Tuesday, 1 July 2014

சைவம்:

இயக்குநர் விஜய்யின் தயாரிப்பிலும் இயக்கத்திலும் வந்திருக்கும் திரைப்படம்.. படத்தின் தலைப்பு மற்றும் அதன் போஸ்டர் டிசைனிங் இரண்டையும் கொண்டே பலரும் மொத்தக் கதையையும் யூகித்து இருந்தனர்.. அதற்கு கொஞ்சம் கூட ஏமாற்றம் வைக்காமல் நாம் என்ன நினைத்தோமோ அப்படியே இருக்கிறது இந்தத் திரைப்படம்… ஆர்யா, விக்ரம், விஜய் என மாஸ் ஹீரோக்களை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த இயக்குநர் விஜய், இந்தத் திரைப்படத்தை தொடங்கும் போதே இது எனக்காக நானே எடுக்கும் படம் என்று அறிவித்திருந்தார்… இப்படி ஒரு முயற்சி கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டியது தான்… ஆனால் அதற்காக மட்டுமே எந்த ஒரு திரைப்படமும் பாராட்டப்பட வேண்டிய தகுதியை பெற்றுவிடுகிறது என்று அர்த்தம் இல்லை.. அப்படித்தான் இந்த சைவமும்…ஏற்கனவே சொன்னபடி, படத்தின் தலைப்பும் அதன் போஸ்டர் டிசைனிங் இரண்டுமே மொத்தக் கதையும் சொல்லிவிடுகின்றது.. ஆனால் ஒரு விதத்தில் பார்க்கப் போனால், அதுவும் கூட ஒரு திரைப்படத்தின் ஆக்கத்தில் முக்கியமான குறையாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சம்.. சமீபகாலமாக இதே தொனியில் வந்த இரண்டு படங்களாக நான் நினைவுகூற விரும்புவது தலைமுறைகள் மற்றும் பண்ணையாரும் பத்மினியும் என்ற இரண்டு திரைப்படங்களை.. இரண்டுமே மேலே சுட்டிக்காட்டிய அந்தக் குறைகளை தங்கள் ஆக்கத்தில் கொண்டிருந்தாலும், அதையும் மீறி அவை மனதைக் கவர்கின்ற படைப்பாக மாறியதற்கு மிகமிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது அந்தத் திரைப்படத்தின் காட்சிகளில் இருந்த உயிர்ப்பு… அந்த உயிர்ப்பு சைவம் திரைப்படத்தில் எந்தவொரு காட்சிகளிலும் இல்லாமல் போனதால் இந்த சைவச் சுவையை என்னால் ரசிக்க முடியவில்லை…

நாம் நினைத்த எல்லாமே திரைப்படத்தில் அப்படியே நடக்கிறது… மிகமிக அன்பான மரியாதையான குடும்பமாக இருக்கிறார்கள்… தமிழாக வரும் தெய்வத் திருமகள் சாரா, அந்த வீட்டில் வளர்க்கப்படும் பாப்பா என்ற அந்த சேவலின் மீது பிரியமாக இருக்கிறாள்… (எந்தக் காட்சி இதை விளக்கியது என்று கேட்கக் கூடாது…) அந்தச் சேவலை பழி கொடுக்க வேண்டிய தருணம் வருகிறது… மொத்தக் குடும்பமும் அந்தச் சேவலை பழி கொடுக்க தயார் நிலையில் இருக்க… சாரா மட்டும் அந்தச் சேவலை காப்பாற்ற எண்ணுகிறாள்… கடைசியில் காப்பாற்றியும் விடுகிறாள்… இறுதியில் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை எடுத்திருப்பதாகச் சொல்லி முடிக்கிறார் இயக்குநர் விஜய்…யதார்த்த சினிமாவை நோக்கி எங்களைத் திசை திருப்பிய இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு நன்றிகள் என்ற நன்றியறிவிப்பு அட்டவணையுடன் படத்தைத் தொடங்குகின்றனர்.. நல்ல விசயம்… ஆனால் யதார்த்தம் என்பது நம் பேச்சில் மட்டும் இருந்தால் போதாதே… படத்திலும் அந்த யதார்த்தம் இருக்க வேண்டுமே… படத்தில் வரும் வசனங்களில் “வாங்க” “உக்காருங்க..” ”நல்லாருக்கீங்களா…” ”எப்ப வந்தீங்க..” இப்படி வருகின்ற வசனங்களை தூக்கி விட்டாலே படத்தில் ஒரு பத்து நிமிடம் குறைந்துவிடும்… இப்படிப்பட்ட வசனங்களையும் காட்சிகளையும் வைப்பதுதான் யதார்த்தம் என்று இயக்குநர் விஜய் நினைத்திருந்தால் வீ ஆர் வெரி வெரி ஸாரி சார்…

ஈரானியக் குழந்தைத் திரைப்படங்கள் உலகம் எங்கும் உள்ள மக்கள் ரசிக்கும் படி வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், அத்திரைப்படங்களில் குழந்தைகள் குழந்தைகளாகவே எந்தவித சமரசமும் இன்றி காட்டப்படுகிறார்கள்… இன்றும் உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களாலும் ரசிக்கப்படும், Children of hevan திரைப்படம் ஆகட்டும், The mirror திரைப்படம் ஆகட்டும், where is my friend home திரைப்படம் ஆகட்டும் அனைத்திலும் குழந்தைகள் வெறும் குழந்தைகள் மட்டுமே.. அவர்கள் நாயக நாயகி பிம்பங்களுக்குள் எப்போதுமே வந்ததில்லை… ஆனால் சைவம் திரைப்படத்திலோ  அந்தக் குழந்தை சாராவை இயக்குநர் குழந்தையாகக் காட்டாமல், ஒரு நாயக பிம்பத்துடன் தான் வளையவிடுகிறார்… அந்தக் குழந்தைக்கு நாயகியைக் காட்டுவதைப் போல் ஒரு ஓபனிங்க் ஷாட் வேறு.. இது போதாதென்று அந்தக் குழந்தை தப்பு செய்யாதே என்று மற்றக் குழந்தைகளுக்கு போதனை செய்கிறது… பெரியவர்கள் சண்டையிடும் போது அவர்களை சமாதானம் செய்கிறது…. பிறர் செய்த தவறை தான் செய்ததாகச் சொல்லி தண்டனையை ஏற்றுக் கொள்ளுகிறது… எட்டு வயதே நிரம்பிய அந்தக் குழந்தை, குழந்தையில்லாமல் கஷ்டப்படும் தம்பதியர் அவமானப்படாதபடி, அவர்களை பிறர் முன்னிலையில் அம்மா என்று கூப்பிட்டு அவர்கள் மனதைக் குளிரச் செய்கிறதாம்… என்னவொரு கற்பனா சக்தி…. இப்படி படம் நெடுக அந்தக் குழந்தை ஒரு மாஸ் ஹீரோ செய்யக்கூடிய எல்லாக் காரியங்களையும் செய்கிறது… இதுதான் குழந்தைகளுக்கான எதார்த்த சினிமா என்றால், இதை எப்படி ஏற்பது… மேலும் தெய்வத் திருமகளில் ரசித்த அளவுக்கு சாராவை சைவத்தில் ரசிக்க முடியவில்லை… இந்த இடைப்பட்ட காலங்களில் அந்த குழந்தமை அவரிடம் காணாமல் போயிருக்கிறது…


இதிலும் ஒரு நாலாந்தர காதல் என்கின்ற வஸ்து இல்லாமல் கதை சொல்ல முடியவில்லை போலும்… இங்கும் ஒரு காதல் ஜோடி… சொந்த பந்தங்கள் ஒன்றாகக் கூடிய இடத்தில் தங்கள் காதலை புதுப்பித்துக் கொள்ள அவர்கள் நடத்தும் முயற்சி.. இப்படி இன்னும் எத்தனை நாட்களுக்கு காதல் என்கின்ற பெயரைச் சொல்லியே இளசுகளை இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை… கொஞ்சமேனும் ரசிக்க வைப்பது ஷ்ரவன் என்று சொல்லிக் கொண்டு வரும் அந்தக் குண்டுப் பையன் மட்டும் தான்… படம் நெடுக அவன் பேசும் இங்கிலீஷ்க்கு பயந்து போய், பெரியவர்கள் ஒவ்வொருவரும் பதறும் இடம் மட்டும் தான் கொடுத்த காசுக்கு கொஞ்சமேனும் கண்ணியம் சேர்க்கிறது…

படத்தின் நீளம், மேம்போக்கான காட்சிகள், சுவாரஸ்யமில்லாத தன்மை, பழகிய கதைக்களமே அந்நியமாகத் தென்படுவது என்று படத்துக்கு ஏகப்பட்ட மைனஸ்… எங்கள் பள்ளியில் எல்லாம் யாராவது சொந்தக்காரர்கள் இறந்து போனால் மட்டும் தான் வீட்டுக்கு செல்ல அனுமதிப்பார்கள்… ஆனால் இந்த சாராப் பொண்ணோ சேவல் காணாமல் போனால் உடனே வீட்டுக்கு வந்து விடுகிறது… இது என்னரகமான கதையாடலோ…??? இசையமைப்பாளர் ஜிவி வெகுநாட்களுக்குப் பிறகு பிண்ணனி இசையில் ஈர்க்கிறார்… அதுபோல் தான் பாடலிலும்…


அனுபவ ரீதியாக நம் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை திரைப்படமாக எடுக்கலாம் தான்.. ஆனால் அந்த அனுபவத்தை நம் அனுபவமாக மட்டும் அல்லாமல் எல்லாருக்குமான அனுபவமாக மாற்றுவது தான் திரைப்படத்தின் வெற்றி… அந்த வெற்றியை சைவம் பெறவில்லை… ஒரு அகதியின் வாழ்க்கையை அரசியல் பரம்பரையை சேர்ந்த ஒருவர் படமாக எடுத்தால் எப்படி இருக்கும்….??? அப்படித்தான் இருக்கிறது சைவமும்… இந்த சைவம் பார்த்ததால் ஏற்பட்ட கொலைவெறியை ஒரு சிக்கன் பிரியாணி தின்று தீர்த்துக் கொண்டேன்… நீங்கள் பார்க்கலாமா…? வேண்டாமா…? என்று கேட்டீர்கள் என்றால், பல வருடங்களாக இறைவனை நோக்கி தவம் இருப்பார்களே..!!! அந்த அளவுக்கு பொறுமை உங்களுக்கு இருந்தால், நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்… ஆனால் இறுதியில் வரம் கிடைக்குமா…? என்று எனக்குத் தெரியாது….

No comments:

Post a Comment