்கங்களில் தாண்டிப் போயிருப்பார்….. இரண்டரை மணி நேர சினிமாவில் நமக்கு காட்டப்பட்ட வேறுவாழ்வியல் தடங்கள் தான் என்ன..? இரண்டு கண் தெரியாத மாந்தர்கள்… காதலிக்கிறார்கள்… அவர்களுக்கு கல்யாணம் செய்வதில் பிரச்சனை…? என் நண்பன் ஒருவன் சொன்னான்… “இங்க கண் இருக்குறவனுக்கே கல்யாணங்கிறது… பெரும் பிரச்சனையாத்தான இருக்கு….” மறுக்க முடியாத உண்மை… அந்த இரண்டு கண் தெரியாத மாந்தர்களை எடுத்துவிட்டு, இரண்டு கண் தெரிந்த மாந்தர்களை படத்தில் போட்டால், அப்பொழுதும் இத்திரைப்படத்தை ஆகா ஓஹோ.. என்று பாராட்டுவீர்களா…? இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், அந்த கண் தெரியாத இரண்டு மாந்தர்களை நாயகன் நாயகியாக போட்டதால் மட்டுமே நீங்கள் திரைப்படத்தை பாராட்டுகிறீர்கள் என்று பொருள்….

வட்டியும் முதலும் புத்தகத்தில் பசி தொடர்பான ஒரு அத்தியாயத்தில் முடியும் போது ஒரு வரி வரும்….. “அவனது பசியைப் போக்க அவனுக்குத் தேவையானது ஒரு கனி தான்…. ஆனால் அந்த ஒரு கனிக்காக… அவன் தினம் ஒரு வனத்தை கடக்கிறான்….” எவ்வளவு ஆழமான பசியைப் பற்றிய தரிசனம்.. இதைப் படித்ததில் இருந்து பசி வரும் போதெல்லாம் ”எனக்கானது ஒரு கனி மட்டுமே..” என்னும் எண்ணம் எனக்குள் மேலெழுவதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை… இதுதானே அந்தப் படைப்புக்கான வெற்றி…. இன்னொரு சம்பவம் “ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தினர் சொல்வார்கள், “டாக் பார்சல்” மீதி உணவை அவர்கள் வீட்டு நாய்க்கு பார்சல் செய்ய வேண்டுமாம்…. உடனே நம் அண்ணன் ராஜுமுருகன் சொல்லுவார்… “எனக்கு ரெண்டு லயன் பார்சல்…” வெறித்தபடி பார்த்த சர்வரிடம் சொல்லுவார்…. ”என் ரூம்ல ரண்டு சிங்கம் பசியாருக்கு… “ என்று பசியால் தன் அறையில் வாடிக் கொண்டிருக்கும் தன் நண்பர்களைப் பற்றி சொல்லுவார்… எவ்வளவு அற்புதமான பகடி…

இப்படிப்பட்ட ஒரு நல்ல கலைஞனை, அவனது சராசரியான ஒரு படைப்புக்கு நீங்கள் அவனை ஆகா ஓஹோ என்று போற்றி, புகழ்ந்து, மொழுகி அப்படியே அமிழ்த்தி காணாமல் போகடிக்கப் பார்க்கிறீர்கள்… இதுதானா..? உங்கள் சித்தம்.. இருக்கட்டும்.. இப்படி வாழ்க்கையின் யதார்த்தத்தின் வலியையும் ருசியையும் திகட்ட திகட்ட குடிக்கக் கொடுத்த எழுத்தாளர் இராஜுமுருகனிடம் இருந்து, போலித்தனமான புனைவுலகத்தை படைத்திருக்கும் இயக்குநர் இராஜுமுருகன் ரொம்பவே தூரமாக விலகிப்போய் தொடர்பறுந்தவர் போல் தெரிகிறார்… அதிலும் அந்த ரணகளமான க்ளைமாக்ஸ் எல்லாம் நாடகத்தன்மையின் உச்சம் என்பேன்…


எனக்குப் படத்தில் பிடித்திருந்த காட்சி என்றால் அது அந்த பேஸ்புக் லைக்ஸ் வாங்குவதற்காக சேவை செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கும் அந்த இளம் தம்பதியும், தியேட்டரில் படம் பார்க்கச் சென்று ரகளை செய்யும் இளங்கோ தமிழ் இருவரும், அதுபோல ஒரு ஜோடி பொம்மையை கொடுத்து மாவில் உருவம் செய்ய சொல்லும் போது அவர் மாதா இயேசுவை செய்து கொடுக்கும் இடத்தைச் சொல்லலாம்... அதுபோல நாடக கொட்டகையில் விஜய், அஜித் மற்றும் எம்.ஜி.ஆரின் கதாபாத்திர உருவாக்கத்தை கொஞ்சம் ரசிக்க முடிந்தது… அதுபோல சில கதாபாத்திரங்கள் காட்சி அலங்காரத்தோடு அழகாகவே தெரிந்தாலும், அவர்களுக்கும் நடக்கும் கதைக்கும் தொடர்பே இல்லை… என்பதால் இடைசெருகலாகவே தெரிகின்றனர்.. அதுபோல நாயகன் நாயகியாக நடித்திருக்கும் தினேஷ், மாளவிகா நாயர் இருவருமே கடினமான உழைப்பை நல்கி இருக்கிறார்கள் என்று சொல்லுவேன்… பாராட்டப்பட வேண்டிய நடிப்பு.. ஆனால் மிகச்சிறந்ததாக தெரியவில்லை.. அதுதவிர்த்து இசை ஒரு குறிப்பிடத் தகுந்த பலம்… கேமரா, எடிட்டிங், மேக்கிங் என எல்லாமே கொஞ்சம் இரண்டாம் தரம் தான்….


சரி…. இது இந்த அளவுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்ற வேண்டிய படமா..? என்றால் கண்டிப்பாக இல்லை…. இந்த எதிர்வினை படத்தை எதிர்த்து அல்ல… முன்னர் சில புரிந்த விமர்சனங்களை எதிர்த்தே இந்த எதிர்வினை… அது தவிர்த்து படம் ஒரு சாதாரண காதல் படம்… அதுபோல நாயகன் நாயகி இருவருமே கண் பார்வையற்றவர்கள் என்ற அந்த ஆரம்பகட்ட சிந்தனையும் ஆரோக்கியமான சிந்தனைதான்…. அதுபோல அந்த நான்கம்ச வாழ்வியல் தடங்களை எல்லா மக்களுக்கும் சென்று சேருவது போல் செய்து காட்டியதும் சாதனைதான்… குத்தாட்டங்கள், இரட்டை அர்த்த வசனங்கள், இவை எதுவும் இல்லாத, குறைவான சரக்கடிக்கும் காட்சிகளைக் கொண்டது… இது போன்ற சில நல்ல தகுதிகளையும் கொண்ட திரைப்படம் தான்…


ஆனால் கண்டிப்பாக இது இயக்குநர் இராஜுமுருகனின் மாஸ்டர் பீஸ் இல்லவே இல்லை… அவருக்கு இது அற்புதமான ஆரம்பமும் இல்லை… ஆனால் அவர்மீது இருக்கின்ற நம்பிக்கையும் குறையவில்லை… ஏனென்றால் இது முதல்படம்… ஏகப்பட்ட விட்டுக்கொடுத்தல்கள் இருந்திருக்கலாம்.. சில விசயங்களில் தவறு நேர்ந்திருக்கலாம்.. முதலாவது முயற்சி என்பதால் சில செயல்கள் கைகூடாமலும் போய் இருக்கலாம்…. ஆனாலும் இவரது அசாத்தியமான தேடல் மீது எனக்கு நம்பிக்கை உண்டு…. இவரது இரண்டாம் படம் என் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் அதி அற்புதமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்…

Saturday, 22 March 2014

கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம்:

நாளை (அதாவது இன்று 23.03.14) செங்கல்பட்டிலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கும் தண்டரை என்ற இடத்தில், பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒருங்கிணைக்கும் “கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம்” காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடக்க இருக்கிறது.. அதில் பார்வையாளனாக நானும் கலந்து கொள்ள இருக்கிறேன்.. ஐந்து சிறுகதைகள் தமிழ்மொழி இலக்கியத்தில் இருந்தும், ஆறு சிறுகதைகள் உலக இலக்கியத்தில் இருந்தும் விவாதத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அவரது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்… அந்த சிறுகதைகளை எங்கு சென்று படிக்கலாம் என்பதற்கு ஏதுவாக.. அந்தக் கதைகள் பிரசுரமாகியிருக்கும் வலைதளத்தின் சுட்டிகளையும் இணைத்துள்ளார்…

அதில் சில சிறுகதைகளைப் படித்தேன்… மிக அற்புதமான சிறுகதைகள்.. அதிலும் குறிப்பாக தமிழில் திலீப்குமார் எழுதிய மூங்கில் குறுத்து, மற்றும் ஜி.நாகராஜனின் ”துக்க விசாரணை” இரண்டும் ரொம்பவே பிடித்தது.. புதுமைபித்தன் அவர்களின் “காஞ்சனை” இன்னும் படிக்கவில்லை.. அதுபோல் உலக இலக்கிய சிறுகதைகளில் ”லெனினை வாங்குதல்” சிறுகதையும் அரசியல் பகடி செய்யும் ”பழுப்புக் காலை” சிறுகதையும் மிகச்சிறப்பாக இருந்தன… பிற சிறுகதைகளின் அடர்த்தியையும் உள்ளீடுகளையும் புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தது.. குறிப்பாக “யாருக்கும் வேண்டாத கண்” மற்றும் ”இருபதாவது பிறந்த நாளில் அவள்” ”நதியின் மூன்றாவது கரை” இந்த மூன்றையும் சொல்லலாம்… ஆனால் அவை மூன்றுமே முக்கியமான சிறுகதைகளாக தெரிகின்றன.. நாளை நடக்கவிருக்கும் அச்சிறுகதை பற்றிய விவாதங்கள் அவற்றை சரியாக புரிந்து கொள்ள வழிவகை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது…

வாசகர்களும் முடிந்தால் கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்ற அந்த சிறுகதைகளை முதலிலேயே படித்துவிடுங்கள்… முகாம் முடிந்த பின்பு அங்கு அந்த குறிப்பிட்ட சிறுகதைகளை ஒட்டி நடைபெற்ற விவாதங்களை நான் பதிவிடும் போது அது உங்களுக்கும் சிறுகதைகளை புரிந்து கொள்ள இன்னும் அதிகமாக உதவும் என்று நம்புகிறேன்.. அதுமட்டுமின்றி அதில் இருக்கும் சில உரலிகளைக் கொண்டு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், நீங்கள் தமிழ் மற்றும் பிற மொழியில் வெளியாகி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கும் நல்ல சிறுகதைகளையும் வாசித்து பயனடையலாம்…Friday, 21 March 2014

கிம் கி டுக் வரிசை - 4

“I always ask myself one question: what is human? What does it mean to be human? Maybe people will consider my new films brutal again. But this violence is just a reflection of what they really are, of what is in each one of us to certain degree.”                                                                                                                                                                                                                                                     Kim Ki-duk
 SAMARITAN GIRL:

2004ல் நடந்த பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளி கரடி விருதைப் பெற்றுத் தந்து, கிம் கியின் ரசிகர் பட்டாளம் ஐரோப்பாவில் இன்னும் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்த திரைப்படம்… காமம் குரோதம் இரண்டுமே மிகக் குறைவாக கையாளப்பட்ட கிம் கி யின் படம் எதுவென்று கேட்டால் குழப்பமே இல்லாமல் “சமரிட்டன் கேர்ள்” திரைப்படத்தைக் கைகாட்டலாம்.. அதுபோல கிம் கியின் முக்கியக் கதாபாத்திரங்கள் கொஞ்சமேனும் வசனத்தை உதிர்ப்பதும் இத்திரைப்படத்தில் மட்டும்தான்..


இரண்டு தோழிகள். பள்ளியில் பயிலும் இவர்களுக்கு பாரீஸ் செல்ல ஆசை.. அதற்கு அதிகமாக பணம் தேவை என்பதால், அந்த இரண்டு பெண்களில் ஒருத்தி தன் உடலை விற்க முன்வருகிறாள்… அதற்கான ஆளை தேர்ந்தெடுப்பது, பணத்தை நிர்வகிப்பது, போலீஸ் வரும்போது எச்சரிக்கை செய்வது இது போன்ற செயல்களில் மற்றொரு தோழி ஈடுபடுகிறாள்… ஒரு நாள் போலீஸ் வருவதை கவனிக்கத் தோழி தவறிவிட.. போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக மற்றொரு தோழி மாடியில் இருந்து குதித்து இறந்து போகிறாள்… இதுவரை சேர்ந்த பணமும் தோழியின் மரணமும் உறுத்திக் கொண்டே இருக்க… தன் தோழி உடலுறவு கொண்ட அதே நபர்களை சந்தித்து அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டு, அவர்கள் கொடுத்த பணத்தை அவர்களிடமே திருப்பிக் கொடுக்கிறாள் மற்றொரு தோழி.. ஒரு கட்டத்தில் இது அவளது போலீஸ்கார தகப்பனுக்கு தெரிந்துவிட… அவள் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் அவர் பாதிவழியிலேயே மிரட்டி அனுப்புகிறார்… ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு வாடிக்கையாளரை கோபம் கொண்டு அடிக்க அவன் இறந்தும் போகிறான்… தான் உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்ததையும் உணர்ந்த அவளது தந்தை போலீஸிடம் சரணடைய… தனியே விடப்படும் அச்சிறுபெண் எஞ்சிய தன் வாழ்வை தனித்து கடக்கவேண்டிய நிர்ப்பந்தத்துடன் படம் முடிவடைகிறது..

இத்திரைப்படம் எதைப் பற்றி பேச வருகிறது…? இரண்டு வயது முதிர்ச்சி அடையாத சிறுமிகள் உலகமயமாக்கலின் தாக்கத்தால், வெளிநாட்டின் மீது மோகம் கொண்டு, அதற்காக தங்கள் உடலையே விற்கத் துணிந்தார்களே…!! அதைப் பற்றியா..? படம் பேசவருகிறது… இத்திரைப்படம் அதைத்தான் மையமாகக் கொண்டு பேச முன்வந்திருந்தால், அவர்கள் செல்ல விரும்பும் வெளிநாடான பாரீஸ் தொடர்ப்பான செய்தி ஒரே காட்சியோடு முடிவடைந்திருக்காது… ஆக திரைப்படம் அதைப் பற்றி பேச வரவில்லை என்று உறுதியாக நம்பலாம்… அடுத்ததாக நம் முன் வந்து நிற்கும் கேள்வி ஒருவேளை திரைப்படம் வழி தவறிப் போன மகளுக்கும், அவளை காக்க விரும்பும் தந்தைக்கும் இடையிலான மனப்போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்குமோ…? இருக்கலாம்… ஆனால் முழுக்க அப்படியும் சொல்ல முடியாது… ஏனென்றால் திரைப்படம் முழுக்க அதைப் பற்றித்தான் பேச வருகிறது என்று நம்பினால், இறந்து போகின்ற அந்த தோழியின் பகுதிகள் படத்துக்கு தேவையற்றவை… அது முற்றிலும் வேறு மாதிரியான ஒரு கதைக் கோணத்தைக் கொண்டு நிற்கிறது.. ஆக திரைப்படம் அதைப் பற்றியும் பேச வரவில்லை… அல்லது இவை தவிர்த்து, திரைப்படம் சிறுவயதிலேயே இவர்கள் வழிமாறி போவதற்கு உளவியல் ரீதியிலான காரணம் என்ன…? என்று ஆராய முற்படுகிறதோ..? என்று எண்ணினால் அந்த உளவியல் ரீதியிலான பார்வைக்கான சுவடும் திரைப்படத்தில் இல்லை… அப்படியானால் திரைப்படம் எதைப்பற்றி பேச விரும்புகிறது…

நம் அனைவருக்குமே பரிச்சியமான ரன் திரைப்படம் எதைப்பற்றி பேசுகிறது… காதலையும் காதலுக்கான தடங்கலையும் பற்றி பேசுகிறது என்று நமக்குத் தெரியும்… ஒரு உதாரணத்து நான் அத்திரைப்படத்தை மூடநம்பிக்கைகளை கேலி செய்யும் நோக்கோடு எடுக்கப்பட்ட ஒரு சமூக சிந்தனையுள்ள திரைப்படம் என்று கூறினால், நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா…? ஏன் ஒத்துக் கொள்ளமாட்டீர்கள்.. அதில் தான் விவேக் வருகின்ற எல்லா இடமும் அப்படித்தானே இருக்கும்… அந்தக் காட்சியை நான் விவரித்தால் கூட நீங்கள் அத்திரைப்படத்தை சமூகசிந்தனையுள்ள திரைப்படமாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.. ஏனென்றால் உங்களுக்கு தெரியும்.. அது ஒரு காதல்படம்.. விவேக் வரும் இடங்கள் எல்லாமே படத்தின் கதையை நகர்த்த உதவாமல், பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய தனி ட்ராக் என்று… இப்படி நம் தமிழ் சினிமாவில் நிறைய காட்சிகள் காமெடிக்காகவும், கவர்ச்சிக்காகவும், வியாபாரத்திற்காகவும் என்று வெளிப்படையாக இடைச்செருகல் செய்யப்படுகின்றன… அதனால் பெரும்பாலான நம் தமிழ்திரைப்படங்களில் கதையை புரிந்துகொள்ள வரும் எல்லாக் காட்சிகளையும் நாம் வெகு சிரத்தையெடுத்து கவனிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை… ஆனால் இந்த விதி உலகம் முழுவதும் எல்லோராலும் போற்றப்படும், பார்க்கப்படும் படங்களுக்கு கொஞ்சம் கூட பொருந்தாது… ஏனென்றால் அவர்கள் எந்தவொரு காட்சியையும், ஏன் ப்ரேமைக் கூட… நேரத்தை ஈடுசெய்வதற்காகவோ அல்லது வேறு எந்த வணிக சமரசத்துக்காகவும் வைப்பதில்லை.. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் கதையை பார்வையாளனுக்கு புரியவைக்க.. அந்த இயக்குநர்கள் ஏதோவொரு விசயத்தை மெல்ல தூவிக் கொண்டே செல்கிறார்கள்… அதனால் இதுபோன்ற திரைப்படங்களைப் பார்க்கும் போது ஒவ்வொரு காட்சியையும் ஆழ்ந்த கவனத்துடன் கடப்பதென்பதும் என்னைப் பொருத்தவரை மிக முக்கியமானது… அப்படி கவனித்து எனக்கு கிடைக்கப் போவது என்ன…? என்று நீங்கள் கேட்டால், நீங்கள் என்ன இழந்தீர்கள் என்பதை உணரவில்லை என்று பொருள்…


நான் புரிந்துகொள்வது இதுதான்… இத்திரைப்படத்தை மதரீதியிலான புரிதலும் அணுகலும் இல்லாமல் புரிந்து கொள்வதென்பது கடினம்… உங்கள் கவனத்துக்கு இன்னும் இரண்டு விசயங்களையும் கொண்டு வரவிரும்புகிறேன்.. இயக்குநர் கிம் கி டுக் அவர்கள் ஒரு மத ஆலோசகர் அல்லது சமய அறிவுரை வழங்குவதற்கான (Preacher) படிப்பை படித்துவிட்டு  பாதியிலேயே கைவிட்டவர் என்பது ஒன்று… மற்றொன்று தென்கொரியாவில் அதிகமான மக்களால் கடைபிடிக்கப்படும் இரண்டு மதங்கள் பெளத்தமும், கிறிஸ்துவமும்… இப்போது திரைப்படம் சார்ந்த விவாதத்துக்குள் செல்வோம்..


திரைப்படம் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.. முதல் பகுதி 1) Vasumitra இரண்டாம் பகுதி 2) Samaria மூன்றாம் பகுதி 3) Sonata

VASUMITRA: இதில் இறந்து போகின்ற அந்தப் பெண் தோழியின் பெயர் Jae Yeong.. இவள்தான் பணம் சேர்ப்பதற்காக தன் உடலை விற்க முன்வருபவள்.. மேலும் இவள் தனக்கு முன்மாதிரியாக கொள்வது, புராண காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த வசுமித்ரா என்னும் பெயருள்ள தாசியை… இந்த தாசியிடம் அப்படியென்ன சிறப்பென்றால், இவளிடம் உறவு கொள்பவர்கள் அதன் முடிவில் ஒரு மிகச்சிறந்த புத்த துறவியாக மாறிவிடுவார்களாம்.. அதனால் தானும் வசுமித்ராவைப் போல் ஒரு மிகச்சிறந்த அனுபவத்தை தன் வாடிக்கையாளர்களுக்கு தர விரும்புவதாகவும், அதனால் இனிமேல் தன்னை வசுமித்ரா என்றே அழைக்க வேண்டும் என்றும் தன் தோழியிடம் கோரிக்கை வைக்கிறாள்… இது படத்தில் வருகின்ற காட்சி… எனக்கு புத்தமதத்தைப் பற்றி அதிகமாக தெரியாது என்பதால், வசுமித்ரா தொடர்பான தகவல்களுக்கு இணையத்தை நாடிய போது WOMEN IN BUDDHISM என்ற புத்தகத்தில் வசுமித்ரா பற்றிய குறிப்புகள் கிடைத்தன… அவை புனைவுக் கதையா…? அல்லது வரலாற்று சம்பவமா என்பதை அறியமுடியாவிட்டாலும், அவளைக் கடந்தால் தான் புத்தநிலையை அடையமுடியும் என்பதாக அந்த வரிகளுக்கு பொருள் கொள்ளமுடிந்தது…

ஆக Jae Yeong என்ற அந்தக் கதாபாத்திரம் ஒரு பெளத்த மதத்துக்கான அடையாளம்… மேலும் காமம் என்பது ஒர் கலையாகவும், அங்கீகரிக்கப்பட்ட வடிவமாகவும் பெளத்தத்தில் பார்க்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது… ஏனென்றால் தான் தன் உடலை விற்பதை அப்பெண் குற்றமாக கருதவில்லை.. மேலும் அதில் அவள் சந்தோசம் கொள்கிறாள்… எப்போதும் அன்பின் வடிவமாக அவள் முகத்தில் புன்னகையும் சந்தோசமும் இருந்து கொண்டே இருக்கிறது… அந்தப் புன்னகை அவள் மாடியில் இருந்து குதிக்கும் போதும், இறந்த சடலமாக இருக்கும் போதும் அவளது முகத்தில் இருந்து தவறுவதே இல்லை.. இத்தனைக்கும் இறப்புக்கு முன்னர் அவள் காண விரும்பிய நபரை காண்பதற்கு முன்பே அவள் இறந்தும் போகிறாள்.. இருந்தும் அவளது முகத்தில் புன்னகை இருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று…


வாடிக்கையாளருடனான கலவிக்கு பின்னர் தோழிகள் இருவரும் பொதுக் குளியலறையில் அமர்ந்திருக்கும் போது Jae Yeongவின் உடலை அவளுடைய தோழி அழுத்தமாக துடைத்துக் கழுவிக் கொண்டிருப்பாள்… அப்பொழுது அவள் சொல்கின்ற வசனங்கள் முக்கியமானது… “I AM NOT DIRTY..” EVAN ITS NOT A MURDER..” ஒருவனுடன் கலவி முடித்து வந்ததால், என்னுடல் அசுத்தமானதாக மாறிவிடாது… மேலும் குற்றமாக கருதும் அளவுக்கு நான் ஒன்றும் கொலை செய்யவில்லை…” ஆக இந்த கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தின் படி அவள் செய்வது குற்றமில்லை… மேலும் அவள் பெளத்தத்துக்கு விரோதமாகவும் எதுவுமே செய்யவில்லை… பெளத்தத்தின் அடிப்படையே ”ஆசைதான் துன்பத்துக்கு காரணம்” என்பதே அல்லவா..? சாகும் போதும் சிரிப்பை உதடுகளில் அணிந்து கொண்டு இறந்து போகும் அந்த கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது அவளுக்கு ஆசையே இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது… “பாரிஷ் போக ஆசை தான்..” சாகும் முன் தன் மனம் கவர்ந்த, தன் வாடிக்கையாளனான அந்த இசையமைப்பாளரை காண ஆசைதான்…” ஆனால் இவை எதுவுமே நிறைவேறாத போதும் அவளால் சிரித்துக் கொண்டே மரணத்தை தழுவிக் கொள்ள முடிகிறது… போலீஸிடம் தப்பித்து அரைகுறை ஆடையுடன் ஓடும் போதும் சிரிக்கிறாள்.. தன் உடலை அசுத்தமென எண்ணி, அழுந்தத் துடைத்து தூய்மைப்படுத்த நினைக்கும் தோழியைப் பார்த்தும் சிரிக்கிறாள்… போலீஸிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதிக்கும் முன்பும் சிரிக்கிறாள்.. உயிர் பிரிந்த சடலமாக கிடக்கும் போது சிரித்துக் கொண்டே தான் கிடக்கிறாள்.. அவளது உடலை கட்டிக் கொண்டு அழும் தோழி Yeo jin “இங்கு சிரிக்க என்ன இருக்கிறது..? ஏன் சிரிக்கிறாய்…?” என்று கேட்டுக் கொண்டே அவள் உடலை மூடுகிறாள்.. அது விடாமல் விரட்டி, தன் உயிரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட சமூகத்தின் சட்டத்தைப் பார்த்து அவள் வீசும் பரிகாச சிரிப்பு…

இதைப் படித்தவுடன், ஆக பதின்மவயதை அடையாத ஒரு சிறுபெண் பந்தி விரிப்பதை சரியென்கிறாயா..? என்று சகட்டுமேனிக்கு ஏச வேண்டாம்… கொரிய நாட்டில் விபச்சாரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட தொழில்.. சிறு பெண்களுக்கு அல்ல… ஆனாலும் பெரும்பாலான படிக்கும் வயதுள்ள பெண்கள், ஏதோவொரு காரணத்துக்காக இது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதே நாம் பல நேரம் கடக்கும் செய்தி… ஆக இது போன்ற சமூக அநீதிகளை தடுப்பதற்காக அரங்கேற்றப்படும் சட்டங்கள் எல்லாம், சில நேரங்களில் இப்படி அவர்களது உயிரைக் குடிப்பதற்க்கும், பெரும்பாலான நேரங்களில் அந்த அரசு இயந்திரங்களின் தாகத்தை தணிப்பதற்க்கும் மட்டுமே பயன்படுவதால் தான்… அவர் அந்த சட்டங்களை சாடுகிறார்… அவரோடு சேர்ந்து நானும்…

அடுத்ததாக சமரியா.. Samaria


SAMARIA: இத்திரைப்படத்துக்கு ஏன் சமரிட்டர்ன் கேர்ள் என்று பெயரிட வேண்டும்… இத்திரைப்படத்தில் எந்தவொரு கதாபாத்திரத்தின் பெயரும் சமரியா அல்ல… ஆக அந்த தலைப்பின் மூலமாகவும் அவர் ஏதோ சொல்ல வருகிறார் என்பது பொருள்… பொதுவாக சமரிட்டர்ன் கேர்ள் என்பதற்கு என்ன பொருள் என்று பார்த்தோமானால் “பிரதிபலன் எதிர்பார்க்காமல், உதவி செய்பவள்..” என்று பொருள்.. மேலும் இரண்டாம் பகுதியின் பெயர் சமரிட்டன் அல்ல.. சமரியா..? இந்த சமரியாவிற்கு பொருள் என்ன என்று தேடினால் அது நம்மை கிறிஸ்துவத்துக்குள் சென்று தள்ளுகிறது… யோவான் சுவிஷேசத்தில் 4:6ல் சமரியா ஸ்தீரி நீர் மொண்டு கொள்ள கிணற்றுக்கு வருகிறாள்.. இயேசு அவளிடம் தண்ணீர் கேட்கிறார் என்பதாய் செல்கிறது அந்த அதிகாரம்… அவளுக்கு ஐந்து கணவன்கள்… கணவன் அல்லாத இன்னொருவனிடம் அவள் தங்கியிருக்கிறாள் என்பது அவளைப் பற்றிய பின்குறிப்பு…

இப்போது கதைக்குள் செல்வோம்… SAMARIA மற்றும் SAMARITAN GIRL என்ற குறிப்பால் உணர்த்தப்படும் பெண் Yeo jin தான்… அவள் தான் பெரும்பாலும் இந்தப் பகுதியை ஆக்ரமிக்கிறாள்.. அவளால்தான் கதையும் நகர்ந்து செல்கிறது… இவளது குணாதிசத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு நாம் மீண்டும் VASUMITRAவிற்குள் செல்ல வேண்டும்.. அவளுக்கு என்னதான் பாரீஷ் செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தாலும், இவர்கள் செய்துவரும் தாசி ரீதியிலான தொழிலில் அவளுக்கு விருப்பம் இல்லை… ஒருமுறை அதை நிறுத்திவிடுவோமா என்றுகூட கேட்கிறாள்… மேலும் வாடிக்கையாளராக வந்து செல்லும் ஆண்களை அவள் மிருகங்கள் என்று வர்ணிப்பதோடு அடியோடு வெறுக்கவும் செய்கிறாள்… அவளுக்கு அந்த தொழிலை ஆதரிப்பதில் மத ரீதியிலான தடங்கல் இருக்கிறது…. ஏனென்றால் அவள் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவள்.. அவளுக்கு காரில் வரும் போதுகூட அவளது தகப்பன் சுவிஷேசம் குறித்த ஏதோவொன்றை பிரசங்கித்துக் கொண்டே இருக்கிறார்… மேலும் செக்ஸ் சார்ந்த அவளது பார்வை எப்படிப்பட்டது என்பதற்கும் ஒரு காட்சி இருக்கிறது…

தன் தோழியை வாடிக்கையாளருடன் அனுப்பி விட்டு, Yeo Jin தனித்திருக்க… அங்கே விடப்பட்டிருக்கும் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் புகைப்படத்தை அவள் பார்த்துக் கொண்டிருக்க… அவளை ஒரு இளைஞன் நெருங்குகிறான்… அதைப் பார்த்துவிட்டு அவள் அந்தப் படத்தை கீழே போடுகிறாள்.. அவ்விளைஞன் அவளை தவறாகப் புரிந்துகொண்டு அவளையே பார்க்கிறான்… என்ன பார்க்கிறாய்..? என்று கேட்டவளிடம், என்னால் தான் எதையும் பார்க்க முடியவில்லையே..? நீ ஆடை அணிந்து கொண்டல்லவா இருக்கிறாய்..? என்று கேட்க அவள் சொல்லும் பதில் முக்கியமானது… YOU KNOW YOU DID, AND YOU ARE LOOKING NOW பைபிளின் மிக பிரபலமான வசனம்.. “எப்போது நீ ஒரு பெண்ணை இச்சை கொண்டு பார்க்கிறாயோ.. அப்போதே நீ அவளுடன் விபச்சாரம் செய்தாயிற்று..” என்கின்ற ரீதியில் ஒரு வசனம் வரும்… அதைத் தான் அந்தப் பெண் வழிமொழிகிறாள்… ஆக அவள் கிறிஸ்துவத்தில் ஊறியவள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்… அந்த இடத்தில் அவள் தனக்குள்ளும் உணர்ச்சிகள் இருப்பதை மறைத்துக் கொள்கிறாள்.. மேலும் அது போன்ற அசுத்தமான ஆடவனை தொடுவதையே பாவமாக கருதுபவள் அவள்… அது அந்த இசையமைப்பாளனை தன் தோழிக்காக சென்று அழைக்கும் போது அழகாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்… அவன் ஆடையை மட்டுமே பிடித்து இழுப்பாள்… அவனை தொடத் தயங்குவாள்… இப்படி அவள் ஒரு கிறிஸ்துவ மதத்துக்கான பிரதிநிதியாக வருகிறாள்… அப்படி இருந்தவள் எப்படி தன்னை ஒரு பாலியல் தொழிலாளியாக மாற்றிக் கொள்கிறாள் என்பது நமக்கு ஆச்சரியம் அளிக்கும்… ஆனால் அதையும் அவர் மிக அழகாகவே விளக்குகிறார்…


Yeo jin ஒரு காட்சியில் தன் குற்றவுணர்ச்சியை தன் தோழியிடம் வெளிப்படுத்துவாள்… எப்படி என்றால் ”நீ என்னைவிட அதிகமாக கஷ்டப்படுகிறாய்… ஆனால் அதற்கான பலனை மட்டும் நான் அனுபவிக்கிறேன்.. உனக்குப் பதிலாக போனில் நான் பேசுகிறேன்.. ஆனால் உன்னை அனுப்பிவைக்கிறேன்… பணத்தையும் நான் வாங்கிக் கொள்கிறேன்.. அங்கு அந்த மிருகங்களிடம் நீ கஷ்டப்படுகிறாய்… இது என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது..” என்று தன் தோழி இறப்பதற்கு முன்பே அதை சொல்லி இருப்பாள்.. தோழி இறந்தவுடன் அந்த குற்றவுணர்வு இன்னும் அதிகமாக அவளை அழுத்தும்… அப்பொழுதுதான் அவள் முடிவு செய்வாள்.. தானும் தன் தோழியைப் போல் மாற வேண்டும்… அவள் அனுபவித்த அதே துன்பத்தை தானும் அனுபவிக்க வேண்டும் என்று… பணத்தை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே போதுமே… அது அப்படி அல்ல.. அதற்கான பதில் கிறிஸ்துவத்தில் இருக்கிறது…

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் கருத்தாய்வு கூட்டத்தில் இயக்குநர் மிஷ்கின் ஒரு விசயம் சொன்னார்… குண்டடி பட்டுக் கிடப்பவனை அந்த மருத்துவ கல்லூரி மாணவன் ஏன் முதுகில் தூக்கி சுமக்கிறான்.. அதே மாணவன் படத்தின் இறுதிக்காட்சியில் குழந்தையை தன் நெஞ்சில் தாங்கி செல்கிறான்… முதலில் வருவது பாவத்துக்கான குறியீடு… அவனது பாவத்தை முதுகில் சிலுவையைப் போல் சுமக்கிறான்… அடுத்தவனின் பாவத்தை சுமப்பவன் கைவிடப்படான்.. அவனுக்கு ஜெயமுண்டு.. அதைத்தான் இறுதிகாட்சி விளக்குகிறது… கிரிடத்தை நெஞ்சில் ஏந்திச் செல்கிறான் என்று விளக்கியிருப்பார்… அது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது..

அதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால்… அந்த விசயம் இத்திரைப்படத்தை புரிந்து கொள்ளவும் எனக்கு உதவியது என்பதால் தான்… மாடியில் இருந்து குதித்து கீழே விழுந்துகிடக்கும் தன் தோழியை தன் முதுகில் சுமப்பாள்.. அப்போதே அவள் தன் தோழியின் பாவத்தை (கிறிஸ்துவ மத புரிதலின் அடிப்படையில்..) சுமக்கத் தொடங்குகிறாள்.. அதில் தனக்கு பங்குண்டு என்பதால் அதற்கான பிராய்சித்தம் தேடுகிறாள்.. எப்படி..? தேவகுமாரன் இயேசு மனிதனின் பாவங்களை போக்க… மனிதனாகவே பிறந்து, மனிதர்களின் பாவத்துக்காக சிலுவையை சுமந்தாரே…? அதே போல.. தாசியாகவே மாறுகிறாள்… தாங்கள் முன்னரே பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்கிறாள்… எந்த பிரதிபலனும் இன்றி உதவி செய்து, சிலருக்கு காதலியாக, சிலருக்கு மனைவியாக இருந்து… விவிலியத்தில் கிணற்றடிக்கு வந்த ஐந்து கணவன்களைக் கொண்ட சமாரியா பெண்ணைப் போல், ஒரு சமரியாவாக, ஒரு சமரிட்டன் கேர்ளாக மாறி நிற்கிறாள்… அந்த சமாரியப் பெண்ணை ஏற்றுக் கொண்ட கடவுள் தன்னையும் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன்….


SONATA: இது மகிழ்ச்சியான இசையை கொடுக்கும் ஒரு இசைக் கருவியின் பெயர்… இது படத்தின் க்ளைமாக்ஸ் பகுதியில் தான் வருகிறது.. அதற்கு முன்னரே Yeo jinன் போலீஸ் தந்தை பலி வாங்கும் நடவடிக்கையில் இறங்கத் தொடங்க… அதில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்… மற்றொருவர் கொலை செய்யப்படுகிறார்… இது அவரது தந்தை தன் மனம் திருந்தும் பகுதியாக இடம்பெறுகிறது..

ஏனென்றால் Yeo jinன் தந்தையும் கிறிஸ்துவ மதம் சார்ந்த நம்பிக்கையை அதிகமாக மகளுக்கு போதிப்பவர்…. அவரோடும் மதம் தொடர்புடையதாகவே இருக்கிறது.. தன் நண்பனோடு ஹோட்டலில் அமர்ந்திருக்கும் போது, தன் நண்பன் அருகில் இருக்கும் பள்ளி செல்லும் சில பெண்களை கிண்டல் செய்யும் இடம் மிக முக்கியமானது… அவர்களோடு பேச முற்பட்டு, உறவுக்கு அழைக்கலாமா என்ற எண்ணத்துடன் காய் நகர்த்தும் நண்பனை, தான் அப்போது இருக்கின்ற சூழ்நிலையால் ஒரு அறை மட்டும் அறைந்துவிட்டு நகலும் Yeo jin னின் தகப்பன், அடுத்த காட்சியில் கல்லெறிவார்…. தன் பெண்ணுடன் படுக்க முனைபவனின் மீது. “உங்களில் யார் பரிசுத்தமானவர்களோ…? அவர்கள் அவள் மீது முதலாவது கல்லை எறியுங்கள்…” என்னும் யோவான் 8:7 வசனங்களை பிரதிநிதிப்படுத்தும் காட்சி அது.. அதோடு அவர் நிற்காமல், தன்னை மன்னிக்கும்படி வேண்டியும், அவனை மன்னிக்க முடியாமல் அந்த மனிதனின் வீட்டுக்கும் சென்று, அவளது மகள், மனைவி முன் அவரை அவமானப்படுத்தி அந்த மனிதனின் தற்கொலைக்கும் காரணமாகிவிடுவார்.. அந்தக் காட்சி… அவர் தான் போதித்த மதநெறிகளுக்கு முரண்படும் காட்சி…. பாவம் செய்தவரை மன்னிப்பது தானே கிறிஸ்துவத்தின் அடிப்படையே…


மேலும் ஆணுக்கு அடிப்படையாகவே இருக்கின்ற தனக்கென்றால் ஒரு நியாயம்… ஊருக்கென்றால் ஒரு நியாயம் என்பதையும் அது பகடி செய்கிறது.. ஒரு காட்சியில் Yeo jinவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட 40 வயது மனிதன் சொல்லுவான்… ”ஒழுக்கத்தையும், வேல்யூஸையும் தூக்கிப் போடு.. இதல்லவா உண்மையான சந்தோசம்… இது சந்தோசம் இல்லையா…?” என்று Yeojin உடலை தடவுவான்.. அடுத்த நொடி தன் மகளுக்கு போன் செய்து அவள் பள்ளியில் தான் இருக்கிறாளா..? என்று செக் செய்து கொள்வான்… அது போல தன் தோழியிடம் படுத்திருந்துவிட்டு செல்பவர்களை திட்டும் Yeojin தன் தோழியை திட்டுவதே இல்லை… இப்படி அனைவருமே தங்களுக்கென்று ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயம் என்று வேஷம் போடுபவர்கள் என்பதான பகடியும் திரைப்படத்தில் உண்டு…

இப்போது Yeojinனின் தகப்பன் மதத்தின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும் ஒரு மன்னிக்கவே முடியாத மிகப்பெரிய குற்றம் புரிந்தவராக மாறி நிற்கிறார்.. ஏனென்றால் தன் மகளின் தாசித் தொழில் அந்த டைரியின் கடைசி நபருடன் முடிவுக்கு வருகிறது… பாவமே செய்யாத Yeo jinக்கும் மீட்பு உண்டு.. பாவங்கள் செய்த சமாரியாவுக்கும் மீட்பு உண்டு… போகும் போதும் வரும் போதும் மகளுக்கு பிரசங்களை பொழிந்தும் அவள் தடம் மாறிப் போய்விட்டாளே என்ற வருத்தம் தந்தைக்கு இருந்தது… ஆனால் தடம் மாறிப்போனது அவள் மட்டும் அல்ல.. தானும் தான்.. தன் கோபம் ஒருவன் பூமியில் ரத்தம் சிந்த காரணமாக மாறிவிட்டது…. ஆனால் தன் மகளோ மன்னிக்கக்கூடிய பாவத்தைத் தான் செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவராக.. தான் எப்படி உணர்ச்சிவசப்பட்டு அன்பை போதிக்கின்ற மதத்தை மீறி, கோபத்தை வெளிப்படுத்தினேனோ…. அது போல அவள் உணர்ச்சிவசப்பட்டு மதத்தை மீறி, காமத்தை வெளிப்படுத்தி இருக்கிறாள்… இரண்டுமே மனிதனின் வேறுபட்ட ஒருவகை உணர்ச்சி தானே என்பதாக ஒரு புரிதல் ஏற்படுகிறது… தன் மனைவியின் கல்லரையில் வைத்து, தன்னால் கொல்லப்பட்ட நபருக்காக அழுகிறார்… தன் தந்தை தன்னால் பாதை மாறிப் போய்விட்டாரே என்று மகள் அழுகிறாள்… முதல் காட்சியில் தன் மகளை குழந்தையாக பாவித்து அவர் உணவூட்டுகிறார்.. இறுதியாக மகள் குழந்தைதனமாக கோபம் கொண்டு வெறிச்செயல் புரிந்து, வழி தெரியாமல் நிற்கும் தன் தந்தைக்கு கிழங்கை உணவாக ஊட்டுகிறாள்… இது ஒருவிதமான புரிதல்.. குழந்தைத்தனமாக நினைத்த பெண் குழந்தை அல்ல.. அவளை குழந்தையைப் போல் கருதியதால்தான், அவள் மீது அவளது தகப்பன் குற்றம் சாட்டுவதும் இல்லை.. கேள்வி கேட்பதும் இல்லை… அறியாமல் செய்கிறாள்.. என்றே எண்ணுகிறான்… ஆனால் அவள் குழந்தையல்ல.. தெளிவாகவே இருக்கிறாள்.. என்பதை புரிந்து கொள்கிறார்.. கார் ஓட்டத் தெரியாத தன் மகளுக்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுக்கும் அவர், இனி நான் உன்னை பின் தொடரமாட்டேன்… நீயாக கவனமாகச் செல்.. ஏனென்றால் இன்னும் பயணம் நெடுந்தூரம் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்வதாக முடிகிறது திரைப்படம்…


ஆக இத்திரைப்படம்…. மனித மனதின் கட்டற்ற உணர்ச்சிகளை அடக்கி ஆளவும் வேண்டும் பண்படுத்தவும் வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டமும், மத நெறிகளும் அதை செய்துகாட்டுவதில் தவறி நிற்பதை சூசகமாக சுட்டிக் காட்டுகிறது…. எந்தமதமாக இருந்தாலும் அதன் அடிப்படை அன்பு தான் என்பதை, அதன் வரைமுறைகளை பிடித்துக் கொண்டு தொங்கும் நாம் மறந்துவிடுகிறோம்.. சட்டத்திற்க்கும் மத நெறிகளுக்கும் முரண்பட்ட ஒரு செயலை ஒரு மனிதன் செய்யும் போது, உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு கோபம் கொப்பளிக்க.. அவனுக்கு தண்டனை தருவதை சட்டமாக்கி, அதை குற்றவுணர்ச்சியில்லா மனதுடன் ஏற்றுக் கொண்ட நாம்… அந்த குற்றவாளி குற்றம் செய்த போது இருந்த மனநிலையும் சரி, அதற்கு நாம் தண்டனை கொடுத்தபோது நமக்கு இருந்த மனநிலையும் சரி அதீதமான உணர்ச்சி கொந்தளிப்பால் ஏற்பட்டது தான் என்பதை ஏன் மறந்து போகிறோம்…. சட்ட திட்டங்களையும், மத நெறிகளையுமே புரிந்து கொள்ள போராடிக் கொண்டிருக்கும் நாம் சக மனிதர்களின் மன உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள தலைப்பட்டால் என்ன..? என்ற கேள்வியையும் எழுப்பிச் செல்கிறது இத்திரைப்படம்..

அடுத்தப் பதிவு

Spring Summer Fall Winter and Spring (2003)

Tuesday, 18 March 2014

நடிப்பு அகம்/புறம்


ஆசிரியர் : சுரேஷ்வரன்
பிரிவு    : சினிமா
பதிப்பகம் : நிழல்

    


தமிழ் சினிமாவை கலையாகப் பார்க்காமல், கேளிக்கையாக மட்டுமே பார்ப்பவர்கள் மக்கள் மட்டுமா..? அல்லது அக்கலைத் துறையில் இருப்பவர்களும் தானா…? என்கின்ற சந்தேகம், தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கும் சினிமா சார்ந்த புத்தகங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினால் வலுப்பெறும்.. அவர்களும் அதை கலையாகவும் பார்த்திருந்தால், குறைந்தபட்சமேனும் சினிமா சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கான புத்தகங்கள் தமிழிலும் அச்சேறியிருக்கும்.. சினிமாவின் தொழில்நுட்பம் சார்ந்த மிக முக்கியமான சில புத்தகங்கள் கூட இன்னும் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவே இல்லை.. மேலும் சினிமா தொடர்பாக தமிழ்மொழியில் வருகின்ற பெரும்பாலான புத்தகங்கள் உலக திரைப்படங்கள் தொடர்பான விமரிசனக் கட்டுரையாகவோ அல்லது இயக்குநர் ஆவது எப்படி…? அல்லது சினிமாவில் சாதிப்பது எப்படி..? என்பதான மேம்போக்கான நூல்களாகவே இருக்கும்… தமிழ் சினிமாத் துறையில் சாதித்த அல்லது முக்கிய ஆளுமையாக விளங்குகின்ற இயக்குநர்களோ ஒளிப்பதிவாளர்களோ அல்லது நடிகர்களோ தாங்கள் கற்றுக் கொண்ட நுட்பங்களையும் தங்களுக்கு ஏற்பட்ட விலைமதிக்க முடியாத அனுபவங்களையும் எழுத்து மொழியில் ஆவணப்படுத்தியதே இல்லை… அதற்கு அவசியம் இல்லை என்று கருதிவிட்டார்களா என்றும் தெரியவில்லை… கேமரா கவிஞர் என்று வர்ணிக்கப்படுபவரும், ஒளிப்பட உலகில் ஒதுக்கித் தள்ளிவிடமுடியாத ஒப்பற்ற ஆளுமையாகவும் விளங்கிய முன்னாள் இயக்குநர் திரு. பாலுமகேந்திரா அவர்களிடம் இருந்து இது போன்ற சீரிய முயற்சிகள் வருவதற்கான வாய்ப்பிருந்தது… ஆனால் காலம் அதற்கு கருணை காட்டவில்லை… சூழல் இப்படியிருக்க.. ஒளிப்பதிவாளர் திரு எஸ்.ஜெ.ராஜ்குமார் அவர்களின் முயற்சியால் “அசையும் படம்” ”பிக்சல்” என ஒளிப்பதிவு தொடர்பான இரண்டு நூல்கள் தமிழில் சமீபமாய் வெளிவந்திருக்கின்றன.. இந்த வரிசையில் இப்போது, ந.முத்துச்சாமி அவர்களின் கூத்துப்பட்டறையில் மாணவராகவும் நடிகராகவும் மட்டுமின்றி நடிப்புப் பயிற்றுநராகவும் இருந்த திரு.சுரேஷ்வரன் அவர்களின் சீரிய முயற்சியாலும் நிழல் ப.திருநாவுக்கரசு அவர்களின் உதவியாலும், நடிப்பு சம்பந்தமாக தமிழில் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் புத்தகம் தான் இந்த நடிப்பு: அகம்/புறம்..

நடிப்புத் துறையில் தன்னை உள்ளிழுத்துக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும், தேவையான அடிப்படையான நடிப்பியல் சார்ந்த இலக்கணங்களைப் பற்றிப் பேசுகிறது இந்நூல். மேலும் நடிப்பு என்பது தனது உணர்வுகளை உடல்மொழியால் எதிரிருப்பவருக்கு புரியவைப்பது என்பதால் அதுவும் மொழி போன்ற ஒரு ஊடகம் தான் என்று நமக்கு உணர்த்தி கடக்கும் ஆசிரியர், அந்த மொழியின் (நடிப்பின்) ஆதிப் பயன்பாடு எந்த தொன்ம காலத்திலிருந்து என்பதையும் நமக்கு உணர்த்த தலைப்படுகின்றார்.. நடிப்புக்கலை முளைவிட்ட அந்த தருணத்தை அவரது மொழியில் சொல்வதானால் இப்படித்தான் சொல்லவேண்டும்.

வேட்டை நிகழ்வில் உயிர் மீளும் கணங்கள் ஒவ்வொன்றும் பெருமகிழ்ச்சிக் கொடுக்க, அதைப் பிறரோடு பகிரவும் கொண்டாடவும் துடித்தானவன்.. கொடுவிலங்கை தான் வீழ்த்திய கதையை மொழியறியா அம்மனிதன் தன் உடலையே மொழியாக்கிக் கதைக்க, அவந்தன் மனைவியும் மக்களும் நட்பும் சுற்றமும் தம் விழிகளையே செவிகளாக்கி உற்றுக்கேட்டனர் அதை. தான் கொன்ற மிருகத்தைத் தன் கற்பனையால் உயிர்ப்பித்து, அதனோடான தனது போராட்டத்தை அவன் நிகழ்த்திக் காட்டிய அக்கணத்தில் முளைவிட்ட கலைதான் நடிப்புக்கலை”

இப்படி ஆதி மனிதனின் ஒவ்வொரு அசைவிலும் தன்னை உயிர்பித்துக் கொண்ட நடிப்புக்கலை, வேட்டை என்பதற்கான தேவை அற்றுப் போன போதும் எவ்வாறு அவனோடே தொடர்பில் இருந்தது என்பதும், ஆதி மனிதனின் ஊதிப் பெருத்த சடங்குகளில் கொஞ்ச கொஞ்சமாக தன்னைக் கரைத்துக் கொண்டு, ஊர்க் கூடி வாழும் குழுக்களுக்கு மத்தியில் எப்படி கூத்தாக திரிந்தது என்பதனையும், மொழியின் தோற்றுவாய்க்கு பின்னரும் அது எப்படி கலையாக பரிணமித்தது என்பதையும்… ஊர் முழுவதும் பகலில் உழவு வேலை செய்வதும், இரவு முழுவதும் கூத்தாடுவதுமாக, ஊரில் இருந்த ஒவ்வொருவருமே கூத்தாடிகளாக இருக்க…. அது எந்தக் காலக்கட்டத்தில் தொழில்சார்ந்த பிரிவினர் மட்டும் ஆடும் கூத்தாக மாறியது என்பதையும் மிக அழகாகவும் ஆழமாகவும் விளக்குகிறது.. இந்நூல்..

மேலும் ஆதித் தமிழ் சமூகத்தில் கூத்தை ஆவணப்படுத்தும் முயற்சியாக கூத்த நூல் என்று ஒரு இலக்கிய நூல் இருந்ததுமான தரவுகளையும் நாம் கடந்து வருகிறோம்.. இது தவிர்த்து மற்ற எந்த மொழிகளிலும் இல்லாத படிக்கு நம் தாய்மொழியாம் தமிழ்மொழியில் கலை என்பது நம் வாழ்வியலில் இருந்து தனிப்பட்ட ஒரு அங்கமாக இல்லாமல், நம் வாழ்வியலோடு சேர்ந்த ஒன்று என்பதனையும், அதை தமிழ்மொழி இயல் இசை நாடகம் என்று தன்னைப் பிரித்துக் கொண்ட உள்ளீடுகளிலேயே தெளிவாக்கி இருப்பதையும் ஆசிரியர் நமக்கு சுட்டிக் காட்டுகிறார்… இப்படி பிரித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அதற்கென தனியான ஒரு இலக்கணத்தையும் நம் தமிழ்மொழி கொடுத்திருக்கிறது என்பதனையும் ஆசிரியர் வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்குகிறார்… இயல் தமிழுக்கான இலக்கணமாக கொள்வதற்கு ஏகத்துக்கும் நூல்கள் இருக்க… இசை மற்றும் நாடகத்துக்கு இலக்கணமாக ஆசிரியர் சுட்டுவது நாட்டிய சாஸ்திரத்தையும் தொல்காப்பியத்தையும்…

நடனத்தின் முப்பெரும் பிரிவுகளான நிருத்தம் நிருத்தியம் நாட்டியம் என்பதைப் பற்றி முழுமையாக விளக்கும் நாட்டிய சாஸ்திரத்தையும், நாட்டியத்தின் முக்கியமானதொரு அங்கமான பாவம் என்பது விளக்குவது ஒன்பது வகையான அங்கதச் சுவையைத்தான்…. இதை வெளிப்படுத்துவது என்பது உடல்மொழியால் தான் சாத்தியம் என்பதால், நாட்டிய சாஸ்திரம் என்னும் ஆதி தமிழ்நூலும் நடிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு இலக்கிய நூல்தான் என்று வாதிடுகிறார்… அதுபோலவே தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் கொண்டுள்ள ”மெய்பாடு” என்றால் என்ன? என்பதனையும் அந்த உடல்மொழி என்று சொல்லப்படுவதான மெய்பாடு எத்தனை விதமான நிலைக்களன்களை கொண்டுள்ளது என்பதனையும் உணர்த்தி, அதற்கும் நாட்டிய சாஸ்திரத்துக்குமான ஒற்றுமையையும் விளக்கி, தொல்காப்பியமும் நடிப்பிற்கான அடிப்படையான இலக்கணங்களை கொண்டுள்ள நூலென்பதை தெளிவுபடுத்துகிறார்…

இது தவிர்த்து மேடை நாடகம், நவீன நாடகம் வீதி நாடகம் இவை ஒவ்வொன்றுக்குமான நுண்ணிய வித்தியாசத்தையும், ஒவ்வொன்றிலும் நடிகனுக்கு இருக்கக்கூடிய சவால்களையும் மிகத் தெளிவாக அடிக்கோடிட்டு காட்டுகிறார்… அதுபோல ரஷ்ய நடிகர் ஸ்டான்ஸ்லோவாஸ்கியின் நடிப்புக் கோட்பாடு பற்றிய முன்னுரையையும், அவரது முறையை மேலை நாடுகளில் எப்படி மெதட் ஆக்டிங் என்ற முறையில் பின்பற்றுகிறார்கள் என்பதையும் விளக்கிவிட்டு.. நடிப்புக்கான அடிப்படை கோட்பாடுகளுக்குள் உள்நுழைகிறார்…

ஒரு நடிகனானவன் தன்னை எப்படிப் பார்க்க வேண்டும், தன்னை சுற்றி இருக்கின்ற சூழலை எப்படி அவன் பார்க்கப் பழக வேண்டும், நடிகனுக்கான அடிப்படைப் பயிற்சியாக அவன் தினந்தோறும் செய்ய வேண்டியது என்ன..? தன் கவனிக்கும் திறனை கூர்மையாக்கவும், தன் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளவும், ஒரு கதாபாத்திரத்தின் சூழலை தனக்கு பழக்கப்படுத்திக் கொள்ளவும் என்ன மாதிரியான நடவடிக்கையில் அவன் ஈடுபடவேண்டும் என்பதையும் ஆரம்ப கட்ட யோகாப் பயிற்சிகள் தொடர்பான அறிமுகங்களையும் கொண்டு விரிந்து செல்கிறது புத்தகம்.. சில இடங்களில் சினிமா மற்றும் நாடகம் சார்ந்த புராதன ரீதியிலானக் குறிப்புகள் நடிப்புக்கான வரலாற்று ரீதியிலான சில பின்புலங்களைக் கொண்டிருந்தாலும் சற்று அயர்ச்சியைக் கொடுப்பதும் உண்மை…

நடிப்பிற்கான இலக்கணம் என்பதை பெருங்கடல் என்பதை நாம் அறிந்திருந்தாலும், அதன் தகவமைப்புக்களைப் பற்றியும் அடிப்படைகளை அறிந்து கொள்ளவும், அதற்குள் முங்கி முத்தெடுப்பதற்க்குத் தேவையான முன்னேற்பாடுகளைப் பற்றியும் தமிழில் பேசுகின்ற நூல் என்பதால் இந்தப் புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது… நடிப்புத் துறையில் வாழ்ந்தோங்க வேண்டும் என்ற கனவுகளுடன் இருப்பவர்கள், எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் விழிக்கத் தேவையில்லை… அவர்கள் நடிப்புக்கான அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கும் இந்தப் புத்தகத்திலிருந்து அவர்களுக்கான பயணத்தைத் தொடங்கலாம்…


Tuesday, 11 March 2014

நிமிர்ந்து நில்:

சமுத்திரக்கனியை எனக்கு ஒரு இயக்குநராக பிடிப்பதைவிட, நடிகராக அதிகம் பிடிக்கும்.. மிகவும் உணர்ச்சிவசப்படுபவனாக நான் இருந்த காலகட்டத்தில் எனக்கு நாடோடிகள் திரைப்படத்தையும் மிகவும் பிடித்திருந்தது… இப்பொழுது பிடிக்கும் அவ்வளவே… மேலும் தனிப்பட்ட மனிதராகவும் நான் கேள்விப்பட்ட சில சம்பவங்களை வைத்தும் அவரை எனக்குப் பிடிக்கும்.. அதுபோலத்தான் சில கொள்கை ரீதியிலான அவரது கருத்துக்களும்… எனக்கு உவப்பானதே… இது சமுத்திரக்கனி தொடர்பான விமர்சனமா.. இல்லை சமுத்திரக்கனியின் “நிமிர்ந்து நில்” தொடர்பான விமர்சனமா என்று நீங்கள் குழம்பவேண்டாம்.. ஒரு நல்ல நடிகராகவும், ஒரு நல்ல சகமனிதராகவும் என்னை ஈர்த்திருக்கும் சமுத்திரக்கனி அவர்கள் ஒரு நல்ல இயக்குநராக என்னை நிமிர்ந்து நில் பார்ப்பதற்கு முன்பும் ஈர்க்கவில்லை… நிமிர்ந்து நில் பார்த்தப் பின்னரும் ஈர்க்கவில்லை..


நிமிர்ந்து நில் திரைப்படத்தின் கதையை நான் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே யோசித்திருந்தேன்… ஒரே ஒரு சின்ன மாற்றம்… என் கதையில் நீயா நானா கோபிக்கு பதிலாக அரட்டை அரங்கம் விசு அவர்கள் இருந்தார்கள்… பின்பு சில ஆண்டுகள் கழித்து அந்நியன் வந்ததர்க்குப் பிறகு லஞ்சம் வளர்வதற்கு முக்கியமான காரணம் நாமும் தான் என்பதில் ஓரளவுக்கு சமாதானம் ஆகி, இனி இந்தக் கதைகள் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று பரணில் தூக்கிப் போட்டதாக ஞாபகம்… அப்போதே நான் தூக்கிப் போட்ட கதையை, இவர் இப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்றால், எப்படித்தான் இவர் இயக்குநராக என்னை ஈர்ப்பார்….

நிமிர்ந்து நில்லின் கதையென்னவென்றால், ஒரு வரியில் சொல்லக்கூடிய ஆனால் ஒரு யுகமாக நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய லஞ்சம் தான் கதை… ஆகம விதிகளையும் ஒழுக்கத்தையும் அறத்தையும் கூடவே கல்வியையும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு குருகுலத்தில் இருந்து கல்வி கற்று பட்டமும் பெற்று வெளிவருகிறார் நாயகன்… இங்கு வந்து பார்த்தால் அவர் நினைத்தது போல் எதுவுமே இல்லை…. யாரும் எந்த விதிகளையும் கடைபிடிப்பது இல்லை… யாருக்கும் ஒழுக்கம் இல்லை… எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஸ்டேசனுக்குள்ளயே கைதிகளுக்கு வார்டனே கஞ்சா கொடுக்கிறார்.. ட்ராபிக் போலீஸ் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி லஞ்சம் வாங்குகிறார்… பஸ்சுக்குள் ஒருவன் பிக்பாக்கெட் அடிக்கிறான்… அவனைத் துரத்திப் பிடிக்கும் நாயகனை போலீஸ் பிடித்துவிட்டு, திருடனை தப்பவிடுகிறது… அவன் நா அடிக்கிற காசுல பாதி அவுங்களுக்குத்தான் என்று ஊருக்கே கேப்பது போல செய்தி ஒளிபரப்பு செய்துவிட்டுப் போகிறான்… இது போதாதென்று நீதிபதியை கரெக்ட் செய்து கேஸில் இருந்து தப்பிக்க நீதிமன்றத்துக்குள்ளே ஒரு புரோக்கர் இருக்கிறான்… இதெல்லாம் கண்டு கொதிக்கும் நாயகன் மேலிடத்துக்கு ஒரு மெய்ல் தட்ட… அவர்கள் அத்தனை பேருக்கும் மெமோ கிடைக்கிறது… அவர்கள் அந்தக் கடுப்பில் ஹீரோவை மொத்தி எடுக்க… நாயகியும் நண்பனும் ஊருக்குள் இருக்கும் ஒரே ஒரு நல்ல வக்கீலும் அவனுக்கு ஊரின் இன்றைய நடப்பைப் பற்றி வகுப்பெடுக்க…. அதை நன்றாக காது கொடுத்துக்கேட்கும் கதாநாயகன், இப்போது என்ன செய்கிறேன் பாருங்கள் என்று அவர்களின் காதுக்குள் கிசுகிசுக்க…. பயந்து, மிரண்டு, கலங்கிப் போகும் நாயகி நான் இதுக்கு ஒத்துக் கொள்ள மாட்டேன்.. நீ அப்படி செய்யக்கூடாது என நாயகனிடம் கெஞ்ச… நாயகனோ கோபமாக நாயகிக்கு டாடா காட்டிவிடுகிறார்….


நாமும் பலேபலே…. மிக அற்புதமாக ஏதோ திட்டம் தீட்டுகிறார்கள்… இனிதான் படம் சூடுபிடிக்கப் போகிறது… என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், சம்மட்டியைக் கொண்டு இவர்கள் அடிக்கின்ற அடியில் மண்டையில் தான் சூடுபிடிக்கிறது…. இதில் வரும் நாயகனின் கதாபாத்திரம் அந்நியன் அம்பியின் கதாபாத்திரத்தின் தழுவல் போல் தெரிகிறது… அது போல மையக்கதையும், அந்த மையத்தை இவர்கள் தொடுவதற்கு அமைத்திருக்கும் திரைக்கதையும் முறையே அந்நியன், ரமணா மற்றும் சிட்டிசன் ஆகியவற்றின் தழுவல்கள்… இதைப் பற்றியெல்லாம் அவர்கள் விவாதித்திருக்கவே மாட்டார்களா…? மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.. அல்லது அவர்கள் அப்படங்களில் சொன்னதை தாண்டி ஏதேனும் ஒரு விசயமாவது சொல்ல வேண்டும்.. அதுவும் இல்லை….


இதுபோக நாயகன் படிக்கும் அந்த குருகுலம் என்ன விண்வெளியில் இருக்கிறதா…? அல்லது வியாழன் கிரகத்தில் இருக்கிறதா…? பட்டப் படிப்பு வரை படித்திருக்கும் அவன் ஊருக்குள் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு ஒரு பத்திரிக்கை கூட படிப்பதில்லையா…? அல்லது ஒரு டிவி செய்தியைக் கூடப் பார்த்ததில்லையா…? அதில் ஏதேனும் ஒன்றைப் பார்த்திருந்தாலே உலகம் இப்படித்தான் இருக்கிறது என்று தெரிந்திருக்குமே..!! மேலும் நாயகன் குருகுலத்தில் இருந்து வெளியில் வந்து சில நாட்களிலேயே நடப்பு நிகழ்வை ஜீரணிக்க முடியாமல் திகைக்கிறானா..? அல்லது ஆற அமர ஆறுமாத காலங்கள் கழிந்தப் பின்னர் திடீரென பொங்குகிறானா..? ஏனென்றால் நாயகி நாயகனை ஆறுமாதமாக பின்தொடர்பவள்.. அல்லது ஒரு மூன்று ரூபாய் தினசரி பேப்பர் கூட நுழைய முடியாத குருகுலத்தில், நாயகி நுழைந்து அங்கிருந்தே பின் தொடர்வதை தொடங்கிவிட்டாளா…?

இதுபோக நடுரோட்டில் சட்டை கிழிந்த நிலையில் நாயகன் தன் குரு நாசர் அவர்களிடம் போன் செய்து ஒரு கேள்வி கேட்பாரே…? ”அப்ப என்ன விபச்சாரம் பண்ணச் சொல்றீங்களா…? சார்….” இந்த இடத்தில் இயக்குநர் அவர்களே நீங்கள் விபச்சாரத்தை கேவலப்படுத்துகிறீர்களா…? அல்லது உங்களது நாயக பிம்பத்தைப் போல் கற்பனையில் வாழாமல், ஹீரோயிசம் செய்துகாட்டி ஜெயிக்க திராணி இல்லாமல், மிகச் சாதாரணமான யதார்த்த வாழ்க்கை வாழும் சாமானிய மக்களை கேவலப்படுத்துகிறீர்களா…? மிகுந்த எரிச்சலை ஏற்படுத்திய காட்சி அது….

நல்ல விசயங்களும் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன… சில அற்புதமான வசனங்கள், இது தவிர்த்து ஒரு போலி பத்திரத்தை தயாரிப்பு செய்வதற்கு காட்டப்படும் தத்ரூபமான முஸ்தீபு வேலைகள்… நீதிமன்றத்தில் ஜெயம் ரவி, சூரியையும், அமலா பாலையும் மாட்டிவிடுவது, முதல் பாதியில் சூரி அமலா பால் இருவரும் பேசிக் கொள்ளும் தொணி, முதல் பாதியில் அமலாவின் துறுதுறுப்பான நடிப்பு, இப்படி ஈர்ப்புக்கான விசயங்களும் இருக்கத்தான் செய்கின்றன… இருந்தாலும் ஏகப்பட்ட எதிர்மறையான கருத்துக்கு இடையில் இவை புதைந்துகிடப்பதால் வெளியே தெரியாமல் போய்விடுகின்றன… பாவம் ஜெயம் ரவி… இயக்குநரிடம் தன்னை அப்படியே ஒப்படைத்துவிடும் ஒரு நடிகர்… இருப்பினும் அவருக்கு வரிசையாக திரைப்படங்கள் தோல்வி அடைவது காலக்கொடுமை… இவர் தவிற கோபிநாத், சரத்குமார், ராகினி திரிவேதி, ஞானசம்பந்தன், படவா கோபி என்று ஒர் பெரிய பட்டாளமே படத்தில் இருக்கிறது…. ஆனால் அவர்களுக்கான தேவையென்ன என்பது தான் புரியவில்லை..

சில தவறான கருத்துக்களைக் உள்ளடக்கமாகக் கொண்டு, கேளிக்கை நோக்கோடு எடுக்கப்படும் திரைப்படங்களான கோலி சோடா, சூதுகவ்வும் மாதிரியான திரைப்படங்கள் கூட கேள்வி கேட்பதற்கும், குற்றம் சாட்டுவதற்கும் கொஞ்சம் கூட இடம்கொடுக்காமல் திரைக்கலைக்கான ஆளுமையோடு எடுக்கப்படும் போது, நல்ல கருத்துள்ள, மக்களின் வாழ்க்கைப் பிரச்சனையையும், நாட்டின் நடப்பியல் பிரச்சனைகளையும் பற்றி பேசக்கூடிய நிமிர்ந்து நில் மாதிரியான திரைப்படங்கள் பொத்தாம் பொதுவாகவும், ஏகப்பட்ட குறைகளோடும், எந்தவிதமான திரைக்கலை ஆளுமையும் இல்லாமல் எடுக்கப்படுவதை பார்க்கும் போது கொஞ்சம் எரிச்சலாகவும், மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது…. இயக்குநர் சொல்ல வரும் விசயத்தில் எனக்கு ஒத்திசைவும் உடன்பாடும் இருந்தாலும், அதை சொல்லிய விதத்தில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை….


நிமிர்ந்து நில் திரைப்படத்தில் அவர்கள் சொல்ல வருகின்ற கரு… நாம் நம் வாழ்நாளில் பலமுறை கண்டும் கடந்தும் வந்து கொண்டிருக்கின்ற யதார்த்தமான, உண்மையான பிரச்சனை…. ஆனால் அந்தப் பிரச்சனையையும் அதற்கான தீர்வையும் ஒரு சாமானியனின் வாழ்க்கையோடு பிணைத்துச் சொல்லாமல், புனைவு கலந்து, ஹீரோயிசம் கலந்து காதல் கலந்து, வலிய திணிக்கப்பட்ட சோகம் கலந்து கொடுத்திருக்கிறார்கள்…. அதனால் தான் இத்திரைப்படத்தை ஒரு பேண்டஸி வகை சினிமாவாகவும் அணுக முடியவில்லை.. ஒரு யதார்த்த சினிமாவாகவும் அணுக முடியவில்லை…

ஆனாலும் மக்களே ஈசாப்பின் நீதிக்கதைகளை நாம் படித்திருக்கிறோம் தானே… ஆரம்பிக்கும் போதே அதன் முடிவு நமக்குத் தெரிந்திருக்கும் தானே… இருப்பினும் அது போன்ற நீதிக்கதைகளை நாம் திரும்பத் திரும்ப படிக்க வேண்டியது மட்டுமில்லாமல், நம் வருங்கால சந்ததிக்கும் அந்த நீதி போதனைகளை கடத்த வேண்டியதன் அவசியத்தையும் தேவையையும் நாம் உணர்ந்து தானே இருக்கிறோம்; அது போலத் தான் இந்த ”நிமிர்ந்து நில்” ஒரு நீதிக் கதை போல… ஆரம்பத்திலேயே அதன் முடிவு தெரிந்தும் விடுகிறது… திரைப்படமாக பல குறைகளும் இருக்கிறது… இருப்பினும் சில விசயங்களை நாம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதற்க்கும், அதை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்குமான வெளி இத்திரைப்படத்தில் இருக்கிறது…. அவர்களது எண்ணம் தூய்மையானது… அதற்காக நாம் ஒரு நூறு ரூபாய் செலவளித்து கண்டிப்பாக கொஞ்சம் பொறுமைகாத்து இத்திரைப்படத்தைப் பார்க்கலாம்… தப்பே இல்லை….

Monday, 10 March 2014

கிம் கி டுக் வரிசை – 3


                          Kim Ki-duk

THE ISLE:

கிம் கியின் படங்களில் ஒரு தனிப்பட்ட முகவுரை தேவைப்படும் படங்களில் இந்த ஐசல் திரைப்படம் மிக முக்கியமானது. வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படத்தைப் பார்த்த சில பார்வையாளர்கள் வாந்தி எடுத்தனர் என்பதும் இதன் தனிப்பட்ட சிறப்பு.. அதுமட்டுமின்றி ஒரு திரைப்படத்தின் முடிவு என்ன சொல்ல வருகிறது என்பதைப் பற்றி அதிகமாக விவாதிக்கப்பட்ட படம் எனக்குத் தெரிந்து இதுவாகத்தான் இருக்கும்.. கனவுகளின் மெய்பொருளை திருடுபவன் என்று எனக்கு நானே அடைமொழி இட்டுக் கொண்டாலும், கிம் கியினுடைய கனவுகளின் மெய்பொருளை உள்வாங்குவது என்பது அவ்வளவு சாமானியமானதல்ல… மிகப்பெரிய சவால் நிறைந்தது… அவருடைய வரிசைப் படங்கள் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் வெவ்வேறு விதமான உணர்வுகளையும் அனுபவங்களையும் கொடுக்கக்கூடியவை… அதுவே அவரது திரைப்படங்களில் இருக்கின்ற ஆகச்சிறந்த அனுகூலம்.. இந்த இடைப்பட்ட நாட்களில் ஐசல் திரைப்படத்தை குறைந்தது 5லிருந்து பத்து முறையாவது பார்த்திருப்பேன்… அது சொல்ல வருகின்ற படைப்பியல் சார்ந்த சாராம்சங்களையும் வாழ்வியல் சார்ந்த தத்துவங்களையும் முழுக்க நான் உள்வாங்கினேனா…? என்பதில் சந்தேகம் இருப்பினும், அதை ஓரளவுக்காவது உள்வாங்கி இருக்கிறேன் என்பதிலும் நம்பிக்கை உண்டு… இத்திரைப்படத்தில் இருந்து நான் அறிந்த தரவுகளாக முன் வைக்கப்போகும் விடயங்களில் வருங்காலத்தில் மாற்றங்களும் முன்னேற்றங்களும் இருக்கும் என்பதையும் உணர்ந்தவனாகவே இந்த விமரிசனத்தை முன்னெடுக்கிறேன்…


தி ஐசல்… தீவு… இத்திரைப்படத்தில் முதலில் நாம் காட்சிகளின் வழி காண்பது என்ன… என்பதை ஒரு கட்டுரை வடிவில் கொடுத்து விடுகிறேன்.. பின்பு அந்தக் காட்சிகளின் வழியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது அல்லது உணரத் தலைப்பட வேண்டியது என்ன என்பதைப் பற்றி விவாதிக்கலாம்.. இது சற்றே நீண்ட பதிவு… படத்தின் கதையை காட்சிவாரியாக வாசிக்க விரும்பாதவர்கள் பச்சை வண்ணத்தில் இருக்கின்ற பத்திகளை வேகமாக கடக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்…


படத்தின் முதல் காட்சியில், பனி விலகிக் கொண்டிருக்கும் முன் காலைப் பொழுதில் ஒரு மிகப்பெரிய ஏரி போன்ற நீர்ப்பரப்பில், நான்குபுறம் தண்ணீர் சூழ்ந்திருக்க குட்டி குட்டியாய் படகுவீடுகள் எல்லா வண்ணங்களிலும் மிதந்து கொண்டு இருக்கிறது.. அந்த நீர்ப்பரப்பு நிலப்பரப்போடு இணையும் புள்ளியில் ஒரு வீடு காட்சிக்கு கிடைக்கிறது… அதை ஒட்டிய மரப்பாலத்தில் ஒரு உருவம் நடந்துவருகிறது… முப்பது வயது மதிக்கத்தக்க அவன் தான் கதை நாயகன்.. வீட்டுக்குள் இருந்து வெளிவரும் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் (கதைநாயகி), பேட்டரி போன்ற மின்சாதனங்களை எடுத்துக் கொண்டு நடக்க… அந்த வீட்டில் வாயிலில் ஒரு நாய் அமர்ந்திருக்கிறது… அந்த இளைஞனும் பேசாமல் அவளை பின் தொடர்கிறான்…. அவன் கையில் ஒரு பறவைக் கூண்டு இருக்க.. அதில் ஒரு சிறிய பறவை இருக்கிறது… இருவரும் ஒரு சிறிய விசைப்படகில் ஏறி நீர்ப்பரப்பில் பயணிக்க… மிதந்து கொண்டிருக்கும் ஒரு மஞ்சள் நிற படகு வீட்டில் அவனை அவள் இறக்கிவிட்டு விட்டு, அருகே இருக்கும் மற்றொரு படகுவீட்டை நெருங்க… அங்கே ஏற்கனவே மீன் பிடித்துக் கொண்டிருப்பவன், இவளிடம் மீன் பிடிப்பதற்காக வட்டவடிவ உருளைப் புழுக்களை கேட்டு வாங்கிக் கொள்கிறான்… மஞ்சள் நிற படகு வீட்டில் இறக்கிவிடப்பட்ட நாயகன் தன் கையோடு கொண்டு வந்த பறவைக் கூண்டில் அடைக்கப்பட்ட வண்ணப் பறவையை படகு வீட்டின் ஒரு மூலையில் தொங்கவிட்டு விட்டு உள்ளே செல்கிறான்.. தன்னுடைய சிறிய விசைப்படகில் தனித்து இருக்கும் நாயகி அயர்ந்து போய் தூங்கிவிடுகிறாள்… சுற்றிலும் நீர்ப்பரப்பு இருக்க “தி ஜசல்” என்னும் டைட்டில் இடம்பெறுகிறது..


இரவு நேரம் வீட்டின் கண்ணாடிக்கு முன் அமர்ந்திருக்கும் நாயகி, தன் கூந்தலை சரி செய்தவாறே, தன் உடைகளையும் சரி செய்கிறாள்.. தன் மார்பகத்தின் விளிம்புகள் கவர்ச்சியாக வெளியில் தெரியும்படி தன் உடையை சரி செய்தவள், தன் படகை எடுத்துக் கொண்டு இரவில் மிதக்கும் படகு வீடுகளை நெருங்குகிறாள்… அதில் ஒரு படகு வீட்டில் இருக்கும் மூன்று நண்பர்கள் சீட்டாடிக் கொண்டே இவளை நோக்கி டீ வேண்டும் என்று கேட்க…. அவர்கள் அருகே போட்டை செலுத்தி டீ கொடுக்கிறாள்… அவளை உள்ளே அழைத்து இரண்டு நண்பர்கள் அவளை புணருகிறார்கள்… அதே நேரத்தில் மஞ்சள் நிற படகுவீட்டில் விடப்பட்ட நாயகன், தன் பையில் இருந்து துணி சுற்றப்பட்ட ஒரு சிறிய கைத்துப்பாக்கியை வெளியே எடுக்கிறான்.. பெருமூச்சு விட்டவாறே அதனை உள்ளே வைத்துவிட்டு, வெளியே வந்து நீர்ப்பரப்பில் சிறுநீர் கழிக்கிறான்… அப்போது நாயகி அருகில் இருக்கும் படகு வீட்டில் இருந்து ஆடைகளை சரிசெய்தவாறே வெளியே வருவதை கவனிக்கிறான்… நாயகியை பணம் கொடுத்து அனுப்பும்படி ஒரு நண்பன் கூற, மற்றொருவனோ அவள் வாயைத் திறந்து பேசினால் தான் பணம் கொடுப்பேன்… பேசு என்று அவளை சீண்டுகிறான்.. அவள் பேச விரும்பாதவளாக படகை திருப்ப எத்தனிக்க… அவன் பணத்தை விசிறியடிக்க.. அது நீர்ப்பரப்பில் விழுந்து மிதக்கிறது… அவனை எரிப்பது போல் பார்த்துக் கொண்டே அந்தப் பணத்தை நீரில் இருந்து எடுக்கிறாள்… சற்றுத் தள்ளிப் போய் தன் பெண் உறுப்பை நீர் கொண்டு கழுவுகிறாள்… அவளை அவர்கள் உதாசீனப்படுத்தியது அவளுக்குள் கோபத்தை ஏற்படுத்த… அவர்கள் தங்கி இருக்கும் வீட்டையே வெறித்துப் பார்க்கிறாள்… சிறுது நேரம் கழித்து அந்த வீட்டில் இருந்து வெளிவரும் உதாசீனப்படுத்திய நபர் நீர்ப்பரப்பில் தன் பின்புறத்தைக் காட்டி மலம் கழிக்க… நீருக்குள் இருந்து வெளிவரும் இரண்டு கைகள் அவனை நீருக்குள் இழுத்துப் போட… அவன் எதனாலோ தாக்கப்பட்டது போல் கத்திக் கொண்டே நீரில் மூழ்க… அவனது நண்பர்கள் அவனை காப்பாற்றுகின்றனர்… இந்த சலசலப்புக்கு இடையே சற்றுத்தள்ளி சிறிய விசைப்படகு மட்டும் மிதந்து கொண்டு இருக்க… நீருக்குள் இருந்து இந்த பெண் எழுகிறாள்… அவளது கையில் ஒரு கூர்மையான ஆயுதமும், அவளது உதட்டில் சிரிப்பும் இருக்கிறது… சற்று நேரம் கழித்து தூங்கிக் கொண்டிருக்கும் நாயகனின் படகு வீட்டின் கண்ணாடி ஜன்னலில் ஒளி பரவுகிறது… டார்ச் லைட்டுடன் நிற்கும் நாயகி அவனது முகத்தில் ஒளியை பாய்ச்சிவிட்டு, அவனது உடலின் கீழ்ப்புறம் ஒளியை பாய்ச்சி பார்க்கிறாள்…


அடுத்த நாள் காலை ஒரு வைலட் நிற படகு வீட்டை சுத்தம் செய்யும் நாயகி அப்படியே அதில் தூங்கிப் போகிறாள்… ஒரு ஆணும் பெண்ணும் ஆடைகள் இன்றி உச்சநிலையில் புணரும் ஒரு காட்சி தெரிகிறது… ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்க.. புணர்ந்து கொண்டிருந்த பெண் குண்டு பாய்ந்து இறந்து கிடக்கிறாள்.. அவளது ஆடையற்ற உடலை இழுத்து வந்து, உயிரும் உடையும் அற்ற ஆண் உடலின் மேல் புணரும் நிலையிலேயே அவளது உடலை கிடத்திவிட்டு செல்கிறது ஒரு உருவம்… காட்சி மறைய நாயகன் திடுக்கிட்டு விழிக்கிறான்…. நாயகி படகில் நாயகனின் வீட்டை நெருங்க.. அந்த மரப்பலகையில் இவள் வைத்துவிட்டுச் சென்ற உணவு எடுக்கப்படாமலேயே இருக்கிறது… குழம்பிப் போய் இவள் கண்ணாடி ஜன்னலின் வழியே உள்ளே பார்க்க… நாயகன் இவளுக்கு முதுகை காட்டியபடி குழுங்கி குலுங்கி அழுது கொண்டிருக்கிறான்… அவனுக்குப் பின் ஏதோ சோகம் இருக்கிறது என்பதை உணரும் நாயகி அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்… இவன் சந்தோசமாக பொழுதைப் போக்க வந்தவன் அல்ல என்பது அவளுக்குப் புரிகிறது… இரவு நேரம்.. மஞ்சள் படகு வீட்டின் வெளியே மரப்பலகையில் நாயகன் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கிறான்… துப்பாக்கியை தனது நெற்றியை நோக்கிப் பிடிக்க.. தீடிரென்று அவனை நீருக்குள் இருந்து ஏதோ கூர்மையான ஆயுதம் தாக்கிவிட்டு மறைய.. அதிர்ச்சியில் அவன் துப்பாக்கியை நீரில் தவறவிட.. அவன் தொடையில் இருந்து ரத்தம் கசிகிறது…. பயந்து போய் பின்வாங்கியவன் நீரையே பார்த்துக் கொண்டிருக்க… சற்றுத் தள்ளி நாயகி தனது படகில் சிரித்துக் கொண்டே அவனைக் கடந்து செல்கிறாள்…


அடுத்த நாள் காலையில் எழும் நாயகன் பிறரைப் போல் மீன்பிடிக்கத் தயாராக… தூண்டில் செய்து நீருக்குள் மூழ்கடித்து காத்திருக்கிறான்… அவ்வழியே கடந்து செல்லும் நாயகி, இவனது தூண்டிலை எடுத்துப் பார்க்க… தூண்டிலும் மீன் வடிவிலேயே இருப்பதைப் பார்த்து சிரிக்கிறாள்.. இவளாகவே ஒரு புழுவை அதில் திணித்துவிட்டு செல்கிறாள்… அதில் மீன் மாட்டிக் கொள்ள.. நாயகி அவளது வீட்டில் இருந்து ஊஞ்சல் ஆடிக் கொண்டே அதைப் பார்க்கிறாள்.. நாயகன் தூண்டிலில் சிக்கிய மீனை விடுவித்து மீண்டும் நீரில் விடுகிறான்.. ஊஞ்சல் ஆடும் நாயகியைப் பார்த்துவிட்டு, அவள் ஊஞ்சல் ஆடுவதைப் போலவே ஒரு உருவத்தை கம்பியில் தயாரிக்கிறான்…. நாயகி மரங்கள் அடர்ந்த புதர்வெளியில் சென்று ஒரு தவளையை அடித்துக் கொல்கிறாள்… அதன் தோலை உரிக்கிறாள்… அந்த சதைத் துணுக்கை நாயகன் வைத்திருக்கும் கூண்டுப்பறவைக்கு ஊட்டிவிடுகிறாள்… வீட்டுக்குள் இருந்து வெளிவரும் நாயகன் அவளுக்கு அந்த ஊஞ்சல் ஆடும் பொம்மையை பரிசளிக்கிறான்… அவள் மகிழ்ந்து போகிறாள்… தன் நாயுடன் சந்தோசமாக விளையாடுகிறாள்…


அடுத்த நாள் காலை அவள் நீர்ப்பரப்புக்குள் சாப்பாடு கொடுக்க செல்ல எத்தனிக்கும் போது ஸ்கூட்டியில் வரும் இரண்டு பெண்கள், அவளோடு படகில் ஏறிக்கொள்கிறார்கள்.. அவர்கள் இருவரும் “அவர்கள் நமக்கு இரண்டு மடங்கு பணம் தருவார்கள் தானே என்று பேசிக் கொள்கின்றனர்..” க்ரே நிற படகு வீட்டில் இறங்கிக் கொள்ளும் அந்தப் பெண்களில் ஒருத்தி, அங்கு இருக்கும் இரண்டு ஆண்களில் ஒருவனிடம், அவன் பிடித்த மீனைக் காட்டி உன் அளவுள்ள மீன்களையே பிடித்தாயா…? என்று கேட்க… என் அளவு உனக்கு எப்படித் தெரியும்..? நீ பார்த்தாயா..? என்று அவன் கேட்க… என்னால் உன் உருவத்தை வைத்தே சொல்லமுடியும் என்று அவள் பதில் கூற… என்னது இந்த மீனை விட பெரியதாக இருந்தால், இன்று முழுவதும் நான் உன்னை விடப்போவதில்லை… என்று கூறி அவளை உள்ளே இழுத்துச் செல்கிறான்.. மற்றொரு பெண் மற்றொரு ஆணுடன் சம்பாசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள்… நாயகி நாயகனுக்கு சாப்பாடு கொடுக்க… அவனது படகு வீட்டை நெருங்க… அவன் அந்த இரு பெண்களையே கவனித்துக் கொண்டிருக்கிறான்… இவள் கிளம்ப எத்தனிக்க… “இங்கு கழிவறை வசதி உள்ளதா…?” எனக் கேட்க அவள் படகு வீட்டுக்கு உள்ளயே ஒரு சிறிய ஓட்டை உள்ள மரப்பலகையை தூக்கி அடியில்தெரியும் நீர்ப்பரப்பைக் காட்டுகிறாள்… அதில் அவன் தன் காலைக்கடனை கழிக்கத் தொடங்குகிறான்… மழை பெய்யத் தொடங்குகிறது… நாயகன் தன் கூண்டுப் பறவையை உள்ளே எடுத்து வருகிறான்… அந்த இரண்டு பெண்களோடு அந்த இரண்டு ஆண்களும் திரும்பிச் செல்கின்றனர்… அதையும் நாயகன் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.. நாயகி தன் வீட்டில் இசைக்கருவியை ஓடச் செய்கிறாள்… பின்பு சோடா போன்ற ஒரு பானத்தைக் குடிக்கத் தொடங்குகிறாள்… எதிரே தெரியும் மஞ்சள் நிற படகு வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தவள்… தன் கையில் ஒரு சோடா பாட்டிலை எடுத்துக் கொண்டு படகில் நாயகனை நோக்கிச் செல்கிறாள்… மழை கொட்டிக் கொண்டிருக்கிறது…. அவள் வீட்டின் வெளியே இருக்கும் மரப்பலகையில் அமர்ந்து குடிக்கத் தொடங்க… நாயகனும் அவள் அருகில் வந்து அமருகிறான்…. அவளிடம் நெருக்கம் காட்டி அமர… அவள் மறுப்பு தெரிவிக்காமல் இருக்க… அவளை புணரத் தொடங்குகிறான்… அவன் மிருகத்தனமான முறையில் அவளது ஆடைகளை கிழித்து புணர்ச்சியில் ஈடுபட… அதை விரும்பாத நாயகி அவனை அடித்து நீரில் தள்ளிவிட்டு மேல் கச்சைகள் அற்ற நிலையிலேயே தன் வீட்டுக்கு திரும்புகிறாள்… பின்பு அவள் போன் செய்ய… ஏற்கனவே வந்து சென்ற இரண்டு பெண்களில் மீனைப் பற்றி பேசிய பெண், தனது ஸ்கூட்டியில் வந்து சேர்கிறாள்… “இந்த மழையில் அவனுக்கு பெண் கேட்கிறதா…” என்று அவனைத் திட்டிக் கொண்டே அவள் படகில் ஏற, நாயகி அவளை நாயகனின் மஞ்சள் நிறப் படகு வீட்டில் இறக்கிவிட்டுச் செல்கிறாள்… அந்தப் பெண் நாயகனிடம் சீக்கிரம் என்று அவசரம் காட்டி ஆடையை கலட்ட முற்பட.. அதை தடுக்கும் நாயகன் அவளுக்கு டீ கொடுத்து சம்பாஷனைகளில் ஈடுபடுகிறான்…  வெறுத்துப் போன அந்தப் பெண் கிளம்புவதற்காக, படகை கொண்டு வரச்சொல்லி கையசைக்க… நாயகி அதைக் கண்டுகொள்ளாதவள் போல் இருந்து கொள்கிறாள்.. அவன் கம்பியில் செய்த சைக்கிள் ஒன்றை அவள் கேட்டு வாங்கிக் கொள்கிறாள்… சிறுது நேரத்தில் அவனை அவளுக்குப் பிடித்துப் போக இருவரும் உறவில் ஈடுபட முற்பட… அந்தப் பெண்ணை வைத்து பிழைப்பு நடத்தும் ஆடவன் வந்து நாயகனிடம் பணம் பெற்றுக் கொண்டு அவளை இழுத்துச் செல்கிறான்… நாயகன் மீதுள்ள கோபத்தை நாயை அடிப்பதன் மூலம் நாயகி வெளிப்படுத்துகிறாள்… அந்த நாயை ஒரு படகு வீட்டில் தனியாக கட்டிப் போட்டுச் செல்கிறாள்..


புதிதாக படகு வீட்டில் தங்க வந்த ஒரு இளைஞனுடன் நாயகி உறவு கொள்கிறாள்… அடுத்த நாள் படகுவீட்டுக்கு ஒரு பெண்ணுடன் வரும் பணக்காரன் அந்தப் பெண்ணுக்கு விருப்பமான வண்ணத்தைக் கேட்டு அந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொல்கிறான்… அங்கு கொழுத்த பெரிய மீனைப் பிடிக்கும் அவன் அதை உயிரோடு அறுத்து, அதை பச்சையாக அவளுக்கு ஊட்டிவிட்டு அவனும் உண்டு மகிழ்கிறான்… பின்பு அந்த மீனை அப்படியே சதை அறுபட்ட நிலையிலேயே நீரில் விட… அது நீருக்குள் நீந்திச் சென்று மறைகிறது… அடுத்த நாள் காலையில் ஏற்கனவே நாயகனுடன் பழகிச் சென்ற அந்த ஸ்கூட்டியில் வந்த பெண், மீண்டும் வந்து நிற்க… தன் கோபத்தை மறைத்துக் கொண்டு வேறுவழியின்றி அவளை நாயகனிடம் அழைத்துச் செல்கிறாள்… அன்றிரவு அவர்கள் இருவரும் புணருவதை காலைக் கடன் கழிப்பதற்காக வைத்திருக்கும் பலகையை தூக்கிக் கொண்டு பார்க்கிறாள்… அப்பொழுது தன்னைப் பார்க்கும் நாயகனை முறைத்துக் கொண்டே வெளியேறுகிறாள்.. அடுத்த நாள் காலை அந்தப் பெண்ணை பணம் கொடுத்து நாயகன் அனுப்ப.. அவள் அழுதுகொண்டே நான் வேசியாக வரவில்லை… உன்னை எனக்குப் பிடித்திருந்ததால் வந்தேன்… என்று முறையிடுகிறாள்… இருப்பினும் பணத்தை எடுத்துக் கொள்ளும் அவள் இது பிற பெண்களுக்கு என்று சொல்லி வெளியேறுகிறாள்.. படகில் அவளை அழைத்துச் செல்வதற்காக நாயகி காத்துக் கொண்டிருக்க… அவள் முன்னிலையில் நாயகனை கட்டி அணைத்துக் கொண்டே, அந்த ஜீஸைக் குடி… நான் மீண்டும் உன்னை வந்து பார்க்கிறேன்… என்று சொல்லி கிளம்புகிறாள்… படகில் செல்லும் போது நாயகனிடம் பெற்ற பணத்தை “என் நண்பனுக்கு உதவி செய்வதற்கு நன்றி.. அதற்காக இந்தப் பணத்தை வைத்துக் கொள்…” என்று நாயகியிடம் நீட்ட… அதை வாங்கிய நாயகி அதை அவளது முகத்தில் விசிறியடிக்கிறாள்… மேலும் படகை பலகை மீது மோதச் செய்து, அவளை தடுமாறி விழச் செய்து தன் வெறுப்பைக் காட்டுகிறாள்.. மேலும் உடனடியாக நாயகனின் இடத்துக்கு வந்து, அவன் குடித்துக் கொண்டிருக்கும் ஜீஸை தட்டிவிட்டு, அவள் கொடுத்த எல்லாப் பொருட்களையும் கலைத்துப் போடுகிறாள்… மேலும் ஆவேசமாக அவனது உதட்டையும் கடித்து ரத்தம் கசியச் செய்கிறாள்…


வீட்டிற்கு வந்து அழத் தொடங்கும் அவள்.. அழுதுகொண்டே தன் வீட்டின் ஜன்னலைத் திறக்க… அங்கு பாதி நீருக்குள் மூழ்கிய நிலையில் ஒரு பழைய பைக் நின்றுகொண்டிருக்கிறது… அவளது அழுகை தொடர்கிறது… அடுத்த நாள் காலை அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க… ஒரு படகில் இரண்டு போலீஸ் வருகின்றனர்… அதைப் பார்க்கும் நாயகன் பதட்டமடைகிறான்… மற்றொரு இளைஞன், (நாயகியை புணர்ந்தவனும்) போலீசைப் பார்த்து பதட்டமடைய… போலீஸ் அவனை நெருங்குகிறது… சில போட்டோக்களைப் பார்த்துக் கொண்டே அவனிடம் அடையாள அட்டை கேட்க… அவன் போலீசை தாக்கிவிட்டு தப்பிக்க முனைய… போலீஸ் அவனை சுட்டுப் பிடிக்கிறது… இதனைப் பார்த்துக் கொண்டே நாயகி தனது படகில் நாயகனின் வீட்டை நோக்கி வருகிறாள்… போலீஸ் நாம் தற்போது தேடுவது இவனை அல்ல… என்று சொல்லிக் கொண்டே அவனையும் படகில் ஏற்றியபடி அடுத்த படகு வீட்டை நெருங்குகிறது.. நாயகன் மீன் பிடிக்க வைத்திருக்கும் தூண்டிலை தன் தொண்டைக்குள் இறக்கி, அதனை வலிமை கொண்ட மட்டும் இழுத்து தற்கொலைக்கு முயல.. அவன் வாயில் இருந்து ரத்தம் கொப்பளிக்கிறது… அதே சமயம் நாயகி உள்ளே நுழைய… நாயகன் வலியில் துடித்துக் கொண்டிருக்க… சுற்றிலும் ரத்தம்…. பரிதவிக்கும் நாயகி என்ன செய்வது என்றே தெரியாமல் முழிக்க.. போலீஸ் மஞ்சள் நிற வீட்டை நெருங்கிவிடுகிறது… உள்ளே போலீஸ் நுழைய… நாயகி தரையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்… வேறுயாரும் இல்லை என்பதை உறுதி செய்து போலீஸ் சென்றுவிடுகிறது… நாயகி துரிதமாக தூண்டிலை கையில் எடுத்து… கழிவறை கதவைத் திறந்து நீருக்குள் அமிழ்த்து வைத்திருக்கும் நாயகனை மேலே இழுத்து காப்பாற்றுகிறாள்.. அவன் தொண்டைக்குள் சிக்கியிருக்கும் முட்கம்பிகளை பிடிங்கிவிட்டு, அவனது வலியைக் குறைக்க அல்லது திசைதிருப்ப.. அவனோடு உடலுறவு கொள்கிறாள்…. பின்பு அவனது வாய் திறந்த நிலையில் இருக்க… ஒரு குச்சியைக் கொண்டு முட்டுக் கொடுத்து.. காற்றோட்டமாக இருக்க விசிறிவிடுகிறாள்… தன் வீட்டிலிருக்கும் முன்னால் காதலன் அல்லது கணவனின் ஆடையை எடுத்துவந்து அவனுக்கு அணிவிக்கிறாள்…. பின்பு அவனை அந்த நீர்ப்பரப்பிலேயே நிலம் போல இருக்கும் ஒரு புற்கள் நிரம்பிய இடத்துக்கு அழைத்துச் சென்று சாப்பிட பழம் கொடுக்கிறாள்…


அடுத்த நாள் நாயகனைத் தேடி அதே இளம்பெண் வந்து நிற்க… அவளை வேறு ஒரு வீட்டுக்குள் வாயைக் கட்டி அடைத்து வைத்து, அந்த வீட்டை ஏரிக்குள் மிகதூரத்துக்கு நகர்த்திச் செல்கிறாள்… அன்று இரவு அந்த இளம்பெண் படகுவீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து நீரில் விழுந்து இறக்கிறாள்… காலையில் அவளைத் தேடி வரும் நாயகி அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்… அவளது உடலையும் பைக்கையும் கல்லைக் கட்டி நீருக்குள் இறக்கிவிடுகிறாள்.. இருப்பினும் அவளது மரணம் அவளை கலங்கச் செய்கிறது… அன்றிரவே அந்தப் பெண்ணை வைத்து தொழில் செய்யும் இளைஞன் வர… அவனுக்கும் நாயகனுக்கும் கைகலப்பாக….. நீரில் விழும் அவனை நீருக்குள் வைத்தே நாயகி கொலை செய்கிறாள்… அதைப் பார்த்து நாயகன் அதிர்ச்சி அடைய… அவனது துணையுடன் அந்த இளைஞனின் பிணத்தை படகில் ஏற்றி… அந்த இளம் பெண்ணை நீருக்குள் புதைத்த இடத்துக்கே கொண்டு சென்று பேட்டரியைக் கட்டி நீருக்குள் இறக்குகிறாள்… அங்கு அந்த இளம்பெண்ணின் செருப்பு இருப்பதைக் கண்டு நாயகன் உண்மையை புரிந்து கொள்கிறான்…. அடுத்த இரண்டு நாட்களும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருவரும் முழித்துக் கொண்டிருக்க… நாயகன் வழக்கம்போல் கம்பியில் ஒரு தூக்குமாட்டப்பட்ட பொம்மை செய்கிறான்… அதை நாயகி பிடுங்கி தண்ணீருக்குள் வீசுகிறாள்… இதனால் கோபம் கொள்ளும் நாயகன்.. தன் கோபத்தை மீன்களைப் பிடித்து அதை குரூரமாக வெட்டுவதில் காட்டுகிறான்… அப்படி அவன் வெட்டும் போது… ஏற்கனவே பாதி வெட்டிய நிலையில் விடப்பட்ட மீன் மீண்டும் தூண்டிலில் சிக்க… அதையும் பிடித்து வெட்ட கையை ஓங்குகிறான்… நாயகி அதைப் பார்த்துக் கொண்டிருக்க… மனமின்றி அதனை மீண்டும் நீருக்குள் விடுகிறான்… அவனை சமாதானம் செய்யும் எண்ணத்தில் நாயகி அவனைக் கட்டிப்பிடிக்க… அவளை திட்டிக் கொண்டே எட்டித் தள்ளுகிறான்… அவள் மீது வெறுப்பைக் காட்ட… அவள் கோபத்தில் நாயகனின் கூண்டுப் பறவையை நீரில் மூழ்கடிக்கிறாள்… நாயகன் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க… அவனைத் தடுக்கிறாள்… “நான் உன்னுடைய ஆண் அல்ல… நீ வேசி… நான் எப்போது வேண்டுமானாலும் உன்னை விட்டு போவேன்…” என்று கத்த அமைதியாக அந்த இடத்தை விட்டு நகலும் அவள் தன் படகை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள்… அன்றுஇரவு படகு வீட்டில் அடியில் கட்டப்பட்டு இருக்கும் டிரம்மை அவிழ்த்து அதைக் கொண்டு நீந்தி தப்பப்பார்க்கிறான் நாயகன்… டிரம் கைநழுவிச் செல்ல மூழ்கப் பார்க்கிறான்… அவன் முகத்தில் ஒளியை அடிக்கிறாள் நாயகி… தூரத்தில் படகில் அவள் நின்று கொண்டிருக்க.. இவனை நோக்கி தூண்டில் முள்ளை வீசுகிறாள்.. அதை அவன் பிடித்துக் கொள்ள… அவனை படகில் ஏற்றாமல் தூண்டிலைப் பிடித்தே நீருக்குள் வீடு வரை இழுத்து வருகிறாள்… படகு வீட்டில் ஏறியவுடன் அவன் கையில் குத்தி இருக்கும் முட்களை பிடுங்கி எடுக்கிறாள்… அவன் வெறியுடன் அவளைப் பிடித்து தள்ளிவிட்டு அவளது பெண்குறியில் பலம் கொண்ட மட்டும் தொடர்ச்சியாக எட்டி உதைக்கிறான்… அவள் வலி பொறுக்காமல் பற்களை கடித்துக் கொண்டே அழத் தொடங்க… இவன் ஆக்ரோசமாக அவளை புணர்ந்துவிட்டு…. உச்சநிலையில் அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு அழத் தொடங்குகிறான்….


அதிகாலை.. அருகே தூங்கிக் கொண்டிருக்கும் நாயகியின் முகத்தை ஒரு முறை வருடிவிட்டு, அமைதியாக படகை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான் நாயகன்.. அவன் தன்னை விட்டுப் போவதை உணர்ந்த நாயகி அழுது கொண்டே தூண்டில் முட்களை தன் பெண்ணுறுப்புக்குள் செலுத்தி, அதை பலம் கொண்ட மட்டும் பிடித்து இழுக்கிறாள்… வேதனையில் அலறுகிறாள்.. அவளது குரல் கேட்ட நாயகன் பாதிவழியில் இருந்து பதட்டமாக திரும்பி வருகிறான்… வெள்ளை பாவாடை முழுவதும் இரத்தம் விரவி இருக்க… தள்ளாடி தள்ளாடி நடக்கும் அவள் நீரில் விழுகிறாள்… நாயகன் அவளை தூண்டிலைக் கொண்டு இழுத்து கரைசேர்க்கிறான்… துவண்டு போய் இருக்கும் அவளது உடலை கட்டிக் கொண்டு அழத் தொடங்குகிறான்… அவளது பெண் உறுப்பை விரித்து அதில் சிக்கி இருக்கும் முட்களை பிடுங்குகிறான்…. அவன் பிடுங்கி வைத்த இரண்டு முட்கள் சேர்ந்து அன்பின் வடிவமாக மாறி நிற்கிறது… அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டு அவளது காலிடுக்கில் விசிறிவிடுகிறான்… அவளது தலையை வாரி அவளுக்கு பூச்சூடுகிறான்…


மீனைப் பாதி வெட்டி மீண்டும் நீருக்குள் விட்டு விளையாடும் அந்த பணக்காரன் அந்த இளம்பெண் நீரில் புதைக்கப்பட்ட இடத்தில் தன் அழகியுடன் மீன் பிடிக்கிறான்.. அவனது வாட்ச் தவறி நீருக்குள் விழ… லோக்கல் டைவர்ஸை அவன் அழைக்கிறான்…. அவர்கள் வந்து ஸ்கூட்டரை கண்டெடுக்கின்றனர்… இதை தூரத்தில் இருந்து பார்க்கும் நாயகனும் நாயகியும் விசைப்படகை ஓட்டை போட்டு மூழ்கடிக்கச் செய்துவிட்டு, மோட்டாரை எடுத்து மஞ்சள் படகுவீட்டில் பொருத்தி அந்த நீர்ப்பரப்பை விட்டு தங்கள் படகுவீட்டை மட்டும் நகர்த்திக் கொண்டே செல்கின்றனர்….. அந்த வீடு கண்ணுக்கு தெரியாத இடம் சென்று மறைகிறது… நீருக்குள் இருந்து எழும் நாயகன் புதர் மண்டிய நிலத்தில் புதரை விலக்கிக் கொண்டு சென்று மறைய…. அந்தப் புதர் ஒரு தீவு போலக் காட்சியளிக்க… படகில் நிர்வாணமான நிலையில் நீருக்குள் நாயகியின் உடல் மூழ்கி இருக்க…. அவளது முடிகள் அடர்ந்த பெண்ணுறுப்பு புதர்கள் அடங்கிய ஒரு தீவு போல் மெட்டபராக காட்சியளிக்க படம் முடிவடைகிறது….


இத்திரைப்படத்தின் காட்சிகளை மேலே இவ்வளவு விலாவாரியாக விளக்கியது, விமர்சனத்தின் பகுதிகளை விவாதிக்க அது ஏதுவாக இருக்கும் என்பதாலேயே…. மேலும் சிலர் படத்தில் வரும் சில காட்சிகளை மறந்திருக்கலாம்… பலர் திரைப்படமே பார்க்காமலும் இருக்கலாம்… அவர்களும் திரைப்படம் என்ன சொல்ல வருகிறது என்பதை எளிதாக உள்வாங்கிக் கொள்வதற்கும் தான்… இனி விவாதம்…

திரைப்படத்தின் மையமாக நான் பார்ப்பது, இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்டாள் அல்லது அதையே நமக்குப் பழக்கமான வார்த்தைகளில் சொல்வதானால் வேசித்தனம் செய்தாள், அல்லது துரோகம் செய்தாள் என்பதற்காக தனது மனைவியையோ அல்லது காதலியையோ அவளது ஆண் துணையுடன் சேர்த்தே கொன்றுவிட்டு, தலைமறைவாக தனியாக இருக்கும் ஒரு ஆடவனுக்கு, அவனைப் பற்றி எதுவுமே அறியாத ஒரு பெண் வாழ்க்கைத் துணையாக மாற விரும்புகிறாள்… அவள் எப்படிப்பட்டவள் என்றால், தன் உடலை விற்பதை தொழிலாகக் கொண்டவள் அல்லது தனக்கு தேவை ஏற்படும் போது தான் விரும்புபவர்களுடன் உறவு கொள்பவள்.. இப்படி வெவ்வேறு விளிம்புநிலை குணம் கொண்ட இரு மனிதர்கள் சந்திக்கும் புள்ளிதான் இந்த ஐசல்…

இந்த திரைப்படத்துக்கு ஏன் ஐசல் என்று பெயரிட வேண்டும்.. அது எதனைக் குறிக்கிறது என்று எண்ணினால் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது…. தீவு என்பது தனித்துவிடப்பட்ட நிலப்பகுதி.. சுற்றிலும் நான்குபுறம் நீரால் சூழப்பட்ட தன்னைப் போன்ற பிற நிலப்பரப்புகளுடன் எந்தவகையிலும் தொடர்ப்பில் இல்லாத ஒருவிதமான தனிமையின் உருவகம்தான் இந்தத் தீவு.. கூட்டம் கூட்டமாக குழுமி வாழும் நம் போன்ற சமூக குழுக்களில் கூட, நம் கண்ணுக்கு அப்பட்டமாக தெரியாமல், ஆனால் ரகசியமாக இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட தீவில் வாழ்கின்ற மக்கள் தான் அதிகம்… ஆணை புரிந்து கொள்ளாத பெண், பெண்ணின் உணர்வை மதிக்கத் தெரியாத மதிக்க விரும்பாத ஆண், இப்படி இருவரும் சேர்ந்து குடும்பமாக, ஆனால் தங்களுக்குள் தனித்தனி தீவில் தான் பெரும்பாலும் வசிக்கிறார்கள்.. இந்தக் கதையின் நாயகியும் ஒரு தீவைப் போலத்தான்… தன்னைப் போன்ற துயரங்களால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மனிதனைப் பார்க்காமல், அது போன்ற மனிதர்களுடன் தொடர்பில் இல்லாமல் தனித்து வாழ்கிறாள் அவள்.. அவளைச் சுற்றி இருக்கின்ற மக்கள் எல்லாம் உல்லாசத்திற்காக பொழுதுபோக்குக்காக மீன் பிடிக்க அவள் இருக்கும் இடத்தை தேடி வருபவர்கள்.. அவர்களுக்கு இடையே இவள் வசித்தாலும், அவள் தனித்து விடப்பட்ட தீவு போலத்தான்… அதனால் தான் நீருக்கு இடையே தனித்து விடப்பட்ட அவள் ஒரு தீவு போலக் காட்சியளிக்க… அந்த பிரேமிலேயே “தி ஐசல்” என்று டைட்டில் வருகிறது…

கிம் கி டுக்கின் பிற படங்களைப் போல இந்தத் திரைப்படமும் ஒரு பெண்ணின் உணர்வுகளையும், அதைப் புரிந்து கொள்வதில் இந்த உலகுக்கு அல்லது இன்னும் குறிப்பாகச் சொன்னால் ஆணுக்கு இருக்கின்ற உளவியல் ரீதியான சிக்கலையும் மிக அழுத்தமாக பேசுகிறது… இந்தக் கதையில் நாயகனான வரும் ஆண் தன் மனைவி/காதலியை வேறு ஆணுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால் என்பதால் அந்த ஆணோடு சேர்த்து கொன்றுவிட்டு, தலைமறைவான வாழ்க்கை வாழ்பவன்.. ஆனால் அவனுக்கு பெண்ணின் மீது தனிப்பட்ட வெறுப்பு இருப்பது போல் காட்சிகள் ஏதும் இல்லை… அவன் பெண்களை மதிக்கவே செய்கிறேன்… நாயகிக்கு ஒரு ஊஞ்சல் பொம்மையையும், இவனுடன் புணர்ச்சியில் ஈடுபடும் மற்றொரு இளம் பெண்ணுக்கு ஒரு சைக்கில் பொம்மையையும் பரிசளிக்கிறான்… அப்படி இருந்தும் அது அவனுக்கு பெண்ணின் மீதான உடல் தேவையாகத்தான் இருக்கிறது… என்னதான் அவன் அவர்களோடு பழகினாலும் தன் மனைவியைப் போலவே அவர்களும் வேசிகள் என்பதை அவனது மனம் மறுக்க முடியாத அளவுக்கு நம்புகிறது… அதனால் தான் அந்த இளம் பெண்ணுக்கு பணம் கொடுக்கிறான்… நாயகியை வேசி என்று வார்த்தைகளால் வதைத்துக் கொண்டே இருக்கிறான்… ஆக அவனுக்கு புணர ஒரு பெண் தேவை… சேர்ந்து வாழ்வதற்கு அல்ல… அப்படி ஒரு எண்ணம் அவன் மனதில் இல்லவே இல்லை… அல்லது தான் சேர்ந்து வாழ்வதற்கு தகுதியான பெண் இல்லவே இல்லை என்பது அவனது எண்ணம்… இவன் காமத்துக்கும் காதலுக்குமான தேவைகளில் இருக்கின்ற வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறும் ஒரு கதாபாத்திரம்..

நாயகியாக நடித்திருக்கும் பெண்ணின் வாழ்வியல் வரைபடம் மிக முக்கியமானது.. இந்த திரைப்படத்தில் அந்தப் பெண் வாய் திறந்து பேசுவதே இல்லை.. புறக்கணிப்பின் வலியை அதிகமாக உணர்ந்தவளாக காட்சிப்படுத்தப் படுவது நாயகனை விட நாயகிதான்… அந்தப் புறக்கணிப்பின் வலியால் அவள் செய்யும் சில செயல்கள் வன்மம் நிறைந்ததாகவும் இருக்கிறது… அதே நேரத்தில் அவள் தனக்கான மரியாதையை எல்லா இடங்களிலும் எதிர்பார்ப்பவள்… அவளது வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டு இருக்கும் அந்த பழைய பைக் அவளை விட்டுவிட்டு சென்ற காதலன் அல்லது கணவனின் பைக்காக இருக்கலாம்… அவள் ஆண்களிடம் பணத் தேவைக்காக செல்கிறாளா..? அல்லது உடல் சார்ந்த சுய தேவைக்காக செல்கிறாளா…? என்பதை புரிந்து கொள்வதும் கொஞ்சம் சிரமம் தான்… ஏனென்றால் அவள் பணத்துக்கு பெரிதாக மதிப்பளிப்பதில்லை… மேலும் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் நாயகனின் அறைக்கு செல்லும் அவள், அவன் முகத்தில் ஒளியை பாய்ச்சி பார்த்துவிட்டு, பின்பு அந்த ஒளியை அவனது உடலின் கீழ்ப்புறம் அடித்துப் பார்ப்பாள்… அதையும் எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.. அதுமட்டுமின்றி நாயகனின் அன்பை பெற வேண்டும் என்னும் எண்ணம் அவளுக்கு மேலோங்கத் தொடங்கும் சமயத்திலும் அவள் அடுத்தவனுடன் புணர்ச்சிக்காக படுப்பதை குற்றமென்று கருதாதவள்… அதனால் தான் அவளால் நாயகன் மீதான ஆரம்பக்கட்ட அன்பு ஏற்படும் நேரத்தில் கூட, அவனது தேவை சதைப் பிண்டமான ஒரு பெண்ணின் உடல் என்பதை உணர்ந்து, தான் இருக்க வேண்டிய இடத்தில் தனக்கு பதிலாக இன்னொரு பெண்ணை அவனது பசியாற்ற அவளால் அனுப்பமுடிகிறது… அவள் அந்த காமத்தின் தேவையை நன்கு அறிந்தவள்… அவள் எத்தனை நாள் ஆண் துணை இன்றி இருக்கிறாள் என்று நமக்கு சொல்லப்படுவதில்லை… அவள் அந்த காமத்தின் தேவையை அறிந்த கட்டம் அதுவாகக் கூட இருக்கலாம்… அதுபோல் அவளுக்கு அந்த காமத்தின் தேவைக்கும், காதலின் தேவைக்குமான வித்தியாசத்தை அறிந்து கொள்ள முடிகிறது… அதனால் தான் நாயகனின் காமத்தின் தேவையை பூர்த்தி செய்ய தனக்கு பதிலாக இன்னொரு பெண்ணை அனுப்பியவள்… காதலின் தேவையையும் பூர்த்தி செய்ய தனக்குப் பதிலாக அவள் வந்துவிடுவாளோ என்று பயமும் வெறுப்பும் கொள்கிறாள்… அவர்கள் இருவரும் புணருவதை கண் கொண்டு பார்த்தும் அவள் கோபம் கொள்வதில்லை.. ஆனால் நாயகன் மீது அந்த இளம் பெண் அன்பைப் பொழிவதை பார்க்கும் போதுதான், அவள் சூறாவளியாக வெடிக்கிறாள்.. அதுபோல தெரிந்தே செய்கின்ற குற்றத்துக்கான தண்டனை என்பதிலும், உயிர் கொலை என்பதிலும் சூழியலுக்கு உள்ள தொடர்பை அவள் அறிந்தவள்…. நாயகன் மீனைக் கொல்லாமல் நீரில் விடும் அடுத்த காட்சியில் அவள் தவளையை அடித்துக் கொல்கிறாள்… அதை பறவைக்கு உணவாக்குகிறாள்.. அந்த இளம் பெண்ணின் சாவுக்கு தானும் காரணமாக இருந்துவிட்டோம் என்பதை அறிந்து அவள் மனம் கவலை கொள்கிறது… ஆனால் அந்த இளம் பெண்ணை வைத்து தொழில் செய்தவனை நாயகி கொல்லும் போது அவளிடம் எந்த சஞ்சலமும் இருப்பதில்லை.. அது போல நாயகன் நாம் தூக்கில் தொங்கப் போகிறோம் என்பதை சொல்வது போல் தூக்கில் தொங்கும் பொம்மையை  செய்யும் போது, அதில் தனக்கு உடன்பாடு இல்லை… நாம் வாழ வேண்டும் என்பதை சொல்வது போல் அந்த பொம்மையை தண்ணீருக்குள் மூழ்கடிக்கிறாள்… இப்படி அந்தப் பெண்ணின் கதாபாத்திரம் மிகவும் முதிர்ச்சியானதாகவும், உக்கிரமானதாகவும் படைக்கப்பட்டு உள்ளது….

ஏற்கனவே சொன்னது போல் குறியீடுகளைப் பற்றிப் பேசாமல் கிம் கி டுக்கின் படங்கள் முடிவடையாது.. இதிலும் ஏகப்பட்ட அழுத்தமான குறியீடுகள் இடம் பெறுகின்றன… மீன் பிடிக்கும் தூண்டில் முள், பாதி துண்டிக்கப்பட்டு உயிரோடு சுற்றிக் கொண்டிருக்கும் மீன், கூண்டில் இருக்கும் பறவை, நாயகியின் பெண் உறுப்பு, நாயகியோடு இருக்கும் நாய் என பல முக்கியமான அழுத்தமான குறியீடுகள் இந்த திரைப்படத்திலும் இடம் பெறுகின்றன.. அந்த நாயும் அந்த கூண்டில் இருக்கும் பறவையும் நாயகன் மற்றும் நாயகியின் தனிமையை ஈடுசெய்யும் உயிரினங்கள்.. இங்கு எல்லோருக்குமே தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற பயம் இருக்கிறது.. ஏன் ஒரு கட்டத்தில் நாயகிக்கும் கூட அந்த பயம் தொற்றிக் கொள்கிறது… தனக்கு வெகு நாட்களுக்கு பின் கிடைத்த துணையையும் ஒருத்தி பறித்துக் கொள்வாளோ என்கின்ற பயம்… ஆனால் அதை முழுக்க முழுக்க பயம் என்று மட்டும் வகைப்படுத்த முடியாது…. ஏனென்றால் நாயகனைப் பற்றிய உண்மையை வெளியே தெரியாமல் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையாகக் கூட அது இருக்கலாம்.. அந்த இளம் பெண்ணை நாயகி கொல்ல நினைப்பது இல்லை… பயமுறுத்தும் எண்ணத்துடன் அடைத்து வைக்கவே விரும்புகிறாள்.. அவளது மரணம் எதிர்பாராதது.. 

ஆனால் நாயகன் படத்தில் ஆரம்பத்தில் வரும் போது தன்னுடன் கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு அழகிய பறவையை கொண்டு வருகிறான்… அது அவனது தனிமையை ஈடு செய்யும் பொருள் தான்… அது போலத்தான் நாயகிக்கு ஒரு நாய்…. ஆனால் இரண்டுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.. நாயகன் கூண்டில் அடைக்கப்பட்ட பறவையை வைத்திருக்க.. நாயகி சுதந்திரமாக ஓடி ஆடும் ஒரு நாயை வைத்திருக்கிறாள்… அதை எல்லா நேரமும் அவள் கட்டிப் போடுவதில்லை…. நாயகன் தன் பறவையின் பாதுகாப்பைப் பற்றி பெரிதும் கவலை கொள்கிறான்… உதாரணமாக மழை பெய்யும் போது அதை பாதுகாப்பாக எடுத்து வீட்டுக்குள் வைப்பதும்… முதல் காட்சியில் படகில் வரும் போது பறவைக்கு குளிராதபடி அதை கம்பளியால் மூடிக் கொள்வதும் அவனது பாதுகாப்பு நடவடிக்கைகள்… ஆனால் அதன் பசியைப் பற்றி அவனுக்கு கவலையே இல்லை…. ஆனால் அதன் பசியை அறிந்து அதற்கு ஒரு தவளையை கொன்று உணவாக்குபவள் நாயகி தான்… கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் பறவையென்பது உள்ளீடாகப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கான அடையாளம்…. பாதுகாப்பு போர்வைக்குள் வைக்கப்பட்டு இருக்கும் ஒரு அழகான பெண்… ஆணுக்கு அந்தப் பெண்ணின் மீதான பாதுகாப்பின் மீதுதான் கண்.. அவனுக்கு அவளது பசியைப் பற்றி கவலை இல்லை… எல்லாவிதமான பசியைப் பற்றியும் தான்… அதுபோல அந்த நாய் நாயகிக்கு ஆணுக்கான உள்ளீடு… நாயகன் அந்த ஊஞ்சல் பொம்மையை கொடுக்கும் போது, அவனோடு ஆடிப்பாடி கழிக்க முடியாத அந்த சந்தோசத்தை நாயுடன் தான் ஆடிப்பாடி கழிக்கிறாள்… அதுபோல நாயகன் தன்னை வன்புணர்ச்சி செய்ய முயன்றதையும், மனுசியாக எண்ணி பழகாததையும் பொறுக்க முடியாத அவள்.. நாயகனை அடிக்க முடியாமல் தன் நாயை தனித்த படகு வீட்டில் கட்டிப் போட்டு, அந்த நாயைத் தான் நாயகன் பார்க்கும் படி அடிக்கிறாள்…


அந்த கூண்டில் அடைக்கப்பட்ட பறவையை பெண்ணுக்கான உள்ளீடாகப் பார்க்கும் போது, அதன் பசியறிந்து அதற்கு உணவு கொடுப்பவள் நாயகி என்பதையும் நாம் புரிந்து கொண்டாலும் மற்றொரு சம்பவம் நமக்கு ஆச்சரியம் கொடுக்கும். அது அவள் ஏன் அந்த கூண்டிலிருக்கும் பறவையை தண்ணீரில் எறிந்து கொன்றாள் என்பது… அந்தக் குறிப்பிட்ட காட்சியை புரிந்து கொள்வதற்கு முன் மற்றொரு காட்சியையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்… அது அந்தப் பணக்காரன் கொழுத்த மீனை எடுத்து அறுத்துப் புசித்து அப்படியே மீண்டும் நீரில் நீந்தவிடும் காட்சி… இந்தக் காட்சி ஏன் வைக்கப்பட்டது என்று யோசித்தால் இரண்டு காரணங்கள் கிடைக்கும்… 

ஒன்று மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் வன்மம் மற்றும் குரூரம் இவைகளை தெளிவுபடுத்த…. சந்தோசமாக இருக்கும் போதும் கோபமாக இருக்கும் போதும் மனிதன் வன்மம் மற்றும் குரூரம் நிறைந்த செயல்களில் ஈடுபடுகிறான்…. சந்தோசமாக இருக்கும் போது வன்மமான செயல் புரிந்தவன் அந்தப் குண்டு பணக்காரன்… கோபத்தில் வன்மமான செயல் புரிந்தவள் நாயகி, அந்தப் பறவையை கொன்றது, மீனைக் கரண்ட் ஷாக் வைத்துக் கொள்வது இப்படி.. ஆனால் அங்கு பாதியாக நறுக்கப்பட்ட அந்த மீன், ஏன் நாயகன் மீனைப் பிடித்து கொடூரமாக கொன்று கொண்டு இருக்கும் போது வர வேண்டும்..? என்று யோசிக்கும் போது நமக்கு அந்தக் காட்சிக்கான இரண்டாவது காரணமும் கிடைக்கும்.. 

இரண்டு விதமான ஆண்கள் இங்கு இருக்கிறார்கள்… ஒன்று பெண்களை பாதுகாக்க வேண்டிய பொக்கிசமாக கருதுபவர்கள்…. கூண்டுப் பறவை போல… இரண்டாவது அவர்களை சுதந்திரமாக ஆனால் தங்கள் கைக்கு பிடிப்பதற்கு எளிதான நீர்ப்பரப்பு போன்ற தளத்தில் விட்டு, தங்களுக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் அவர்களைப் பிடித்து கொடூரமாக சுவைக்க விரும்புபவர்கள்… அந்த குண்டு பணக்காரன் குரூரமாக மீனை சுவைப்பதைப் போல…. இங்கு அந்த மீன் பெண்ணுக்கான குறியீடு… மேலே பணக்காரனுடன் அமர்ந்திருக்கும் அந்த அழகியும் அந்த மீனை சுவைக்கவே செய்கிறாள்… மீனைப் பிடிக்க மீன் வடிவிலே தூண்டில் இருப்பதைப் போல… அவளும் அந்த மீனைப் போல் கொஞ்ச கொஞ்சமாக செத்துக் கொண்டிருப்பவள் என்பதை அவள் அறியமாட்டாள்… மேலும் அந்த பாதி உடல் நறுக்கப்பட்ட மீன் நாயகனின் கையில் சிக்கும் போது அது நாயகிக்கான குறீயீடாக மாறுகிறது… அதை நாயகன் பிடிக்கும் போது, அவன் நாயகியை கொல்வதற்கான கோபத்துடன் இருப்பவன்.. அந்தக் கோபத்தைத் தான் அவன் மீன்கள் மீது காட்டிக் கொண்டு இருக்கிறான்… அந்த பாதி அறுபட்ட மீன் அவன் கையில் கிடைக்கும் போது அதை வெட்டவும் அவன் கை ஓங்குகிறான்…. அதை நாயகியும் குறுகுறுப்புடன் பார்க்கிறாள்… அதை அவன் பிழைக்க விட்டுவிடுகிறான்… நாயகி ஆசுவாசம் அடைந்தவளாக அவனைத் தழுவ… நாயகன் வார்த்தைகளால் அவளை சாகடிக்கிறான்…. இதற்கு நீ என்னைக் கொன்றிருக்கலாம் என்பதை சொல்லுவது போல் அந்த பறவையை நீரில் எறிகிறாள்…  ஆக இங்கு அந்தப் பறவை, அறுபட்ட மீன் இரண்டுமே நாயகிக்கான குறியீடு…


ஆண் என்பவன் அவன் பேசும் குரூரமான வார்த்தைகளால் அறியப்படுபவன்.. அதன் அடையாளமாகத் தான் அவன் தன் தொண்டைகளை அறுத்துக் கொண்டு சாக முற்படுகிறான்…. ஆனால் பெண் என்பவளோ தென் கொரியாவிலும் நம் நாட்டைப் போல பெண்ணுறுப்பால் அறியப்படுபவள் தான் போலும்… அதனால் தான் நாயகி தன் பெண்ணுறுப்பை அறுத்துக் கொண்டு சாக முற்படுகிறாள்… அங்கு அந்தப் பெண் உறுப்பு என்பது பெண்ணுக்கான குறியீடாக மாறி நிற்கிறது… நாயகன் தொடர்ச்சியாக நாயகியின் பெண்ணுறுப்பின் மீது உதைப்பது போன்ற காட்சியையும் நாம் கடந்து வருகிறோம்… அடுத்த நிமிடமே அவன் அந்த உறுப்போடு புணர்தலில் ஈடுபட்டு, அதன் முடிவில் பெருங்குரலெடுத்து அழுகிறான்…. இது அவன் பெண்ணை புரிந்து கொள்ள முடியாத தன் தோல்வியை ஒப்புக் கொள்வதாக அமைகிறது… அதுபோல் அவன் எட்டி உதைப்பதென்பது பெண்ணுறுப்பின் மீது கொண்ட கோபமாக கொள்ளக்கூடாது… அது பெண்ணின் மீதான கோபம்… பெண்ணோடு சேர்ந்தும் வாழமுடியாத… அவள் இல்லாமலும் வாழ முடியாத அவனது இயலாமையைக் குறிக்கிறது… அதுமட்டுமின்றி நாயகி நாயகனின் உயிரையே காப்பாற்றியவளாக இருந்தாலும், அவள் ஒரு வேசி என்னும் எண்ணம் நாயகனிடம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது… அதைத் தான் அவனது வார்த்தைகளும் உணர்த்துகிறது.. வேசித்தனம் செய்த மனைவியை கொன்ற அவனால் வேசியையே மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை….


இறுதியாக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன்… அதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.. நாயகன் சுற்றிலும் நீர் இருக்க… நடுவில் நிலம் போல புதர் மண்டிய பரப்பு இருக்க…. புதரை விளக்கிக் கொண்டு உள்ளே சென்று மறைந்து போகிறான்… அந்தப் புதர், சுற்றிலும் நீர் சூழ்ந்த ஒரு தீவு போல காட்சியளிக்கிறது… அடுத்த காட்சியில் படகில் நீரில் மூழ்கியவாறு நாயகியின் உடல் நிர்வாணமாக கிடக்க… அவளது பெண்ணுறுப்பு புதர்கள் அடங்கிய ஒரு நிலப்பரப்பு போல தீவு போல காட்சியளிக்க படம் முடிகிறது…. இதனை சிலர் அந்தப் பெண் இறந்துவிட்டாள் என்றும், நாயகன் அவளை கொன்றுவிட்டான் என்றும் அல்லது நாயகி தன்னைத் தானே கொன்று கொண்டாள் என்றும் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு.. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.. ஏனென்றால் மேற்சொன்ன மூன்று நிகழ்வுகளையும் கதையோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதற்கான தேவையோ… அவசியமோ கதைப்பரப்பில் இல்லை என்றே தோன்றுகிறது… ஆக அந்தக் காட்சியை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன்… இந்தக் காட்சியை தனித்து புரிந்து கொள்வதை விட… சில காட்சிகளோடு சேர்ந்து புரிந்து கொள்வது இன்னும் எளிதாக இருக்கும்…


நாயகன் நாயகியின் பெண்ணுறுப்பின் மீது வன்மம் கொண்டு உதைக்கிறான் அல்லவா…? ஏற்கனவே சொன்னது போல் அது பெண்ணுறுப்பின் மீது கொண்ட கோபம் அல்ல.. பெண்ணின் மீது கொண்ட கோபம்… அந்தப் பெண்ணின் மீது வேசி என்ற முட்கள் நிரம்பிய வார்த்தைகளை அவன் வீசுகிறான்…. அடுத்த காட்சியில் அவன் வீசிய அந்த முட்கள் தான் நாயகியின் பெண்ணுறுப்பின் மீது (பெண்ணின் மீது) குத்திக் கிழித்து அவளை மரணத்தை எதிர்கொள்ள தயாராக்குகிறது… பின்பு அவன் மனம் திருந்தி அவன் எரிந்த முட்களை அவனே அகற்றுகிறான்…. ரத்தம் தோய்ந்த அந்த முட்களை பெண்ணுறுப்பில் இருந்து (பெண்ணிடம் இருந்து) அவன் அகற்றி தரையில் வைக்கும் போது கூரான அந்த முட்கள் இணைந்து அன்பிற்கான ஹார்ட்டின் வடிவமாக அது மாறுவதையும் நாம் காண்கிறோம்.. அடுத்து இருவரும் சேர்ந்து அந்த மஞ்சள் நிற படகு வீட்டுக்கு வெள்ளையடிக்கும் போது இருவரது கையிலும் தனித்து இருக்கும் அந்த ப்ரஸ் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைவதையும் காண்கிறோம்… இப்போது க்ளைமாக்ஸ் காட்சிக்கு வாருங்கள்… பெண்ணுறுப்பை பெண்ணாக உருவகப்படுத்தி அதை வன்மம் கொண்டு உதைத்தவன், அந்தப் பெண்ணுறுப்புக்குள்ளாகவே பெண்ணுக்குள்ளாகவே இரண்டறக் கலந்து தொலைந்து காணாமல் போகிறான்… இப்போதும் அது சுற்றிலும் நீர் அடங்கிய தனித்த தீவாகவே காட்சியளிக்கிறது… அந்த தீவுக்குள் அவனோ அவளோ தனித்து இல்லை… இரு உயிராக சேர்ந்து இருக்கின்றனர் என்பதே… அதே புதர் மண்டிய பரப்புக்குள் ஏற்கனவே நாயகனை ஒரு முறை அவள் அழைத்துச் சென்று பழத்தை புசிக்கக் கொடுத்ததையும் நாம் நினைவு கூற வேண்டும்… ஆக நாயகியின் எண்ணம் துயரங்களால் தனித்த தீவில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நாம், நம்மைப் போலவே துயரத்தால் பீடிக்கப்பட்டு இருக்கும் நாயகனையும் நம்மோடு நம்முடைய தீவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே… அந்தத் தேவையே, அந்த ஆசையே இறுதிக் காட்சியில் நிறைவேறுவதாக நான் பார்க்கிறேன்….

இயக்குநர் கிம் கி டுக் இயல்பாகவே ஒரு ஓவியர்.. இதில் அவர் கலை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்… அதனால் ஒவ்வொரு ப்ரேமும் மிக அற்புதமான ஓவியங்களாக காட்சியளிக்கின்றன.. அது போல் தான் படத்தின் பிண்ணனி இசையும்… பெரும்பாலும் பிண்ணனி இல்லாமல் நகரும் திரைப்படம் மிக முக்கியமான தருணங்களில் அற்புதமான பிண்ணனி இசையுடன் ஒலிக்கிறது… நாயகியாக நடித்திருக்கும் Seo Jeongன் நடிப்பு மிரட்டக் கூடிய நடிப்பு… இத்தனைக்கும் படத்தில் இவருக்கு ஒரு வசனம் கூட கிடையாது… அப்படி இருந்தும் காட்சிக்கு ஏற்றார் போல் உணர்ச்சிகளைக் கொட்டுகிற இவரது முகபாவனைகள் அற்புதமானது..

நீங்களும் திரைப்படத்தைப் பாருங்கள்… நாம் மீண்டும் விவாதிக்கலாம்…. விவாதத்துக்காக இந்த தளம் விரிந்துகிடக்கிறது…..

அடுத்தப் பதிவு

கிம் கி டுக்கின் SAMARITAN GIRL (2004)