Wednesday, 6 December 2017

மெர்சல்:

தீபாவளிக்கு வெளிவந்திருக்கும் ஆயிரம் வாலா பட்டாசு. (நீ…ளத்தில் சொன்னேன். 2 மணி நேரம் 50 நிமிடம்) அட்லி விஜய் கூட்டணியில் இது இரண்டாவது படம். பழைய தமிழ்ப்படங்களையே புதிதாக ரீமேக் செய்கிறார் என்று இரண்டே படங்களில் பாராட்டுப் பத்திரம் பெற்ற அட்லி, தனது மூன்றாவது படத்தில், அந்தப் பாராட்டுப் பத்திரத்துக்கு தான் பாத்தியமானவன் என்பதை மீண்டும் நிருபீத்திருக்கிறார். கதையாகப் பார்த்தால் பல தமிழ் திரைப்படங்களில் நாம் ஏற்கனவே பார்த்த கதை தான். அப்பாவைக் கொன்ற வில்லனை, மகன்கள் இரட்டையராக வந்து பழிவாங்கும் கதை. ஆனால் மெர்சல் பழைய படங்களின் காப்பி என்பதை அப்பட்டமாக காட்டுவதில்லை. ஏனென்றால் முந்தைய இரு படங்களைப் போல் கதை, திரைக்கதை என இரண்டையுமே ஜெராக்ஸ் செய்யாமல், திரைக்கதையில் சற்று(சற்றே) மெனக்கெட்டு இருப்பதால், மெர்சலில் இருக்கும் பழைய படங்களின் சரத்துகள் துருத்திக் கொண்டு பளீச்சென கண்ணில் தெரிவதில்லை.


ஏழை எளிய மக்களிடம் வெறும் ஐந்து ரூபாய் மட்டும் கட்டணமாக வாங்கிக் கொண்டு, மருத்துவம் செய்யும் சென்னை மருத்துவரான மாறன், தன் மருத்துவ சேவைகளுக்காக ப்ரான்ஸ் நாட்டில் உலக அமைப்புகளிடம் இருந்து விருதும் பெறுகிறார். பொழுதுபோக்காக மேஜிக்கும் செய்கிறார். அப்படி பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மேஜிக் ஷோவில் பதட்டமின்றி அனைவரின் கண் முன்னே ஒரு கொலையும் செய்கிறார். அவர் மருத்துவரா..? மேஜிஷியனா..?? கொலைகாரனா..?? ஏன் அந்தக் கொலையை செய்தார்..? என்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் படத்தின் கதை. இதை மூன்று காதல் எபிசோடுகளாகவும், மூன்று மோதல் எபிசோடுகளாகவும் பிரித்துக் கதை சொல்லி இருக்கிறார் அட்லி.


தனிப்பட்ட முறையில் விஜய்க்கு இது ஒரு முக்கியமான திரைப்படம். தமிழுக்கான மற்றும் தமிழர்களுக்கான விசயங்களைப் போகிறப் போக்கில் பேசி இருப்பதோடு, அரசியலுக்கான அர்ச்சதைகளையும் ஆங்காங்கே தூவி இருக்கிறார்கள். தளபதியாக வரும் மதுரைக்காரன் கதாபாத்திரத்தில் அவர் காட்டியிருக்கும் உடல்மொழி, சிட்டுகுருவி கிழவியிடம் அவர் காட்டும் அடாவடிகள் எல்லாம் அவர் திரை வாழ்க்கையில் சற்றே புதிது. அது மட்டுமன்றி தோற்றத்தில் பல இடங்களில் குஷி காலத்து விஜயைப் பார்க்க முடிந்தது. ஆனால், தோற்றத்தில் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் குஷி காலத்து விஜயை அண்ணன் தம்பி இணையும் போதும், அதற்கு பிந்தையக் காட்சிகளிலும் காண முடிவதுதான் பரிதாபம். நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் இருக்கிறார்கள். இவர்களில் சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம் நித்யாமேனனுக்கு மட்டும் தான். நிறைவாக செய்திருக்கிறார். சமந்தா ஓரிரு காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவிற்கு அலட்டிக் கொள்ளாத வில்லன் வேடம் அசால்ட்டாக செய்திருக்கிறார்.


பெரிய நடிகர்களுக்கான கமர்ஸியல் திரைப்படத்தை எடுப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அது ஒரு மிகப்பெரிய கலை. அது அட்லிக்கு நன்றாகவே கை வந்திருக்கிறது. ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதையில் என்னென்ன எந்தெந்த அளவு இருக்க வேண்டும் என்பதிலும் நல்ல தெளிவு இருக்கிறது. எல்லோருக்கும் இலவச மருத்துவம் என்னும் ஒற்றை வரிக் கதையின் மீது ஒரு அரண்மனையையே கட்டி இருக்கிறார். எளிய முறையில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், உடைகளைக் கொண்டும், உடல் நிறங்களைக் கொண்டும் ஏர்லைன்ஸ் அதிகாரிகளால அவமானப்படுத்தப்படும் மனிதர்கள் என ஆங்காங்கே உண்மையான சம்பவங்களை கதைகளில் காட்சிகளாகக் கோர்த்திருப்பது படத்திற்கு வலுசேர்க்கிறது. ரஹ்மானின் இசையும் பாடல்களும் படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கின்றன. அது போல் ஒளிப்பதிவாளர் விஷ்ணுவின் ஒளிப்பதிவும் இடங்களுக்கு ஏற்றார் போல வண்ணங்களை அள்ளித் தெளித்திருக்கிறது. ரூபனின் எடிட்டிங்கில் இன்னும் பல காட்சிகளை வெட்டியிருந்தால், படத்தில் அலுப்பு தட்டி இருக்காது என்று தோன்றுகிறது..

மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இது ஒரு திருப்தியைக் கொடுக்கும் படமாகவே அமைந்திருக்கிறது. வித்தியாசமான திரைப்படங்களை எதிர்பார்க்கும் சினிமா ஆர்வலர்களுக்கு இந்த திரைப்படம் ஏமாற்றத்தையே தரக் கூடும். திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்று முன்பு சொல்லியிருந்தாலும், அது மிகப்பெரிய மெனக்கெடல் இல்லை, ஒரு மிகச்சிறிய மெனக்கெடல் தான்.. கதாபாத்திரத்தின் அடையாளத்தை குழப்பவதன் மூலம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டும் டெக்னிக்கை நான்-லீனியர் கதை சொல்லலில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது. ஆனால் அதுவே தான் திரைப்படம் முடிந்து வெளியே வரும் போது குழப்பத்தையும் கொடுக்கிறது. மருத்துவமும், மேஜிக்கும் தெரிந்த ஒருவன் தான் கொலை செய்திருக்கிறான் என்பது தான், போலீஸ்க்கு கிடைக்கும் க்ளூ. இதைக் கொண்டு தான் ஆடியன்ஸுக்கும் இருவரும் ஒருவரே என்பது போன்ற பிம்பத்தைக் கொடுக்கின்றனர். சிறிது நேரத்தில் அந்தர் பல்டி அடித்து, இருவருமே வேறு வேறு என்று சொல்லி, கதைக்குள் சென்று விடுகின்றனர். மேஜிக் தெரிந்வனுக்கு மருத்துவம் எப்படி தெரிந்தது என்ற கேள்வி கடைசி வரை தொக்கி நிற்கிறது. ஃபிரான்சில் அந்த மாடலிடம் விஜய் பணம் கொடுப்பது எதற்கு...? பின்பு ஏன் காஜலிடமும் உதவி கேட்கிறார்..? மேஜிசியன் விஜய் கதை சொல்ல ஆரம்பிக்கிறார், ஆனால் அவர் சொல்வதெல்லாம் டாக்டரைப் பற்றிய கதை இப்படி படம் முடிந்தப் பின்னர் யோசித்தால் ஆயிரம் கேள்விகள்.. இதுதான் படத்தின் மைனஸ். ஆனால் படம் பார்க்கும் போது, இந்த கேள்விகள் எதுவுமே நமக்குத் தோன்றாமல் இருப்பது தான் படத்தின் ப்ளஸ்..No comments:

Post a Comment