விமல்
லாசினி, சேரன் பானு, மற்றும் அர்ஜீன் சுர்வின் இவர்களின் தனித்தனி காதல் அத்தியாயங்களே
இந்த மூன்று பேர் மூன்று காதல். கவித்துவமான தலைப்பு. ஆனால் அந்த கவித்துவமோ அல்லது
கொஞ்ச நஞ்ச கதையோ கூட படத்தில் இல்லை என்பதுதான் பெருத்த ஏமாற்றம். S.M வசந்தின் சில
படங்கள் எனக்குப் பிடிக்கும். உதாரணமாக கேளடி கண்மணி, ஆசை, சத்தம் போடாதே போன்ற திரைப்படங்களைச்
சொல்லலாம். அது போன்ற திரைப்படங்களைத் தந்த வசந்தின் சமீபத்திய திரைப்படம் இது என்பதை
நம்புவது கடினம்.
ஆரம்பத்தில்
மலையும் மலை சார்ந்த இடமும் என்று நீலகிரி மலை பிரதேசத்தைக் காட்டி விமலின் காதல் கதையை
ஆரம்பிக்கிறார்கள். அதில் மொத்தக் காட்சியிலும் நாம் புரிந்து கொள்வது விமல் பணக்கார
வீட்டு பையன். ஒரு பெண்ணை எதேச்சையாக சந்தித்து காதலிக்கிறான். அவள் ஏற்கனவே இன்னோரு
பையனை காதலிப்பவள். அவர்கள் இருவருக்கும் நிச்சயமும் ஆகி இருக்கிறது. இது தெரிந்து
விமல் தன் காதலை உதற நினைக்க… அதற்குள் லாசினியும் அவளது காதலனும் கருத்து வேறுபாட்டால்
பிரிய.. விமல் லாசினி காதல் வளருகிறது. கல்யாணத்துக்கு நாள் குறித்து கல்யாண நாள் நெருங்கும்
போது.. “இந்த கல்யாணம் நடக்காது… அதற்கு காரணம் நான் பார்த்த காதல் ஜோடி…” என்று சேரன்
பானு காதல் கதையை சொல்லத் தொடங்குகிறார் விமல்.
கடலும்
கடல் சார்ந்த இடமும் என்று நாகர்கோவில் பகுதியில் அடுத்த காதல் கதை. பானு பிசியோதெரபி
மருத்துவம் செய்யும் நர்ஸ், சேரன் ஏதேதோ பெரிய பெரிய படிப்புகள் படித்துவிட்டு, ஜெயிலில்
இருந்து தண்டனை முடிந்து வரும் கைதிகளுக்கு மறுவாழ்வு அமைத்து தர பாடுபடும் ”புன்னகை”
அமைப்பை நடத்தி வருபவர். ஒரு சந்தர்ப்பத்தில் பானுவுக்கு சேரன் உதவ.. பானுவுக்கு சேரன்
மீது காதல் வருகிறது. பானு சேரனின் தாயிடம் நான் உங்க மகனை கல்யாணம் பண்ண நினைக்கிறேன்
என்று சொல்ல. சேரனின் தாய் அவன் யாரையும் கல்யாணம் பண்ணமாட்டாம்மா.. அவனுக்கு வாழ்க்கையே
இந்த புன்னகை அமைப்புதான்னு அந்த அமைப்பைப் பற்றி விளக்க… சேரனிடம் நல்ல பெயர் வாங்க
பானுவும் அந்த அமைப்பில் சேர்ந்து சாதிக்க.. அவரிடமே அந்த அமைப்பை ஒப்படைத்துவிட்டு
பிரான்ஸ் செல்கிறார். சேரன்.
ஏன்
வருகிறது, எதற்கு வருகிறது. இதை யார் யாருக்கு சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கொஞ்சம்
கூட பிரக்ஞையேயின்றி டைட்டில் கார்டில் சில பல வருடங்களை மாற்றிப் போட்டு நம்மை அலைகழிப்பது
இப்போது வழக்கமாகி வருகிறது. அந்த ஸ்டைலில் அடுத்த கதை ஓப்பன்.
நிலமும் நிலம் சார்ந்த இடமும். சென்னை. அர்ஜீன் ஒரு நீச்சல்
பயிற்சியாளர். தன் ஸ்டூடண்ட் திவ்யாவை(சுர்வின்) ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம்
வாங்க வைப்பேன் என்று சொல்லிக் கொண்டே அவரை காதலிக்கவும் செய்கிறார். திவ்யாவோ ஒரு
மாநிலப் போட்டியில் தோல்வி அடைகிறாள். இருந்தும் கோச் அவள் மீதான தன் நம்பிக்கையை விடுவதில்லை.
அவள் ஒலிம்பிக்குக்கு தயாராகும் தருணத்தில் அர்ஜீனுக்கு ஆக்ஸ்டெண்ட் ஆகிறது. தலையை
தவிர உடலில் எந்த பாகமும் வேலை செய்யாத நிலையில் படுக்கையில் விழ, காதலி உடைந்துபோகிறாள்.
ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டி.. இதில் திவ்யா ஜெயித்தாளா.. மற்ற காதல் கதைகள் என்ன
ஆனது…? தைரியமிருந்தால் வெள்ளித் திரையில்
பார்த்துக் கொ(ல்)ள்ளுங்கள்…
பானுவின்
உழைப்பும் யுவனின் இசைமழையும் பாலையில் பெய்த மழை. அதாங்க மணலும் மணல் சார்ந்த இடமும்.
ஆரம்பத்தில் வந்த அதே விமல் கடைசியில் வந்து நான் இந்த மூன்று காதலையும் கொண்டு புத்தகம்
எழுதினேன் என்கிறார். அவர் ஏன் புத்தகம் எழுதினார்…? இயக்குநருக்கு கடிதம் எழுதிதான்
கேட்க வேண்டும்.
மொத்தத்தில்
என்ன சொல்ல வருகிறார், எதற்காக இந்தப்படம் என்பது கடைசி வரையிலும் புரியாமலே போய்விட்டது
தான் மனதை ஏதோ செய்கிறது. இருந்தாலும் ஐந்து பேர் ஐந்து காதல் என்று ஐவகை நிலத்தின்
காதல் கதையையும் சொல்லாமல், நம்மீது பரிதாபப்பட்டு மூன்றோடு நிறுத்திக் கொண்ட வசந்தின்
நல்ல மனதுக்கு நன்றி சொல்லிக் கொண்டே நடையை கட்டினேன்… அப்போதும் விமல் ஏதோ பேசிக்
கொண்டு இருந்தார்…
Song Patri ethum sollavillaye
ReplyDelete