Friday, 11 April 2014

நான் சிகப்பு மனிதன்:

தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் போன்ற திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநர் திரு அவர்களின் மூன்றாவது படம் இந்த நான் சிகப்பு மனிதன்.. ஒரு வணிகநோக்கோடு எடுக்கப்படும் கமர்ஸியல் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் முதல் பாதியும்.. எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் இரண்டாம் பாதியும் மிகச்சிறப்பான சமீபத்திய உதாரணங்கள்..


பொதுவாகவே பார்வையாளர்களால் யூகிக்கமுடியாத சம்பவங்களால் தொகுக்கப்பட்ட திரைக்கதை மிகச்சிறப்பான திரைக்கதை என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு… அதை முழுக்க தவறான கருத்து என்று சொல்லிவிடவும் முடியாது.. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இயக்குநர் சொல்ல வருகின்ற அந்த யூகிக்க முடியாத சம்பங்கள், மக்கள் யூகித்து வைத்திருக்கும் சம்பவங்களை விட கண்டிப்பாக மேம்பட்டதாக இருக்க வேண்டும்.. அப்படி இல்லாத பட்சத்தில் அது பார்வையாளர்களை வசீகரிக்காது.. நான் சிகப்பு மனிதன் திரைப்படத்துக்கு நேர்ந்திருப்பதும் அதுவே தான்.. இரண்டாம் பாதியில் நாம் கொஞ்சம் கூட எதிர்பாராத திசையை நோக்கி கதை பயணிக்கிறது.. நிமிடங்களுக்கு நிமிடம் திருப்பங்களால் நிறைந்து இருக்கிறது திரைக்கதை.. ஆனால் அந்த திருப்பங்களும் ட்விஸ்டுகளும் நமக்கு ஆச்சரியத்தையோ ஆனந்தத்தையோ கொடுக்காமல் அதிர்ச்சியையும் அருவெறுப்பையும் கொடுப்பது தான் இத்திரைப்படத்தின் மிகமிக முக்கியமான குறை..

Narcolipsy என்பது ஒருவிதமான தூக்கத்துடன் தொடர்புடைய உடற்கூறியல் குறைபாடு.. இந்த நோய் பொதுவாக இலட்சத்தில் ஒருவருக்கு இருக்குமாம்.. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் அளவுக்கு அதிகமான துக்கம், சந்தோசம், கோபம், பயம், அதிர்ச்சி, அழுகை, ஆசை இப்படி எந்தவகையான உணர்ச்சி மேலோங்கினாலும் உடனடியாக தூக்கத்துக்கு சென்றுவிடுவர்.. அவர்களாக மீண்டும் எழுந்தால் தான் உண்டு.. ஆனால் அந்த தூக்கத்தின் போதும் மூளை விழித்திருப்பதால் தங்களைச் சுற்றி நடக்கின்ற உரையாடல் மற்றும் சத்தங்கள் அவர்களுக்கு கேட்டுக் கொண்டே இருக்கும்.. இந்த நோய்தான் படத்தின் ஹைலைட்டான விசயம்…

சிறுவயதிலேயே விஷால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்… அவருக்கு காதலி கிடைப்பதோ கல்யாணம் ஆவதோ மிகப்பெரிய பிரச்சனை.. ஏனென்றால் ஒரு பெண் அவரது கையை தொட்டாலே ஏற்படும் உணர்ச்சி பிளம்புகள் கூட அவரை உறக்கத்துக்கு ஆட்படுத்திவிடும்.. இப்படி இருக்க ஒரு பெண்ணுடன் எப்படி அவரால் உடலுறவு கொள்ளமுடியும்.. எனவே அவருக்கு திருமணம் தள்ளிப் போகிறது.. இருப்பினும் ஒரு கட்டத்தில் நாயகியுடன் ஏற்படும் நட்புறவு அவர்கள் இருவருக்குமிடையேயான திருமணத்துக்கான சாத்தியக் கூறுகளை உண்டாக்குகிறது… அப்போது நடக்கின்ற ஒரு சம்பவம் இருவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட.. அந்த சம்பவத்துக்கு காரணமான நபர்களை பழிவாங்க துடித்து உறங்கத் தொடங்கி விடுகிறார் விஷால்.. இப்படி ஒரு நோயை வைத்துக் கொண்டு அவர் அவர்களை பழிவாங்கினாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை..


அவர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் ஒரு சம்பவம்.. ஏற்கனவே நாயகனுக்கு இருக்கின்ற நோய்.. அதை மீறி அவர் அவர்களைப் பழிவாங்கினாரா..? இல்லையா..? இப்படி எல்லாமே சுவாரஸ்யமான தொகுப்புகள்.. இதில் எதிலுமே பிரச்சனை இல்லை.. பிரச்சனை எங்கு என்றால், அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ஒரு சம்பவம் என்று சொன்னேனே… அந்த சம்பவம் எதற்காக அரங்கேறியது என்பதில் தான்… அதன் பிண்ணனியில் தான் பிரச்சனையே உள்ளது.. ஒரு திரைப்படத்துக்கு மிக முக்கியமான விசயங்கள் கதை திரைக்கதை என்ற இரண்டாக இருந்தாலும், அந்தக் கதை எதைப் பற்றியது என்பதை, பார்வையாளர்கள் புரிந்து கொள்வதைப் போல், முதல் அரைமணி நேரத்துக்குள் அதற்கான காட்சிகளை வைத்து அவர்களை தயார் செய்வதும் மிகமிக முக்கியமானது…

இப்போது நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை விட்டுவிட்டு, விசித்திரமான நோய்களை பிரதானமாகக் கொண்டு ஏற்கனவே வெளிவந்த முக்கியமான மற்ற இரண்டு படங்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.. அந்நியன் மற்றும் கஜினி. இரண்டிலுமே நாயகர்கள் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு  இருப்பார்கள்.. இரண்டிலுமே கதையின் மையம் அந்த விசித்திரமான நோய் அல்ல.. அந்நியனில் சக மனிதர்களின் ஒழுங்கின்மை அல்லது அலட்சியத்தால் சிறு வயதிலேயே பாதிக்கப்படும் ஒரு சிறுவனுக்கு ஏற்படுகின்ற பிரச்சனை தான் மையம்… ஒழுங்கின்மையை அவன் வெறுக்கிறான் என்பது படத்தின் முதல் காட்சியிலேயே தொடங்கிவிடும்.. எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைப்பது, விதிமுறைகளை சாலையில் செல்லும் போது சரியாக கடைபிடிப்பது.. இப்படி குறைந்தது நான்கு முதல் ஐந்துவிதமான ஒழுங்கின்மையை வெறுக்கும் காட்சிகள் வரிசையாக காட்டப்பட்டு இருக்கும்.. இறுதியாக நாயகன் இப்படி இருப்பதற்கு காரணமும் ஒரு மனிதனின் அலட்சியம் அல்லது ஒழுங்கின்மைதான் என்று மையத்தை விளக்கும் போது அதை பார்வையாளன் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வான்…

கஜினியிலும் நாயகன் தான் அந்த விசித்திரமான நோயால் தாக்கப்பட்டு இருப்பான்.. ஆனால் கதையின் மையம்.. நாயகன் அல்ல நாயகி.. நாயகிக்கு ஏற்பட்ட கொடூரத்துக்கு பதிலடி கொடுக்க நினைப்பான் நாயகன்.. ஆனால் நான் சிகப்பு மனிதனில் வருவதைப் போலவே நாயகனுக்கு அவனது நோய் இடையூறாக இருக்கும்… ஆனால் படத்தின் மையம் நாயகிக்கு எதனால் அந்த கொடூர சம்பவம் நேர்ந்தது என்பது.. எதனால் அது நேர்ந்தது என்றால் பிறருக்கு உதவ முற்பட்ட போது… படத்தின் ஆரம்பத்திலேயே நமக்கு நாயகியின் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட குணாதிசயம் சிலபல காட்சிகளால் காட்டப்பட்டு இருக்கும்… அதனோடு தொடர்புபடுத்தியே பிரச்சனையும் ஏற்படும் போது கதை பார்வையாளர்களை வெகுவாக உள்ளிழுத்துக் கொள்ளும்… நான் சிகப்பு மனிதன் சறுக்குவது இந்தப் புள்ளியில் தான்…

படத்தில் Narcolipsy என்னும் அந்த நோய்க்கான குணாதிசயங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருக்குமே தவிர கதாபாத்திரத்துக்கான குணாதிசயங்கள் காட்சிப்படுத்தப்படவே இல்லை… அதுபோல் படத்தில் மையமாக நிகழும் அந்த சம்பவத்தை பார்வையாளர்கள் முதலிலேயே உள்வாங்கிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் திரைக்கதையில் இல்லவே இல்லை.. அதுவும் இல்லாமல் இயக்குநர் திரு தெரிந்து செய்கிறாரா..? இல்லை தெரியாமல் செய்கிறாரா என்று தெரியவில்லை.. தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படத்தில் முழுத் தவறும் நாயகனின் மீது இருக்க… நாயகன் படம் முழுக்க நாயகிகளை பழி வாங்கும் நடவடிக்கைகளையும் வெற்றி கொள்ளும் செயல்களையும் செய்து கொண்டே இருப்பான்… நாயகனின் கதாபாத்திரம் நம்மிடையே சாகடிக்கப்பட்டு அந்த கதாபாத்திரத்தின் மீது நமக்கு கொலைவெறியே வந்து கொண்டு இருக்கும்.. இயக்குநர் கொஞ்சம் கூட அதைப் புரிந்து கொள்ளாமல் கதையை நகர்த்திக் கொண்டே சென்று கொண்டு இருப்பார்.. அதே போலத்தான் இங்கும்…

நாயகியான லட்சுமி மேனனுக்கு ஏன் அந்த கொடூரம் நிகழ்கிறது என்பதற்கான பின்கதையாக சொல்லப்படும் அந்த ப்ளாஷ்பேக் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது எனக்கு நாயகன் மீதுதான் தவறு இருப்பது போல் படுகிறது.. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது மற்றொருவன் தனது தனிப்பட்ட கருத்தாக்கங்களை திணிப்பதும், ஒழுக்கம், கற்பு போன்ற பழமையான கருத்தாக்கங்களின்  வளமையின் படி ஆணை விட்டுவிட்டு பெண்ணை மட்டுமே குற்றம் சாட்டுவதுமான கலாச்சார கல்லெறிகள் எல்லாம் இத்திரைப்படத்தில் கண்ணாடி வீட்டுக்குள் கல்லெறிவதைப் போல் ஆகிவிட்டது… மேலும் கடைசி காட்சியில் நண்பன் சுந்தர் இறக்கும் முன் கேட்கின்ற கேள்விகள் எல்லாம் நாயக கதாபாத்திரத்தையே சிதைத்துவிடுவதால் அந்த கதாபாத்திரத்தின் பழிவாங்கும் உணர்வு நம்மை களிப்படையச் செய்யாமல் காயப்படுத்தவே செய்கிறது..

ஆனாலும் முதல் பாதியில் வரும் சில காட்சி அமைப்புகள் எல்லாம் மிகச் சிறப்பானவை… குறிப்பாக Narcolipsy என்னும் அந்த நோய் தொடர்பான குணாதிசங்கள் எல்லாமே.. இந்திரனாக வரும் நாயகன் விஷாலுக்கு இருக்கும் அந்தப் பத்து ஆசைகள், அதிலேயே காதலையும் கொண்டு சென்ற விதம்… எப்போதாவது நீ தூங்காமல் இருப்பாயா..? என்று நாயகி நாயகனைக் கேட்டு அதற்கு இருவரும் விடை கண்டுபிடித்து அதை பரிசோதனை செய்து பார்க்கும் இடம்.. டூவிலரில் பெல்ட் அணிந்து பயணிப்பது.. மயில்சாமியுடன் வரும் அந்தக் காமெடி காட்சி என சில காட்சிகள் மிகச் சிறந்த மசாலா திரைப்படத்திற்கான காட்சிக் கோர்ப்புகளாகத்தான் இருந்தன.. அதுபோல வசனங்களும் அருமை.. பத்து கேள்வியை கேட்டு எப்புடிங்க ஒருத்தன பத்தி தெரிஞ்சிக்க முடியும்.. என்ற கேள்விக்கு அவன் சொன்ன பத்து பதில வச்சி.. அவனப் பத்தி நூறு கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியும் என்று சொல்லும் லட்சுமியின் பதில்.. என வசனங்கள் பல இடங்களில் நன்றாகவே இருந்தது…


லட்சுமி மேனன், விஷால், சுந்தர் ராம், இனியா என எல்லோருக்குமே நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்கள்… நடிப்பில் குறை சொல்லமுடியவில்லை.. சிறப்பாகவே இருக்கிறது… வழக்கமான தாய் கதாபாத்திரத்தில் வந்து போகும் சரண்யாவும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.. பாடல்கள் படத்துக்கு மற்றொரு முக்கியமான மைனஸ்.. ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை.. பிண்ணனி இசையும் பரவாயில்லை ரகம் தான்… இசை ஜி.வி.பிரகாஷ்.. ஒளிப்பதிவு பிரமிப்பாக இருந்தது… ஒரு பாலைவன பாடல் காட்சியில் மரச் சட்டகங்களுக்கு ஊடாக அவர் வைத்திருந்த ஒவ்வொரு ப்ரேமும் ரம்மியமாக இருந்தது.. ஒளிப்பதிவு ரிச்சர்ட்டு. என். நாதன்.

இயக்குநர் திரு.. நல்ல வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் இயக்குநர்.. ஆனால் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தன் திரைக்கதையில் திணித்து வைப்பதாலும், மிகச் சின்ன சின்ன விசயங்களில் கதையில் தவறு இளைத்துவிடுவதாலும் அவர் எதிர்பார்க்கின்ற ஒரு வெற்றி அவருக்கு இன்றைய தினம் வரை கிடைக்காமல் இருக்கிறது.. ஆக மொத்தத்தில் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை நீங்கள் பாருங்கள்… முதல் பாதி உங்களுக்கு மிகச்சிறப்பான எண்டர்டெயினராக இருக்கும்… ஆனால் இரண்டாம் பாதி அப்படி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிக குறைவு..2 comments:

 1. முதலில் ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன்.. யாருக்கும் காம்ப்ரமைஸ் செய்யாமல் தான் எடுக்க நினைத்த விஷயத்தை எடுப்பவனே நல்ல இயக்குனர். அந்த வகையில் திரு தேறியிருக்கிறார்..

  கஜினி படத்துடனான உங்கள் ஒப்பீடு, அவ்வாறே இந்த படமும் இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்.. இது முழுக்க முழுக்க நாயகனின் பார்வையில் எடுக்கப்பட்ட படம்.

  கிளைமாக்சில் சுந்தரின் கேள்வியால் மட்டுமல்ல, சுந்தர் தான் குற்றவாளி என முன்பே தெரிந்தும் அதுவரை தாமதித்தது ஏன் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.. தவிர நார்கோலெப்சி என்ற விஷயத்தை முதல் பாதியிலியே அதிகம் பேசிவிட்ட காரணத்தால் இரண்டாம் பாதியில் அம்போ என்று விட்டு விடுகிறார்கள். இதுவும் ஒரு சறுக்கல்.

  மொத்தத்தில் சொதப்பல் இரண்டாம் பாதியால் படம் மொத்தமும் அவுட்!

  ReplyDelete
 2. For new movie reviews http://allmyfavour.blogspot.in/2014/04/thenali-raman-movie-review.html

  ReplyDelete