Friday, 13 December 2013

விடியும் முன்:கடந்த ஒரு மாதகாலமாக வேலைப் பளு காரணத்தால் படங்கள் பார்ப்பதும் பதிவுகள் எழுதுவதும் வெகுவாகுவாக குறைந்துவிட்டது.. இடையில் வேலையை சற்றே சரிக்கட்டி ஓரிரண்டு படங்கள் பார்த்தேன். ஆனால் அப்படி ஒரு படம் பார்த்ததே என் நினைவில் இல்லாமல் போகும் அளவுக்கு அந்த திரைப்படங்கள் இருந்தது என் துரதிஷ்டம். அதனால் பதிவு எழுதுவதற்கான தூண்டுதலும் இல்லாமலே இருந்தது.. ஆனால் நேற்று வேலைப் பளு சற்றே குறைந்ததால் “விடியும் முன்” பார்ப்பதற்கான வாய்ப்பு.. ஊடகங்கள் வெகுவாக பாராட்டிக் கொண்டு இருந்தாலும் ஆங்காங்கே ஒரு சிலர் இதனை மலையாளப் படமான “திரா” மற்றும் பிரிட்டிஸ் படமான “ LONDON TO BRIGHTON” ஆகிய இரண்டு படங்களில் ஏதோ ஒன்றின் தழுவல் என்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.. நான் இரண்டையுமே பார்த்ததில்லை என்பதால் “விடியும் முன்” திரைப்படத்தை தழுவல் திரைப்படமாக அணுகவா..? வேண்டாமா…? என்பதில் எனக்கு ஒரு குழப்பம் இருந்தது… ஆனாலும் இது தழுவல் திரைப்படமாக இருக்கின்ற பட்சத்தில், என்ன சொல்லத் தோன்றும் என்றால், “குறை சொல்ல ஒரு காரணம் கிடைத்துவிட்டது, ஒரே ஒரு காரணம் மட்டும் தான் கிடைத்திருக்கிறது” என்பது மட்டுமே. அதுவே இந்தப் படத்தின் வெற்றிக்கு சான்று பகிர்வதாக இருக்கும்..படம் பார்த்ததில் இருந்து பதிவு எழுதும் இந்த நேரம் வரை ஒரு நாள் கடந்து இருக்கிறது… ஆனால் இந்த இடைப்பட்ட ஒரு நாளில் பல இடங்களில் இந்த திரைப்படம் என் ஞாபகத்தை தட்டிக் கொண்டே இருந்தது என்பது உண்மை. இது போன்ற திரைப்படங்கள் பார்த்து உண்மையாகவே வெகுநாட்கள் ஆகிறது.. சமீபத்தில் இது போன்ற மனவெழுச்சியைக் கொடுத்த படங்கள் இரண்டே இரண்டு. “தங்கமீன்கள்” மற்றும் ”ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” ஆனால் இந்த இரண்டிலும் இல்லாத ஏதோ ஒரு விசயம் இந்த திரைப்படத்தை பூர்த்தி செய்து இருக்கிறதோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. மேற்சொன்ன இரு படங்களிலும் ஓரிரு இடங்களில் ஒரு சின்ன செயற்கைத் தன்மையும், கதையை மீறிய ஒரு தொழில்நுட்பமும் கண்ணை உறுத்தும்.. மேலும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்வையாளனை உணர்வு ரீதியாக மீட்ட வேண்டிய தளத்தில் பாதி திரைப்படத்துக்கு மேல் தோற்றிருக்கும்.. தங்கமீன்களோ அதே தளத்தின் யதார்த்த எல்லைகளை சில இடங்களில் மீறி செயற்கை சாயம் பூசி அயர்ச்சியைக் கொடுத்திருக்கும்.. அது தவிர்த்து இயக்குநர்களின் தனித்தன்மையும் ஒரு சின்ன குறையாக ஓரிரு இடங்களில் தென்பட்டு இருக்கும்.. இப்படிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து வந்திருப்பதாலும் இது இயக்குநருக்கு முதல்படம் என்பதாலும் தான் இது போன்ற திரைப்படங்கள் பார்த்து வெகுகாலம் ஆகி விட்டது என்று மேலே கூறினேன்… அதிலும் குறிப்பாக இது போன்ற தமிழ் திரைப்படம் பார்த்ததாய் எனக்கு சற்றும் நினைவில்லை..

கதை முற்றிலும் புதியது என்று சொல்லமுடியாது… ஆங்காங்கே தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போல் இதன் கதைமாந்தர்களை தமிழ் சினிமா பயன்படுத்தி இருக்கிறது. உதாரணமாக வானம் படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரம், ஆறு மெழுகுவர்த்திகள் படத்தில் ஷியாம் காப்பாற்றும் அந்த மாணவியின் கதாபாத்திரம் இப்படி ஒரு சில இடங்களில். இது போன்ற கதாபாத்திரங்களை அதன் உண்மையான வலியோடு, ஆக்ரோசமாக வெளிப்படுத்திய திரைப்படம் என்றால் ”மகாநதி”யைக் கூறலாம். கதைக்களம் ஒன்றாக இருந்தாலும் அது பயணித்த பாதை வேறு. விடியும் முன் பயணிக்கும் பாதை வேறு… இப்படி அவ்வபோது நமக்கு சற்றே பரிச்சியமான ஒரு கதைக்களம் தான். ஆனால் அது பயணிக்கும் பாதைகளின் தடம்தான் அவ்வளவு சுவாரஸ்யமானது… சுவாரஸ்யமானது மட்டுமல்ல உணர்வு ரீதியாக நம்மை மீட்டக்கூடியதும் கூட…ஒரு பாலியல் தொழிலாளி, அந்த தொழில் வட்டத்தின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கும் ஒரு பதின்ம வயது சிறுமி, இவர்கள் இருவரும் எங்கோ….? எதனாலோ…? ஓட எத்தனிக்க… இவர்கள் கடைசியாக சேவை புரிந்து வந்த வாடிக்கையாளரின் மகன் எதனாலோ…..? இவர்களை தேட…? அவர்கள் கிடைக்காத பட்சத்தில் உங்களைக் கொன்றுவிடுவேன் என்று அவர்களை அனுப்பி வைத்த வாடிக்கையாளரை மிரட்ட… அவனும் கொலை வெறியோடு அந்த சிறுமியையும் அந்தப் பெண்ணையும் இன்னோரு கூலிக்காரனுடன் தேட… இதற்கு மத்தியில் அந்த சிறுமியை ஒரு நாள் வாடகைக்கு கொடுத்திருந்தவனும்  இந்த கொலைக் களத்தில் அவர்களோடு சேர்ந்து தேடல் பயணத்தைத் தொடர… தேடிக் கொண்டிருந்த இவர்களுக்கு அந்த சிறுமியும் பெண்ணும் கிடைத்தார்களா…? என்பதை இங்கு என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது… ஆனால் இந்த தேடுதல் படலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நமக்கு என்ன கிடைத்தது என்பதை என்னால் சொல்லமுடியும்… சுவாரஸ்யமான, முகத்தில் அறையும் யதார்த்தத்துடன் கூடிய, கதையென்று நினைத்து கடந்து போக நினைப்பவருக்கு காட்சிப் படலமாகவும், எங்கோ..? எப்போதோ…? நடந்த, நடக்கின்ற, நடக்கப் போகின்ற உண்மைச் சம்பவங்களின் திரட்டு என நம்புபவர்களுக்கு அவ்வாறும் காட்சியளிக்ககூடிய ஒரு மறக்கமுடியாத புதையல் என்றேதான் நான் உங்களுக்குச் சொல்லுவேன்…நம் கண்ணை உறுத்தாத நம் வாழ்க்கையில் சாதாரணமாக நாம் கடந்து வந்த ஒளிச் சிதறல்கள், நாம் நடந்து வந்த அழுக்குப் படிந்த இடங்கள், நாம் பார்த்துப் பழகிய மிக இயல்பான கரடுமுரடான, கனிவான மனிதர்கள் என்று ஒவ்வொன்றும் அத்தனை கச்சிதம். இது போன்ற ஒளியமைப்புகளையும், கதை நடக்கும் இடங்களையும், அற்புதமான கதாபாத்திர தேர்வையும் நான் தமிழ் திரைப்படங்களில் பார்த்ததே இல்லை.. மிகமிக அற்புதமான எடிட்டிங்.. எந்தவொரு காட்சியையும் தேவையில்லாதது என்று நம்மால் நீக்கிவிட முடியாது… ஒவ்வொரு காட்சியிலும் கதை மெதுமெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.. இதுபோக கதையின் சுவாரஸ்ய முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் முறை.. மிகதேர்ந்த நடிப்பு… மிகமிக சுருக்கமான வீரியமான கதை சொல்லும் வசனங்கள், புதுமையான அற்புதமான பிண்ணனி இசை என எல்லாமே அதி அற்புதம்..பாலியல் தொழிலாளியாக பூஜா. இந்தப் படத்தில் நடிப்பதற்காகத்தான் பரதேசி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்தாராம்… படம் பார்த்தப் பின்னர் தோன்றுகிறது… மிகமிக நல்ல காரியம் செய்திருக்கிறார்.. காதலனின் பின் கசிந்துருகி காதலுக்குப் பலியாகி கருவை சுமக்கும் ஒரு வழக்கமான பரதேசிக்கு இந்த மாற்றுக் கதாபாத்திரம் எவ்வளவோ மேல்… அதுவும் சிறுமி மாளவிகா மணிக்குட்டனுடனான ரயில்வே ப்ளாட்பார்ம் வசனத்தின் போதும் சரி, ஓடும் காரிலிருந்து இறங்கி ரோட்டோரமாக அமர்ந்திருக்கும் சிறுமியை சமாதானம் செய்யும் போதும் சரி மிகச்சிறப்பான நடிப்பு.. ”ஏன் அந்தப் பொண்ண தத்தெடுக்கப் போறாரா…?”  என்று விசமத்துடன் சிங்காரத்திடம் வினவும் இடமும், சிறுமிக்காக உயிர்பிச்சைக் கேட்டு அழும் இடத்திலும்…. கண்டிப்பாக பூஜாவுக்கு பேர் சொல்லும் படம் இதுதான். நந்தினியாக வரும் மலையாளச் சிறுமியின் நடிப்பும் க்ளாஸ்.. வெகு அலட்சியமாக பதில் பேசும் அந்த சிறுமியின் நடிப்பும் உடல்மொழியும் மிதமிஞ்சிய பெரிய மனுஷியின் தோரணையை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தாலும், வாழ்க்கையின் கசப்பை சிறு வயதிலேயே ருசித்தவர்களின் நடவடிக்கைகள் அப்படி இருப்பதில் வியப்பேதும் இல்லை.. சின்னையாவாக வரும் வினோத் கிஷன் (நந்தாவில் சூர்யாவின் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்தவர்) அவரது அமைதியும், பேச்சும் கொடூரமும் படத்தின் த்ரில்லருக்கான நுண் தன்மையை மேலும் அதிகமாக்கிவிடுகிறது..புரோக்கராக வரும் அமரேந்திரனுக்கு படத்தில் ஒரு இடத்தில் கதை சொல்லும் இடம் வரும். அற்புதமான இடம்.. அவர் கதை சொல்லி முடிக்கும் முன் அதன் பிண்ணனியில் காட்சிகள் நகர்வதும், அந்தக் கதை ஆரம்பிக்கும் இடமும், முடிக்கும் இடமும் அதைச் சொன்ன முறையும் எனக்கு அத்தனை பிடித்திருந்தது.. அந்த இடத்தை நிறைக்கும் பிண்ணனியிசையும் க்ளாஸ்.. அந்த இடத்தில் வரும் கதைசொல்லும் உத்தி, ஒநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வரும் அந்த கதை சொல்லும் காட்சிக்கு ஈடானது. மேலும் பூஜாவின் கனவில் வந்து மிரட்டும் அந்த உருவங்களும், அந்த நடைப்பாதையும், அங்கு போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டு இருக்கும் கிழவியும் அதி அற்புதமான உருவாக்கம்.. கூலியாளாக புரோக்கர் அமரேந்திரனிடம் சேர்ந்து கொள்ளும் லங்கேஸ்வரனாக வரும் ஜான் விஜய்யின் கதையையும் அவரது குணாதிசயத்தையும் ஒரு இடம், ஒரு சம்பவம், ஒரு வசனத்தால் கடந்து இருப்பது இயக்குநரின் மீதான மரியாதையையும், கலையை கற்றுக் கொள்ள வேண்டிய தாகத்தையும் கூட்டுகிறது.. அதற்கு இன்னும் பல சான்றுகள் படம் நெடுக வருகிறது. துரைசிங்கமாக வரும் மற்றொரு புரோக்கரின் இருப்பிடமும், அவனது தோற்றமும், அவனது அடியாட்கள் பாம்புடன் விளையாடிக் கொண்டு இருக்கும் காட்சியும், ட்ரெயினில் வரும் அந்த சாமியார் கதாபாத்திரமும், கொய்யாப் பழ கிழவியும்… சிங்காரத்தின் உதவியாளாக வரும் இளைஞனும்,…. சின்னய்யாவின் அடியாட்களும்.. இப்படி எத்தனையோ விசயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்..சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவும், கோபாலகிருஷ்ணனின் இசையும் பிண்ணனியிசையும் இப்படி ஒரு படத்துக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியாக கொடுத்திருக்கின்றது.. இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகத்துக்கான மிக நல்ல வரவுகள்.. இயக்குநரோடு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்… படத்தின் முடிவு ஒரு கட்டத்து மேல் யூகிக்கமுடிவது போல் இருக்கிறது என்றாலும் அந்த முடிவுக்கான Cause and effect மிகச் சரியாக இருப்பதால் அந்த முடிவை எந்தவிதமான முனகலும் இன்றி ஏற்றுக்கொள்ள முடிவதுடன்… சராசரி பார்வையாளனையும் அது அதீதமாக கவருவதோடு திருப்திபடுத்தியும் விடுகிறது…

ஆரம்பத்திலேயே படம் பார்வையாளனை உணர்வுரீதியாக தொட்டுவிடுவதும் படத்தின் வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறது… சி க்ளாஸ் ஆடியன்ஸ் என்று சொல்லக்கூடிய பார்வையாளர்களால் மட்டும் பெரும்பாலும் நிரம்பக்கூடிய உதயம் திரையரங்கினிலேயே மிக அமைதியாக கூச்சல் இல்லாமல் திரைப்படத்தை ரசித்த பார்வையாளர்களைப் பார்க்கும் போது படத்தின் வெற்றி புலப்படுவதோடு மனதுக்கும் சந்தோசமாக இருந்தது. பெரும் பொருட்செலவைக் கோராத மிகச் சாதாரணமான இடங்கள், மிகச் சாதாரணமான நடிகர்கள்…. இப்படி எல்லாவற்றையுமே மிகச் சாதாரணமாக வைத்துக் கொண்டு அசாதரணமான வெற்றியைப் பெற்று இருக்கிறது இந்தப் படக்குழு… வாழ்த்துக்கள்…

இந்த திரைப்படம் உங்களுக்கு தெரியாத எதையும் புதிதாக சொல்லிவிடாது… அதே நேரத்தில் உங்களுக்குத் தெரிந்த விசயத்தை மிக மிக சுவாரஸ்யமாக கொஞ்சம் கொஞ்சமாக திரைக்கதை சொல்லிக் கொண்டே இருக்கும்.. அதே நேரத்தில் திரைப்படத்தை ஒரு கலையாகக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த திரைப்படம் எத்தனையோ விசயத்தை ஆழமாக கற்றுக் கொடுக்கும்.. இயக்குநர் பாலாஜி கே.குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்…

No comments:

Post a Comment