குறும்படத்தைக் காண : We are animals Tamil Short film
இந்தக் குறும்படம் உங்களுக்குப் பிடிக்காமல் போவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம். குற்றவாளியின் தரப்பில் இருந்து குற்றம் நிகழ்த்தும் மனநிலையை புரிந்து கொள்ள முனையும் ஒரு சிறு முயற்சியே இந்தக் குறும்படம். ஏதாவது ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபராக நீங்கள் இருக்கின்றபட்சத்தில் உங்களுக்கு இந்தக் குறும்படம் நிச்சயமாக இணக்கமாக இருக்காது. அது பாதிக்கப்பட்ட உங்களையே குற்றம் சாட்டுவதாக நீங்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு இல்லாமல் நீங்கள் ஒரு குற்றவாளியாகவோ அல்லது குற்றம் நிகழ்த்தும் மனநிலையில் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து மயிரிழையில் தப்பி வந்தவராகவோ இருக்கின்ற பட்சத்தில் உங்களுக்கு இந்தக் குறும்படம் நெருக்கமானதாகவே இருக்கும்..
குற்றம் இல்லாத ஒரு உலகை நம்மால் கற்பனை செய்ய முடியுமா..? கற்பனை தான் என்றாலும் கூட அதுவும் கூட ஏன் கடினமானதாக தோன்றுகிறது. இந்த குற்றங்களின் தோற்றுவாய் தான் எது....? ஏன் இந்த உலகம் குற்றங்களின் குல நகரமாக மாறி நிற்கிறது.. குற்றங்கள் நடப்பதில் குற்றவாளிகளின் பங்கு மட்டும் தான் இருக்கிறதா..? உண்மையில் குற்றங்கள் நடப்பதை நிறுத்தவே முடியாதோ...? இப்படி ஆயிரம் கேள்விகள்.. குற்றங்களைப் பற்றி யோசிக்கும் போது..? இந்தக் கேள்விகள் எல்லாம், குற்றம் புரியும் மனநிலையில் நான் இருந்த போதும், அறைத் தோழன் ஒருவன் குற்றத்துக்கு பலிகடாவாகி உடைந்த மண்டையுடன் உருக்குலைந்து என்னெதிரே நின்ற போதும், இன்னும் ஆழமாக எனக்குள்ளே வேறூன்றின... அந்த வேர்களின் தடம் பிடித்து பயணித்து கண்டு கொண்டது தான் இந்தக் குற்றவாளிகளின் உலகம்..
குற்றங்களை புரிந்து கொள்வதற்கும், குற்றவாளிகளின் மனநிலையை புரிந்து கொள்வதற்கும், குற்றம் நடக்கின்ற சூழலை தவிர்ப்பதற்கும், குற்றங்களை களைவதற்கும், குற்றம் இல்லாத ஒரு உலகை படைப்பதற்கும் என ஏதாவது ஒரு விதத்தில் இந்த குறும்படம் உதவுமென்றால், அதுவே இந்த படைப்பின் வெற்றியாக இருக்கும்..
(ஒரு அறைக்குள்ளாகவே நடக்கின்ற கதை வேண்டும், அதிக செலவுகளை கோராத கதை வேண்டும், பெண் கதாபாத்திரமே இல்லாத கதை வேண்டும் என்று எல்லாவிதமான விதிகளையுமே இது பூர்த்தி செய்ததால், இதையே ஒரு குறும்படமாக எடுத்தால் என்ன...? என்று ஒரு எண்ணம் தோன்றியது.. ஆக இதை ஒரு பரிசோதனை முயற்சியாகவே முயற்சித்துள்ளோம்.. இந்த முயற்சிக்கு உதவிக்கரம் நீட்டிய நண்பர்கள், ஜெயகிருஷ்ணன், ராஜேஷ் நாராயணன், விஜய் ஆனந்த், பூரணி ஜெயகிருஷ்ணன், அகிலா விஜய், ராமநாதன், இராஜா வரதராஜன், இசையமைப்பாளர் டிசோன் ப்ரின்ஸ், எழுத்தாளர் என்.சொக்கன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..)
No comments:
Post a Comment