Wednesday, 15 April 2020

”நான் இனி நீ… நீ இனி நான்” - ஜெகன் சேட் - புத்தக மதிப்புரை





நண்பர் ஜெகன் சேட் எழுதியிருக்கும் முதல் நெடுங்கதை. அவரின் சிறுகதைகள் பலவற்றை வெற்றிவேந்தன் மாத இதழில் படித்திருக்கிறேன். திருநெல்வேலி மாவட்டம் பூலாங்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவரின் சொற்களில் நெல்லை தமிழ் கொஞ்சி விளையாடும். இவரின் சிறுகதைகளை படிக்கும் போது, டவுண் பஸ் ஏறி திருநெல்வேலி ஜில்லா சுற்றுவட்டாரத்தின் கிராமத்தின் வழியே பயணித்த வந்த ஒரு அலாதி அனுபவம் கிடைக்கும் என்றால் அது மிகையில்லை. சந்தித்த மனிதர்கள், அவர்கள் சந்தித்த சூழ்நிலைகள் என அனைத்தையுமே கதையாக மாற்றத் தெரிந்த வித்தகர். அனுபவங்களும் அனுதினம் கடக்கும் மனிதர்களும் அநேகம் என்பதால், அமுதசுரபியாய் கதைகள் இவரின் கை விரல்களின் வழியே சுரந்து கொண்டே இருக்கின்றன.
                                
முழு முதற்முயற்சியாய் ”நான் இனி நீ.. நீ இனி நான்..” என்னும் நெடுங்கதையினை எழுதியிருக்கிறார். கதையின் களம் காஞ்சிபுரம் என்பதால் அவருக்கே உரித்தான நெல்லை ஸ்லாங் இதில் மிஸ்சிங். இருப்பினும் எதுகை மோனைகளை ஏதுவாகப் பிடித்து காஞ்சிகளத்தில் கபடி ஆடியிருக்கிறார் எழுத்தாசிரியர் ஜெகன் சேட்.

                      Naan-ini-nee-review
ஒரு பெண்ணுக்கும் இரண்டு ஆண்களுக்கும் இடையேயான மனப்போரும்  ; மணப்போரும் தான் ஒட்டு மொத்தக் கதையும். அதை கலகலப்பான காட்சிகள், கவித்துவமான வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள், இயல்பான மனச்சிடுக்களின் வழியே சிறப்பாக நடத்திச் சென்றிருக்கிறார்.
வாழ்க்கைச் சூழல்களின் வழிப் பார்த்தால், 90களின் இளைஞனாகவும்..?? வாழும் முறைமைகளைக் கொண்டு பார்த்தால் இரண்டாயிரத்தின் இளைஞனாகவும் தெரியும் ஜெயராமனின் பாத்திர வார்ப்பு பிரத்யேகமானது. ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையை அவளின் காதலோடு பெறுவதற்கு அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியுமே நம்மை ரசிக்க வைக்கின்றன. அதே நேரம் இறுதி அத்தியாயத்தில் அவன் எடுக்கும் முடிவுகள் அக்கதாபாத்திரத்தின் முதிர்ச்சியைக் காட்டுகின்றன.

ஒரு பெண்ணின் மீதான முதல் ஈர்ப்பை உடல் கவர்ச்சி மட்டுமே என்று ஒத்துக் கொள்ளும் உறுதி, அதை அவளிடமே உடைத்துக் கூறும் உண்மை, அவளுடனான கூடலுக்காக ஏங்கித் தவிக்கும் தவிப்பு என பக்கத்திற்குப் பக்கம் ஜெயராமனின் உள்ள உணர்வுகளே அள்ளித் தெளிக்கப்பட்டு இருக்கிறது.

கதாபாத்திரங்களின் பெயர்களை கட்டவிழ்க்கும் விதம், அவர்களின் அக மற்றும் புறச் சூழலை கண்ணாடி பிம்பமாக காட்டும் விதம் ஒவ்வொன்றிலும் அயராத முயற்சி தென்படுகிறது. நாயகி பெருமாளின் பக்தை, ஒரு நாயகன் ஆண்டாளின் காதலன், மற்றொருவனோ சிவனடி சேர்ந்தவன் என்று மூன்று முக்கோணங்களை இணைப்பதன் பின்புலத்தில் ஏதேனும் சூட்சம அரசியல் இருக்கிறதோ என்று கூட படிக்கும் போது எண்ணத் தோன்றியது. காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாளின் தல வரலாறு இக்கதை வாசிப்பதன் வாயிலாக நீங்கள் அறியப் போகின்ற உபத்தகவலாக இடம்பெற்றிருக்கிறது.

எடுத்த எடுப்பில் படித்து முடிப்பதற்கு ஏதுவான புத்தகம் என்பதாலும், உங்கள் பொறுமையை எள்ளளவும் சோதிக்காமல் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தும் அம்சங்கள் நிறைந்திருப்பதாலும், நண்பரின் முதற் முயற்சிக்கு நட்புக்கரம் நீட்ட வேண்டும் என்பதாலும், அவ்வண்ணமே நீங்களும் நட்புக்கரம் நீட்டி வாசித்து வளர ஆதரவளிப்பீர்கள் என்பதாலும், இந்த நெடுங்கதையை நெடுநாளாக இல்லச்சிறைகளில் இன்புற்றிருக்கும்..!? உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

இப்புத்தகம் தற்போது அமேசான் கிண்டிலில் வாசிக்கக் கிடைக்கிறது.


No comments:

Post a Comment