Wednesday, 3 September 2014

சலீம்:

நான் ஹீரோ, அதாவது நான் படத்தின் ஹீரோவான விஜய் ஆண்டனி நடிப்பிலும் தயாரிப்பிலும், வெளிவந்திருக்கும் திரைப்படம்… இதனை “நான்” திரைப்படத்தின் அடுத்த பாகமாகவும், அதாவது தொடர்ச்சியாகவும் கொள்ளலாம்... சந்தர்ப்ப சூழலால், இந்துவான கார்த்திக் தன்னை சலீம் என்னும் முஸ்லீமாக மாற்றிக் கொண்டு மருத்துவப் படிப்பு படிக்கச் சென்று, அங்கு தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் நண்பர்களின் மரணத்துக்கு காரணமாகவும் இருந்து அந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும் செய்த பின்னர், படத்தை தொடரும் போட்டு முடித்திருப்பார்களே… அந்த நான் திரைப்படத்தின் தொடர்ச்சியாகத் தான் இதை பார்க்கலாம்….. அல்லது இந்த சலீமை “நான்” திரைப்படத்தோடு எந்த தொடர்பும் இல்லாத ஒரு புதிய திரைப்படமாகவும் பார்க்கலாம்… இரண்டுக்குமே படத்தில் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன..


அந்த சலீம் ஒரு இஸ்லாமியனாகவே வாழ்ந்து மருத்துவப்படிப்பையும் முடித்து ஒரு உயர்தர மருத்துவமனையில் பணி புரிகிறான்.. தன் மிச்சமீதி வாழ்க்கையை அமைதியாக, சந்தோசமாக எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் வாழ விரும்புகிறான்… திருமணம் செய்யவும் முயற்சிக்கிறான்.. அதே நேரத்தில் அந்த வாழ்க்கையை நியாயமானதாகவும், பிறருக்கு பயனுள்ளதாகவும் வாழ விரும்புகிறான்… ஆனால் பொறுப்பின்மையுடன் இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த சமூகம், அவனை அவ்வாறு வாழ அனுமதிக்கவில்லை… அவனை அவன் விரும்பியது போல வாழ விடாமல், தாங்கள் எப்படி வாழ வேண்டும் என்று நிர்ணயித்து வைத்திருக்கிறதோ அது போல அவனை வாழ நிர்பந்திக்கிறது.. அந்த நிர்பந்தத்தால் வாழ்க்கையில் விரக்தி அடையும் அவன், அந்த விரக்தியின் உச்சத்தில் என்ன செய்கிறான் என்பதே இந்த சலீமின் கதை…

ஒரு நடிகராக நடிப்பில் இரண்டாவது முறையாகவும் பாஸ் மார்க் மட்டுமே வாங்கி இருக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி… ஒரு நடிகராக கதையை தேர்ந்தெடுப்பதில் இரண்டாவது முறையாகவும் மிகச் சிறந்த வெற்றியை பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்… ஒரு திரைப்படம் மக்களிடையே பேசப்படுவதற்கு மிகமிக முக்கிய காரணமாக இருக்க வேண்டியது நடிகனோ, நடிகையோ, இசையமைப்பாளரோ, பாடல்களோ அன்றி கதைதான் என்பதை இவர் தெரிந்து வைத்திருப்பது தான் இந்த சலீம் திரைப்படத்தின் வெற்றி. இதை மற்ற திரையுலக பிரமுகர்களும் புரிந்து கொண்டால் நல்லது.

முதல்பாதியில் சற்றே சோர்வாகத் தோன்றும் திரைக்கதை ஆனது, இரண்டாம் பாதியில் தன் குறையை நிவர்த்தி செய்துவிடுகிறது… ஒரு ஒப்பு நோக்கு வடிவத்தில் பார்த்தால், இந்த சலீமின் கதாபாத்திரமானது அந்நியன் அம்பி கதாபாத்திரத்தை பல இடங்களில் நினைவு படுத்துவதாக இருந்தாலும், அம்பியின் கதாபாத்திர சித்தரிப்பில் இருந்த மிகை உணர்ச்சிகள் இதில் பெரும்பாலும் இல்லாததால் இந்த சலீம், ஒரு சாதாரண சாமானியனுக்கும் மிகவும் நெருக்கமாகிறான்…. ஒரு பிரச்சனைக்கு மத்தியில் பத்தில் 8 சாமானியர்கள் என்ன செய்வார்களோ அதையே தான் அவனும் செய்கிறான்… ஆனால் அதே பிரச்சனைகளை கண்டு ஒதுங்கிப் போகும் மனநிலையின் உச்சத்தில், அவன் வாழ்க்கையின் அனைத்தையும், ஏன்…?? வாழ்க்கையையே இழக்கின்ற சூழல் வரும் போது, மன உளைச்சலின் உச்சத்தில் அவன் எடுக்கின்ற அபாயகரமான சூப்பர் ஹீரோ நடவடிக்கைகளையும் அந்த சாமானியன் சலிப்பின்றி ஏற்றுக் கொள்கிறான்….


மாதவனின் நடிப்பில் வெளிவந்து, எதிர்பார்த்த அளவுக்கு ஓடாத, ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாகிய “எவனோ ஒருவன்” திரைப்படத்தையும் சலீம் ஞாபகப்படுத்துகிறான்… அதன் திரைக்கதை சார்ந்த அம்சங்கள் மங்கலாக மட்டுமே நினைவில் இருப்பதால், அதையும் மீண்டும் காண வேண்டும் என்கின்ற வேட்கையையும் எனக்குள் இந்த சலீம் ஏற்படுத்துகிறான்… முதல் பாதியில் ஒரு கதாபாத்திரத்தை நிறுவுவதற்காகவும், அதன் சூழலை சொல்வதற்காகவும் அவர்கள் எடுத்துக் கொள்கின்ற நேரம் சற்று அதிகம் தான்… அதுபோல முதல்பாதியில் பல்வேறு பிரச்சனைகளில் மையம் கொண்டு விட்டு, பின்னர் சாவகாசமாக அதில் ஒரு பிரதான பிரச்சனையை தேர்ந்தெடுத்து பிரச்சனைக்கு தீர்வு காணப் போகும் வழியில் பிற பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை தேடிக் கொள்கிறான் என்பதான திரைக்கதை பயணம் சற்றே அயர்ச்சியாக பட்டாலும், இந்த திரைக்கதை வடிவம் மற்றும் சரியான பாதை என்பதால் அதையும் ஏற்றுக் கொள்ளலாம்…

படத்தின் சிறப்புகளில் வசனத்துக்கும் முக்கிய பங்கு உண்டு… அதற்கு மிக நல்ல சான்று அந்த சலீம் தொடர்பான வசனம்… சலீம் என்ற பெயரை கேட்டவுடனேயே நீ அல்கொய்தாவா…? இல்லை முகாஜீதினா என்று கேட்கும் போலீஸ் கமிஸ்னர் செழியனிடம், “சார் அந்த பெயர் தான் உங்களை இந்த அளவுக்கு யோசிக்க வைக்கிறது என்றால், என் பெயரை விஜய் என்றோ ஆண்டனி என்று வைத்துக் கொள்ளுங்கள்” என்று சலீம் பேசும் வசனம்.. அதை போலவே “உனக்கு என்னதாண்டா வேணும்…” என்று கோபம் கொப்பளிக்க பேசும் கமிஸ்னரிடம், கூலாக ஆனால் அதே கோபத்துடன் சலீம் சொல்லும் “ரெஸ்பெக்ட்” என்று சொல்லும் வசனங்களும் அதன் சிறப்புக்கு  உதாரணம்…. நம் சமூகத்தில் ஒரு முஸ்லீமாக நடிப்பதிலேயே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்றால், முஸ்லீமாக வாழ்வதில் எத்தனை பிரச்சனைகள் இருக்கும் என்னும் கேள்வியை ஓரிரு நிமிடமாவது யோசிக்கவும் வைத்து விடுவதில் இருக்கின்றது இந்த சலீமின் வெற்றி.. வழக்கமான பாணியில் இவர்களும் காதல் கசமுசா என்று செல்லாமல், டைரக்டாக கல்யாணத்துக்கே சென்றுவிட்டதால், விகடன் பாணியில் ஒரு பூங்கொத்து கொடுக்கலாம் என்று தோன்றியது… இது தவிர்த்து மனசாட்சியுடன் இயங்குகின்ற மருத்துவர்களுக்கு பரிசாக கிடைப்பது என்ன என்பதை காட்சிபடுத்துகின்ற விதம் என படத்தில் ஏகப்பட்ட நல்ல காட்சிகளும் இருக்கின்றன…


எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரியாகவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி.. அதிலும் குடித்து விட்டு போதையில் தன் அடையாள அட்டையையும், கோட்-டையும் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு பேசும் வசனத்தின் போது, அந்தக் காட்சி பார்க்கவும் கேட்கவும் பரிதாபமான காட்சியாக இருக்கிறது… யாருக்குமே பிடிக்கக் கூடாது என்ற தகுதியை மட்டுமே வைத்து கதாநாயகியை தேடி இருப்பார்கள் போலும்…. மீறிய வயது உடையவராகத் தெரியும் இவரும், இவரது கதாபாத்திரமும், இவரது நடிப்பும் நன்றாகவே இருந்தாலும், இயக்குநர் எதிர்பார்த்ததை போலவே யாருக்கும் இவரை பிடிக்கவில்லை என்பது இவர் வரும் காட்சிகளில் ஆடியன்ஸின் வசைபாடலிலேயே தெரிகிறது

அத்தனை போலீசார் பாதுகாப்புக்கு இருக்கும் போது எப்படி கடத்த முடியும்… என்பது போல இயல்பாக தோன்றும் சில லாஜிக் கேள்விகள், வேகத் தடையாக வருகின்ற சில பாடல்கள், இரண்டாம் பாதியின் சாகச நடவடிக்கைகள், விஜய் ஆண்டனியின் உணர்ச்சியில்லாத நடிப்பு இப்படி படத்தில் ஒரிரு குறைகள் தான் … பாடல்களில் விட பிண்ணனி இசையில் ஆண்டனியின் உழைப்பு அதிகம்…. அது போலவே ஒளிப்பதிவு அவ்வளவு துல்லியம்… முதல் இரண்டு ஷாட்டிலேயே ஆடியன்ஸை திரைக்குள் இழுத்து வந்து விடுகிறது… இயக்குநர் N.V நிர்மல் குமார்.. முதல் படத்திலேயே கதையை நம்பி இறங்கி இருக்கும் இயக்குநரை பாராட்டலாம்… இவரிடம் இனி வரும் படங்களில் அதிகமாக எதிர்பார்க்கலாம் என்றும் தோன்றுகிறது…

மொத்தத்தில் சலீம், ஒரு வித்தியாசமான கதையோ அல்லது கதைக்களனோ அல்லது திரைக்கதையோ கொண்டதாக தெரியாவிட்டாலும் கூட, அதன் கதாபாத்திர வடிவமைப்பிலும், திரைக்கதை முடிச்சுகளின் சுவாரஸ்யத்தாலும், திரைப்படம் சுட்டிக் காட்ட விரும்பும் சமூக சீர்கேடுகளையும் கண் நோக்கையில் இது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய படம் என்பது தெள்ளத் தெளிவாகிறது…4 comments:

 1. நல்ல பார்வை. விஜய் ஆண்டனி நடிப்பில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே என் எண்ணமும் கூட, முதல் பாதி மெதுவாய் சென்றாலும் இரண்டாம் பாதியில் படம் விறுவிறுப்பாய் செல்கிறது.

  ஆனால் சலீம் "Big Bang" என்கிற கொரியன் படத்தின் தழுவல் ஆரம்பித்த 10 நிமிடங்களில் எனக்கு தெரிந்து விட்டது, அதன் பின்பு அட ச்சீ என்று தன் எனக்கு தோன்றியது. எப்பொழுது தன் தமிழ் சினிமா சொந்தமாய் கதை ரெடி பண்ணி நல்ல படம் எடுப்பார்களோ, கடவுளுக்கு தன் வெளிச்சம்.. :):)

  ReplyDelete
  Replies
  1. இது எனக்குப் புதிய தகவல்... கண்டிப்பாக "Big Bang" திரைப்படத்தைப் பார்க்க முயற்சிக்கிறேன்... தமிழ் சினிமாவின் தலைவிதியை எண்ணி ஆதங்கப்படும் உங்களை சாந்தப்படுத்த சத்தியமாய் என்னிடம் வார்த்தைகள் இல்லை... ஆனாலும் ஒரு சில நம்பிக்கை கீற்றுகள் தெரிகின்றன.... அவை பிரகாசமாக எரியுமா...? இல்லை ”பட்”டென்று அணைந்து போகுமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

   Delete
 2. ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவுலம் பக்கம் வருகிறேன். உங்களிடம் ஏற்கனவே தமிழ்மணத்தில் உங்கள் blog இணைப்பது பற்றி சொல்லி இருப்பேன் என்று நினைக்கிறன்.
  திரும்பவும் சொல்ல்கிறேன். விருப்பம் இருந்தால் தமிழ்மணத்தில் இணையுங்கள் :)

  இந்த லிங்க்ல போய் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடுங்க.

  http://www.tamilmanam.net/user_blog_submission.php

  அதுக்கு முன்னாடி கீழ இருக்கிற லிங்க்ல தமிழ்மணம் Username ஒன்னு கிரீயேட் பண்ணிடுங்க.

  http://www.tamilmanam.net/login/register.php

  உங்களுக்கு தமிழ்மணம் சார்பாக ஒரு மெயில் வரும், அது வந்த அப்புறம் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடலாம்.

  பதிவை இணைக்க http://www.tamilmanam.net/index.html லிங்க் போய் "இடுகைகளைப் புதுப்பிக்க" என்கிற பெட்டியில உங்க blog அட்ரஸ் குடுத்தா போதும்.

  திரட்டியில் உங்கள் பதிவுகள் இணைப்பது உங்களுக்கு நிறைய வாசகர்கள் பெற்று தரும்...

  ReplyDelete
  Replies
  1. ராஜ் நான் முன்னரே நீங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழ்மணத்தில் இணைய முயன்றேன்... ஆனால் முடியவில்லை... உங்கள் வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் தமிழ்வெளி மற்றும் இண்ட்லி போன்ற வலைதளங்களிலும் இணைந்தேன்... ஆனால் தமிழ்மணத்தில் இணையும் முயற்சி பலிக்கவில்லை... எனினும் மீண்டுமொரு முறை இணைய முயற்சித்து பார்க்கிறேன்... நீங்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவுக்கும், உற்சாகத்துக்கும், வழிகாட்டுதலுக்கும் மனமார்ந்த நன்றிகள்....

   Delete