Saturday, 27 December 2014

கயல்:

இயக்குநர் பிரபு சாலமனின் திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்களுக்கு, அவரது திரைப்படங்கள் பாராட்டப்படுகிறது என்றால், அது எதற்காக என்று நன்றாகவே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. அதை மயிரிழையில் கண்டடையாமல் விட்டவர்களுக்காக கீழ்கண்ட வரிகள்.. பிரபு சாலமனின் திரைப்படங்கள் இதுவரை, ஒரு வித்தியாசமான கதை சொல்லும் முறைக்காகவோ அல்லது  அத்தியாவசியமான கதைக்கருக்காகவோ பாராட்டப்பட்டதில்லை.. அவரது திரைப்படங்கள் பாராட்டப்படுவதெல்லாம்  காட்சி அழகுக்காகவும், அவரது படங்களுக்கு மட்டும் இசையமைப்பாளர் இமானிடம் இருந்து இயல்பாகவே இறைந்து வரும் ரசம் சொட்டும் பாடல்களுக்காகவும், அன்பை அதாவது காதலை, அதுவும் இளம் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலை போதனை செய்வது போல் (லவ் பண்ணுங்க சார்… லைவ் நல்லா இருக்கும்…) இவர் எடுக்கும் காதல் சிறப்பு வகுப்புகளுக்காகவும் மட்டுமே இவரது படங்கள் இளசுகளிடம் இலவச வரவேற்பையும் பாராட்டையும் பெறுகின்றன…


பிரபு சாலமன் முதன்முதலில் பரவலாக வெளியில் தெரியத் தொடங்கியது, கொக்கி திரைப்படத்துக்கு பின்னர்தான்… அதற்கு பின்னர் வந்த ’மைனா’ தான் அவரது திரைபயண வரலாற்றையே மாற்றிப் போட்டது என்றும் கூறலாம்.. ஆனாலும் கதையாக பார்த்தால் பிரபு சாலமனுக்கு ‘கொக்கி’ திரைப்படம் தான் ஒரு நல்ல அடையாளமாக இருந்தது. அந்த அடையாளத்தை தான் அவர் வளர்த்தெடுத்திருக்க வேண்டும்.. ஆனால் மைனா திரைப்படம் கொடுத்த செழுமையான வணிக வசூல் காடுகளுக்குள்  தொலைந்து போன பிரபு சாலமன் தன் அடையாளத்தை “காதலும் காடு சார்ந்த இடமுமாக” மாற்றிக் கொண்டது தமிழ் சினிமாவின் துரதிஷ்டம் தான்.. ஆக அவரது படைப்பாக இப்போது வந்திருக்கும் இந்த “கயலும்” மேற்சொன்ன அதே வகையான பாராட்டுக்களைத் தான் பெற்றுக் கொண்டு இருக்கிறது.. ஒரே ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் காதல் + காடு இந்த இரண்டோடு கடலும் கைகோர்த்துக் கொண்டிருப்பது தான் அந்த வித்தியாசம்.. பள்ளி செல்லும் சிறுவர்கள் காடும் காடு சார்ந்த இடமும் என்பது முல்லை நிலம் என்பதனை மறந்து பிரபு சாலமனின் திரைப்படங்கள் என்று எழுதாமல் இருக்கக் கடவது.

இவ்வளவு கேலி செய்தாலும் இந்த திரைப்படத்தை என்னால் வெகு எளிதாக புறந்தள்ள முடியவில்லை... அதற்கு காரணம் இந்த கயல் திரைப்படத்தின் மையக்கரு வழக்கமான காதல் தவிர்த்து வேறொன்றுமில்லை என்றாலும் கூட, அதைக் காட்சிப்படுத்தி இருந்த விதமும், அந்த யதார்த்த சூழலும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதற்கே உரிய தனிப்பட்ட குணாதிசயங்களோடு காட்சிபடுத்தி இருப்பதும், ஆங்காங்கே வந்துசெல்லும் சில வலி நிறைந்த சாதியத்துக்கு எதிரான வசனங்களும், இயல்பாகவே வசனங்களுக்கு இடையில் தவழ்ந்து வரும் அந்த நகைச்சுவை உணர்ச்சியும், வழக்கம் போல கண்களை குளிரச் செய்வது போல் குளுமையாக கோர்க்கப்பட்ட காட்சிக் கோர்வைகளும், ஒரு காதலை தோற்கடிக்க வேண்டும் என்கின்ற ஆதங்கத்தில், இன்னொரு காதலுக்கு அவர்களே அஸ்திவாரம் போடுகின்ற அந்த நகைமுரணான காட்சியும், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால் இயல்பாகவே மனசுக்குள் எழும் சுவாரஸ்யமும் என இப்படி மையக்கதையைச் சுற்றி தொடுக்கப்பட்ட விசயங்கள் தான் இந்த திரைப்படத்தை புறந்தள்ள முடியாதபடி, அதன் தரத்தில் கொஞ்சமேனும் மேலேற்றுகின்றன. ஏனென்றால் மேற்சொன்ன இந்த விசயங்களில் எல்லாம் அவர்களது கடுமையான உழைப்பு இருப்பது தெரிகிறது.. ஆனால் இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் படத்தின் முதல்பாதிக்கு மட்டுமே பொருந்தும்..


அப்படியென்றால் இரண்டாம் பாதியில் என்ன இருக்கிறது என்றால், சுவாரஸ்யமே இல்லாத, முரண்பாடுகள் நிறைந்த, காதல் துதி பாடும் வழக்கமான தமிழ் சினிமா தடங்கள் தான் இரண்டாம் பாதி முழுவதும்.. அதில் நாம் என்ன நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கிறது.. இரண்டாம் பாதி முழுவதுமே தேடுதல் படலம் தான்.. அவர்கள் இருவருமே பார்த்துக் கொண்டால் படம் முடிந்துவிடும் என்பது நம் எல்லோருக்குமே தெரியும் என்பதால், அவர்கள் க்ளைமாக்ஸ் நெருங்கும் போதுதான் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறோம்.. அதுவும் அப்படியே தான் நடக்கிறது.. இயக்குநரின் முந்தையை இரண்டு படங்களிலும் காதலை கைகூட விடவில்லை என்பதால், இந்த திரைப்படத்தில் அதனை சேர்த்து வைத்து புண்ணியம் தேடி இருக்கிறார்.. அவ்வளவே வித்தியாசம்..

முதல்பாதியில் இருந்த உழைப்பு இரண்டாம் பாதியில் இல்லையோ என்று தோன்றுகிறது… பிரபு சாலமனின் பலமாக நான் நினைப்பது கதாபாத்திர சித்தரிப்பைத் தான்.. அவரது படங்களில் கொக்கி திரைப்படத்தில் தொடங்கி, மைனா, கும்கி, கயல் என எல்லாத் திரைப்படங்களிலும், நாயகன் நாயகி என்னும் இரண்டு கதாபாத்திரங்களுக்கு மட்டும் இல்லாமல், பிற கதாபாத்திரங்களுக்கும் தனிப்பட்ட குணாதிசயங்களுடன் கூடிய ஒரு முக்கியத்துவத்தை கொடுத்திருப்பார்.. அது கதைக்கு தனிப்பட்ட முறையில் வலுசேர்ப்பதோடு காட்சிகளையும் மிக தத்ரூபமாக மாற்றிக் கொடுக்கிறது.. இந்த மந்திரம் தான் சாலமனின் திரைப்படங்களை காப்பாற்றுகிறது என்று நினைக்கிறேன்.. இப்படிப்பட்ட ஒரு இயக்குநர் தன் கதைக்கருவிலும் கொஞ்சம் மெனக்கெட்டால், அது தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான படைப்பாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு..

இந்த கயல் திரைப்படத்திலும் நாயகன், நாயகி இந்த இரண்டு பேரையும் தவிர்த்து துணை கதாபாத்திரங்களாக வரும் நபர்கள் அதிகமாக மனதில் இடம் பிடிக்கிறார்கள்… கயலில் அந்த வீட்டுக்குள் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் உலவினாலும், அந்த தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு அடியாள் கேரக்டர்கள் மனதில் சிக்கென ஒட்டிக் கொள்கின்றனர்.. அந்த வீட்டை விட்டு கயல் வெளியேறியவுடனே படமும் தனக்கான பலத்தில் பாதியை இழந்து விட்டது போல் ஆகிவிடுகிறது.. ஆழி பேரலையின் சோகத்தில் இன்றளவும் மூழ்கி இருக்கும் நபர்களுக்கு, அத்தகைய பேரழிவுக்கு பின்னிருக்கும் இந்த காதல் களியாட்டங்கள் எந்தளவுக்கு களிப்பை தரும் என்று சொல்லத் தெரியவில்லை.. தைரியமாக காதலை சொல்லிவிட்டான் என்கின்ற ஒரே காரணத்துக்காக, யார் என்னவென்றே தெரியாத ஒருவனைத் தேடி ஒரு இளம்பெண் கிளம்பிவிடுவாளா…?? அதை வயது முதிர்ந்த அவளது பாட்டியும் ஏற்றுக் கொள்வாளா…?? என்பதான சந்தேகங்கள் வலுப்பது கதையின் பலவீனத்தை காட்டிக் கொடுக்கிறது.. ஆழிப் பேரலையின் கொடூர தாண்டவத்தை CGயின் உதவியுடன் ஓரளவுக்கு சிறப்பாகவே காட்சிப்படுத்தி இருக்கின்றனர்..

ஆரோனாக வரும் சந்திரன், கயல்விழியாக வரும் ஆனந்தி இருவரின் நடிப்பும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.. ஆனந்தியின் அற்புதமான கண்கள் வசீகரிக்கிறது.. இருந்தும் ஏதோவொரு மென்சோகம் அவரது முகத்தில் இருப்பது போன்ற உணர்வும் தோன்றுகிறது. ஆரோனின் நண்பனாக வரும் பெயர் தெரியாத அந்த நபர் பல இடங்களில் வசீகரிக்கிறார்.. இமானின் இசை வழக்கம் போல், பிரபு சாலமனின் இந்த திரைப்படத்துக்கும் பக்கபலமாக இருக்கிறது… ஒவ்வொரு பாடல்களும் அந்த காதலின் தருணங்களையும் வலிகளையும் கடத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கிறது.. வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா சட்டகத்தின் பரப்பளவிற்குள் அடங்காத அழகை எல்லாம் அடக்கி அள்ளிவந்து, நம்மை ஆனந்தப்படுத்துகிறது… வழக்கம் போல் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு ஆகச்சிறந்த பலத்தை நல்கி இருக்கிறது.


ஆக மொத்தத்தில் இந்த திரைப்படமும், இதற்கு முன் வந்து பிரபுசாலமனின் திரைப்படங்கள், எதற்காக பாராட்டப்பட்டதோ அதே காரணத்துக்காக பாராட்டப்பட வேண்டிய பட்டியலில் இணைகிறது.. கதைக்கரு என்பது வழக்கமான காதல் என்கின்ற மிகப்பெரிய குறையை தவிர்த்துப் பார்த்தால் வேறு எந்த தவறான பிம்பங்களும் இதில் இல்லை என்பதால், துணிந்து இந்தப் படத்தைப் பார்க்கலாம்.. முதல்பாதி அதன் கலைநயத்தால் உங்களை அசரடிக்கும்… இரண்டாம் பாதி கொஞ்சமாய் இருளடித்தாலும், இமானின் இசை அதை மறக்கடிக்கும்..

No comments:

Post a Comment