”கற்றது
தமிழ்” தந்த ராமின் இரண்டாம் படைப்பு. அக்டோபர் 7, 2007ல் வெளியானது கற்றது தமிழ்.
5 ஆண்டுகளும் பத்து மாதங்களுக்கும் அடுத்து வெளிவந்திருக்கிறது அவரது இரண்டாவது படம்.
இத்தனை ஆண்டுகால காத்திருப்புக்கு பின் இப்படியொரு அற்புதமான படம் அவரால் உருவாக்க
முடியும் என்றால், அதற்காக 5 ஆண்டுகள் அல்ல தமிழ் சினிமா 10 ஆண்டுகள் கூட காத்திருக்கலாம்.
ஆனால் இந்த நீண்ட இடைவெளிக்கு எளிதில் திருப்தியடையாத அவரது கதைதேடல் மட்டுமே காரணமல்ல..
இங்கு தமிழ் சினிமா சமூகத்தில் நிலவும் வியாபாரச் சூழலும் தான் என்பது வெகு சிலரே அறிந்த
உண்மை.. படம் வெளிவரும்வரை இந்த படைப்பாளி எவ்வளவு மனவருத்தம் அடைந்திருப்பார்… ஆனால்
அவர் பட்ட கஷ்டம் வீணாகவில்லை.. ஏனென்றால் தங்கமீன்கள் தமிழ் சினிமா சரித்திரத்தில்
அழியாத இடம் பிடித்துவிட்டது….
ஒரு
நல்ல திரைப்படம் என்பது “திரைப்படம் ஆரம்பிக்கும்
முதலாவது காட்சியிலேயே பார்வையாளனை கதைக்குள் இழுத்துவிட வேண்டும். படம் திரையில் முடிந்துவிட்டாலும்,
அது தொடர்ந்து பார்வையாளன் மனதில் ஒரு காட்சியாக ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அது
ஒரு சீரிய விவாதத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க வேண்டும்” இப்படி எத்தனையோ அளவுகோல்கள்
சொல்லப்படுவது உண்டு. இப்படி தமிழ்சினிமா பெரும்பாலும் தவறவிடும் இந்த அளவுகோல்களில்
பெரும்பாலானவற்றை அழகாகப் பூர்த்தி செய்து தனித்து நிற்கிறது இந்த ”தங்க மீன்கள்”
பதின்ம
வயது நிரம்பாத, 8 முதல் 10 வயது நிரம்பிய செல்ல மகள் செல்லம்மாவுக்கும் தகப்பன் கல்யாணிக்கும்
இடையிலான பாசப்பிணைப்புகளோடு, பள்ளி செல்லும் குழந்தைகளின் இன்றைய கஷ்டங்களையும் இலவச
இணைப்பாக சொல்லி நீந்துகிறது தங்கமீன்கள். மேலும் மாணவர்களை ஆண்டுப் பரிட்சையில் தேர்ச்சியடையச்
செய்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு இயந்திரகதியில் இயங்குவதால், குழந்தைகளிடையே
அன்புப் பரிட்சையில் தேறாமல் தேங்கி நிற்கும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துகிறது இந்த
தங்கமீன்கள்...
கதையென்னவென்று
கேட்டால் முந்தைய பத்தியில் சொல்லிய நான்கு வரிகளையே மீண்டும் சொல்லலாம். அதை மீண்டும்
ஒருமுறை படிப்பதற்கு உங்களுக்கு அயர்ச்சியாக இருக்கலாம்.. ஆனால் படம் பார்க்கும் போது
உங்களுக்கு எந்த இடத்திலும் அந்த அயர்ச்சி ஏற்படாது என்பதற்கு நான் கேரண்டி.. கதையின்
பிரதான நோக்கம் என்னவென்று எதைச் சொல்வது என்பதில் எனக்கு குழப்பம் உள்ளது. ஏனென்றால்
நாயகன் நாயகி காதல் வெற்றி பெறுமா…? நாயகன் நாயகியை கண்டுபிடித்துவிடுவானா..? நாயகன்
வில்லனை ஜெயித்துவிடுவானா..? நாயகன் வில்லனை கொன்றுவிடுவானா..? நாயகன் நாட்டுமக்களுக்கு
நல்லது செய்துவிடுவானா..? கொலைகாரனை போலீஸ் கண்டுபிடித்துவிடுமா..? இப்படி பல பிரதான
நோக்கங்களைக் கொண்டு இருக்கும் தமிழ் சினிமாவின் கட்டுப்பெட்டிக்குள் அடங்க மறுத்து
துள்ளிக்குதிக்கிறது இந்த தங்க மீன்கள்..
ஆனால்
இன்னும் ஆழ்ந்து சிந்தித்து இந்த திரைப்படத்தின் மையகருவை கண்டறிய முயன்றால் அதுவும்
“காதல்” என்று வந்து நிற்பது ஒரு முரண். ஆனால் இந்த முரணும் எங்கே முரண்படுகிறது என்றால்,
காதல் என்றாலே நாம் தப்பிதமாக கற்று, கற்பித்துக் கொண்டிருக்கும் ஆண் பெண் இருவருக்குமான
அடிப்படை காதலை தாண்டி, பள்ளியில் சராசரிக்கும் குறைவான அளவில் படிப்பதால், ஆசிரியர்களாலும்,
ஆசிரியர் மூலம் பிற குழந்தைகளாலும் கேலி செய்யப்படும் தன் மகளை மீட்டெடுக்க தகப்பன்
மகள் மீது காட்டும் காதல்…, சிறுவயதிலேயே ஒழுங்காக படிக்காமல் காதல் திருமணம் செய்து
கொண்டு, ஒழுங்கான வேலையின்றி தனக்கும் தகப்பனாகி இன்னும் அவரது தகப்பனின் நிழலிலேயே
அண்டி வாழ்ந்து கொண்டிருப்பதால், பலரால் பல இடங்களில் பரிகாசப்பட்டு ஸ்கூல் பீஸ் கட்டும்
பணத்திற்கு கூட கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தன் தகப்பன் மீது 8 வயது மகள் காட்டும்
காதல்… தன் குழந்தையையும் கணவனையும் எண்ணி மனைவி காட்டும் காதல், தன் பேரக்குழந்தை
மற்றும் மகனின் மீது பெற்றோர் காட்டும் காதல், தங்கள் மாணவர்களிடம் அரிதாக ஆசிரியர்
காட்டும் காதல் என அணுஅணுவாக காட்சிக்கு காட்சி அன்பு என்று மட்டுமே சொல்லத் தகுந்த
காதலினால் நிரம்பி வழிகின்ற இடங்களில் தான்… அதுதான் பிற சாதாரண மீன்களுக்கும்(காதலுக்கும்)
இந்த தங்கமீன்களுக்கும் உள்ள வித்தியாசம்..
கல்யாணியாக
நடித்திருக்கும் ராம் மிகுந்த பாராட்டுக்குரியவர். பாராட்டு அவரது கதை மற்றும் இயக்கத்திற்காக
மட்டுமல்ல.. நடிப்பிற்காகவும் தான்… அந்த கல்யாணி கதாபாத்திரத்தில் படம் பார்த்ததற்குப்
பிறகு வேறு யாரையும் நினைத்துப் பார்ப்பது சற்று கடினமாகத்தான் இருக்கிறது.. இருப்பினும்
ராம் நீங்கள் சற்று சேரன் ஸ்டைலில் அடிக்கடி ”சொல்லுடா” என்று சொல்வதையும் மாறி மாறி
கண்ணங்களில் அடித்துக் கொண்டு அழுவதையும் தவிர்த்திருக்கலாம்.. செல்லம்மாவாக நடித்திருக்கும்
அந்த சிறுமி “பேபி சாதனா”வை எத்தனை பாராட்டினாலும் தகும்.. படத்தின் ஆரம்பக் காட்சியில்
அந்த தங்க மீன் குளத்தில், தங்கமீனைப் பார்க்க குளத்தில் இறங்கும் போதே நம் மனதில்
இறங்கிவிடுகிறார்… அதிலும் ஒன்ணு, ரெண்டு என்று கத்திக் கொண்டே மூன்று சுற்று சுற்றி
அந்த தங்கமீனை காணாமல் வாடும் போது…. வாவ்… சத்தியாமாக அந்தப் பெண் நடித்ததாகவே தெரியவில்லை….
அதிலும் அவர் சிரிக்கும் போது அந்த ஓட்டைப் பற்களின் ஊடாக தெற்றிக் கொண்டு தெரியும்
அந்த ஈறுகள்.. அவருக்கு அத்தனை அழகு…..! மேலும் செல்லம்மாவோடு ஒட்டிக் கொண்டு வந்து
எவிட்டாவின் கதை கேட்கும் அந்த சிறுமி நித்யஸ்ரீயாக வரும் “சஞ்சனா”வின் நடிப்பும் க்ளாஸ்…
நோட் பண்ணுங்க ஹீரோஸ் குட்டீஸ் எல்லாம் அவ்ளோ சூப்பரா நடிக்குதுங்க.. அதிலும் நித்யஸ்ரீ
அழுது கொண்டு இருக்கும் போது, செல்லம்மா என்னவென்று கேட்க, “நான் நாளைக்கு சாகப் போறேன்..”
என்று சொல்லும் நித்யஸ்ரீயிடம் “ஏன் நாளைக்கு..”
என்று கேட்கும் செல்லம்மாவுக்கு நித்யஸ்ரீ சொல்லும் பதில் இருக்கிறதே…. சூப்பர்…….ப்ப்..
அது என்னவென்பதை தியேட்டர்லயே பாத்துக்கோங்க….
வடிவாக
நடித்திருக்கும் செல்லம்மாவின் அம்மா செல்லி கிஷோர், ராமின் அப்பாவாக வரும் பூ ராமு,
அம்மா ரோகிணி மற்றும் எவிட்டா மிஸ்சாக வரும் பத்மபிரியா எல்லோருமே அற்புதமாக நடித்திருப்பதில்
இயக்குநரின் அடையாளமும், நடிகர்களின் அபரிமிதமான உழைப்பும் தெரிகிறது.. மொத்தமே நான்கைந்து
பிரதானமான கதாபாத்திரங்களைக் கொண்டு இயங்கும் தமிழ்படங்களைப் பார்த்து வெகுநாட்களாகிவிட்டது…
தென் கொரிய இயக்குநர் கிம்கி டுக்கின் படங்களில் நீர்நிலைகள் கண்டிப்பாக இருக்கும்..
அது போல் நம் இயக்குநர் ராமையும் அந்த தமிழ் புலி பதுங்கி இருக்கும் மலைகளையும் தண்டவாளங்களையும்,
பிரிக்கவே முடியாது போல் தோன்றுகிறது.. இதிலும் ரயிலும் தண்டவாளமும், அந்த ஏழு மலைகளும்
ஆஜர்… ஆனால் அதுவும் படத்துக்கு வலுசேர்க்கிறது என்பதே உண்மை…
தமிழின்
மிகத் தரமான ஒரு பத்து சிறுகதைகளை எடுத்து ஒரு திரைப்படமாக கோர்த்தால் எப்படி இருக்கும்…
அதிலும் குறிப்பாக சிறு குழந்தைகளின் உளவியல் சார்ந்த உலகங்களை பற்றிய கதைகளை… அப்படித்தான்
இருக்கிறது இந்த தங்கமீன்கள்… அவ்வளவு ஆழமாக… அவ்வளவு அழகாக…. சில இடங்களில் எனக்கு
சில சிறுகதைகள் ஞாபகம் வந்தன… அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்…” கு.அழகிரிசாமியின்
”ராஜா வந்திருக்கிறார்..” இப்படி ஆங்காங்கே சில கதைகள்…
குறையென
சொல்ல வேண்டுமென்றால், முதல்பாதியில் கதையானது ஒரு முழுக்கதையை விவரித்துச் செல்லும்
போக்கு இல்லாமல், குட்டி குட்டி எபிசோடுகளை தொகுத்தது போல் காட்சி தருவதுதான்… செல்லம்மா
குழந்தையின் தேடலான அந்த “வோடஃபோன் டாக்கும்” அதை தேடிச் செல்லும் கல்யாணி(ராம்)யின்
பயணமும் இரண்டாம் பாதியில் தான் தொடங்குகின்றது… என்பது தான் குறை… உதாரணமாக “தி சில்ட்ரன்
ஆப் ஹெவன்” என்னும் ஈரானிய மொழிப்படத்தில் அந்த இரண்டு சிறுகுழந்தைகளின் தேடல் ஒரு
ஜோடி செருப்புகளாகத்தான் இருக்கும்… புதியவொன்றை வாங்கித் தரும் வசதி இல்லாத குடும்பம்
என்பதை அறிந்து பிள்ளைகள் தங்களுக்குள் சமாளித்துக் கொண்டிருக்கும்.. கதையும் அந்த
செருப்பு தைக்கப்படும் காட்சியில் தான் தொடங்கும்.. ஆனால் இப்படித்தான் இருக்க வேண்டும்
என்று எந்த வரையறையும் இல்லை என்பதாலும், அவை குட்டி குட்டி எபிசோடுகளாக இருந்தாலும்,
அழகான, ஆழமான கருத்தாக்கம் மிக்க காட்சிகளாக இருப்பதால் பார்வையாளன் சோர்வடைவதில்லை..
மேலும் க்ளைமாக்ஸ் காட்சியிலும் கூட அந்த குளத்திலேயே படத்தை முடித்து இருக்கலாம்…
என்பது என் கருத்து…. இதைதவிர்த்து பெரிதாக குறை சொல்ல எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை….
முடியாது…
இப்படி
ஒரு தரமான ஒளிப்பதிவை கடைசியாகப் பார்த்தது ஆங்க் லீயின் “லைஃப் ஆப் பை” திரைப்படத்தில்
தான்… அற்புதமான லைட்டிங்க்ஸ், அற்புதமான ஒளிப்பதிவு…. எந்தவொரு ப்ரேமும் வீணாகவே இல்லை…
அத்தனை அழகாக காட்சியோடு சேர்ந்து அன்பையும் அழுகையையும் கொட்டுகிறது ஒளிப்பதிவு… ஒளிப்பதிவாளர்
“அரபிந்து சாரா..” பெண் என்கின்ற பட்சத்தில் அவருக்கு கூடுதலான வாழ்த்துக்களும் பாராட்டுகளும்…
இசை
யுவன்சங்கர் ராஜா.. “ஆனந்த யாழை மீட்டுகின்றாள்..” கேட்கும் போதே கண்ணீர் சுரக்கிறது…
அதுமட்டுமின்றி கண்டிப்பாக பல காட்சிகளில் இவர் தருகின்ற அற்புதமான பிண்ணனி இசையால்
தங்கமீன்கள் வேறொரு தளத்தை சென்றடைந்திருக்கிறது என்பது மிகையில்லா உண்மை… இந்த ஆண்டின்
சென்சேஷ்னல் ஹிட் லிஸ்டில் கண்டிப்பாக “ஆனந்த யாழ்” இருக்கும்.. இன்னும் பல வருடங்களுக்கு
பிண்ணனி இசையில் அசைக்க முடியாதவொரு இடத்தில் யுவன் இருப்பார்…
கதையை
ராமும், ஸ்ரீசங்கரகோமதி ராமும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள்.. பாலு மகேந்திராவின்
பட்டறையால் தமிழ் சினிமா தலைநிமிர்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிருபணமாகி இருக்கிறது..
வசனங்கள் மிகமிக அருமை.. நாயின் மீது கல்லை எறியும் கணவனைப் பார்த்து மனைவி நாயை அடிக்காதீங்க..
என்று சொல்லும் போது “என் கோபத்துக்கு வேற யாரத்தா நான் அடிக்க…” என்று சொல்லும் போதும்..
“நான் அவள குழந்தையாத்தான உட்டுட்டு போனே.. அந்தக் குழந்தைய நா வர்றதுக்கு முன்னாடி
கொன்னுட்டீங்களே..” “பணம் இல்லாதது பிரச்சனையில்லங்க.. பணம் இருக்கிற இடத்துல பணம்
இல்லாம இருக்கிறதுதா பிரச்சன…” இப்படி எல்லா வசனங்களுமே அழுத்தமானவை.. அதிலும் குறிப்பாக
குயிலின் கூடு பற்றிய கருத்தாக்கம் சிம்ப்ளி சூப்பர்… இதுபோன்ற எண்ணமுடிச்சுகள் இலக்கியவாசிப்பு
உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் போலும்… முதன்முதலாக ஆசிரியர்களை கேவலமாக ஆபாசமாக
அசிங்கப்படுத்தாமல், அவர்கள் தரப்பு தவறுகளை அழகாக சுட்டிக்காட்டி, அதே நேரத்தில் எல்லா
ஆசிரியர்களும் அப்படி இல்லை.. என்பதையும் காட்டி ஆசிரியர்களை உண்மையில் ஆசிரியர்களாக
காட்டிய தமிழ்படம் இதுவாகத்தான் இருக்கும்.. படித்த இலக்கிய ஆர்வம் கொண்ட இதுபோன்ற
இயக்குநர்களுக்குத்தான் ஆசிரியர்களின் அருமை தெரியும் போலும்.. அதற்காகவும் தனிப்பட்ட
வாழ்த்துக்கள் இயக்குநருக்கு…
நீங்கள்
உங்கள் குழந்தையை காதலிக்கீறீர்களா…? உங்கள் குழந்தை உங்களை காதலிக்கிறதா…? உங்களது
காதலை நீங்கள் ஆழப்படுத்த, அதிகரிக்க விரும்புகிறீர்களா….? கண்டிப்பாக இந்த தங்கமீன்களை
சென்று பாருங்கள்… அப்பாக்கள் மீது மகளுக்கும், மகள்கள் மீது அப்பாக்களுக்கும், இருவர்
மீதும் அம்மாக்களுக்கும் காதல் அதிகரிக்கும்.. ஆனால் தயவுசெய்து திருட்டு விசிடியில்
பார்க்காமல் தியேட்டரில் சென்று பாருங்கள்… இது போன்ற தரமான படங்களுக்கு ஆதரவு கொடுக்க
வேண்டியது நம் கடமை என்பதற்காக மட்டுமல்ல… இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தகப்பனின்
குழந்தையும், ”வோடஃபோன் டாக்” போல ஏதோவொன்றுக்காக தங்கள் தகப்பனின் வருகையை எண்ணிக்
காத்திருக்கக் கூடும்… என்பதாலும் தான்…
இந்த தங்கமீன்கள் நிச்சயமாக நம்மை தூண்டில்
போட்டு இழுக்கும்…
No comments:
Post a Comment