Friday 20 December 2013

பிரியாணி:



வெங்கட் பிரபுவின் படங்களில் எனக்கு சென்னை 28ம், சரோஜாவும் பிடிக்கும். ஆனால் கோவாவைப் பார்த்தப் பிறகுதான் எனக்கு ஒரு விசயம் புலப்பட்டது.. அந்த மூன்று படங்களுமே அவரது வாழ்க்கையில் நடந்த, அல்லது நடந்திருக்கலாம் என்று சந்தேகம் கொள்வதற்கு ஏதுவான ஏதோ ஒரு சம்பவத்தின் பிண்ணனியிலேயே பின்னப்பட்டு இருக்கும். அதில் தவறொன்றும் இல்லை.. இயக்குநர் பாலுமகேந்திரா அடிக்கடி சொல்லுவது போல் ”வாழ்க்கையில் இருந்து ரத்தமும் சதையுமாக ஒரு கதையை எடுத்து வைக்கும் போதுதான் அதுவொரு மிகச்சிறந்த கலைப்படைப்பாக பரிமளிக்க முடியும்…” உண்மைதான். ஆனால், வெங்கட்பிரபுவின் படங்களையும் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்ட படங்களாக நாம் அணுக முற்படும் போது, அது ஏன் ஒரு கலைப்படைப்பாக பரிமளிக்கவில்லை என்பதற்கான காரணத்தையும் கண்டிப்பாக நாம் கூறவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது…



அதுயென்ன ”ரத்தமும் சதையுமாக…” இந்த வார்த்தை தொடர்பான எனது புரிதல் இப்படித்தான் இருக்கிறது.. இந்த உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் இடையேயான பொதுவான ஒற்றுமை இந்த ரத்தமும் சதையும் தான்… இந்த வார்த்தை அப்படி எல்லா மக்களின் (அல்லது பெரும்பாலான மக்களின்) வாழ்க்கையிலும் ஒத்துப் போகிற உணர்வுகளைக் குறிக்கிறது.. ரத்தமும் சதையுமாக எடுத்துவைப்பது என்பது அதன் யதார்த்தத்தையும் தத்ரூபத்தையும் குறிக்கிறது… இவைகள் ஒருசேர அமையும் போது அது கலைப்படைப்பாக, ஒரு குறிப்பிட்ட கால வாழ்க்கையின் ஆவணமாக மாறுகிறது…

இப்படியிருக்க… வெங்கட்பிரபு தனது வாழ்க்கையில் இருந்து எடுத்து வைத்தவை யாவும் ரத்தமும் சதையுமான எல்லோருக்குமான பொதுவான உணர்வுகள் இல்லை.. அவை அங்க ஆபரணங்கள்… ஆரம்பத்தில் அதனால் பெரிய பாதகம் இல்லை… ஆம் அது எல்லோர் கையிலும் இருந்த சாமிகயிறு போல.. சென்னை 28ல் இருந்தது.. “கிரிக்கெட் விளையாடுவதை தொழிலாகக் கொண்ட ஒரு இளைஞர் பட்டாளம், அந்த நண்பர் கூட்டத்துக்கு இடையேயான காதல் மோதல், சிறுபிள்ளைகளுடன் மோதி தோற்றுப் போன அவமானம் என… “ அது பெரும்பாலானவர்களின் கையில் இருந்த சாமிக்கயிறு.. ஆனால் சரோஜாவோ கிரிக்கெட் பார்ப்பதற்காக ஊரில் இருந்து காரில் கிளம்பிச் செல்லும் ஒரு இளைஞர் பட்டாளம்.. ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்வது… ஆனால் இதுவும் மீண்டும் கிரிக்கெட் என்கின்ற ஒரு தேசியபுள்ளியில் இயங்கியதால்… இதை ஒரு தங்கக் காப்பு என்னும் ஆபரணமாகக் கொள்ளலாம்.. பத்தில் இரண்டு பேருக்குப் பரிச்சயம்.. ஆனால் ”கோவா..”வோ ஒரு வைரமோதிரம் போன்றது.. வீட்டில் இருந்து பணத்தை திருடிக் கொண்டு கோவாவுக்குச் சென்று, அங்கு இளம் பெண்களை கரெக்ட் செய்து கல்யானம் செய்து கொள்ளத் துணியும் இளைஞர்களின் கதை… அதனால்தான் இதை வைரமோதிரம் என்று சொன்னேன்… நூறு பேர் எடுத்தால் ஒருவன் கூட இருக்கமாட்டான்… ஆயிரத்தில் ஒருவன் கிடைக்கலாம்.. இப்படித்தான் வெங்கட் பிரபு வாழ்க்கையில் இருந்து எடுத்த அல்லது எடுத்திருக்கலாம் என நினைக்கின்ற கதைகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக சாமானியமக்களிடம் இருந்து விலகி படத்துக்கும் பார்வையாளனுக்குமான இடைவெளியை அதிகரித்தது.. மேலும் அவரது படங்களில் வணிக சினிமாவின் கச்சாப் பொருட்களான.. கதை சொல்லும் முறையில் சின்ன புதுமையோ, திரைக்கதையில் எந்தவிதமான சுவாரஸ்ய முரண்களோ கூட பெரிதாக இருக்காது… (ச-ரோ-ஜா தவிர்த்து)..

மேற்சொன்ன காரணங்களால் என்னை அறியாமலேயே எனக்கு வெங்கட் பிரபு படங்கள் மீது ஒரு அலர்ஜியும் அவர்மீது ஒரு அவநம்பிக்கையும் ஏற்பட்டது… ஆனால்… மங்காத்தாவின் மேக்கிங்கும், அதிலிருந்த சின்ன சின்ன திரைக்கதை நுணுக்கங்களும் அந்த அவநம்பிக்கையை கொஞ்சம் மாற்றின… இப்போது வந்திருக்கும் பிரியாணியைப் பார்க்கும் போது கடந்த இரண்டு படங்களில் இயக்குநர் தன் வாழ்க்கை வட்டத்தின் அங்க ஆபரணங்களை கடை விரிப்பதை விட்டு வெளிவந்து, ஒரு வணிகவெற்றிக்கான கதைசொல்லியாக தன்னை வளர்த்திருக்கிறார் என்று நம்பிக்கையோடு சொல்லத் தோன்றுகிறது…

பிரியாணி தின்றால் என்ன பிரச்சனை வரும்.. மிஞ்சி மிஞ்சிப் போனால் வயிற்றுப் பிரச்சனை வரும்… ஆனால் ஒருவனுக்கு வாழ்க்கையே பிரச்சனையாகிப் போனால்… அதுதான் வெங்கட் பிரபுவின் டயட் “பிரியாணி”. எதற்காக பிரியாணி திங்கச் சென்றார்கள் என்கின்ற உப்புசப்பு இல்லாத லாஜிக்கை விட்டுவிட்டு.. பிரியாணி தின்றுவிட்டு இன்னொரு லெக்பீஸ்க்கு ஆசைப்பட்டு அவர்கள் செல்கின்ற இடத்தில் தான் சப்புக் கொட்டவைக்கும் சுவாரஸ்ய முரண்கள் இருக்கின்றன…

சுகனாக ப்ளேபாய் கேரக்டருக்கு கார்த்தி நன்றாகவே பொருந்துகிறார்… மெயின் டிஸ்சாக லட்டு மாதிரி ஹன்சிகா இருக்கும் போதே.. சை டிஸ்சாக பூந்தி தேடி அலையும் கேரக்டர்… சோ-ரூமுக்கு ரிசெப்சனிஸ்டாக வந்த பெண்களை மடக்க பிரேம்ஜிக்கு க்ளாஸ் எடுக்கும் போதும், வரதராஜனாக வரும் நாசரை பேட்டி எடுக்கும் போதும், தன் எதிரேயே அக்காவை யாரோ கடத்திக் கொண்டு செல்லும் போதும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் கார்த்தி. ஆனால் மொத்தக் கதைக்கும் ஆணிவேரான அந்த ஹோட்டல் அறையில் கொலை நடந்திருக்கலாம் என்பதை அறிந்து அங்கிருந்து வெளியே செல்ல முயலும் போதும்.. பிணத்தைப் பார்த்துவிட்டு புலம்பும் காட்சியிலும் இருக்க வேண்டிய பதட்டம் சுத்தமாய் மிஸ்சிங்… அதிலும் கையில் பிணத்தை வைத்துக் கொண்டு இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து அடுத்து என்ன நடக்கும் என்று யோசிப்பதான கற்பனை காட்சிகளெல்லாம் ரொம்பவே செயற்கைத்தனம்.. இருப்பினும் இது கண்டிப்பாக கார்த்திக்கு பல தோல்விப் படங்களுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் படி அமைந்திருக்கும் ஒரு படம்…



வெறுப்பேற்றும் ஒரேமாதிரியான டெம்ப்ளேட் காமெடிகள் இல்லாமல் பிரேம்ஜி.. அதுவே மிகப்பெரிய ஆறுதல்.. மேலும் டைகர் வேஷம் போட்டு ஆடும் போதும், எம்.டியின் பெண்களை பிக்-அப் செய்ய ஏர்போர்ட்டுக்குச் சென்று பல்பு வாங்கித் திரும்பும் போதும், ”அவனுக்கு எந்த வண்டி புடிச்சா என்னங்க… எப்புடியும் அதையும் நாந்தான ஓட்டப் போறேன்… அவனுக்குத்தா கார் ஓட்டத் தெரியாதே…” என்று கார்த்தி கிண்டல் செய்யும் போதும், கார்த்தி செய்த தப்புக்காக ஹன்ஸிடம் மாட்டிக் கொண்டு பளார் என்று அறை வாங்கும் போதும் உண்மையாகவே சிரிக்க வைக்கிறார்… 

ஹன்சிகாவுக்கு வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம்… இதிலும் காதலனுடன் சண்டை போடுவதும், சாந்தமாகிப் போய் டூயட் பாடுவதும், ஆங்காங்கே அழகு காட்டுவதும் தான் அவரது ஆகச்சிறந்த பணி. செவ்வனே செய்திருக்கிறார்..



படத்திற்கு திரைக்கதை மிகப்பெரிய பலம்..  நடந்த விசயங்களை கார்த்தி ஹன்ஸிடம் சொல்லும் போது ப்ளாஸ்பேக்காக விரியும் காட்சிகளை ரசிக்க முடிகிறது.. பத்து நிமிடமே வந்து செல்லும் கேரக்டராக இருந்தாலும் உமா ரியாஸின் கதாபாத்திரம் படத்தின் திரைக்கதைக்கு வலுசேர்க்கிறது.. என்னைப் பொறுத்தவரை க்ளைமாக்ஸைவிட ஃப்ரீ க்ளைமாக்ஸ் புதிதாகவும் யதார்த்தமாகவும், நம்பகத்தன்மையோடும் இருந்தது.. சில விசயங்களை மட்டும் மாற்றி அதை அப்படியே விட்டு இருக்கலாம்.. க்ளைமாக்ஸாக வரும் விசயங்களும், சண்டைகளும் அயற்சியை ஏற்படுத்துவதோடு, பல குழப்பமான கேள்விகளையும் ஏற்படுத்துகிறது… 

பிரியாணியில் லெக் பீஸ், குஸ்கா, சுக்கு, ஏலக்காய், கிராம்பு, இலவங்கம் பட்டை, சீரகம், மிளகு இப்படி என்ன அயிட்டங்கள் இருக்குமோ… அதை விட அதிகமான நட்சத்திரப் பட்டாளம்.. நாசர், சுப்பு பஞ்சு, ராம்கி, சம்பத், ஜெயப்பிரகாஷ், பிரேம், நிதின் சத்யா, உமா ரியாஸ், மாண்டி தாகர், மதுமிதா, அரவிந்த் ஆகாஷ் என இன்னும் நிறைய நபர்கள்.. 



யுவனுக்கு இது 100வது படம்… பாடல்களிலும் சரி… பிண்ணனி இசையிலும் சரி… யுவனுக்கே உரித்தான அந்த ட்ரேட் மார்க் மிஸ்சிங்…. சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் மென்மை காட்சிகளை விட சண்டைக் காட்சிகளின் ரம்மியமாக இருக்கிறது… குறைகள் என்று பார்த்தால் வழக்கம் போல லாஜிக்கள் குறைகள் தான்… ஏகப்பட்ட குறைகள் இருக்கின்றன.. சிசிடிவி போட்டோ புட்டேஜ் அழிக்கப்பட்டதை எப்படி போலீஸ் கண்டுபிடிக்காமல் இருக்கும்..? அதைப் பற்றி எந்தக் கேள்வியும் எழாதா..? ஆரம்பத்தில் இருந்தே பிணத்தை பாதுகாப்பது பின்கதை தெரிந்ததால் தானா…? இப்படி எத்தனையோ கேள்விகள் கேட்கலாம்..

ஆனால் இப்படி ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளுடன்… லெக்பீஸ் இல்லாத பிரியாணியாகவே இருந்தாலும்.. சாப்பிடும் போது லெக்பீஸைப் பற்றி யோசிக்கவே விடாத படி சுவாரஸ்ய அடுக்குகள் பல இருப்பதால், இது போன்ற குறைகள் உங்கள் நினைவுக்கு வரவே வராது என்பது தான்.. இந்த பிரியாணியின் வெற்றி… நம்பிச் செல்லலாம்… உபாதைகள் இருக்காது என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்…

2 comments:

  1. நல்ல அழமான விமர்சனம்....
    வெங்கட் பிரபுவின் படங்கள் பற்றிய எனது பார்வை. யதார்த்தத்தையும் தத்ரூபத்தையும் விளிம்புநிலை மனிதர்களிடம் மட்டுமே காண முடியும் என்கிற எண்ணம் உடைய பாலா, ஆமீர் போன்ற படைப்பாளிகளிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் வெங்கட் பிரபு...
    யதார்த்தத்தை தமிழகத்தின் மெஜாரிட்டியான் மிடில் கிளாஸ் மக்களிடமும் காண முடியும் என்று தன் படங்களில் முலம் நிருபித்து காட்டியவர். சென்னை - 28 வெற்றி சூட்சமம் அதில் தான் அடங்கி இருக்கிறது. கல்லி கிரிக்கெட் விளையாடாத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் நம்ம பக்கத்து வீட்டு பசங்கள் போல் இருப்பார்கள். சரோஜா "Judgment Night" என்கிற படத்தின் அப்பட்ட காப்பி என்றாலும் அதையும் ரசிக்கும் படி குடுத்து இருந்தார். கோவா தான் அவர் சறுக்கிய படம். தமிழ்நாட்டுக்கு அதிகம் பரிச்சியம் இல்லாத கோவா மற்றும் கே வாழ்கை. மங்காத்தா அட்டகாசமான திரைக்கதை...

    பிரியாணியிலும் வெங்கட் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது...உங்கள் விமர்சனமும் அதையே உறுதி படுத்துகிறது.. :-)

    ReplyDelete
  2. it’s my own opinion. many scenes are irritating me.
    1. how come they laugh and irritate big and specs girls? will they accept same kind of insult to his family member? how come they create that scene? how they are justifying?
    2. is this definition of playboy? roam and share bed with others is ok. why play boy commit one girl in the name of love? and then passing words no safety for girls in this country?
    3.about friendship – this guys not backing up others in any situation. they proposed to friends lover i couldn’t understand this culture.
    4. one dialogue: audience (we) are waiting for item song. Venkat prabhu sir that was 1990 adult contents were limited and not accessible. Now more than this songs and variety are available in the internet. don’t insult us please.

    ReplyDelete