Wednesday, 21 November 2012

துப்பாக்கி:


மாஸ் ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும் நல்லகதை இல்லாவிட்டால் அந்த படம் ப்ளாப் தான் என்று இருக்கும் இன்றைய நிலையில் விஜய்க்கு நண்பனை தொடர்ந்து மற்றொரு வெற்றிப்படமாக அமைந்திருக்கும் படம். ஏழாம் அறிவு தோல்விக்கு பிறகு முருகதாஸ்க்கு மீண்டும் ஒரு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கும் படம்.

பொதுவாக எனக்கு முருகதாஸ் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அதில் ஒரு நல்லவிதமான செய்தி ஒளிந்திருக்கும். ரமணா, கஜினி, ஏழாம் அறிவு போன்றவை அதற்கு உதாரணம். அதை தொடர்ந்து இதில் ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கையில் அவன் செய்கின்ற அர்பணிப்புகளை கொஞ்சமேனும் கொஞ்சம் யோசிக்க வைத்திருப்பதாலேயே இந்த படம் எனக்கு பிடித்திருக்கிறது. தமிழ் சினிமா அடித்து துவைத்த கதைதான்.. ஊரை காரணமேயின்றி அழிக்க நினைக்கும் தீவிரவாதி, அவனை தனக்கு எந்த இழப்பும் இன்றி அழித்து, தன் நாட்டை காக்கும்  மிலிட்டரி ஹீரோ.


இந்த அதர பழசான கதை எப்படி மெருகேறியது என்று கேட்டால் மொத்தம் நான்கு சீன்களால் மட்டுமே என்பேன். பன்னிரெண்டு தீவிரவாதிகளை கொல்ல விஜய் எடுக்கும் நடவடிக்கை.. (முக்கியமாக அவரே 12 பேரையும் கொல்லாதது), விஜயின் டீமை கண்டறிய வில்லன் எடுக்கும் நடவடிக்கை, வில்லன் தன்னை எந்த வழியாக நெருங்குவான் என்பதை கண்டறிய விஜய்க்கு கிடைக்கும் க்ளு… நாயைக் கொண்டு விஜய் செய்யும் ஹீரோயிசம்…. என்னை பொருத்தவரை கண்டிப்பாக க்ளைமாக்ஸ் காட்சிக்காக இல்லை. இந்த நான்கு சீன்களே மொத்த படத்தையும் காப்பாத்துகின்றன.

படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் அம்சங்கள் என்று பார்த்தால், வசனம், சில டைமிங் காமெடிகள், ஜெயராமின் நடிப்பு. ”டிரய்ன் சரியா எத்தன மணிக்கு வரும்ன்னு தெரியணும்னா வந்தப்புறந்தா தெரியும்” ”தமிழ் கொஞ்ச தெரியும், தமிழன நெறையா தெரியும்” உயிர எடுக்கணும்னு நினைக்கிறவனே தன் உயிர பத்தி கவலப்படல.. உயிர காப்பாத்தணும்னு நினைக்கிற நாம நம்ம உயிர பத்தி கவலைப்படலாம” “என்ப்பா உன் வீட்டு ட்ரஸ்ல புத்தகம், ட்ரஸ் இதெல்லாம் இருக்கவே இருக்காதா…” ”பெட்ரோமாஸ் லைட்டேதா வேணுமா…” “அப்பாவ அடி.. அப்பாவ அடி..ன்னு நீங்கதான சொன்னீஙக…” என பல இடங்களில் வசனம் குத்தலாகவும் குதூகலமாகவும் இருக்கிறது.

கமாண்டோ கேப்டன் ஜெகதீசாக விஜய். நாயைக் கொண்டு கடத்தல்காரர்களை கண்டறியும் இடத்தில் இவரின் உடல்மொழி அபாரம், மேலும் ஜெயராமுடனான ஹோட்டல் சீனில் சொல்லிக் கொள்வது போல் இருக்கிறது நடிப்பு. காஜலை திருமணம் செய்ய நிச்சயித்த மாப்பிள்ளையாக ஜெயராம் மனுசன் அலட்டாமல் சிரிக்க வைத்துவிடுகிறார். இது போக சத்யனும் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்…. பாடல்கள் மனதில் நிற்கவே இல்லை… இந்த கூட்டணி உடைந்து விடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது.. ஒவ்வொரு பிரேமிலும் சந்தோஷ் சிவன் தெரிகிறார்.

குறை என்று பார்க்கப் போனால் சில ஆடியன்ஸ்க்கு நிறைவாக தெரியும் அதே காட்சிகள் தான். குறிப்பாக அந்த பன்னிரண்டு தீவிரவாதிகளை பிந்தொடர்ந்து செல்லும் கமாண்டோக்களின் லட்சணம் இருக்கிறதே… அட போங்கப்பா… எங்க ஊர்ல பசங்க பொண்ணுங்கள பாலோ பண்ணும் போதே இதவிட பெட்டரா பண்ணுவாய்ங்க…. யாருக்கும் சந்தேகம் வராதமாதிரி…

விஜய் வீட்டில் தப்பிக்கும் தீவிரவாதிக்கு டைரக்டர் என்ன கட்டளை இட்டார்னே தெரியல… மனுசன் இந்தப் பக்கம் அந்த பக்கம் திரும்பாம.. பத்தடி தூரத்துல பாலோ பண்ற விஜய் ஜீப்புக்கு தொந்தரவு கொடுக்காம அட்டென்சன்லயே நடக்கிறாரு.. எத்தனையோ பேப்பர்ல படிச்சிருக்கேன்… போலீஸ் மோப்ப நாய் பாதி தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை என்று… போலீசுக்கு கூட கிடைக்காத சூப்பர் மோப்ப நாய் முருகதாஸ் சார் டீமுக்கு கிடைச்சிருக்கு… அது கடைசி தூரம் வரைக்கும் ஓடி களவாணி பயல பூரா காட்டிகுடுத்திருது….

க்ளைமாக்சில் நடுக்கடலில் எல்லாவிதமான டெக்னிக்குகள் மற்றும் திட்டங்களுடன் அமர்ந்திருக்கும் தீவிரவாதி கூட்டத்திற்கு கடலுக்கு அடியில் வந்து பாம் வைக்கும் டெக்னிக் எப்படி தெரியாமல் போகும். இதைகூடவா அவர்கள் யோசிக்காமல் இருப்பார்கள். மேலும் ஒரு பக்கத்து பார்வை போல் தீவிரவாதிகள் என் குண்டை வெடிக்க செய்து குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்ற கேள்விக்கும் விடையே இல்லை.

இன்னொரு குறையாக பட்டது என்னவென்றால் ராணுவ வீரர்களை போலீஸ் நபர்களுடன் ஏன் ஒப்பிட வேண்டும். இரண்டு வீரர்களுமே மிக முக்கியமான அர்ப்பணிப்புகளை நம் நாட்டிற்காக ஆற்றுபவர்கள். அதில் ஒருவர் உயர்ந்தவர் ஒருவர் தாழ்ந்தவர் என்கின்ற ரீதியிலான ஒப்புமையை தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இதற்கு பதில்  கடவுளாக மதிக்கப்படும் விளையாட்டு வீரர்களையோ அல்லது திரைப்பட நடிகர்களையோ அல்லது அரசியல் தலைவர்களையோ ஒப்புமைபடுத்தி பேசியிருந்தால் அந்த காட்சிகள் இன்னும் வலுவாக அமைந்திருக்கும் என்பது என் எண்ணம்.

இப்படி எந்த எந்த காட்சிகள் பிற ரசிகர்களால் ரசிக்கப்படுகிறதோ அதே காட்சிகளில் இருக்கும் லாஜிக் ஓட்டைகளே என் கண்ணை உறுத்துகின்றன.. இருப்பினும் அங்கங்கே வரும் ஹீரோயிசமும், சின்ன சின்ன வசனம் மற்றும் காமெடியும் எந்த அயர்ச்சியும் இன்றி முழுப்படத்தையும் காணவைப்பதே இதன் முக்கியமான வெற்றி.


இருப்பினும் மற்ற எத்தனையோ குப்பை படங்களுக்கு மத்தியில் எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் நல்லகருத்தை பின்புலமாக கொண்டு இந்த திரைப்படத்தை கொடுக்க முனைந்து இருக்கும் முருகதாஸ் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்..

No comments:

Post a Comment