Saturday 14 December 2013

இவன் வேற மாதிரி:



”எங்கேயும் எப்போதும்” தந்த இயக்குநர் சரவணனின் இரண்டாவது படம்.. எங்கேயும் எப்போதும் எனக்குப் பிடித்திருந்தது.. அதில் வரும் இரண்டு காதல் எபிசோடுகளும் மயிலிறகால் வருடிய ஒரு உணர்வை கொடுக்கக்கூடியவை.. அதுமட்டுமின்றி அந்த வெகு யதார்த்தமான காதலையும் தாண்டி ஒரு வலியையும் சுமந்து கொண்டு, ஒரு கண நேரமேனும் சமூக பொறுப்புள்ள ஒரு பிரஜையாக பார்வையாளனை அனுப்பி வைப்பது போல் அத்திரைப்படம் முடிவடையும்.. அதனாலேயே, எங்கேயும் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது… அத்திரைப்படம் இயக்குநர் சரவணன் மீது ஒரு மரியாதையையும் ஏற்படுத்தியது..



ஆனால் “இவன் வேற மாதிரி” திரைப்படம் வேறு மாதிரியாக இருக்கிறது.. இப்போதும் இயக்குநர் சரவணன் மீது இருக்கின்ற மரியாதை குறைந்துவிட்டதாக சொல்லவில்லை.. அது அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருந்தது.. ஆனால் அவர் அதை கோட்டை விட்டு விட்டார் என்றே சொல்ல வருகிறேன்…

கதைக்களம் என்று பார்த்தால், எங்கேயும் எப்போதுமை விட கனமான கதைக்களம் தான்… ஆனால் இந்த கனமான கதைக் களத்தில் ஏற்கனவே சாமுராய், இந்தியன், அந்நியன் மற்றும் ரமணா…. ஏன்..? ஆயுத எழுத்து கூட எழுதிவிட்டார்கள்… இதனால் அந்தக் கதைக்களமும் மிகப்பெரிய சுவாரஸ்யத்தைக் கொடுக்காமல் சலிப்பையே கொடுக்கிறது… சரி திரைக்கதையிலோ அல்லது யதார்த்தவியலிலோ ஏதேனும் புதுமை செய்திருப்பார்கள் என்று பொறுமையாக காத்திருந்தால், கடைசியில் அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது…

கதை இதுதான்.. ஒரு சட்டத்துறை அமைச்சர்.. தன் சொல்படி ஆடாத சட்டக்கல்லூரி இயக்குநரைப் பழிவாங்க…!!??? சட்டக்கல்லூரியில் பிரச்சனையை தூண்டிவிடுகிறார்.. அதில் மூன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் இறந்தும் விடுகிறார்கள்.. இந்த சட்டக்கல்லூரி அமைச்சர், அமைச்சராக வருவதற்கு மிகமுக்கிய காரணம் அவரது தம்பி.. இப்போது ஹீரோ தனி ஆளாக நின்று அமைச்சரையும் அவரது தம்பியையும் தண்டிக்கும் காரியத்தையும் பார்த்துக் கொண்டு எப்படி ஓவர்டைம் டியூட்டியாக காதலிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது மீதிக்கதை..



படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் சட்டக்கல்லூரி பிரச்சனை, தமிழகத்தில் உண்மையாக நடந்தபோது அரசியலுக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத சாதாரண ஏழை எளிய மக்களை எந்தளவுக்கு அதிர்ச்சிக்கு உள்ளாக்கி ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து வசைபாடச் செய்தது என்பது எல்லோரும் அறிந்ததே… ஆனால் அதே காட்சிகள் அச்சு அசலாக அதே தோரணையுடன் இங்கு வெண் திரையில் விரியும் போது.. நம்மில் ஒரு சிறு அதிர்வைக் கூட ஏற்படுத்தாமல்… இதை வைத்து படம் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தையே மேலெழச் செய்து, சிரிப்பை வரவழைப்பது மிகப்பெரிய சோகம். அந்த ஆரம்பப் புள்ளியிலேயே திரைப்படம் எதார்த்தம் என்ற புள்ளியிலிருந்து விலகிவிடுகிறது..

மேலும் சட்டக்கல்லூரியில் எதனால் கலவரம் வந்தது என்பது பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தாலும் பேசுவதற்கு தயங்கும் ஒரு காரணமாக இருப்பதால், அதை அப்படியே கூட வைக்க வேண்டாம்.. கொஞ்சமாவது ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நம்பத்தகுந்த வேறு ஏதேனும் ஒரு காரணத்தை கூறி இருக்கலாம்.. அப்படி கூறாமல் இருந்ததுவொரு மைனஸ்… ஏது இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டவன் தான் ஹீரோ என்றோ அல்லது இந்த கலவரத்தில் இறந்த ஒருவனின் நண்பன் தான் ஹீரோ என்றோ வைத்துக் கொண்டு பயணித்தால் பல பழைய தமிழ்படங்களின் சாயல் வந்துவிடுமோ என்கின்ற அச்சத்தில் அதுபோன்ற விகாரங்களை தவிர்த்திருக்கின்றனர்… நல்லதுதான்…

ஆனால் அதை தவிர்க்கும் போது, பார்வையாளனால் படத்தோடு அகப்பூர்வமாக ஒன்றமுடியாமல் படத்துக்கும் பார்வையாளனுக்கும் இடையே ஒரு இடைவெளி தோன்றும்.. அந்த இடைவெளியை இட்டு நிரப்பும் கச்சாப் பொருட்களான… நாயகனின் குணாதிசயம் சார்ந்த ஏதோ ஒரு பின்புலமோ (உதாரணமாய் அந்நியனில் இருந்ததைப் போல்) அல்லது வேறு ஏதேனும் அகவியல் காரணியோ (ரமணாவில் இருந்ததைப் போல்) இருந்திருக்க வேண்டும்… அப்படி இல்லாமல் போனது மற்றொரு மைனஸ்…

அமைச்சரின் மகனைக் கடத்துவதற்கு திட்டமெல்லாம் போட வேண்டாம் பெட்டிக் கடை போட்டால் போதும் என்பது சூது கவ்வும் மாதிரியான காமெடிப் படங்களுக்கு ஓகே… ஏனென்றால் அதைப் பார்த்து சிரிக்கத்தான் போகிறோம்.. ஆனால் இதுபோன்ற ஆக்சன் பேக்கேஸ் படங்களில் இது போன்ற காட்சிகள் பிரத்யேகமான முறையில் பேசப்படுவது போல் அமைந்திருக்க வேண்டும்… அப்படி இல்லாமல் ஒரு மிகச்சாதாரண முறையில் தான் இங்கும் கடத்தல் காட்சிகள் அரங்கேறுகிறது… இப்படி ஆக்சன் பேக்கேஜ் முழுவதும் ஏகப்பட்ட மைனஸ்கள்…. இது தவிர்த்துஆங்காங்கே பல லாஜிக் கேள்விகள் வேறு இடித்துக் கொண்டே இருக்கின்றன.. மேலும் படத்தின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக அமையும் அந்த அக்கவுண்ட் நம்பரை போனில் சொல்லும் காட்சியையெல்லாம் பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாமே என்று தோன்றுகிறது.. இது போதாதென்று “பேசுறவ செய்யமாட்டா… செய்றவன் பேசமாட்டா…” என்று சாமுராய் கால பழைய வசனங்களை வேறு பேசி சில இடங்களில் நம்மை வெறுப்பேற்றுகிறார்கள்..


இப்படி மைனஸே சொல்லிக் கொண்டிருக்கிறாயே.. படத்தில் ப்ளஸே இல்லையா..? என்று கேட்டீர்களானால்…? அதுவும் இருக்கிறது என்றே சொல்லுவேன்… அது என்னவென்றால் இயக்குநர் சரவணனின் பலமான அவரது ட்ரேட் மார்க் “காதல் எபிசோட்…” இதிலும் காதல் எபிசோடுகள் இயக்குநரின் கைவண்ணத்தில் மிளிருகிறது… சுரபிக்கும் விக்ரம் பிரபுவுக்குமான அந்த முதல் சந்திப்பும் அதனால் ஏற்படும் தொடர்பும் சூப்பர்.. அந்த ஒரு நாள் வேலைக்கு சம்பளமாக வலையைப் போட்டு மீனை அள்ளும் நாயகனின் செயல் அட..!! என ஆச்சரியப்பட வைப்பதோடு… அந்த மீனைக் கொண்டே அடுத்த காட்சியில் காதலுக்கு இயக்குநர் போட்ட தூண்டிலும் அட்டகாசம்…

அந்த மீனை வீட்டுக்கு எடுத்துச்சென்று சுரபி படும்பாடு ரசனையானது… ஆனால் அந்தக்காட்சி ஒரு ஹைக்கூ போல இருக்கும் போது ரசிக்க முடிந்த என்னால்… மரபுக்கவிதை நீளத்துக்கு அந்த மீன் ரோடு, ஆட்டோ என்று பயணிக்கும் போது ஏற்படும் வறட்சியால் பிறகு ரசிக்கமுடியாமல் போய்விட்டது… இப்படி காதல் காட்சிகளிலும் சில காட்சிகளில் மிக நன்றாக ஆரம்பித்து மிக மோசமாக முடிந்தது…. அப்படி முடிந்த காட்சிகள் எல்லாமே யதார்த்த எல்லைகளை மீறி சினிமாத்தனமாக இருந்ததும் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம்..

நாயகன் விக்ரம் பிரபு வெகு சீக்கிரமே இது போன்ற ஹீரோயிச சப்ஜெக்டை தேர்வு செய்தது எனக்கு ஒரு குறையாகவே படுகிறது… அந்த கதாபாத்திரத்துக்கு அவர் படுகச்சிதமாக பொருந்தாவிட்டாலும்.. அவரால் என்ன முடியுமோ… அதை செய்திருக்கிறார்… படத்திற்கு நாயகி சுரபி மிகப்பெரிய ப்ளஸ்… அந்த வசீகரிக்கும் முக அழகும், அந்த கண்களும் காதல் காட்சிகளை இன்னும் அழகாக்குகின்றன… ஓரளவுக்கு நடிக்கவும் செய்திருக்கிறார்… ஆனால் க்ளைமாக்ஸில் இவர் பேசும் வசனங்களும் சரி, இவரைப் பார்க்காமல் விக்ரம் பிரபு புலம்பிக் கொண்டே பேசிச் செல்லும் வசனமும் சரி படுசெயற்கைத்தனம்…


எங்கேயும் எப்போதுமில் ஆக்சிடெண்ட் சீனில் மேக்கிங்கில் மிரட்டிய இயக்குநர்.. இதில் சண்டைக்காட்சிகளின் மேக்கிங்கில் உண்மையாகவே மிரட்டி இருக்கிறார்… தத்ரூபமாக இருக்கிறது.. அற்புதமான மேக்கி்ங்… சத்யாவின் பாடல்களை விட பிண்ணனி இசை சிறப்பாக இருந்தது… அந்த மீனைக் கொண்டு செல்லும் போது வருகின்ற பாடல் கதையில் பெரிய இடையூறாக இருந்தாலும்.. தனிப்பட்ட பாடலாக எனக்கு பிடித்தே இருந்தது…. மேலும் அது எங்கேயும் எப்போதுமில் அனன்யா போர்சனில் வரும் “சென்னையில் புதுப் பொண்ணு….” பாடலை நினைவுபடுத்துவதாகவும் அமைந்தது…

மொத்தத்தில் இந்த ”இவன் வேற மாதிரி” வேற மாதிரில்லாம் இல்லை.. வழக்கமான தமிழ் சினிமா ஹீரோ மாதிரியே தான்.. முதல்படத்தில் மென்மையான காதல்கதையில் கூட ஒரு வலியை உணரச் செய்த… இயக்குநர் சரவணனால், வலி நிறைந்த ஒரு கதைத்தளத்தில் மென்மையான ஒரு வலியைக் கூட உணரச் செய்யாமல் சிரிக்க வைத்தது என்னைப் பொறுத்த வரை ஒருவிதத்தில் தோல்விதான்.. ஆனாலும் அவரது பிரத்யேக பலமான காதல் எபிசோடுகளும், ஒரு நல்ல விசயத்தை பார்வையாளனுக்குச் சொல்ல வேண்டும் என்கின்ற உயரிய எண்ணமும், அவருக்கு இருக்கும் சமூகத்தின் மீதான அக்கறையும் சேர்ந்து இந்த திரைப்படத்தை ஒருமுறையாவது பார்ப்பதற்கு தகுதியுடையதாக மாற்றிவிடுகிறது….

6 comments:

  1. மிக நேர்த்தியான பார்வை..படம் பார்க்கும் போது எனக்கு நீங்க எழுதி இருப்பது தான் தோன்றியது,,

    ReplyDelete
  2. மிக்க நன்றி... உங்கள் சினிமா சினிமா... காமெடி கும்மி இரண்டிலும் சில பதிவுகளை படித்தேன்... நன்றாக எழுதியிருந்தீர்கள்... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சின்ன வேண்டுகோள்:
    முடிந்தால் comment எழுதும் முன்பு வரும் "Word verification" னை நீக்கி விடவும்...
    Steps to remove it:
    Blogger --> Settings --> Posts and comments --> Show word verification --> Change to "No"...
    Happy Blogging.. :-)

    ReplyDelete
    Replies
    1. word verification நீக்கப்பட்டது... எனது கவனத்துக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி....

      Delete
  4. நீங்கள் நன்றாக எழுதுவதால் இதை சொல்கிறேன்....விருப்பம் இருந்தால் உங்கள் பதிவுகளை சில திரட்டிகளில் இணைக்கவும்...அதிக பார்வையாளர்களை பெற்று தரும்...
    1) http://tamilmanam.net/
    2) http://ta.indli.net/
    3) http://www.tamil10.com/
    4) http://www.tamilveli.com/v2.0/index.html

    தமிழ்மணம் தவிர்த்து மற்ற திரட்டிகளில் இணைப்பது எளிது...

    தமிழ்மணத்தில் இணைக்கும் முறை:


    இந்த லிங்க்ல போய் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடுங்க.

    http://www.tamilmanam.net/user_blog_submission.php

    அதுக்கு முன்னாடி கீழ இருக்கிற லிங்க்ல தமிழ்மணம் Username ஒன்னு கிரீயேட் பண்ணிடுங்க.

    http://www.tamilmanam.net/login/register.php

    உங்களுக்கு தமிழ்மணம் சார்பாக ஒரு மெயில் வரும், அது வந்த அப்புறம் உங்க பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விடலாம்.

    பதிவை இணைக்க http://www.tamilmanam.net/index.html லிங்க் போய் "இடுகைகளைப் புதுப்பிக்க" என்கிற பெட்டியில உங்க blog அட்ரஸ் குடுத்தா போதும்.

    பி.கு: தற்சமயம் தமிழ்மணத்தில் புதிய யூசரஸ் ஏற்று கொள்ள படுவது இல்ல...முயற்சி செய்து பார்க்கவும்... :-)

    ReplyDelete
    Replies
    1. மிகவும் பயனுள்ள தகவல்... நான் முயற்சித்துப் பார்க்கிறேன்....

      Delete