Wednesday 30 April 2014

வாயை மூடி பேசவும்:

’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் பாலாஜி மோகனின் இரண்டாவது படம் இந்த வாயை மூடிப் பேசவும்.. தொடர் பணி சூழலால் புத்தகங்கள் படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது, ஏன்..? தினசரி செய்தித்தாள் படிப்பது கூட குறைந்துவிட்டது.. கிம் கியின் வரிசை, எஸ்.ராவின் இலக்கிய முகாம் இப்படி எழுதத் தொடங்கிய பல விசயங்கள் பாதியிலேயே நிற்கிறதே என்ற மனத்தாங்கல் வேறு விடாமல் இம்சிக்கிறது… நேற்று கிடைத்த சொற்ப நேர இடைவெளியில் எப்படியோ சரிக்கட்டி இரண்டு படங்களைப் பார்த்தாகிவிட்டது… அதில் ஒன்று இந்த வாயை மூடிப் பேசவும் திரைப்படம்.. இந்த திரைப்படத்தை நான் பார்க்க திட்டமிட்டதற்கு காரணம் கண்டிப்பாக இயக்குநர் பாலாஜி மோகன் அல்ல… ஏனென்றால் அவரது முந்தைய படைப்பில் எனக்கு பெரிதாக ஒட்டுதல் இல்லை.. அதையும் மீறி இந்தப் படத்தைப் பார்க்க மிக முக்கியமான காரணம் படத்தின் தலைப்பு… அர்த்தம் பொதிந்த கனமான தலைப்பாகவே அது எனக்குத் தெரிந்தது…


இந்த தலைப்பை கேட்டால் என்ன தோன்றுகிறது… ”அதிகமாக பேசாதீர்கள்.. பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்..” அல்லது ”வாயை மூடியும் பேசமுடியும்” ”உங்களுடைய பேச்சால் எத்தனை பேரின் வாழ்க்கை வறண்டு போகிறது… அதனால் வாயை மூடிப் பேசுங்கள்…” “டே.. பேச்சக் குறைடா…” இப்படி இந்த தலைப்பைக் கேட்டால், தேவையில்லாத பேச்சுக்களால் ஏற்படும் பிரச்சனைகள் என பேசுவது தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகளைச் சுற்றி நமக்கு எண்ணங்கள் ஓடும்.. ஆனால் இயக்குநருக்கு ஒரு வித்தியாசமான எண்ணம் தோன்றி இருக்கிறது… அதாவது ஒரு நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவு இடுகிறது… அந்த உத்தரவு என்னவென்றால் “அந்த குறிப்பிட்ட ஊரில் உள்ள யாரும் வாயைத் திறந்து பேசக் கூடாது… அப்படியானால் எண்ணங்களை பரிமாற்றம் செய்ய, சைகை மூலமாக வாயை மூடி பேசலாமா என்று கேட்டால்..? அதற்கு தடையில்லை.. நீங்கள் பேசிக்கொள்ளலாம்… ஆனால் வாயைத் திறந்து மட்டும் பேசக்கூடாது” என்பதே அந்த உத்தரவு.. இப்படி ஒரு வித்தியாசமான அல்லது விபரீதமான கற்பனை இயக்குநருக்கு வந்திருக்கிறது… இந்த அதிஅற்புதமான புனைவு சார்ந்த கற்பனைக்காக மட்டும் இயக்குநருக்கு ஒரு கூடை வாழ்த்துக்களை இப்போது உடனடியாக பார்சல் செய்வோம்…

தலைப்புக்கு ஏற்றபடி உண்மையிலேயே கனமான கற்பனை தான்… சரி இப்போது இயக்குநரின் அந்தக் கற்பனையை கடன் வாங்கி நம் கற்பனையாக வைத்துக் கொள்வோம்.. படிப்பதை நிறுத்திவிட்டு ஒரு ஐந்து நிமிடம் யோசிப்போம்… எதற்காக அரசாங்கம் அப்படி ஒரு உத்தரவைப் போடுகிறது..? இதற்குப் பிண்ணனியில் என்னென்ன காரணங்கள் இருக்கலாம்..? நாமாக காரணங்களை ஒரு கதையாக அடுக்கலாமா..? ம்ம்ம்… ஒருவேளை மக்கள் அதிகமாகப் பேசுவதால் புரட்சிகரமான கருத்துக்கள் பரவி அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்யலாம் என்ற பயத்தால், அப்படி ஒரு உத்தரவைப் போட்டு இருக்கலாம்… அல்லது இரு வேறு தாய்மொழி பேசக்கூடிய மக்கள் அந்நகரில் சரிக்கு சமமாக இருந்து என் மொழி பெரிதா…? உன் மொழி பெரிதா..? என்று ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்க.. அந்த சண்டையை நிறுத்த வழிதெரியாத அரசு, உலகின் தேசிய  மொழியான சைகை மொழியை மட்டும் அவர்கள் பேசட்டும் என்று மேற்சொன்ன உத்தரவை இட்டிருக்கலாம்.. அல்லது சரியாக கமிஸன் கொடுக்காத செல்போன் கம்பெனிகளின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்த இப்படி ஒரு உத்தரவைப் போட்டிருக்கலாம்..  அல்லது ஒரு சர்வாதிகாரி தன் ஆணவத்தால் அப்படி ஒரு உத்தரவைப் போட்டிருக்கலாம்… இப்படி நமக்கு சில கற்பனைகள் தோன்றும்… ஆனால் இங்கும் இயக்குநருக்கு வித்தியாசமான மற்றொரு கற்பனை… கூடுதலாக இன்னும் ஒரு ஐந்து நிமிடம் யோசித்து இருந்தால் நீங்களும் கூட அந்த கற்பனையை கண்டெடுத்தும் இருக்கலாம்… கை நழுவவிட்டும் இருக்கலாம்… இயக்குநருக்கு வந்த அந்த கற்பனை என்னவென்றால், “மக்கள் பேசுவதால் ஒருவித தொற்றுநோய் பரவி பேசும் சக்தியை இழந்து உயிரிழப்பு ஏற்படுகிறது…” என்பதே அந்தக் கற்பனை..

இதுவும் உண்மையிலேயே ஒரு அட்டகாசமான கற்பனை தான்… சரி.. இப்போது இந்தக் கற்பனையையும் கடன் வாங்குங்கள்.. இதன் பிண்ணனியில் என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்று கதையாக அடுக்க முயலுங்கள்.. ம்ம்.. ஏதேனும் மருந்து கம்பெனி கொள்ளை லாபம் பார்க்க.. இப்படி ஒரு புதிய நோயைப் பரப்பி இருக்கலாம்.. அல்லது வழக்கம் போல் வெளிநாட்டு சதியாக இருக்கலாம்.. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கலாம்.. உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாறுபாட்டால் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கலாம்… அந்த நகரத்தில் ஒரு விண்கல் விழுந்து அதனால் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்கலாம்… மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளை பயன்படுத்தியதால் இருக்கலாம்.. இப்படி நமக்கும் எத்தனையோ கற்பனைகள் தோன்றும்… நம் கற்பனைகள் இருக்கட்டும்… இயக்குநருக்கு என்ன கற்பனை தோன்றியது.. படத்தில் என்ன காட்டி இருக்கிறார் என்று கேட்கிறீர்களா…? அவர் பேராசை பெரு நஷ்டம் என்பதை உணர்ந்தவர் போலும்.. அதிகமாக கற்பனை வர வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படாமல் மேற்சொன்ன அந்த இரண்டு அட்டகாசமான கற்பனைகளிலேயே திருப்திபட்டுக் கொண்டார்… என்றே தெரிகிறது… படத்தைப் பார்த்துக் கொண்டே அந்த நோய் ஏன் வந்தது என்று ஆராய்ந்தால், எத்தனையோ புதுசு புதுசா நோய் வருதுல்ல பாஸ்… அதுமாதிரி தான்… கதைக்கும் புதுசா இருந்துச்சி.. வச்சிக்கிட்டோம்… என்று அசால்ட்டாக சொல்லி நகருவதைப் போல் தான் திரைக்கதை இருக்கிறது..

சரி.. அரசாங்கத்திடமிருந்து பேசக் கூடாது என்று உத்தரவு… பேசினால் உயிர் போய்விடும்.. இப்படிப்பட்ட சூழலில் ஒரு கதையில் என்னவெல்லாம் செய்யலாம்.. இதுவரை பேசி வந்த மக்கள் இனி பேசக்கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொள்கின்றனர் என்று காட்டலாம்.. அல்லது மொழி இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை என்று அழுத்தமாக காட்டி இருக்கலாம்.. வாய் பேச முடியாதவனின் உணர்வுகளைக் காட்டியிருக்கலாம்.. பேசப் பழகும் குழந்தையைப் பற்றி பேசி இருக்கலாம்.. பேசாமல் இருப்பதால் ஏற்படும் நன்மைகளைக் காட்டியிருக்கலாம்.. பேச வேண்டிய கட்டாயம் இருப்பதை காட்டியிருக்கலாம்.. பேசுவதையே தொழிலாகக் கொண்டவர்களின் உலகத்தைக் காட்டியிருக்கலாம்… சைகை மொழியில் உள்ள சிக்கலைக் காட்டி இருக்கலாம்… மீண்டும் பேசுவதற்காக ஏங்கும் மக்களின் ஏக்கத்தைக் காட்டி இருக்கலாம்.. இப்படி எத்தனையோ விசயங்களை காட்டி இருக்கலாம்.. இவர்கள் என்ன காட்டியிருக்கிறார்கள் தெரியுமா..? அதையும் பார்ப்போம்..

அரவிந்த் ஆக வரும் நாயகன் துல்கர் சல்மானுக்கு பேச்சு சாமர்த்தியத்தால் பொருட்களை விற்கும் சேல்ஸ்மேன் வேலை.. அந்த பேச்சு சாமர்த்தியம் தனக்கு இருப்பதை உணர்ந்த இவர் பண்பலை வானொலியில் ஒரு ஆர்.ஜெ –வாகவும் முயற்சிக்கிறார்… அஞ்சனாவாக வரும் நாயகி நஸ்ரியாவுக்கு பெண் டாக்டர் கதாபாத்திரம்.. பிறர் அதிகமாக பேசுவதால் தான் எல்லாருக்குமே பிரச்சனை என்று எண்ணும் கதாபாத்திரம்… தன் சிற்றன்னையாக வரும் மதுபாலாவை தன் தாயாக ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுத்து, அவளிடம் பேசுவதை வெகுவாக தவிர்த்து தன் வீட்டுக்குள் தான் விரும்பியபடி நடக்கும் அஞ்சனா, தன் காதலனிடம் அல்லது கணவனாக வரப்போகிறவனிடம் மட்டும் அடிமையைப் போல் நடந்து கொள்ளும் ஒரு குழப்பமான கதாபாத்திரம்… தன் தந்தையிடம் தான் விரும்பியபடிதான் நடந்து கொள்வேன் என்று பேசும் இந்தக் கதாபாத்திரம், தன் வருங்காலக் கணவனிடம் மட்டும் ஏனோ அதைச் சொல்லாமல், அடிமையைப் போல் வளைய வருகிறார்..


இந்த இரண்டு பிரதான கதாபாத்திரங்கள் தவிர்த்து, தனக்கு ஆர்வம் ஓவியம் வரைவதில் தான், படிப்பதில் இல்லை என்பதை தன் தாயிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் சிறுவன் கதாபாத்திரம்.. எழுத்தாளரான தான் குடும்ப வாழ்வுக்கு வந்துவிட்டாலும் தொடர்ந்து எழுத விரும்புகிறேன் என்பதை தன் கணவனிடம் தெரிவிக்க முடியாமல் திணறும் மதுபாலாவின் கதாபாத்திரம்.. பெற்ற மகன் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டதால், எல்லோரிடமும் வெறுப்புடன் நடந்து கொள்ளும் வினுச்சக்கரவர்த்தியின் கதாபாத்திரம், என்ன பேசுவது என்றே தெரியாமல் ஏதாவது பேசி பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் சுகாதாரத்துறை அமைச்சர் பாண்டியராஜனின் கதாபாத்திரம், நடிகர் பூமேஷாக வரும் ஜான்விஜய் கதாபாத்திரம், அவர் தன் படத்தில் குடிகாரர்களை அசிங்கப்படுத்திவிட்டார் என்று அவரது படத்தை தடை செய்ய போராடும் தமிழ்நாடு குடிகாரர் சங்க தலைவராக வரும் ரோபோ சங்கர் கதாபாத்திரம், பூமேஷின் ரசிகராக வரும் ரமேஷ் கதாபாத்திரம், பிரைம் டிவியில் செய்திவாசிப்பாளராக வரும் இயக்குநர் பாலாஜி மோகனின் கதாபாத்திரம் என்று ஒரு மெகா சீரியல் அளவுக்கு ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்..

இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்க.. அதே நேரத்தில் ஊருக்குள் தொற்றுநோய் பரவுகிறது. இறுதிக்காட்சி நெருங்க நெருங்க ஒவ்வொருவருக்கும் பிரச்சனை தீர்ந்து போகிறது… இந்த பிரச்சனை தீர்ந்து போவதற்கு, இந்த தொற்றுநோய் வந்ததும் அரசாங்கம் சட்டம் போட்டதும் தடையாக இருந்ததா..? இல்லை உதவியாக இருந்ததா…? என்பது இயக்குநருக்கே வெளிச்சம்… இந்த நோய்க்கும், அரசாங்கம் சட்டம் போட்டதற்க்கும் இவர்களுக்கு இருக்கின்ற பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை.. இதில் நாயகன், பேசிவிட்டால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற நிலைப்பாடு உடையவன், நாயகியோ பேசுவதால் தான் பிரச்சனையே என்ற நிலைப்பாடு உடையவள், நடுவே வரும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் பேச்சு மொழி தேவையே இல்லை என்பது போன்ற கருத்தை வேறு தூவிச் செல்கிறார்கள்.. படத்தின் தலைப்போ வாயை மூடிப் பேசவும்… ஆக இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள்..?


இதில் பேசியே எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு காண நினைக்கும் நாயகன், தன் ஆசிரமத்தை மீட்க வினுச்சக்கரவர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தோற்கிறான்… நடிகர் பூமேஷை எதிர்க்கும் குடிகார சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தோற்கிறான்.. இப்படி அவன் தோற்றுக் கொண்டே இருக்க கடைசி காட்சியில் நாயகி சொல்கிறாள்.. “நீ சொன்னதுதா சரி.. நீ ஜெயிச்சிட்ட..” இப்படி நம்மை குழப்பியடிக்கும் காட்சிகள் திரைக்கதையில் ஏகத்துக்கு உண்டு. இதுபோதாதென்று இயக்குநர் வேறு இரண்டு காட்சிக்கு ஒரு முறை செய்தி வாசிக்கிறேன் என்கின்ற பெயரில் காமெடி செய்வதாக எண்ணிக் கொண்டு நம்மை மேலும் வெறுப்பேற்றுகிறார்…

இப்படி ஒரு நல்ல ஐடியாவை மட்டும் பிடித்துவிட்டு, முழுக்கதையையும் முடித்துவிட்டதாக திருப்திபட்டுக் கொண்டு படப்பிடிப்புக்கு கிளம்பிவிடும் இயக்குநர்களின் பட்டியல் தமிழ் சினிமாவில் வரவர நீண்டு கொண்டே செல்கிறது… இப்படி ஒரு நல்ல ஐடியாவை பிடித்துவிட்டு, அதனை முழுக்கதையாக செதுக்குவதற்கான உழைப்பை அந்தக் கதைக்கு கொடுக்காமல், தங்களுக்கு தாங்களே திருப்திபட்டுக் கொண்டு, கதையை முழுமையடைய விடாமல் சிதைத்து விடுகின்றனர்.. இதன் மையக் கதையைக் காட்டிலும் கிளைக் கதையாக வரும் சில கதைகள் ஈரமும் ஈர்ப்புமுள்ளதுமாக இருக்கிறது.. இப்படி முழுமை பெறாத கதை, ஏராளமான கிளைக்கதைகள், குழப்பமான கதை மையம், தெளிவில்லாத நோக்கம் என ஏக குறைகளைக் கொண்டிருக்கிறது இந்த வாயை மூடிப் பேசவும்… இருப்பினும் அந்த வித்தியாசமான கதைக்களனும் அந்த புதிய கற்பனையும் தான் படத்தைக் கொஞ்சமேனும் காப்பாற்றுகின்றன… படத்தைத் தான்… நம்மை அல்ல… அதுபோல் ஆங்காங்கே வரும் வசனங்களில் சில நன்றாக இருந்தன… அதில் குறிப்பாக நாயகனிடம் அந்த ஆசிரமத் தலைவி கூறும் கீழ்க்கண்ட வசனம்.. “இந்த உலகத்துல இருக்குற எல்லாரும் உன்னோட உதவிய நம்பித்தான் வாழ்றாங்கங்கிற முட்டாள்தனமான எண்ணத்த முதல்ல விடு…” அதுபோல வசனமே இல்லாமல் கடந்து செல்லும் அந்த பதினைந்து நிமிடப் படமும் ஒரு நல்ல முயற்சி.. அதற்காகவும் பிரத்யேக பாராட்டுக்கள்..

மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானுக்கு நடிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.. மிகச் சரளமாக நடிப்பு வருகிறது.. எக்ஸ்பிரஸன்களும் அழகாகவே வருகிறது… நிச்சயமாக தமிழிலும் நல்ல எதிர்காலம்… வழக்கத்துக்கு மாறாக அதிகம் பேசாத, முக சேஷ்டைகள் காட்டாத நஸ்ரியா… இருந்தாலும் குறை சொல்ல முடியாத அழகு.. இவர்களை அடுத்து படத்தில் அதிகமாக கவர்பவர் ரோபோ சங்கர் தான்… அந்தக் கிளைக்கதையே படத்துக்கு தேவை அற்றது என்றாலும் கூட அவரது பாடிலாங்குவேஜ் தான் படத்தை சில இடங்களிலாவது காப்பாற்றுகிறது.. இசையமைப்பாளர் சீன் ரோல்டன் என்னும் ராகவேந்திர ராஜா ராவ் தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வரவு… இசையும் பிண்ணனியும் பல இடங்களில் கவனிப்பை கோரி நிற்கிறது.. வாழ்த்துக்கள்…


மொத்தத்தில் இந்த வாயை மூடிப் பேசவும் திரைப்படம் ஒரு புதிய ஆனால் முழுமைபெறாத, முழு செறிவுடன் எடுக்கப்படாத ஒரு முயற்சி… அந்த புதிய கதைக்களனுக்காகவும், அந்த அற்புதமான அதீத கற்பனைக்காகவும் ஒரே ஒரு முறை பார்க்கலாம்… இடையிடையே உங்கள் பொறுமையை சீண்டிப் பார்ப்பது போல் பல காட்சிகள் வரும்… அதை பொறுமையோடு கடக்க கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்…

No comments:

Post a Comment