Tuesday, 18 March 2014

நடிப்பு அகம்/புறம்


ஆசிரியர் : சுரேஷ்வரன்
பிரிவு    : சினிமா
பதிப்பகம் : நிழல்

    


தமிழ் சினிமாவை கலையாகப் பார்க்காமல், கேளிக்கையாக மட்டுமே பார்ப்பவர்கள் மக்கள் மட்டுமா..? அல்லது அக்கலைத் துறையில் இருப்பவர்களும் தானா…? என்கின்ற சந்தேகம், தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கும் சினிமா சார்ந்த புத்தகங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினால் வலுப்பெறும்.. அவர்களும் அதை கலையாகவும் பார்த்திருந்தால், குறைந்தபட்சமேனும் சினிமா சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கான புத்தகங்கள் தமிழிலும் அச்சேறியிருக்கும்.. சினிமாவின் தொழில்நுட்பம் சார்ந்த மிக முக்கியமான சில புத்தகங்கள் கூட இன்னும் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவே இல்லை.. மேலும் சினிமா தொடர்பாக தமிழ்மொழியில் வருகின்ற பெரும்பாலான புத்தகங்கள் உலக திரைப்படங்கள் தொடர்பான விமரிசனக் கட்டுரையாகவோ அல்லது இயக்குநர் ஆவது எப்படி…? அல்லது சினிமாவில் சாதிப்பது எப்படி..? என்பதான மேம்போக்கான நூல்களாகவே இருக்கும்… தமிழ் சினிமாத் துறையில் சாதித்த அல்லது முக்கிய ஆளுமையாக விளங்குகின்ற இயக்குநர்களோ ஒளிப்பதிவாளர்களோ அல்லது நடிகர்களோ தாங்கள் கற்றுக் கொண்ட நுட்பங்களையும் தங்களுக்கு ஏற்பட்ட விலைமதிக்க முடியாத அனுபவங்களையும் எழுத்து மொழியில் ஆவணப்படுத்தியதே இல்லை… அதற்கு அவசியம் இல்லை என்று கருதிவிட்டார்களா என்றும் தெரியவில்லை… கேமரா கவிஞர் என்று வர்ணிக்கப்படுபவரும், ஒளிப்பட உலகில் ஒதுக்கித் தள்ளிவிடமுடியாத ஒப்பற்ற ஆளுமையாகவும் விளங்கிய முன்னாள் இயக்குநர் திரு. பாலுமகேந்திரா அவர்களிடம் இருந்து இது போன்ற சீரிய முயற்சிகள் வருவதற்கான வாய்ப்பிருந்தது… ஆனால் காலம் அதற்கு கருணை காட்டவில்லை… சூழல் இப்படியிருக்க.. ஒளிப்பதிவாளர் திரு எஸ்.ஜெ.ராஜ்குமார் அவர்களின் முயற்சியால் “அசையும் படம்” ”பிக்சல்” என ஒளிப்பதிவு தொடர்பான இரண்டு நூல்கள் தமிழில் சமீபமாய் வெளிவந்திருக்கின்றன.. இந்த வரிசையில் இப்போது, ந.முத்துச்சாமி அவர்களின் கூத்துப்பட்டறையில் மாணவராகவும் நடிகராகவும் மட்டுமின்றி நடிப்புப் பயிற்றுநராகவும் இருந்த திரு.சுரேஷ்வரன் அவர்களின் சீரிய முயற்சியாலும் நிழல் ப.திருநாவுக்கரசு அவர்களின் உதவியாலும், நடிப்பு சம்பந்தமாக தமிழில் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் புத்தகம் தான் இந்த நடிப்பு: அகம்/புறம்..

நடிப்புத் துறையில் தன்னை உள்ளிழுத்துக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும், தேவையான அடிப்படையான நடிப்பியல் சார்ந்த இலக்கணங்களைப் பற்றிப் பேசுகிறது இந்நூல். மேலும் நடிப்பு என்பது தனது உணர்வுகளை உடல்மொழியால் எதிரிருப்பவருக்கு புரியவைப்பது என்பதால் அதுவும் மொழி போன்ற ஒரு ஊடகம் தான் என்று நமக்கு உணர்த்தி கடக்கும் ஆசிரியர், அந்த மொழியின் (நடிப்பின்) ஆதிப் பயன்பாடு எந்த தொன்ம காலத்திலிருந்து என்பதையும் நமக்கு உணர்த்த தலைப்படுகின்றார்.. நடிப்புக்கலை முளைவிட்ட அந்த தருணத்தை அவரது மொழியில் சொல்வதானால் இப்படித்தான் சொல்லவேண்டும்.

வேட்டை நிகழ்வில் உயிர் மீளும் கணங்கள் ஒவ்வொன்றும் பெருமகிழ்ச்சிக் கொடுக்க, அதைப் பிறரோடு பகிரவும் கொண்டாடவும் துடித்தானவன்.. கொடுவிலங்கை தான் வீழ்த்திய கதையை மொழியறியா அம்மனிதன் தன் உடலையே மொழியாக்கிக் கதைக்க, அவந்தன் மனைவியும் மக்களும் நட்பும் சுற்றமும் தம் விழிகளையே செவிகளாக்கி உற்றுக்கேட்டனர் அதை. தான் கொன்ற மிருகத்தைத் தன் கற்பனையால் உயிர்ப்பித்து, அதனோடான தனது போராட்டத்தை அவன் நிகழ்த்திக் காட்டிய அக்கணத்தில் முளைவிட்ட கலைதான் நடிப்புக்கலை”

இப்படி ஆதி மனிதனின் ஒவ்வொரு அசைவிலும் தன்னை உயிர்பித்துக் கொண்ட நடிப்புக்கலை, வேட்டை என்பதற்கான தேவை அற்றுப் போன போதும் எவ்வாறு அவனோடே தொடர்பில் இருந்தது என்பதும், ஆதி மனிதனின் ஊதிப் பெருத்த சடங்குகளில் கொஞ்ச கொஞ்சமாக தன்னைக் கரைத்துக் கொண்டு, ஊர்க் கூடி வாழும் குழுக்களுக்கு மத்தியில் எப்படி கூத்தாக திரிந்தது என்பதனையும், மொழியின் தோற்றுவாய்க்கு பின்னரும் அது எப்படி கலையாக பரிணமித்தது என்பதையும்… ஊர் முழுவதும் பகலில் உழவு வேலை செய்வதும், இரவு முழுவதும் கூத்தாடுவதுமாக, ஊரில் இருந்த ஒவ்வொருவருமே கூத்தாடிகளாக இருக்க…. அது எந்தக் காலக்கட்டத்தில் தொழில்சார்ந்த பிரிவினர் மட்டும் ஆடும் கூத்தாக மாறியது என்பதையும் மிக அழகாகவும் ஆழமாகவும் விளக்குகிறது.. இந்நூல்..

மேலும் ஆதித் தமிழ் சமூகத்தில் கூத்தை ஆவணப்படுத்தும் முயற்சியாக கூத்த நூல் என்று ஒரு இலக்கிய நூல் இருந்ததுமான தரவுகளையும் நாம் கடந்து வருகிறோம்.. இது தவிர்த்து மற்ற எந்த மொழிகளிலும் இல்லாத படிக்கு நம் தாய்மொழியாம் தமிழ்மொழியில் கலை என்பது நம் வாழ்வியலில் இருந்து தனிப்பட்ட ஒரு அங்கமாக இல்லாமல், நம் வாழ்வியலோடு சேர்ந்த ஒன்று என்பதனையும், அதை தமிழ்மொழி இயல் இசை நாடகம் என்று தன்னைப் பிரித்துக் கொண்ட உள்ளீடுகளிலேயே தெளிவாக்கி இருப்பதையும் ஆசிரியர் நமக்கு சுட்டிக் காட்டுகிறார்… இப்படி பிரித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அதற்கென தனியான ஒரு இலக்கணத்தையும் நம் தமிழ்மொழி கொடுத்திருக்கிறது என்பதனையும் ஆசிரியர் வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்குகிறார்… இயல் தமிழுக்கான இலக்கணமாக கொள்வதற்கு ஏகத்துக்கும் நூல்கள் இருக்க… இசை மற்றும் நாடகத்துக்கு இலக்கணமாக ஆசிரியர் சுட்டுவது நாட்டிய சாஸ்திரத்தையும் தொல்காப்பியத்தையும்…

நடனத்தின் முப்பெரும் பிரிவுகளான நிருத்தம் நிருத்தியம் நாட்டியம் என்பதைப் பற்றி முழுமையாக விளக்கும் நாட்டிய சாஸ்திரத்தையும், நாட்டியத்தின் முக்கியமானதொரு அங்கமான பாவம் என்பது விளக்குவது ஒன்பது வகையான அங்கதச் சுவையைத்தான்…. இதை வெளிப்படுத்துவது என்பது உடல்மொழியால் தான் சாத்தியம் என்பதால், நாட்டிய சாஸ்திரம் என்னும் ஆதி தமிழ்நூலும் நடிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு இலக்கிய நூல்தான் என்று வாதிடுகிறார்… அதுபோலவே தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் கொண்டுள்ள ”மெய்பாடு” என்றால் என்ன? என்பதனையும் அந்த உடல்மொழி என்று சொல்லப்படுவதான மெய்பாடு எத்தனை விதமான நிலைக்களன்களை கொண்டுள்ளது என்பதனையும் உணர்த்தி, அதற்கும் நாட்டிய சாஸ்திரத்துக்குமான ஒற்றுமையையும் விளக்கி, தொல்காப்பியமும் நடிப்பிற்கான அடிப்படையான இலக்கணங்களை கொண்டுள்ள நூலென்பதை தெளிவுபடுத்துகிறார்…

இது தவிர்த்து மேடை நாடகம், நவீன நாடகம் வீதி நாடகம் இவை ஒவ்வொன்றுக்குமான நுண்ணிய வித்தியாசத்தையும், ஒவ்வொன்றிலும் நடிகனுக்கு இருக்கக்கூடிய சவால்களையும் மிகத் தெளிவாக அடிக்கோடிட்டு காட்டுகிறார்… அதுபோல ரஷ்ய நடிகர் ஸ்டான்ஸ்லோவாஸ்கியின் நடிப்புக் கோட்பாடு பற்றிய முன்னுரையையும், அவரது முறையை மேலை நாடுகளில் எப்படி மெதட் ஆக்டிங் என்ற முறையில் பின்பற்றுகிறார்கள் என்பதையும் விளக்கிவிட்டு.. நடிப்புக்கான அடிப்படை கோட்பாடுகளுக்குள் உள்நுழைகிறார்…

ஒரு நடிகனானவன் தன்னை எப்படிப் பார்க்க வேண்டும், தன்னை சுற்றி இருக்கின்ற சூழலை எப்படி அவன் பார்க்கப் பழக வேண்டும், நடிகனுக்கான அடிப்படைப் பயிற்சியாக அவன் தினந்தோறும் செய்ய வேண்டியது என்ன..? தன் கவனிக்கும் திறனை கூர்மையாக்கவும், தன் ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளவும், ஒரு கதாபாத்திரத்தின் சூழலை தனக்கு பழக்கப்படுத்திக் கொள்ளவும் என்ன மாதிரியான நடவடிக்கையில் அவன் ஈடுபடவேண்டும் என்பதையும் ஆரம்ப கட்ட யோகாப் பயிற்சிகள் தொடர்பான அறிமுகங்களையும் கொண்டு விரிந்து செல்கிறது புத்தகம்.. சில இடங்களில் சினிமா மற்றும் நாடகம் சார்ந்த புராதன ரீதியிலானக் குறிப்புகள் நடிப்புக்கான வரலாற்று ரீதியிலான சில பின்புலங்களைக் கொண்டிருந்தாலும் சற்று அயர்ச்சியைக் கொடுப்பதும் உண்மை…

நடிப்பிற்கான இலக்கணம் என்பதை பெருங்கடல் என்பதை நாம் அறிந்திருந்தாலும், அதன் தகவமைப்புக்களைப் பற்றியும் அடிப்படைகளை அறிந்து கொள்ளவும், அதற்குள் முங்கி முத்தெடுப்பதற்க்குத் தேவையான முன்னேற்பாடுகளைப் பற்றியும் தமிழில் பேசுகின்ற நூல் என்பதால் இந்தப் புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது… நடிப்புத் துறையில் வாழ்ந்தோங்க வேண்டும் என்ற கனவுகளுடன் இருப்பவர்கள், எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் விழிக்கத் தேவையில்லை… அவர்கள் நடிப்புக்கான அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கும் இந்தப் புத்தகத்திலிருந்து அவர்களுக்கான பயணத்தைத் தொடங்கலாம்…


No comments:

Post a Comment