தமிழ் இலக்கியவெளியில் செவ்வியல் படைப்பாக கருதப்படும்
நாவல்களில் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் என்ற நாவலும் மிக முக்கியமான ஒன்று. மரபுகளும்
பழக்கவழக்கங்களும் கலாச்சாரமும் மீறுதலுக்கு அப்பாற்பட்டவை என்றும், புனிதமானவை என்றும்
போற்றப்படுவது யாருடைய சுயலாபத்திற்காக என்னும் சந்தேகப் பார்வை இவருடைய எழுத்துகளில்
இலையோடுவதை எப்போதும் காணலாம். அதற்கு ”அம்மா வந்தாள்” நாவலும் விதிவிலக்கல்ல. இந்த
நாவல் வெளிவந்த காலகட்டம் 1964ல் இருந்து 1966க்குள் இருக்கலாம். இந்த நாவலை எழுதியதற்காக
தி.ஜானகிராமன் தான் பிறந்த கிராமமான தேவங்குடிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தன்
சொந்த கிராம மக்களால் ’பிரஷ்டன்’ என்றும் தூற்றப்பட்டார்.
தூற்றியவர்களைப் பார்த்து தி.ஜா கூறிய வார்த்தைகள்,
“நம்முடைய நாட்டில் கலை பிரஷ்டர்களிடமிருந்து தான் பிறந்து வருகிறது என்று கூற விரும்புகிறேன்.
மையக்கருத்தைப் பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்?. இது நடக்குமா, நடக்காதா என்று விமரிசகர்கள்
கூறுவார்கள். அவர்களைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. இரண்டு மூன்று அளவுகோல்களை
வைத்துக் கொண்டு படைப்பாளியின் விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படுகிற பேதை, விமரிசகன்.
அவனுக்கு பலம் பழங்காலம். கலை அமைதி பற்றி ரசிகனுக்குத்தான் தெரியும். கலை உலகம் ஒரு
மாய லோகம். அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ளக்கூடாது.”
ஒரு நாவலை வாசகன் வாசிக்கும் போது, அது எந்தவிதமான
நோக்கத்தில் எழுதப்பட்டதோ, அதை படைப்பாசிரியர் எந்த பார்வையில், எதை உணர்த்த வேண்டும்
என்று எழுதினாரோ அதை மிகச்சரியாக புரிந்து
கொள்வதென்பது கடலில் மூழ்கி முத்தெடுப்பதற்கு சமம். ஆனால் பல நேரங்களில் அவை
வெறும் சிப்பியாக போவதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. ஆனால் அந்த எழுத்தின் படைப்பாளுமையின்
மூலம் வாசகனை படைப்பாளன் தேடலுக்கு உட்படுத்தும் சில அற்புதமான தருணங்களில் அவன் முத்துக்குவியலே
கண்டடைவதற்கும் வாய்ப்பு உண்டு. வாசிப்பின் முடிவில் நான் கண்டடைந்தது முத்துக்குவியலா..
இல்லை உதவாக்கரை சிப்பிக்கல்லா என்று நான் அறியேன். எதுவாக இருப்பினும் அதை பகிர்ந்து
கொள்ள முனைவதே இந்த பதிவின் நோக்கம்.
கதையின்
மிக முக்கிய கதாபாத்திரங்களாக நாம் ஐவரைக் கொள்ளலாம். அப்பு, அவரது தாயார் அலங்காரம்,
தகப்பனார் தண்டபாணி, குடும்ப நண்பர் சிவசு என்கின்ற சிவசுந்தரம் மற்றும் தோழி இந்து.
நாவல் எதைப்பற்றியது என்பதை முதலாவது வரிகளிலேயே விளக்கிவிடுகிறார். அந்த வரிகள் உணர்த்தும்
உண்மை இதுதான். சரஸ்வதி பூஜை நாளில் பூஜைக்கு வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தை எடுக்க
முடியாத சூழலில் அதை எடுத்துப் படிக்கத் தூண்டுவதே மனித மனத்தின் இயல்பு என்பதே அது.
தன்
நான்கு வயதில் தன் தகப்பனாரால் இந்துவின் அத்தை பவானியம்மாள் நடத்தும் பாடகசாலைக்கு
மந்திரங்கள், உபநிசங்கள், ஸ்லோகங்கள் கற்றுக் கொள்ள செல்லும் அப்பு, தன் 24ம் வயதில்
திருச்சியை ஒட்டியுள்ள அந்த கிராமத்தை விட்டு கிளம்ப எத்தனிக்கிறான். அப்போது இந்து
அவன் மீது தனக்குள்ள அபிமானத்தை கூற, அது தன் தாய்க்கு செய்யும் துரோகம் என்று அவன்
தன் அம்மாவை காணக் கிளம்புகிறான்.. வீட்டிலோ சூழ்நிலை வேறு மாதிரி இருக்க… அப்பு, அலங்காரம்,
இந்து மூவரும் அடுத்து என்ன செய்தார்கள் என்பதை நாவல் விளக்குகிறது.
திருமணம்
என்பது பெண் உடலின் மீது ஆணுக்கு வழங்கப்படும் உரிமையாகவே ஆண் சமூகம் பார்த்துக் கொண்டிருக்கும்
காலமரபில் அது பெண்ணின் பார்வையில் எந்தவிதத்தில் பார்க்கப்படுகிறது என்பதை 50 ஆண்டுகளுக்கு
முன்னமே பேசியிருக்கிறது இந்நாவல். மைய கதாபாத்திரங்களான அலங்காரமும், இந்துவும் ஒரே
விதமான பிரச்சனையை இரு வேறுவேறு சூழ்நிலையில் சந்திக்கும் பெண்களாக இந்நாவலில் படைக்கப்பட்டுள்ளனர்.
அலங்காரம் தன் கணவர் தண்டபாணியுடனான இல்லறத்தின் மூலம் மூன்று பிள்ளைகளைப் பெற்ற பின்னர்,
அவளுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியும் அளவிற்கு மற்றொரு ஆணுடன் பிறழ் உறவு ஏற்படுகிறது.
அதற்கான பிண்ணனி காரணங்கள் இதில் விரிவாக சொல்லப்படுவதில்லை. ஆனால் ஆங்காங்கே அலங்காரம்
மற்றும் தண்டபாணி இருவரும் பேசும் ஓரிரு வசனங்களில் அவை ஓரளவிற்கு பிடிபடுகின்றன..
இந்துவின்
சூழ்நிலையோ சிறு வயதிலேயே குழந்தை திருமணம் செய்யப்பட்டு, அவள் குழந்தை ஏதும் இல்லாமல்
கைம்பெண்ணாக இருக்கிறாள். வயதோ இருபது. அவளுடைய தர்க்கமாக அவள் அப்புவிடம் கூறுவது
”சிறுவயதிலேயே நான் உன்னைத்தான் மனதில் நினைத்திருந்தேன்.. என் உடலை மட்டும் கட்டியாண்டாள்
நான் அவன் பொண்டாட்டியாகி விடுவேனா…” இந்து தன் கணவன் பரசு இறந்தவுடனே தன் மனம் கவர்ந்த
அப்பு படித்துக் கொண்டிருக்கும், பாடகசாலைக்கே திரும்பிவிடுகிறாள். தன் மனதுக்கு உகந்தவன்
இல்லை என்றாலும் கணவன் என்ற முறையில் இந்துவை பரசு ஆட்கொள்ளும் போது அவள் அதனை
அனுமதிக்கிறாள். அதிர்ஷடவசமாக அவளுக்கு குழந்தைகள் இல்லை. அவன் இறந்த பிறகு தன் அத்தையிடம்
சென்றால் அப்புவைக் காணலாம் என்ற ஒரே காரணத்திற்காக அவள் புக்ககத்திலேயே இராமல் பாடகசாலைக்கு
வருகிறாள். அவள் கூறும் தர்க்கம் “அவரோடு இல்லறத்தில் இருக்கும் போதும் நான் மனதில்
உன்னைத் தான் நினைத்திருந்தேன்.. அதுவே குற்றம்.. இப்போதும் நான் உன்னையே நினைத்துக்
கொண்டிருக்கிறேன்.. என் மனதுக்கு உண்மையாக நான் நடப்பதே தர்மம்.. உன்னோடு நான் வாழ்வதே
சரியாகும்….”
அலங்காரத்தின் விசயத்தில் அவை நேர்மாறானவை.. மூன்று
குழந்தைகள் பிறந்த பின்னரே.. அவளுக்கு தன் கணவன் மீது பிணக்கு ஏற்படுகிறது. மனம் கணவனிடம் லயிக்காத போது தன்னை தொட அவரை அலங்காரம் அனுமதிப்பதில்லை. தன் உடலை
யார் தொடவேண்டும் என்னும் உரிமையை தாலி கட்டிய ஒரே காரணத்திற்காக தன் கணவனுக்கு கொடுக்க
அவள் தயாரில்லை. தன் உடல் மீதான தன் உரிமையை அவளே தீர்மானிக்கிறாள்… இருந்தாலும் தன்
குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவள் வேறுவழியின்றி தன் கணவருடனே வாழ்கிறாள். தன் கணவனுக்கான
எந்த சலுகைகளையும் நாம் அவருக்கு கொடுக்கவில்லை என்கின்ற மரபு அடிப்படையிலான எண்ணங்களும்
அவளை உலுக்கவே.. எல்லாவற்றையும் உதறிவிட்டு செல்வதற்கான நேரத்திற்காக அவள் காத்திருக்கிறாள்..
இவையனைத்தும் அவளை உறுத்தும் தருணத்திலும் அவளால் பிறன் மனை உறவை முற்றிலுமாக விட்டுவிடமுடிவதில்லை…
இரண்டுக்கும் இடையில் இருந்து அவள் புலம்பிக் கொண்டே இருக்கிறாள்…
செவ்வியல்
படைப்புக்கான இலக்கணமாக சொல்லப்படுவது என்னவென்றால் ஒரு நாவல் எந்த கால இடைவெளியில்
எழுதப்பட்டாலும், அது புதிய பார்வைக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும் என்பதாகும். நாவலில்
வரும் குருகுலவாசம் போன்ற பாடகசாலையும், பாடக சாலைக்கு தங்கள் குழந்தையை அனுப்பும்
நடுத்தரவர்க்க குடும்பமும், உறவுகளில் ஏற்படும் பிறழ்வுகளை கண்டிக்காமல் இருக்கும்
கணவன், என தற்கால போக்கோடு ஒன்றாத விசயங்கள் இருப்பினும் இவை 50 வருடங்களுக்கு முன்பு
இருந்திருக்கலாம். பெரும்பாலான பெண்கள் தங்களை அலங்காரம் போன்று காட்டிக்கொள்ள துணிவதே
இல்லை. இன்றும் மூன்று குழந்தைகளை பெற்ற பின்னரும் பிற ஆடவர் மீது எனக்கு நாட்டம் வந்ததே
இல்லை என்று சொல்லும் பொய்களே எந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்தாத, தித்திக்கும் அமுதமாக
இனிப்பதால் நாம் அந்த பொய்களுக்குள்ளாக திளைத்திருக்கவே விரும்புகிறோம். ஆனால் நடக்கின்ற
கள்ள உறவு தொடர்பான கொலைகள் உண்மை அவ்வாறு இல்லை என்பதையே உரக்க உரைக்கின்றன. மேலும்
அலங்காரம்,இந்து போன்ற பெண்கள் இன்னும் இந்த சமூகத்தில் வேறு வேறு வடிவங்களில் வாழ்ந்து
வருகிறார்கள், என்பதால் இந்த காலகட்டத்திற்கான பார்வைக்கும் இந்த நாவல் பொருந்தித்
தான் போகிறது..
மனிதனின்
செயல்பாடுகள் பெரும்பாலும் மரபு, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் நியதி இவை சார்ந்துதான்
இயங்குகின்றன என்றும், இல்லை மனிதனின் செயல்பாடுகள் உணர்ச்சிகள் சார்ந்துதான் இயங்குகின்றன
என்றும் இரண்டு வேறுபட்ட கருத்துகள் உண்டு. ஆனால் உண்மையில் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட
மெல்லிய கோட்டின் மீது, சில நேரம் அந்தப்பக்கம் கால் அகட்டி வைத்தும், சில நேரங்களில்
இந்தப் பக்கம் கால் அகட்டி வைத்தும் தான் மனிதமனம் நடை போடுகிறது என்பதே பாசாங்கில்லாத
உண்மை என்பதை மறுப்பதற்கில்லை. மொத்தத்தில் இதன் முன்னுரையில் எழுத்தாளர் சுகுமாரன்
கூறியதைப் போல ”இந்த ’அம்மா வந்தாள்’ மீறலின் புனிதமான பிரதி” ஆகும்
No comments:
Post a Comment