Thursday 5 December 2013

இரண்டாம் உலகம்:

செல்வராகவனின் இரண்டாம் உலகத்தைப் பற்றி இரு விதமான எதிர்வினைகள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன… ஒரு சாரர் இதனை பதிவிடுவதற்கு தகுதி இல்லாத வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருப்பது ஒரு வினையாக இருக்கும் போது, மறு சாரர்களோ செல்வா தவறு செய்துவிட்டார்.. அவர் இந்தத் திரைப்படத்தை தமிழில் எடுத்துவிட்டார்.. இதே திரைப்படத்தை வேறு வெள்ளைத் தோல் உள்ள ஆசாமி ஆங்கிலத்தில் எடுத்திருந்தார் என்றால், இதே மூட மக்கள் இதனை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியிருப்பார்கள் என்கின்ற சாயலிலான மற்றொரு எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள்.. இந்த இரண்டு குழுக்களிலுமே திரைப்படத்தை திரைப்படம் சார்ந்த பார்வையில் மட்டுமே பார்க்காமல், செல்வாவின் ஆளுமையின் மீது கொண்ட அதீத பக்தியாலும், அதீத வெறுப்பாலும் பார்த்தவர்கள் சரிசமமாக கலந்தே ஜீவித்திருப்பார்கள் என்பது என் எண்ணப்பாடு… எனக்கு மேற்சொன்னபடி செல்வாவின் மீது அதீத பக்தியோ, அதீத வெறுப்போ இரண்டுமே கிடையாது என்றாலும், இந்த பதிவின் முடிவில் என்னையும் இந்த ஏதேனும் இரண்டு பிரிவுகளில் வைத்துவிடுவார்களே என்ற கவலையும் எனக்கு உண்டு… ஆனால் அதை தவிர்க்க என்னால் எதுவுமே செய்ய இயலாது என்பதை உணர்ந்தவனாகவே இந்தப் பதிவை எழுதுகிறேன்…


செல்வாவின் படங்களில் எனக்கு பிடித்த படங்களாகச் சொல்ல வேண்டும் என்றால் காதல் கொண்டேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டையும் சொல்லலாம்.. துள்ளவதோ இளமையைகூட ஏதோ ஒரு விதத்தில் சேர்த்துக் கொள்வேன்…. ஆயிரத்தில் ஒருவன் தொடர்பான அரசியல் பிரச்சனைகளைத் தாண்டி ஒரு கலைஞனாக அதில் அவர் காட்டிய கற்பனை வளம் என்னைக் கட்டிப் போட்டது உண்மை.. ஆட்கொண்டதும் உண்மை.. பிறருக்குள்ள அரசியல் நிலைப்பாடுகளுடன் செல்வாவும் ஒத்துப் போக வேண்டும் என்பது இயலாத ஒன்று… அப்படி ஒத்துப் போகின்ற பட்சத்தில் ஒருவருக்கான தனித்தன்மை என்பதே இல்லாமல் போய்விடும்.. ஆக ஆயிரத்தில் ஒருவனை நான் ஒரு ரசிகனாக ரசித்தேன் என்பதும் உண்மை. இது தவிர்த்து செல்வாவின் படங்களிலொரு தவிர்க்க முடியாத குறை இருக்கும்… அது தனிமை என்னும் சிறை.. அது இருப்பது தவறல்ல… ஆனால் தொடர்ச்சியாக அது ஒரே மாதிரியான உணர்வுகளையே பார்வையாளனுக்கு கடத்துவது தான் பிழை… உதாரணமாக காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி, மயக்கம் என்ன இப்படி எல்லா படங்களிலும் நாயகன் ஒருவித தனிமையில் தவிப்பவனாகவே இருப்பான்.. அவன் தனது சுயத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், தனக்கான நம்பிக்கையை அவன் விரும்புகின்ற அல்லது அடைய நினைக்கின்ற வேறொருவர் வந்து அவனுக்குள் விதைக்க வேண்டிய கட்டாயத்தை அவன் வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்வான்… பெரும்பாலும் இவரது நாயகர்கள் இவரை பிரதியெடுத்தது போல் இருப்பார்கள்… மூன்றில் இரண்டு பங்கு கலைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் இருந்துதான் தங்களுக்கான கலையை உருவாக்குகிறார்கள்.. இவரும் அதற்கு விதிவிலக்கல்ல.. மேலும் அப்படி எடுக்கப்படுகின்ற படைப்புகள் தான் ஆகச் சிறந்த கலையாகவும் ஆகி நிற்கிறது.. என்பதிலும் சந்தேகம் இல்லை… ஆனால் அந்தக் கலை தருகின்ற வெற்றியே சில நேரங்களில் அந்தக் கலைஞர்களை அதேவித டெம்ப்ளெல்ட் வகையறாக்களில் மாட்டிக் கொள்ள செய்வதோடு, அதே பாணியில் அவர்கள் தருகின்ற படங்களை மக்கள் புறக்கணிக்கும் போது அவர்களின் ரசனையைப் பற்றி கலைஞர்களை மக்களுக்கு எதிராக பரிகாசம் செய்யவும் தூண்டுகிறது.. ஆக எனக்கு செல்வாவின் படங்களில் மிகவும் பிடித்த படங்கள் உண்டு.. ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, ஏன் மயக்கம் என்ன திரைப்படத்தின் பின்பாதியைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்… இத்தனைப் படங்கள் எனக்குப் பிடித்திருந்தது.. ஆனால் இரண்டாம் உலகம் எனக்குப் பிடிக்கவில்லை…



ஏன்..? ஏனென்றால் இரண்டாம் உலகம் இந்த உலகத்தை விட கடும் வறட்சியில் காண சகிக்காமல் காட்சி கொடுக்கிறது.. நான் வறட்சி என்று சொல்வது கற்பனை வறட்சி… ஆம்.. இரண்டாம் உலகத்தில் என்னென்னவோ இருக்கிறது.. நாம் கண்டிராத விசித்திரமான இரண்டே இரண்டு விலங்குகள்.. அவ்வபோது ஆஜானுபாகுவான தோற்றத்தில் இறக்கை விரித்துப் பறக்கும் ஒன்றிரண்டு பறவைகள்.. கலர் கலராய் கண்ணைப் பறிப்பதைப் போல் மின்னிக் கொண்டு இருக்கும் ஓராயிரம் பூக்கள்.. பூமிக் கோளங்களைப் போல் மிகப்பெரிய ஒளி வீசும் பந்து கோளங்கள் இவை மட்டும் தான் இரண்டாம் உலகம்… இதில் செல்வாவின் கற்பனை எங்கு இருக்கிறது… மேற்சொன்ன அத்தனை விசயங்களையும் அனிமேஷன் பார்த்துக் கொள்ளும்… செல்வா என்ன பார்த்துக் கொண்டிருந்தார்.. அவரது கற்பனைவளம் என்ன ஆனது.. அந்த இரண்டாம் உலக மக்களின் மொழி என்ன…? உணவு என்ன…? அங்கு காற்று உண்டா…? ஒளி உண்டா..? அவர்கள் குடிப்பதும் தண்ணீர்தானா..? அவர்கள் விவசாயம் செய்து உணவைப் பயிருடுகிறார்களா…? அவர்கள் போக்குவரத்துக்கு எதனைப் பயன்படுத்துகிறார்கள்..? அங்கு இருந்த விலங்குகள் எது..? அதன் உணவு என்ன..? மக்கள் ஒற்றுமையுடன் இருந்தார்களா…? அவர்கள் மக்கள் தானா…? அவர்களுக்கும் பூமியில் வாழும் ஜீவராசிகளுக்கும் என்ன வித்தியாசம்…? அவர்களுக்கு தெய்வங்கள் உண்டா..? அவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமானப் பிரச்சனை என்ன…? இப்படி எத்தனையோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டே அதற்கு விடை கொடுக்க யோசித்திருந்தாலே இன்னும் அழகாக இந்த இரண்டாம் உலகத்தை சிருஷ்டித்திருக்க முடியும்… ஆனால் செல்வா என்ன செய்திருக்கிறார் இரண்டாம் உலக மக்களை நம்மிலிருந்து ஆடையில் மட்டும் மாற்றிவிட்டு, உணவு, உடை, உறைவிடம், மொழி ஏன் பெண்கள் மீதான அடிமைத்தனத்தில் கூட அச்சு அசலாக பூமியை காப்பியடித்து வரைந்தது போல் உலவவிட்டு ஆங்காங்கே சில அத்தி பூத்தாற் போல் அனிமேஷன் அத்தியாயங்கள் தலைகாட்ட வைத்திருக்கிறார்… இதைத் தான் நம் வீட்டுக் குழந்தை முதற்கொண்டு வெள்ளைக்கார ஆசாமிகளின் படங்களில் பார்த்தாகிவிட்டதே….

இத்தகைய சுவாரஸ்யமே இல்லாத ஒரு உலகத்தில் நாம் பயணித்தால் அது நமக்கு எப்படி இருக்கும்… திரைக்கதையின் பயணத்தில் குறைந்தது ஒரு யானை துரத்திய பீதியோ, பாம்பு நம்மைக் கடித்த பதற்றமோ கூட வேண்டாம்.. ஒரு எறும்பு கடித்த உணர்வாவது….. அல்லது ஒரு மயில் பீலிகையால் வருடிய சுகமாவது கிடைக்க வேண்டாமா….? ஆனால் நமக்கு என்ன கிடைக்கிறது தெரியுமா…? செல்வா சிருஷ்டித்த இந்த இரண்டாம் உலகத்தில் பயணிக்கும் போது, சுடும் மணல் நிரம்பிய வனாந்தரத்தில் தண்ணீருக்காக தவிக்கும் ஒருவனின் தவிப்புதான் நமக்கு மிஞ்சுகிறது…

ஒரு ஆர்யா கதை சொல்லத் தொடங்குகிறார்.. இரண்டு உலகத்து கதையையும் சேர்த்தே… இரண்டுமே காதல் கதைகள்.. பூமியில் நடக்கும் கதையில் அனுஷ்கா ஆர்யாவைத் துரத்த… மற்றொரு உலகில் ஆர்யா அனுஷ்காவைத் துரத்துகிறார்… பூமியில் காதல் கைகூடி வந்து கல்யாணம் நெருங்கும் நேரத்தில் அனுஷ்கா எதிர்பாராமல் மரணிக்க…. அதை எதிர் கொள்ள முடியாமல் தவிக்கும் பூலோக ஆர்யா சாவைத் தழுவ முயல… மற்றொரு உலகிலும் இதே மாதிரியான சூழல், அனுஷ்கா தன்னைத் தானே குத்திக் கொண்டு உயிருக்கு போராடுகிறார்… அங்கிருக்கும் தெய்வம் இங்கிருந்து ஆர்யாவைக் காப்பாற்றி அங்கே கொண்டு போய், அந்த உலகுக்கே காதலைக் கற்றுத் தருகிறது.. இறுதியில் அவர் அங்கும் இறந்து அடுத்த உலகுக்கு செல்கிறார்.. இப்படி எனக்குப் புரியாத ஜென் கவிதைகளைப் போல்தான் படமும் இருக்கிறது… ஆனால் ஜென் கவிதை எனக்குப் பிடிக்கும்… அதில் பலமுறை வாசிக்கும் போது ஒரு ஆழ்ந்த அமைதியும்… ஒரு வாழ்க்கை அனுபவுமும் இருப்பது புலப்படும்… இதில் பலமுறை யோசித்துப் பார்த்தும் அப்படி எதுவும் இருப்பது போல் புலப்படவே இல்லை…


மன்னித்துவிடுங்கள்… இந்தப் படத்தை ஜென் கவிதைகளோடு ஒப்பிடக்கூடாது தான்… ஒரு வேளை வாழ்க்கையின் நியதி இறப்பின்மை என்பதைச் சொல்லவே இயக்குநர் முயன்றிருக்கிறார் என்கின்ற நோக்கில் திரைப்படத்தை அணுகினாலும், அதிலும் இயக்குநர் தோற்றே இருக்கிறார்… ஏனென்றால் அது எந்தவொரு பாமர ரசிகனுக்கும் எட்டவே இல்லை… உண்மையில் அவரது எண்ணம் மனித வாழ்க்கையில் இறப்பின்மையை சொல்லி, முடிவற்ற பயணத்தை காட்டுவதுதான் என்பதாக கொண்டாலும் அதையும் இன்னும் அழகாக செய்திருக்கலாம் என்பதே என் அனுமானம்.

இதையும் மீறி ரசிக்கும்படி அமைந்த காட்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே… அதுவும் செல்வாவின் முத்திரையைச் சொல்லும் ஓரிரு வசனங்கள்… அது போக பூலோக அனுஷ்காவின் தோழியாக வரும் அந்த பெண் பேசும் ஓரிரு நிமிட அனாடமி வசனங்கள் மட்டுமே… அழகான நடிக்கத் தெரிந்த அனுஷ்காவை இப்படி வீணடித்திருக்கிறார்கள்.. ஆர்யாவைப் பற்றி என்ன சொல்ல என்றே தெரியவில்லை… படமே இப்படி கொடுமையான அனுபவமாக இருக்கும் போது.. அதன் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என்று ஒவ்வொன்றாக ஆய்வது… இன்னும் எரிச்சலைக் கொடுக்கும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்..


இறுதியாக இரண்டாம் உலகத்தைப் பற்றி என்ன சொல்வது என்றால், நம் பூலோகம் எத்தனையோ வன்முறை, போர், ரத்தம், கொலை, காதல், தாய்மை, சகோதரத்துவம், நேசம், மரியாதை, சமச்சீர்யின்மையால் கலந்து இருந்தாலும் இரண்டாம் உலகத்தை விட அழகாகவே இருக்கின்றது என்று சொல்லலாம்… எந்த வெள்ளைக்கார ஆசாமி இந்தப் படத்தை எடுத்திருந்தாலும் நான் இப்படித்தான் சொல்லி இருப்பேன்...

1 comment:

  1. நன்றாக எழுதி உள்ளீர்கள்...

    ReplyDelete