ஆர்.கே.நகரில் நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலின்
முடிவு, தமிழகத்துக்கு ஒரு விடிவுகாலத்தையும், நல்ல ஆட்சியாளர்களையும் எதிர்நோக்கும்
நடுநிலையாளர்கள் மத்தியில் ஒரு விதமான அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால் தேர்தலுக்கு முன்பு வரை, முன்னால் முதல்வரின் மர்மமரணத்தின் பிண்ணனியின்
சூத்திரதாரியாகப் பார்க்கப்பட்டவரும், இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற லஞ்சம் கொடுத்ததாக
குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்றவரும், வருமானவரித் துறையினரால் அவரது வீடு, அலுவலகம்,
நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என ஒட்டு மொத்தமாக 287 இடங்களில் சோதனை செய்யப்பட்டவருமான
டி.டி.வி.தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றிருக்கிறார்.
“அரசியல் வாதிகள் எல்லாம் ஆண்டிகளாக அலைய வேண்டுமா..?”
என்றும் “நான் ஒன்றும் காந்தியில்லை..” என்றும் அவர் உதிர விட்ட திருவாசகங்கள் இந்த
நடுநிலையாளர்கள் காதில் இன்று வரை ரீங்காரமிட்டபடி இருப்பது தான், இவர்களின் அதிர்ச்சிக்கும்
அச்சத்துக்கும் காரணம். இப்படிப்பட்ட முற்போக்கான மனிதர் தான், ஆர்.கே.நகர் மக்களின்
மக்கள் பிரதிநிதி என்றால், இந்த மக்கள் தங்களை ஆள வருபவரிடம் எதைத் தான் எதிர்பார்க்கிறார்கள்
என்கின்ற கேள்வி எழாமல் இல்லை.
மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்கின்ற
கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்னர், இந்த நடுநிலையாளர்கள் மக்கள் யாரை தேர்ந்தெடுத்திருந்தால்
அதிர்ச்சியும் அச்சமும் அடையாமல் சந்தோஷம் அடைந்திருப்பார்கள் என்பதை பார்த்துவிடுவோம்.
கண்டிப்பாக நடுநிலையாளர்களின் கணிப்பின் படி வெற்றிவாகை சூட வேண்டியவர்களாக இருந்தவர்கள்,
அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனும், திமுகவின் வேட்பாளர் மருது கணேஷும் தான். இந்த இருவருமே
அப்பழுக்கற்றவர்கள், மாசுமருவற்றவர்கள், மக்கள் நலன் பேணும் தலையாயத் தலைவர்கள், அசகசாயசூரர்கள்
என்றெல்லாம் சொல்வதற்கில்லை.
ஆனால் ஆளும்கட்சி வெற்றி பெற்றிருந்தால், அதிகார
பலத்தையும், மத்திய அரசின் செல்வாக்கையும் கொண்டு வழக்கம் போல வென்றுவிட்டார்கள் என்ற
எரிச்சலோடு கடந்திருக்கலாம். எதிர்கட்சியான டி.எம்.கே வென்றிருந்தால், மக்கள் ஆளும்
அரசாங்கத்தின் ஸ்திரமற்ற தன்மையாலும், துடிப்பற்ற நிர்வாகத்தினாலும், மத்திய அரசின்
கைப்பாவையாக செயல்படும் இந்த ஆட்சியை புறக்கணித்து வழக்கமான அவர்களது மாற்றை நோக்கி
நகர்ந்திருக்கிறார்கள் என்ற விரக்தியோடு அந்த முடிவையும் ஏற்றுக் கொண்டிருக்கலாம்.
ஏனென்றால் இந்த இரண்டு வெற்றியிலுமே குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியது மக்கள் அல்ல..
ஆனால் இன்று டிடிவி. தினகரன் பெற்றிருக்கும் இந்த வெற்றிக்குப் பின்னால் குற்றவாளிக்
கூண்டில் நிற்க வேண்டியவர்கள் சர்வ நிச்சயமாக ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களே.. அதனால்
தான் இந்த நடுநிலையாளர்களுக்கு அதிர்ச்சியும் அச்சமும் ஒரு சேர எழுகின்றது. ஏனென்றால்
அவர்கள் இன்று, நல்ல ஆட்சியாளர்களைத் கண்டடையும் கடும் பணியோடு, நல்ல மக்களை தயார்
செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கும் ஆளாகி இருக்கிறார்கள்.
வள்ளுவன் அரசியல் தலைமையை இறைமாட்சிக்கு ஒப்பாகப்
பேசுகிறான். வியாசனோ கருவில் இருக்கும் குழந்தையை தாய் காப்பது போல தலைவன் தன் மக்களை
காக்க வேண்டும், தனக்கு பிடித்தமானதை உண்ணாமல், குழந்தைக்கு தேவையானதை உண்ணும் தாயைப்
போல் அவன் இருக்க வேண்டும் என்று அறவுரை நல்குகிறார். நாம் தேர்ந்தெடுத்திருக்கும்
இந்த தலைவன் அப்படிப்பட்டவர் தானா…? வேறு எவரைத் தான் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள்..?
யார் தான் உத்தமர்…?? என்று கேட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியாது..? இவருக்கு நீங்கள்
அளித்த வெற்றிக்குப் பின்னால் எவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்ற குழப்பமும்,
மத்திய அரசால் இவ்வளவு நெருக்கடிகளுக்கு உள்ளாகியும் அசராமல் நிற்கிறாரே என்கின்ற ஆச்சரியமும்,
ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை வீடியோவை க்ளைமாக்சாக வெளியிட்டு, அவர் மரணம் மர்ம
மரணம் அல்ல என்பதை நம்மளை சூசகமாக நம்பச் சொன்னதும் மட்டுமே இருந்திருந்தால், ஆர்.கே.நகர்
மக்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
ஆனால் இந்த வெற்றிக்குப் பின்னால், தன்னை காந்தியும்
இல்லை, அரசியல் ஆண்டியும் இல்லை என்று சொன்னவரின் கருப்புப் பணம், கள்ளப் பணம் ஊழல்
பணம், கொள்ளைப் பணமும் 20ரூபாய் டோக்கனும் இருக்கிறது. அந்தப் பணம் இன்று மக்கள் கைகளிலும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கொடுக்கப்பட்ட அந்தப் பணம் தான், ஆர்.கே.நகர் மக்களை அவரை தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுக்க
வைத்திருக்கிறது என்கின்ற செய்தி தான், இன்று மக்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி
இருக்கிறது.
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட
சர்வேயில், ஓட்டுக்கு பணம் வாங்குவது எந்த தவறும் இல்லை, அது தங்களின் பணம் தான், அது
வேறு வழியில் எங்களிடமே திரும்பி வருகிறது, அதை நாங்கள் ஏன் வாங்கக்கூடாது, அதிலென்ன
தவறு இருக்கிறது என்கின்ற மனநிலையில் வாக்காளர்கள் பதிலளித்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
தினகரன் பெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அவரது ஆதரவாளர்கள் லட்டு விநியோகிக்கும்
காணொலியை தொலைக்காட்சியில் காண முடிந்தது. அதில் வெறும் ஐந்து ரூபாய் பெறுமானம் உள்ள
லட்டுக்காகவே முண்டியடித்துக் கொண்டு கை நீட்டும் ஒரு மக்கள் கூட்டத்தையும் பார்க்க
முடிந்தது.
இவர்களைப் பார்த்து ”ஓட்டுக்கு ஐந்தாயிரம்
தருகிறார்கள்..!! என்று கைநீட்டி விடாதீர்கள் ” என்று நாம் சொன்னால், அது மடத்தனம்
அல்லாமல் வேறு என்னவாம்..? ஆனால் இந்த மக்கள் தாங்கள் ஓட்டுக்காக வாங்கும் பணத்தின்
வரலாறை அறிகிறார்களா..?? தங்கள் வரிப்பணம், தங்கள் வரிப்பணம் என்று மார்தட்டும் மக்கள்,
அதை தாங்கள் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்பதனை உணர்கிறார்களா..? என்றால் இல்லை
என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, அரசியல்
கட்சிகள் அனைத்தும் பொதுமக்களுக்கான பொதுநல சேவைத் துறையின் கீழ் வருவதால்…!!!!? அவைகளுக்கு
எந்தவிதமான வரிச்சுமைகளும் கிடையாது. மேலும் அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்ளும் நன்கொடைகள்
20,000 ரூபாய்க்கு மேல் போகும் போது மட்டும் தான், அதற்கு அரசாங்கத்திடம் முறையாக கணக்கு
காட்ட வேண்டும், இந்த தொகை யாரிடம் இருந்து வாங்கப்படுகிறது, அதைக் கொடுக்கும் நபர்
எந்தத் தொழிலை மூலதனமாக வைத்து இதனை சம்பாதித்தார் போன்ற இன்னபிற தகவல்கள் தெரிவிக்கப்பட
வேண்டும்.
ஆனால் பெரும்பாலும் எந்தக் கட்சியும்
20,000 ரூபாய்க்கு மேலான நன்கொடைகளை வாங்குவது இல்லை. நீங்கள் நன்கொடையாக இரண்டு இலட்சம்
கொடுக்க முன் வந்தாலும், அதை 10 நபர்கள் 20,000 ரூபாயாக பிரித்துக் கொடுத்தது போல்
மட்டுமே வாங்கிக் கொள்ளும் நெறியாளுமைக் கொண்ட கட்சிகள் தான், நம் அரசியல் கட்சிகள்.
இதில் மாநிலக் கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றும்
இல்லை. இந்தக் கணக்குப்படி இந்தியாவில் இருக்கும் மொத்தக் கட்சிகளின் கையிருப்பாக இருக்கும்
பணத்தில் 70 சதவீத பணத்துக்கு எந்தவித கணக்கு வழக்குகளும் இல்லை. அது எவரிடம் இருந்து
நீங்கள் பெற்ற பணம் என்று, நாம் சட்டரீதியாக கேள்வி எழுப்பவோ வழக்கு பதியவோ சட்டத்தில்
இடம் இல்லை. போனால் போகிறது என்று ஒரே ஒரு சலுகை தருகிறார்கள். தகவல் அறியும் உரிமை
சட்டம் மூலமாக நீங்கள் கேள்வி எழுப்பலாம். அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று
எந்த அவசியமும் இல்லை.
இதுதான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் கையிருப்பில்
இருக்கும் பணத்துக்கான பின்புலம். சரி இப்பொழுது மீண்டும் ஆர்.கே.நகருக்கு வருவோம்.
வாக்காளப் பெருமக்கள் சொன்னது போல, அவர்கள் ஓட்டுக்கு பெறும் பணம் சந்தேகம் இல்லாமல்
அவர்களுடையது தான். அவர்கள் தாத்தன் பூட்டன் காலத்தில் அவர்கள் கட்டிய வரிப்பணத்தை
பெரும் நிறுவனங்களும், அரசியலில் கோலோச் தனி நபர்களும் சுருட்டி, இன்று மீண்டும் அவர்கள் கைக்கு வந்து
சேர்ந்திருக்கிறது சரிதான். ஆக ஓட்டுக்குப் பணம் வாங்குவது அவர்களது புரிதலின்படி சரியென்று
ஆகிவிட்டது. இப்பொழுது ஆர்.கே.நகர் மக்களின் தொகுதிப் பிரச்சனைக்கு வருவோம்.
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு, ஒட்டு மொத்த
சென்னையின் குப்பை கூழங்களும் கொட்டப்பட்டு எரிக்கப்படும் இடம். இதில் மருத்துவக் கழிவுகளும்
இரசாயனக்கழிவுகளும் கொட்டப்படுவதால், அங்குள்ள மக்கள் புற்றுநோய் பாதிக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்பது உப
தகவல். இரண்டாவது பிரச்சனை குறுகிய சந்துகளில் கூட முளைத்திருக்கும் டாஸ்மாக் கடைகள்.
தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பல குடும்பங்கள் சீரழிகின்றன. மூன்றாவது
சுத்தமான குடிநீர் இல்லாததும் குண்டும் குழியுமான ரோடும். நான்காவது பிரச்சனை அங்கு
சுற்றுவட்டாரத்தில் எந்த பெரு தொழில் நிறுவனங்களோ சிறு தொழில் நிறுவனங்களோ இல்லாதது.
இது போக இன்னும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் இவைதான் தலையாய பிரச்சனைகள். இவற்றில்
எவற்றை எல்லாம் உங்கள் தலைவர் உங்களுக்காக தீர்த்து வைக்கப் போகிறார் என்று பார்ப்போமா…
ஆர்.கே.நகர் மக்களே..?
எதையுமே தீர்த்து வைக்க மாட்டார் என்பது தான்
நிதர்சனம். கொடுங்கையூர் குப்பை கிடங்கை ஒழிக்க முடியாது, ஏனென்றால் அங்கு குப்பை கொட்டுவதற்கு
தடை விதிக்கக் கூடாது, என்ற நிபந்தனையின் பேரில் தான் பெரு நிறுவனங்களிடம் இருந்து
நன்கொடை என்ற முறையில் அரசியல் கட்சிகளின் சார்பாக மேற்சொன்ன நூதன முறையில் பணம் வாங்கப்பட்டு
இருக்கும். அதிலிருந்து நீங்கள் உங்கள் பங்காக பெற்றுக் கொண்ட வெறும் 4000, 5000 ரூபாய்க்கே
நீங்கள் விசுவாசமாக இருக்கும் போது, உங்கள் தலைவர் அவர்களிடம் வாங்கிய (40C அல்லது 50C) பணத்துக்கு
அவர் விசுவாசம் காட்ட வேண்டாமா..? அதனால் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு அகற்றப்படாது.
அடுத்து டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வேண்டுமா..? ஒழித்துவிட்டால், மிடாஸின் நிலை என்னாவது..??
மூச்… குலத் தொழிலையே மூடச் சொன்னால் எப்படி..? அதிலிருந்து சம்பாதித்த பணத்தில் தான்
நீங்களும் பங்கு வாங்கி இருக்கிறீர்களே..? ஆக அதைப்பற்றி கேள்வி கேட்கும் தார்மீக உரிமை
கூட உங்களுக்குக் கிடையாது. அடுத்து நல்ல குடிநீர்..? தண்ணீர் வியாபாரம் செய்யும் கார்ப்பரேட்டுகளிடமும்
உங்கள் தானைத் தலைவர் நன்கொடை பெற்றிருக்கலாம்.
அதில் வாக்காளப் பெருமக்களான நீங்களும் கமிஷன்
வாங்கி இருக்கிறீர்கள்..? பின்பு எப்படி உங்களுக்கு நல்ல தண்ணீர் கொடுத்து, தண்ணீர்
வியாபாரம் செய்யும் பெரு நிறுவனங்களின் வயிற்றில் உங்கள் தலைவர் அடிப்பார். அதனால்
அதுவும் நஹி.. அடுத்தது என்ன..? நல்ல சாலை வசதியா..? எதற்கு இன்னும் பத்து வண்டிகள்
சவுகரியமாக வந்து குப்பையை தட்டிவிட்டு செல்வதற்கா..? அட போங்கப்பா.. பொழைக்கிற வழியப்
பாருங்க…? அடுத்து சிறு நிறுவனங்கள் பெரு நிறுவனங்கள்..? இவை எதுவுமே, கொடுங்கையூர்
குப்பை மேடு அங்கு இருக்கும் வரை, அந்தப்பக்கம் தலை வைத்துக் கூட படுக்கமாட்டார்கள்.
ஆக ஆர்.கே.நகர் வாசிகளே உங்களுக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை என்று உணர்ந்து விட்டீர்களா..?
இப்போது இல்லை என்றாலும் கூடிய விரைவில் உணர்வீர்கள்.
உங்கள் பெண்டு பிள்ளைகள், உற்றார் உறவினர்கள்
சுவாசம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டாலோ..? புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானாலோ..?
குடியால் உங்கள் குடும்பம் சீரழிந்தாலோ..? சுகாதாரமற்ற குடிநீரால் நோய்கள் பரவினாலோ..?
நீங்கள் சாமர்த்தியமாக திரும்பப் பெற்றுக் கொண்ட உங்கள் வரிப்பணம் நாலாயிரமோ அல்லது
ஐயாயிரமோ அதைக் கொண்டு சிகிச்சையும் நிவாரணமும் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களின்
பிரதிநிதியை தேர்தலுக்குப் பின்னர் உங்கள் எல்லைக்குள் பார்க்கவே முடியாது. ஏனென்றால்
அவர் “நான் அரசியல் ஆண்டியோ, காந்தியோ இல்லை..” என்பதனை உங்களிடம் சொல்லித் தானே ஓட்டுக்
கேட்டார்..”
நாம் அரசாங்கத்திடம் பத்து ரூபாயை வரிப் பணமாக
செலுத்தி, அந்தப் பணத்தை பயன்படுத்தி நமக்கான அடிப்படைத் தேவைகளை செய்து கொடுக்க அரசாங்கத்தை
வேண்டுகிறோம். அரசாங்கம் என்னும் போர்வைக்குள் அமர்ந்திருக்கும் இந்த அரசியல்வாதிகள்,
அந்தப் பத்து ரூபாயில் எட்டு ரூபாயை சுருட்டிக் கொள்வதோடு, நம் தேவையை நிறைவேற்றுவதும்
இல்லை. அத்தேவையை நிறைவேற்றாமல் இருப்பதால் லாபம் அடையும் நிறுவனத்திடமும் ஒரு கமிஷனை
அரசியல்வாதிகள் பெற்றுக் கொள்கிறார்கள். நாம் நல்ல தலைவன் வருவான், நம் நிலை மாறும்
என்று காத்துக் கொண்டே இருந்தோம். அது அந்தக் காலம்.. ஆனால் இன்றோ, தேர்தல் காலங்களில்
மேற்சொன்னபடி நம்மிடமிருந்து சுருட்டிய வரிப் பணத்திலோ அல்லது பெரு முதலாளிகளிடம் பெற்ற
பணத்திலோ ஒரு இரண்டு ரூபாயை நம்மிடமே கொடுத்து, தான் அயோக்கியன் என்பதைச் சொல்லியே
மீண்டும் ஓட்டு போடச் சொல்லிக் கேட்கிறார்கள். நாமும் இளித்துக் கொண்டே வாங்கிய காசுக்கு
வஞ்சனை செய்யாமல் அவர்களுக்கு ஓட்டுப் போட்டு, அரியனை ஏற்றி, அவர்கள் முன் அதே கோரிக்கையோடு
நிற்கிறோம்.
இப்படி மக்களின் வரிப்பணத்தை அரசியல்வாதிகள்
மட்டும் சுரண்டிக் கொண்டிருந்த காலம் போய், நாமும் இந்த சுரண்டலின் பங்கு தாரர்களாக
மாறி நிற்பதோடு நில்லாமல், நம் தேவைகளை நிறைவேற்றச் சொல்லி கூப்பாடு போடுகிறோம். எந்தப்
பணத்தைக் கொண்டு திட்டங்களை நிறைவேற்றுவார்கள்.. அந்தப் பணத்தை தான் அரசியல்வாதிகளோடு
சேர்ந்து நாமும் தின்னத் தொடங்கிவிட்டோமே..! இந்தக் கூட்டத்தில் யார் நல்லவன்..? யார்
கெட்டவன்..? யார் ஏமாளி..? யார் புத்திசாலி..? இந்த உண்மையை இந்த மக்களுக்கு யார் தான்
சொல்லி விளங்க வைப்பது…?? கவுண்டமணி பாணியில் சொல்லுவதென்றால், இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கு
தலைவன், கொள்ளைக்காரனே…!!!!??? நாடு வெளங்கிறும்…????????????
No comments:
Post a Comment