Sunday, 14 September 2014

சிகரம் தொடு:

இயக்குநர் கெளரவ் அவர்களின் முதல்படமான தூங்கா நகரம் திரைப்படம் தவறான திரைக்கதை உத்தியை கையாண்டு ஒருவிதமான எரிச்சலை கொடுத்த திரைப்படம் என்பதால், அவரது இரண்டாவது படமான இந்த “சிகரம் தொடு திரைப்படத்தின் மீது எனக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது… ட்ரைலரையும் நான் பார்க்கவில்லை.. அதனால் கதையைப் பற்றி எந்தவிதமான தகவலும் தெரியாதவனாகத்தான் படம் பார்க்கச் சென்றிருந்தேன்.. ஆனால் ஒரு சின்ன ஆச்சர்யம்.. படம் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது… இப்பொழுதெல்லாம் இந்த “படம் நன்றாக இருந்தது, படம் நன்றாக இல்லை” என்பதான சொல்லாடல்களை பயன்படுத்தும் போது, என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன், எதன் அடிப்படையில் இது நன்றாக இருக்கிறது, அல்லது எதன் அடிப்படையில் இது நன்றாக இல்லை என்று..


எனக்கு இதற்கு பதிலாக கிடைப்பவை இவைகள் தான், நான் நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்று இரு தரப்புகளாகப் பிரித்து அவைகளுக்கு இடையே கிழிக்கின்ற கோடு பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது..“ ஒரு திரைப்படம் அது என்ன சொல்ல வருகிறது என்பதை வைத்தோ, அத்திரைப்படம் காட்டும் ஒப்பனை இல்லாத வாழ்வியலை வைத்தோ, அத்திரைப்படத்தின் சிறப்பான திரைக்கதையை வைத்தோ அல்லது பழக்கப்பட்ட கதையாகவே இருந்தாலும் அந்தப் பழக்கப்பட்ட கதைகளைக் கூட சுவாரஸ்யம் குன்றாத தன்மையுடன் சொல்கின்ற வித்தையை கொண்டிருக்கும் திரைப்படங்கள் எல்லாம் “நன்றாக உள்ளது” என்ற பிரிவில் விழுந்துவிடுகின்றன… இவை எதுவுமே இல்லாமல் வெறும் வணிகத்தை மட்டுமே குறி வைத்து எடுக்கப்படும் படங்களோ அல்லது மேற்சொன்ன அம்சங்களில் ஏதேனும் ஒன்றை (கதை, திரைக்கதை, வாழ்வியலோ, செய்தியோ அல்லது சுவாரஸ்யமோ) வைத்திருந்து அதை தெளிவாக சிறப்பாக கையாளாமல், மெத்தனமாக மேலோட்டமாக கையாளும் திரைப்படங்கள் எல்லாம் “நன்றாக இல்லை” என்கின்ற பிரிவுக்குள் விழுந்துவிடுகின்றன.. தமிழில் பெரும்பாலும் “பார்க்கலாம் என்றோ ஓரளவுக்கு நன்றாக இருக்கின்றது என்றோ” சொல்கின்ற படங்கள் பெரும்பாலும் அந்த கடைசித் தேவையான “குறைந்தபட்ச சுவாரஸ்யம்” என்கின்ற விதியைத்தான் பூர்த்தி செய்கின்றன…. அரிமா நம்பி வரிசையில் அடுத்த குறைந்தபட்ச சுவாரஸ்யத்துடன் வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த சிகரம் தொடு..

ஆனால் ஒப்பீட்டு அடிப்படையில் பார்த்தால், தொய்வில்லாத திரைக்கதை, தொழில்நுட்ப லாவகம் இவைகளின் அடிப்படையில் அரிமா நம்பி, சிகரம் தொடுவை விட ஒரு படி உயர்ந்துவிடுகிறது… இருப்பினும் அரிமா நம்பியை விடவும் அமர காவியமும், அமர காவியத்தை விடவும் சலீமும், சலீமை விட ஜிகர்தண்டாவும் உயர்ந்த படிநிலைகளில் இருப்பவை… இதுதான் நான் நன்றாக இருக்கிறது என்று பிரிக்கின்ற திரைப்படங்களில் இருக்கும் இறங்குநிலை படி வரிசை.. சரி தேவையே இல்லாமல் எதற்கு இதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால், எனது பதிவுகளை படிக்கும் நீங்கள் நான் எதன் அடிப்படையில் படங்களை தரம் பிரிக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டீர்களானால், நான் நன்றாக இருக்கிறது, ஓரளவு நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்று சொல்கின்ற படங்கள், உங்களது ரசனைக்கு எப்படி ஒத்துப் போகுமென்பதை புரிந்து கொள்வீர்கள் என்பதால் தான்… சரி கதைக்கு செல்வோம்…

இது என்னமாதிரியான திரைப்படம் என்றால், பழகிப்போன கதை அமைப்பான ஹீரோ வில்லனை வெற்றி கொள்வது என்கின்ற சூத்திரத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும், ஆனால் மேலே சொன்னபடி குறைந்த பட்ச சுவாரஸ்யத்தைக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் அவ்வளவே…. நாயகனுக்கு அவனது இளம் பிராயத்தில், அவனது தந்தை காக்கி சீருடை அணிந்து காவலராக பணிபுரிவது பெருமிதம் தருகிறது… தானும் ஒரு போலீஸாகி சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறான்… ஆனால் ஒரு கலவரத்தில் காலை இழந்து, அதன் பிண்ணனியில் தன் மனைவியையும் இழக்கும் தன் தந்தையை இந்த சமூகம் கண்டு கொள்ளாமல் விட்டுவிடும் போது, அந்த வலியை ஜீரணிக்க முடியாத அந்தச் சிறுவன் தன் போலீஸாகும் கனவுகளுக்கு மனதளவில் மூட்டை கட்டுகிறான்… இருப்பினும் தன் தந்தையின் மகிழ்சிக்காக அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயங்கிக் கொண்டே வேறு வேலையில் சேர முயலுகிறான்.. அவன் போலீஸ் ஆனானா..?? ஆகவில்லையா….?? ஆகவில்லை என்றால் ஏன் என்று சொல்ல வேண்டியதில்லை… ஆனான் என்றால் ஏன் என்று சொல்லவேண்டும் அல்லவா…?? அதைத் தான் திரையில் பல லாஜிக் உறுத்தல்களோடு சொல்லி இருக்கிறார்கள்…

ஏ.டி.எம்மில் நடக்கும் விதவிதமான திருட்டுகள் எப்படி நடக்கின்றது, அதிலிருந்து நம்மையும் நம் பணத்தையும் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பாக ஓரிரு வருடங்களுக்கு முன்னால் வந்த செய்திகளை அழகாக தொகுத்து திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள்..

அப்பாவாக சத்யராஜ், மகனாக விக்ரம் பிரபு.. சத்யராஜ்க்கு ராஜா ராணி திரைப்படத்துக்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம்.. ஆனால் அதே கதாபாத்திரம் இவர் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாருப்பா என்கின்ற அளவுக்கு காமெடியாக மாறிப் போவதும் சோகமே.. முதல் பாதியில் இவர் வருகின்ற இடங்கள் தான் படத்துக்கான எனர்ஜி.. விக்ரம் பிரபுவிடம் சீறிய வளர்ச்சி தெரிகின்றது… கதை தேர்வு செய்யும் விதத்தில் சற்று கவனிக்க வைக்கிறார்…. நடிப்பிலும் ஒரு சின்ன முன்னேற்றம் இருக்கிறது… ஆனால் இன்னும் அதன் உச்சத்தை இவர் தொடவில்லை என்பதும் உண்மை… நாயகியாக மோனல் கஜ்ஜார்… ஏதோ ஒரு கதாநாயகியின் சாயல் இவரிடம் தெரிகிறது…. யார் என்று தான் தெரியவில்லை… சில காட்சிகளில் அழகாகத் தெரிகிறார்… வழக்கம் போல் காதலில் விழுந்து காதலனின் பின்னால் சுற்றும் கதாபாத்திரம் என்பதால், நடிப்பு பற்றி சொல்லிக் கொள்ள பெரிதாக ஒன்றும் இல்லை.. சதீஷ், சிங்கம் புலி, மனோகர், கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கெளரவ் என ஏகப்பட்ட பாத்திரங்கள்…


படத்தில் எனக்குப் பிடித்த அம்சமே… தன் தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பால் நாயகனுக்கு ஏற்படும் அந்த உளவியல் பிண்ணனி தான்… நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் காவலர்களையும், ராணுவ வீரர்களையும் நம் சமுதாயம் பெரிதாக கண்டு கொள்வதே இல்லை என்கின்ற வலிதான்… ஆனால் இந்த மனப்போராட்டங்களில் இருந்து மீண்டு வந்து, போலீஸ் வேலையின் புனிதத்தையும், அதன் தேவையையும், அதன் பலத்தையும் அறிந்து கொண்டு நாயகன் மீண்டும் அந்த வேலையை கையில் எடுக்கிறான் என்றுதான் கதை இருந்திருக்க வேண்டும்.. ஆனால் நாயகன் போலீஸ் வேலையை வெறுப்பதற்கான காரணத்தையே இயக்குநர் பாதியில் மறந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது… அது இரண்டாம் பாதியில் சராசரியான ஹீரோ வில்லன் மோதலாக மட்டுமே பயணிக்கிறது..  நாயகன் போலீஸ் வேலையை மீண்டும் கையில் எடுக்கும் இடத்தில் இருக்க வேண்டிய அந்த கணம் கொஞ்சம் கூட திரைக்கதையில் இல்லை…

அதுபோல லாஜிக் பார்க்கத் தொடங்கிவிட்டால் படத்தில் எல்லா சுவாரஸ்யங்களும் கெட்டுவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.. நாயகியின் தந்தை எதனை நம்பி ஒரு மாதம் மட்டும் வேலை பார் என்கிறார்… இயக்குநரின் திரைக்கதையின் படி ஒரு மாதத்துக்குள் அவன் வேலையை விட முடியாத சூழல் வந்துவிடும் என்பதை நம்பித்தானா…?? அதுபோல அவர்களை முதல் முறை பிடிக்கும் போதே அவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருக்குமே…??? அதற்குப் பின்னரும் எப்படி அவர்கள் சாவகாசமாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து பழி வாங்கத் தொடங்குவார்கள்..?? அவர்கள் முதல்முறை பிடிபடும் போது, இவ்வளவு க்ரிட்டிகலான இஸ்யூவை எந்த உயரதிகாரியும் இல்லாமலேவா டீல் செய்வார்கள்… அவர்களுக்கு கொடுக்கப்படும் பந்தோபஸ்தை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது… கையும் களவுமாக பிடிபட்ட பின்னரும் அவர்களை விசாரனை கைதிகளுக்கான சிறையில் அடைப்பது ஏன்..?? இப்படி ஏகப்பட்ட லாஜிக் உறுத்தல்கள்..

அதுபோல வில்லன்கள் மிகவும் பலகீனமானவர்களாக தெரிகிறார்கள்… முதலில் திருடு போவது 5 இலட்சம் பணம்… இரண்டாவதாக திருடு போவது 40 இலட்சம் என்கிறார்கள்… இப்படி சில்லறை திருடுகளில் ஈடுபடும் குற்றவாளிகள் தான் வலிய வந்து போலீஸ் அதிகாரியை பழிவாங்க வேண்டும் என்று சைக்கோ லெவலுக்கோ அல்லது ரவுடிகள் போலவோ திட்டம் தீட்டுவார்கள் என்கின்ற கேள்விகள் எல்லாம், என்னதான் அந்த குற்றவாளி கோபமானவன் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு சென்றாலும் வந்துகொண்டே தான் இருக்கின்றன… அதுபோல அந்த ஹரித்துவார் காதல் எபிசோடுகளும் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பை ஏற்படுத்துகிறது… அதுபோல எரிச்சலை கொடுக்கும் மற்றொரு கதாபாத்திரம் காமெடிக்காகவே நுழைக்கப்பட்டு இருக்கும் அந்த எஸ்.ஐ கதாபாத்திரம்… இமானுக்கு என்ன ஆயிற்றோ…??? பிண்ணனி இசை என்ற பெயரில் ஒரே இரைச்சலை கொடுத்திருக்கிறார்… உலகநாத்தின் கேமராவும் பிரவீனின் எடிட்டிங்கும் செய்நேர்த்தியுடன் இருக்கிறது…


மொத்தத்தில் இந்த சிகரம் தொடு குழுவினர், சமீபத்தில் வந்த பர்மா, பொறியாளன் போன்ற பட குழுவினரை ஒப்பிடுகையில் கண்டிப்பாக சிகரம் தொட்டிருக்கிறார்கள் என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.. அதே நேரத்தில் அது கொஞ்சம் உயரம் குறைவான சிகரம் தான்…. என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்…

Saturday, 13 September 2014

பர்மா:

கார் சேசிங்க் கேள்விப்பட்டு இருப்பீர்கள்… படங்களில் பார்த்தும் இருப்பீர்கள்… கார் சீசிங்க் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா…?? அதாவது கார் லோன் போட்டு கார் வாங்கிவிட்டு, அதன் மாதத் தவணையை செலுத்தாமல் டிமிக்கு கொடுத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ காரை லவட்டிக் கொண்டு வருவது தான் கார் சீசிங்க்… கேட்கும் போதே படு த்ரில்லாக இருந்தது இந்த லைன்.. ஏனென்றால் சிலர் அப்படி வாங்கிய காரை பலவிதமான சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்துவார்களாம்… அதுபோன்ற பார்ட்டிகளிடம் இருந்து காரை களவாடி கம்பெனியிடம் சேர்ப்பது என்பது லேசுபட்ட காரியம் அல்ல… உயிரே போனாலும் கேட்பதற்கு இல்லை… ஏனென்றால் இவர்கள் இப்படி அடி ஆட்களைக் கொண்டு காரை தூக்குவது என்பதும் சட்டவிரோதமானதுதான்… அப்படி காரைத் தூக்கும் போது வரும் பிரச்சனைகளுக்காக போலீஸிடம் எல்லாம் போகவும் முடியாது… கிட்டத்தட்ட ரவுடி தொழில் போன்று உயிரைப் பணயம் வைத்து செய்யும் தொழில்தான் இது…


இது போன்ற வேலை செய்யும் ஒருவரை சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு எங்கள் இயக்குநருடன் வைத்து சந்தித்தோம்… அப்போது அவர் சொன்ன பல சுவாரஸ்யமான தகவல்களில் சில படு காமெடியாகவும் பல பயங்கர த்ரில்லாகவும் இருந்தன… அங்கு இருந்த எல்லா உதவி இயக்குநர்களுமே நினைத்துக் கொண்டோம் இதுவொரு அருமையான நாட் என்று… ஆனால் இதே பின்புலத்தை மையமாக வைத்து “பர்மா” என்ற பெயரில் ஒரு படம் வருகிறது என்பது தெரிந்ததும் எல்லோருக்கும் புஸ் என்று ஆகிவிட்டது… அதனால் தான் இந்தப் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பும் பலவிதமான கற்பனைகளும் இருந்தன… ஆனால் அதில் எந்தவிதமான எதிர்பார்ப்பையும் இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மை…

படம் பார்ப்பதற்கு முன்னர் இது போன்ற கார் சீசிங் பற்றி எனக்கு என்ன தெரியும் என்றால்,  கள்ள சாவி போட்டோ அல்லது ஏதாவது மெல்லிய கம்பிகளை வைத்து திறந்தோ காரைக் கடத்திக் கொண்டு வருவார்கள் என்ற அளவுக்கு மட்டுமே எனக்கு படம் பார்க்கும் முன் தெரிந்து இருந்தது…. படம் பார்த்த பின்னரும் அதே அளவுக்கு மட்டும் தான் கார் சீசிங் பற்றி நாம் தெரிந்து இருப்போம் என்பது தான்… இந்தப் படத்தின் தோல்விக்கு அடையாளம்… காரை திருடுவதிலோ அல்லது எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதிலோ எந்தவிதமான புதுமையோ புத்திசாலித்தனமோ எதுவுமே இல்லாமல் ஒரு படம்…. இதில் நாயகன் 28 காரைத் தூக்குகிறான் என்பதற்கு சிலைடு போட்டு ஒன்று, இரண்டு என்று வேறு காட்டி வெறுப்பேத்துகிறார்கள்.. காரை எப்படி தூக்குகிறான் என்பதை காட்டச் சொன்னால்… நமக்கு எத்தனை காரை அவன் தூக்குகிறான் என்றுதான் காட்டுகிறார்கள்… இன்று ஒரு படம் பார்த்தேன் என்கின்ற உணர்வே இல்லாமல் இருக்கிறது…

கார் சீசிங்க் என்பதை பின்புலமாக வைத்துக் கொண்டு, அதில் எதற்கு யாரோ கொள்ளையடித்த பணம் ஒவ்வொரு இடமாக கைமாறிக் கொண்டே செல்கிறது என்கின்ற அலுத்துப் போன மியூசிக் சேர் விளையாட்டு… அது இவர்கள் எடுத்துக் கொண்ட கதைக்களத்தில் இவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதைத் தான் காட்டுகிறது.. படம் மொத்தமே 1.40 மணி நேரம் தான் அதில் முதல் 20 நிமிடங்களுக்கு கதையே இல்லை… இதுபோக ரெண்டு டூயட் சாங்க், காமெடி என்கின்ற பெயரில் ஒரு காமெடியன், நாயகி என்கின்ற பெயரில் நாயகனுக்கு ஒரு காதலி, ஏன் காதலிக்கிறோம் எதற்கு காதலிக்கிறோம் என்றே தெரியாமல் அவர்கள் செய்யும் பழைய இத்துப் போய், புளித்து புரையேறிப் போன புடலங்காய் காதல் வேறு…  ஆக இவைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் இவர்கள் கதை சொல்லி இருப்பது கிட்டதட்ட 40 முதல் 50 நிமிடங்கள் தான்…. அதிலேயே இத்தனை சிக்கல்கள்…


இது தவிர்த்து கதாபாத்திரங்களின் கேரக்டரைஷேசனைப் பார்த்தால் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் தோன்றுகிறது… சிக்கல் வரும் என்று தெரிந்தும் ஏன் தேவையே இல்லாமல் எல்லோரையும் நாயகன் மாட்டிவிட்டுக் கொண்டே இருக்கிறான்… கடைசியில் அவனும் மாட்டிக் கொள்ளப் போகிறான் என்பது போன்ற முடிச்சி… என இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது யாருக்குமே புரிந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிகிறது… கார் சீசிங் செய்து கொண்டு வரும் மனிதர்களின் வாழ்க்கை இல்லை, அந்தத் தொழிலைப் பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்கான கதை பின்புலம் இல்லை.. அந்த கார் சீசர்களின் சாகசம் இல்லை… அவர்களது வாழ்க்கையில் இயக்குநரின் கற்பனை இல்லவே இல்லை… இருப்பதெல்லாம் இத்துப் போன காதலும், இளிப்பே வராத காமெடியும், நாம் கடந்து வந்த அதே பழைய பாணியிலான நம்பிக்கை துரோகமும் தான்… இதை பார்த்து வியப்பதற்கோ, சிரிப்பதற்கோ, ரசிப்பதற்கோ அல்லது யோசிப்பதற்கோ எதுவுமே இல்லை என்பது மட்டும் உறுதி..

மிகச் சுமாரான இசை, பிண்ணனி இசை, மிகச் சுமாரான நடிப்பு, ஒளிப்பதிவு என எல்லாமே மிகச் சுமாராகத் தான் இருக்கிறது…. தரணிதரனின் இயக்கமும் அப்படித்தான்…. இது இவருக்கு முதல் படம் போலும்…. இரண்டாம் படத்திலாவது இப்படிப்பட்ட குறைகளை களைந்து நல்லபடம் கொடுக்க முற்படுவார் என்று எதிர்பார்ப்போம்….

மொத்தத்தில் இந்தவார வரவான இந்த பர்மா திரைப்படம்…. கார் சீசிங் தொழில் செய்யும் மனிதர்கள் என்ற ஒற்றை வரியை ஒன்றை மணி நேர சினிமாவாக கொடுக்க முற்பட்டு, நம் பொறுமையை சோதிக்க முயற்சி செய்து, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறது…


Saturday, 6 September 2014

அமர காவியம்:

திருடுவது, கொலை செய்வது, கற்பழிப்பது இவையெல்லாம் கொடூரமானது. உணர்ந்திருக்கிறீர்களா…? உணராவிட்டாலும் ஒத்துக் கொள்வீர்கள் தானே..?? திருடுவது, கொலை செய்வது, கற்பழிப்பது இவை எல்லாம் புனிதமானது என்பதை உணரவும் முடியாது.. ஒத்துக்கொள்ளவும் முடியாது….? அப்படித்தானே..?? அன்பு செய்வது, விட்டுக் கொடுப்பது, உதவி செய்வது இவையெல்லாம் புனிதமானது என்பேன்.. அதையும் உணர்ந்தும் இருப்பீர்கள் ஒத்துக் கொள்ளவும் செய்வீர்கள்… அவைகளையே நான் கொடூரமானது என்று சொன்னால் அதை ஒத்துக்கொள்ளமாட்டீர்கள் தானே… சரி.. மேற்சொன்ன எல்லா சொற்களையும் எடுத்து விட்டு அந்த வெற்றிடங்களை காதலை இட்டு நிரப்புங்கள்… காதல் கொடூரமானது.. காதல் புனிதமானது… உணர்ந்திருக்கிறீர்களா..?? ஒத்துக் கொள்வீர்களா…??? வேறு வழியே இல்லை… இதை நீங்கள் உணர்ந்தால் மட்டுமே ஒத்துக்கொள்ள முடியும்…. அது எப்படி ஒரே செயல் எல்லாவற்றுக்குமானதாக ஆகி நிற்க முடியும்… இரண்டு எதிரெதிர் தளங்களில் இயங்கக்கூடியதாக ஒரே செயல் எப்படி இருக்க முடியும்… அதுதான் காதலின் மகத்துவம் என்றெல்லாம் நான் கொண்டாட விரும்பவில்லை… அதற்குள் ஒளிந்திருக்கும் ஒரு உளவியலையே நான் பார்க்க விரும்புகிறேன்…


மேற்சொன்ன செயல்களில் காதலை தவிர்த்து பிற எல்லா செயல்களையும் எடுத்துப் பாருங்கள்… அந்த செயல்கள் யாருக்கு செய்யப்படுகிறதோ அந்த மனிதர்களிடம் இருந்து அது பெரும்பாலும் (நன்கு கவனியுங்கள்.. பெரும்பாலும் தான்… அதில் விதிவிலக்குகள் உண்டு..) ஒரே மாதிரியான எதிர்வினைகளைத் தான் பெற்றுத் தரும்… புரியும் படி சொல்வதென்றால், உங்களை ஒருவன் கொலை செய்ய வருகிறான்… அல்லது கற்பழிக்க வருகிறான்… அல்லது திருட வருகிறான்… உங்களிடம் எதிர்வினையாக என்ன தோன்றும்… பெரும்பாலும் பயம் அல்லது கோபம் தான்…. உங்களுக்கு யாரோ உதவி செய்யவோ, அன்பு செலுத்தவோ அல்லது விட்டுக் கொடுக்கவோ முயன்றால், பெரும்பாலும் நீங்கள் என்ன எதிர்வினை தருவீர்கள்… திரும்ப அன்பு அல்லது மகிழ்ச்சியை தருவீர்கள்.. ஆனால் எனக்குத் தெரிந்தளவில் இரண்டே இரண்டு செயல்கள் மட்டும் தான் அது யாருக்கு நிகழ்த்தப்பட்டாலும் எல்லாவிதமான எதிர்வினைகளையும் நிகழ்த்துவதற்கான சாத்தியக் கூறுகளை தனக்குள்ளே கொண்டு இருக்கிறது… அவைகளில் மிக முக்கியமான ஒன்று காதல், மற்றொன்று காமம்… இவை இரண்டுமே என்ன என்று நம் சமூகத்தில் பெரும்பாலான மக்களுக்கு இன்றுவரை தெளிவாக தெரியாது… தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்புவது இல்லை.. காமத்துக்கான பிரிவு இது இல்லை என்பதால் அதை அப்படியே இங்கு கைவிட்டு விடலாம்… காதலுக்கு வருவோம்…

ஒருவரிடம் மற்றொருவர் காதலை வெளிப்படுத்தும் போது எதிர்வினையாக அங்கு என்ன நிகழும் என்று உங்களால் அறுதியிட்டு சொல்ல முடியுமா..? என்று யோசியுங்கள்… அங்கு காதல் ஏற்றுக் கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும் என்பதல்ல நான் கேட்பது… அது உள்ளுக்குள் உங்களுக்கு ஏற்படுத்தும் உணர்வு என்ன என்பது தான் என் கேள்வி… அது உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கலாம்… துக்கத்தை கொடுக்கலாம்… பெருமையை கொடுக்கலாம், , வாழ்க்கை கொடுக்கலாம், திமிரை கொடுக்கலாம், ஏளனத்தை கொடுக்கலாம், பயத்தை கொடுக்கலாம், கோபத்தை கொடுக்கலாம், வாழ்க்கையை அழிக்கலாம், சண்டை சச்சரவுகளை கொடுக்கலாம், வலியை கொடுக்கலாம், சொர்க்கத்தை கொடுக்கலாம், நரகத்தை கொடுக்கலாம் சில சமயங்களில் மரணத்தையும் கொடுக்கலாம்… ஆக யாதுமாகி நிற்கிறது காதல்… ஏன்..?

முதல் பாராவில் நான் சொன்ன எல்லா செயல்களையும் மீண்டும் ஒரு முறை நினைத்துப் பாருங்கள்… அது யாருக்கு செய்ததாக இருந்தாலும் ஒன்று புனிதமானதாக இருக்கும் அல்லது கொடூரமானதாக இருக்கும்…. யாரை நீ அன்பு செய்தாலும் அது புனிதமானது தான்… அது போல யாரை நீ கொலை செய்தாலும் அது கொடூரமானது தான்… ஆனால் இந்த காதலும் காமமும் தான் இரண்டு தளங்களிலும் ஊசலாடிக் கொண்டே இருப்பவை… நீ காதல் செய்கிறாயா..?? அது யாரை என்று சொல், அது புனிதமானதா…? இல்லை கொடூரமானதா என்று நான் உனக்கு சொல்லுகிறேன் நீ காமம் செய்கிறாயா..? யாருடன் என்று சொல்.. அது புனிதமா..? இல்லை கொடூரமா என்பதை நான் உனக்கு சொல்லுகிறேன் என்பது தான் இங்கு நாம் எழுதாமல் வைத்திருக்கும் விதி… அதனால் தான் இந்த இரண்டும் புனிதத்தின் பக்கமும் கொடூரத்தின் பக்கமும் மாறி மாறி போய் வந்து கொண்டு இருக்கின்றன…

அமர காவியம் என்று டைட்டிலை போட்டு விட்டு, படத்தைப் பற்றி ஒரு வரி கூட எழுதாமல், எங்களுக்கு எதற்கு இவ்வளவு பெரிய முன்னுரையை எழுதிக் கொண்டு இருக்கிறாய் என்று கேட்கிறீர்களா…? காரணமாகத்தான்…. படத்தின் மையமே க்ளைமாக்ஸ் தான்… அதை என்னால் உடைத்து விடவும் முடியாது… அதைப் பற்றிப் பேசாமல் என்னால் பதிவு எழுதவும் முடியாது.. அதனால் தான் அவ்வளவு பெரிய காதல் கட்டுரை… க்ளைமாக்ஸில் ஏன் அப்படி நடந்தது என்பதற்கான பதில் அந்த கட்டுரையில் இருக்கிறது.. சரி கதைக்கு போவோம்…

திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்தின் பதிவை எழுதும் போதே நான் குறிப்பிட்டு இருந்தேன்… உருகி உருகி ஒரு காதல் படம் பார்த்து வெகுநாட்கள் ஆயிற்று என்று.. அந்த ஏக்கத்தை திருமணம் என்னும் நிக்காஹ் தீர்க்கும் என்று எண்ணி ஏமாந்தேன்.. ஆனால் அமர காவியம் அதை தீர்த்து வைத்திருக்கிறது.. கதையென்னவென்றால் படத்தின் டைட்டிலே சொல்கிறதே அமர காவியம் என்று… இந்த தலைப்பை வைத்து நீங்கள் என்னவெல்லாம் யூகிப்பீர்களோ அது எல்லாமே நீக்கமற நிறைந்திருக்கிறது இந்தப் படத்தில்… எனக்குத் தெரிந்து குற்றவாளியின் பார்வையில் இருந்து அந்த சம்பவத்தை பின்னோக்கி சென்று பேசும் படம் இதுவாகத்தான் இருக்கும்.. என்று எண்ணுகிறேன்….


படத்தில் என்னை கவர்வது என்னவென்றால், ஒரு புரிதல் இல்லாத காதலில் என்னவெல்லாம் இருக்குமோ அதை அவ்வளவு தத்ரூபமாக யதார்த்தமானதாக அடுக்கி இருப்பது தான்… என்பேன்… இந்தப் பன்னிரெண்டாம் வகுப்பு காதலில், காமம் கண்ணியம் கட்டுப்பாடு, ( கடமை காதலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது ), சண்டை, சந்தேகம், பொறாமை, வீரம், துரோகம், நம்பிக்கை, குறும்பு, அறியாமை, இயலாமை, புரிதலின்மை, பொறுமையின்மை என பல இன்மைகளும், சில உண்மைகளும் அதோடு கொஞ்சம் காதலும் கலந்தே இருக்கிறது என்று கூறுவேன்….

படத்தின் க்ளைமாக்ஸ் மிகமிக முக்கியமான ஒன்று.. அதைப் பார்த்த பலரும் இது என்ன மாதிரியான எதிர்வினைகளை சமூகத்தில் ஏற்படுத்துமோ என்று பயந்த வண்ணத்தில் உள்ளது போல் தெரிகிறது.. அந்த பயம் நியாயமானது தான்… ”காதல் போயின் சாதல் சாதல் சாதல்” என்பதை இப்படத்திலும் கடைபிடித்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. யாதுமாகி நிற்கும் காதல் பெரியது தான்…. ஆனால் அந்த காதலையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் வாழ்க்கை அதைவிட பெரியதல்லவா….?? அதனால் தான் சொல்கிறேன் இந்தக் காதலை “அடடடடா…. உன்னதமான காதல் என்றெல்லாம் கொண்டாட வேண்டாம்…. காதலுக்காக உயிர் துறந்த ஒரு முட்டாளின் காதல் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்….

அதுபோல அதீதமாக இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் சமூகத்தை பாதித்து விடுமோ என்று அஞ்சத் தேவையில்லை….  ஏனென்றால் இந்தப் படத்தில் வரும் காதல் எங்களுக்கும் முந்தைய தலைமுறையின் காதல்… அதாவது கதை நடைபெறும் காலம் 1988-1989… இப்படி உருகி உருகி காதலிக்கும் ஜோடிகள் எல்லாம் பெரும்பாலும் இன்றைய காலத்தில் வழக்கொழிந்துவிட்டது…. இருந்தாலும் பெண்களுக்கு ஒரு சின்ன அறிவுரை… நீங்கள் காதலிக்கும் ஆடவர்கள் எல்லாம் தன்னம்பிக்கை, அதாவது அவர்கள் மீதே நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்களா..? என்று முதலில் தெரிந்து கொண்டு காதலிக்கத் தொடங்குங்கள்… அதுதான் உங்களுக்கும் நல்லது…. அவனுக்கும் நல்லது…


இந்த க்ளைமாக்ஸை விட படத்தில் எனக்கு மிகவும் ஆபத்தாக தெரிந்தது… அந்த காந்தக் கண்ணழகி, கதாநாயகி மியா ஜார்ஜ் தான்… படம் முடிவதற்குள் எல்லோருமே அவரை காதலிக்கத் தொடங்கி விடுகிறோம்… கண்ணை சிமிட்டிக் கொண்டு ”சொல்லு… இப்ப சொல்லு” என்று அவர் கேட்கும் போதெல்லாம்… நாயகன் சொல்வதற்குள் நமக்கு கத்தி சொல்லத் தோன்றுகிறது “ஐ லவ் யு” என்று… பிண்ணனி இவரே பேசினாரா என்று தெரியவில்லை.. அப்படி இல்லாமல் வேறொருவர் பேசியிருந்தால், “படிக்க வந்த இடத்தில் கதவை சாத்திவிட்டு வரும் சத்யாவைப் பார்த்து, “ஓய்..”என்று கொடுக்கும் அந்த ஒரு சத்தத்துக்காகவே கொத்து கொத்தாய் கொடுக்கலாம் பூங்கொத்து.. ஆர்யாவின் தம்பி சத்யா தான் நாயகன்…. கண்டிப்பாக சொல்லிக் கொள்ளும் படியான படம்… சில கோணங்களில் ஆர்யா போலவே தெரிகிறார்… நடிப்பும் நன்றாகவே வருகிறது.. ஆனால் அந்த மீசை தான் கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது…. அடுத்ததாக படத்தின் மிகப்பெரிய பலம் ஜிப்ரானின் அற்புதமான பிண்ணனி இசை தான்… காட்சியில் இருக்கும் அழுத்தத்தை அதி அற்புதமாக நம் மனதுக்குள் கடத்துவதால் படம் பரிபூரணமாக ஆக்ரமிக்கிறது.. இன்றைய இளசுகளுக்கு இந்தக் காதல் பிடிக்குமா என்று தெரியவில்லை… ஆனால் தலைமுறை தாண்டிய காதலர்கள் பலர் கண்ணில் தண்ணீர் வைத்து செல்வதை காண முடிந்தது…

”நான்” திரைப்படம் கொடுத்த இயக்குநர் ஜீவா சங்கரின் இரண்டாவது படம் இது… பல நீண்ட நாட்களுக்கு பிறகு ஒப்பனையோ மிகையுணர்வோ இல்லாத ஒரு காதல் படம் பார்த்த அனுபவம்… ஒளிப்பதிவும் இவரே தான்…. ஊட்டி காட்சிகளில் பாலுமகேந்திராவின் ப்ரேமை பார்த்ததை போல அப்படி ஒரு ரம்மியம்… வாழ்த்துக்கள் சார்….


சரி… மொத்தத்தில் இந்த அமர காவியம் எப்படி..?? அதான் சொன்னேனே.. இது உன்னதமான காதல் காவியம் என்று கொண்டாட வேண்டிய படம் அல்ல… ஒரு காதலுக்காக உயிர் துறக்கும் ஒரு முட்டாளின் காதல் கதை… என்று வேண்டுமானால் சொல்லலாம்… பார்க்கலாமா..?? என்றால் பார்க்கலாம்… கொஞ்சம் பொறுமை வேண்டும் என்றும் சொல்லுவேன்… அதே நேரம் கண்டிப்பாக பாருங்கள்… என்றும் சொல்லுவேன்.. ஏனென்றால் ஆண்களாகிய நீங்கள் உங்களது காதலில் முட்டாளாக இருந்து விடக் கூடாது என்பதற்காகவும், பெண்களாகிய நீங்கள் ஒரு முட்டாளை காதலித்து விடக் கூடாது என்பதற்காகவும்.. கண்டிப்பாக பாருங்கள்…

இரும்பு குதிரை:


ஒரு வணிக வெற்றியை எதிர்நோக்கி எடுக்கப்படும் திரைப்படம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு சமீபத்திய மற்றுமொரு உதாரணம் தான் இந்த இரும்புக் குதிரை.. இந்த திரைப்படத்தை எந்த நம்பகத்தின் அடிப்படையில் ஓடும் என்று இயக்குநரும், இதன் நாயகனும், தயாரிப்பாளர் தரப்பும் நம்பி இருக்கும் என்றும், அந்த நம்பிக்கைகள் எல்லாம் எந்தெந்த ஓட்டைகளின் வழியாக சறுக்கியது என்பதையும் கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம் என்று இருக்கிறேன்…. இது எது தொடர்பான படம் என்பதை தனிப்பட்ட முறையில் விளக்கத் தேவையில்லை.. இதுவொரு மோட்டார் பந்தய வீரனைப் பற்றிய திரைப்படம் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு, படத்தின் தலைப்பின் மூலமும், படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர்கள் மூலமும் படம் பார்ப்பதற்கு முன்னரே தெரிந்திருக்கும்… இதை கொஞ்சம் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்…


இப்போது படத்தின் சுவாரஸ்ய முடிச்சுகள் என்று எதையெல்லாம் இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளரும் நினைத்திருக்கக் கூடும் என்பதைப் பற்றி பார்க்கலாம்… ( இத்திரைப்படம் வெளியாகி கிட்டதட்ட ஒரு வாரம் ஆகப் போகிறது, பெரும்பாலான தியேட்டர்களில் தூக்கப்பட்டும் விட்டது, மேலும் ஓரிரு தியேட்டர்களில் ஓரிரு காட்சிகள் மட்டுமே ஓடிக் கொண்டு இருக்கிறது, எனவே இந்த திரைப்படத்தின் காட்சிகளின் சுவாரஸ்யத்தை கெடுக்கும்படி விமர்சன விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது, அதன் வணிகத்தை பாதிக்காது என்ற நம்பிக்கையுடன் தான் இதனை முன்னெடுக்கிறேன்…) அவர்கள் கீழ்கண்ட விசயங்களையெல்லாம் சுவாரஸ்யமான முடிச்சுகள், படத்தின் வெற்றிக்கு உதவக்கூடும் என்று நினைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.. அவையாவன முறையே… 1) நாயகன் ஒரு மோட்டார் பந்தய வீரன் என்பதை ஆடியன்ஸ்க்கு தாமதப்படுத்தி தெரிவிப்பது 2) நாயகன் புதிதாக வாங்கும் மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் உள்ள பிண்ணனி 3) நாயகனுக்கும் வில்லனுக்கும் நேரடிப் பகை இல்லை என்பதைப் போல் காட்டி விட்டு, நேரடி பகை தான் என்பது போன்ற முடிச்சை அவிழ்ப்பது….

பெரும்பாலும் மேற்சொன்ன இந்த மூன்று சுவாரஸ்யங்கள் தான் மேற்சொன்ன அந்த மூவரையுமே மகிழ்விக்க செய்து கதையின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்திருக்கும்…. அதிலும் குறிப்பாக அந்த இரண்டாவது சுவாரஸ்யமான முடிச்சாக ஒரு விசயத்தை குறிப்பிட்டு இருக்கிறேனா… அது உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யமான புள்ளி தான்… ஏனென்றால் அது இன்னும் சில சுவாரஸ்யங்களையும் தனக்குள்ளே கொண்டுள்ளது… அவை என்ன வென்றால், அந்த பைக்கை இங்கு விட்டுச் சென்றவனும், நாயகன் தான், வாங்க வந்திருப்பதும் நாயகன் தான், அந்த பைக்கால் ஏற்கனவே ஒரு பிரச்சனை இவன் வாழ்க்கையில் நடந்திருக்கிறது… இப்பொழுது இந்த பைக்கால் மற்றொரு பிரச்சனை இவன் வாழ்க்கையில் நடக்கப் போகிறது, இந்த பைக்கை இவன் வாங்கியதால், இவனது வாழ்க்கையில் ஒரு உறவு இவனை விட்டு பிரிந்தது…. இவன் இந்த பைக்கை வாங்காவிட்டால், இன்னொரு உறவும், தன் உறவை முறித்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதாக பல உள்ளடுக்கு சுவாரஸ்யங்களை கொண்டது அந்த இரண்டாவது சுவாரஸ்ய முடிச்சி…. சரி… இவ்வளவு சுவாரஸ்யமான முடிச்சுகளை திரைப்படம் கொண்டிருந்தாலும் அது ஏன் நல்ல காண்பனுபவத்தைக் கொடுக்காமல், வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது…. என்பதையும் பார்க்கலாம்….

சரி… முதல் சுவாரஸ்ய முடிச்சி சறுக்கி விழுந்த ஓட்டை எது என்று பார்ப்போமா…? இந்த முடிச்சி சறுக்கி விழுந்தது ஒரு ஓட்டையின் வழியாக அல்ல… ஓராயிரம் ஓட்டைகளின் வழியாக…. முதல் பத்தியில் சொல்லியது போல் படத்தின் தலைப்பே, டீசர், போஸ்டர் என பல விசயங்கள் சொல்லிவிட்டன… நாயகனொரு மோட்டார் பந்தய வீரன் என்று…. ஆடியன்ஸ்க்கு அப்பட்டமாக தெரிந்த இப்படிப்பட்ட ஒரு விசயத்தை பொத்தி பொத்தி வைத்து லேட்டாக ஓப்பன் செய்தால், ஆடியன்ஸ்க்கு காட்சிகளில் சுவாரஸ்யம் வராது.. வெறுப்பு தான் வரும்…. ஒரு வேளை திரைக்கதையை இப்படி அமைத்திருந்தால், அதாவது, நாயகனுக்கு உண்மையிலுமே பைக்கை பற்றி ஒன்றுமே தெரியாது…. அவன் கொஞ்சம் கொஞ்சமாக பைக்கை பற்றி தெரிந்து கொண்டு ஒரு சாம்பியனாக மாறுகிறான் என்பது போல் வைத்திருந்தால், ஒரு வேளை படம் ஓடி இருக்கலாம்… அதற்கான வாய்ப்பும் திரைக்கதையில் இருந்திருக்கிறது… ஹீரோ படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை மோட்டார் பந்தய வீரனாக இருந்தால் என்ன….?? க்ளைமாக்ஸில் மட்டும் அவன் மிகச்சிறந்த மோட்டார் பந்தய வீரனாக மாறினால் என்ன…?? இரண்டுக்குமே டைட்டிலும் டீசரும் பொருந்தத்தான் போகிறது…. இப்படி பார்வையாளர்களின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு இரண்டு விதமான திரைக்கதை சரடு கதையிலேயே இருந்தாலும், நீங்கள் இரண்டு விதமாக கதை போவதற்கு சாத்தியங்கள் உண்டு என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்… கதை இப்படித் தான் போகிறது… மற்றொன்றை மறந்துவிடுங்கள் என்று சம்மட்டியால் அடித்துக் கூறுகிறது… அந்த முதல் காட்சி…. காட்சி விவரம் கீழே..

“ சிக்னல் கம்பத்தில் ஒரு கழுகு அமர்ந்திருக்க…. சில காக்கைகள் ரோட்டில் ஆங்காங்கே அமர்ந்திருக்க….. அமைதியாக இருக்கும் அந்த ரோட்டின் அமைதியை கிழித்துக் கொண்டு பறந்து வருகிறது ஒரு பைக்… அதில் இரண்டு பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள்… காக்கைகள் சிதறி பறக்கிறது….. இதைப் பார்த்துக் கொண்டு இருந்த கழுகு பறந்து வந்து டூவிலரின் ஹேன்பாரில் அமர.. பைக் சறுக்கி விழுக… டமால் என்று சத்தம்……. நாயகன் கனவில் இருந்து எழுகிறான்…. ‘ எங்கப்பா எங்கூடவே இருக்கிற மாதிரியே இருக்கு…’ என்று வேறு சொல்கிறான்…

இதுதான் முதல் காட்சி… இது போதாதென்று அடுத்த காட்சியில் அவனது அப்பா இறந்துவிட்டார் என்பதும், அவன் பைக் வேகமாக ஓட்ட பயப்படுகிறான் என்பதும் வேறு வருகிறது… இப்படி காட்சிகளின் பின்னல் இருக்கும் போது குழந்தை கூட சொல்லிவிடும் கதையில் என்ன நடக்கப் போகிறது என்று…. இதுதான் முதல் சுவாரஸ்யம் வழுக்கி விழுந்த ஓராயிரம் ஓட்டையின் பிண்ணனி... இரண்டாவது சுவாரஸ்யமும் இது போன்ற ஒரு காட்சியின் ஓட்டையில் தான் வலுக்குகிறது…. அந்தக் காட்சி…
நாயகனுக்கு பைக் தேர்வு செய்ய… நாயகியும் வருகிறாள்… எல்லா பைக்குகளையும் கடந்து சென்று ஒரு ஷட்டருக்குள் பூட்டி வைக்கப்பட்டுள்ள துணி போட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பைக்கை அவளது கண்கள் கண்டுகொள்கிறது… அந்த பைக்குக்கு ஒரு க்ளோசப் வேறு… வித்தியாசமான மியூசிக் வேறு… இது போதாதென்று நாயகன் வேறு எனக்கு இந்த பைக் பிடிக்கவில்லை என்று மறுக்கிறான்… இது போதாததா..? இந்த பைக் எந்த பைக் என்று யூகிக்க… இந்தக் காட்சியால் தான் அந்த இரண்டாவது சுவாரஸ்யமும் வலுவிழக்கிறது… இந்த இரண்டு ஓட்டைகளில் ஏதேனும் ஒன்றை அடைத்திருந்தால் கூட படம் ஏதோ தேறி இருக்கும்…. அப்பொழுதும் கூட வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே.. காரணம் முதல் பாதியில் கதை இம்மி கூட நகராதது…. முதல் பாதி கதை இதுதான்… “ நாயகன் கனவு காண்கிறான்.. பைக் ஓட்ட பயப்படுகிறான்… பைக் மெதுவாக ஓட்டி திட்டு வாங்குகிறான்.. ஹீரோயினை பார்க்கிறான்… காதலிக்கிறான்…. அவளை இம்ப்ரஷ் செய்ய அவள் ஆசைப்பட்ட ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்குகிறான்… இதில் என்ன கதை இருக்கிறது…?? அது நகருவதற்கு…


இதிலேயே நாம் சோர்ந்து போய் இருக்கும் போது, கதையின் சுவாரஸ்யத்து ஒரு வில்லன் வேண்டுமே என்று அவனை தேசம் விட்டு தேசம் கொண்டு வருகிறார்கள்…. வில்லன் வந்த பின்னர் அடுத்த என்ன…?? ஹீரோ ஜெயிப்பான்… என்பது தானே என்று நமக்கு வருகின்ற எரிச்சலில் படமே நமக்கு பெரிய வில்லனாக மாறிவிடுகிறது… “அடப்போங்கப்பா..” என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிடுகிறோம்…. படு கேவலமான ஒரு பைக் ரேஷ் வைத்து படத்தை முடித்தும் விடுகிறார்கள்…

மூன்றாவது சுவாரஸ்யத்தை பற்றி சொல்லவே இல்லையே என்கிறீர்களா…?? அவன் உண்மையாக தேடிக் கொண்டு இருப்பது ஹீரோவைத் தான்…. என்பது கொஞ்சம் சுவாரஸ்யமானது தான்…. அதற்கும் ஆப்படிப்பது அந்த பைக்கை நாயகி தேர்ந்தெடுக்கும் காட்சியும்…. நமக்கு ஏற்கனவே படம் தந்திருக்கும் வெறுப்புணர்ச்சியும் தான்… ஓரளவுக்கு அது அவன் பைக் தான்.. அவன் ரேஸர் தான் என்று யூகிப்பதால் அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை… ஆக படத்தில் சுவாரஸ்ய முடிச்சுகள் மட்டும் இருந்தால் போதாது… அதை சிதைக்காத அளவுக்கு படத்தில் காட்சிகளும் வைக்கப்பட வேண்டும்… என்பதற்கு இப்படம் ஒரு நல்ல எ.கா.

சரி… உங்கள் வீட்டில் யாருக்கோ இப்படி ஒரு விபத்து நடந்து அவர் உயிர் பிழைத்து வந்திருக்கிறார்… அடுத்த பைக்கை வேகமாக ஓட்டிச் செல்ல பயப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம்… அவருக்கு… “ ஏன் இப்டி பயப்படுற… பைக்க நல்லா வேகமா ஓட்ட வேண்டியதான…!! என்றா அறிவுரை கொடுப்பீர்கள்…” ஆனால், நாயகனின் அம்மா அதைத்தான் செய்கிறாள்… அந்த விபத்துக்கு பின்னர் நாயகன் மெதுவாகத்தான் பைக் ஓட்டுகிறான்… அவன் மாற வேண்டும் ( எதிலிருந்து என்று கேட்காதீர்கள்..) என்று அவனது அம்மா…. பைக்கில் வேகமாக சென்று பீட்ஸா டோர் டெலிவரி செய்யும்  வேலைக்கு சிபாரிசு செய்து சேர்த்து விடுகிறார்…. இதில் “நடக்கும் போது விழுந்து விட்டால் நடக்காமயேவா இருந்து விடுவோம் என்று தத்துவம் வேறு…”

இந்த இளம், இனை, துணை, உதவி, இமய, இன்றைய, நாளைய இயக்குநர்கள் அத்தனை பேருக்கும் ஒரு வேண்டுகோள்… ஒரு காலம் இருந்தது.. அதுவொரு இறந்த காலம்… பெண்களின் அங்கத்தை பார்க்க முடியவில்லை என்ற பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட வாலிப, வயோதிக அன்பர்கள் எல்லாம், பெண்களை அரைகுறை ஆடைகளுடன் ஆடவிட்டு எடுக்கப்பட்ட குத்துப்பாடல்களிடம் தஞ்சம் புகுந்த காலம்…. அது கண்டிப்பாக இறந்த காலம் தான் எங்கள் இயக்குநர் பெருமக்களே… அப்படி ஒரு பஞ்சத்தில் இருந்து நாம் மீண்டு வந்தாயிற்று… இப்போதெல்லாம் இணையமும், வார மாத நாளிதழ்களிலின் அட்டைப் பக்கங்களும் நடுப்பக்கங்களும் அது போன்ற விசயங்களை நடு வீட்டுக்கே கொண்டு வந்து கொலுவேற்றிக் கொண்டிருக்கின்றன…. அதனால் இன்னும் நாங்கள் உங்கள் குத்துப்பாடல்களுக்காகவே தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கிறோம் என்று மலிவாக சிந்திக்க வேண்டாம் என்று சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறோம்… “கதையே இல்லயேன்னு காட்டு கத்தல் கத்திக்கிட்டு இருக்கோம்.. இதில ரெண்டு குத்துப்பாட்டு….??!!”


ஆக மொத்தத்தில் இந்த இரும்புக்குதிரை…??? இவ்ளோ சொல்லியாச்சி.. இதுக்கு மேல என்னங்க சொல்றது….

Wednesday, 3 September 2014

சலீம்:

நான் ஹீரோ, அதாவது நான் படத்தின் ஹீரோவான விஜய் ஆண்டனி நடிப்பிலும் தயாரிப்பிலும், வெளிவந்திருக்கும் திரைப்படம்… இதனை “நான்” திரைப்படத்தின் அடுத்த பாகமாகவும், அதாவது தொடர்ச்சியாகவும் கொள்ளலாம்... சந்தர்ப்ப சூழலால், இந்துவான கார்த்திக் தன்னை சலீம் என்னும் முஸ்லீமாக மாற்றிக் கொண்டு மருத்துவப் படிப்பு படிக்கச் சென்று, அங்கு தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் நண்பர்களின் மரணத்துக்கு காரணமாகவும் இருந்து அந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும் செய்த பின்னர், படத்தை தொடரும் போட்டு முடித்திருப்பார்களே… அந்த நான் திரைப்படத்தின் தொடர்ச்சியாகத் தான் இதை பார்க்கலாம்….. அல்லது இந்த சலீமை “நான்” திரைப்படத்தோடு எந்த தொடர்பும் இல்லாத ஒரு புதிய திரைப்படமாகவும் பார்க்கலாம்… இரண்டுக்குமே படத்தில் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன..


அந்த சலீம் ஒரு இஸ்லாமியனாகவே வாழ்ந்து மருத்துவப்படிப்பையும் முடித்து ஒரு உயர்தர மருத்துவமனையில் பணி புரிகிறான்.. தன் மிச்சமீதி வாழ்க்கையை அமைதியாக, சந்தோசமாக எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் வாழ விரும்புகிறான்… திருமணம் செய்யவும் முயற்சிக்கிறான்.. அதே நேரத்தில் அந்த வாழ்க்கையை நியாயமானதாகவும், பிறருக்கு பயனுள்ளதாகவும் வாழ விரும்புகிறான்… ஆனால் பொறுப்பின்மையுடன் இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த சமூகம், அவனை அவ்வாறு வாழ அனுமதிக்கவில்லை… அவனை அவன் விரும்பியது போல வாழ விடாமல், தாங்கள் எப்படி வாழ வேண்டும் என்று நிர்ணயித்து வைத்திருக்கிறதோ அது போல அவனை வாழ நிர்பந்திக்கிறது.. அந்த நிர்பந்தத்தால் வாழ்க்கையில் விரக்தி அடையும் அவன், அந்த விரக்தியின் உச்சத்தில் என்ன செய்கிறான் என்பதே இந்த சலீமின் கதை…

ஒரு நடிகராக நடிப்பில் இரண்டாவது முறையாகவும் பாஸ் மார்க் மட்டுமே வாங்கி இருக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி… ஒரு நடிகராக கதையை தேர்ந்தெடுப்பதில் இரண்டாவது முறையாகவும் மிகச் சிறந்த வெற்றியை பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்… ஒரு திரைப்படம் மக்களிடையே பேசப்படுவதற்கு மிகமிக முக்கிய காரணமாக இருக்க வேண்டியது நடிகனோ, நடிகையோ, இசையமைப்பாளரோ, பாடல்களோ அன்றி கதைதான் என்பதை இவர் தெரிந்து வைத்திருப்பது தான் இந்த சலீம் திரைப்படத்தின் வெற்றி. இதை மற்ற திரையுலக பிரமுகர்களும் புரிந்து கொண்டால் நல்லது.

முதல்பாதியில் சற்றே சோர்வாகத் தோன்றும் திரைக்கதை ஆனது, இரண்டாம் பாதியில் தன் குறையை நிவர்த்தி செய்துவிடுகிறது… ஒரு ஒப்பு நோக்கு வடிவத்தில் பார்த்தால், இந்த சலீமின் கதாபாத்திரமானது அந்நியன் அம்பி கதாபாத்திரத்தை பல இடங்களில் நினைவு படுத்துவதாக இருந்தாலும், அம்பியின் கதாபாத்திர சித்தரிப்பில் இருந்த மிகை உணர்ச்சிகள் இதில் பெரும்பாலும் இல்லாததால் இந்த சலீம், ஒரு சாதாரண சாமானியனுக்கும் மிகவும் நெருக்கமாகிறான்…. ஒரு பிரச்சனைக்கு மத்தியில் பத்தில் 8 சாமானியர்கள் என்ன செய்வார்களோ அதையே தான் அவனும் செய்கிறான்… ஆனால் அதே பிரச்சனைகளை கண்டு ஒதுங்கிப் போகும் மனநிலையின் உச்சத்தில், அவன் வாழ்க்கையின் அனைத்தையும், ஏன்…?? வாழ்க்கையையே இழக்கின்ற சூழல் வரும் போது, மன உளைச்சலின் உச்சத்தில் அவன் எடுக்கின்ற அபாயகரமான சூப்பர் ஹீரோ நடவடிக்கைகளையும் அந்த சாமானியன் சலிப்பின்றி ஏற்றுக் கொள்கிறான்….


மாதவனின் நடிப்பில் வெளிவந்து, எதிர்பார்த்த அளவுக்கு ஓடாத, ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாகிய “எவனோ ஒருவன்” திரைப்படத்தையும் சலீம் ஞாபகப்படுத்துகிறான்… அதன் திரைக்கதை சார்ந்த அம்சங்கள் மங்கலாக மட்டுமே நினைவில் இருப்பதால், அதையும் மீண்டும் காண வேண்டும் என்கின்ற வேட்கையையும் எனக்குள் இந்த சலீம் ஏற்படுத்துகிறான்… முதல் பாதியில் ஒரு கதாபாத்திரத்தை நிறுவுவதற்காகவும், அதன் சூழலை சொல்வதற்காகவும் அவர்கள் எடுத்துக் கொள்கின்ற நேரம் சற்று அதிகம் தான்… அதுபோல முதல்பாதியில் பல்வேறு பிரச்சனைகளில் மையம் கொண்டு விட்டு, பின்னர் சாவகாசமாக அதில் ஒரு பிரதான பிரச்சனையை தேர்ந்தெடுத்து பிரச்சனைக்கு தீர்வு காணப் போகும் வழியில் பிற பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை தேடிக் கொள்கிறான் என்பதான திரைக்கதை பயணம் சற்றே அயர்ச்சியாக பட்டாலும், இந்த திரைக்கதை வடிவம் மற்றும் சரியான பாதை என்பதால் அதையும் ஏற்றுக் கொள்ளலாம்…

படத்தின் சிறப்புகளில் வசனத்துக்கும் முக்கிய பங்கு உண்டு… அதற்கு மிக நல்ல சான்று அந்த சலீம் தொடர்பான வசனம்… சலீம் என்ற பெயரை கேட்டவுடனேயே நீ அல்கொய்தாவா…? இல்லை முகாஜீதினா என்று கேட்கும் போலீஸ் கமிஸ்னர் செழியனிடம், “சார் அந்த பெயர் தான் உங்களை இந்த அளவுக்கு யோசிக்க வைக்கிறது என்றால், என் பெயரை விஜய் என்றோ ஆண்டனி என்று வைத்துக் கொள்ளுங்கள்” என்று சலீம் பேசும் வசனம்.. அதை போலவே “உனக்கு என்னதாண்டா வேணும்…” என்று கோபம் கொப்பளிக்க பேசும் கமிஸ்னரிடம், கூலாக ஆனால் அதே கோபத்துடன் சலீம் சொல்லும் “ரெஸ்பெக்ட்” என்று சொல்லும் வசனங்களும் அதன் சிறப்புக்கு  உதாரணம்…. நம் சமூகத்தில் ஒரு முஸ்லீமாக நடிப்பதிலேயே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்றால், முஸ்லீமாக வாழ்வதில் எத்தனை பிரச்சனைகள் இருக்கும் என்னும் கேள்வியை ஓரிரு நிமிடமாவது யோசிக்கவும் வைத்து விடுவதில் இருக்கின்றது இந்த சலீமின் வெற்றி.. வழக்கமான பாணியில் இவர்களும் காதல் கசமுசா என்று செல்லாமல், டைரக்டாக கல்யாணத்துக்கே சென்றுவிட்டதால், விகடன் பாணியில் ஒரு பூங்கொத்து கொடுக்கலாம் என்று தோன்றியது… இது தவிர்த்து மனசாட்சியுடன் இயங்குகின்ற மருத்துவர்களுக்கு பரிசாக கிடைப்பது என்ன என்பதை காட்சிபடுத்துகின்ற விதம் என படத்தில் ஏகப்பட்ட நல்ல காட்சிகளும் இருக்கின்றன…


எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரியாகவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி.. அதிலும் குடித்து விட்டு போதையில் தன் அடையாள அட்டையையும், கோட்-டையும் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு பேசும் வசனத்தின் போது, அந்தக் காட்சி பார்க்கவும் கேட்கவும் பரிதாபமான காட்சியாக இருக்கிறது… யாருக்குமே பிடிக்கக் கூடாது என்ற தகுதியை மட்டுமே வைத்து கதாநாயகியை தேடி இருப்பார்கள் போலும்…. மீறிய வயது உடையவராகத் தெரியும் இவரும், இவரது கதாபாத்திரமும், இவரது நடிப்பும் நன்றாகவே இருந்தாலும், இயக்குநர் எதிர்பார்த்ததை போலவே யாருக்கும் இவரை பிடிக்கவில்லை என்பது இவர் வரும் காட்சிகளில் ஆடியன்ஸின் வசைபாடலிலேயே தெரிகிறது

அத்தனை போலீசார் பாதுகாப்புக்கு இருக்கும் போது எப்படி கடத்த முடியும்… என்பது போல இயல்பாக தோன்றும் சில லாஜிக் கேள்விகள், வேகத் தடையாக வருகின்ற சில பாடல்கள், இரண்டாம் பாதியின் சாகச நடவடிக்கைகள், விஜய் ஆண்டனியின் உணர்ச்சியில்லாத நடிப்பு இப்படி படத்தில் ஒரிரு குறைகள் தான் … பாடல்களில் விட பிண்ணனி இசையில் ஆண்டனியின் உழைப்பு அதிகம்…. அது போலவே ஒளிப்பதிவு அவ்வளவு துல்லியம்… முதல் இரண்டு ஷாட்டிலேயே ஆடியன்ஸை திரைக்குள் இழுத்து வந்து விடுகிறது… இயக்குநர் N.V நிர்மல் குமார்.. முதல் படத்திலேயே கதையை நம்பி இறங்கி இருக்கும் இயக்குநரை பாராட்டலாம்… இவரிடம் இனி வரும் படங்களில் அதிகமாக எதிர்பார்க்கலாம் என்றும் தோன்றுகிறது…

மொத்தத்தில் சலீம், ஒரு வித்தியாசமான கதையோ அல்லது கதைக்களனோ அல்லது திரைக்கதையோ கொண்டதாக தெரியாவிட்டாலும் கூட, அதன் கதாபாத்திர வடிவமைப்பிலும், திரைக்கதை முடிச்சுகளின் சுவாரஸ்யத்தாலும், திரைப்படம் சுட்டிக் காட்ட விரும்பும் சமூக சீர்கேடுகளையும் கண் நோக்கையில் இது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய படம் என்பது தெள்ளத் தெளிவாகிறது…