Thursday 24 April 2014

QUEEN:

ஆனந்த கூச்சலுடன் ஒரு திரைப்படம் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டது.. அப்படி ஒரு ஏக்கத்தை சமீபத்தில் தீர்த்து வைத்திருக்கும் படம் விகாஷ் பாஹலின் இயக்கத்திலும் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பிலும் வெளிவந்து கங்கணா-வின் அற்புதமான நடிப்பால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் குயின் திரைப்படம்.. இத்திரைப்படம் ஒரு பெண்ணியச் சிந்தனையிலான திரைப்படம் என்கின்ற கருத்தை எந்தப் புள்ளியிலுமே மறுக்க இயலாது என்றாலும், இதை முழுக்க முழுக்க அப்படியே எடுத்துக் கொள்ள எனக்கு மனமில்லை.. பரந்துபட்ட இந்த வாழ்க்கையில் தனித்து விடப்படும் ஒவ்வொரு ஜீவராசிகளும், தனித்து விடப்படும் அந்த தருணத்தில், அந்த விநாடிகளில் எதிர்கொள்ளும் கேள்வி அவர்கள் இல்லாமல் நான் எப்படி வாழப் போகிறேன்.. நான் என்ன செய்யப் போகிறேன் என்பதே..? அவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தையும் வாழ்வதில் இருக்கும் அதிஅற்புதமான அனுபவத்தையும் இனிக்க இனிக்க காட்சிக்கு காட்சி கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது குயின் திரைப்படம்.


மிகமிக சாதாரணமான ஒரு கதை… எந்த சுவாரஸ்யமும் இல்லாத ஒரு திரைக்கதை… படம் தொடங்கி பத்து நிமிடத்திலேயே அதன் முடிவு என்ன என்பதும் மிகத் தெளிவாக பலருக்கு புரிந்துவிடும்.. அப்படி இருந்தும் ஒரு திரைப்படம் எப்படி நம்மை ஈர்க்கிறது என்றால், அதற்கு காரணம் அதில் இருக்கின்ற அப்பழுக்கற்ற வாழ்க்கை.. ஒப்பனை இல்லாத உணர்வுகள்.. அது ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் விதைக்கும் தன்னம்பிக்கை.. இப்படி நிறைய நிறைய காரணங்கள் இருக்கின்றன இத்திரைப்படம் நம்மை ஈர்ப்பதற்க்கு.. இதுவொரு இந்தி வட்டார மொழியைப் பேசும் இந்திய மொழித் திரைப்படம் என்பதால், இத்திரைப்படம் பேச எத்தனிக்கும் விடயங்களின் பரிணாமத்தை இந்திய மரபு சார்ந்தே அணுக வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.. அப்படித்தான் நாம் அதை அணுகவும் போகிறோம்..


கதையின் நாயகி ராணி. ஒரு சராசரியான மத்திய நடுத்தர வர்க்கத்தை சார்ந்த  பெண்.. இரண்டொரு நாளில் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணைப் பார்க்க ஹோட்டலுக்குச் செல்லும் போதும் கூட காவலாக தன் தம்பியை துணைக்கு அழைத்துச் செல்பவள்.. தன் தாய் தந்தையரின் எதிரிலும் கூட ஒரு ஆணுடன் பேச கூச்சப்படும் வெட்கப்படும் ஒரு சராசரி இந்தியப் பெண் அவள்.. அவளது தந்தையின் நண்பர் மகன் இவளைப் பார்த்து மயங்கி, காதலிக்கத் தொடங்கி அது கல்யாணத்தில் வந்து நிற்கும் போது, அவளது கிராமத்து பாணியிலான உடையலங்காரம், பேச்சு, நாகரீகம் போன்றவை தான் வாழ நினைக்கும் பகட்டான வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்றும் அதை தான் காலங்கடந்து உணர்ந்து கொண்டதாகவும் சொல்லும் அவளது காதலன் விஜய் திருமணத்தை நிறுத்திவிடுகிறான்.. அவள் தன் பெற்றோரின் நிலைக்காக கெஞ்சிக் கேட்டும், தன் நிலையைச் சொல்லி மன்றாடியும் கூட அவன் மனம் மாறவில்லை.. திருமணம் நிற்கிறது.. ஒரு அறைக்குள் சென்று பூட்டிக் கொள்ளும் ராணி தான் எதிர்ப்பட வேண்டிய கேள்விகளுக்கும் கரிசனைகளுக்கும் அனுதாபங்களுக்கும் பயந்தே அங்கிருந்து எங்காவது ஓடிவிட எண்ணுகிறாள்.. தன் காதலனுடன் திருமணத்துக்குப் பிறகு பாரீஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் செல்வதற்காக எடுக்கப்பட்ட விசா மற்றும் பயணச்சீட்டை எடுத்துக் கொண்டு தனியாகவே பாரீஸ் கிளம்புகிறாள்.. முதலில் தயங்கும் அவளது பெற்றோரும் மனதை திடப்படுத்திக் கொண்டு அவளை அனுப்பி வைக்க… அவள் பாரீஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் பயணத்தின் மூலம் பெற்றுக் கொண்டு திரும்பும் அனுபவங்கள் அவளை எப்படி ஒரு முதிர்ச்சியான பெண்ணாக மாற்றுகிறது என்பது தான் மீதிக்கதை..

ஆக… ஒரு சராசரி இந்தியப் பெண்ணின் மீது இந்தியாவின் சமூக அறநிலைய கட்டுமானங்கள் அடுக்கி வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் ஒரு பெண்ணை எந்த அளவுக்கு தன்னம்பிக்கை குலைந்தவளாக, ஒரு ஆண் இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்கின்ற அளவுக்கு நிலைகுலைந்தவளாக மாற்றி வைத்திருக்கிறது என்பதும், மறைமுகமாக ஆதரிக்கப்பட்டு வரும் ஆணாதிக்க சிந்தனைகளையும் இத்திரைப்படம் கேலி செய்கிறது.. எந்தவொரு சூழலிலும் தனித்து வாழமுடியாத ஜீவனாகவே பெண்கள் பிம்பமாக்கப்படுவதன் அரசியலும், ஒரு ஆணை நம்பியே பெண் வாழ வேண்டும் என்கின்ற ரீதியில் கண்ணுக்கு புலப்படாத வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ள கன்னிகளும், அதை மீறி வாழ முற்படும் ஒரு பெண்ணின் மீது துவேஷம் கொண்டு சேற்றை வாரி இறைக்க காத்துக் கொண்டிருக்கும் சேவகர்களையும் எண்ணிப் பார்க்காமல் சில காட்சிகளை நம்மால் கடக்க இயலாது.. தன் பயணத்தின் போது ராணி பார்க்கின்ற ஒவ்வொரு பெண்களின் கதாபாத்திர சித்தரிப்பும் மிகுந்த சிரத்தையோடு உருவாக்கப்பட்டு இருக்கிறது..

பாரிஸ் விமானத்தில் ஏறிவிட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் கங்கணாவின் கண்களில் தெரியும் முதல் நம்பிக்கை கீற்று எதுவென்றால், வெகு இயல்பாக சுதந்திரமாக அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும் போதும் அதற்கான எந்த பயமும் இன்றி ஒய்யாரமாக தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் அந்த இரண்டு விமானப் பணிப் பெண்களைப் பார்க்கும் போது, கங்கணாவிற்குள் ஏற்படும் அந்த பிரமிப்பான தருணங்கள் தான்.. அந்த தருணங்கள் தான் பாரீஸ் நகருக்குள் தன் கைப்பையை திருடனிடம் இருந்து காப்பாற்ற முயலும் தைரியத்தை அவளுக்கு கொஞ்சமேனும் கொடுக்கிறது.. அடுத்ததாக அவளுக்குள் நம்பிக்கையை வளர்ப்பவர் விஜயலட்சுமியாக வந்து செல்லும் லிசா ஹெய்டன்.. இந்தியத் தந்தைக்கும் ப்ரான்ஸ் தாய்க்கும் பிறந்த பெண்ணாக வரும் இக்கதாபாத்திரம் ராணி தங்கி இருக்கும் ஹோட்டலில் பணிப்பெண் வேலை செய்யும் கதாபாத்திரம்.. இவளுக்கு ஒரு குழந்தை உண்டு… ஆனால் கணவன் கிடையாது… தனக்கான தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டு, யாரையும் நம்பி இராமல் தன்னிச்சையாக இயங்கும் கதாபாத்திரம்.. இவள் ராணியிடம் உடை சார்ந்தும் மனம் சார்ந்தும் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் ஏராளம்… ராணியின் பாஸ்போட்டை தன் சாமர்த்தியத்தால் மீட்டுத் தரும் விஜயலட்சுமியின் நட்பு கிடைத்த நம்பிக்கையில் தான், மீண்டும் உடனடியாக இந்தியா செல்லும் தன் முடிவை ஒத்திப் போடுகிறாள் ராணி… அதுபோல விஜயலட்சுமியின் நண்பியாக வரும் பெண்ணின் கதாபாத்திரமும் அதே வடிவ தோரணையுடன் தான் சித்தரிக்கப்பட்டு இருக்கும்..


அடுத்ததாக ஆம்ஸ்டர்டாம் விடுதியில் தங்கும் போது ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த டாகா, ரஸ்ய நாட்டைச் சேர்ந்த அலெக்சாந்தர், ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டிம் ஆகியோர்களுடன் ஒரே அறையில் தங்கவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு… முதலில் அந்த அறையில் தங்கும் அவள் அவர்களைக் கண்டு பயப்படுவதும்.. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்புறவும்.. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு விதமாக வந்து செல்லும் பிரச்சனைகளையும் கண்டு வாழ்க்கையின் வடிவத்தை புரிந்து கொள்ள முற்படும் தருணங்களாக அந்தக் காட்சிகள் கடந்து செல்லும்.. மேலும் இத்தாலிய உணவு விடுதி நடத்தும் ஒருவருடன் ராணிக்கு ஏற்படும் மோதலும், அந்த மோதலின் முடிவில் உணவுக் கண்காட்சியில் இந்திய உணவுகளை சமைத்துக் காட்ட அவளை அவர் அழைப்பதும், அங்கு அவள் கொல்கத்தாவில் பிரசித்திப் பெற்ற கோல்கொம்பா என்ற பானிப்பூரி வகையை சமைத்துக் காட்டி வாடிக்கையாளர்களை கவர்வதும்.. அதற்காக அவளுக்கு கிடைக்கும் பாராட்டுகளும் பரிசுகளும் அவளது தன்னம்பிக்கையை அடுத்த படிக்கு நகர்த்துகின்றன.. மேலும் அங்கு ராணிக்கு அவளது விருப்பத்தின் பேரில் கிடைக்கும் முதல் முத்த அனுபவமும் அற்புதமான கலாச்சார மீறல்.. இப்படி பேரில் மட்டுமே ராணியாக இருக்கும் அவள், தன் வாழ்க்கையை வாழும் நுட்பத்திலும் ஒரு ராணியாக மாறி நிற்பதாக அத்திரைப்படம் ஒரு புள்ளியில் முடிவடைகிறது…

இப்படி ஒவ்வொரு படிநிலையிலும் வாழ்க்கையின் மீதான வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தேவையான தன்னம்பிக்கை மீதான நம்பிக்கை அவளுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது… மேலும் ஒரு புள்ளியில், அவள் தான் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டிய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் பூட்டிக் கொள்ள வேண்டிய சராசரி இந்தியப் பெண் என்கின்ற மனநிலையில் இருந்து மாறி, ஆண் பெண் என்கின்ற பாகுபாடுகளைக் கடந்து தன்னையும் இவ்வுலகின் ஒரு ஜீவராசியாக, சந்தோசமாக வாழப் பிறந்த ஜீவராசியாக மாற்றிக் கொள்ளும் தருணம் அதி அற்புதமானது… தன்னை தேடி ஆம்ஸ்டர்டாம் வரை வந்த விஜயிடம் உனக்கான பதிலை இந்தியாவில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, பிரிந்து செல்ல இருக்கும் தன் நண்பர்களைக் காண துள்ளலுடன் ஓடிச் செல்லும் ராணியின் அந்த ஓட்டத்தில் வெளிப்படுகிறது அத்தனை அதிஅற்புதமான தருணங்களும்..


நாமும் இதுபோன்ற எத்தனையோ பெண் கதாபாத்திரங்கள் வீறுகொண்டு எழும் திரைப்படங்களை… போலித்தனமான புனைவு பிம்பங்களுடன் பார்த்திருப்போம்.. அவர்களும் தங்களது மீதி வாழ்க்கையை ஒருவிதமான ஆங்காரமான ஆவேசமான இறுக்கமான மனநிலையுடன் கழிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.. அப்படி இல்லாமல் தன்னையும் தன் வாழ்க்கையையும் புரிந்து கொண்டு மிக இயல்பாக, யதார்த்தத்துடன் தன் வாழ்க்கையை வாழத் துணியும் இந்த ராணி கதாபாத்திரம் நமக்குப் புதியதே.. அதுபோல பெரும்பாலும் நம் திரைப்படங்கள் காட்டுகின்ற அன்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட அன்பையே காட்சிப்படுத்துகின்றன.. அந்த அன்பு இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்கின்ற மனோநிலைக்கு எதிர் கதாபாத்திரத்தை தள்ளுவதாகவும் பல நேரங்களில் அந்த அன்பு இருக்கிறது.. என்னுடைய கேள்வி எல்லாம் அப்படி ஒருவனுடைய தன்னம்பிக்கையை குலைத்து தான் இல்லாமல் அவன் வாழவே முடியாது என்கின்ற நிலைக்குத் தள்ளுகின்ற உணர்வு எப்படி அன்பாக இருக்க முடியும்…? என்பதே.. அதே கேள்வியைத் தான் இந்த திரைப்படமும் வேறொரு கோணத்தில் அணுகுகிறது…

இக்கதையில் உரையாடல் பகுதியிலும் சில காட்சிகளுக்கான விவாதங்களிலும் கூட கங்கனாவின் பங்களிப்பு இருப்பதாகத் தெரிகிறது.. ஒரு மிகச் சிறந்த நடிப்புத் திறமையுள்ள நடிகையாக இருந்தும், அவரது பின்புலம் சாதாரணமான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது என்ற ஒரே காரணத்தாலேயே பாலிவுட் வட்டாரத்தில் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டும் கண்டுகொள்ளப் படாமலும் விடப்பட்டும் வரும் நடிகை என்பதால் தன்னுடைய சுய அனுபவத்தில் இருந்தே இவர் பல விசயங்களை எடுத்தாண்டிருக்க வாய்ப்புள்ளது… அவரது சுய அனுபவமாக இருந்தாலும் அதுவே இங்கிருக்கும் எல்லாப் பெண்களுக்கும் பொருந்திப்போவதாக இருப்பதும் நம் கலாச்சாரச் சிறப்பு.. சிலருக்கு வேறொரு பார்வையில் பார்க்கும் போது இந்த க்யூன் திரைப்படம் பெரிதாக எதையுமே முன் வைக்காமல், பாலியல் சுதந்திரத்தை மட்டுமே பேசுவதாக தோற்றம் தருவதற்க்கும் வாய்ப்பு உண்டு.. ஆனால் அதற்கான என்னுடைய பதில் என்னவென்றால், “பெண்களின் மீதாக விதிக்கப்படும் பலவிதமான கட்டுப்பாடுகளுக்குப் பிண்ணனியில் மறைமுகமாக இருப்பது அந்த பாலியல் சார்ந்த சுதந்திரம் தான் என்பதால், அதையே நாம் ஒன்றுமில்லாத மிகச் சாதாரண ஒரு விசயம் என்று சித்தரித்துவிட்டால், அதைப் பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டு நாம் விதிக்கின்ற கட்டுப்பாடுகள் எல்லாம் தேவையே இல்லாதது என்று விளங்கிவிடுமே என்ற பார்வையில்தான் அதை அணுக வேண்டியிருக்கிறது..


“Fashion” என்ற இந்தி திரைப்படத்தில் நடித்த பெண்ணா..? இவள் என்று மிகுந்த ஆச்சரியம் ஏற்படுகிறது… அந்தத் திரைப்படத்தில் ஏற்ற கதாபாத்திரத்துக்கு அப்படியே முற்றிலும் எதிரான ஒரு கதாபாத்திரம்.. அதையும் அப்படியே உள்வாங்கி எப்படி இவ்வளவு கச்சிதமாக வெளிக்காட்ட முடிகிறது என்ற எண்ணம் காட்சிக்கு காட்சி மேலோங்கிக் கொண்டே இருக்கிறது.. ராணியும் விஜயலட்சுமியும் ஒரு பாரில் குடித்துவிட்டு ஆடும் ஆட்டங்களும், அந்த இடத்தில் தன் உணர்ச்சி பொங்கி வெடித்து வெதும்பி அழும் ராணியின் உடல்மொழியும் வெகு சிறப்பு.. மேலும் தன் நண்பர்களுடன் செக்ஸ் டாய்ஸ் விற்கும் கடைக்குள் சென்றுவிட்டு அது என்ன பொருள் என்று தெரியாமலேயே எனக்கு ஒன்று என் தாத்தாவிற்கு ஒன்று, என் தம்பிக்கு ஒன்று என ஒவ்வொன்றாக பர்சேஷ் செய்யும் ராணியின் குழந்தைத்தனத்தில் வெளிப்படும் குணாதிசயம் வெகு அழகு… தன்னிடம் முதன்முதலில் முத்தம் கேட்கும் ஒரு ஆணிடம் முத்தம் கொடுக்க தயாராகும் முன் கங்கணாவின் அஷ்டகோணலான முக மாற்றங்கள் அத்தனையும் ஒவ்வொரு அழகு… மிகமிக சாதாரணமான காட்சிகளைக் கூட தன் தனித்துவமான நடிப்பால் மிளிரச் செய்யும் நுட்பம் இந்தப் பெண்ணுக்கு கைவந்திருக்கிறது… படம் இவ்வளவு தத்ரூபமாக வந்திருக்கிறது என்றால், அது முழுக்க முழுக்க கங்கணா ரணாவத் என்னும் இந்த அழகியின் குறை சொல்லவே முடியாத அந்த நடிப்பால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.. அமித் திரிவேதியின் அற்புதமான இசையும் பிண்ணனி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலம்... அதுபோலத்தான் சில இடங்களில் வருகின்ற வசனங்களும்.. காட்சிகளின் தத்ரூபத்திற்காக படக் குழுவினர் ராணி கதாபாத்திரத்தின் ஆடைகள் மற்றும் ஒப்பனைகளில் காட்டிய வித்தியாசமும் மிகத் துல்லியமாக வேறுபாட்டைக் கொடுக்கிறது.. விகாஷ் பாஹல், கங்கணா, அனுராக், அமித் திரிவேதியின் கூட்டணி ஒரு அற்புதமான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்...

வாழ்க்கையில் எது மிகமிக முக்கியம் நண்பர்களே..!!!! அன்பு, நட்பு, காதல், அம்மா, நண்பன், காதலி இப்படி எத்தனையோ நாம் சொல்லலாம்.. இப்படி எத்தனையோ நாம் சொல்லலாம்… ஆனால் அவை எல்லாமே ஏதோவொரு உணர்ச்சிமிகுந்த மனநிலையில் நாம் சொல்வதாக இருக்கும்… அந்த பதில்கள் எல்லாமே உணர்ச்சி மனநிலைக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும்… ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும்… வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் எல்லா தருணங்களிலும் மிகமிக முக்கியமானது ”வாழ்வது மட்டுமே….” அதைவிட வாழ்க்கையில் மிகமிக முக்கியமானதாக எனக்கு வேறெதுவுமே தெரியவில்லை நண்பர்களே… அதையே தான் இத்திரைப்படமும் பேசுகிறது… நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம்.. ஏதோ ஒரு தருணத்தில், ஏதோவொரு காரணத்துக்காக உங்கள் உலகத்தையே நீங்கள் சுருக்கிக் கொண்டு இருந்திருக்கலாம்… அப்படி நீங்கள் சிந்திக்காமல் உங்கள் வாழ்க்கையை சுருக்கிக் கொண்டதாலயே, நீங்கள் நினைத்த உலகம் இன்று உங்கள் வாழ்க்கையின் சுவாசத்தை இறுக்கிக் கொண்டு இருக்கலாம்… உங்களுக்கு நீங்களே போட்டுக் கொண்ட அந்த கட்டுகளை அறுத்துக் கொண்டு, அறுக்கமுடியாத கட்டுகளை உடைத்துக் கொண்டு உங்கள் உலகத்தை விட்டு வெளியே வாருங்கள்.. நாம் நினைத்ததை விட இந்த உலகம் பிரமாண்டமானதாக இருக்கிறது…. உங்கள் வாழ்க்கையை ஒரு இராஜாவாகவோ ஒரு இராணியாகவோ வாழ முற்படுங்கள்…. அப்படி வாழ உங்களுக்குத் தெரியாது என்றால், கவலையை விடுங்கள்… இத்திரைப்படத்தைப் பாருங்கள்… அது அப்படி வாழ்வதற்கான ஆரம்பகட்ட வாழ்க்கைமுறையை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும்… அதிலிருந்து நீங்களே பல விடயங்களை கற்றுக் கொள்வீர்கள்.. உங்களுடைய வாழ்க்கையும் ஒரு இராணியின் வாழ்க்கையைப் போல் ஒரு இராஜாவின் வாழ்க்கையைப் போல் அமைய வாழ்த்துக்கள்….

No comments:

Post a Comment