Monday, 3 February 2014

ரம்மி:

1987ல் புதுக்கோட்டை வட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களம்.. அதற்காக 87ல் எடுக்கப்பட்ட படங்களின் கதையவே 2014ல் ஓட்டிக் காட்டினால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கிறது ரம்மியும்.. ஒரு காதலுக்கு பதிலாக இரண்டு காதல்.. இரண்டு காதலுக்கு வில்லத்தனம் செய்ய இரண்டு வில்லன்கள்.. இரண்டு வில்லன்களுமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது உபரித் தகவல்.. இரண்டு காதல்களும் என்ன ஆனது என்று சொல்வது இந்த ரம்மியின் சுவாரஸ்யமே இல்லாத ஆட்டம்..


இப்படி ஒரு படத்தை இந்த காலகட்டத்தில் விஜய் சேதுபதியிடம் இருந்து நாம் சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை.. எப்படித்தான் மனிதர் இது போன்ற படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்றே தெரியவில்லை.. மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்றாலும், இவரது கதாபாத்திரத்துக்கான தனித்துவமான வடிவ அடையாளமோ, குணாதிசயமோ, நடிப்பை வெளிப்படுத்துவதற்கான சூழலோ கொஞ்சம் கூட இல்லாத திரைக்கதை… விஜய் சேதுபதியின் கால்சீட் கிடைத்ததுமே ஜெயித்து விட்டோம் என்று இயக்குநர் கனவில் மூழ்கிவிட்டார் போலும்.. இயக்குநர் தனக்கான இடத்தை தேடிப் பிடிக்கவோ..? நடித்த நடிகர்கள் தங்களது இடத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவோ…? கதையிலோ அல்லது திரைக்கதையிலோ எந்தவிதமான முயற்சியும் இயக்குநர் மேற்கொள்ளவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது..


காலாவதியான காட்சிகளாலும் கற்பனை வறட்சியாலும் நிறைந்திருக்கும் காட்சி அடுக்குகள்.. மிகப்பெரிய ஏமாற்றத்தையும் எரிச்சலையுமே கொடுக்கின்றன.. தமிழ் சினிமா கரைத்துக் குடித்த காதல் கரைசலின் துளிகளைக் காட்சிப்படுத்துவதில் கூட இந்தப் படக்குழுவினரால் கரை சேர முடியவில்லை.. அதிலும் காயத்ரி மற்றும் இனிகோ பிரபாகரின் காதலில் கொஞ்சமேனும் ரசனையும், ஒரு சிறியளவிளான சிந்தனை முயற்சியும் இருந்தது.. ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு காதல் வரும் அந்த கிணற்றடி காட்சிகள் எல்லாம் நம்மை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு வீரியம் நிறைந்தவை..


மிகமிக சாதாரணமான காதலும், அதற்கு வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவிக்கும் கும்பல் என வற்றிய குளத்துக்குள்ளாகவே இவர்கள் ஓடம் விட முயற்சித்திருக்கிறார்கள்.. கொஞ்சமேனும் வித்தியாசமான நடிப்புக்காக பேர் வாங்கி வரும் விஜய் சேதுபதியும், இனிகோவும் இப்படிப்பட்ட கதைக்களத்தில் எப்படி பேர் வாங்குவது போல் நடிப்பது என்று தெரியாமல் முழித்திருக்கிறார்கள்.. காதலுக்காகவும், காதலிக்காகவும் உருகுவது, நண்பனுக்காகவும் நட்புக்காகவும் மருகுவது என காப்புரிமை வாங்கிய காட்சிகளின் அணிவகுப்புகளுக்கு இடையில் கதைமாந்தர்கள் கலங்கிப் போய் மங்கலாக காட்சி தருகிறார்கள்..

காயத்ரிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் காதல் படலங்களில் கண் கசக்கும் வேலை தான் என்றாலும் ஆங்காங்கே கொஞ்சமாக ஈர்க்கிறார்கள்.. புரோட்டா சூரி படத்தில் இல்லாமல் இருந்திருந்தால், படத்தில் மீதான எரிச்சல் கொஞ்சம் குறைந்திருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.. அதிலும் இவரும் இனிகோவும் நண்பன் சேதுபதிக்காக எடுக்கும் சூளுரைகள் எல்லாம் சூர்ப்பனகை காலத்து பழசு… என்ன நினைத்து படம் எடுத்தார்கள் என்றே தெரியவில்லை..


சுஜாதா, ஜோ மல்லூரி என நடிக்கத் தெரிந்த நடிகர்கள் எல்லாம் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்… இமானின் இசையில் தேவையே இல்லாமல் பல இடங்களில் பாடல்கள் வருவதால் எதிலுமே மனம் லயிக்கவில்லை.. ஆனாலும் புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தின் மலையின் அழகுகளை எல்லாம் பாடல்களில் ஆங்காங்கே காட்சிப்படுத்தி இருப்பது மட்டுமே ஒரு சின்ன ஆறுதல்… சி.பிரேம்குமாரின் ஒளிப்பதிவு குறை சொல்ல முடியாத வகை..

இயக்குநர் பாலகிருஷ்ணனுக்கு இது முதல் படம் போலும்.. இணை தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்… கதையிலும் திரைக்கதையிலும் நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கிறது.. இருப்பினும் சமூகத்துக்கு தீமை விளைவிக்கும் எந்தவிதமான காட்சிகளும் இல்லாதது மட்டுமே மனநிறைவு தரும் அம்சம்.. அதுதவிர்த்து சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டைரக்டர் ஸார்…


மொத்தத்தில் புதுமை இல்லாத கதை.. புத்திசாலித்தனம் இல்லாத திரைக்கதை… சோபிக்க முடியாமல் திணறும் நடிகர்கள் என எந்த தளத்திலுமே திரைப்படம் நம்மை ஈர்ப்பது இல்லை.. நான் எத்தனையோ ரம்மி ஆடியிருக்கிறேன்… ஆனால் எந்த ரம்மியும் இந்த ரம்மி போல் குறைந்தபட்ச சுவாரஸ்யம் கூட இல்லாமல் இருந்தது இல்லை… இயக்குநருக்கு முதல் படம் என்பதால் ஆரம்பக்கட்ட முயற்சியாக சொல்லலாம்… ஆனால் படம் பார்க்க முயலும் நமக்கு இது ஆரோக்கியமான முயற்சியாக இருக்காது என்பதே என் கருத்து…

No comments:

Post a Comment