Wednesday, 13 December 2017

நிலமெல்லாம் இரத்தம்

புத்தகத்தின் பெயர் : நிலமெல்லாம் இரத்தம்
பிரிவு : அரசியல் & வரலாறு
பதிப்பகம் : கிழக்குப் பதிப்பகம்
ஆசிரியர் : பா.இராகவன்

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்து இருப்பதால், அரேபிய தேசமெங்கும் போர்மேகம் சூழ காத்திருக்கும் இந்த சூழலில், இந்தப் புத்தகத்தின் மதிப்புரையை எங்கிருந்து தொடங்குவது என்றே எனக்கு பெருத்த குழப்பமாக இருக்கிறது. ஏனென்றால் இது கிட்டத்தட்ட இயேசுபிரானின் பிறப்புக்கு முன்பு தொடங்கி, இன்று வரையான 2000 வருடத்து அரசியல் நிகழ்வுகளை அலசுவதால், இதனை பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சனை என்று சொல்லி தொடங்கினால் சரியாக இருக்குமா என்று இதை எழுதத் தொடங்குகின்ற இப்பொழுது வரை குழப்பமாகத்தான் இருக்கிறது. சரி.. எப்படியோ தொடங்கியாயிற்று. இனி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அதிலிருந்து தொடர்ந்து உள்ளே செல்வோம். இஸ்ரேல் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே என்ன பிரச்சனை என்று தெரியுமா..? என்று கேட்டால், பலரும் இரண்டும் அண்டை நாடுகள், வேறு என்னப் பிரச்சனை இருக்கும் எல்லைப் பிரச்சனை தான்.. என்று சொல்லி நழுவப் பார்ப்பார்கள். அவர்களை வம்படியாக பிடித்து இழுத்து, கையில் ஒரு உலக மேப்பையும் திணித்து, எந்த எல்லைக்கோட்டை வைத்து அவர்களுக்குள் பிரச்சனை, எங்கே கோடிட்டு காட்டு, என்று நாமும் அவர்களோடு குத்த வைத்து உட்கார்ந்தோமானால், தேடு தேடு என்று தேடி விட்டு, இஸ்ரேல் இங்க இருக்கு..? பாலஸ்தீனம் எங்க…? என்று கவுண்டமணி பாணியில் (இல்லையென்றால் அவரையும் விட பரிதாபமாக) நம்மையே கேப்பார்.



அதுவே நீங்கள் கேள்வி கேட்ட ஆள், ஒரு நூறு வயது நிரம்பிய பாலஸ்தீன பெரியவர், 70 வருடமாக கோமாவில் இருந்து மீண்டவர் என்று வைத்துக் கொண்டால் (வைத்துக் கொள்வோமே, 100 வயது நிரம்பிய பெரியவருக்கு உலகவரைபடத்தில் உள்ள எழுத்தெல்லாம் கண்ணுக்கு தெரியுமா.? என்று குதர்க்கமாக யோசிக்கக் கூடாது.) அவர் நம்மை மேலும் கீழும் பார்த்துவிட்டு, இது உலக மேப் தானா.? என்று எதிர்கேள்வி கேட்பார். நாமும் சத்தியம் செய்யாத குறையாக சாதித்தோமானால், உள்ளங்கையளவு இருந்த என் மண்ணு பாலஸ்தீன் எங்கடா கடுகளவு கூட இல்லாமப் போச்சு…?? என்று நம்மை அடிக்கப் பாய்வதோடு, “அய்யா என் நாட்டக் காணுமுய்யா… களவாண்டுட்டானுக” என்று பதறிக் கொண்டு ஓடுவார். இப்படித்தான் பாலஸ்தீன் மண்ணைச் சேர்ந்த ஒவ்வொரு மக்களும் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். சுற்றிலும் இருக்கின்ற மத்தியக் கிழக்கு நாடுகள் ஒவ்வொன்றிலும் அகதிகளாக..?? என்னதான் ஆயிற்று அந்த தேசத்துக்கு…? அதை நீங்கள் முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நிலமெல்லாம் இரத்தம் என்னும் புத்தகத்தை, அல்லது வரலாற்றின் பல பக்கங்களை, அதற்கெல்லாம் நேரமில்லை என்று நினைத்தீர்களானால், நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் இந்தப் பக்கங்களையாவது புரட்டித் தான் ஆக வேண்டும்.



ஏன் படிக்க வேண்டும்

இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனையை நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் கேட்டால், கண்டிப்பாக சம்பந்தம் இருக்கிறது என்று நான் சொல்லுவேன். எப்படி என்றால், அங்கே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனை தான், சில ஆண்டுகளாக நமக்குள்ளும் புகைந்து கொண்டிருக்கிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் பாபர் மசூதி, இராமர் கோவில் பிரச்சனைக்கு ஒப்பான ஒரு பிரச்சனையால் தான் அந்த இரு தேசங்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. நாமும் அதுபோல் எரியக் கூடாது என்பதற்காக மட்டுமல்ல.. தாய் நாட்டில் இருந்து துரத்தப்பட்டு, வீடு,வாசல், சொந்தங்களை இழந்து நிராதரவாக தவித்துக் கொண்டிருக்கும் நம் ஈழ சொந்தங்களுக்கு, நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவைப் பெறவும், ஒரு இனம் பல நூறு ஆண்டுகளாக ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டாலும், மீண்டும் மீண்டும் தவிர்க்க முடியாத சக்தியாக எழுந்து நிற்கும் ஆற்றலுக்கு, எது அடிப்படையாக இருந்தது என்பதனை அந்த யூதர்களிடம் இருந்து தெரிந்து கொள்வது, பின்னாளில், நம் தமிழ் இனத்துக்கும் உதவும் என்பதாலும், மூன்று மிக முக்கியமான மதங்களின் பின்புலத்தை அறிந்து கொள்வது, மத அரசியலை புரிந்து கொள்ள உதவும் என்பதாலும், வரலாறு முக்கியம் அமைச்சரே என்கின்ற வரிகள், உண்மையாகவே முக்கியம் என்பதாலும் இந்தப் புத்தகத்தை நாம் படிக்கத் தான் வேண்டும்.

                           என்ன  பிரச்சனை

மதம் தான். மதம், அரசியல், உணர்ச்சி இவை தனித்தனியே வந்து நின்றாலே பிரச்சனை தான். இவை மூன்றும் கைகோர்த்து வந்து நின்றால் கேட்கவா வேண்டும். பாலஸ்தீனில் நடப்பது இதுதான். பாலஸ்தீன் என்னும் அந்த அகண்ட தேசத்தில் தான் ஜெருசலேம் இருந்தது. (இன்று அது இஸ்ரேல் தேசத்துக்குள் இருக்கிறது) ஜெருசலேம் என்றதுமே அனைவருக்கும் தெரியும் கிறிஸ்துவ மதத்தின் ஆதியான இயேசு நாதர் பிறந்த இடம் என்று.. அந்த இடம் எப்படி யூதர்களுக்கும், பாலஸ்தீனிய அராபியர்களுக்கும்(இஸ்லாமியர்கள்) மத ரீதியில் முக்கியமான இடமாக மாறியது என்பது பெரும்பாலானோர் அறியாது. அதை அறிவதற்கு முன்னர் நாம் யூதர்கள், அராபியர்கள், கிறிஸ்துவர்கள் யார் என்பதனை அறிய வேண்டும். அதற்கு நாம் கிறிஸ்து பிறப்பதற்கும் முன்னோக்கி செல்ல வேண்டும். செல்வோமாக..



கி.மு-வில் நடந்த கதை

யூதர்களும், அராபியர்களும் எகிப்து, லெபனான், சிரியா, ஜோர்டான், ஈரான்,ஈராக், சவுதி அரேபியா, பாலஸ்தீனம் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடி இனங்கள். இரண்டு இனங்களுமே உருவ வழிபாடு, மற்றும் சிறு தெய்வ வழிபாடுகளை கடைபிடித்துக் கொண்டிருந்த இனம் தான்.. யூத இனத்தைச் சேர்ந்த ஆபிரஹாம் தன் மனைவி சாராவுடன் வாழ்ந்து வருகிறார். இருவருமே வயோதிகர்கள். குழந்தை இல்லை. சாரா தன் வேலைக்காரப் பெண்ணான ஆகார் என்னும் அராபியப் பெண்ணை தன் கணவனுக்கு மணமுடிக்க.. ஆகார் கர்ப்பம் ஆகிறாள். இஸ்மாயில் என்னும் மகனைப் பெற்று எடுக்கிறாள். சில ஆண்டுகள் சென்றப் பின்னர் சாராவும் கர்ப்பம் தரிக்கிறாள். அவளுக்கு ஈசாக் பிறக்கிறான். இப்பொழுது சாரா, ஆகாரின் மீது பொறாமை கொண்டு, தன் கணவனிடம் சொல்லி அவளை வீட்டை விட்டு அனுப்புகிறாள்.

பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஆகார், இறக்க கிடக்கும் தன் மகனைப் பார்த்து அழுது புலம்ப.. கடவுளின் அசரரீ ஒலிக்கிறது. சாராவின் சந்ததியை நான் எப்படி பெருகப் பண்ணுவேனோ அது போல உன் சந்ததியையும் நான் பெருகப் பண்ணுவேன் என்று சொன்னதோடு, நீர் இருக்கும் சுனையை நோக்கி அவளை வழிநடத்துகிறது அந்தக் குரல். இப்படித்தான் ஆகார் தன் மகனான இஸ்மாயில் உடன் எகிப்திலிருந்து இடம்பெயர்ந்து, பாலஸ்தீன்(அன்றைய கானான் தேசம்) வந்து வசிக்கத் துவங்குகிறாள். இந்த இஸ்மாயிலின் வம்சத்தினர் தான் அரேபியர்கள். (அதற்கு முன் பாலஸ்தீனில் வசித்து வந்தவர்கள் பற்றிய எந்தவொரு வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை.) இது கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் உள்ள கதை அல்லது வரலாறு. ஆக யூதர்களும் இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளே. இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக பைபிளில் இருந்து இன்னொரு சம்பவம். மோஸே என்று ஒரு இறைதூதர் யூத வம்சத்தில் உதிக்கிறார். இவர் எகிப்தியப் படை இவர்களை துரத்தும் போது, இறைவனின் கட்டளையின் படி, எகிப்தில் இருந்து யூத மக்களை அழைத்துக் கொண்டு, செங்கடலை தன் மந்திரக்கோல் கொண்டு, கர்த்தரின் உதவியுடன் இரண்டாகப் பிளந்து அதன் வழியாக அன்றைய கானான் தேசத்தை(பாலஸ்தீனம்) அடைந்ததாக ஒரு சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. இதுதான் முதன் முதலாக யூதர்கள் பாலஸ்தீனம் என்னும் தேசத்துக்குள் நுழைந்ததற்கான வரலாற்று பூர்வ சான்று. அப்போதே அங்கு பாலஸ்தீனிய அராபியர்கள்(இஸ்மாயில் சந்ததியினர்) வசித்து வருகிறார்கள். ஆக பாலஸ்தீன அராபியர்கள் யூதர்களைக் காட்டிலும் பாலஸ்தீனத்தின் பூர்வக் குடிகள் இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


யூதர்களும் கிறிஸ்துவர்களும்

முன்னரே பார்த்தது போல மத்திய கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து வந்த பழங்குடி இன மக்கள் தான் யூதர்கள். சிறு தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள். இவர்கள் இனத்தில் தான் தொடர்ச்சியாக இறை தூதர்கள் தோன்றத் தொடங்க இவர்களின் வழிபாட்டு முறை மாறுகிறது. உருவமற்ற வழிபாட்டு முறைக்கு மாறுகிறார்கள். ஆபிரஹாம், மோசே, தாவீது என்று இறைதூதர்கள் இந்த இனத்தில் தோன்றி, கடவுளிடம் இருந்து பெரும் வேதங்களை தங்கள் இனத்து மக்களுக்கு போதித்து அவர்களை வழிநடத்துகிறார்கள். தோரா என்பது இவர்களின் வேத நூல். தொடர்ச்சியாக இவர்கள் இனத்தில் இறை தூதர்கள் தோன்றுவதோடு, அவர்கள் வாயிலாக வேதம் அருளப்பட்டதோடு, இந்த இனம் பூமியில் என்னால் ஆசிர்வதிக்கப்பட்ட இனம் என்றும் கடவுள் கூறியதாக இந்த இன மக்கள் நம்புகின்றனர். இதனால் இயல்பாகவே பிற இன மக்களிடம் இவர்கள் சற்றே அகந்தையாக நடந்து கொள்ளும் இயல்பை பெறுகின்றனர். மேலும் சாலமன் மன்னனால் கட்டப்பட்ட மிகப் பழமையான யூத தேவாலயம் ஜெருசலேமில் இடம் பெற்றிருக்கின்றது. ஆக ஜெருசலேம் இவர்களுக்கு முக்கியத்துவமான வழிபாட்டு ஸ்தலம் ஆகிறது.




இவர்கள் தங்கள் புனித நூலில் குறிப்பிட்டப்படி ஒரு தேவ குமாரனை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருந்த இனம். இந்த சூழலில் ஏரோது என்னும் மன்னன் பாலஸ்தீனை ஆளத் தொடங்குகிறான். இவன் சாலமன் மன்னன் கட்டிய யூத தேவாலயத்தை புதுப்பிக்கிறான். இவனது ஆட்சியில் நட்சத்திரங்களின் வழிகாட்டுதலோடு தேவகுமாரன் இயேசு பிறக்கிறார். தனது ஆட்சிக்கு ஆபத்து என்று கருதி, குழந்தை இயேசுவைக் கொல்ல துடிக்கிறான் மன்னன் ஏரோது. இயேசுவின் தந்தை யோசேப்பு குழந்தையோடு எகிப்துக்கு தப்புகிறார். ஏரோது மன்னரின் இறப்புக்கு பின்னர் நாசரேத்து என்னும் பாலஸ்தீனிய நகருக்கு வருகிறார்கள். தன் வாலிப பருவத்தில் இறைமகனார் இயேசு ஞானஸ்நானம் பெற்று, அருள்வாக்கு சொல்லத் தொடங்குகிறார். பெரும்பகுதி நாட்களை ஏரோது மன்னரால் புதிப்பிக்கப்பட்ட தேவாலயத்தில் ஜெபத்திலேயே கழிக்கிறார். அற்புதங்கள் நிகழ்த்துகிறார். இவர் தான் இறைமகனோ என்று யூத இனம் யோசிக்கத் தொடங்கிறார்கள்..

 யூதர்கள் ஓய்வு நாளாக அனுசரிக்கும் சனிக்கிழமையில் ஒரு குருடனை குணமாக்குகிறார். மேலும் யூதர்களின் மூடநம்பிக்கைத்தனமான மதச் சடங்குகளை கண்டிக்கிறார், யூதர்களின் ஒரு கூட்டம் அவரை பின்பற்றத் தொடங்குகிறது. சாலமன் மன்னனால் கட்டப்பட்டு, ஏரோது மன்னரால் புதுப்பிக்கப்பட்ட தேவாலயம் இடிந்து போகும் என்று ஆருடம் சொல்கிறார். இதனால் கோபம் கொண்ட ஒரு யூத கூட்டம் இவர் தேவகுமாரன் இல்லை என்று முடிவுக்கு வந்து அவரை சிலுவையில் அறைகிறது. அவர் உயிர்தெழுகிறார். அவரைப் பின்பற்றிய கூட்டம் கிறிஸ்துவர்களாக மாறுகிறது. அவரது போதனைகளையும் தோராவுடன் சேர்த்து அதனை பைபிள் என்னும் புனித நூலாக மாற்றுகிறது. இயேசு பிறந்த வளர்ந்த ஊர் என்பதால், ஜெருசலேம் அவர்களுக்கும் புனித பூமி ஆகிறது.



இயேசு தேவகுமாரன் அல்ல.. தேவகுமாரன் இனிதான் வரப்போகிறார் என்று காத்திருந்த கூட்டம் யூதர்களாகவே தொடருகிறது.

இஸ்லாம்

அராபியர்களும் மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வந்த பூர்வக்குடி மக்கள் தான். இவர்களும் சிறு தெய்வ வழிபாடுகள் மட்டுமே செய்து வந்தவர்கள். மேலும் முன்னரே பார்த்தபடி இவர்களும் ஆபிரஹாம் சந்ததி என்பதால், ஆபிரஹாமினால் நிறுவப்பட்ட மெக்காவில் உள்ள க-அபா என்ற ஆலயத்தில் உருவ வழிபாடு நடத்தி வந்த மக்கள் தான். கிட்டத்தட்ட 360 தெய்வங்களை இவர்கள் வணங்கி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இயேசு தோன்றி 600 ஆண்டுகள் கழித்து, அராபிய இனத்தில் ஒரு இறைத்தூதர் தோன்றினார். அவர் தான் முகமது நபிகள்.

நபிகளுக்கு ஜிப்ரில் என்கின்ற தேவதூதன் மெக்காவிற்கு அருகில் உள்ள ஹரா என்ற குன்றுப் பகுதியில் காட்சியளித்து 23 ஆண்டுகள் போதித்த போதனைகள் தான் குர்-ஆன் ஆக ஓதப்பட்டது. ஒரு முறை முகமது நபிகள் தன் மனைவியின் மரணத்துக்கு பின்னர் சோர்ந்து அமர்ந்திருந்த போது, ஜிப்ரில் தோன்றி அவரை புராக் என்னும் பறக்கும் குதிரையில் அமர்த்தி ஜெருசலேம் நகரின் ஒரு குன்றின் மீது கூட்டி போய் வைத்ததாகவும், அங்கு அவர் முன்பிருந்த நபிகளான ஆபிரஹாம், மோஸே, இயேசு ஆகியோருடன் சேர்ந்து விருந்து உண்டதாகவும், பின்னர் அங்கிருந்து புராக்கின் மீது ஏறி ஜிப்ரிலுடன் தேவலோகம் சென்றதாகவும், அங்கு கண்ணைப் பறிக்கும் பேரொளியைக் கண்டதாகவும் இலந்தை மரத்தின் அடியில் அவருக்கு இடம் கிடைத்ததாகவும், பின்னர் மீண்டும் ஜிப்ரில் முகம்மது நபிகள் அவர்களை அங்கிருந்து ஜெருசலேமுக்கும், பிறகு அங்கிருந்து மெக்காவுக்கு கொண்டு வந்து விட்டதாக தன் அனுபவத்தை விவரித்துள்ளார். அவர் ஜெருசலேமில் இறங்கிய அந்த இடம் தான் இன்று பெரும்பாலும் புகைப்படத்தில் காட்டப்படும் Dome Of the Rock. எனவே இஸ்லாம் மதத்தவருக்கும் ஜெருசலேம் புனிதபூமி ஆகிறது.



பாலஸ்தீனை ஆண்டவர்கள்

ஆரம்ப காலத்தில் ரோம் சாம்ராஜ்ஜியமும், அவர்களிடம் இருந்து அவ்வபோது கிளர்ச்சி செய்து யூதர்களும், பின்பு மீண்டும் யூதர்களிடம் இருந்து ரோம் சாம்ராஜ்ஜியம் பாலஸ்தீனைக் கைப்பற்றியதோடு, முதன்முறையாக யூதர்களை நாட்டை விட்டு துரத்தியதும், இந்த ரோம் பேரரசு தான். அப்பொழுது வரலாற்றில் மிகவும் பிரபலமான கலிகுல்லா ரோமின் பேரரசராக இருந்தார். அவர் இனி அனைவரும் தன்னுடைய உருவச் சிலையைத் தான், கடவுளாக வணங்க வேண்டும் என்று ஆணையிட. அதிலிருந்து எப்படியோ விலக்குப் பெற்ற யூதர்கள், இனி இது தொடர்ந்தால், ஒரு கட்டத்தில் தங்கள் மதமே அழிந்துவிடும், என்ற பயத்தில் ரோம் பேரரசை எதிர்த்து கிளர்ச்சி செய்கின்றனர். இப்பொழுது தான் அவர்கள் முதன்முதலாக பாலஸ்தீனில் இருந்து அடித்து வெளியேற்றப்படுகிறார்கள். இப்பொழுது பாலஸ்தீனிய அராபியர்கள் வெறும் பார்வையாளர்களே. அதைத் தொடர்ந்து உலகமெங்கும், குறிப்பாக ஐரோப்பிய தேசமெங்கும் யூதர்கள் ஒவ்வொரு நாடுகளிலும் விரட்டப்பட்ட நிகழ்வும், மிக விரிவாக வரலாற்றுச் சுவையுடன் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ரோம் சாம்ராஜ்ஜியம் கிறிஸ்துவ மதத்தை தழுவத் தொடங்கிய காலத்தில், பாலஸ்தீன் கிறிஸ்துவ பைசாந்திய மன்னர்களால் ஆளப்படுகிறது. பின்னர் சில காலம் பெர்சிய மன்னர்களாலும், அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற முஸ்லீம் கலிபாக்களினாலும் ஆளப்படுகிறது. கலிபாக்களின் காலத்தில் தான், ரோமின் போப்பாண்டவர், “தேவனின் சாம்ராஜ்ஜியம் வெகு விரைவில் வருகிறது, ஆயத்தமாகுங்கள் என்று அழைப்புவிடுகிறார். தங்கள் காலம் முடிவதற்குள் இயேசுபிரான் பிறந்த புனித மண்ணை ஒரு முறையாவது முத்தமிட வேண்டும் என்ற கனவோடு, ஐரோப்பிய தேசம் எங்கும் வசிக்கும் கிறிஸ்தவர்கள் அணி அணியாக திரண்டு, ஜெருசலேம் நோக்கி வருகின்றனர்.



அவர்கள் வருகின்ற வழியில் கலீபாக்களின் ஆட்சி நடைபெறும், அரேபிய மண்ணான, சவூதி அரேபியா, சிரியா, லெபனான், ஈரான், ஈராக், ஜோர்டான் ஆகியவற்றை கடந்து வரும் வழி எங்கும், கிறிஸ்துவ மக்களும், யூதர்களும் மாற்று மதத்தவர்கள் என்பதால், திம்மி இனத்தவர் என்று அழைக்கப்பட்டதோடு, அதிக வரிச்சுமைக்கும் ஆளாக்கப்பட்டதை கண்டு கொண்டே வரும் கூட்டத்திடையே, இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வருகிறது. (இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம், இதே காலங்களில் பிற தேசங்களில் வாழ்ந்த பிற மதத்தவர்கள், கட்டாய மதமாற்றம் அல்லது படுகொலை செய்யப்பட. இங்கு அந்தமாதிரியான கொடுமைகள் எதுவுமே நடக்கவில்லை.. வரி அதிகம் அவ்வளவே..!!!) யூதர்கள் துன்பப்படுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சியே இருப்பினும், அவர்களோடு தங்கள் இனமான கிறிஸ்துவர்களும் துன்பப்படுவதைப் பார்க்க முடியாமல், தங்கள் தேவ குமாரன் பிறந்த மன்னை மீட்போம் என்று கிளர்ச்சியில் குதிக்க.. இதை சாதகமாக பயனபடுத்திக் கொண்ட போப் அவர்கள், தன் சக்தியையும் நிருபிக்க.. இதை பிரசித்திப் பெற்ற சிலுவைப் போராக மாற்றி மக்கள் அனைவரும் பங்கேற்கும்படி அறைகூவல் விடுக்க… 170 ஆண்டுகாலம் நீண்ட சிலுவைப் போர் இஸ்லாமிய, கிறிஸ்துவ தேசங்களுக்கு இடையே தோன்றுகிறது. வீரர்கள் தங்கள் கழுத்தில் சிலுவை அணிந்து போரிட்டதால் இவை சிலுவைப் போர் என்ற பெயர் பெற்றது. சிலுவைப் போர் காலங்களில் சில காலம் கிறிஸ்துவ ராஜ்ஜியங்களால் ஆளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக 20ம் நூற்றாண்டில் பிரிட்டனின் ஆட்சிமட்டத்துக்கு கீழ் வருவதற்கு முன்பு வரை, பாலஸ்தீன் துருக்கி ஓட்டோமான் இஸ்லாமியப் பேரரசின் ஆளுகைக்கு கீழ் இருந்த ஒரு தேசமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக ஒரு காலம் வரை பாலஸ்தீனை யார் ஆள்வது என்பது கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையேயான முக்கியமான பிரச்சனையாக இருந்து, இப்போது அந்த தேசம் யூதர்களால் ஆளப்பட்டு, கிறிஸ்துவர்கள் அதற்கு உதவி செய்து, இஸ்லாமியர்கள் அதை எதிர்த்து போராடும் நிலைக்கு வந்திருக்கிறது.

இஸ்ரேலின் இருப்பிடச் சிக்கல்

பாலஸ்தீனம் என்னும் தேசம் சரித்திர நியாயங்களின் அடிப்படையிலும், அம்மண்ணின் பூர்வீகக் குடிகள் என்கின்ற முறையிலும் பார்த்தால், கண்டிப்பாக அது பாலஸ்தீன அராபியர்களுக்கு உரியதுதான். யூதர்களும் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் தான், அவர்களும் அந்த மண்ணில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பே வந்தேறிகளாக வாழ வந்தவர்கள் தான். அராபிய இனம் மத்திய கிழக்கு நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளான சிரியா, ஜோர்டான்,லெபனான், ஈராக், எகிப்து, ஈரான், சவுதி அரேபியா முழுக்க பரவி இருந்த இனம். அந்த இனம் பாலஸ்தீனிலும் பரவி இருந்தது. அதனால் பாலஸ்தீன அராபியர்கள், அல்லது பாலஸ்தீன முஸ்லீம்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒரு காலத்திலும் பாலஸ்தீனை விட்டு வெளியேறியதில்லை. 1948ல் அவர்கள் தேசத்திற்குள், அவர்கள் அனுமதியின்றி ஐ.நா மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் துணையுடன் இஸ்ரேல் என்னும் தேசம் உருவானதாலும், அதனை முன்னிட்டு நடந்த போர்களினாலும் அகதிகளாக்கப்பட்டு சமீபத்தில் வெளியேற்றப்பட்ட இனம்.


ஆனால் யூதர்கள் வரலாற்றின் படி பார்த்தால் பாலஸ்தீனில் முழு நூற்றாண்டு கூட தொடர்ச்சியாக தங்கியது இல்லை. பாலஸ்தீனை தங்கள் தேசமாக மாற்ற முனைந்து, ரோமுடன் போரிட்ட போது, ரோம் மன்னர்களால் துரத்தப்பட்டார்கள். பின்பு மீண்டும் வந்தவர்களை கிறிஸ்தவ இனம் தளைத்த போது ஓடஓட விரட்டியது. முஸ்லீம் கலிபாக்களின் ஆட்சியின் கீழ் மட்டுமே பாலஸ்தீனில் அவர்கள் அமைதியாக வாழ்ந்தார்கள்.(திம்மி என அழைக்கப்பட்டு அதிக வரி வசூலிக்கப்பட்டது என்றாலும் கூட..) ஆனால் முஸ்லீம் கலிபாக்களுக்கும் ஐரோப்பிய கிறிஸ்துவ நாடுகளுக்கும் சிலுவைப் போர் தொடங்கிய காலத்தில் மீண்டும் கிறிஸ்துவர்களால் தாக்கப்பட (கவனிக்க… தாக்குபவர்கள் இஸ்லாமியர்கள், அரேபியர்கள் அல்ல..) மீண்டும் யூதர்கள் நாட்டை விட்டு ஓடி, ஐரோப்பிய தேசம், ரஷ்ய தேசம், அமெரிக்க தேசம் என்று பரவினார்கள்.



சமீப காலத்தில் ஹிட்லரும் அந்த இனத்தை பூண்டோடு அழிக்க வகை தேடிய போது, ஒட்டு மொத்த உலகத்தின் பரிதாபத்தை சம்பாதித்தார்கள். அவர்களுக்கான நிலம் என்று உலகில் எதுவுமே இல்லையே என்று ஒட்டு மொத்த உலக நாடுகளும் கவலை கொண்டது. அவர்களும் தமக்கான தேசம் என்று எதனை கைகாட்டுவது என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்த போது, பெரும்பாலான யூதர்கள் கைகாட்டியது பாலஸ்தீன் தேசத்தை. ஏனென்றால் அது அவர்கள்து யூத மத நம்பிக்கைகளுடன் தொடர்புடைய புண்ணிய பூமி. அவர்களை வரலாற்றில் ஹிட்லருக்கு அடுத்த படியாக ஓடஓட விரட்டிய கிறிஸ்துவ தேசங்களும், கிறிஸ்துவர்களும் கூட அடிப்படையில் நாமும் யூதர்கள் தானே..!!?? அதிலிருந்து பிரிந்தவர்கள் தானே நாம் என்று எண்ணினார்களோ எண்ணவோ...!!!?? சத்தமில்லாமல் யூத தேசம் உருவாக உதவத் தொடங்கினர். பிரிட்டன், அமெரிக்கா போன்ற தேசங்களுக்கு மத்தியக் கிழக்கில் தாங்கள் வழுவாக கால் ஊன்றி எண்ணெய் தேசங்களை கண்காணிக்க, ஒரு இடம் கிடைத்த திருப்தி. அவர்களும் ஆதரவு நிலைப்பாடு எடுக்க.. யூதர்களும் சாமர்த்தியமாக இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் தரப்பு, அமெரிக்கத் தரப்பு இரண்டிலும் போரில் பங்கேற்றார்கள். ஒவ்வொரு நாட்டிலும் வாழ்ந்த யூதர்கள், அந்தந்த நாடுகளுக்காக போரிட்டார்கள். எந்தக் கூட்டணி வெற்றி பெற்றாலும் தங்கள் யூத தேசம் என்ற கனவு வெற்றியடைய வேண்டும் என்பது அவர்கள் கணக்கு. ஆனால் அப்படி ஒரு தேசம் உருவாகும் போது அங்கு புனிதமான யூத இனம் மட்டுமே இருக்க வேண்டும். பழமைவாத அடிமைக் கூட்டத்தின் இனமான அரபு முஸ்லீம்கள் இருக்கக் கூடாது. ஜெருசலேமை அவர்கள் சொந்தம் கொண்டாடக் கூடாது என்று வளைந்து கொடுக்காமல் இருந்ததும், அது சரிதான், பாலஸ்தீன அராபியர்களுக்கு இருக்க இடம் இல்லையா என்ன…? பரந்த அரபு தேசம் முழுக்க இருக்கிறதே என்று நினைத்த ஐரோப்பிய நாடுகளின் எண்ணமும் தான் பாலஸ்தீன அராபியர்களுக்கு சிக்கலாக மாறி அவர்களை அகதிகளாக அலையவிட்டு இருக்கிறது.

யூதர்களின் பிரச்சனைகள்

ஒரு கட்டத்தில் யூதர்களுக்கு கிறிஸ்தவர்களே மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தார்கள். இயேசுவைக் கொன்றவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியதால், கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எல்லாம் யூதர்கள் மீது காட்டுமிரான்டித்தனமான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. சிலுவைப் போர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்துக்கும் கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்துக்கும் இடையே பாலஸ்தீனைக் கைப்பற்றும் நோக்கில் 170 ஆண்டுகாலமாக நடைபெற்ற போராக இருந்தாலும், இந்தப் போரினால் அதிகமாக பாதிக்கப்பட்ட இனம் யூதர் இனம் தான். ஏனென்றால் சிலுவைப் போர் வீரர்கள், ஐரோப்பிய தேசங்களில் இருந்து கிளம்பி போருக்கு வரும் வழியில் எதிர்படும் யூத குடியிருப்புகளை தாக்குவதும், யூதர்களைக் கொல்வதையும் ஒரு பொழுதுபோக்காகவே கொண்டு இருந்தனர்.



மேலும் போகின்ற இடங்களில் எல்லாம் யூதர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தாலும், கடின உழைப்பாலும், கல்வி அறிவாலும், அரசு அலுவலர்களை கைக்குள் போட்டுக் கொண்டு லஞ்சம் கொடுத்ததாலும் உயர் பதவிகளை எளிதாகப் பெற்றதோடு, உள்ளூர் மக்களின் வெறுப்பையும் சம்பாதித்ததால் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், போர்ச்சுக்கல் என்று எல்லா நாடுகளிலும் தொடர்ச்சியாக விரட்டப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். மேலும் போகின்ற இடங்களில் எல்லாம் நிலங்களை அத்துமீறி வளைத்துக் போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இவர்கள் மீது வைக்கப்பட்டது. மேலும் யூதர்களுக்கு ஹிட்லர் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவரது காலத்தில் போலந்து, ரஷ்யா, ஜெர்மன் என்று அவர் கைப்பற்றும் இடங்களில் எல்லாம் வசித்து வந்த யூதர்கள் விஷவாயுக் கலன்களில் அடைக்கப்பட்டு கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். பத்து இலட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் அந்தக் காலக்கட்டத்தில் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் யூதர்கள் ஐரோப்பிய குடியேற்றங்களில் கூட மூன்றாம் தர மக்களாகத்தான் நடத்தப்பட்டார்கள். மேலும் கலீபாக்களின் காலத்தில் அவர்கள் திம்மிகள் என்ற பிரிவுக்குள் உட்படுத்தப்பட்டு, அதிகமான வரி வசூலுக்கு உள்ளானார்கள் என்கின்ற சுமையும் இதனோடு அடங்கும்.

அராபியர்களின் பிரச்சனைகள்

அராபியர்களில் பாலஸ்தீனிய அராபியர்களுக்குத்தான் பிரச்சனையே. மற்ற அரபு தேசங்களான சிரியா, லெபனான், ஈரான்,ஈராக், சவுத் அரேபியா, ஜோர்டான் போன்ற தேசங்களில் உள்ள அராபியருக்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் நிகழவில்லை. எல்லா தேசங்களிலும் விரட்டப்பட்ட யூதர்கள் தங்களுக்கான தேசம் ஒன்று வேண்டும் என்று முடிவு செய்த போது, அவர்களின் பார்வை, தங்களின் புண்ணிய பூமி என்பதால் பாலஸ்தீன் மீது விழ.. அதுதான் அவர்களுக்கு பிரச்சனையாகிப் போனது. ஐரோப்பிய தேசங்களை ஒப்பிடுகையில் அரபு தேசங்களில் வாழ்ந்த யூதர்கள் அந்தளவுக்கு கொடுமைப்படுத்தபடவில்லை என்பது தான் உண்மை. முஸ்லீம் கலீபாக்களான உமர், அபூபக்கர், சலாவுதீன் போன்றோர் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் மிகவும் கண்ணியத்தோடு நடத்தியதோடு, அவர்களுக்கு ஜெருசலேமில் வழிபாடு செய்வதற்கான உரிமையை எப்போதுமே மறுத்ததில்லை. மேலும் தங்கள் ஆட்சியின் போது, அவர்கள் நாடு கடத்தப்பட்ட யூதர்களை மீண்டும் பாலஸ்தீனுக்கு வாழ்வதற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்த கண்ணியமானவர்கள்.

ஆனால் யூதர்கள் பாலஸ்தீனை பிரிட்டன் அமெரிக்காவின் துணையோடு ஆக்ரமித்த போது, அந்த பரிவையும் கனிவையும் கொஞ்சம் கூட பாலஸ்தீனிய அராபியர்கள் மீது காட்டவில்லை என்பது தான் வருந்தத்தக்கது. மேலும் அவர்களுக்கு பாலஸ்தீனில் இருக்கும் உரிமையை முற்றிலுமாக மறுப்பதும் கண்டிக்கத்தக்கது. யூதர்கள் தாங்கள் கொண்ட புத்தி கூர்மையைக் கொண்டு, நில வங்கி என்னும் அமைப்பை உருவாக்கி, பாலஸ்தீனியர்களின் நிலங்களை அவர்கள் அறியாத வண்ணம் வளைத்துப் போட்டு, ஒரு கட்டத்தில் அவர்களுக்கு மத்தியில் போய் கும்பல் கும்பலாக குடி ஏறியதும், படிப்பறிவு இல்லாத அரேபிய மக்கள் இதனை திட்டமிட்ட செயலாக கருதாமல், இயல்பாக நடப்பதாக எண்ணி கண்டுகொள்ளாமல் விட்டதும், உலகப் போர்களில் ஹிட்லரின் அட்டுழியத்தால் எல்லா உலக நாடுகளுக்கும் தங்கள் மீது ஏற்பட்ட பரிதாபத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, இஸ்ரேல் என்னும் தனி நாடு கோரிக்கையை பிரிட்டன் துணையுடன் சாதித்ததோடு, பாலஸ்தீனிய அராபியர்களை அகதிகளாக அவர்களின் சொந்த மண்ணில் அலையவிட்டதும், தான் அராபியர்களின் பிரச்சனை.



மேலும் தங்கள் சகோதர நாடுகளான சிரியா, லெபனான், ஜோர்டான், எகிப்து, ஈராக் போன்ற தேசங்கள் தனக்காகத்தான் போரிடுகின்றன என்று பாலஸ்தீனிய அராபியர்கள் நம்பிக்கையோடு காத்திருக்க.. பாலஸ்தீன் நிலப்பரப்பை நட்பு நாடுகள் ஆக்கிரமித்த கையோடு, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுவிட்டு, தனக்கு கிடைத்த நிலப்பரப்பை லாபமாகக் கருதிக் கொண்டு, அமைதியாக திரும்பிச் சென்றதும் கூட பாலஸ்தீனிய அராபியர்களுக்கு பிரச்சனையாகத்தான் போய்விட்டது. அந்த நட்பு நாடுகள் நினைத்திருந்தால், அன்றே சுதந்திர பாலஸ்தீன தேசத்தை உருவாக்கி இருக்க முடியும். ஆனால், யூதர்களிடம் இருந்த ஒற்றுமை அரபு தேசத்தில் இஸ்லாமியர்களிடம் இல்லை என்பது தான் அராபியர்களின் முக்கியமான பிரச்சனை என்பதையும் இந்தப் புத்தகம் விரிவாக விளக்குகிறது.



கிறிஸ்துவர்களின் பிரச்சனைகள்

கிறிஸ்துவர்களுக்கு சொல்லிக் கொள்ளும் படி எந்தப் பிரச்சனையுமே இங்கு இல்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது. எனவே தான் அவர்களின் ஆசியுடன் யூதர்கள் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். சாலமன் மன்னன் கட்டி, ஏரோது மன்னன் புதுப்பித்து, ரோம் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டு ஒரு சுவராக மட்டும் எஞ்சி இருக்கும் Wailing Wall யூதர்களைப் போலவே கிறிஸ்துவர்களுக்கும் புனிதத்தலம் தான்.. இந்த இடத்தில் தான் கலீபாக்களின் கல்லறைகளும், அதனைச் சுற்றி மசூதியும் இருக்கிறது. இந்த மசூதியை இடிக்கத்தான் இஸ்ரேலிய அரசு, அமெரிக்காவுடன் இணைந்து கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால், இயேசுவைக் கொன்றது ரோம் அரசு, அவர் இடிந்து விழும் என்று சொன்ன தேவாலயத்தை இடித்ததும் ரோம் அரசு தான், கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிய் வழியாகவே பயணம் மேற்கொண்ட பவுல் என்னும் அப்போஸ்தலரை கைது செய்து கொலை செய்ததும் ரோம் அரசு தான், கிறிஸ்துவ மதத்தின் தலைமை இடம் அமைந்திருப்பதும் இந்த ரோமில் தான்.. பின்பு கிறிஸ்தவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கப் போகிறது.

புத்தகத்தில் இருக்கும் பிற சுவாரஸ்யங்கள்

முகமது நபிகள் க-அபா ஆலயத்தில் எப்படி அறிமுகம் ஆகிறார் என்பதும், அங்கு நிலவிக் கொண்டிருந்த பிரச்சனையை எப்படி அவர் சரி செய்தார் என்பதும், அவர் முன்னின்று நடத்திய மெக்காவின் மீதான போரும், அவரை சோதிக்க விரும்பிய யூத ரபீக்களுக்கு அவர் அளித்த பதிலும் ஒரு திரைப்படத்தை போல இந்தப் புத்தகத்தில் மிக சுவாரஸ்யமாக விளக்கப்பட்டு உள்ளன. ஒரு இறை தூதுவராகவும், போருக்கு தலைமை ஏற்ற ஒரு ஆட்சியாளராகவும் முகம்மது நபிகளை இந்தப் புத்தகத்தில் காணக் கிடைப்பது சுவாரஸ்யமானது.

மேலும் அபூபக்கர் மற்றும் உமர் போன்றோர் கலீபாவாக இருக்கும் போதும் ஒரு வயதான பெண்மணியின் வீட்டில் துணி துவைப்பது, பால் கறப்பது, பாத்திரம் தோய்ப்பது போன்ற செயல்களை செய்து, தான் ஒரு சாதாரணன் என்பதை அவர்கள் தங்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்தும் சம்பவங்கள் இப்படியும் மன்னர்களா..? என்று மெய்சிலிர்க்க வைக்கின்றன. அதுபோல உமர் முகம்மது நபி அவர்களை கொல்ல வாள் எடுத்து, பின்பு மனம் மாறி இஸ்லாம் மதத்தை தழுவும் இடமும், முதன் முதலாக எகிப்தின் பைசாந்தியர்களை வென்று ஜெருசலேமுக்குள் காலடி வைக்கும் போது, தேவாலயத்தில் தொழுகை நடத்தச் சொல்லும் முதியவரிடம் அது தவறு என்று சொல்லி மறுதலிப்பதோடு, யூத ஆலயங்களில் கிறிஸ்துவர்களால் கொட்டப்பட்டு இருக்கும் குப்பைகளை அள்ள உத்தரவு பிறப்பிப்பதோடு, தன்னையும் அந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டதும் மதநல்லிணக்கத்தை கூறும் பக்கங்கள்



மேலும் யூதர்கள் ஷபாத்தி இஜ்வி என்னும் போலியான இறை தூதரை நம்பி 15 ஆண்டுகள் ஏமாந்து போன சம்பவமும், ஷபாத்தி இஜ்வி வாள் முனையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முஸ்லீம் மதத்துக்கு மாறும் இடமும் சுவாரஸ்யமானவை. அது போல யூதர்கள் தங்களின் மொழி உணர்வையும், இன உணர்வையும், மத உணர்வையும் எப்படி எங்கு சென்றாலும் கட்டி காத்தார்கள் என்கின்ற விடயங்களும், தங்களுக்கு என்று ஒரு தேசம் கிடைப்பதற்காக ஒரு இனம் என்ன மாதிரியான தியாகங்களைச் செய்ய தயாராக இருந்தது என்பது போன்ற நுட்பமான தகவல்களும் யூத இனத்தின் மீது ஒரு பொறாமையுணர்வை கொடுக்க வல்லதாகவே இருக்கிறது.

எகிப்தின் கமால் அப்துல் நாசர் சூயல் கால்வாய் எகிப்துக்கு சொந்தம் என்று கூறி சூயல் கால்வாயை இழுத்து அடைக்கும் தருணமும், அதை எதிர்த்து படை எதிர்த்து வரும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் படைகளின் 40 போர் தாங்கிக் கப்பல்களை துல்லியமாக வீழ்த்திய நாசரின் திறமையும் வியப்பில் ஆழ்த்தும் பக்கங்கள். அது போல வரலாறு நம்ப முடியாத பல விசயங்களை எப்படி நடத்திக் காட்டுகிறது என்கின்ற சுவாரஸ்யமும் இந்த வரலாற்று சுவடுகளில் புதைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது..



யாசர் அராபத்தைப் பற்றி சொல்லாமல் இஸ்ரேல் பாலஸ்தீனத்தைப் பற்றிப் பேச முடியாது. தனக்கு ஒரு தலைவன் கிடைக்கமாட்டானா..? என்று ஏங்கிக் கொண்டிருந்த பாலஸ்தீன் அராபியர்களுக்கு அராஃபத் என்னும் தலைவன் கிடைக்கும் இடமும், போராளியாக இருந்து அவர் ஆட்சியாளராக மாறும் தருணமும், போஸ்னா ஒப்பந்தம் தன் மக்களுக்கு எந்தவிதமான நல்லதையும் செய்யவில்லை, என்பதை உணர்ந்து மனம் வருந்தும் தருணமும், போராளியாக போராட்டம் மற்றும் ஆட்சியாளராக அமைதி பேச்சு வார்த்தை என இரட்டை குதிரையில் சவாரி செய்த தலைவராக யாசர் அராஃபத்தை மிக அருகே இருந்து அவதானிப்பது போன்ற ஒரு பிம்பத்தை இந்தப் புத்தகம் கொடுக்கிறது.



இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் பற்றிய நுணுக்கமான தகவல்களும். தன் யூத இனத்திற்காக போராடிய சிமோன் பார் கொச்பா வின் பக்கங்கள் உணர்ச்சிகரமானவை என்றால், யூத மதகுருவான ஜோகனன் பென் ஷகாயின் வழிகாட்டல் அந்த இனத்துக்கான ஒரு விடிவெள்ளி என்றே கூறலாம். இது தவிர்த்து மிகவும் பிரசித்தி பெற்ற ஆறு நாள் யுத்தம், யாசர் அராஃபத் மாணவ பருவத்தில் போராளியாக அழைந்த தருணங்கள், ஐநா சபையின் அங்கீகாரத்தோடு இஸ்ரேல் தேசம் என்று ஒன்று தோன்றியவுடன் பாலஸ்தீனிய அராபிய பொது மக்கள் போராட தெருவில் இறங்கியது, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் நுணுக்கங்கள், பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் பற்றிய குறிப்புகள், சூயஸ் கால்வாய் ஏன் மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு முக்கியமான கால்வாய், அதன் பொருளாதார முக்கியத்துவம் என்ன என்பதனை விளக்கும் பக்கங்கள், அராஃபத்தின் அல் ஃபத்தா அமைப்பு, ரோட்-மேப் ஒப்பந்தம் புஷ் தலைமையில் கையெழுத்தானது, மக்களின் இண்டிஃபதா புரட்சி என பல முக்கியமான சம்பவங்களின் ஒட்டு மொத்த தொகுப்பு இந்தப் புத்தகம். நான் இங்கே கூறி இருப்பதெல்லாம், புத்தகத்தில் இருப்பதில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே. இது போல இன்னும் பல சம்பவங்களும் தகவல்களும் கொட்டி கிடக்கிறது.


இஸ்ரேல் பாலஸ்தீன் தேசத்தை இரண்டாகப் பிரிக்கும் படி கட்டப்பட்ட அந்தச் சுவர் பாலஸ்தீன் மக்களின் இரண்டாவது இண்டிபதா போராட்டத்தின் போது கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது அன்றே 458 கி.மீ நீளத்துக்கு கட்டப்பட்டு, இரண்டு தேசங்களையும் பிரித்தது. (750 கி.மீ தொலைவில் மேற்குக்கரை முழுவதும் இந்தச் சுவரை எழுப்ப திட்டம்) இதனை இஸ்ரேல் தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை என்கிறது. பாலஸ்தீன் இதனை பிரிவினைவாதம் என்றும், எங்களுக்கான உரிமையை மறுப்பதற்கான, ஜெருசலேமுக்குள்ளான எங்கள் நுழைவை அத்துமீறல் என்று நிருபீப்பதற்கான குறுக்குவழி என்று முழங்குகிறது. இந்த செய்தி இந்தப் புத்தகத்தில் இடம் பெறவில்லை.



முடிவாக நிலமெல்லாம் இரத்தம் என்னும் இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும் போது, ஏற்கனவே நான் சொல்லியபடி மத அரசியல் எப்படி எல்லாம் செயல்படும் என்பதையும், அதில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதையும் புரிந்து கொள்வதோடு, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எண்ணெய் வியாபாரத்தை தவிர்த்து மதத்தின் பெயரால் நடைபெற்ற அரசியலின் ஒரு கோட்டுருவம் புரிந்து கொள்ளும்படி நமக்குக் கிடைக்கும் என்பதால் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம்.





No comments:

Post a Comment