Monday, 16 February 2015

என்னை அறிந்தால் :

கெளதம் வாசுதேவ் மேனன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் இந்தப் பெயரின் மீது எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உண்டு.. அவரது திரைப்படங்கள் எங்கள் கல்லூரி வட்டங்களுக்குள் பரவலாக பேசப்பட்டு சிலாகிக்கப்பட்ட காலங்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது.. என்னை அறிந்தால் திரைப்படத்துக்கான விமர்சனம் என்று பெயரிட்டுக் கொண்டு, விமர்சனத்தில் முதலாவதாக கெளதமை பற்றி பேசத் தொடங்குவது காரணமில்லாமல் இல்லை.. போர் சூழலால் இடிந்து தரைமட்டமாகிப் போன ஒரு கோட்டையை இன்று போய் பார்த்துவிட்டு, அந்த இடிபாடுகளுக்கு இடையே வளர்ந்திருக்கும் நூலாம்படைகளை சொல்லி அதனை கிண்டல் செய்து எழுதுவதற்கும், அதே கோட்டை கம்பீரமாக நின்ற காலத்தில் அதை கண்கொண்டு கண்டு, அதன் கம்பீரத்தையும், சிறப்பையும் வியந்த ஒருவன், அதே கோட்டை தரைமட்டமாகிப் போன பின்னர், அதன் வழியாக ஊடாடி அதனைப் பார்த்து மனம் வருந்தி எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா..? அந்த வித்தியாசத்தை எழுத்தில் கொண்டு வர வேண்டும் என்றால், கெளதம் மற்றும் அவரது முந்தைய படங்களைப் பற்றி கொஞ்சமாவது பேசுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிறது.. அதுமட்டுமின்றி அவரது முந்தைய படைப்புகளில் நான் சிலாகித்த விசயங்களை மீட்டுருவாக்கம் செய்து எழுதும் வடிகாலாகவும் இதனை நான் கருதுகிறேன்..

கெளதம் வாசுதேவ் மேனன்… இவர் தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குநர் என்றெல்லாம் சொல்லுவதற்கில்லை.. அதே நேரம் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இயக்குநர் பட்டியலில் அவரை விடுவிக்கவும் முடியாது.. மிகச்சிறந்த வணிகப்படங்களை கொடுக்கின்ற இயக்குநர்களின் வரிசையிலாவது இவருக்கு கண்டிப்பாக இடம் இருக்கும்.. தமிழ் சினிமாவின் வணிக மசாலாக்களில் இருந்து, இவரது வணிக மசாலா சற்றே தனித்துவமாக தெரியும்… குறிப்பாக ஹீரோவுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கும்.. அவன் படித்தவனாக, ஒரு வேலை செய்பவனாக குறைந்தபட்ச சாதாரணனின் சாயலில் இருப்பான்.. அவனுக்கு நாயகியின் மீது ஏற்படுகின்ற ஒரு ஈர்ப்பும் மிக இயல்பானதாக காட்டப்படும்.. அது தவிர்த்து தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை ஆளுமையுடன் வடிவமைக்கும் ஒரு சில இயக்குநர்களில் கெளதம் மிக முக்கியமானவர்… கதாநாயகிகளை கட்டிப்பிடிப்பதற்கும், குலுங்க குலுங்க ஓடி வருவதற்க்கும், குனிந்து நிமிர்வதற்கும், மட்டுமே பயன்படுத்தும் தமிழ் சூழலில் அந்த மரபை உடைத்து, கதாநாயகி என்கின்ற அந்த கதாபாத்திரத்துக்கான மரியாதையை கொடுத்து, அவரது கதாநாயகிகளின் பெயர்களை மாயா, ஜெஸ்ஸி, ஹேமாநிக்கா என்று அழுத்தமாக பார்வையாளர்களின் மனதில் பதிய வைத்த மாயக்காரன் கெளதம்.. விறுவிறுப்பான கதை சொல்லல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவரது மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணங்கள்.. ஒரு திரைப்படம் எப்படி உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்கு, ”விண்ணைத் தாண்டி வருவாயா” ஒரு மிகச் சிறந்த உதாரணம்.. மின்னலே ஒரு மிகச் சாதாரணமான காதல் படம் தான்… ஆனால் அதிலும் ஒரு தனித்துவமான உணர்வு இருக்கும்… அந்த காலத்துக்கு தேவையான ஒரு புதுமை அதில் இருக்கும்.. ஒரு நாயகனுக்கான அறிமுகமோ, அவனது ஹீரோயிசமோ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்னும் ”காக்க காக்க” தான் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த உதாரணமாக எனக்குத் தோன்றுகிறது.. அதில் வரும் நாயகன் நாயகிக்கான அறிமுகத்தைப் போல எந்தவொரு தமிழ் திரைப்படத்திலும் இன்று வரை நான் பார்த்ததில்லை..

கெளதமின் நாயகிகளின் மீது நமக்கு எப்போதும் காமம் தலை தூக்காது.. ஆனால் நாம் எல்லோருமே அவர்களை காதலிக்க தொடங்கி இருப்போம்… அப்படித்தான் அவரது திரைப்படங்கள் நமக்குள் ஒரு பரவசத்தைக் கொடுக்கும்.. 50 வயது நெருங்கக் கூடிய ஒரு போலீஸ் தான் கதையின் நாயகன் என்றால், அவருக்கான நாயகி எப்படி இருக்க வேண்டும் என்று தமிழில் அழுத்தமாக காட்டியவர் கெளதம் தான்… ஒரு போலீஸ்கான பிம்பத்தை மிக அழுத்தமாக தமிழ் இளைஞர்கள் மனதில் பதியச் செய்தது “காக்க காக்க” என்று சொன்னால் அது மிகையல்ல.. மின்னலே ஒரு ஜாலியான காதல் படம் என்றால், ”விண்ணைத் தாண்டி வருவாயா” ஒரு அழுத்தமான காதல் படம்… அதில் வரும் ஜெஸ்ஸி என்கின்ற அந்த கதாபாத்திரத்தின் ஸ்கெட்ச் மிகுந்த பகுப்பாய்வுக்கு உட்பட்டது… ஒழுக்கத்தின் கோடுகளில் வழுக்கிவிட்ட ஒரு குடும்பத் தலைவனையும் பச்சைக்கிளி முத்துச்சரத்தில் நாயகனாக காட்சிப்படுத்தியதும் ஒரு நல்ல முயற்சி.. இது தவிர்த்து ஒளியமைப்புகளை எப்படி கையாண்டு ஒரு காட்சியை படமாக்குவது என்பதில் சங்கரை எல்லாம் மிஞ்சியவர் கெளதம் தான் என்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.. அது போல அவர் எழுதுகின்ற வசனங்களுக்கும் ஒரு தனிப்பட்ட வசீகரம் இருக்கும்.. காக்க காக்க திரைப்படத்தில் வரும் பல வசனங்கள் இன்றும் எனக்கு அப்படியே நினைவில் இருக்கிறது…

இதைப் பற்றி எழுதுகின்ற அதே சமயத்தில் எழுத்தாளர் சமஸ், கெளதம் பற்றி எழுதிய கட்டுரையின் சாராம்சம் நினைவுக்கு வருகிறது.. என்கவுண்டர் செய்யப்படும் ரவுடிகளைப் பற்றியும் அதில் எழுதி இருப்பார்.. காக்க காக்க திரைப்படத்தில் வரும் ஒரு பிரபலமான வசனத்தையும் மேற்கோள் காட்டி இருப்பார்.. (மிருகவதை தடுப்பு சட்டத்தில் தண்டனை கொடுங்கள் என்பதைப் பற்றியது…) ஆனால் எல்லா குற்றவாளிகளுமே சந்தர்ப்ப சூழலால் மட்டுமே தொடர்ந்து தவறு செய்வதில்லை.. அந்தக் குற்றங்களுக்கு பழகிப் போய், அது பிடித்துப் போய்(கற்பழிப்பு முதலான குற்றங்கள்) தொடர்ந்து அதனை செய்து வரும் குற்றவாளிகளை நாம் என்னதான் செய்ய முடியும் என்ற கேள்வி என்னுள் எழுகிறது.. கொரிய மொழியில் I saw the Devil என்று ஒரு திரைப்படம் உண்டு… அதில் நாயகன் நாயகியை கற்பழித்து கொன்ற வில்லனை கண்டுபிடித்து கொல்லமாட்டான்… கடுமையாக தாக்கிவிட்டு, மீண்டும் அவன் தவறு செய்துவிடாதவாறு தடுத்துக் கொண்டே இருப்பான்… அதனால் சீண்டப்பட்ட வில்லன், மிகப்பெரிய ஒரு கெடுதலை மீண்டும் நாயகனுக்குச் செய்ய, வேறு வழியில்லாமல் வில்லனை கொன்றுவிடுவான்.. இது போன்ற Devil நம் சமூகத்திலும் இருக்கிறார்களே..?? அவர்களை நாம் என்னதான் செய்ய முடியும் என்ற கேள்வி எழும் போது, அதற்கான பதிலாக என்கவுண்டர் மட்டுமே தெரிகிறது… வேட்டையாடு விளையாடு, காக்க காக்க இரண்டிலுமே அப்படி வேட்டையாடப்பட்டவர்கள் அந்த Devil என்கின்ற நிலைக்கு சற்றும் குறையாதவர்கள் தான் என்பது என் கருத்து.. ( அதே நேரம் அந்த என்கவுண்டரின் பேரில் பிண்ணப்படும் சதிவலைகளை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை..)

இப்படி கெளதமையும் அவரது படங்களையும் பற்றி புகழ்ந்து பேச எத்தனையோ விசயங்கள் எனக்கு உண்டு. அப்படி பேசிக் கொண்டிருந்த கெளதமைப் பற்றி இப்போது என்னை பேசச் சொன்னால், என்னிடம் இருப்பதெல்லாம் ஒற்றை வரி கேள்வி தான்… இடைவேளைக்கு முன்னர் ஒளிபரப்பாகும் விளம்பரத்தில் “என்னதான் ஆயிற்று நம் ஊருக்கு..” என்று ஆரம்பிப்பதைப் போல் “என்னதான் ஆயிற்று நம் கெளதமுக்கு…??” என்றே பேச்சைத் தொடங்க வேண்டியிருக்கிறது..

அவரது முந்தைய படங்களை தனித்தனியாக இப்படி பார்க்காமல் ஒட்டுமொத்தமாக பார்த்தால், கெளதம் வாசுதேவ் மேனனின் படங்கள் இரண்டே இரண்டு வகை. ஒன்று காதல் திரைப்படங்கள்.. (மின்னலே..) மற்றொன்று காவல் திரைப்படங்கள்.. (காக்க காக்க…) இந்த இரண்டு வகைத் திரைப்படங்களிலும் இரண்டு விதமான க்ளைமாக்ஸ் இருக்கும்… ஒன்று காதலிலோ(விண்ணைத் தாண்டி வருவாயா..) அல்லது காவலிலோ தோற்பது(காக்க காக்க..) போன்ற க்ளைமாக்ஸ்.. மற்றொன்று அதில் ஜெயிப்பது போன்ற க்ளைமாக்ஸ்..(நீதானே என் பொன் வசந்தம், மின்னலே, வேட்டையாடு விளையாடு..) போன முறை காதல் ஜெயிப்பது போல் காதலை மையப்படுத்தி எடுத்திருந்த படம் தோற்றதால், இந்த முறை மீண்டும் காவலை கையில் எடுத்திருக்கிறார்..

சத்யதேவ் (அஜீத்) ஒரு போலீஸ் ஆபிஸர்.. அவரது மனைவியாக வேண்டிய (த்ரிஷா) கொல்லப்பட்டு இருக்கிறார்.. தன் மகளின் பாதுகாப்புக்காக தன் போலீஸ் வேலைகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.. சில ஆண்டுகள் கழித்து தன் நண்பன் ஒருவனின் மகளை காப்பாற்ற மீண்டும் காக்கிச்சட்டையை கையில் எடுக்கிறார்.. இன்னொரு பெண்(அனுஷ்கா) பாதிக்கப்படப் போவதை தெரிந்து கொள்கிறார்.. அவளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்… இதன் பிண்ணனியில் இருந்தவர்கள் தான் தன் மனைவியின் கொலைக்கு காரணம் என்று தெரிந்து கொள்கிறார்.. அவன் தன் பழைய எதிரி என்பதும் அவருக்கு தெரிகிறது.. அந்தப் பெண்ணுக்கு அஜீத் மீது காதல் வருகிறது.. நாயகனின் குழந்தையை பணய கைதியாக பிடித்துக் கொள்கிறார்கள்… குழந்தையையும் மீட்க வேண்டும், இன்னொரு நாயகியையும் காப்பாற்ற வேண்டும்.. முடிந்ததா இல்லையா..?? என்பது நீங்கள் யூகித்துவிடக் கூடிய அளவிற்கு எளிதான கதைதான்…


இப்படி ஒரு எளிதான கதையாவது இருப்பதால், இந்தப் படத்தில் கதையே இல்லை என்று சொல்லமுடியாது… ஆனால் கண்டிப்பாக கெளதமின் முந்தைய படங்களிலும் இதே கதைதான் இருந்தது என்று சொல்லலாம்.. காக்க காக்கவில் சேதுவை போட்டுவிட்டு மறந்துவிட்டால், பின்னால் பாண்டியா வருவான்.. இங்கு விக்டர் வருகிறான்.. பிரகாஷ்ராஜ்ஜின் மகளை கண்டறிய கமல் வருவார்.. இங்கு அஜீத் வருகிறார்… முதல் மனைவி இறந்த பின்னர் வேட்டையாடு விளையாடுவில் இரண்டாவது காதல் நாயகனுக்கு வரும்.. இங்கு மனைவியை இழந்த நாயகனின் மீது நாயகிக்கு காதல் வருகிறது… வேட்டையாடு விளையாடுவில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லை… காதலிக்கு குழந்தை இருக்கும்.. என்னை அறிந்தாலில் முதல் மனைவிக்கு குழந்தை உண்டு… வேட்டையாடு விளையாடுவில்  குழந்தையாக இருந்த குழந்தை என்னை அறிந்தாலில் வளர்ந்துவிடுகிறது.. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு இரண்டிலுமே நாயகியை தூக்கி விடுவார்கள்.. என்னை அறிந்தாலில் குழந்தைய தூக்கிவிடுகிறார்கள்… ப்ளைட்டில் வரும் போது நாயகி மீது நாயகனுக்கு காதல் வந்தால், அது வேட்டையாடு விளையாடு, நாயகிக்கு காதல் வந்தால் அது என்னை அறிந்தால்…

என்ன இது….?? நான் விமர்சனம் எழுதுகிறேனா..?? இல்லை என்னை அறிந்தாலுக்கும் பிற படங்களுக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை எழுதுகிறேனா..?? என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது… சரி விடுங்கள்.. இப்படி பல விசயங்களை மாற்றிப் போட்டு, அதாவது உழைத்து கதை செய்திருக்கிறார்கள்… போனால் போகட்டும்.. இதையாவது விட்டு விடலாம்.. ஆனால் அந்தக் கதையை சொல்லி இருக்கும் விதம்தான்… நம்மை இன்னும் அதிகமாக படுத்தி எடுக்கிறது.. சத்தியமாக கெளதமிடம் இருந்து இப்படி ஒரு கதை சொல்லும் முறையை எதிர்பார்க்கவில்லை… ஆரம்பத்தில் அனுஷ்கா தனக்குத் தானே பேசிக் கொண்டு கதை சொல்கிறார்… அடுத்து அஜீத் தனக்குத் தானே பேசிக் கொண்டு அவரும் கதை சொல்லத் தொடங்குகிறார்.. இடையில் கெளதம் வேறு வந்து கதை சொல்கிறார்… இப்படி வாய்ஸ் ஓவரிலேயே ஓவராக கதை சொல்வதால், நமக்கு உடல் உபாதைகளும் ஓவராக வருகிறது.. ஒரு Grafting இல்லாத கதை சொல்லல் முறை.. முன்னும் பின்னுமாக கதை பல இடங்களில் நகர்ந்து பார்வையாளர்களை குழப்புகிறது..

இரண்டாம் பாதியில் இருந்து படம் சற்று விறுவிறுப்பாக செல்கிறது… இதில் தான் கெளதமின் அடையாளங்களை ஆங்காங்கே காண முடிகிறது… அஜீத் என்கின்ற மாஸ் ஓப்பனருக்கு ஏற்றார் போல் எந்த மாஸான காட்சிகளும் இல்லை.. தன்னிடம் அடியாளாக சேர்ந்துவிடு என்று கேட்கும் ஆஸிஷ் வித்யார்த்திக்கு பதில் சொல்லும் இடமும், வீட்டிற்குள் அனுஷ்காவை வைத்து விட்டு, வெளியே ரவுடிகளுக்கு பதில் சொல்லும் இடமும் தான் கொஞ்சம் ரசனையானவை… ஆனால் அதிலும் கெளதமே தெரிகிறார்.. நடிக்கக் கூடிய இடங்கள் என்று ஒன்றிரண்டு இடங்களைச் சொல்லலாம்.. ஆனால் அதில் அஜீத் நன்றாக நடிக்கத் தவறி இருக்கிறார்.. வழக்கம் போல் அழகாக அழகனாக நடந்து கடந்து போகிறார்.. கதாநாயகிகளில் கவனம் ஈர்ப்பது ஹேமா நிக்காவாக வரும் த்ரிஷா தான்… அந்த கதாபாத்திரத்தின் அறிமுகம் மற்றும் வடிவமைப்பில் தான் கெளதமின் டச் தெரிகிறது.. அது போல த்ரிஷாவிற்கும் அஜீத்துக்கும் இடையிலான திருமணம் தொடர்பான உரையாடலும் அருமை.. இப்படி ஆங்காங்கே சில காட்சிகள் மட்டும் நினைவில் நிற்கிறது… வார:ணம் ஆயிரம் திரைப்படத்தில் தலைப்புக்கு ஒரு காரணம் சொல்லியது போல், என்னை அறிந்தால் தலைப்புக்கும் ஒரு காரணத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.. ஆனால் அது முழுமையானதாக இல்லை.. அருண் விஜயின் கதாபாத்திரம் மிகச்சிறப்பாக இருப்பதாக பலர் சொல்கிறார்கள்… ஆனால் பாண்டியா மற்றும் டேனியல் பாலாஜி கதாபாத்திரத்தில் இருந்த வீரியம் மற்றும் பின்புலம் இதில் இருப்பதாக தெரியவில்லை.. கதாபாத்திர வடிவமைப்பும் புதுமையானதாக தெரியவில்லை..

ஒரு கமர்ஸியல் படமாக வீரம் படத்தில் இருந்த விறுவிறுப்பு கூட இதில் இல்லை என்றுதான் தோன்றுகிறது… அதே நேரம் கெளதமின் முழு திறமையும் வெளிப்பட்ட படமாகவும் இது தெரியவில்லை… அஜீத்தின் தீவிர ரசிகர்கள் எல்லாம், நாங்கள் அஜீத்தைப் பார்க்க வருகிறோம், படத்தைப் பார்க்க வரவில்லை என்று சொல்கிறார்கள்… சரிதான்.. ஆனால் என்னைப் போன்றவர்கள் செல்வது படத்தைப் பார்க்கத்தானே… அதனால் அது என்னைப் போன்றவர்களை பெரும்பாலும் திருப்தியடையச் செய்யவில்லை என்பதே உண்மை.. இருப்பினும் திரைப்படம் இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை பார்க்கும் போது, ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது..(மகிழ்ச்சிக்கு காரணம் சினிமா பிழைத்துக் கொள்ளும் என்பதே..)

மொத்தத்தில் என்னை அறிந்தால், கெளதம் தன்னைப் பற்றியும் தன் திரைப்படத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள அவருக்கும் மக்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கிறது… மக்களும் திரை ஆர்வலர்களும் அவரை புரிந்து கொண்டார்கள்.. கெளதம் தன்னை புரிந்து கொண்டாரா என்பது தான் தெரியவில்லை.. அவரிடம் நாம் கேட்க விளைவது எல்லாம், கெளதம் நீங்கள் உங்கள் அடுத்த திரைப்படத்தில் “விண்ணை தாண்டி எல்லாம் வர வேண்டாம்…” குறைந்தபட்சம் உங்களைத் தாண்டி வாருங்கள் என்பதே…


No comments:

Post a Comment