Friday, 20 March 2015

அனேகன் :

பிற வெளிநாட்டுத் திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்… உள்ளூர் இயக்குநரான கே.வி.ஆனந்த் அவர்களின் திரைப்படங்கள் எந்தெந்த படங்களின் அப்பட்டமான தழுவல் என்று.. அந்த வெளிநாட்டுப் படங்களின் உழைப்பை அப்படியே எடுத்துக் கொண்டு, அதில் சின்ன சின்ன பூச்சு வேலைகள் மட்டுமே செய்த படைப்புக்களே இவரது படங்கள்.. அதனால் அனேகன் திரைப்படத்தின் கதையும் இதைப் போலவே ஏதோவொரு மொழித் திரைப்படத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு படம் வெளிவருவதற்கு முன்பே எனக்கு இருந்தது.. ஆனால் அது நம் பழைய தமிழ் திரைப்படத்திலேயே இருக்கும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை.. 1963ல் இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படம் தான் அது.. அதே போல் இராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கில் வெளிவந்து பெரிய ஹிட் அடித்த “மகதீரா” திரைப்படத்தின் கதையின் சாயலும் கூட இதில் உண்டு.. ஆனாலும் கூட கே.வி.ஆனந்த் மற்றும் இரட்டை எழுத்தாளர்கள் சுபா ஆகியோரின் கூட்டணி அந்த கதைக்களத்தை அப்படியே நகலெடுத்து சிறுசிறு பூச்சு வேலைகள் மட்டுமே செய்யாமல், கொஞ்சம் போல் திரைக்கதைக்காக மூளையையும் கசக்கி இருக்கிறார்கள் என்பது தான் அனேகனின் ஆச்சர்யம்..


அனேகனை முழுக்க முழுக்க ஒரு திரைப்படத்தின் நகலென்று சொல்லவே முடியாது.. முன் ஜென்மம் என்கின்ற அத்தியாயத்தை மட்டுமே வைத்துக் கொண்டு இதனை காப்பி என்று சொல்ல முன்வந்தால், தமிழ் சினிமாவில் வந்த எல்லா காதல் படங்களுமே காப்பி எடுக்கப்பட்டவை தான் என்று ஒத்துக் கொள்வது போல் ஆகிவிடும்.. படம் வெளிவந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டதாலும், பல தியேட்டர்களில் தூக்கப்பட்டுவிட்டதாலும், அதன் கதையைப் பற்றி விரிவாக விவாதிப்பது அதன் வியாபாரத்தையோ அல்லது படம் பார்ப்பவர்களின் ஆர்வத்தையோ சிதைக்காது என்பதால், கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.. அதுமட்டுமன்றி அனேகன் தொடர்பாக இணையத்தில் எழுதப்பட்ட பல விமர்சனங்கள் கதையை தவறாக புரிந்து கொண்டு எழுதப்பட்டு இருப்பதாக பார்க்கிறேன்.. அவர்களின் புரிதலின்படி அனேகன் ஒரு மூன்று ஜென்ம கதைகளை உள்ளடக்கிய ஒரு திரைப்படம்.. ஆனால் அனேகனின் கதை முன் ஜென்மக் கதையோ அல்லது, முன் ஜென்ம நினைவுகளின் மீட்டெடுப்போ இல்லை என்பதுதான் என் பதில்.

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் கதை என்னவென்றால், காதலர்களை சேரவிடாமல் பிரித்து கொன்றுவிடுகிறான் வில்லன்.. அவர்கள் மீண்டும் வெவ்வேறு இடங்களில் பிறந்து, மீண்டும் காதலித்து சேர முயலும் போது, வயதாகி கிழவனாக இருக்கும் அதே வில்லன் மீண்டும் அவர்களை சேரவிடாமல் பிரிக்கப் பார்க்கிறான்.. மகதீராவின் கதையும் கிட்டத்தட்ட இதேதான்.. ஆனால் அதில் வில்லனுக்கும் மறுஜென்மம் இருக்கும். அதனோடு அது வரலாற்றுப் பிண்ணனியும் கொண்ட கதை… சரி இப்போது அனேகனுக்கு வருவோம்.. அனேகனின் கதை, அதுவும் இதேதான்.. ஆனால் அதனோடு முன் ஜென்மம் என்பதை பயன்படுத்திக் கொண்ட, அறிவியல் பிண்ணனியும் கொண்ட கதைதான் அனேகன் என்று சொல்லலாம்.

கதை இப்படி தொடங்குகிறது.. பர்மாவில் இராட்டினம் உடைந்து விழும் போது ஆபத்தில் இருந்து நாயகியை நாயகன் காப்பாற்றுகிறான்.. நாயகி அரச குடும்பத்தை சேர்ந்தவள், நாயகன் சாதாரண கட்டிடத் தொழிலாளி. அதனாலேயே இருவருக்கும் காதல் வருகிறது… இயக்குநர் சமகால அரசியல் பேசுபவர் என்பதால், பர்மாவில் தமிழர்கள் துரத்தப்பட்ட நிகழ்வை இதனோடு காட்சிபடுத்துகிறார். நாயகன் இந்தியாவுக்கு ஓட முற்பட, நாயகியும் அவனோடு ஓடிப்போக முயல, இருவரும் நாயகியின் தந்தையால் கொல்லப்படுகின்றனர் இதன் தொடர்ச்சியாக நிகழ்காலத்துக்கு வருகிறோம்.. மனநல மருத்துவரிடம் ஆழ்மன சிகிச்சையில் இருக்கும் நாயகிக்கு மெதுவாக சுயநினைவு வருகிறது.. தான் சொல்லியதெல்லாம் கனவில்லை என்றும், நிஜத்தில் நடந்தது என்றும் அவள் மருத்துவரிடம் வாதிடுகிறாள்.. மருத்துவர் அவளை சமாதானம் செய்கிறார்..

அடுத்த இரண்டு காட்சிகளில் தனது கனவு நாயகனைப் பார்க்கிறாள்.. இவர்களது தற்கால சந்திப்பிலும் ஒரு விபத்து.. அதிலிருந்து நாயகியை வழக்கம் போல் நாயகன் காப்பாத்துகிறான்.. நாயகனை மூநா-ரூநா, காளி, இளமாறன் என வேறுவேறு பெயர்களில் அழைக்கிறாள்.. நாயகன் குழம்புகிறான். அந்த நிறுவனத்தின் எம்.டி அவர்களை விடுப்பில் போகும்படி கூறுகிறார்.. நாயகியிடம் மருத்துவரை சரியாக சந்திக்கிறாயா என்றும் எம்.டி விசாரிக்கிறார்.. நாயகிக்கு நாயகன் மீது காதல் வளர, நாயகிக்கு கொஞ்சமும் பிடிக்காத மாமாவுக்கு (பர்மா கதையில் நாயகியின் அப்பா) அவர்கள் காதலின் மீது எரிச்சல் வருகிறது. நாயகி சொல்லும் விசயங்களில் நம்பகத்தன்மை இல்லாததால், நாயகனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

இதே நேரத்தில் ஒரு கும்பல் நாயகனை கொல்ல முயற்சிக்கிறது.. நாயகி சிகிச்சையின் போது அடுத்த கனவுக்கு செல்கிறாள்.. செண்பகவள்ளியாக நாயகியும், இளமாறனாக நாயகனும் அரசன் அரசியாக இருக்க, அவர்களது பாதுகாவலனாக வரும் முகத்தில் வெட்டுத் தழும்பு கொண்ட(ஆஷிஷ் வித்யார்த்தி) ஒருவன் அவர்களை கொல்லப் பார்க்கிறான்.. அதைக் கண்ட பயத்தில் அலற கனவு முடிகிறது.. நாயகனும் நாயகியும் செல்லும் கார் விபத்தில் சிக்க, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாயகி, திடீரென ”காளி அந்தக் கொலைய பண்ணல..” என்றுக் கத்திக் கொண்டு எழுந்து, முகத்தில் தழும்பு கொண்ட கோபிநாத் என்ற இன்ஸ்பெக்டரை தேடுகிறாள்.. அப்படி அங்கு யாரும் இல்லை.. நாயகன் அவளை திட்டி அழைத்துச் செல்கிறான்.. அடுத்த நாள் முகத்தில் தழும்பு கொண்ட கோபிநாத் என்னும் பெயர் கொண்ட துணை ஆணையர், நாயகியை தேடி வர நாயகன் அதிர்ச்சி அடைகிறான்.. (அந்த துணை ஆணையர் தான், அரசன் அரசி முன் ஜென்ம கதையில் கூடவே இருந்து கொலை செய்ய முயல்பவராக வருபவர்) காளி தொடர்பான வழக்கு, 25 வருடங்களுக்கு முன்னால் தான் விசாரித்த வழக்கு என்றும், கொலை செய்துவிட்டு தலைமறைவாகிய கல்யாணியும் காளியும் எங்கு இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா..? என்றும் அவர் நாயகியை கேட்க, அவள் தனக்கு தெரியும் என்று சொல்லி, ஒரு இடத்தை காட்டுகிறாள். அங்கு தோண்டிப் பார்க்க, அங்கு இரண்டு எலும்புக் கூடுகள் கிடைக்க, நாயகன் அதிர்ச்சி அடைகிறான்.. அந்த இரண்டு எலும்புக் கூடுகளும் கைகோர்த்தபடி இருக்க, அதற்கு அருகில் ஒரு வெட்டப்பட்ட விரலின் எலும்பு கிடக்கிறது. இந்த இடத்தில் முதல்பாதி முடிகிறது..

சமீபத்தில் வந்த தமிழ் திரைப்படங்களில் ஒரு மிகச்சிறப்பான திரைக்கதை கொண்ட திரைப்படமாக நான் அனேகன் திரைப்படத்தைப் பார்க்கிறேன்.. திரைக்கதையில் என்ன நடக்கிறது என்பதை ஓரளவிற்காவது ஆடியன்ஸ் யூகிப்பதற்கான இடமும் அளித்து, சின்ன சின்ன திருப்புமுனைகளையும் உள்ளடக்கி, திரைக்கதையின் சுவாரஸ்யத்தையும் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த முதல்பாதியின் முடிவில் பார்வையாளருக்கு எந்தமாதிரியான கேள்விகள் தோன்றும். ஆக மூன்று ஜென்மங்களும் உண்மையா..?? இந்த மீள் நினைவுகள் நாயகிக்கு எப்படி வந்தது..? நாயகனுக்கு ஏன் வரவில்லை..?? அந்த எழும்புக் கூடு காளி மற்றும் கல்யாணி தான் என்றால், அவர்களை கொன்றவர்கள் யார்..?? தற்கால கதையில் நாயகன் நாயகியை கொல்ல நினைப்பவர்கள் யார்..?? பர்மா ஜென்ம கதையில் நாயகியின் தந்தையாக இருப்பவர் தான், இப்பொழுது நாயகியின் மாமா.. ஆக அவர்தான் வில்லனா..?? இல்லை அரச ஜென்ம கதையில் கூட இருந்தே குழி பறிப்பவராக வரும் அந்த துணை ஆணையர் தான் காளி கல்யாணியை கொலை செய்தாரா..?? இப்படி பல கேள்விகள் தோன்றுகிறது..

இந்த கேள்விகளுக்கு மத்தியில் முதல்பாதியில் கடந்து சென்ற மற்றொரு முக்கியமான காட்சியும் நினைவுக்கு வருகிறது.. அது நாயகன் நாயகியுடன் பணி புரிந்த ஒரு பெண்ணின் மரணம்.. அவள் கண்களுக்கு பேய்கள் அவளை விரட்டுவது போல் தெரிய, அவள் மாடியில் இருந்து குதித்து இறக்கிறாள்.. இவர்கள் பணிபுரியும் நிறுவனம், தற்கால குழந்தைகள் கணினியில் விளையாடும் அனிமேஷன் தொடர்பான விளையாட்டுக்களுக்கான மென்பொருளை தயார் செய்யும் நிறுவனம் என்பது உபதகவல்.. சமீபத்தில் முதல் பாதியில் இத்தனை கேள்விகளை மனதிற்குள் எழுப்பிய ஒரு திரைப்படம் சத்தியமாக நினைவில்லை.. அதனாலயே இந்தப்படம் எனக்குப் பிடித்தது…

இரண்டாம் பாதியை முழுவதுமாக விவரிக்க வேண்டும் என்று அவசியமில்லை.. அதில் காளி கல்யாணியின் காதல் அத்தியாயங்களும், அவர்களை கொலை செய்தவர் யார் என்னும் கேள்விக்கும் விடை கிடைக்கிறது.. ஆனால் இதில் மிகமிக முக்கியமானது, இதெல்லாம் எப்படி நாயகிக்கு நினைவில் இருக்கிறது என்பதே.. அதற்கும் இரண்டாம் பாதியில் தெளிவாக விடை சொல்கிறார்கள்.. அந்த சம்பவம் நடந்ததை நேரில் பார்த்த ஒரு சாட்சி இன்னும் உயிரோடு இருக்கிறார்.. அவர்தான் கல்யாணியின் தந்தை(தலைவாசல் விஜய்).. அவரை ஒரு மனநல விடுதியில் NSS வேலைக்காக சென்ற தற்கால நாயகி(மதுமிதா) சந்திக்கும் போது, அவளுக்கும் கல்யாணியான தன் மகளுக்குமான உருவ ஒற்றுமையைப் பார்த்து, பிரமித்த அவர், நடந்த நிகழ்வுகளை அவளிடம் விவரிக்கிறார்.. அவர் ஒரு ஓவியர் என்பதால் படத்தோடு விவரிக்கிறார்… அதில் தான் கல்யாணி எப்படி இருந்தாள், காளி எப்படி இருப்பான், அவர்களுக்கு உதவிய போலீஸ் எப்படி இருப்பார் என்பதை தெரிந்து கொள்கிறாள்.. அவள் அதை வெளியில் சொல்லிய போதும், மனநலம் பாதித்தவரின் கதை என்பதால், யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அது நாயகி மதுமிதாவின் மனதில் அப்படியே பதிந்து போய்விடுகிறது..

சரி.. அப்படி என்றால் மற்ற முன் ஜென்ம நினைவுகள் எப்படி வந்தன.. அதற்கான பதிலும் படத்தில் இருக்கிறது.. அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள், ஒரு குறிப்பிட்ட மாத்திரைகளை சாப்பிடும் காட்சி(நாயகி மற்றும் அந்த இறந்த பெண் உட்பட) ஓரிரு இடங்களில் வருகிறது… அதுவொரு தடைசெய்யப்பட்ட மருந்து.. அதை எடுத்துக் கொள்ளும் போது, அது அவர்களின் மூளையை அபரிமிதமாகத் தூண்டி கற்பனையை தூண்டுவதோடு மட்டும் அல்லாமல், மருந்தின் அளவு அதிகமாகும் போது, அது கற்பனையான சம்பவங்கள் நிஜத்தில் நடப்பது போன்ற ஒரு பிரமையையும் கொடுக்கிறது.. அந்த பெண்ணின் மரணத்தின் போது அவளை துரத்துவது போலத் தெரியும் பேய் உருவங்கள் அதற்கு உதாரணம்.. அதுமட்டும் அல்லாமல், பேய்கள் மனிதர்களை துரத்துவது, ராட்டினம் உடையும் போது ஒருவன் காப்பாற்றுவது, அரசன் அரசியை உடன் இருப்பவர்களே கொல்ல முயலுவது இவை எல்லாமே அந்த நிறுவனம் விளையாட்டுக்காக தயாரித்த மென்பொருள்களின் மாதிரி வடிவங்கள்… அதை தயாரிப்பதில் உதவியவர்கள் அதனோடு தொடர்புடைய நாயகி, மற்றும் அந்த இறந்த பெண் இருவருமே… ஆக அவர்களுக்கு வரும் அந்த மாயக் காட்சிகள் எல்லாமே, அவர்களது அதீத கற்பனையின் விளைவுகள் தான்.. ராட்டினம் உடையும் விளையாட்டு மாதிரியை உருவாக்கும் நாயகி, நாயகனுக்கு பதிலாக தன் மனதில் பதிந்து போன உருவத்தை எடுத்து பொருத்திக் கொள்கிறாள்… தன் மாமாவை அவளுக்கு பிடிக்காது என்பதால், பர்மா ஜென்மமாக வரும் இராட்டின விளையாட்டில், அவரை வில்லனாக்குகிறாள்.. காளி கல்யாணியை கொன்றவனின் உருவம் அவளுக்கு சரியாக தெரியாததால், அரசன் அரசி கதையில் கொல்ல வரும் நபருக்கு, இன்ஸ்பெக்டர் கோபிநாத்தின் உருவத்தை பொருத்துகிறாள்..

இப்படித்தான் ஒரு ஜென்மத்தில் நடந்த கதையை கேட்ட நாயகி, விளையாட்டுக்களை உருவாக்கும் போது, மாத்திரையின் உதவியுடன் பல முன் ஜென்மங்களை தன்னையறியாமல் உருவாக்கிக் கொள்கிறாள்… அதனால் தான் முதலில் அவள் சொல்லும் முன் ஜென்மக்கதைகள் எல்லாமே தாங்கள் உருவாக்கிய விளையாட்டு என்பதனை உணரும் எம்.டி, அதனை சீரியஸாக எண்ணாமல் அவளை தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ள சொல்கிறார்.. ஆனால் அவள் உண்மையாக நடந்த சில சம்பவங்களை கூறும் போது, அது எம்.டியை பாதிக்கிறது.. ஆக காளி கல்யாணியை கொன்றவர்கள் தண்டிக்கப்பட்டார்களா..? நாயகன் நாயகி சேர்ந்தார்களா..?? என்பது மீதிக் கதை.. ஆக இது முன் ஜென்மக் கதை அல்ல.. உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணுக்கு ஒரு இறந்தகால உண்மை தெரிய வருகிறது.. அதனோடு தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொள்வதால் அவளுக்கு ஏற்படும் சைக்கலாஜிக்கல் பிரச்சனைகளின் Illusion வடிவத்தைப் பற்றி பேசும் படம்..தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்வது அபத்தமாக இருக்கும் என்பதால், அதை சொல்லாமலே விடுகிறேன்..  நாயகியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் படுக்கை வசத்தில் உள்ள உதடுகளை செங்குத்தாக குவித்து அடிக்கின்ற அந்த கிஸ் சுவாரஸ்யமானது மட்டுமன்றி, மிகவும் கடினமானதும் கூட.. மற்றபடி நடிப்பில் சொல்லிக் கொள்ளும்படி செய்திருக்கிறார்.. படத்தில் குறைகளே இல்லை என்று சொல்லமுடியாது.. முதல்பாதி முழுக்க கதை தொடங்கவே இல்லையோ என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.. அதுபோல படத்தில் காட்டப்படும் எந்தவொரு காதலும் உணர்வு பூர்வமாக இல்லாமல் இருப்பதுமொரு முக்கியமான குறை.. அதுபோல் ஓவியங்கள் வரைந்து நடந்ததை விளக்கும் தலைவாசல் விஜய், கொலை நிகழ்வதற்கு முன்பே மயங்கிவிட்டு, எப்படி நடந்ததை அப்படியே விவரித்தார் என்பதும், போலீஸ் அதிகாரியின் உருவத்தைக் கூட மறக்காமல் வரைந்து வைத்த அவர், கொலைகாரனின் உருவத்தை ஏன் வரையவில்லை என்பதும் நெருடுகிறது.. நாயகியின் மீது அவ்வளவு ஈடுபாடு கொண்டிருக்கும் எம்.டி ஏன் அவளுக்கும் அந்த மாத்திரைகளை கொடுக்கிறார் என்பதற்கும் சரியான விளக்கம் இல்லை.. அதுபோல க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் எல்லாம் யூகிக்கக்கூடிய அலுப்பூட்டும் ஒன்றாகவே இருந்தது… கடைசி காட்சியில் தேவையில்லாமல், மூநா-ரூநா சமுத்ரா மரத்தில் போட்டு வைத்த ஹார்ட் சிம்பல் உள்ள வெட்டப்பட்ட மரத்தைக் காட்டி இன்னும் கதையை குழப்பி இருக்க தேவையில்லை.. இப்படி சில குறைகள் இருந்தாலும், சுவாரஸ்யத்துக்கு குறை இருக்காது என்பதால், அனேகனை அனேக தடவை பார்க்காவிட்டாலும் ஒரு தடவை கண்டிப்பாக பார்க்கலாம்..

No comments:

Post a Comment