Wednesday, 6 December 2017

மேயாத மான் :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்ஜின் தயாரிப்பில், இயக்குநர் இரத்னகுமாரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் மேயாத மான். தன் நண்பனின் ஒருதலைக் காதலை ஒரேயடியாக முடித்து வைப்பதற்காக தன் நண்பனின் காதலியிடம் மற்ற நண்பர்கள், தூது செல்லும் ஒரு கதை. தன் நண்பனை ஒரு தலையாக காதலிக்கும் தன் தங்கையின் காதலை சேர்த்து வைப்பதற்காக நண்பனிடமே தூது போகும் இன்னொரு கதை. என, இரண்டு காதல் கதைகளும் நான்கு கதாபாத்திரங்களுமே சுற்றி வரும் களம் தான், மேயாத மான். ஒரு காதல் ஜோடியாக வைபவ்வும், ப்ரியா பவானி சங்கரும், மற்றொரு காதல் ஜோடியாக விவேக் பிரசன்னா மற்றும் இந்துஜா. இதில் முதல் காதல் ஜோடியை விட அதிகமாக நம்மை ஈர்ப்பது இரண்டாவது ஜோடி தான்.


காதல், நட்பு, காமெடி, கானா என இவற்றைச் சுற்றியே கதை பயணிக்கிறது. தன் காதலை கடைசி வரை சொல்லாமல், ஒரு தலையாகக் காதலித்து மேடைகளில் லைட் மியூசிக் நடத்தி, கானாப் பாடல்களைப் பாடிக் கொண்டு திரியும் வட சென்னை இளைஞரின் கதாபாத்திரம் வைபவ்-க்கு. சோகம், காதல் காட்சிகளை விட காமெடி காட்சிகளில் கச்சிதமாகப் பொருந்துகிறார். தெரு நாயை துரத்திக் கொண்டு ஓடும் காட்சி, ஓடாத கிராமபோனை ஓட வைத்து, தர்மசங்கடத்தில் மாட்டிக் கொள்ளும் காட்சி, ஷேக்ஸ்பியரின் மேற்கோளைச் சொல்லி குடித்து விட்டு புலம்பும் காட்சி போன்ற காட்சிகளில் இவரது நடிப்பு ரசிக்கும் படி உள்ளது. ஆனால் காதல் காட்சிகளிலும் சோகக் காட்சிகளிலும் இவர் தள்ளாடுவது தெரிகிறது. திருமணம் நிச்சயக்கிப்பட்ட நாளில், தன்னை ஒருதலையாக காதலித்த ஒருவன், தன்னை எப்படியெல்லாம் காதலித்து இருக்கிறான் என்பதை அவன் வாயாலேயே அறிந்து கொண்டு, மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிக்கும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் நாயகி ப்ரியா பவானி சங்கருக்கு. தன்னை காதலிப்பவனுக்கு நல்லது செய்வதா..? அல்லது தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வதா..? என்கின்ற ஊடாட்டத்துக்கு இடையிலான நடிப்பை வெகு சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.


நண்பனாக வரும் விவேக் ப்ரசன்னாவும், நாயகனின் தங்கையாக வரும் இந்துஜாவும் தான் மொத்த படத்தின் ஹைலைட்டும். தன் அண்ணனின் காதலுக்காக அவனது நண்பர்கள் தூது போனவர்கள் என்பதனை அறிந்து, தன் அண்ணனின் நண்பன் மீதே காதல் கொண்டுவிட்டு, அவன் தன்னைத் தங்கையாகத் தான் பார்க்கிறான் என்பதனை அறிந்து, தன் காதலை சொல்ல முடியாமல், தன் அண்ணனின் நண்பன் மீது வெறுப்பை உமிழும் கதாபாத்திரம் இந்துஜாவிற்கு. அசத்தியிருக்கிறார் இந்துஜா. விவேக் ப்ரசன்னாவும் நடிப்பில் ஜொலிக்கிறார். ஒரு தலைக்காதலால் தன் நண்பனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்கின்ற பரிதவிப்பிலும், தன் நண்பனின் தங்கையை தானும் தங்கையாக பாவித்து கண்ணியமாக நடக்கும் தருணங்களிலும், அவள் மீது தனக்கான காதலை வெளிப்படுத்த நெடுஞ்சாலையில் வைத்து அவர் எடுக்கும் பிரயத்தனங்களிலும் அமர்களப்படுத்தி இருக்கிறார்.


”மது” என்ற பெயரில் ஓரிரு வருடங்களுக்கு முன்னால் ஒரு குறும்படமாக இதனைப் பார்த்த நினைவு. அதையே ஒரு முழு நீளப் படமாக செய்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணனின் இசையில் கானாப் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது என்பதனை விட கதையோடும், கதை வாழ்வியலோடும் ஒன்றி இருக்கிறது என்று சொல்லலாம். இயக்குனர் இரத்னக்குமாருக்கு இது முதல் படம். படம் தொடங்கும் முதல் புள்ளியிலேயே படத்தின் முடிவு தெரிந்து விடுவது தான் இந்தப் படத்தின் ஆகப்பெரிய குறை. இதனால் திரைக்கதை மிகப்பெரிய சுவாரஸ்யம் ஏதும் இல்லாமலேயே கடக்கிறது. காட்சிகளில் இருக்கும் நகைச்சுவை ஆங்காங்கே மட்டும் சிரிக்க வைப்பதால் சில இடங்களில் அயர்ச்சி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அது போல் கதை நடப்பது எந்தக் காலத்தில் என்பதும் மிகத் தெளிவாக சொல்லப்படவில்லை. மேடைகளில் பாடப்படும் 1980களின் பாடல்களைக் கொண்டு மட்டுமே கதை நடக்கும் காலத்தை யூகிக்க முடிகிறது. ஆனால் இந்தக் குறைகளை எல்லாம் இல்லாமல் செய்வது நாயகனின் தங்கைக்கும், நண்பனுக்குமான காதலும் அதற்கான புதுமையான காட்சிகளும் தான். ஒரு குறைந்த பட்ஜெட்டில் ஒரளவு இரசிக்கும் படியான படத்தையே இயக்குநர் இரத்னகுமார் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் மேயாத மானை கொண்டாடவும் முடியவில்லை.. அதே நேரம் இரசிக்காமல் புறக்கணிக்கவும் முடியவில்லை என்பது தான் மேயாத மானின் சிறப்பு.


No comments:

Post a Comment