Thursday, 15 November 2012

காவல் கோட்டம்



    இதை நாவல் என்ற பிரிவில் சேர்க்கவா வேண்டாமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஏனென்றால் இதை நாவல் என்று சொல்வதற்கும் என்னிடம் காரணம் உண்டு. நாவல் இல்லை என்று சொல்வதற்கும் என்னிடம் காரணம் உண்டு. இருப்பினும் 2011-ம் ஆண்டில் நாவல் பிரிவில் தமிழ் மொழியின் சார்பாக சாகித்ய அகாதமி விருது கொடுக்கப்பட்டு இருப்பதால் இதை நாமும் நாவலாகவே அணுகுவோம்.

                                               
   சென்ற ஆண்டில் இலக்கியவாதிகள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய நாவல் இது. இதை மிகச் சிறப்பான நாவல் என்று ஒரு சாரரும், மிகவும் அபத்தமான நாவல் என்று ஒரு சாரரும் கடுமையான சொற்போரில் ஈடுபட்டனர். ஆனால் இது எத்தகைய நாவல் என்பது பற்றிய நிலையான முடிவு இன்றுவரை எட்டப்படவில்லை எனலாம். அவர்கள் அனைவருமே மிகப்பெரிய எழுத்தாளர்கள். முக்கியமாக அந்த புத்தகத்தை முழுமையாக படித்தவர்கள். ஏதாவது ஒருவிதத்தில் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையோ கோபத்தையோ கொடுத்திருக்கலாம். நாமும் படித்துவிட்டு எந்த கட்சியிலும் சேர்ந்து கொள்ளலாம். அது நமது கருத்து சுதந்திரம். படிக்காமலே யார் கருத்தையாவது ஆதரிக்க முயன்றால் நாமும் செம்மறி ஆட்டுக்கூட்டமாகி விடுவோம். யாரையும் நம்ப வேண்டாம். உங்களை தவிர… ஏனென்றால் மெய்பொருள் காண்பது மட்டுமே அறிவு.

      இந்த நாவல் ஒரு ஆரம்பகால வாசிப்பு நிலையில் உள்ள என் போன்ற வாசிப்பாளர்களுக்கு எந்தவிதமான ஏமாற்றத்தையும் கண்டிப்பாக தராது என்று என்னால் அறுதியிட்டு கூறமுடியும். மேலும் இது ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை பற்றி பேசுகிறது என்கின்ற குறுகிய மனப்பான்மையோடு நாம் இந்த நாவலை அணுகினால் அதன் சாராம்சத்தை நாம் தவறவிடுவதற்கான வாய்ப்புகள் ஏராளம். எல்லா பிரிவு மக்களும் ஒன்றே.. அனைவரின் வாழ்வியல் சித்திரங்களும் பதிவு செய்யப்பட வேண்டியவைகளே.. என்கின்ற கண்ணோட்டத்துடன் நாம் இதனை வாசிக்க முயன்றோமானால் நம் சமூக பிண்ணனியில் உளவும் பல முக்கியமான பிரச்சனைகளின் மூலவேர்களை அறிந்து கொள்வதோடு, நம் முன்னோர்கள் கடந்து வந்த வாழ்க்கை பாதைகளை அறிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்..

     இந்த நாவலின் ஆசிரியர் சு.வெங்கடேசன். இந்த நாவலின் ஒரு இரண்டு பக்க மையக்கருவைக் கொண்டு புனையப்பட்ட திரைப்படம் தான் அரவான். ஆனால் அரவான் திரைப்படத்தை விட இந்த நாவல் மிகச்சிறப்பான ஒரு வாசிப்பனுபவத்தை தரும் என்பது திண்ணம்.

  இது பிற நாவல்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்றால் இதில் குறிப்பாக தலைவன் தலைவி என்கின்ற ரீதியிலான தனிப்பட்ட கதாபாத்திரங்கள் நாவல் முழுவதும் வருவதில்லை. மேலும் இதில் எந்தவொரு கதாபாத்திரமுமே நாவல் முழுவதுமே வருவதில்லை. ஏனென்றால் இது பழங்கால மதுரையின்(அரவ நாடு) மேற்கில் 20 கி.மீ தொலைவில் உத்தப்பநாயக்கனூருக்கு அருகில் உள்ள தாதனூர் என்ற சிற்றூரை மையமாக கொண்டு வாழ்ந்த கள்ளர்களின் 400 ஆண்டுகால வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை வெறும் 700 பக்கங்களில் கடந்து செல்லும் ஒரு அசாத்தியமான முயற்சி ஆகும்.

    படிக்கின்ற வாசகர்களுக்கு ஒரு வேளை முதல் 300 பக்கங்கள் சற்று அயர்ச்சியைக் கொடுக்கலாம். ஏனென்றால் அவை வரலாற்று பக்கங்கள். அதில் விஜயநகர பேரரசின் தோற்றமும் வளர்ச்சியும், அழிவும் மிகவும் விரிவாக ஒரு கதைப் போல் விளக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் தமிழ்நாடு, கர்நாடக பகுதிகளில் விரவி வாழ்ந்துகொண்டு இருக்கும் தெலுங்கு மொழி குடும்பத்தை சார்ந்த மக்கள் எந்தக் கால கட்டத்தில் இங்கு வந்து குடியமர்த்தப்பட்டனர் என்பதை அறிந்து கொள்ளமுடியும். மேலும் அப்போது காகிதியநாட்டை(ஆந்திரா) சேர்ந்த கம்பணனும், கம்பளி நாட்டை(கர்நாடகா) சார்ந்த கங்காதேவியும் மணமுடித்து தங்கள் பொது எதிரியை அழிக்கின்றனர்., இன்று மொழி வாரியான சமூகமாக நாம் பிரிந்து ஒருவரை ஒருவர் வெறுத்து நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் அது போன்ற பக்கங்களை எளிதில் புரட்டி செல்ல முடியாது.

     பாளையங்கள் எப்படி அமைக்கப்பட்டன, பாளையக்காரர்கள் என்பது யார், விஜய நகர பேரரசை சார்ந்த மன்னர்கள் எப்போது மதுரையை ஆளவந்தனர், மதுரையிலும் திருச்சியிலும் கட்டப்பட்ட கோட்டைகளின் அமைப்பு எப்படிப்பட்டது, மதுரை நகரின் எந்த வீதியில் அந்த கோட்டை இருந்தது,  கலெக்டர் ப்ளாக் பெர்ன் அந்த பாரம்பரியமிக்க கோட்டையை பைசா செலவு இல்லாமல் எப்படி நம் மக்களை கொண்டே இடித்து தள்ளினார், அத்தகைய ப்ளாக் பெர்ன் கலெக்டரின் நினைவு இடம் இன்றைய மதுரையில் எங்கு உள்ளது, முல்லை பெரியாறு அணையின் தேவை யாருக்கு இருந்தது, அதன் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் யார், அந்த பெரியாறை கண்டறிந்தவர்கள் யார், முல்லை பெரியாறு கட்டப்பட்ட இடம் அன்றைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்திற்கு உட்பட்டது இல்லை என்பதற்கான ஆதாரங்களை இந்த நாவல் பிரிட்டிஷ் ஆவணங்களின் உதவியுடன் மிகத் தெளிவாக விளக்குகிறது. மேலும் பாக் ஜலசந்தி கட்டுமானம் என்ற பெயரில் ஆங்கில அரசு அதன் பிண்ணனியில் நடத்திய கொலைவெறி ஆட்டங்கள் ஜெர்மனின் கொலைகலன், இலங்கையின் வெள்ளை வேன்களுக்கு ஈடானவை. ஆனால் இவை நமது வரலாற்று பக்கங்களில் மறைக்கப்பட்டுள்ளன.

     இவை தவிர கிறிஸ்துவ மதத்தை எப்படி நம் மக்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்தார்கள் என்பதும், அதன் பிண்ணனியில் இருந்த சாதியக் கொடுமைகளும் நம் கண்களுக்கு அதிகமாக தென்படாதவை. கிறிஸ்துவ பாதிரியார்கள் நம் நாட்டில் முதன்முதலாக பள்ளிகளை திறப்பதற்கான காரணங்களையும் நாம் புரிந்துகொள்ள இயலும். மேலும் இந்த சாதிய பூசல்களை கொண்டு எளிதாக வேரூன்றிய கிறிஸ்துவ மதத்தில் மட்டும் சாதிய கொடுமைகள் இல்லையா..? என்ற கேள்விக்கும் இதில் பதில் உண்டு.

    இதுவொரு புனையப்பட்ட நாவல் அல்ல… மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் வாழ்கின்ற மனிதர்களில் 100 வயதை நெருங்கிக் கொண்டு இருக்கும் மனிதர்களிடம் நேரிடையாக பேசி அவர்களிடம் கிடைத்த தகவல்களை தொகுத்த தகவல் களஞ்சியமாகவும் இது விளங்குகிறது. மேலும் இந்த நாவலுக்காக இந்த நூலின் ஆசிரியர் செலவளித்த காலங்கள் பத்து ஆண்டுகள். தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிபடுத்துவதற்காக பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தின் போது எழுதப்பட்ட கடிதங்கள், ஆவணங்கள் போன்றவற்றையும் நாவலின் ஊடாக இணைத்துள்ளார்.

     இந்த வரலாற்றை தவிர வாழ்வியல் ஏதும் இல்லையா என்று கேட்கிறீர்களா.. அதுவும் உண்டு. ஒரு காலத்தில் படைவீரர்களாகவும், ஊரின் காவல்காரர்களாகவும் இருந்த மக்களின் வாழ்க்கை, மன்னராட்சி முறையில் இருந்து ஆங்கிலேய கம்பெனிகளின் கைக்கு ஆட்சி அதிகாரம் மாற்றப்பட்ட போது எப்படி தடம் புரண்டது என்பதுதான் இந்த நாவலின் மைய நீரோட்டமாக உள்ளது. இத்தகைய மாற்றங்களின் போது நசிந்து போகும் மனிதர்களின் வாழ்க்கையை நாம் எப்போதுமே கண்டு கொள்வது இல்லை..

   இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகளும், சலுகைகளும் எட்டமுடியாத இடத்தில் வாழும் மலைவாழ் மக்கள் அரசின் வன்கொடுமை நடவடிக்கைகள் எளிதில் எட்டக்கூடிய இடத்தில் வாழ்வது தர்க்கப்பிழை.  இத்தகைய மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த எந்தமாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது பற்றி அரசு என்றுமே அக்கறை கொண்டதில்லை. ஆனால் அந்த மலைசார்ந்த கனிமவளங்கள் ஒரு பெருவணிக நிறுவனத்துக்கு தேவைப்படும் போது அரசு அந்த மலைவாழ் மக்களை அங்கிருத்து துரத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கும். அவர்களை அங்கிருந்து நாம் துரத்தியடித்தால் அவர்கள் எங்கே போவார்கள்,? என்ன தொழில் செய்வார்கள்? என்பதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள போராடினால் அவர்களின் நடவடிக்கைகள் அரசுக்கு நியாயமற்ற நடவடிக்கையாக தெரியும்.. இதேதான் இந்த நாவலிலும் நடைபெறுகிறது.

    களவுக்கும் காவலுக்குமான மறைமுக தொடர்புதான் இந்த நாவலின் மையக்கரு.. சில வரலாற்று மாற்றங்கள், வாழ்வியல் மாற்றங்களை அறிந்து கொள்ள இந்த நாவல் கண்டிப்பாக உதவும். பொதுவாகவே பழங்காலத்தில் கிராமப்புறங்களில் காவல் என்ற அமைப்பு உண்டு. இந்த காவல்காரர்கள் இரவு நேரத்தில் நிலம் மற்றும் இன்னபிற மக்களின் உடைமைகளை காவல் காப்பதை தொழிலாக செய்து, அதற்கான கூலியைப் பெற்று வாழ்க்கை நடத்துபவர்கள். இதே மக்கள்தான் எந்த ஊரில் காவல் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்களோ அந்த ஊரில் இரவு நேரத்தில் புகுந்து திருடவும் செய்வர். திருடு போன பொருள் திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் இவர்களைத்தான் நாட வேண்டியது வரும். அவர்கள் பொருளை மட்டும் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.. ஆனால் திருடிய நபர்களை காட்டிக் கொடுக்க மாட்டார்கள். இப்படி திருடப்பட்ட பொருளை துப்பு கொடுத்து மீட்டு வருவதற்கு கூலியாக துப்புகூலி வாங்கிக் கொள்வர். அந்த துப்புக்கூலி காவல்கூலியை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். இதற்கு பயந்து கொண்டே அனைத்து ஊர் மக்களும் காவல் உரிமையை கொடுத்துவிடுவர்.

    இதுவே பழங்கால நடைமுறை. திருமலைநாயக்கர் மன்னராக இருந்த காலத்தில் அவரது அரண்மனையின் கட்டுகாவலை மீறி ராஜமுத்திரையை திருடிச் சென்ற திருடனின் திறமையை பாராட்டி அந்த ஊர் மக்களுக்கு மதுரை நகரை காவல் செய்வதற்கான அதிகாரத்தை கொடுக்கிறார் திருமலைநாயக்கர். இது நடந்தது 17ம் நூற்றாண்டு. பின்னர் அவரது வழிவந்த பிற அரசர்களும் இதே முறையை பின்பற்ற எந்த பிரச்சனைகளும் இல்லை. ஆனால் ஆங்கிலேயர்களின் கம்பெனி ஆட்சி அதிகாரம் வரும் போது அவர்கள் நகர் காவலுக்கு என்று கச்சேரி(போலீஸ் ஸ்டேசன்) ஒன்றை நிறுவி இனி தாதனூர் மக்கள் காவல்புரிய ஊருக்குள் வரக்கூடாது என்று அறிவிக்கும் இடமே பிரச்சனையின் ஆரம்பபுள்ளி.

   இப்படி அந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏதேனும் ஒரு தகவல் இருந்து கொண்டே இருக்கிறது. எனவேதான் சொல்கிறேன்… மற்ற செய்திகளை இந்த நாவலை படித்தே தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment