மச்சான் மச்சான் எத்தம் பெரிய கண்ணு
நான் காலையில தின்னே ரெண்டு பண்ணு
கால் கடுக்க நிக்கிற பையன் மண்ணு
அட கண்டுக்காம போறவதான் பொண்ணு……
இது எந்த படத்தில் வரும் கானாப்பாடல் என்று யோசிக்கிறீர்களா…? இது எந்தப் படத்திலும் வரும் பாடல் அல்ல…. சென்னையின் பெரும்பாலான அரசு கல்லூரி மாணவர்களின் ஒரு நாள் தேசிய கீதம்.. இப்படி அவர்கள் கைவசம் பல தேசிய கீதங்கள்…. இதை அவர்கள் அரங்கேற்றும் இடம் எது தெரியுமா… இருக்கவே இருக்கு அரசு பேருந்து….. அதில் பயணம் செய்ய அரசாங்கமே இலவச பஸ் பாஸ் வேறு தருகிறது… பின்பு கேட்கவா வேண்டும் பஸ்சில் ஏறியதில் இருந்து அவர்கள் இறங்கும் வரை ஒரே இன்னிசை மழைதான்…. இது யாருக்கெல்லாம் இன்னிசை மழையாக இருக்கும்…? தன்னை ஒரு பாடகனாக அங்கீகரித்து பாடச் சொல்லும் நண்பர்களுக்காக நெக்குருகி பாடுபவனுக்கும்… அவனுக்கு பக்கவாத்தியமாக இருந்து தாளம் போடுகிறோம் என்று பஸ்சின் தகரத்தை தட்டிக் கொண்டே செல்லும் சில அடியொட்டிகளுக்கும்…. அந்த மொத்த கூட்டத்துக்குமே அது ஒரு இன்னிசை மழைதான்…. வெகு அரிதாக அவர்கள் குறிப்பால் உணர்த்தும் அந்த பெண்ணுக்கும்….. ஆனால் மற்றவர்களுக்கு…….?
மைனா படத்தின் வசனம் தான் ஞாபகம் வருகிறது…. “ அதனாலென்ன நாம ஜாலியா இருப்போம்…..” மேற்சொன்ன வசனம் தான் பெரும்பாலும் இது போல் நடந்து கொள்ளும் பள்ளி….! கல்லூரி மாணவர்களின் மனநிலையாக இருக்கிறது….. முதலில் இந்த காதல் என்பது எல்லோரும் கூடி தெருவில் இழுத்துவிடும் தேராக எப்போது மாறிப் போனது….? இருவரின் மனநிலையில் நிகழும் மென் உணர்வுகளின் மாற்றங்களை… கூட்டமாக கூடி கூத்தடிக்கும் மனநிலைக்கு மாற்றியவர்கள் யார்….? யாரை கைகாட்டலாம் என்றால் கண்டிப்பாக தமிழ் சினிமாவைத்தான் கைகாட்ட வேண்டி இருக்கும். இரு தனிப்பட்ட நபர்களின் உணர்வுகளுக்கு மிகப்பெரிய மதிப்பளித்து தெருக்கூத்து நடத்தும் ”மா” நண்பர்களின் கூட்டம் சக பயணியாக பயணம் செய்யும் மனிதர்களின் உணர்வுகளை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறது…..
உளவியல் என்ன சொல்கிறது என்று பார்த்தோமானால்… எந்த ஒரு உன்னதமான நண்பனுக்கும் தனது நண்பனின் காதலியோ மனைவியோ மிக அழகானவளாக இருப்பதை சகித்துக் கொள்ளமுடியாது என்று சொல்லுகிறது… தனக்கு கிடைக்கவில்லையே என்ற மனவோட்டம் தான் அவனது மனநிலையாக இருக்கும் என்றும் கூறுகிறது. இதனைத் தவிர்த்து சில நேரங்களில் உண்மையாகவே நண்பர்கள் தன் நண்பனின் காதலை சேர்க்க உதவுவார்கள்… அதில் சில கட்டாய படிநிலைகள் இருக்கும்… என்னுடைய அவதானிப்பின் படி அவை நண்பனின் காதலி மிகவும் சுமாரான அழகுடன் இருப்பது…. நண்பன் வசதியுடையவனாக இருந்து நண்பர்களுக்கு அடிக்கடி உதவியவனாக இருப்பது…. உதவும் நண்பர்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருப்பது.. இது போன்ற இன்னும் சில படிநிலைகள் உண்டு..
இவர்களின் கணக்குப்படி பார்த்தால்… நண்பனுக்கு உதவும் ஒரு நண்பனின் கூட்டம்… நண்பன் காதலிப்பதாக………! சொல்லும் பெண் அழகாக இருக்கின்ற பட்சத்தில் அந்த நண்பன் கூட்டத்தில் உள்ள வேறு நண்பனும் அந்த பெண்ணுக்கு நூல் விடத்தானே செய்வான்… நண்பர்கள் அப்படி நடந்து கொள்வது இல்லை என்று நீங்கள் வாதிட்டால் எனக்குள் ”அவிங்க அம்புட்டு நல்லவைங்களா..? என்று கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.. இது போன்ற பேருந்துகளில் நீங்கள் ஏறிப் பார்த்தீர்களானால் பெரும்பாலும் அந்த குரூப்பில் உள்ள எல்லா மாணவர்களும் எதேனும் ஓரிரு பெண்களை பார்த்துக் கொண்டேதான் வருவார்கள்… இதற்குப் பேர்தான் காதலா…..? “எப்பா ஏன்பா படுத்துற….. வயசு பசங்க பொண்ணுங்கள பாக்காம… பின்ன பல்லு போன கிழவியவா பாப்பானுக..” நியாயமான கேள்வி….? அவர்கள் எந்த பெண்களையும் பார்ப்பது, காதலிப்பது எல்லாமே அவர்களது சுதந்திரம்தான்…. ஆனால் அவர்கள் கண்டிப்பாக மற்றவர்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்ய உரிமை அற்றவர்கள்… ஆனால் அவர்கள் அப்படி செய்வது இல்லை என்பது தானே பிரச்சனை…..?
நீங்கள் சில குறிப்பிட்ட தடங்களில் சில குறிப்பிட்ட நேரத்தில் சென்னை பேருந்துகளில் பயணித்து திரும்பினால்…. உங்களை அவர்களது செயல்பாடுகள் ஒரு கொலைகாரனாக மாற்றினாலும் அதில் வியப்பொன்றும் இல்லை… இரண்டு படிகளிலும் குறைந்தது பத்து இருபது பேராவது தொங்கிக் கொண்டும் வழியில் காலை நீட்டி நின்று கொண்டு…. இவர்கள் பஸ்சின் தகரத்தை தட்ட தொடங்கியவுடன் தூங்கிக் கொண்டு வரும் பச்சிளம் குழந்தைகள் வீறிட்டு அழத் தொடங்கும்…. அவர்களை தட்டிக் கேட்க தயங்கும் தாயோ தந்தையோ தர்மசங்கடத்துடன் குழந்தையை தேற்றத் தொடங்குவர்…. அந்த குழந்தையின் அழுகுரல் சத்தம் மற்றவர்களின் காதுக்கு கேட்காதபடி அவர்களின் இரைச்சல் பலமடங்காக இருக்கும்… அவர்களை எதிர்ப்பதில் இருக்கும் ஆபத்து கருதி… நடத்துனர் வாய் திறப்பதே இல்லை…. இவர்களின் செயல்களால் மன உளைச்சலுக்கு டிரைவர் ஆளாகிறார்…. என்பது அவர் வண்டியை ஓட்டும் விதத்திலேயே தெரியும்… இறங்குபவருக்கும் வழி கிடையாது…. ஏறுபவருக்கும் வழி கிடையாது… உள்ளே காலியாக இடம் இருந்தாலும்… நாங்கள் பயணிப்பது படிக்கட்டுகளில் என்று தொங்கிக் கொண்டுதான் வருவார்கள்..
யாராவது சிறிது ரோசம் வந்து சத்தம் கொடுத்தால் உடனே அவர்களை அடிக்க மொத்தமாக பாய்வார்கள்… அவர்கள் எல்லாம் மாணவர்களாம்… அவர்களை யாரும் எதுவும் செய்யமுடியாதாம்…… அதுதானே இன்றைய நிலைமையும்… இவர்கள் தங்களை ஒர் ஹீரோக்களாக உருவகப்படுத்திக் கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுவர்… ஆனால் இவர்கள் தனியாக இருக்கும் போது இந்த ஹீரோயிசம் வெளிப்படாது…. ஒருவர் இருவர் என கூட்டம் சேர்ந்ததும் அவர்களது வேலைகள் தொடங்கிவிடும்… இது போன்ற பல ஹீரோக்கள் நம் நாட்டில் உண்டு…! என்ன அவர்கள் எப்போதும் இது போன்ற வெற்று கூச்சல் போடவே தங்கள் சக்தியை வீணடிப்பார்கள்… பேருந்து, தியேட்டர், போன்ற பொது இடங்களில் இருந்து கொண்டு கத்துவதை தங்கள் வீரத்தின் வெளிப்பாடாக கருதுபவர்கள்…
இவர்கள் இப்படி தங்களை ஹீரோக்களாக உருவகப்படுத்திக் கொண்டு இருக்க….. அதே நேரத்தில் அப்படி செய்கின்ற நீங்கள்தான் ஹீரோ என்று சொல்லி ஒரு படத்தை எடுத்தால் எப்படி இருக்கும்…? அப்படிதான் இருக்கிறது அட்டகத்தி….! ஆனால் இவர்கள் மேற்சொன்ன விசயங்களில் ஒரு பாதியை மட்டும்தான் காட்டுகிறார்கள்…. இது பார்க்கின்ற பார்வையாளருக்கு இவர்கள் நடந்து கொள்கின்ற முறைகளால் ஏற்படும் விளைவுகளை தெளிவு படுத்தவே படுத்தாது. மேலும் இது போன்ற ஹீரோ இமேஜில் சுற்றிக் கொண்டு இருக்கும் மாணவர்களை மேலும் கெடுப்பதற்கே வழிகோலும் என்கின்ற பட்சத்தில் எப்படி இதை நல்ல படம் என்று சொல்லிக் கொள்ளமுடியும்…..!
கல்லூரிக்கு உள்ளேயும் வெளியேயும் படத்தில் வரும் பொறுக்கி போன்று சுற்றிக் கொண்டு இருக்கும் இது போன்ற இளைஞர்களின் வாழ்க்கை உண்மையில் என்ன ஆகிறது என்பதையாவது உண்மையாக காட்டியிருக்கலாமே..? படத்தில் வரும் நாயகனைப் போல் அவர்கள் ஒரு டூடோரியலில் படித்திருந்தாலும் பள்ளி ஆசிரியராக கிளைமாக்ஸில் உயர்வது இல்லை… (பாவம் இயக்குநருக்கு பள்ளி ஆசிரியர்களின் மீது என்ன கோபமோ..? அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு படிப்பின் மீது என்ன கோபம்…? பெரும்பாலும் நாயகர்கள் ஒரு படிக்காத தக்குறியாகவோ அல்லது படிப்பு என்றாலே கசக்கும் என்று சொல்லும் குணாதிசயத்துடன் தான் வடிவமைக்கப்படுகிறார்கள்..?) தன் அன்றாட வாழ்க்கையை கழிக்க ஒரு சேல்ஸ் ரெப்பரசண்டேட்டிவாக மீண்டும் தெருவில் தான் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.. அவர்கள் இப்படித்தான் கடைசிவரை தங்களது தவறை கண்டுகொண்டு திருந்தாமல் தெருவில் சுற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்று சினிமா விரும்புகிறதா…?
கதை என்று பார்த்தால் பெரிதாக ஏதும் இல்லை. +2 அரியர்ஸை கிளியர் செய்வதற்காக டுடோரியல் படிக்கும் இளைஞன் பேருந்தில் பயணம் செய்யும் போது அவனுக்கு ஏற்படும் காதல் அனுபவங்கள்தான் கதை… அதை அவர்கள் பஸ்சில் செய்யும் ராவடிகள், குடும்பம், நண்பர்கள் கூட்டம் என கலந்து சொல்லியிருக்கிறார்கள்.. படத்திற்கு ஏன் அட்டகத்தி என்று பெயர் வைத்தார்கள் என்று விளக்கம் வேறு படத்தில் வருகிறது… ஆனால் உண்மையில் அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை விட படம் பார்க்கும் போது எனக்கு ஒரு விளக்கம் தோன்றியது… அது பொருத்தமானதாக இருக்கும்.. இது போன்று ஊருக்குள் சுற்றும் இளைஞர்கள் எல்லாம் அந்த காலகட்டங்களில் ஒரு பெண்ணின் அல்லது எல்லா பெண்களின் கவனத்தை கவரும் வண்ணம் தன்னை ஒரு மாவீரன் என்று காட்டிக் கொள்ளும் பொருட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.. அப்போது அவர்கள் தங்களை ஒரு அபாயமான கத்தியாகவே கருதிக் கொள்வர்..
ஆனால் படிப்பை முடித்துவிட்டு (படிப்பை முடித்தால்..?) சமூகத்தின் இன்னொரு பரிணாமத்தில் நுழையும் போதுதான் வாழ்க்கை என்பது என்ன என்பதை அவர்கள் உணரத் தொடங்குவார்கள்.. அப்போது அவர்கள் வாழ்வில் சந்திக்கும் உதாசீனங்களும், அவமானங்களும் அவர்களுக்கு தாங்கள் ஒரு அட்டகத்தி என்பதை புரியவைக்கும்..
நல்ல விசயங்கள் என்று சொல்வதற்கும் படத்தில் சில விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் குறிப்பாக நிகழ்கால தமிழ்சினிமாவின் கிளிசே காட்சிகளான நண்பர்களுடன் சேர்ந்து தண்ணியடிக்கும் காட்சிகள் இல்லவே இல்லை.. இது ஆறுதலான விசயம்… மேலும் காதல் என்பது ஒரு புனிதமான பூ… அது ஒரு முறைதான் பூக்கும் என்று யதார்த்தத்துக்கு ஒவ்வாத ஒப்பனை பூசிக் கொள்ளாமல்.. இன்றைய காதலின் யதார்த்தத்தை கூறுவதில் மட்டும் அட்டகத்தி.. நிஜக்கத்தி.. படத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வசனங்கள் வட்டார வழக்குடன் நெருங்கிப் போவதால் ரசிக்க முடிகிறது. கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை உட்பட பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் வணிகரீதியாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுக்ககூடிய எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதால் அவர்கள் வேண்டுமானால் இதை மிகச்சிறந்த படமாக கொண்டாடட்டும்…
வெற்றிகரமாக ஓடுவதால் என்னால் என் மனசாட்சியைக் கொன்றுவிட்டு இதை மிகச்சிறந்த படம் என்று கொண்டாட முடியாது… இது என் மனதில் சிறிது கோபத்தை தவிர வேறேதும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் எளிதில் மறந்து போகும்… இன்னொரு சாதாரண படம்……
No comments:
Post a Comment