Tuesday, 5 March 2013

சி.பி.ஐயும் செல்லப்பாவும் - சிறுகதை


       பீக் அவர்ஸ் என்று சொல்லக்கூடிய காலை 8 மணியிலிருந்து 10 மணியை எப்படியாவது தொட்டுக் கடந்துவிடுவது என, கடிகார முட்கள் 8 மணியை அதிவேகமாக நெருங்கிக் கொண்டிருந்தன.

   அது நெருக்கிய நெருக்கில் பிதுங்கிய மக்கள் கூட்டம், கோடம்பாக்கத்தில் இருந்து சென்னை பீச் நோக்கியும்… தாம்பரம், திருமால்பூர், செங்கல்பட்டு நோக்கியும் மின்சார ரயிலில் அதன் வேகத்தையும் மிஞ்சிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர்.

      பூமிச் சமநிலையை காக்கும் பொருட்டு, ”அகத்திய மா….” குள்ள முனியின் வழிகாட்டுதல் இல்லாமலே, மற்றொரு கூட்டம் கோடம்பாக்கத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது…..

     விரித்து விடப்பட்ட ஈரக்கூந்தலுடன் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர் பெண்கள். ஆடை அணிகலன்களில் எதையாவது மறந்துவிட்டனரா…? அல்லது எல்லாவற்றையுமே மறந்துவிட்டனரா..? என்ற குழப்பத்தில் அவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது, முதுமையை முட்டும் ஒரு முதியவர்க் கூட்டம்.

      மீனாட்சி காலேஜ் மாணவிகளின் “தேவி தரிசனம்” கிடைத்த தித்திப்பில் சூரியனைக் கண்ட சூரியகாந்தியாக முகமலர்ந்து காணப்பட்டனர் சில இளைஞர்கள்..

      இந்த சலசலப்புக்கு நடுவிலும், எந்தவிதமான சலனத்திற்கும் ஆட்படாமல் அங்கும் அமர்ந்திருந்தார் அகத்திய முனிவரின் தோற்றத்தில் சீனியர் செல்லப்பா. கமண்டலத்தை வெற்றிலை டப்பாக்கள் விரட்டி விட்டு இருந்தன…

      குட்டையான உருவமும், பெருத்த தொந்தியும், குறுகிய குடுமியும், கணுக்கால் தெரியும்படி ஏற்றிக் கட்டிய எட்டு முழ வேஷ்டியும், தோளில் தொங்கிய தோல்பையும் அவரை இருபதாம் நூற்றாண்டு காலத்தவர் என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டின..

     தண்டவாளங்களுக்கு போட்டியாக தார் கருங்கல் கலப்பின்றி இடைவெளி இல்லாமல் அவர் இட்டிருந்த பட்டையும், இரண்டு ரூபாய் அகலத்தில் இரத்த சிவப்பில் வைத்திருந்த குங்குமத்தையும் கண்டு, சிக்னல் எனக் குழம்பித்தான்.. எந்த ரயிலும் வரவில்லையோ என்ற குழப்பத்திலோ..? என்னவோ….! கடக்கின்ற மக்கள் அவரை கூர்ந்து பார்த்துக் கொண்டே கடந்தனர்.

     அவருக்கு முதுகுப்புறமாக திருமால்பூர் வரை செல்லும் மின்சார ரயிலில், ஐந்து அல்லது ஆறு நாமக்காரப் பெண்கள் சேர்ந்த பஜனைக் கூட்டம் ஒன்று, வழக்கம் போல் பாட்டுப் பாடி அதிகாலை 8.35 மணிக்கு திருமாலை எழுப்ப போராடிக் கொண்டிருந்தது…..

      அந்த ஓசையை கேட்டவுடன் கடிகாரத்தை திருப்பிப் பார்த்த செல்லப்பா மூக்குக் கண்ணாடியை ஏற்றிவிட்டுக் கொண்டே இருமருங்கிலும் பார்வையை ஓடவிட்டார். அவரது கண்ணுக்கு சி.பி.ஐ அன்று தட்டுப்படவே இல்லை….

     “சார் வரல்லய்யா…….” என்ற குரலைக் கேட்டு தனக்கெதிராக நின்று கொண்டு இருக்கும், சென்னை பீச் நோக்கிச் செல்லும் மின்சார ரெயிலில், பொதித்து வைக்கப்பட்ட பூத உடல்களுக்கு இடையே, தனக்கு பரிச்சயமான முகத்தை தேடியவர்… ஐன்னலோரம் கையசைவதைக் கண்டு, பார்வையை அந்தப் பக்கம் திருப்பினார்……

     சிரித்த முகத்துடன் ஜீனியர் செல்லப்பா கையசைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன், சுரத்தில்லாமல், “நீ போப்பா….. நான் குமாரசாமி வந்ததும் வாரேன்……” என்றார். ரெயில் நகரத் தொடங்கியது…

     பொதுவாகவே சீனியர் செல்லப்பாவிற்கு, ஜீனியர் செல்லப்பாவை கண்டாலே பிடிக்காது. காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. ஜீனியர் செல்லப்பா பத்து வருடத்திற்கு முன்புதான் சீனியர் செல்லப்பாவின் அலுவலகத்தில் சேர்ந்திருந்தார். சீனியரைக் காட்டிலும் 23 வயது இளையவர்… இவருடைய வருகையால் தான் செல்லப்பாவின் பெயர் சீனியர் செல்லப்பா ஆனது.

      ”கழுதைப்பய…. பேருதான் ஒன்னு… அப்பன் பேருகூடவா ஒரே எழுத்தில ஆரம்பிக்கணும்… இவன் வந்ததுல்ல எல்லாப்பயலும் என் பேரை மாத்திட்டாங்க.. சீனியர் செல்லப்பாவாம்….. சீனியர் செல்லப்பா….. அப்படி என்ன வயசாச்சி எனக்கு… 49 வயசெல்லாம் ஒரு வயசா…? அதுக்குள்ள சீனியர்ங்கிறானுக….” என்று சீனியர்க்கு அர்த்தம் தெரியாமலே… தொலைவில் மறைந்து கொண்டிருந்த ட்ரெய்னைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தார், செல்லப்பா…

     இவருக்கு எழும்பூரில் உள்ள தாளமுத்து – நடராசன் மாளிகையில் உள்ள ஒர் அரசு அலுவலகத்தில்தான் பணியிடம். கணக்கர் உத்தியோகம். தன்னைப் பற்றிய பீடம்பம் அடித்துக் கொள்வதில் எப்போதுமே தணியாத தாகம் உண்டு.

      அமெரிக்கா-கீயூபா பிரச்சனையில் தொடங்கி, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனையை தொட்டு, ஓமன் வளைகுடாவில் வளைந்து வந்து, இலங்கை ஈழப் பிரச்சனைகளை தோண்டக்கூடியவர்….

      தினசரியில் வருகின்ற தலைப்புகளைப் படித்துவிட்டே.. அதைப்பற்றிய தலையங்கம் தீட்டும் திறனுள்ளவர் சீனியர் செல்லப்பா… இவருக்கு “ஆமாம்சாமி” போடுவதற்கு என்றே பரமக்குடியில் இருந்து பணி இடமாற்றம் செய்து அனுப்பி வைத்தார்கள் போலும் குற்றாலத்தைச் சேர்ந்த குமாரசாமியை…

       ஊர் குற்றாலமாக இருந்தாலும், குமாரசாமியின் குணம் குரங்கல்ல… ஏனென்றால் மரத்திற்கு மரம் தாவ மாட்டார்… அவருக்கு தெரிந்த ஒரே மரம் ‘செல்லப்பா என்ற கொடிமரம்’ மட்டுமே….

      “என்ன…! சீனப்பெருஞ்சுவர்….. எங்க வீட்டு மதில்சுவரை விடச் சின்னதாக்கும்…” என சீனியர் செல்லப்பா சொன்னால், குமாரசாமியின் பதில் இதுவாகத்தான் இருக்கும்.

      “சார்… சரியாகச் சொன்னீங்க…… போங்க….!”

      அந்த குமாரசாமிக்காகத்தான் அவர் காத்திருந்தார்.. அவருக்கு அவரைப் பற்றிய துதிப்பாடல் மிகவும் அவசியமாகவே இருந்தது… என்றாலும் அவர் இப்போது காத்து இருப்பது குமாரசாமிக்காக மட்டும் இல்லை….

      ஆறுமாத காலமாக அவர் கோடம்பாக்கம் இரயில்நிலையத்தில் கண்காணித்து வரும் சி.பி.ஐக்காகவும்தான்…! என்பது அவருக்கும் குமாரசாமிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்..!

      “என்ன சார், வந்து ரொம்ப நேரமாச்சா…” என்று கேட்டுக் கொண்டே வந்து செல்லப்பாவுக்கு அருகில் வந்து அமர்ந்தான் குமாரசாமி…

     “ஷ்ஷ்…..!” என்று ஒரு கைவிரலை வாயில் வைத்து, மறுகையின் ஆள் காட்டி விரலை கொண்டு தூரமாய் காட்ட…

      எதிர்திசையில் இருந்து அழுக்கு கறை படிந்த பேண்ட்டும், பல நாள் துவைக்காத மஞ்சள் நிற சட்டையும், அதற்கு மேல் குளிருக்கு போர்த்திக் கொள்ளும் ஆரஞ்சு நிற அழுக்கு படிந்த ஸ்வெட்டரும் அணிந்து கொண்டு, நைந்து போன ரீபக் சூ மாட்டிக் கொண்டு தண்டவாளம் அருகில் தலையை குனிந்த படியே வந்து கொண்டிருந்தான் செல்லப்பாவின் சி.பி.ஐ
.
     “அடேய்! அவனை கிறுக்கன், பிச்சைக்காரன்னு சொன்னாயே…!? கிறுக்கனுக்கும் பிச்சைக்காரனுக்கும் எவன்ட்டா ஸ்டெப் கட்டிங் அடிச்சி விடுறது…” என்று செல்லப்பா கொக்கி போட்ட மதப்பில் குமாரசாமியைப் பார்க்க…

       சி.பி.ஐயை உற்றுப் பார்த்த குமாரசாமி…

      “சார்…. சரியாகச் சொன்னீங்க போங்க..” என்றான்.

      “பின்ன…. நானென்ன சும்மாவாடா சொல்றேன்… கிறுக்கன் மாதிரி இருக்கான்.. யாரையும் எந்த தொந்தரவும் பண்ண மாட்டிக்கான்.. எல்லாரையும் வாட்ச் பண்றான்… நம்ம அவனப் பாக்குறோம்ன்னு தெரிஞ்சா…? பைத்தியம் மாதிரி சிரிக்கிறான், பேசுறான்… மத்த நேரம் எவ்வளோ அமைதியா இருக்கான்..?” என்றார் செல்லப்பா.

     “ஆமா சார்….! முக்கியமா பிச்சை எடுக்கமாட்டிக்கிறான்…! சார்” என்று ஒத்து ஊதினான் குமாரசாமி. “சார் அங்க பாருங்க…” என்றான் குமாரசாமி.

     சி.பி.ஐ குப்பைத் தொட்டியில் கிடந்த லேஸ் பாக்கெட்டை எடுத்து அதில் இருந்த சிறு துகள்களை தேடித் தின்றவன், தாகம் தணிக்க தலைகீழாக குத்தி நின்ற காலி Fanta பாட்டிலை எடுத்து தலைகீழாக கவிழ்த்துக் கொண்டிருந்தான்…

      சே…! என்ன புழப்புடா இது….? ப்ளாட்பார்ம்ல தூங்கி, பிச்சைக்காரனா திரிஞ்சி, குப்பைத் தொட்டிய கிளறி…! நாறப் பொழப்புடா…. நம்ம வேல எவ்ளோவோ தாவல.. அது…! நாம பார்க்கிறத பாத்துட்டான்ல… அதான் நாம அவன பிச்சைக்காரன்னு நம்புறதுக்காக நடிக்கிறான்…. என்றார் செல்லப்பா.

     “நீங்க பலே ஆளு சார்…!, எப்டி சார் இத கண்டுபிடிச்சீங்க…?” என்றான் குமாரசாமி.

     “சும்மாவா…. எவ்வளவு கஷ்டப்பட்டேன்… சுத்தி என்ன நடக்குதுன்னு பாக்கணும், கொஞ்சமாது யோசிக்கணும், இதுகூட பண்ணாட்டி நாமெல்லா என்ன மனுசன்…? நல்லாப் பாத்தா தெரியும்… போலீஸ், டிக்கெட் செக்கர் யாருமே அவன எதுவும் கேட்கமாட்டாங்க.. அங்கங்க தீவிரவாதி குண்டு வைக்கிறான்.. இந்த சூழ்நிலைல இப்புடி ஒருத்தன் இந்த கோலத்தில ரயில்வே ஸ்டேசனே கதின்னு கிடக்கமுடியுமா…” என்றவர் மூச்சை இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

    “அதுவும் இல்லாம நல்லாப் பாரு… அவன் தினமும் பேப்பர் கடைக்கு முன்னால நின்னு பேப்பர் ஹெட் நீயூஸ் பார்ப்பான்…. பாத்திருக்கீயா… “ என்றார் செல்லப்பா.

    “நான் என்னத்தப் பார்த்தேன்.. அதுக்கெல்லாம் உங்கள மாதிரி அறிவு வேணும்.. சார், அதுக்கெல்லாம் நான் எங்க போவேன்..” என்றான்.

     சீனியர் செல்லப்பாவுக்கு மட்டும் ஸ்பெசலாக பனிக்கட்டி மழை கொட்ட, சிரித்தபடியே இருவரும் ரெயில் ஏறிச் சென்றனர்..

     சில நாட்கள் சென்றிருக்கும். அதே ரயில் நிலையத்தில் சீனியர் செல்லப்பா குமாரசாமிக்காக காத்துக் கொண்டு இருக்கின்ற பட்சத்தில், சி.பி.ஐயையும் கவனித்துக் கொண்டு இருந்தார்.

      நெருங்கிவந்த சி.பி.ஐ செல்லப்பாவின் முதுகுப்பக்கம் செல்லவே, சிறிது நேரம் கழித்து திரும்பிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த செல்லப்பாவை, ஏதோ பின்னால் பிடித்து இழுத்தது. திடுக்கிட்டு திரும்பினார் செல்லப்பா.

      அவரது குடுமியைப் பிடித்து இழுத்துக் கொண்டு சிரித்தான் சி.பி.ஐ. விக்கித்து நின்ற செல்லப்பாவின் கன்னத்தில் திடும்மென ஒரு குத்து விழுந்ததில் தள்ளாடி கீழே விழுந்தார் செல்லப்பா. கடைவாயில் ரத்தம் கசிந்தது. கண்ணாடி இவருக்கு முன்பு கீழே விழுந்து நொறுங்கியது.

       செல்லப்பாவின் முதுகில் ஏறி அமர்ந்து சாணி மிதிக்க துவங்கி இருந்தார் சி.பி.ஐ. செல்லப்பாவின் மதிய உணவு தரையில் கொட்டிக் கிடக்க… அதனை கையால் எடுத்து தன் வாயில் திணித்த சி.பி.ஐ செல்லப்பாவின் முகத்தை திருப்பி சிரித்தார். செல்லப்பாவுக்கு உச்சிக்குடுமியை பிடித்து இழுத்ததில் வலி உயிர் போனது. சி.பி.ஐ சிரித்த சிரிப்பு இவர் வயிற்றில் பீதியை கிளப்பி, கிலி கொள்ளச் செய்தது. ஓரமாய் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த பெண்ணொருத்தி பயந்து தூரமாய் விலகினாள். இன்னொருத்தி செல்லப்பாவை பார்த்து உச்சுக் கொட்ட…. இவருக்கு வாயின் கடவாய்பல் கழன்று ரத்தம் கொட்டியது.

       கூடிய மக்கள் கூட்டம், போலீஸ் அனைவரும் சேர்ந்து செல்லப்பாவை மீட்க, தண்டவாளம் தாண்டிக் குதித்து சிரித்துக் கொண்டே ஓடினார் சி.பி.ஐ. கூட்டத்தில் நின்ற குமாரசாமியைக் கண்டு புறங்கையில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டே பேந்த பேந்த விழித்தார் செல்லப்பா. பார்க்கவே பரிதாபமாக இருந்தது குமாரசாமிக்கு…

        அடுத்து வந்த நாட்களில் சீனியர் செல்லப்பா குமாரசாமிக்காக காத்திருப்பதே இல்லை.. குமாரசாமியும் சொல்லிப் பார்த்தான். இப்போதெல்லாம் அந்த பைத்தியம் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேசனில் இருப்பதே இல்லையென்று.. சீனியர் செல்லப்பாவோ மாம்பலம் சென்று ரயிலேறத் தொடங்கிவிட்டார்.. கோடம்பாக்கத்தை கடக்கும் போது ஜன்னல் வழியாக துலாவுவார், அவன் தென்படுகிறானா என்று, அவன் இவரது கண்ணில் அகப்பட்டதே இல்லை.

       சீனியர் செல்லப்பா மாம்பலம் ரயில்வே நிலையத்தில் ரயிலுக்காக நிற்கும் போது, தூரமாய் சி.பி.ஐ வருவதைப் பார்த்து அதிர்ந்து போய், ஓர் இடுக்கில் மறைய முயல, இவரைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற சி.பி.ஐ பேப்பர் கடையில் தொங்கிக் கொண்டிருந்த பேப்பரின் தலைப்பு செய்தியை படித்துக் கொண்டு இருந்தான். செல்லப்பாவுக்கு தலை சுற்றத் தொடங்கியது…..

No comments:

Post a Comment