Thursday 6 March 2014

ஆஹா கல்யாணம்:

மிகமிக சாதாரண ஒரு கதை.. நாம் பார்க்கும் பத்துப் படங்களில் ஐந்தில் கதை இதுவாகத்தான் இருக்கும்.. அதாகப்பட்டது நாயகன் நாயகி இடையே ஒருவிதமான ஊடல்… அது தணிந்து அவர்கள் சேர்ந்தார்களா…? இல்லையா..? என்பதே இங்கும் துருத்தி நிற்கும் கேள்வி.. இப்படி அதரபழசான… கதையே இல்லாத… (!!! ம்ம் அப்படியும் சொல்லலாம்…) ஒரு படத்தை பார்க்க வேண்டிய அவசியம் என்ன…? பதிவு எழுதவேண்டிய தேவை என்ன…? என்று கேட்டால் சுய லாபத்திற்காக என்றே சொல்லுவேன்… படம் பார்க்கும் எண்ணம் ஆரம்பத்தில் இருந்தே இல்லை என்றாலும், சக பதிவர்களின் பதிவுகள் பெரும்பாலும் இந்தக் கல்யாணத்தை ஆஹா ஓஹோ என்றே பாராட்டி இருந்தன.. அல்லது ஆவரேஜ் என்றே தரம் பிரித்திருந்தன.. அதைவிட கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், நாயகி வாணி பற்றிய துணுக்குச் செய்திகள்… ஆட்டத்தில் இவர் அடுத்த சிம்ரன் என்றும் முக பாவனையில் இவர் அடுத்த ஜோதிகா… என்றும் ஏகப்பட்ட முகஸ்துதிகள்.. நடிக்கத் தெரிந்த நாயகிகள் வழக்கொழிந்து வரும் காலகட்டத்தில், இப்படி ஒரு பாராட்டுக்களுடன் ஒரு நாயகியா..? பார்க்க வேண்டுமே…!!!! என்ற அபிலாஷையில் கல்யாணத்தை அட்டெண்ட் செய்தேன்…. கல்யாணம் ஆஹா.. ஓஹோ… என்று இல்லாவிட்டாலும், கொஞ்சம் ஆ..ஹா தான்…


இதே கதைப்பிண்ணனியில் வந்த வ.வ.சங்கத்தை வறுத்தெடுத்துவிட்டு இந்தக் கல்யாணத்தைப் போய் ஆ..ஹா என்று சொல்லலாமா…? என்று நீங்கள் கேட்கும் முன்பே என்னை நானே கேட்டுக் கொண்டேன்… அதற்கு எனக்கு பதிலாக கிடைத்தது கீழ்க்கண்ட வரிகள் தான்… சூரி போன்ற சுக்ரீவ நண்பர்களோடு சரக்கடித்துவிட்டு பகுதி நேரத் தொழிலாக பல்லிளிப்பதையும், முழு நேரத் தொழிலாக காதலிப்பதையும் செய்து வரும் நாயக பிம்பங்களை காரணமே இல்லாமல், கடமை கண்ணியம் கட்டுப்பாடோடு, கண் மண் தெரியாமல் பதிலுக்கு காதலிப்பதையே காலம் காலமாக தொழிலாக செய்து வரும் நாயகிய பிம்பங்களுக்கு மத்தியில், இந்த ஸ்ருதி என்னும் கதாநாயகி கதாபாத்திரம் வழக்கம் போல் பஸ்சுக்குள் வந்து பல் இளிக்கும் நாயகனைப் பார்த்து ஒரு பதில் சொல்கிறது… “என்ன… ரூட் வுடுறியா….? எனக்கு அதுக்கெல்லா டைம் இல்ல.. நான் பெரிய பிஸ்னஸ்வுமன் ஆகணும்….. அதுக்குத்தான் படிப்பு முடிஞ்சதும் பிஸினஸ் பண்ணப்போறே….” என அவனது லவ் மூடுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப் புள்ளி வைக்கிறது…. இந்தக் கல்யாணத்தைப் பார்த்து முதன் முதலாக, ”ஆஹா” சொன்னது இந்த இடத்தில்தான்…. இப்படித்தான்… “காதலிக்க நேரமில்லை என்று சொல்லி தனக்கென ஒரு கனவு இருக்கிறது என்று சொல்லும் ஒரு பெண் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் கதாநாயகியா…?, ஆஹா…”

அந்த இடத்தில் சொல்லுவதோடு மட்டும் அல்லாமல், தான் சொல்லியபடி ஒரு சக்சஸ்சிவ் பிஸினஸ் வுமனாக சாதித்தும் காட்டுகிறது அந்த கதாபாத்திரம்… அதுமட்டுமின்றி தன்னை காதலிப்பதாக தன் பின்னால் சுற்றியவனையும், ஒரு நண்பனாக ஒரு பங்குதாரராக தன்னோடு சேர்த்துக் கொண்டு அவனையும் சமூகம் மதிக்கும் ஒரு அர்த்தமுள்ள மனிதனாக மாற்றவும் செய்கிறது… இப்படி ஏணி வைத்தாலும் எட்டாத அளவுக்கு வவசங்கத்துக்கும் ஆகல்யாணத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள்… அதனால் தான் கல்யாணத்தை ஆஹா என்கிறேன்… சரி இனி கதைக்குள் செல்வோம்..

ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நாயகி வாணி கபூர். இவர் கல்யாணத்தில் சமையல், அலங்காரம், பூ வேலைப்பாடு, மீயுசிக் ஆர்க்கெஸ்ட்ரா, நடனம் இப்படி எல்லா வேலைப்பாடுகளையும் செய்து கொடுக்கும் காண்ட்ராக்ட் குரூப்பின் ஊழியர்… இவருக்கு அதே தொழிலில் சாதித்து சமூகத்தில் ஒரு ஐகானாக விளங்கும் சந்திரலேகா(சிம்ரன்) போல் தானும் வரவேண்டும் என்பது லட்சியம்… அந்த லட்சியத்தை அடைய முதற்படியாக தொழிலில் அனுபவம் தேடி திருமண வீடுகளில் இது போன்ற காண்ட்ராக்ட் குரூப்பில் அடிமட்ட நிலையில் வேலை செய்கிறார்.. அதே மண்டபத்தில் ஓசி சாப்பாடு சாப்பிட வந்த சக்திவேல் என்னும் நானி ஸ்ருதியிடம் மாட்டிக்கொள்கிறார்… அங்கு ஒருவழியாக ஸ்ருதியை சமாளிக்கு சக்திவேல்… அந்த மண்டபத்தில் ஸ்ருதி ஆடும் ஆட்டத்தில் மயங்கிப் போய் அவரை பின் தொடர… அப்போதுதான் சக்திவேலுக்கு ஸ்ருதியின் கனவும், அந்த கனவின் முதற்படியாக ”கெட்டிமேளம்” என்னும் காண்ட்ராக்ட் ஆல்பத்தை, அவர் தயார் செய்து வைத்திருப்பதும் தெரிய வருகிறது… இப்போது இருவரும் சேர்ந்து பயணிக்க முடிவு செய்கின்றனர்… இவர்கள் கெட்டிமேளம் என்னும் நிறுவனத்தை தொடங்கி வெற்றி பெற்றார்களா…? முளையிலேயே கருகிய நாயகனின் காதல் மீண்டும் எப்படி அரும்புவிட்டது….? அது பூ பூத்ததா…? ஸ்ருதியின் லட்சியம் என்ன ஆனது என்பதை விருப்பமிருந்தால் நேரில் பார்த்துக் கொள்ளுங்கள்…


ஸ்ருதி சுப்ரமணியமாக வாணி கபூர்.. டெல்லியை சேர்ந்த மாடல் அழகி… ஹிந்தியில் தேசி ரொமான்ஸ் படத்தில் நடித்தவர்… ஆறடிக்கும் கொஞ்சம் அதிகமாக வளர்ந்திருப்பாரோ என்று சந்தேகிக்க தோன்றும் உயரம்… துருதுருவென்ற நடிப்பு… எக்ஸ்பிரசன்களில் ஜோதிகா அளவுக்கெல்லாம் இல்லை என்றாலும், கண்டிப்பாக ஒரு சின்ன வசீகரம்!! இருக்கிறது… ஆடும் போதுதான் அம்மணிக்கு இடுப்பு மட்டும் உடம்பில் இருந்து ஒரு அஞ்சு இஞ்ச் நகர்ந்து போய் தனியாக ஆடிக் கொண்டிருக்கிறது… கெட்ட ஆட்டம் போடுகிறார்… இவருக்கும் சக்திக்குமான ஒரு அந்தரங்க நிகழ்வை, சக்தி பேச்சு வாக்கில் காயப்படுத்திக் கடக்கும் போது, இவர் முகத்தில் காட்டும் அந்த வலி அபாரம்…. அதுபோல அடுத்து வரும் சீன் செக்குயன்ஸ்சில் எல்லாம் காட்டமாக வெடிக்கும் போதும், நானியை வெறுப்பேற்றும் போதும் ஆக்டிங் செம்ம…. கண்டிப்பாக கவனிக்க வேண்டிய வரவுதான்… ஆனால் நம் ஆட்களுக்குத்தான் இவரது முக அமைப்பும் உடல்வாகும் செட்டாகுமா என்று தெரியவில்லை.. பொருத்திருந்து பார்க்கலாம்…


சக்திவேலாக ”நான் ஈ” புகழ் நானி… லவ்வர் பாயாக பாதி.. பொறுப்பான நண்பனாக தொழிலில் வெற்றிபெற போராடுபவராக மீதி…. இரண்டிலுமே இவரை ரசிக்க முடிகிறது… இவர் கோணி கோணிப் பேசும் அந்த தமிழ்.. பல இடங்களில் மரண மொக்கை என்றாலும் சில இடங்களில் கொஞ்சம் ரசிக்கவும் வைக்கிறது… இவரது எசகு பிசகான இங்கிலீசும் கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டுகிறது… இவர் கடைசி நேரத்தில் காதலைச் சொல்லி, நீ டயர்ட்டா வந்தா நா காஃபி கொடுப்பேன்… என்று ஆரம்பித்து கொடுக்கும் பினிஷிங்க் டயலாக் எல்லாம் அக்மார்க் லவ்வர்ஸ் டயலாக்…

இசை தரண் குமார். சில பாடல்கள் ஓஹே அதிலும் குறிப்பாக அந்த பஞ்ச் டயலாக்கை சேர்த்து வைத்து எழுதியிருக்கும் பாடல்….  பிண்ணனி இசை ரசிக்க வைக்கிறது… யாஸ் ராஜ் குரூப்பின் தயாரிப்பு… செலவைப் பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை…. ப்ரேமுக்கு ப்ரேம் கூட்டத்தையும் கோலாகலத்தையும் கல்யாணத்தையும் அலங்காரத்தையும் காட்ட வேண்டிய கட்டாயம் என்பதால் பட்ஜெட் முப்பதை தொட்டதாக கேள்வி…. வசூலித்திருக்காது என்றே எண்ணுகிறேன்… ஹிந்தியில் சுமாராகப் போன BAND BAAJA BAARAAT படத்தின் ரீமேக் தான்… இந்த ஆஹா கல்யாணம்…. அனுஷ்கா சர்மா இடத்தில் வாணி கபூர்…. ஒகே தான்….


இயக்கம் கோகுல் கிருஷ்ணா.. புதிய களம்… புதிய ஜோடி என எல்லாமே புதியதுதான்…. ஒரு புதிய களத்தில் நாம் ஏற்கனவே கண்டு களித்து புளித்த கதைதான்… இருப்பினும் அதை கொஞ்சமேனும் ரசிக்கும் படி கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்… ஆக ஆஹா கல்யாணம்… வாணியை பார்க்க விரும்புவோருக்கும்.. லாஜிக்குடன் கலகலவென ஒரு டைம் பாஸ் படத்தைப் பார்க்க விரும்புவோருக்கான சரியான தேர்வு….

No comments:

Post a Comment