Saturday, 7 December 2013

தகராறு:சுப்ரமணியபுரம், கோரிப்பாளையம், தூங்கா நகரம் வரிசையில் மீண்டும் ஒரு மதுரை கதை.. இதுவரை வந்த மதுரை வட்டாரக் கதை சினிமாக்களில் என்னென்ன உண்டோ அது இதிலும் உண்டு.. வெட்டியாக சுற்றிக் கொண்டு இருக்கும் இளைஞர்கள், அவர்களுக்கு இடையே சகோதரத்துவத்தை மிஞ்சக்கூடிய உயிரையும் கொடுக்கக்கூடிய அளவுக்கு ஈடு இணையில்லாத நட்பு, அதில் நாயகனாக வருபவனுக்கு மட்டும் வழக்கம் போல ஒரு காதல், எதிர்பாராத விதமாக இவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளால் முளைக்கும் எதிரிகள் என அத்தனை கட்டுமானங்களும் அச்சரம் பிசகாமல் இதிலும் உண்டு.. ஒரு சின்ன திருத்தம் என்னவென்றால் இவர்கள் வெட்டியாக சுற்றிக் கொண்டு இருப்பவர்கள் இல்லை.. இவர்கள் மதுரை வட்டாரங்களில் பிரபலமாகப் பேசப்படும் பீரோ புல்லிங் திருடர்கள்..வடதமிழக மக்களுக்கு மதுரை என்றாலே அந்த மக்களைப் பற்றிய ஒரு வரைபடம் மனதில் தோன்றும் அளவுக்கு, தமிழ்சினிமா ஒரு மிகையான கற்பனையை கொடுத்து வைத்திருக்கிறது. அந்தக் கற்பனைக்கு உரம் சேர்க்கும் முயற்சியில் இந்த தகராறும் மதுரை மைந்தர்கள் என்றாலே அவர்கள் வெட்டியாகத்தான் சுற்றிக் கொண்டு இருப்பவர்கள், அவர்கள் வாழ்க்கையில் அரிவாள் பிரிக்கமுடியாத ஒரு அங்கம், நட்புக்காக உயிரையும் கொடுப்பார்கள், அவர்களுக்கு அமைதியாக பேசவே தெரியாது, சத்தமும் சவடால் பேச்சும் சலம்பலுமாகத்தான் இருப்பார்கள் என்கின்ற பாணியிலான விசயங்களை அழுத்தமாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு அலங்கோலம் செய்திருக்கிறார்கள்.. குறைந்தபட்சம் அந்த நண்பர்கள் நான்கு பேர் அவர்களுக்கு உதவ ஒரு அல்லக்கை.. என்கின்ற எண்ணிக்கையையாவது மாற்றி வித்தியாசம் காட்டி இருக்கலாம்..நான்கு நண்பர்களில் ஒருவன் கொல்லப்பட.. அவனை கொன்றது யார் என்று கண்டுபிடித்து கொலை செய்ய முயலும் தேடுதல் படலம் தான் திரைக்கதை அம்சம். ஆரம்பத்தில் டைட்டில் கார்ட்டின் அரையிருளில் ஒரு கொலையை காட்டாமல் காட்டி, அந்தக் கொலை நடந்ததற்கான காரணங்களை விவரிக்கும் முன்பகுதியில் நாயகியின் தந்தையான ஜெயப்பிரகாஷுடன் ஏற்பட்ட மோதல், போலீஸ் அதிகாரியுடன் ஏற்பட்ட மோதல், மற்றொரு ரவுடியுடன் ஏற்பட்ட மோதல் என மூன்றுவிதமான சுவாரஸ்யமே இல்லாத முன்கதைகளை வழக்கமான காதல் அத்தியாயங்களுடன் கூறுகின்றனர்.. இரண்டாம் பாதியில் கொன்றது இவர் இல்லை.. இவர் இல்லை என்று ஒவ்வொருவராக கழித்துக் கொண்டே வந்து இறுதியில் இவர்தான் அந்தக் கொலையை செய்தது என்று முடிச்சை அவிழ்க்கும் இடத்தில் அதுவே மிகப்பெரிய சுவாரஸ்யமாக படத்தை தாங்கி நிற்கும் என்று நினைத்திருப்பார்கள் போலும்…

மெளனகுரு மாதிரியான படங்களில் நடித்துவிட்டு இது போன்ற கதைகளை அருள்நிதி எப்படி தேர்ந்தெடுத்தார் என்றே தெரியவில்லை.. மெளனகுருவில் அண்டர்ப்ளே ஆக்டிங்கில் ஸ்கோர் செய்திருந்தவர்.. இதில் அரைகுறை இங்கிலீஷ் பேசி காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டு நம்மை சாகடிக்கிறார்… ஸ்கீரினில் எல்லா நேரமும் கத்திக் கொண்டே வலம் வரும் கதாபாத்திரங்களைப் பார்க்கும் போது, தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்பதையும் மறந்துபோய் ம்யூட் பட்டனை விரல்கள் தேடுகிறது…


சில ஆசாமிகள் பூர்ணா சூப்பராக நடித்திருக்கிறார் என்று சொன்னார்கள் என்றால் நம்பி விடாதீர்கள்.. அவர்களுக்கு நடிப்பு என்பதே என்னவென்று தெரியவில்லை என்று அர்த்தம்.. வழக்கமான பாணியில் காரிய காரணமின்றி ஒரு பீரோ புல்லிங்க் திருடனை குலைந்து குலைந்து காதலிப்பதையும், தன் காதலுக்காக என்னவேண்டுமானாலும் செய்யும் மிஸ்மெரிச நிலையில் இருப்பதையும் தாண்டி இவர் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை… அந்த க்ளைமாக்ஸ் காட்சிகளில் அவரது நடிப்பு என்று என்னைக் நீங்கள் கேட்டீர்கள் என்றால்… ஸாரி… நோ கமெண்ட்ஸ்…


எனக்குப் படத்தில் பிடித்தது என்னவென்றால் அருள்நிதியும் பூர்ணாவும் ஆரம்பத்தில் சந்தித்துக் கொள்ளும் இடமும், இறுதியில் சந்தித்துக் கொள்ளும் இடத்திற்குமான அந்த இணைப்பு ஒன்று மட்டும் தான்… அது ரசனையாகவே இருந்தது.. அதற்குள்ளாகவே ஒரு கதை பூடகமாக ஒளிந்திருக்கிறது.. அதையே மையப்படுத்தி திரைக்கதை செய்திருந்தால் கூட.. படம் சிறப்பாக வந்திருக்கும் என்பது என் எண்ணம்…

காதலாகட்டும், நட்பாகட்டும், விரோதமாகட்டும் அது கொடுக்கவேண்டிய நம்பகத்தன்மையை கொடுக்காத வீரியமற்ற காட்சிகளும், மலிவான கற்பனைகளும்தான் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய மைனஸ்… மேலும் ஏற்கனவே பல தமிழ் மதுரை சினிமாக்களில் அடித்து துவைத்த கதையை வெறும் க்ளைமாக்ஸை மட்டும் நம்பி படம் எடுத்திருப்பது ஒரு மிகச்சிறிய மைனஸ்.. மேலும் திரைக்கதையின் பாணியில் இவராக இருக்குமா..? இவராக இருக்குமா..? என்று ஒவ்வொருவரிடம் நகர்த்திச் செல்லும் பாணியில் சிறிது சுவாரஸ்யம் இருந்தாலும்.. பெரும்பாலான ஆடியன்ஸ்கள் எந்தவித பரபரப்போ எதிர்பார்ப்போ இல்லாமல், யாரா இருந்தா நமக்கென்ன என்கின்ற மனநிலையில் தான் அமர்ந்திருந்தனர். இதற்கும் காரணம் அந்த மிகப்பெரிய மைனஸ் தான்.. இதே பாணியில் வந்த கோரிப்பாளையம் இதை விட சிறப்பாக இருந்ததாக நினைவு..

பாவம் ஜெயப்பிரகாஷ்.. நன்கு நடிக்கத் தெரிந்த மனிதர்.. அவரையும் காட்டுக் கத்தல் கத்தவிட்டு.. சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டே அலைய விட்டிருக்கிறார்கள்… கொஞ்சம் கூட பொருத்தமில்லாத தேர்வு.. படமே இந்த நிலையில் இருக்கும் போது அது சார்ந்த தொழில்நுட்ப விசயங்களில் கவனம் செல்லவே இல்லை.. கதாபாத்திரங்களின் இரைச்சல் போதாதென்று ஆங்காங்கே தமனும் பிண்ணனி இசை என்ற பெயரில் நம் காதை குத்தகைக்கு எடுத்து கபடி ஆடுகிறார்.. ஒரே வலி…

இயக்குநர் கணேஷ் விநாயக்கு இது முதல்படம்.. கண்டிப்பாக இவர் மதுரைக்காரராக இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்… மதுரை பிண்ணனியில் கதை சொன்னால் ஹிட்டடிக்கலாம் என்று நினைத்தாரா எனத் தெரியவில்லை.. ஆனால் அவரது எதிர்பார்ப்பு கைகூடவில்லை… ஆக…. தகராறு பெரிதாய் சொல்வதற்கு ஒன்றும் இல்லை… அருள்நிதி, கணேஷ் விநாயக் உங்கள் இருவருக்குமே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்…


No comments:

Post a Comment