Sunday, 22 March 2015

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்:


மூன்று வெவ்வேறு விதமான கதைகள் ஒரு சம்பவத்தால் இணைக்கப்படுவது போன்ற திரைக்கதை.. இந்த வகைமையைச் சேர்ந்த திரைக்கதைகள் தமிழில் எப்போதாவது தலைகாட்டுபவை. உதாரணமாக வானம், ஆய்த எழுத்து இவைகளைக் கூறலாம். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களிலும் இல்லாத ஒன்று இந்த தமிழுக்கு எண் 1யை அழுத்தவும் திரைப்படத்தில் இருக்கிறது. அதுதான் இந்தத் திரைப்படத்தை தனித்துவப்படுத்துகிறது.. அது கதையில் ஹீரோவாக கருதப்படும் மனிதன், அந்தப் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது போன்ற ஹீரோயிசம் இல்லாதது தான்.. இயற்பியல் தொடர்பான பரிசோதனைகள் செய்வதில் ஆர்வமிக்க ஒரு இளைஞன், ரியல் எஸ்டேட் தொழிலில் வீட்டுமனைகளை விற்கும் பிரதிநிதியாக வரும் ஒரு இளைஞன், கால் டாக்ஸி ஓட்டும் மற்றொரு இளைஞன்.. இந்த மூன்று பேரின் வாழ்க்கையும் ஒரு கட்டத்தில் செல்போன் சிக்னலுடன் தொடர்பு கொள்கிறது..


ஒருவனுக்கு செல்போன் சிக்னல்களை உருவாக்கிக் காட்டவேண்டிய ஒரு சவால்… மற்றொருவனுக்கு செல்போன் சிக்னல் கிடைத்தால்தான், தன் காதலியின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்கின்ற பிரச்சனை (ஆனால் இந்தப் பிரச்சனை அந்த கதாபாத்திரத்து தெரியாது, ஆடியன்ஸ்க்கு மட்டுமே தெரியும்..) மற்றொருவனுக்கு செல்போன் சிக்னல் கிடைக்கத் தொடங்கினால், அவனது உயிரும், இன்னும் பல மக்களின் உயிரும் போய்விடும் அபாயம் இருக்கிறது.. (இப்படி ஒரு பிரச்சனை இருப்பது இந்த கதாபாத்திரத்துக்கும் தெரியாது, ஆடியன்ஸ்க்கு மட்டுமே தெரியும்..) இப்படி மூன்றுவித கதைகளை மையமாகக் கொண்டு திரைக்கதை நகருகிறது.. ஹீரோக்களாக நகுல், தினேஷ், ஹீரோயினாக பிந்து மாதவி, ஐஸ்வர்யா என எல்லோரும் இருந்தாலும் அதிகமாக ரசிக்க வைப்பது மூன்றாவது ஹீரோவாக வரும் சதீஷும் அவரது காதலியும் தான்.. இவர்களோடு அந்த மொபைல் திருடனாக வரும் அந்த கதாபாத்திரமும் நம் ரசனையை திருடிக்கொள்கிறது.

சூரிய மண்டலத்தில் ஏற்படப் போகும் காந்தப்புயலால், தமிழ்நாட்டில் செல்போன்களின் அலைவரிசை பாதிக்கப்படும் என்ற செய்து உலவுகிறது.. தனது இயற்பியல் சார்ந்த அறிவையும் ஆர்வத்தையும் கொண்டு, அந்த அலைவரிசைகளை தற்காலிகமாக எப்படி கிடைக்கச் செய்வது என்று ஒரு புராஜெக்ட்டை தயாரித்து அதை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சிலருக்கு விற்றும் விடுகிறார் நகுல்.. அந்த குறிப்பிட்ட நாளில் எல்லா செல்போன் அலைவரிசையும் ஸ்தம்பித்துப் போக, அந்த புராஜெக்டை செய்துபார்க்க முயலுகிறார் நகுல்.. அவருடைய முயற்சி தோற்றால், ஒரு உயிர் இறக்க நேரிடும், பல உயிர்கள் தற்காலிகமாக பிழைக்க நேரிடும்.. ஒரு வேளை அவரது முயற்சி வெற்றி பெற்றால், ஒரு உயிர் காப்பாற்றப்படும், பல உயிர்கள் இறக்க நேரிடும் என்கின்ற டெம்போவிற்கு இடையில் கதை பரபரப்பு இல்லாமல் நகருகிறது..

நகுலுக்கு மிகச் சாதாரணமான, ஆன மனதில் நிற்பது போன்ற ஒரு நல்ல கதாபாத்திரம்.. வழக்கமான ஹீரோவுக்கான சண்டைகளோ, காதல் குலாவல்களோ அல்லது டூயட்களோ எதுவுமே இல்லை.. ஆராய்ச்சிகளின் மீது கிறுக்குப் பிடித்த ஒரு இளைஞன் எப்படி சுற்றிக் கொண்டு இருப்பானோ அப்படியே ஒரு பெர்முடாசுடன் சுற்றிக் கொண்டு இருக்கிறார்.. காதலை தயங்கி தயங்கி வெளிப்படுத்தும் ஹீரோயினிடம், எந்தவித கூச்சமும், பந்தாவும் இல்லாமல், வெகு சாதாரணமாக காதலை ஏற்றுக்கொண்டு, அவள் அனுப்பும் காதல் SMSகளுக்கு, தன் தாயைக் கொண்டே பதில் அனுப்பும் ஒரு வெரைட்டியான கதாபாத்திரம்.. இது தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு.. இது போன்ற கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பதாக இருந்தால், நகுலுக்கு நல்ல எதிர்காலம் உண்டு..

படத்தின் மிகப்பெரிய மைனஸ் தினேஷ்.. இவர் யார் அடுத்த விமல்…??, என்கின்ற ரேஸில், தலைகால் புரியாமல் முண்ணனியில் ஓடிக் கொண்டு இருக்கிறார்.. இவர் வருகின்ற காட்சிகளில் ஒன்றில் கூட துளி கூட உணர்ச்சியே இல்லை.. ஒரே மாதிரியான உடல்மொழியும், உணர்ச்சியற்ற கண்களும், வழக்கமான காதலியின் பின்னால் ஓடும் திருஷ்டி கதாபாத்திரம் இவருக்கு.. பிந்துமாதவியின் கதாபாத்திரம் நம் சினிவாவிற்கு புதுசு.. தற்கொலைக்கு முயற்சி செய்யும் நபர்களுக்கு கவுன்சிலிங்க் கொடுத்து மன ஆறுதல் ஏற்படுத்துவதை ஆத்ம பணியாக செய்யும் கதாபாத்திரம்… இந்த நபர்களை அவர்கள் எப்படி கண்டுபிடித்து, அவர்களுக்கு உளவியல் ரீதியாக உதவுகிறார்கள் என்பதான டீட்டெயிலிங்கில் கவனம் செலுத்தி, தினேஷ் போர்ஷனை இன்னும் நறுக்கி இருந்தால், படத்தில் விறுவிறுப்பு கூடி இருக்கும்..


படத்தின் நிஜ ஹீரோ ஹீரோயின் சதீஷும் அவரது காதலியும் தான்.. கால் டாக்ஸி ஓட்டும் சதீஷ், தன் மொபைலைத் தொலைத்து விட்டு, அதைத் திருடியவனிடம் பேசும் தொனியும், அவர்களுக்கு இடையே உருவாகும் ஒரு சுமூகமற்ற உறவும், படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவி இருக்கிறது.. அதுபோல அவருக்கு பார்க்கப்பட்ட பெண்ணாக வந்து, சதீஷை காதலிக்கத் தொடங்கும், அந்தப் பெண்ணின் கதாபாத்திர ஸ்கெட்ச் நேர்த்தி. ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு ஆணின் பெயரை சொல்லி, இதுல அவன் செம்மையான ஆளு, என்று சொல்லும் போது, சதீஷ் காட்டும் கடுப்பு ரியாக்‌ஷனும் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது.. ஏது நாயகன் வந்து தான் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கப் போகிறான் என்று நாம் எதிர்பார்த்து இருக்க, அப்படியான ஹீரோயிசங்கள் ஏதும் இல்லாமல், ஒரு மூன்றாந்தர கதாபாத்திரத்தைக் கொண்டு படத்தை முடித்து வைத்திருப்பது, சினிமாத்தனமாக இருந்தாலும் கூட, ரசிக்கக் கூடியதாக இருந்தது சிறப்பு..

படத்தின் குறைகள் என்று பார்த்தால், படத்தின் ஆரம்பத்திலேயே முடிவு என்ன என்பது நமக்குத் தெரிந்துவிடுவதும், நாம் எதிர்பார்த்தபடியே எல்லா சம்பவங்களிலும் முடிவு ஏற்படுவதும் தான் படத்தின் மிகப்பெரிய குறை… தினேஷ் போர்ஷனில் தொடர்ச்சியாக தொங்கிக் கொண்டு இருக்கும் அந்த சாஸ்திரக் கல் பீதியை கிளப்புவதற்குப் பதிலாக எரிச்சலையே கிளப்புகிறது.. அதுபோல எங்கே குண்டு வெடித்துவிடுமோ என்கின்ற பதைபதைப்பு படத்தில் எந்த இடத்திலும் நமக்கு வருவதே இல்லை.. அதீதமான எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான டெக்னிக்கல் வார்த்தைகளை பயன்படுத்தி, இரண்டாம் பாதியில் நகுல் கொடுக்கும் விளக்கம், படித்தவர்களுக்கே பாதிக்கு பாதிதான் புரியும் போது சாமானியர்களுக்கு புரிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே…


படத்தின் இயக்குநர் இராம்பிரகாஷ் இராயப்பன் படித்தவர் என்பது அவர் கதையோடு கல்வியை கையாண்டிருக்கும் விதத்திலேயே தெரிகிறது.. இன்றைய கல்வியை மதிப்பெண்களுக்காக மட்டுமே கற்றுக் கொண்டு இருக்கும் நம் சமூகத்தையும், அதை கண்டு கொள்ளாமல் விடும் கல்வி நிறுவனங்களையும் மறைமுகமாக சாடியிருப்பது வரவேற்கத்தக்கது.. வழக்கமான ஹீரோயிசம் செய்யும் ஹீரோக்களுக்கான கதையை செய்யாமல், அதிலிருந்து விலகி, யதார்த்தமான ஒரு நகுல் கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பது சிறப்பு.. அதுபோல வெறுப்பேற்றும் அம்சமாக மாறிவரும் பாடல்கள் இல்லாமல் இருப்பதும், இத்திரைப்படத்தின் தனிச்சிறப்பு.. கதைக்கு தேவையில்லாத விசயமாகவே இருந்தாலும், மிகவும் பொத்தாம் பொதுவாக காட்டப்படும் தீவிரவாத நடவடிக்கைகளை நம்ப முடியவில்லை… ரேடார் அளவிற்கு வளர்ந்திருக்கும் தீவிரவாத இயக்கங்கள், ஒரு அலைவரிசை பாதிப்பைக் கூட உணராமலா தங்கள் திட்டங்களை தீட்டுவார்கள் என்ற சந்தேகமும் மிக வழுவாகவே எழுகிறது.. இருப்பினும் ஒரு வித்தியாசமான, ஜனரஞ்சகமான பொழுதுபோக்குப் படம் பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக, இந்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தலாம்..

1 comment:

  1. அருமை. . இந்த படத்தின் உங்கள் விமர்சனத்திற்கு தான் காத்திருந்தேன். .

    ReplyDelete