Saturday, 29 September 2012

சாட்டை:



பிரபு சாலமனின் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநரின் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வந்திருக்கும் படம். முதலில் ஒரு வலுவான கருத்தை எடுத்துக் கொண்டு அதை திரையில் கதையாக சொல்ல முயன்ற முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் இது போன்ற ஒரு நல்ல கதைக்களம் அமைந்துவிட்டால் மட்டுமே படம் வெற்றிப்படமாக அமைந்துவிடுமா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்றே சொல்ல வேண்டி இருக்கும்.. அதற்கான சமீபத்திய உதாரணம் தான் இந்த சாட்டை..

சிறப்பான தேர்ச்சி சதவீதத்தை காட்ட போராடிக் கொண்டு இருக்கும் ஒரு அரசு பள்ளி… அங்கு பணிபுரியும் பொறுப்பற்ற ஆசிரியர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும்….!? தலைமை ஆசிரியர்.. அப்பள்ளிக்கு புதிதாக பணியில் அமர்த்தப்படும் தயாளன்(சமுத்திரக்கனி) என்ற ஆசிரியர் எப்படி அந்த பள்ளியை முன்னேற்றம் அடையச் செய்கிறார் என்பதே கதை.. இதை பல சினிமாத்தனங்களோடு கலந்துகட்டி கூறியிருக்கிறார்கள்..

சமுத்திரக்கனி அவர்களுக்கு அந்த கம்பீரமான உடல் தோற்றமும், அந்த குரலும் ப்ளஸ். அவரது உடல்மொழியை விட குரல் மொழி நன்றாக நடித்திருக்கிறது. ஒரு பொறுப்பான ஆசிரியராக மாணவர்களுடன் நட்பாக பழகி அவர்களின் துன்பம் அறிந்து அதை கலைய முயற்சிப்பதும்.. அவர்களுக்கு உற்சாகம் அளித்து.. அவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற முயல்வதுமாக… சமுத்திரக்கனி அவர்களுக்கு திரைவாழ்க்கையில் இது ஒரு சின்ன முன்னேற்றம்…(அவர் பெரிய முன்னேற்றத்தை விரும்பவில்லை போலும்…)


பேசும் போது நாக்கு குழறும் ஒரு மாணவிக்கு பயிற்சி கொடுத்து அவளை பேச்சுப் போட்டியில் பங்கேற்க வைக்கும் அளவுக்கு மாற்றுவது.. செயல்முறை விளக்க பாடத்துடன் பாடம் எடுக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொண்டு அதை மற்ற ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்க முயல்வது.. லேடிஸ் டாய்லெட் எப்படி இருக்கிறது என்கின்ற ஆர்வத்தில் அதைப் பார்க்க போன சிறுவனை ஊக்கப்படுத்துவது… ”நீ 12வது படிக்கும் போதுதானே வாத்தியாரின் கையை பிடித்தாய்.. நான் 9-வது படிக்கும் போதே கணக்கு வாத்தியின் கையை உடைத்துவிட்டேன்…” ”அவ உன்ன லவ் பண்ணனும்னா நீ முதல்ல நல்லா படிக்கணும்…” என அறிவுரை கூறுவதுமாக ஏதேத் சொல்லுகிறார்… செய்கிறார்…

அவர் இவ்வளவு செய்யும் போது அவருக்காக மாணவர்கள் எதுவுமே செய்யாமல் இருந்தால் எப்படி…? அவரை போலீஸ் கைது செய்ய வரும்போது ஒட்டு மொத்த பள்ளியே கூடி கட்டை, செங்கல் என போலீசை வழி மறிக்கிறது… இது போக க்ளைமாக்ஸ் காட்சியில்…. அவருக்காக எல்லோரும் சேர்ந்து கண்ணீர் வடிப்பது, அவருக்காகவே விளையாட்டு போட்டிகளில் ஜெயிப்பது என்று அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள்…

இதையே எழுதிக்கொண்டு இருக்கின்றேனே…. படத்தில் வேறு எதுவுமே இல்லையா என்று கேட்டீர்களானால்,,,, வேறு எதுவுமே இல்லை என்று தான் சொல்லுவேன்… தயாளன் என்கின்ற அந்த ஒரு கதாபாத்திரத்தை தவிர வேறு எந்த கதாபாத்திரமுமே படத்தில் இயல்பாக இல்லை.. எல்லாமே சினிமாத்தனம் நிறைந்த கதாபாத்திரங்கள்.. அதில் துணை தலைமை ஆசிரியராக வலம் வரும் தம்பி ராமையாவின் கதாபாத்திரம் படு அபத்தம்.. அவர் செய்யும் அழிசாட்டியம் போதாதென்று.. சைடு டிராக்கில் பள்ளி பருவ காதல் வேறு…

இதில் ‘பிள்ளைங்க பெத்தவங்கள நம்புறாங்க.. ஆனா பெத்தவங்க தான் பிள்ளய நம்புறதில்ல…”னு டயலாக் சொல்லுமுடிச்சி… பெத்தவங்க பிள்ளைய நம்ப ஆரம்பிச்சி நீ படிக்க போம்மான்னு சொல்லி ஸ்கூலுக்கு அனுப்புனா அது… அங்க போயி பன்ற முத வேல லவ்வு…. என்ன டைமிங் பாருங்க… பின்ன எதுக்கு சார் அந்த டயலாக்….

ஒரு நல்ல கதைக்களனை எடுத்துக் கொண்ட பின்னரும் அதை ஒரு யதார்த்தமான நல்ல சினிமாவாக கொடுக்க முயலாமல்.. அதில் ஏன் இது போன்ற சினிமாத்தன்மையான மசாலாக்களை சேர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை.. சத்தியமாய் ஜீரணிக்க முடியவில்லை…
  
நகைச்சுவையை சேருங்கள்… வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஆனால் அவையும் சற்று யதார்த்த சாயலுடன் இருப்பது நல்லது… படத்தின் ஆரம்பத்தில் பள்ளியின் அறிவிப்பு பலகையில் கடன் வாங்கிவர்கள் விபரம் எழுதியிருக்கிறது.. கேட்டால் அது நகைச்சுவைக்காக… என்பார்கள்… இந்த கதைக்கான நகைச்சுவை அதுவல்ல… அது திணிக்கப்பட்ட ஒரு நகைச்சுவை..

இப்படி ஏகப்பட்ட காட்சிகள்… வாத்தியாரின் மகன் மக்கு, விரசமாக ஆடை ஆணியும் ஆசிரியை, சிறுவன் கத்தி வைத்திருப்பான் குத்திவிடுவான் என்று பயப்படும் எ.ஹெச்.எம் ஹெச்.எம்மையே கை நீட்டி அடிக்கிறார்…, தயாளனை அடிக்க ஆள் அனுப்புகிறார், தன்னை கேலி செய்யும் மாணவர்களை கண்டு கொள்ளாமல் போகின்றார்… இது எந்த வகையிலான கேரக்டரைசேசன் என்றே தெரியவில்லை… ஏகப்பட்ட குழப்பம்.. முரண்பாடு..

மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க தயாளன் அளிக்கும் வார்த்தை விளையாட்டு தொடர்பான பயிற்சிகள், தோப்புக்கரணத்துக்கு அவர் கூறும் விளக்கம் போன்றவை நல்ல காட்சிகள் தான்.. ஆனால் அவை காட்சி கோர்வைக்கு மட்டுமே பயன்படுமே தவிர.. கதை நகர்வுக்கு அல்ல என்பதை ஏன் மறந்தீர்கள்….

இசையும், கேமராவும் கூட சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.. சமூகத்திற்கு தேவையான மிக வலுவான கதை.. ஆனால் மிக பலவீனமான திரைக்கதை… (கண்டிப்பாக இந்த கதையையே விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றமுடியும்…) எனவே பல இடங்களில் கதை நகராமல் கிணற்றில் போட்ட கல் போலவே கிடக்கிறது… இருப்பினும் எத்தனையோ குப்பைகளுக்கு மத்தியில் நல்ல கதையம்சத்துடன் வந்த ஒரு படம் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்…

ஆனால்… இந்த
சாட்டையால் அடித்தால் யாருக்குமே உரைக்காது…..!

No comments:

Post a Comment