Sunday, 3 February 2013

பிறகு





ஆசிரியர் - பூமணி
பதிப்பகம்: காலச்சுவடு
பிரிவு: நாவல் / இலக்கியம்

தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான பூமணியின் ஆகச் சிறந்த படைப்பு இந்த “பிறகு.”

வரலாறு சார்ந்த புத்தகங்கள், தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள், வீட்டு குறிப்புகள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்புகள், ஜோதிடம் மற்றும் கல்வியல் சார்ந்த புத்தகங்கள் இவைகளோடு ஒப்பிடுகையில் நாம் ஏனோ நாவல் சார்ந்த புத்தகங்களை எளிதாக புறக்கணிக்கிறோம். இந்த புறக்கணிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது, இந்த நாவலை வாசிப்பதன் மூலம் நான் பெரிதாக என்ன தெரிந்து கொள்ளமுடியும், அதில் ஒரு கதையை தவிர வேறு என்ன இருக்கிறது என்கின்ற ஒரு மேம்போக்கான பார்வையே ஆகும். நாவல் வாசிப்பு குறித்தான நம் சமூகத்தின் பார்வை பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது. நம்மில் பலரும் அதனை ஒரு சுவாரஸ்யமான கதையாடல் இருக்கிறது என்று நண்பர்கள் பரிந்துரைக்கும் போதோ அல்லது பிரயாணங்களின் போது அருகில் இருப்போரின் இம்சையில் இருந்து தப்பிப்பதற்காகவோ அல்லது நேரத்தை கொல்வதற்கு வேறு ஏதும் வழி இல்லாத போதோ தான் நாவலை நாம் கையில் எடுக்கிறோம்.

வரலாற்றை தெரிந்து கொள்வதில் நமக்கு உள்ள ஆர்வம் கூட நாவல் வாசிப்பில் இருப்பதில்லை. நாம் விரும்பி வாசிக்கும் வரலாறு எதை தாங்கி வருகிறது. ஒரு அரசனின் கதை, ஒரு பேரரசின் கதையை, போர்களின் வெற்றி தோல்வியை, வரலாற்று சிறப்புமிக்க இடங்களின் வரலாற்றை இவைகளைதானே.. மொத்தத்தில் இந்த வரலாறு சுமந்து வருவது அரசனின் வாழ்க்கையை.

நாவல்களோ நம்மைப் போன்ற சாதாரண மக்களின் வாழ்க்கையை சுமந்து வருகிறது. எப்படி ஒரு வரலாற்று புனைவுகள் முற்றிலும் உண்மையாகவும், முற்றிலும் பொய்யாகவும் இருக்காது என்று வரையறை செய்கிறோமோ அதே இலக்கணம் நாவலுக்கும் பொருந்தும்.
ஏதோ ஒரு அரசனின் வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் காட்டுகின்ற முனைப்பை, நம் மூதாதையரின் வாழ்க்கையை, நம்முடைய வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் நாம் காட்டுவதே இல்லை. அதை நாம் ஒரு கதையாகவே எளிதில் கடந்து செல்ல முயல்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.

எப்படி ஒரு வரலாற்று புத்தகத்தை படிக்கும் போது நாம் மன்னராட்சியில் இருந்து மக்களாட்சி முளைத்த வரைபடத்தை புரிந்து கொள்கிறோமோ, அது போல் அதிகமான நல்ல நாவல்களை எடுத்து வாசிக்கும் போதுதான் சாதாரண மக்களின் வாழ்க்கையில் நடந்த சமூக மாற்றத்தின் வாழ்க்கையோட்டத்தை நாம் ஓரளவேனும் புரிந்து கொள்ளமுடியும். அதன் மூலம்தான் இன்றைய சமூகத்தின் அச்சுறுத்தும் அவலங்களான மதம், சாதி, அரசியல், தீண்டாமை, பெண்ணடிமை மற்றும் உளவியல் சார்ந்த மனிதமனங்களின் முரண்பாடு போன்றவற்றின் மூலவித்தை கண்டறிந்து அதில் நாம் கடந்துவந்த தூரத்தையும் கடக்கவேண்டிய தூரத்தையும் தீர்மானிக்க முடியும். அதற்காகவேணும் சற்று நாவலும் வாசிப்போமே…

பிறகு மையக்கதை:
1975ம் காலகட்டத்தில் எழுதப்பட்ட இந்த நாவல், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசும்  முதல் நாவலாக இலக்கியவட்டத்தில் சிலாகிக்கப்பட்டது என்னவோ 1990களின் தொடக்கத்தில்தான். சுதந்திரம் அடைந்து 25ஆண்டுகளில் நடைபெற்ற மாற்றங்களை துணை கதாபாத்திரங்களின் மூலம் ஜோடனைகளாகக் கொண்டு சக்கிலியகுடியில் வாழும் அழகிரி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மனிதனின் வாழ்க்கையை பேசுகிறது இந்த நாவல்.

அழகிரி:
கோவில்பட்டியை அருகாமையில் கொண்ட மணலூத்து என்னும் கிராமத்தின் சக்கிலியக்குடி என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில், துரைசாமிபுரத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு குடியேற்றப்படுகிறான் செருப்புத் தைப்பதை தொழிலாக கொண்ட அழகிரி. நோய்வாய்பட்ட மனைவி காளி, இரண்டு வயது மகள் முத்துமாரியுடன் வரும் அவன் இரண்டு வருடங்களில் தன் மனைவியை இழக்கிறான். மாட்டு தாவணியில் (மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டல்ல… மாட்டுதாவணி என்பது மாடு விற்கும் சந்தை) சந்தித்த ஆவடையை தன் துணையாக சேர்த்துக் கொண்டு, தன் மகளை கரைசேர்க்க அவன் படும் பாடே கதை.

ஆவடை:
அப்பன் ஒரு குடிகாரன். வயதுக்கு வந்த பெண்ணை வேலைக்கு அனுப்பி அதில் வரும் பணத்தைக் கொண்டே குடித்துக் கொண்டு திரிபவன். தன் மகளுக்கு ஒரு கல்யாணம் செய்து கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவன். ஒரு கட்டத்தில் அழகிரி மாட்டு தாவணியில் ஆவுடையிடம் தன் கதையை சொல்லி, தன்னை கட்டிக்கிறாயா என்று அவளிடம் கேட்க, அன்று சாயந்தரம் வரை அதைப்பற்றி யோசித்தவள், அன்று இரவு அந்த இடத்தை விட்டு அழகிரி கிளம்பும் போது, தன் அப்பனிடம் எதையுமே கூறிக் கொள்ளாமல் அழகிரியுடன் கிளம்பிவிடுகிறாள். அன்று முதல் முத்துமாரியை தன் சொந்த மகளாக நினைத்து அவளுக்காகவே தன் மொத்த வாழ்க்கையையும் கழிக்கும் அவள், தனக்கென்று ஒரு பிள்ளையை பெத்துக் கொள்வதே இல்லை.. முத்துமாரிக்கு பின்னர் தன் பேரப்பிள்ளைகளை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறாள்.

முத்துமாரி:
முத்துமாரியின் நிலை மிகமிக மோசம். வயதுக்கு வந்து சிறிது நாட்களிலேயே தன்னை ஏன் கட்டிக் கொடுக்கிறார்கள். தான் ஏன் இந்த ஊரை விட்டு போக வேண்டும். தெரியாத ஆட்களுடன் எப்படி வாழ்வது என்று குழம்புகிறாள். அதை வெளிப்படுத்தும் தைரியம் அவளுக்கு இருப்பது இல்லை. வைரவன் என்பவனுக்கு அவளை திருமணம் செய்ய, ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. திடீரென்று பட்டாளத்துக்கு போன வைரவனின் பழக்கவழக்கம் மாறத் தொடங்குகிறது. லீவுக்கு வீட்டுக்கு வரும் அவன், மாடு மேய்க்கும் தொழில் செய்யும்  அவள் சுத்தமாக இருப்பதில்லை என்று அவளை அடிக்கிறான். அவள் உடல் வீசுவதாக குற்றம் கூறுபவன் அழகிரியையும் திட்ட, இவளும் கோபத்தில் பதிலுக்கு திட்ட வீட்டை விட்டு விரட்டுகிறான். மகனை தன்னோடு வைத்துக் கொண்டு அவளை, பெரியோர் முன்னிலையில் விவாகரத்து செய்கிறான்.

மகனைப் பிரிந்த துக்கத்தில் வாடும் முத்துமாரிக்கு அழகிரி மற்றொரு திருமணம் செய்ய நினைக்க அவள் அஞ்சுகிறாள். முனியாண்டியுடன் திருமணம் நடக்கிறது. முனியாண்டி அன்பாக நடந்துகொள்கிறான். பெண் குழந்தை பிறக்கிறது. எல்லோரும் முத பிள்ள பொண்ணா புறந்தது வீட்டுக்கு நல்லது என்று சொல்லிச் செல்ல, அவள் மனம் புழு போல் துடிக்கிறது. முதல் பிள்ளை ஆம்பள புள்ள.. என்ற வார்த்தை நெஞ்சை முட்ட.. அவளுக்கு கண்ணீர் வழிகிறது. முதல் குழந்தை சுடலையின் நினைப்பு மனதில் பலமாய் அறைகிறது.

வைரவன் பட்டாளத்தில் வேறு ஒரு பெண்ணை சேர்த்துக் கொண்டான் என்றும் அவளுடைய மாமனார் முத்துமுருங்கன் தான் சுடலையை பார்த்துக் கொள்கிறார் என்றும் சேதி வருகிறது. சில நாளில் முத்துமுருங்கனும் இறந்து விட.. இழவுக்கு தன் கைக்குழந்தையை வீட்டிலேயே விட்டு சென்ற முத்துமாரி, திரும்பும் போது சுடலையுடன் திரும்ப.. கோபம் கொண்ட முனியாண்டி முத்துமாரியை மாரில் எட்டி உதைத்து வீட்டை விட்டு அனுப்புகிறான்… உடல் வலியோடு, மன வலியும் சேர்ந்து கொள்ள.. அவள் பெரும் குரல் எடுத்து அழுகிறாள்.. செய்வதறியாது சுடலையும் சுவரோரமாய் நின்று அழுகிறான்… அவள் வாழ்க்கை என்னவானது….?

கருப்பன்:
தாயும் தந்தையும் பேதியில் இறந்துவிட.. அநாதையாய் சுற்றித் திரியும் கருப்பன் மணலூத்துக்கு வந்து சேர, அழகிரி அவனுக்கு கஞ்சி ஊற்றி, ஊரில் மாடு மேய்க்கும் வேலை வாங்கித் தருகிறான். ஊரில் இருக்கும் மாடுகளை அவன் மேய்த்துக் கொண்டிருக்கிறான்.. ஒரு கட்டத்தில் ஊரில் மழை இல்லாமல் போனதற்கு கருப்பன் தான் காரணம் என்று ஊர் அவனை குற்றம் சாட்ட.. அவன் ஊரில் நன்றாக மழை பெய்த போதும் தான் இங்குதானே இருந்தேன் என்று வாதிடுகிறான்… பின்பு எதையோ நினைத்தவனாய், எனக்கு எதுக்கு பேதி வந்து சாகாமல் இருந்தேன்.. அல்லது அவுகளாது என் மூக்குல சாம்பல போட்டு கொன்னுருக்க கூடாதா.. எங்க அப்பன் ஆத்தாகூடயே நானும் போயிருக்கலாம்ல… என்று அழுகிறான்.

அவனை கந்தையாவும் அழகிரியும் சமாதானம் செய்ய, புது வேட்டியாது எடுத்துக் குடுப்பாகலா.. என்று கருப்பன் கேட்க.. அவர்கள் ஆம் என்று சொல்ல.. சந்தோசமாக ஒத்துக் கொள்கிறான்.. அவனுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்றி ஊரை சுற்றிவர, அவன் இடுப்பில் கட்டி இருந்த புது வேட்டியை பார்த்துக் கொண்டிருந்தான்.. மாடு மேய்க்கும் போது மாடில் ஏறி சவாரி செய்பவனுக்கு, கழுதையில் சவாரி செய்வது ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை.

காவக்காரர் கந்தையா:
ஊரில் பெரும்காணிக்கு சொந்தகாரராக இருந்து, தன் நிலப்பட்டாக்களை அப்பையாவிடம் அநியாய வட்டிக்கு அடகுவைத்து ஏமாந்து நிலங்களை இழந்தவர். இப்போது அவரது நிலத்துக்கே காவல் வேலை செய்து கிடைக்கும் கூலியைக் கொண்டு பிழைப்பு நடத்துகிறார். ஊரில் இருக்கும் ஏழை பாழைகளுக்கு நியாயம் கிடைக்க போராடும் ஒரே ஒரு மனிதர்.

சக்கணனும் சித்திரனும்:
சக்கணன் வயதானவன், சித்திரன் உடம்பில் வீக்க நோய் வந்து கேவி கேவி நடப்பவன்.. இருவரும் ஜோடியாகத்தான் ஊருக்குள் திரிபவர்கள். இவர்கள் வாயிலாக ஊர் தொடர்பான பல கதைகளும் பகடியாக விரிகின்றது. ஊரில் முத குடிவந்தவுக யாரு என்று கேட்கும் சித்திரனுக்கு சக்கணன் சக்கிலியகுடிதான் என்று பதில் சொல்லிவிட்டு மணலூத்து என்னும் ஊர் உருவாகிய வரலாற்றை கூறுகிறான்.. மேலும் நண்டை பிடிக்க நரி செய்யும் தந்திரத்தையும், குளத்தாங்கரை ஆலமரத்தில் அடையும் பறவைகளை பிடிக்க சக்கணன் என்ன செய்வான் என்கின்ற தந்திரத்தையும் ஒருமுறை மாடு மேய்க்க போன சக்கணன் கிடைக்காக போட்டிருந்த ஆட்டுக்கு கிடைக்குள் மழைக்காக ஒதுங்கப் போய் எப்படி நரியிடம் மாட்டிக் கொண்டான் என்பதும், பின்பு அதிலிருந்து எப்படி தப்பித்தான் என்பதும் சுவாரஸ்யமான கதைகள். இது போன்ற இன்னும் பல விசயங்களை இவர்கள் வாயிலாக விவரிக்கிறார் ஆசிரியர்.

சுதந்திர பேச்சு:
சுதந்திர அடைந்ததை சில மக்கள் எப்படி பார்த்தார்கள் என்பதும், சுதந்திர போராட்டம் குறித்தான விழிப்புணர்ச்சி தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் எந்த அளவுக்கு இருந்தது என்பதும் கீழ்கண்ட உரையாடல் மூலம் தெரிந்து கொள்ளலாம்…

“சொயராச்சியம் வந்திருச்சாம்.. ஏதோ கெடாரம் கெடச்சமாதிரி ரெண்டு மூணு வீட்ல கொண்டாடுறாக.. இவுகளுக்கு என்னதான் கிடைச்சிச்சோ..”

”நானும் அத கேக்கணும்னே இருந்தே.. நமக்கு விடுதல வந்திருச்சின்னு பேசிக்கிறாகளே நாம என்ன செயில்லயா இருந்தோம்…”

“விடுதலனா செயில்ல ரொம்பநாளா இருக்காகளே அவுகளுக்காருக்கும்.. ஒரு பேச்சுக்காகசுட்டி எல்லாரவும் சேத்து சொல்லீருப்பாக…”

“சரி அப்படியே வெச்சிக்குருவோம் அதுக்காக ஏன் வெள்ளக்காரன வெளியேத்தணுமிங்காக… இவுகளுக்கு அவன் என்ன செஞ்சான்…”

“அதுக்கில்லண்ணே எங்கயோ எவனோ தாட்பூட்னு திரிஞ்சா இவுகளுக்கென்ன.. அன்னைக்கு பேசுறாக விடுதல வந்தாச்சுன்னா ஆருவிட்லயும் ஆரும் கூசாம கஞ்சித்தண்ணி குடிக்கலாமாம்.. எல்லாருக்கும் சோத்து கஸ்டமே வராதாம்…”

இப்படியும் சில மக்களின் எண்ணவோட்டங்கள் இருந்திருக்கிறது. இதுமட்டுமல்ல.. இது போக முதன்முதலில் ஊருக்கு மின்சாரம் வந்த போது என்னமாதிரியான பிரச்சனைகள் வந்தது, ஊருக்கு இரண்டு விதமான கட்சி கம்பங்கள் நிறுவப்பட்ட போது அது எப்படி ஒரு பிரளயமாக உருவெடுத்து காவல்காரர் கந்தையாவை தாக்கியது, தேர்தலை எதிர் கொண்ட மக்களின் மனோபாவம் எப்படி இருந்தது, அவர்கள் தேர்தலை எப்படி சந்தித்தார்கள் என்று நாம் அறிந்து கொள்ள பல விசயங்களையும் தாங்கி நிற்கிறது இந்த ”பிறகு” நாவல். 

இங்கு தெலுங்கு பேசும் மக்கள் பரவலாக இருப்பது போல் வாசிப்பின் போது புலனாகிறது. மேலும் இதில் தாழ்த்தப்பட்ட மக்களும் சில இடங்களில் தெலுங்கு பேசுகின்றனர். இது அங்கு வசிக்கும் நாய்க்கர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தினாலா அல்லது எப்படி என்ற கேள்வி எழும்புகிறது. இதற்கான விடை நமக்கு வேறு எங்காவது எப்போதாவது கிடைக்ககூடும்.

மேலும் இந்த நாவலை நாம் வாசித்து முடிக்கும் போது இதில் இலையோடி இருக்கும் அரசியல், சாதி, பெண்ணியம் மற்றும் தீண்டாமை தொடர்பான உண்மை நிலையையும் தெரிந்து கொள்வதுடன், கோவில்பட்டி வட்டார வழக்கு மொழியையும் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடியும்..

No comments:

Post a Comment