Sunday 7 December 2014

கிம் கி டுக் வரிசை – 7


                                                                                                                          Kim Ki-duk

3 IRON :

ஆம்.. கிம் கி டுக் சொல்வதைப் போல் அவரது திரையுலக பயணத்தில் சமரிட்டன் கேர்ள் மற்றும் 3-அயர்ன் என்ற இரண்டு திரைப்படமுமே முக்கியமான மைல்கல்கள். அதீதமான வன்முறை, அதீதமான செக்ஸ் என்று குற்றம் சாட்டப்பட்ட கிம் கி டுக்கின் திரைப்படங்களுக்கு இது முற்றிலுமே விதிவிலக்கான படம்.. மிகக் குறைந்த வன்முறை..?? ஏன்..?? வன்முறையே இல்லாத திரைப்படம் என்று கூட இந்த திரைப்படத்தை தாராளமாகச் சொல்லலாம்.. கிம்மின் திரைப்படங்களை பார்க்க ஒருவித தயக்கம் இருப்பவர்கள், தாராளமாக இந்தத் திரைப்படத்தில் இருந்து தொடங்கலாம்.. கிம்மின் திரையுலகிற்குள் நுழைய முற்படுபவர்களுக்கு, இந்த திரைப்படம் மிகச் சிறப்பான வாசலாக இருக்கும்.. ஏன் வாசலென்று சொல்கிறேன் என்றால், 3 அயர்ன் என்கின்ற இந்த தலைப்பின் அர்த்தமே ” காலியான வீடுகள் ” என்பது தான். இந்த காலியான வீடுகளின் வாசல் வழியாக நீங்கள் நுழைந்தால், ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் உணர்த்தி, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும், அவனது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், அவன் வாழ்கின்ற சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதான ஒரு நீண்ட, நெடிய, வாழ்வியல் பயணத்தை தன் பிற படங்களின் மூலமாக அவர், உங்களுக்கு உணர்த்திவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு..


கிம்மின் திரைப்பட வரிசையில் இது ஏழாவது திரைப்படம்.. இந்த தொடரை தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கும், தொடரை வாசிக்காமல் ஏற்கனவே கிம் கி டுக்கின் திரைப்படங்கள் பரீட்சியமானவர்களுக்கும் கிம் கி டுக்கின் திரைப்படம் எப்படி இருக்கும் என்பது ஓரளவுக்கு புரிந்து இருக்கும்.. கிம் கி டுக்கின் வரிசைக்குள் புதிதாக நுழைபவர்களுக்காக ஒரு சிறிய முன்னுரை.. இவர் ஒரு விநோதமான கலைஞர்.. ஒரு விஸ்தாரமான பரப்பில் கதையைத் தொடங்கி, அதனை ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கி குறுக்கிக் கொண்டே செல்வதல்ல இவரது கதை சொல்லும் முறை.. அதற்கு நேர்மாறானது.. ஒரு புள்ளியில் கதையைத் தொடங்கி அதனை ஒரு வட்டத்தின் அளவுக்கு சிறுக சிறுக விஸ்தரித்துக் கொண்டே செல்வது தான் இவரது திரைக்கதை முறை.. இது நம் சிந்தனை சக்தியையும் விஸ்தரிக்கும். மேலோட்டமாக பார்ப்பதற்கு ஒரு ஆரம்பம் ஒரு இடைநிலை ஒரு முடிவு என்று சாதாரண அம்சங்களுடன் இவரது கதை இருக்கும்.. இன்னும் அதை நுட்பமாக பார்க்கத் தொடங்கினால், அதில் பல கதைகள் ஒளிந்திருக்கும்.. அந்தக் கதைகளின் முடிவுகளைத் தேடி திரைப்படங்கள் முடிந்த பிறகும் நம்முடைய மனம் ஓடிக் கொண்டே இருக்கும்.. இதுதான் இவரது எல்லாத் திரைப்படங்களிலும் இருக்கும் சிறப்பம்சம்.. அந்த சிறப்பம்சம் இந்த திரைப்படத்துக்கும் உண்டு..

3 அயர்ன் திரைப்படத்தின் கதை இதுதான்.. ஒரு இளைஞன், பூட்டப்பட்டுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் நுழைந்து, அந்த வீட்டின் உரிமையாளர் வரும் வரை, அங்கேயே சமைத்து, குளித்து, உண்டு, உடுத்தி, உறங்கி அவனது வாழ்க்கையை தற்காலிகமாக அந்த வீட்டில் கழிப்பான்.. அவர்கள் வந்துவிட்டால் அங்கிருந்து தப்பிக்கும் இளைஞன், வேறு பூட்டப்பட்ட வீடுகளை தேடி சென்றுவிடுவான்.. இப்படி ஒரு வீட்டுக்குள் அவன்  நுழையும் போது, அந்த வீட்டுக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்படும் ஒரு இளம் பெண்ணை அவன் சந்திக்கிறான். அவளது துன்பத்தை உணர்ந்து கொள்ளும் அவன், அவளது கணவனை தாக்கிவிட்டு, அந்த இளம் பெண்ணை தன்னோடு அழைத்துச் செல்கிறான்.. இருவரும் சேர்ந்தே பிற வீடுகளில் தங்கத் தொடங்குகிறார்கள்.. ஒரு கட்டத்தில் போலீஸிடம் மாட்டிக் கொள்ள இருவரும் பிரிகிறார்கள்.. அந்த இளம் பெண்ணின் கணவன் போலீஸ் இருவரும் உடன் சேர்ந்து கொண்டு அந்த இளைஞனை துன்புறுத்துகின்றனர்.. பின்னர் சில புரிந்து கொள்ள கடினமான காட்சிகளுக்குப் பிறகு, அந்த இளைஞனும், அந்த இளம் பெண்ணும் அவளது வீட்டிலேயே அவளது கணவனுக்கு தெரியாமல் வாழத் தொடங்குகிறார்கள்.. இது எப்படி சாத்தியம்…?? இந்த திரைப்படம் என்ன சொல்ல வருகிறது..?? அது என்ன புரிந்து கொள்ள முடியாத காட்சிகள்..?? எல்லாவற்றையும் சற்று விளக்கமாக பார்க்கலாம்…

மேற்சென்ற பத்தியிலும் ஒரு கதை இருக்கிறது… கணவனால் துன்பப்படுத்தப்படும் ஒரு பெண்ணை மீட்கும் ஒரு சாதாரண இளைஞன், பற்றிய கதை.. இந்த எளிய கதையை புரிந்து கொள்வதில் நமக்கு பெரிய சிக்கல்கள் இருக்காது, ஆனால் அந்த கடைசி இருபது நிமிடங்கள் கொஞ்சம் புரிந்தும் புரியாத தன்மையுடனும் தான் இருந்திருக்கும்.. அதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அந்த திரைப்படங்களை குறைந்தது ஒரு பத்து முறையாவது பார்த்து, அதில் வருகின்ற ஒவ்வொரு காட்சிகளையும் ப்ரேம்களையும் உள்வாங்கி, இந்தக் காட்சியை ஏன் இப்படி வைத்தார் என்று நமக்கு நாமே கேள்விகேட்டு விடை காண்பதை தவிர வேறு வழியில்லை.. அதுபோல நாம் ஏற்கனவே பழக்கப்பட்ட, ஆனால் பழக்க தோஷத்தில் மறந்து போன சில பெளத்தம் சார்ந்த தத்துவார்த்த கோட்பாடுகளையும் மீள் ஞாபகம் செய்வதும் அவசியம்.. ஏனென்றால், இயக்குநர் கிம் கி டுக் அவர்களின் வாழ்க்கையின் பெரும்பகுதி பெளத்தம் மற்றும் கிறிஸ்துவம் போன்ற பெரும் மதச் சூழல்களுக்குள் புதைந்து இருந்ததால், அந்த தத்துவங்களின் உதவியின்றி அவரது திரைப்படங்களை மிகத் தெளிவாக புரிந்து கொள்வது கடினம் தான்..

அந்த பெளத்த தத்துவங்களுக்குள் போவதற்கு முன்னர் கதை சார்ந்து, நம்மிடமே நாம் ஒரு கேள்வி கேட்டுக் கொள்வோம்.. கேள்வி இதுதான்.. உங்களுக்கு (சொந்தமாக) இந்த உலகில் என்ன இருக்கிறது…? அல்லது உங்களது அடையாளங்கள் என்ன…?? அடையாளங்கள் என்றவுடன் ஆயுதம் ஏந்த ஆள் எடுப்பதற்கு கொடுப்பது போல், வலதுமுட்டிக்கு கீழ் பெரிய காயம், இடது தொடையில் சிறிய மச்சம் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்.. நீங்கள் எப்படி உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்..?? யோசித்துப் பார்த்தால், உங்கள் வேலைகளின் வாயிலாக, நான் வங்கி காசாளர், நான் இஞ்ஜினியர், நான் டாக்டர், நான் பொறியியல் வல்லுநர், இது போக என்னுடைய பெயர் இது, இது என்னுடைய ரேசன் அட்டை, இது வாக்காளர் அடையாள அட்டை, இது ஆதார் அடையாள அட்டை, நான் இன்னாரது மகன் அல்லது மகள், இன்னாரது  கணவன் அல்லது மனைவி இப்படி எத்தனையோ அடையாளங்கள் சொல்லுவோம்.. நாம் மனிதர்கள் என்கின்ற அடையாளத்தை நாம் ஏன் மறந்து போனோம்.. மனிதர்களுக்கு உள்ளாகவே நம்மை மனிதன் என்று நிருபிக்க வேண்டிய அவசியங்களும், தேவைகளும் தேவையற்றது என்று எண்ணிக் கொள்ள பழகிவிட்டோம் அப்படித்தானே…

உங்களுக்கு சொந்தமாக என்ன இருக்கிறது என்று பட்டியலிடுவோமோ..?? எனக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது, இரண்டரை செண்ட் நிலம் இருக்கிறது, ஐசிஐசிஜ வங்கியில் இரண்டரை லட்சம் பணம் இருக்கிறது, நிலையான பாதுகாப்பான வேலை இருக்கிறது, அன்பான அழகான மனைவி இருக்கிறாள், அழகான குழந்தைகள் இரண்டு இருக்கிறது.. பெரும்பாலும் இப்படித்தான் நீளும் நமக்கு சொந்தமாக இருக்கின்ற பட்டியல்கள்.. சுகமாக நாம் கருதும் எல்லாமே இந்த பட்டியல்களில் பங்கெடுத்து இருக்கும்.. சுமையாக நாம் கருதியவற்றை பட்டியலிடுவோமோ…?? எனக்கு சொந்தமா ஒரு அஞ்சு லட்ச ரூபா கடன் இருக்கு…!!! (அந்தக் கடனும் உங்களுக்கு மட்டுமே தானே சொந்தம்..) சொல்லுவோமா அப்படி… அல்லது ”எனக்கு சொந்தமா வயசான உடம்புக்கு  முடியாத அப்பா அம்மா இருக்காங்க… ஒன்றுக்குமே உதவாமல் எனக்கு நாலு நண்பர்கள் சொந்தமா இருக்காங்க…” என்றாவது சொல்லுவோமோ…?? கண்டிப்பாக மாட்டோம்… ஆக எதையெல்லாம் நாம் பிறர் அபகரித்துவிடக் கூடாது என்று எண்ணுகிறோமோ அந்த விசயங்கள் மட்டுமே சொந்தமாக என்கின்ற பட்டியலை அலங்கரிக்கின்றன… ஒருவனின் நண்பர்களையோ, ஒருவரின் அப்பா அம்மாக்களையோ, ஒருவனின் கடன் சுமைகளையோ மற்றொருவன் அபகரித்துக் கொண்டால், எந்த வருத்தமும் கவலையும் பறிகொடுத்தவனுக்கு இல்லை.. ஆக மனிதன் பிறந்தது முதல் இறக்கின்ற வரை ஒவ்வொரு பருவங்களிலும் ஏதோ ஒன்றை “ இது எனக்கு சொந்தமானது” என்று அடையாளப்படுத்திக் கொள்ளவே முனைகிறான்… ஆனால் அவனது வாழ்நாளின் ஒரு நொடிப் பொழுதில் கூட அவன் “ இந்த உடலும், இந்த உயிரும், இந்த வாழ்க்கையும் மட்டுமே தனக்கு முழுக்க சொந்தமானது” என்கின்ற உண்மையை அவன் அறிவதே இல்லை..

சரி மேற்சொன்ன விசயத்துக்கும் இந்த திரைப்படத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.. அதைத்தான் பார்க்கப் போகிறோம்… பெளத்த மதத்தைக் கொடுத்த கெளதம புத்தரின் முக்கியமான போதனை “ ஆசையே துன்பத்துக்கு காரணம்” பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் வளர்வதெல்லாம் ஆசைகளின் அடி வைத்துத் தான்.. பிறந்ததில் இருந்தே அவன் சொந்தமாக்கிக் கொள்வதில் மிகுந்த ஆசையுடன் செயல்படுகிறான்.. வீடுகளை, இடங்களை, பணங்களை, நகைகளை, சொத்துக்களை, பெண்களை, ஆண்களை, குழந்தைகளை.. இப்படி சொந்தமாக்கிக் கொண்டவற்றின் வாயிலாக அவன் ஒரு அடையாளத்தை நிறுவுகிறான்.. நான் என்றால், அது இதுதான்… இந்த வீட்டில், இந்த உத்தியோகத்தில், இவ்வளவு சம்பளத்தில், இவர்களின் பிள்ளையாக, இவர்களின் தகப்பனாக, இவளி(ரி)ன் கணவனாக (மனைவியாக) இப்படி சொந்தம் கொண்டாடியவைகளைக் கொண்டு தனக்கு ஒரு அடையாளம் கொடுத்துவிட்டு அந்த வீடுகளுக்குள் அவன் வாழத் தொடங்குகிறான்… அடையாளங்கள் எவ்வளவு பெரிய ஆபத்துக்கள் என்பதை எல்லா நேரங்களிலும் மனிதன் அறிவதில்லை..

இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் எல்லைக் கோடுகள் போல வீடுகள் என்பவையும் மிகச்சிறிய எல்லைக் கோடுகள் தான்.. எல்லையில் ஏற்படும் பதற்றம் வீடுகளுக்குள்ளும் எப்போதும் இருக்கிறது… யாரும் வெளியேறி விடுவார்களோ.. என்கின்ற பதட்டம்.. யாரும் உள்ளே வந்து விடுவார்களோ என்கின்ற பயம்.. ஆக யாரும் உள்ளே நுழைந்துவிடாமல் இருக்க வீடுகளை பூட்டி வைக்கிறான்.. யாரும் வெளியேறிவிடாமல் இருக்க, சில நேரங்களில் சிலரை கட்டி வைக்கிறான்.. இப்படி ஏற்படுகின்ற பயம் அவனது அமைதி அன்பு இரண்டையுமே குலைத்து விட, அன்பு வெளியேறிய அந்த வீட்டுக்குள் சந்தேகம், விரக்தி, வெறுப்பு, கோபம் இவை மட்டுமே உலா வர, அந்த வீடு காலியான வீடாகிறது.. 3 iron means Empty House..

இப்படிப்பட்ட ஒரு காலியான வீட்டுக்குள் தான் நாயகன் நுழைகிறான். அந்த வீட்டுக்காரரின் மனைவி. அந்த வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டு இருக்கிறாள், அவள் தான் நாயகி.. முதல் காட்சி இப்படித் தொடங்குகிறது.. ஒரு உடைந்த நீருக்குள் அமிழ்த்தி வைக்கப்பட்ட பெண் சிலையின் மீது ஏதோ ஒரு கடினமான பொருளைக் கொண்டு யாரோ எறிவதைப் போல் காட்சி தொடங்குகிறது.. அதன் பிண்ணனியில் டைட்டில் வெளிவர… வீடுகளின் வெளிப்புறத்தில் பிரபல உணவகங்களின் மெனு கார்டுகளை நாயகன் வீட்டின் சாவிதுவாரத்தை மறைக்கும்படி ஒட்டிக் கொண்டு இருக்கிறான்.. நாயகியின் வீட்டுக்கு முன்னர் நாயகனின் பைக் நின்று கொண்டு இருக்கிறது… நாயகியின் கணவன் காரை வெளியே எடுக்க முடியாமல் நாயகனின் பைக் குறுக்கே நிற்கிறது.. அவன் ஹாரனை அடிக்க.. நாயகன் அவசரமாக பைக்கை நகர்த்த, நாயகனை முறைத்துக் கொண்டே காரை எடுத்துச் செல்கிறான்…

அங்கிருந்து கிளம்பும் நாயகன், வேறொரு அப்பார்ட்மெண்டுக்கு செல்கிறான்.. அங்கு ஏற்கனவே இவன் ஒட்டிவிட்டு வந்த மெனுகார்டுகள் பெரும்பாலும் கிழித்து எறியப்பட்டு இருக்க… ஒரு வீட்டில் மட்டும் அந்த slip அகற்றப்படாமல் இருக்கிறது.. அந்த வீட்டைத் திறந்து உள்ளே செல்லும் நாயகன், வாய்ஸ் மெய்லை செக் செய்து அந்த வீட்டின் உரிமையாளர்கள் எங்கு சென்றிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, சாவகாசமாக பல் துலக்கி, காலைக் கடனை முடித்து, குளித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, அங்கிருக்கும் போட்டோக்களுடன் தன்னை இணைத்து புகைப்படம் எடுத்துவிட்டு, அங்கிருக்கும் சிறுவர்களுக்கான துப்பாக்கியை பழுது நீக்கிவிட்டு, அந்த வீட்டுக்காரர்களின் அழுக்குத் துணிகளை துவைத்து, உலர்த்திவிட்டு, டிவி பார்த்துக் கொண்டே உறங்குகிறான்.. நமக்கு சொந்தமானது என்று நாம் நினைத்த சிறுசிறு பொருட்கள் கூட பிறருக்கும் சொந்தமானதாக மாறும் காட்சிகள் நம் கண் முன்னே நடக்கிறது…

இப்பொழுது முன்பு நமக்காக நாம் கேட்டுக் கொண்ட கேள்விகளை, இந்த இளைஞனை முன் வைத்து கேட்டுப் பாருங்கள்… இவனுக்கு சொந்தமானது எது..?? இவனது அடையாளம் என்ன…? திருடர்களுக்கு என்று ஒரு அடையாளம் உண்டு.. ஆனால் இவன் திருடன் அல்ல… உணவுகளை எடுத்து சாப்பிடுவதை தவிர இவன் வேறு எதையுமே எடுப்பதில்லை.. இவனுக்கு சொந்தமானது என்று நாம் அவனது இருசக்கர வாகனத்தை கை காட்டலாம். ஆனால் சிறையில் இருந்து திரும்பி வந்தப் பின்னர் அதுவும் கூட அவனோடு இருக்காது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.. ஆக இந்த இடத்தில் அவனது அடையாளம் அவன் வெறும் மனிதன் என்பது மட்டுமே.. அவனுக்கு பசிக்கும், குளிக்க வேண்டும், துலக்க வேண்டும், கழிக்க வேண்டும், கூட வேண்டும் என்கின்ற மனித உடல் சார்ந்த தேவைகள் மட்டுமே இருக்கும்.. ஆக அவனது அடையாளம் அவன் ஒரு மனிதன்… அவனுக்கு சொந்தமானது அவனது உடல், உயிர் மற்றும் அவனது வாழ்க்கை மட்டுமே..


அங்கிருந்து கிளம்பும் நாயகன், வந்து நிற்பது நாயகியின் வீட்டில். அவளது வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த சிலிப்புகள் இன்னும் எடுக்கப்படாமல் இருப்பதைக் கொண்டு அந்த வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டு உள்ளே நுழைகிறான்.  அந்த வீட்டில் நாயகியின் அழகான உருவப்படம் தொங்கிக் கொண்டு இருக்கிறது.. அவன் வீட்டின் ஒவ்வொரு அறைகளாக சுற்றிப் பார்க்கிறான்.. உள்ளறையில் நாயகி இருப்பதை அவன் அறியவில்லை.. நாயகி தன் கணவன் தான் வந்திருக்கிறான் என்ற எண்ணத்தில், கோபத்துடன் அமர்ந்து இருக்கிறாள்… அவளது முகத்தில் உதடுகள் கிழிந்து ரத்தம் வடிந்த தடம் இருக்கிறது.. கன்னம் சிவந்து போய் கன்றிப் போய் இருக்கிறது… நாயகன் அங்கு டேபிளில் வைக்கப்பட்ட ஒரு மாதஇதழை எடுத்துப் புரட்ட அதில் நாயகியின் அரை நிர்வாணப் படங்கள் இடம் பெற்றிருக்கிறது… அதே நேரம் தொலைபேசியின் வாய்ஸ் மெய்ல் வழியாக நாயகியின் கணவனின் குரல் கேட்கிறது… அதை  கேட்ட நாயகி, அப்படியென்றால் வீட்டுக்குள் யார் வந்தது என்ற எண்ணத்துடன் வந்து பார்க்க… அங்கு நாயகன் போனையே பார்த்தபடி அமர்ந்திருக்கிறான்.. இதைப் பார்க்கும் நாயகியிடம் ஒரு அந்நியன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டான் என்கின்ற பதட்டமோ, பயமோ, அச்சமோ எதுவுமே இல்லை.. கணவனின் வார்த்தைகளின் வழியாக அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இல்லை என்பது நமக்குப் புரிகிறது.. பின்பு நாயகன் உணவு சமைத்து உண்கிறான்.. எடை சரிபார்க்கும் இயந்திரத்தை பழுது செய்கிறான்.. Golf விளையாடுகிறான்… இப்பொழுது நாம் படத்தின் டைட்டிலின் போது காட்டப்பட்ட சிலையைப் பார்க்கிறோம்… அதன் மீது முதலில் எறியப்பட்ட கடினமான பொருள் கோல்ஃப் பந்தாக இருக்கலாம் என யூகிக்கிறோம்.. அந்த சிலைக்கு எதிரே பசியோடு பற்களை காட்டியபடி உறுமிக் கொண்டு இருக்கும் ஒர் புலியின் சிலை இருக்கிறது… நாயகன் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறான்.. குளிக்கிறான்… நாயகியின் அறை நிர்வாண படங்களை மீண்டும் பார்க்கிறான்.. இரவில் சுய இன்பம் செய்கிறான்.. இப்போது நாயகி அவன் பார்வையில் படும்படி அவன் முன்னே வந்து நிற்கிறாள்.. அதே நேரம் டெலிபோன் மணி ஒலிக்கிறது.. டெலிபோனில் வாய்ஸ் மெய்லில் நாயகியின் கணவன் கத்திக் கொண்டு இருக்கிறான்… அவள் டெலிபோனை கையில் எடுக்கிறாள்.. நாயகன் பயந்துபோய் வீட்டை விட்டு கிளம்ப எத்தனிக்கிறான். அப்போது நாயகி பதிலேதும் பேசாமல் பெரும் குரலெடுத்து கத்திவிட்டு போனை வைத்துவிடுகிறாள்… அவளது அலறலை கேட்டு உறைந்து போய் நிற்கும் நாயகன், அவளை உற்று பார்த்தபடியே மெதுவாக அந்த இடத்தை விட்டு கிளம்புகிறான்..

நெடுஞ்சாலையில் அமர்ந்து இதைப் பற்றியே சிறிது நேரம் யோசித்தவன், மீண்டும் அவளது வீட்டுக்கு வருகிறான்.. அவள் குளியலறையில் அழுது கொண்டு இருக்கும் குரல் கேட்கிறது.. ஒரு பாடலின் குறுந்தகடை இயங்கச் செய்துவிட்டு, அவள் அணிவதற்கான புதிய ஆடைகளை குளியலறை வாசலில் வைக்கிறான்… சத்தம் கேட்டு வெளியே வரும் அவள் அந்த உடைகளை அணிந்து கொள்கிறாள்.. அவள் காலடிகளைத் தேடி ஒரு கோல்ஃப் பந்து உருண்டு வருகிறது... அதை கையில் எடுக்கும் அவள் அவன் இருக்கும் எதிர்திசை நோக்கி அதை உருட்டிவிடுகிறாள்.. இந்த கோல்ஃப் பந்து இந்த திரைப்படத்தில் முக்கியமான ஒரு உருவகமாக வருகிறது… முதல் காட்சியில் அந்த சிலையின் மீது படுகின்ற கடினமான பொருள் (கோல்ஃப் மைதானத்தில் அந்த சிலை இருப்பதால்) கோல்ஃப் பந்தாகவும் இருக்கலாம்… அது ஆரம்ப காட்சியில் அந்த நாயகி கோல்ஃப் பந்தால் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டாள் என்பதாகக் கூட கொள்ளலாம்… இது தொடர்ந்து படத்தில் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்றும் பார்ப்போம்..

இவர்கள் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும் போது, அவளது கணவன் உள்ளே நுழைகிறான்… அவளை மீண்டும் அடித்து துன்புறுத்திவிட்டு, காட்டுமிராண்டித்தனமாக அவளை அடைய முற்பட, அப்பொழுது கோல்ஃப் விளையாடும் சத்தம் அவனது காதில் கேட்கிறது… அதிர்ச்சியடைந்த அவன் நாயகனைப் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டே போலீஸ்க்கு போன் செய்ய, அதற்கு முன்னர், அதே கோல்ஃப் பந்தைக் கொண்டு அவனைத் தாக்கிவிட்டு நாயகனும் நாயகியும் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.. நாயகன் தன் கையில் ஒரு கோல்ஃப் பந்தையும் ஒரு கோல்ஃப் ஸ்டிக்கையையும் உடன் எடுத்துக் கொள்கிறான்… இருவரும் சேர்ந்து வேறொரு பகுதியில் உள்ள வீடுகளின் கதவில் மெனு கார்ட் சிலிப்பை ஒட்டிவிட்டு, ஒரு பூங்காவில் காத்திருக்கின்றனர்.. அப்போது நாயகன் தன் கையில் இருக்கும் பந்தை துளையிடுகிறான்.. அதில் வயரை நுழைத்து அதை ஒரு மரத்தில் கட்டி பந்தை அடித்து கோல்ஃப் ஆடுகிறான்… நாயகி அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்..

அடுத்து இருவரும் ஒரு வீட்டில் நுழைகிறார்கள்.. வீடு என்பது வெறும் வீடு மட்டும் அல்லவே.. அது அந்த வீட்டில் வாழும் மனிதர்களின் மனங்களையும் சொல்லிவிடும் இடமும் கூடத் தானே… ஆக அவர்கள் நுழையும் இந்த வீடும் ஒரு காலியான வீடு தான்… மனிதர்களை வெறும் சதைப் பிண்டமாக பார்க்கும் அந்த வீட்டின் உரிமையாளன் ஒரு புகைப்பட கலைஞன் என்பதையும் அவன் எடுத்த பெரும்பாலான புகைப்படங்கள் ஆண் பெண் இவர்களின் நிர்வாணப் படங்கள் என்பதனை சொல்வதைப் போல் வீட்டின் முகப்பிலேயே கதவின் பின்புறம் ஒரு நிர்வாணப்படம் ஒட்டப்பட்டு இருக்கிறது... இப்படி இருக்கிறது அந்த வீட்டுக்கான அடையாளம்.. உள்ளே நுழைந்த நாயகன் அங்கு இருக்கும் நாயகியின் நிர்வாணப் படத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறான்.. அவள் ஒரு மாடல் அழகி அல்லது ஒரு பழைய நடிகை என்பதனை நாம் அறிந்து கொள்கிறோம்.. பின்னர் ஓடாமல் நின்றுவிட்ட கடிகாரத்தை சரி செய்கிறான்.. அங்கும் முன்னர் ஒலித்த அதே பாடல் ஒலிக்கிறது.. கடிகாரம் ஓடத் தொடங்குகிறது.. உறைந்து போன நாயகியின் வாழ்க்கை ஓடத் தொடங்கியது போன்ற பிம்பம் நமக்குக் கிடைக்கிறது.. இப்பொழுது நாயகன் தூங்கிக் கொண்டிருக்க…. அந்த புகைப்படத்தை புகைப்பட சட்டகத்துக்குள் இருந்து நாயகி எடுக்கிறாள்… அடுத்த நாள் காலை அந்த புகைப்படத்தை பார்க்கும் நாயகன் ஆச்சரியம் அடைகிறான்… அது கலைந்து போன ஒரு புகைப்படமாக தெரிகிறது… நாயகியின் முகத்தை தவிர வேறு எந்த உடல் பாகமும் கணிக்க முடியாதபடி குழம்பிப் போய் கிடக்கிறது…

இது அடையாளங்களை அழிக்கும் முயற்சி.. மாடல் விளம்பர அழகியாக தனக்கு இருந்த அடையாளத்தால் தான் அவளுக்கு இந்த மோசமான வாழ்க்கை சம்பவித்தது என்பதால், அந்த அடையாளத்தை அவள் அழிக்க முயற்சிப்பதாக நாம் இதை புரிந்து கொள்ளலாம்… அடையாளங்கள் கூட சில இடங்களில் ஆபத்தாக மாறிவிடும் சூழல் நம் வாழ்க்கையிலும் இருப்பதை நாம் உணர முடியும்.. இப்படி தன் அடையாளத்தை தொலைக்க விரும்பும் நாயகி, எந்தவித அடையாளம் இல்லாமல், தான் வந்துபோன சுவடுகூட தெரியாமல் வாழும் நாயகனின் வாழ்க்கைமுறையை பின்பற்றத் தொடங்குவதாக அடுத்த காட்சிகள் இருக்கிறது… அந்த வீட்டில் இருக்கும் பழைய துணிகளை அவளே துவைக்கிறாள்… நாயகன் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் தெளிக்கிறான்… அந்த வீட்டில் தாங்கள் ஒருநாள் வாழ்ந்தோம் என்பதற்கு அடையாளமாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார்கள்..

அடுத்த வீட்டை தேர்வு செய்யும் இடைவெளியில் மீண்டும் நாயகன் ஒரு பூங்காவில் பந்தை மரத்தில் கட்டி கோல்ஃப் ஆடுகிறான்… இந்த முறை அவனை விளையாட விடாதபடி நாயகி எதிரே சென்று நின்று கொள்கிறாள்.. அவன் வேறுபுறம் திரும்பி அடிக்க முற்பட… அங்கும் எதிரே மறித்து நின்று கொள்கிறாள்.. வேறு வழியின்றி அவன் பந்தை மரத்தில் இருந்து கலட்டிக் கொண்டு, இருவரும் கிளம்புகின்றனர்… சரி அவள் ஏன் அப்படி நின்றாள்.. நாயகன் கோல்ஃப் விளையாடுவதில் அவளுக்கு என்ன பிரச்சனை..?? அதை இன்னும் சிறிது நேரம் கழித்து பார்ப்போம்…

அடுத்த வீட்டுக்குள் நுழைகின்றனர்.. அந்த வீட்டின் அடையாளம் எப்படி இருக்கிறது தெரியுமா…?? நுழைந்ததுமே அங்கு குத்துச்சண்டைக்கான கையுறைகள் தொங்கிக் கொண்டிருக்கிறது…. அதைத் தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளன் முகமூடியும் கையுறைகளையும் அணிந்து கொண்டு சண்டைக்கு தயாராக நிற்கிறான்… உடல் வலிமையின் மூலம் எல்லாத்தையும் வெற்றி பெற முடியும், என்பதாக அந்த வீட்டின் அடையாளம் இருக்கிறது… ஆக இதுவும் அன்பு இல்லாத ஒரு காலியான வீடு தான்.. இருவரும் வழக்கமான வேலைகளை செய்ய.. நாயகன் பழுதடைந்த ரேடியோவை சரி செய்கிறான்… நாயகி நீ சரி செய்ய வேண்டியது என்னை என்று சொல்வது போல் கத்தரியை எடுத்து நீட்ட, நாயகன் அவளது தலைமுடியை வெட்டுகிறான்..  பிண்ணனியில் மீண்டும் அதே பாடல் ஒலிக்கிறது.. நாயகன் நாயகி இருவரும் மது அருந்துகின்றனர்... நாயகி அழத் தொடங்குகிறாள்.. நாயகன் அவளை தோளில் சாய்த்து ஆறுதல் சொல்கிறான்.. அவளை படுக்க வைத்துவிட்டு, நகல முற்பட்டவனை, கையை பிடித்து அருகிலேயே படுக்கச் சொல்கிறாள்… இருவரும் தூங்கிப் போக, உள்ளே நுழையும் பாக்ஸரும் அவனது மனைவியும் அதிர்ச்சி அடைகின்றனர். Boxer தன் கையுறைகளை அணிந்து கொண்டு நாயகனை கடுமையாக தாக்கி வெளியேற்றுகின்றான்..

காயங்களுடன் ரோட்டில் அமர்ந்திருக்கும் நாயகனுக்கு நாயகி உணவு ஊட்டுகிறாள்.. அவன் வேண்டா வெறுப்பாக உணவை சாப்பிட்டுக் கொண்டே அருகில் இருக்கும் மரத்தில் கோல்ஃப் விளையாடத் தொடங்க, அவள் மீண்டும் மறிக்கிறாள். நாயகன் விடாப்பிடியாக வேறுபுறம் திரும்பி பந்தை பலம் கொண்ட மட்டும் அடிக்க… பந்து வயரில் இருந்து அறுந்து பறந்து போய் ஒரு கார் கண்ணாடியை துளைக்கிறது… அதிர்ந்து போய் நாயகனும் நாயகியும் அருகே சென்று பார்க்க.. அங்கு ஒரு இளம்பெண்ணின் தலை உடைந்து ரத்தம் வடிந்து கொண்டு இருக்க.. அருகிலிருக்கும் இளைஞன் பதற்றத்தில் புலம்புகிறான்… குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் நாயகன் ஓரிடத்தில் அமர்ந்து அழத் தொடங்குகிறான்.. நாயகி அவனைத் தேற்றுகிறாள்…

இந்தக் காட்சி எதற்காக வைக்கப்பட்டது.. நாயகன் ஏன் அப்படி விளையாட வேண்டும்… நாயகி ஏன் அதை தடுக்க வேண்டும், அது ஏன் காரில் வந்த இளைஞனின் மண்டையை உடைக்காமல் இளைஞியின் மண்டையை உடைக்க வேண்டும்.. இந்தக் காட்சிகள் மையக்கதைக்கு தேவை இல்லாதது தான்… ஆனால் அவை மையக்கதைக்கு வலுசேர்ப்பவை… நாயகன் எப்படி அந்த பந்தை கட்டி வைத்து அடிக்கிறானோ, அப்படித்தான் நாயகியை அவளது கணவன் அடைத்து வைத்து அடிக்கிறான்.. அந்தப் பந்தினால் அடி வாங்கியவளாக நாயகி இருந்தாலும் கூட.. இந்த இடத்தில் நாயகி தன்னை அந்தப் பந்தாகவே பாவிக்கிறாள் என்பதற்கான காட்சி… அதுவும் இன்றி ஓட வேண்டிய பந்தை கட்டி வைத்து அடிப்பதும், உலவ வேண்டிய உயிர்களை அடைத்து வைத்து அன்பு செலுத்துவதும் எப்படி நேர்மையான செயல்களாகும் என்கின்ற கேள்வியும் அதில் உண்டு.. அதுவுமின்றி பெரும்பாலும் ஆணின் கோபங்கள் பெண்களைத்தான் காயப்படுத்துகின்றன.. என்பதன் படிமமாகத்தான் அந்த மண்டை உடைந்த பெண் எனக்கு காட்சியளிக்கிறாள்… என் புரிதலில் இந்தக் காட்சிகள் இதற்காக வைக்கப்பட்டவைதான்…


அடுத்த வீட்டின் அடையாளம் மிக முக்கியமானது… இரவு நேரத்தில் அந்த வீட்டுக்குள் இவர்கள் நுழைகிறார்கள்… அந்த வீட்டில் சரி செய்யப்பட வேண்டிய பொருட்கள் எதுவுமே இல்லை… முகம் மலர சிரித்தபடி இருக்கும் கணவன் மனைவியின் புகைப்படம் அந்த வீட்டின் அடையாளமாக இருக்கிறது.. ஆக அந்த வீட்டின் அடையாளமாக அன்பு இருக்கிறது.. இந்த வீட்டில் நாயகன் நாயகி இருவருமே உடலாலும் இணைகிறார்கள்.. இது முந்தைய வீட்டிலேயே இருவரும் அருகருகே படுத்த போது நடந்திருக்கலாம்.. ஆனால் அங்கு நடக்கவில்லை.. ஏன் இங்கு நடக்கிறது..?? ஏனென்றால் இது காலியான வீடு அல்ல.. அன்பால் நிறைந்த வீடு… அடுத்த வீட்டின் அடையாளமோ வேறு மாதிரி இருக்கிறது… காரைகள் உதிர்ந்த நிலையில் பழைய கால கட்டிடத்துக்குள் நுழைகின்றனர்.. அந்த வீட்டுக்குள் அன்புக்காக ஏங்கிய ஒரு வயதான பெரியவர், தனிமையில் ரத்தம் கக்கி இறந்து போய் இருக்கிறார்.. அவரது பிள்ளைகள் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள்… அவருக்கு துணையாக ஒரு சிறிய நாய்குட்டி மட்டும் அவரது உடலுக்கு அருகே காத்திருக்கிறது… இப்படி இருக்கிறது அந்த வீட்டின் அடையாளம்.. அந்த பெரியவரின் உடலை பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்த பின்னர், அந்த பெரியவரின் மகன் வந்துவிட.. தன் தந்தையை காணாத அவன் இவர்களை போலீஸில் பிடித்துக் கொடுக்கிறான்… நாயகியை கணவன் மீட்டுக் கொண்டு செல்கிறான்… நாயகன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று தெரிந்தும், அவனை பொய் வழக்கில் உள்ளே வைக்கிறது போலீஸ்..

சிறையிலிருந்தபடியே மனிதர்களின் கண்கள் 180டிகிரி கோணத்தில் பார்ப்பதால், அவர்களால் பார்க்க முடியாத 180 டிகிரிக்குள் தன்னை மறைத்துக் கொண்டு வாழும் முயற்சியை பழக்கப்படுத்திப் பார்க்கிறான் நாயகன்.. அதில் பல கட்டத்துக்கு பிறகு அவன் தேர்ச்சியும் பெறுகிறான்… நாயகியைத் தேடிச் செல்கிறான்… நாயகியின் கணவன் நாயகன் திரும்பி வந்தால், அவனை கொல்ல வேண்டும் என்ற வெறியுடன் காத்துக் கொண்டு இருக்கிறான்… நாயகி வீட்டுக்கு நாயகன் செல்கிறான்… நாயகியின் கணவனுக்கு சந்தேகம் வருகிறது.. யாரோ வீட்டுக்குள் இருக்கிறார்கள் என்று தேடத் தொடங்குகிறான்.. அவனைப் பார்த்து நாயகி ”ஐ லவ் யூ” என்கிறாள்.. இந்த வார்த்தையை கேட்பதற்காகவே காத்துக் கொண்டிருந்த நாயகியின் கணவன் அவளை உருகிப் போய் அணைத்துக் கொள்ள, அவனையும் தாண்டி அவளது கைகள் நீள்கிறது… நாயகியின் கணவன் முதுகுக்கு பின்புறம் வந்து நிற்கும் நாயகனை அவளது கைகள் தழுவிக் கொள்ள… இருவரும் இதழ் முத்தம் பதிக்க.. இருவரும் பேசிக் கொண்ட, முதலும் கடைசியுமான அந்த ஐ லவ் யூ வசனத்தோடு அவர்களது வீட்டில் அன்பு நுழைகிறது…. அடுத்த நாள் பணிக்கு செல்லும் கணவன், அந்நியர்கள் யாருக்கும் கதவை திறக்காதே என்று அன்பாக எச்சரித்து செல்கிறான்… அவளும் சிரித்துவிட்டு, பின்னால் கூடியே நடந்து சென்று நாயகனை தன் கைகளுக்குள் சிறைபிடிக்கிறாள்… அவர்கள் இருவரும் ஏறி நிற்பது எடை இயந்திரத்தின் மீது என்பது தெரிகிறது… எடை முள் பூஜ்ஜியத்தில் நிற்க…. நாம் வாழும் வாழ்க்கை கனவா இல்லை நனவா என்று சொல்லுவது கடினம் என்ற வாக்கியத்துடன் படம் முடிகிறது…


இந்த முடிவில் வந்து செல்லும் வாக்கியங்கள் தான் படத்திற்கான இன்னொரு திறப்பை நமக்குக் கொடுக்கிறது… படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு வீட்டுக்குள் கணவனால் அடைத்து வைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கனவாகவே மொத்தபடமும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற புதியவிதமான கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது படம்… அதற்கான சாத்தியக் கூறுகளும் படத்தில் இருக்கிறது… முதல் காட்சி அந்த பெண் சிலையின் மீது கற்கள் எறிவதைப் போன்ற காட்சி… அது அந்த பெண்னை கணவன் துன்புறுத்தும் காட்சிக்கு ஈடானது… அந்த இடத்திலிருந்து அந்தப் பெண்ணின் கனவு தொடங்குகிறது… ” என்னை இந்த சித்ரவதையில் இருந்து மீட்டுப் போக ஒருவன் வர வேண்டும்.. அது யாராக இருக்க முடியும்… பூட்டப்பட்ட வீட்டுக்குள் யார் நுழைய முடியும்… ஒரு திருடனைத் தவிர.. அப்படியானால் அவன் திருடனாகக் கூட இருக்கட்டும்.. ஆனால் திருடனுக்கான அடையாளங்கள் இல்லாத திருடனாக… அப்படி தனக்கான ஒரு அடையாளம் இல்லாத ஒருவனால் தான் என் அடையாளங்களை நான் தொலைக்க உதவ முடியும்..

அப்படி வருகின்ற திருடன் வீடுகளில் திருடக் கூடாது.. சாப்பிட்டுக் கொள்ளலாம்.. உறங்கிக் கொள்ளலாம்… அதற்கு பதிலாக அந்த வீட்டில் ஏதாவது வேலை செய்துவிட்டு செல்ல வேண்டும்… பழுதான இயந்திரத்தை சரி செய்வது, துணி துவைப்பது என… முக்கியமாக அவன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.. (ஏனென்றால் நாயகிக்கு செடிகள் மிகவும் பிடிக்கும்..) ஆனால் அவனுக்குள்ளும் ஆண்களுக்கான முரட்டு சுபாவம் இருக்கும்.. கோல்ஃப் பாலை கயிற்றில் கட்டி அடிப்பதைப் போல… ஆனால் அவன் நல்லவன்… மாறிவிடுவான்… நாங்கள் எங்கு சென்று வசிப்பது.. அதான் ஏகப்பட்ட அடையாளங்களுடன் பல வீடுகள் இங்கு இருக்கிறதே.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றில் வசிக்கலாம்… ஆனால் என் கணவரும் இந்த சமூகமும் எங்களை அவ்வளவு எளிதாக வாழ விடுவார்களா..?? மாட்டார்கள். அப்படி என்றால், அவர்கள் கண்களில் மண்ணைத் தூவி ஏமாற்றும் அளவிற்கு அவன் எதாவது வித்தை கற்றுக் கொண்டால்…?? அவனால் முடியும்.. அப்படி அவன் வித்தை கற்றுக்கொண்டு வந்து இதே வீட்டில் என் கணவருக்கு தெரியாமலேயே என்னை அன்பாக பார்த்துக் கொள்வான்.. இந்த வீடும் காலியாக இல்லாமல் அன்பால் நிறைந்த வீடாக இருக்கும்… “ இப்படி படம் முழுக்கவே ஒரு நீண்ட கனவாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது… கடைசியில் இருவரின் எடையை தாங்கியும் எடை முள் பூஜ்ஜியத்தில் நிற்பதும், கனவா…?? நனவா..?? என்னும் வாக்கியமும் இந்தப் படம் முழுக்கவே ஒரு பாவப்பட்ட பெண்ணின் கனவுக் கதையோ என்று தோன்றுகிறது….

எப்படி இருந்தாலும் இந்த திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படம்.. பல விசயங்களைப் பற்றி நம் சிந்தனைகளை தூண்டுவதாலும், நம் மனதை முதிர்ச்சி அடையச் செய்வதாலும் இந்த திரைப்படத்தை நான் எல்லோருக்கும் சிபாரிசு செய்கிறேன்… இது காதல் சார்ந்த படம், பெண்ணியம் சார்ந்த படம், தத்துவம் சார்ந்த படம் என்று எந்த வகையிலும் குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி எல்லாவிதமான உணர்ச்சிகளிலும் மையம் கொள்கிறது… இந்த படத்துக்கும், செடிகளுக்கு நீர் ஊற்றுவதற்கும் என்ன தொடர்பு… நாயகன் செடிகளுக்கு நீர் ஊற்றுகிறான்…. நாயகியின் கணவன் நாயகிக்குப் பிடிக்கும் என்பதால் செடி வளர்க்கிறான் என்கிறான்… இவர்கள் இருவரும் தங்கிச் செல்லும் வீடுகளில் அந்த ஒரே ஒரு அன்பு நிறைந்த வீட்டில் உள்ள தம்பதியர் மட்டும் செடி வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்… என்ன சொல்லவருகிறார் இயக்குநர்…. இந்த உலகத்தை தனக்கான வாழ்விடமாக மட்டுமே சுருங்கக் கருதி வாழும் மக்களுக்கு இடையில் செடி வளரவும் இடம் ஒதுக்கும் மனோபாவத்தை பேசுகிறாரோ இயக்குநர்.. இருக்கலாம்… அதே போல் அந்த வீட்டுக்குள் நாயகி சென்று தூங்கிவிட்டு வரும் காட்சி மிகமிக நுட்பமானது… நம் வீட்டுக்குள் ஒரு பெண் இப்படி வந்து தூங்கிச் செல்ல நாம் அனுமதிப்போமா…?? இந்த உலகம் (என் வீட்டையும் சேர்த்து) எல்லோருமே வாழ்வதற்கான இடம் என்ற பரந்த புரிதல் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்… அந்த வீட்டை அவன் தனக்கு சொந்தமானது என்று எண்ணுவதில்லை என்பது போன்ற பெருந்தன்மையை நம்மையும் வளர்த்துக் கொள்ளச் சொல்கிறாரா..?? இயக்குநர்.. இருக்கலாம்..

யோசித்துப் பாருங்கள்… கணவன் தனியாக வீட்டில் இருக்கும் போது வெளியே சென்றுவரும் மனைவி, தன் வீட்டில் ஒரு இளம்பெண் உறங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தால், அவள் யார் என்றே எனக்குத் தெரியாது என்று கணவன் கூறினால் நம் சமூகத்தில் என்ன நடக்கும்… ஆனால் அங்கு ஒன்றுமே நடக்கவில்லை… ஏனென்றால், அவளுக்கு தன் கணவன் தன்னை விட்டு போய்விடுவான் என்ற சந்தேகமும் இல்லை… போய்விட்டால் என்ன செய்வது என்ற பயமும் இல்லை.. அவர்களுக்கு இடையே பரிசுத்தமான அன்பு இருக்கிறது.. அந்த வீட்டில் சரி செய்ய எந்தப் பொருளும் இல்லை.. அதனால் தான் அது காலியான வீடல்ல.. அன்பு நிறைந்த வீடு.. தன் கணவனின் மொபைல் என்கேஜாக இருந்த காரணத்துக்காக சண்டையிடும் Boxcerன் மனைவியின் வீட்டில் நாயகி போய் தூங்கிவிட்டு வந்திருந்தால் என்னாகியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.. ஆனால் அவள் மற்ற வீடுகளுக்கு போகமாட்டாள்.. ஏனென்றால், அவளைப் பொறுத்தவரை மற்றவை எல்லாம் வீடே அல்ல.. இப்படி படத்தின் மையக்கதை என்பது ஒன்றாக இருந்தாலும், அது அதன் போக்கில்போகிற போது நமக்கு ஓராயிரம் கதைகளை சொல்லிவிட்டு செல்கிறது…

இந்த திரைப்படத்தை பார்க்கும் போது எனக்கு ஜி.நாகராஜன் எழுதிய “டெர்லின் சட்டையும் ஐந்துமுழ வேஷ்டியும்” என்ற சிறுகதை ஞாபகம் வந்தது… அதிலும் இப்படித்தான் துன்பத்தில் உளன்று கொண்டிருக்கும் பெண்ணின் நினைவுகளில் இருந்துதொடங்கும் கதை.. அது முடியும் தருவாயில் தான், கதையில் நடந்த சம்பவங்கள் முழுக்க ஒரு கனவு என்பதே நமக்கு விளங்கும்.. அதைப் போலத்தான் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் என்றதுமே எனக்கு, தி.ஜானகிராமனின் மோகமுள் தான் நினைவுக்கு வந்தது.. இந்த விசயத்தை மட்டும் பிடித்துக்கொண்டு யோசித்திருந்தால் கூட நம் தமிழ்திரைக்கும் ஒரு 3 அயர்ன் கிடைத்திருக்கும்.. நம் மக்களுக்குத்தான் அதற்கெல்லாம் நேரம் இல்லையே… மொத்தத்தில் இந்தப் படம் ஒரு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கும்.. வசனங்கள் இன்றி மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள் இந்த திரைப்படத்தின் நடிகர்கள்.. இசையும் ஒளிப்பதிவும் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு கிம் கி டுக்கின் இந்தப் படமும் ஒரு நல்ல உதாரணம்.. படத்தைப் பாருங்கள்… உங்கள் வாழ்வில் மறக்க முடியாத படங்களில் கண்டிப்பாக இதுவும் ஒன்றாக இருக்கும்…

நம் நாட்டில் எப்போதும் மனிதர்கள் வசிக்காத வீடுகளும் இருக்கிறது… எப்போதும் வீடுகளில் வசிக்காத மனிதர்களும் இருக்கிறார்கள்.. ஆக இந்த காலியான வீடுகள் என்ன சொல்ல வருகிறது என்றால், பாதுகாப்பிற்காக கட்டப்பட்டுள்ள வீடுகள் என்னும் எல்லைக் கோடுகளுக்குள் தங்களை சுருக்கிக் கொண்டு இருக்கும் நம் வீட்டுப் பெண்களும், தங்களது ஆசைகளை நனவாக்க இது போன்று ஒரு திருடனாவது வரமாட்டானா…? என்கின்ற ஏக்கத்துடனும், அவன் அப்படி வராத போது அவன் வந்து தங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்கின்ற கனவுகளாலும் தங்களது ஆசைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது…. அது போல வீடுகளை நமது அடையாளமாக கொள்ளாமல், நாம் வாழ்ந்தோம் என்கின்ற அழுத்தமான பதிவை ஏற்படுத்தாமல், அந்த கனவு நாயகன் எப்படி வாழ்கிறானோ அது போன்ற சுவடற்ற ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்து விட்டு, நமக்கு நாம் மட்டுமே சொந்தம் என்பதை உணர்ந்து விட்டோமானால், இந்த உலகில் எந்த வீடுகளும் காலியான வீடுகளாகவும் இருக்காது… இந்த உலகமும் உலகமாகவே இருக்கும்..

அடுத்த பதிவு

கிம் கி டுக்கின் “ADDRESS UNKNOWN “ (2001)

3 comments:

  1. 3-Iron என்பதற்கு Empty House என்பது பொருளல்ல.

    இந்தப் படத்தின் கொரிய பெயரான Bin-Jip என்பதன் பொருள் தான் Empty House என்பது.

    பொதுவாக பிற மொழிப்படங்களை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் போது படத்தின் பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காமல் படத்திற்கு ஏற்ற ஒரு பெயரை ஆங்கிலத்தில் வைப்பது இயல்பு. கொரிய, ஜப்பானிய படங்களில் இந்த வழமையை நான் கண்டிருக்கின்றேன்.

    இந்தப்படத்தின் பெயரும் அத்தகையதொரு காரணப்பெயர் தான்.

    கோல்ப் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டைகளில் 3-Iron என்பது ஒரு வகையாகும். தொலைதூரம் அடிக்க இந்த மட்டை பயன்படுத்தப்படும். இந்த மட்டையைத்தான் நாயகன் தன்னுடன் எடுத்து வருவான். அதன் காரணமாகத்தான் இந்தப்படத்திற்கு 3-Iron என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. இந்த தகவல் எனக்கு புதிது.... தகவலுக்கு மிக்க நன்றி பாலாஜி...

      Delete
  2. நானும் புதியதை அறிந்து கொண்டேன்.

    ReplyDelete