Wednesday 28 May 2014

கிம் கி டுக் வரிசை – 5

                                                                                                          Kim Ki-duk
 
Spring summer fall winter and spring:

வாழ்க்கை எதனால் ஆனது என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.. என்று எனக்குத் தெரியாது… கிம் கி டுக் என்ன சொல்கிறார் தெரியுமா…? நம் வாழ்க்கை அன்பாலும் அறியாமையாலும் ஆசைகளாலும் ஏமாற்றங்களாலும் கோபங்களாலும் காதலாலும் காமத்தாலும் வெறுப்பினாலுமானது என்கிறார்… குறிப்பாக இன்னும் இரண்டையும் சேர்த்துக் கொள்ளச் சொல்கிறார்.. அது பிழை மற்றும் குற்றவுணர்ச்சி… ஆம் வாழ்க்கை பிழைகளாலும் அந்த பிழை சார்ந்த குற்றவுணர்ச்சிகளாலும் கூட ஆனது தான்..


ரஜினிகாந்த் அவர்களின் பாட்ஷா திரைப்படத்தில் வரும் தத்துவப்பாடல் நினைவிருக்கிறதா..? அந்தப் பாடல் வாழ்க்கையை எட்டாகப் பிரித்துக் கொள்ளச் சொல்கிறது… விளையாட்டு, படிப்பு, திருமணம், குழந்தை, செல்வம், ஓய்வு, சுற்றுலா, மரணம் என ஒவ்வொரு எட்டு வருடங்களிலும் ஒவ்வொரு மனிதனும் தவறாமல் கடந்து வருகின்ற வாழ்க்கையின் படிநிலைகளைப் பற்றி மேலோட்டமாக அந்தப் பாடல் விளக்குகிறது… கிட்டதட்ட அதே பாணியில் மனிதனின் வாழ்க்கையை வருடத்தின் நான்கு பருவங்களோடு ஒப்பிட்டு, மனிதன் தன் வாழ்நாளின் ஒவ்வொரு பருவத்திலும் எதன் மீது தீராத காதல் கொண்டு இருக்கிறான்… அவனது செயல்களுக்கு எது அடிப்படையாக இருக்கிறது என்பதை புத்தமத கோட்பாடுகளின் அடிப்படையோடு தீவிரமான மனநிலையுடன் ஆய்வு செய்ய முற்படுகிறது இத்திரைப்படம்..

வாழ்க்கைக்கும் பருவநிலைகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.. ஏன் இத்திரைப்படத்திற்கு பருவநிலைகளைக் கொண்டு பெயரிட வேண்டும் என்று எண்ணினால், ஒரு விடயம் கிடைக்கிறது.. அது காலத்தின் பருவநிலைகளுக்கும் மனித வாழ்க்கையின் பருவநிலைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு.. பொதுவாக பருவநிலையில் எந்தப் பருவத்தை நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள் என்று கேட்டால், பெரும்பாலான மக்களின் பதில் வசந்தகாலத்தை என்பதாகத் தான் இருக்கும்.. அதுபோலத்தான் உங்கள் வாழ்க்கையில் எந்த காலகட்டத்தை நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள் என்று கேட்டால், குழந்தமை தன்மை மாறாமல் நாம் வாழ்ந்து கழித்த நம் வாழ்க்கையின் முதல் எட்டு வருடங்களை நோக்கி பெரும்பாலான மக்கள் கை நீட்டலாம்… இப்படி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் நம் அடிமனதில் தோன்றுகின்ற ஒவ்வொரு விதமான வேட்கையானது ஏதோவொரு விதத்தில் பருவகாலங்களில் நமக்கு ஏற்படும் வேட்கையுடன் ஏதோவொரு முனையில் ஒத்துப்போகிறது என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது..

சரி.. அதற்கும் புத்தமத பிண்ணனிக்கும் என்ன தொடர்பு… எதற்காக புத்தமடாலயத்தில் இந்தக் கதை நடைபெற வேண்டும்…. இதே சிறுவனை ஒரு கிராமப்புற சூழலிலோ அல்லது நகர்மயமாக்கப்பட்ட நகரச் சூழலிலோ பெற்றோருடன் வாழவிட்டு, அந்த வாழ்க்கையின் படிமங்களை படைப்பாக வார்த்திருக்கலாமே…? ஏன் கிம் கி டுக் புத்தமடாலயங்களின் பிண்ணனியை நோக்கி ஓடினார் என்கின்ற ரீதியில் யோசிக்கும் போது, இந்த வாழ்க்கை பருவநிலை மாற்றங்களின் வழியாக அவர் எதைப் பற்றி பேச முயலுகிறார் என்கின்ற புள்ளியின் மேல் மொத்த கவனமும் குவிகிறது.. நாம் பிறந்ததில் இருந்து எத்தனை ஒழுக்கம் மற்றும் நன்னெறி சார்ந்த கோட்பாடுகள், போதனைகள், அறிவுரைகள்  நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது என்று நினைவு கூறுங்கள்.. அதில் எத்தனை விதிகளை நாம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் வழுவாமல் கடை பிடித்திருக்கிறோம் என்பதையும் சற்றே நினைவு கூறுங்கள்.. என்னளவில் பார்த்தால் நான் கடைபிடித்த ஒழுக்கநெறிகள் காற்றில் பறக்கவிட்ட ஒழுக்கநெறிகளை விட சத்தியமாய் அதிகம்.. ஆயினும் என்ன பிரயோஜனம்… அவற்றை நான் காற்றில் பறக்கவிட்டதால், அவை வானளவுக்கு பறந்து, பலரது பார்வைக்கும் என்னை உட்படுத்தி படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது… இது என் சொந்தக்கதை… படத்தின் கதை அதுவல்ல… ஆக இப்படி ஏகமாய் கடைபிடிக்க வேண்டிய போதனைகள் புத்திமதிகள் என நமக்கு முன் வாழ்ந்து சென்ற முன்னோர்கள் கடை விரித்து சென்றிருந்தாலும், அதைப் பயன்படுத்தி வெற்றியடைவதில், பெரும்பான்மையான மக்கள் அல்லது சிறுபான்மையான மக்கள் ஏன் தடுமாறுகிறார்கள் என்கின்ற காரணத்தை உளவியல் ரீதியாக அணுகிப் பார்ப்பதே இப்படத்தின் நோக்கம்… எனவே படத்தின் நோக்கத்தின் அடிப்படையில் சிறுவயதிலியே நன்னடத்தை விதிகளை நன்கு கற்ற ஒரு சிறுவன் தேவை… அவன் அந்த நன்னடத்தை விதிகளை கடைபிடிப்பதில் எப்படி தடுமாறுகிறான் என்பது மீதி கதை… ஆதலால் நகரத்து சிறுவனையோ கிராமத்து சிறுவனையோ எடுப்பதற்கு பதில், மடாலயத்தில் படிக்கும் ஒரு சிறுவனையே உதாரணத்துக்கு எடுத்து அவனே தடுமாறுகிறான் என்று நிருபித்து விட்டால், பிற சாமானியர்கள் தடுமாறுவதைப் பற்றி அதிகம் விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா…? ஆகவே தான் புத்த மடாலயத்தில் வளர்ந்து வரும் ஒரு சிறுவன்… இனி கதை..

தென்கொரியாவின் சீயோன் நீர்நிலையின் நடுவே மிதந்து கொண்டு இருக்கும் ஒரு புத்தமடத்தில் வசிக்கும் ஒரு வயோதிக புத்தமத துறவியிடம் போதனைகளை கற்க வந்திருக்கும் 8 வயது நிரம்பிய சிறுவனின் வாழ்க்கையின் வழியாக, மனிதனின் இயல்பான ஆக்ரோஷங்களையும் அதைக் கட்டுப்படுத்தி அவனை நல்வழிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மதம் போன்ற நிறுவனங்கள் பல நேரங்களில் அதில் தோற்றுப்போவதற்கான பிண்ணனியையும் பற்றிப் பேசும் படம்… இந்த Spring summer fall winter and Spring….



SPRING:

வசந்த காலம்… வசந்த காலத்துக்கு அர்த்தம் சொல்லத் தேவையில்லை.. எல்லாராலும் விரும்பப்படும் ஒரு பருவம்… திரைப்படத்தில் இந்தப் பருவத்தில் என்ன நடக்கிறது..? புத்தரை துதிக்கிறார்கள்.. அந்த அறையில் ஒரே ஒரு கதவு மட்டும் இருக்கிறது.. அதன் பக்கவாட்டுப் பகுதி முழுவதும் திறந்த நிலையில் தான் இருக்கிறது… கதவைத் திறந்து கொண்டும் வரலாம்… திறந்துவெளி வழியாகவும் வரலாம்… ஆனால் அவர்கள் இருவருமே கதவைத் திறந்து கொண்டு அந்தப் பாதை வழியாகவே வருகிறார்கள்.. இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் நியமவிதிக்கான குறியீட்டு பிம்பம் அந்த கதவு. சிறுவன் தன் குருவுடன் மூலிகை செடிகளைப் பறித்து வர நிலப்பரப்புக்கு வருகிறான்… மலை முகடில் இருக்கும் புத்தர் சிலை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.. 


மூலிகை செடிகளோடு சில விஷச் செடிகளையும் பறித்துச் செல்கிறான்… குரு அவனுக்கு எது நல்ல செடி எது தீயது என்று விளக்குகிறார்… அந்த சிறு பிராயத்தில் அவனுக்கு புதிய விசயங்களை கற்றுக் கொள்ளும் ஆவல் அதிகமாகவே  இருக்கிறது… அதனோடு சேர்ந்து விளையாட்டுப் புத்தியும்.. நீர்நிலையில் இருந்து நிலப்பரப்புக்கு செல்லும் படகில் துடுப்பு வழிக்க கற்றுக் கொண்டு அவனே படகை தனியாக எடுத்துக் கொண்டு செல்கிறான்… அங்கிருக்கும் ஒரு நாயுடன் ஓடியாடி விளையாடுகிறான்… விளையாட்டுத் தனமாக மீன், தவளை, பாம்பு இவைகளின் முதுகில் ஒரு கல்லைக் கட்டிவிட்டு, அவை நகரமுடியாது சிரமப்படுவதைப் பார்த்து சந்தோசத்தில் சிரிக்கிறான்… அவனது குரு பின்னால் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.. இரவில் உறங்கிக் கொண்டு இருக்கும் சிறுவனின் முதுகில் கல்லை வைத்துக் கட்டுகிறார்.. காலையில் எழும் சிறுவன் தன்னால் நடக்க முடியவில்லை… பாரமாக இருக்கிறது என்றும் துன்பமாக இருப்பதாகவும் தன்னை விடுவிக்குமாறும் சொல்லி அழுகிறான்.. புத்தர் சிலையை தன் மடியில் வைத்து துடைத்துக் கொண்டு இருக்கும் குரு, இதையே தானே நீயும் மீன், தவளை, பாம்புக்கு செய்தாய்.. அவைகளுக்கு துன்பமாக இருக்காதா..? என்று கேட்டு… அவைகளை முதலில் விடுவி… நான் உன்னை விடுவிக்கிறேன்.. ஆனால் அந்த உயிர்களில் ஏதேனும் ஒன்று இறந்திருந்தால் இந்த கல்லை உன் இருதயத்தில் நீ காலமெல்லாம் சுமப்பாய் என்று அறிவுறுத்தி அனுப்புகிறார்.. முதுகில் கட்டப்பட்ட கல்லுடன் நிலப்பரப்பில் அவைகளை விடுவிக்கச் செல்லும் சிறுவன் உயிரோடு இருக்கும் தவளையை விடுதலை செய்கிறான்… இறந்திருக்கும் மீனை மண்ணில் புதைக்கிறான்.. ரத்தம் கக்கி இறந்து கிடக்கும் பாம்பைப் பார்த்து பெருங்குரலெடுத்து ஏங்கி ஏங்கி அழுத் தொடங்குகிறான்… குரு பின்னால் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.. வசந்தம் முடிகிறது…



Summer:

தாகத்தினால் தகிக்கும் பருவம்.. தாகம் தீர்க்க தவிக்கும் பருவம்… இந்தப் பருவத்தில் திரைப்படத்தில் என்ன நடக்கிறது… சிறுவன் இளைஞனாக ஆகி இருக்கிறான்.. இரு பாம்புகள் பின்னிப் பிணைந்து கிடக்கும் பரவசநிலையைக் கண்டு மயங்குகிறான்.. மலைமுகட்டில் இருக்கும் புத்தர் உலகைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.. நோய்வாய்ப்பட்டு இருக்கும் ஒரு இளம்பெண் தன் தாயுடன் சிகிச்சைக்காக மடாலயத்துக்கு வருகிறாள்… மடாலயத்தில் சேவல் ஒன்று தன் முன் கிடக்கும் இரையின் மீது மட்டும் கவனத்தைக் குவித்து அதை கொத்திக் கொண்டே இருக்கிறது.. 


ஓரிரு நாளில் அவளது தாய் திரும்பிச் செல்கிறாள்… மடாலயத்தில் தனித்து விடப்படும் அந்த இளம் பெண் மீது இளைஞன் மையல் கொள்கிறான்.. அவளது உடலின் மீது ஈர்ப்பு கொள்கிறான்.. உறக்க நிலையில் இருக்கும் போது அவளது உடலின் பாகங்களை தொட்டுப்பார்க்க துடித்து அவளிடம் அடி வாங்குகிறான்… புத்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்கிறான்.. அவள் அவனை பரிதாப உணர்ச்சியுடன் வருடிக் கொடுக்கிறாள்.. இரவில் அனைவரும் உறங்கும் போதும் அவனது கண்கள் விழித்திருந்து அவளையே விழுங்கிக் கொண்டு இருக்கிறது… அவளை மயக்கப் பார்க்கிறான்.. ஆடு நனைவதை எண்ணி ஓநாய் அழுவதைப் போல், மழையில் அவள் நனையாமல் குடை பிடிக்கிறான்.. 


தண்ணீரில் குதித்து சாகசம் செய்கிறான்… மருந்து தயாரித்து கொடுக்கிறான்.. பெண்ணும் மயங்குகிறாள்… அவன் அவளிடம் எதிர்பார்த்தது அவனுக்கு கிடைக்கிறது… ஒருமுறை அல்ல.. இருமுறை அல்ல… மூன்று முறை.. விதிமுறைகளை தளர்த்துகிறான்… அவள் உட்காருவதற்கு தடை செய்யப்பட்ட இடத்தின் மீது தூசி தட்டி அவளை உட்கார வைக்கிறான்.. கதவுகளின் வழியாக செல்லாமல், திறந்தவெளி வழியாக அவளை நெருங்குகிறான்… விதிமுறைகளை மீறுகிறான்.. சேவலைக் கொண்டே குரு இருவரையும் பிடிக்கிறார்.. குருவிடம் மாட்டிக் கொண்டு மன்னிப்பு கேட்கிறான்.. இது இயற்கை.. இப்படித்தான் நடக்கும் என்று சொல்லும் குரு.. அந்தப் பெண்ணிடம் இப்பொழுது உனது நோய் குணமாகிவிட்டதா…? என்று கேட்கிறார்.. அவள் ஆமாம் என்று சொல்ல… அப்படியென்றால் இதுதான் சரியான மருந்து.. நீ கிளம்பலாம் என்கிறார்.. அவள் தன்னைவிட்டு போய்விடுவாள் என்ற பயத்தில் இளைஞன் எதிர்ப்பு தெரிவிக்கிறான்… குரு அவனை எச்சரிக்கிறார்… “காமம் தன்னுடைமையாக ஆக்கிக் கொள்ளும் ஆசை உணர்வை தூண்டிவிடும்… அந்த உணர்வு தன்னுடைமையாக நிலைநிறுத்திக் கொள்ள கொலை செய்யும் உணர்வை தூண்டிவிடும்..” என்று அறிவுறுத்தி அவளை அனுப்பி வைக்கிறார்.. அவள் இல்லாத இடத்தில் இருக்க முடியாமல் அன்றிரவே இளைஞன் அந்த இடத்தை விட்டு புத்தர் சிலையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான்… புத்தர் அவனது முதுகுக்கு பின்னால் பார்த்துக் கொண்டு இருக்கிறார்…. சேவலையும் தன்னோடு எடுத்துச் சென்று காட்டில் விட்டுவிட்டு செல்கிறான்… கோடையின் தாகம் அவனுக்கு தீரவில்லை… ஆனால் பருவம் அத்துடன் முடிகிறது…

Fall:

இலையுதிர்காலம்… ஒட்டி உறவாடிய ஏதோவொன்று உதிர்ந்துவிடும் காலம்…. இந்தப் பருவத்தில் திரைப்படத்தில் என்ன நடக்கிறது….? வயதாகிவிட்ட குரு ஒரு பூனையை தன் மடாலயத்துக்கு கொண்டு வருகிறார்… ஒரு துண்டுப் பேப்பரில் உள்ள செய்தியில் இளைஞன் ஒருவன் தன் மனைவியை கொன்று விட்டு தலைமறைவான செய்தி பிரசுரமாகி இருக்கிறது… குரு உள்ளே சென்று சில ஆடைகளை திருத்தம் செய்து தைக்கத் தொடங்குகிறார்… முதிர்ச்சி பெற்ற 30 வயது இளைஞனாக சீடன் திரும்பி வருகிறான்… அவனிடம் அவனது வாழ்க்கையின் சந்தோசமான தருணங்களைப் பற்றி குரு கேட்க.. அவன் கோபத்தில் தன் மனைவி இன்னொருவனுடன் சென்றதால் தான் அவளை கொன்றுவிட்டதாக சொல்கிறான்… குரு சீடனிடம் உனக்கு ஆடவரின் உலகத்தைப் பற்றி தெரியாதா…? நீ விரும்பும் ஒன்றை மற்றவர்களும் விரும்பத் தானே செய்வார்கள்… என்று கேட்க அவன் கோபத்தில் கத்தத் தொடங்குகிறான்… அமைதி இழந்து காணப்படும் அவன் தற்கொலை செய்து கொள்ள முயல… குரு அவனை தண்டிக்கிறார்… நீ பிறரை எளிதாக கொன்றுவிட முடியும்.. உன்னை உன்னால் அவ்வளவு எளிதாக கொல்ல முடியாது என்கிறார்… பூனையின் வாலில் வண்ணநிற சாயத்தை தோய்த்து அந்த வாலைக் கொண்டே  PRAJNAPARAMITA சூத்திரங்களை எழுதத் தொடங்குகிறார்… பூனை கத்திக் கொண்டே இருக்கிறது.. அவர் எழுதிய சூத்திரங்களை தன் மனைவியை கொலை செய்த கத்தியைக் கொண்டே செதுக்கச் சொல்கிறார்… அவற்றை செதுக்கும் போது உன் மனதில் உள்ள கோபத்தை வெளியேற்றம் செய்.. என்று ஆலோசனை சொல்கிறார்… அவனைத் தேடி போலீஸ் வருகிறது…. போலீசைப் பார்த்து பதற்றமடையும் அவனை குரு சமாதானப்படுத்துகிறார்… குரு போலீஸிடம் அந்த சூத்திரங்கள் அவனது மனதுக்கு அமைதியை கொடுப்பவை… அதை செதுக்க அவனை அனுமதியுங்கள் என்று வேண்டுகோள் வைக்க போலீஸார் சம்மதிக்கின்றனர்.. அவனுக்கு உதவவும் செய்கின்றனர்… காலையில் அவனை அழைத்துச் செல்கின்றனர்… கூடவே பூனையையும் எடுத்துச் செல்கின்றனர்… ஒரு இடத்தில் அவர்களது படகு நகராமல் நிற்கிறது… குருவை சிஷ்யன் திரும்பிப் பார்க்க… அவர் கையசைத்தப் பின்னரே படகு செல்கிறது.. வயதான குரு படகில் அமர்ந்து நெருப்பு மூட்டி தன் மூச்சை அடக்கி இறந்து போகிறார்… நீர்நிலையில் அவரது உடல் எரிந்து கொண்டு இருக்க.. ஒரு பாம்பு நீந்தி மடாலயத்தில் புகுந்துவிடுகிறது… இலையுதிர்பருவம் இரண்டு முக்கியமான இலைகள் உதிர்ந்ததோடு நிறைவடைகிறது…


Winter:

குளிரால் நடுங்கி ஒடுங்கிப் போய் அரவணைப்பு தேடும் பருவம்… முதிர்ச்சி அடைந்த நடுத்தர வயது மனிதராக சிஷ்யன் திரும்பி வருகிறான்.. நீர்நிலை பனியால் உறைந்து கிடக்கிறது…. படகு உறைந்து கிடப்பதைப் பார்த்துவிட்டு அதை வணங்கும் சிஷ்யன், தன் குருவின் உடல் பாகங்களை சேகரித்து அதை புத்தரின் சிலையில் பிரதிஸ்டை செய்கிறான்… மார்ஸியல் கலைகளை தனக்குத் தானே கற்றுக் கொண்டு தன் உடலை தயார் செய்கிறான்…. மடாலயத்தின் ஒரு மூலையில் பாம்பு சுருண்டு கிடக்கிறது… மடாலயத்துக்கு தன் முகத்தை முழுவதுமாக மறைத்து வரும் ஒரு பெண் தன் குழந்தையை அங்கே விட்டுவிட்டு செல்லும் போது சிஷ்யன் தோண்டிய குழியில் விழுந்து இறக்கிறாள்… அவளது உடலை மீட்கும் சிஷ்யன் தன்னால் தெரியாமல் நேர்ந்த தவறுக்காக வருந்துகிறான்…. கவலையோடு அமர்ந்திருப்பதைப் போன்ற சிலையான KUAN-JIN BOTHISATTVA என்னும் பெண் சிலையை தன் கையில் எடுத்துக் கொண்டு, கல்லை தன் உடலில் கட்டி இழுத்தவாறே மலை சிகரத்தில் ஏறி, அந்த கல்லின் மீது அந்த சிலையை வைத்து தன் வாழ்நாளில் செய்த எல்லா தவறுகளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறான்… இரக்கம் மற்றும் கருணையின் அடையாளமான அந்த சிலை அந்த நீர்நிலை மற்றும் உலகத்தை கவலை கலந்த கருணையோடு உற்றுப் பார்ப்பதைப் போல் குளிர்காலம் நிறைவடைகிறது…

And Spring:

சிஷ்யன் குருவாக இருக்க… அந்த பெண்மணி விட்டுச் சென்ற சிறுவன் சீடனாக இருக்கிறான்… அவனும் விளையாட்டுத்தனமாக ஆமை, மீன், தவளை, பாம்பு இவைகளின் வாயில் கல்லை திணித்து மகிழ்ந்து கொண்டு இருக்க… மேலிருந்து KUAN_YIN சிலை கவலையோடு இதைப் பார்த்துக் கொண்டிருப்பதாக திரைப்படம் முடிவடைகிறது…


ஆக நம் வாழ்க்கையில் வசந்தகாலம் என்று ஒன்று இருக்குமானால், நாம் தெரியாமல் செய்த தவறுகளுக்காகக் கூட மனம் வருந்தி அழுவோமே அந்த மனநிலைக்கான காலம் தான் நம் வாழ்க்கையின் உண்மையான வசந்தகாலம்… அந்த சிறுவன் வாழ்நாளெல்லாம் தன் இதயத்தில் சுமந்த கற்களைப் போல் நாம் எத்தனைக் கற்களை சுமந்திருப்போம்… அந்த பருவத்தில் சிறுவன் செய்யும் தவறுகள் எல்லாமே அவன் அறியாமல் செய்வது…. புத்த சிலைகளின் மீது தலைவைத்து தூங்குவது, தவறான செடிகளைப் பறிப்பது, உயிர்களை துன்பப்படுத்துவது இப்படி எல்லாமே அவன் அறியாமையில் செய்கிறான்… அதுபோல் அந்தப் பருவத்தில் காட்டப்படும் நாய் என்பது அந்த பருவத்தின் குணாதிசயத்துக்கான குறியீடு… நன்றியுள்ள ஏமாற்ற தெரியாத விசுவாசமுள்ள குணாதிசயம் கொண்ட பருவம் என்பதற்கான குறியீடு..


கோடை பருவத்தில் வரும் அந்த சேவல் சிஷ்யன் காமத்தின் மீதே குறியாக இருப்பது போல், தன் இரை மீது மட்டுமே கவனத்தை வைத்திருக்கும் குணாதிசயத்துக்கான குறியீடு… இதே சேவலை இதே குறியீட்டு உத்திக்காக THE BOW திரைப்படத்திலும் கிம் கி டுக் பயன்படுத்தி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்…. இந்தப் பருவத்தில் தான் அவன் தான் கடைபிடித்த விதிமுறைகளை எல்லாம் மீறத் தொடங்குகிறான்… திறந்தவெளி வழியாக அந்த இளம்பெண்ணிடம் ரகசியமாக செல்கிறான்… அவனது நினைவில் இதை புத்தர் பார்த்துக் கொண்டு இருப்பார் என்பதை மறந்துவிடுகிறான்… காமம் எப்படி ஒரு மனிதனை அலைகழிக்கிறது என்பதற்கு அவனது நடவடிக்கைகளே தக்க சான்று… அடுத்து அவன் வாழ்வில் நடக்கப்போகும் நிகழ்வுகளை புத்தர் பார்க்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன் அவன் செய்கிறான் என்பதை சொல்வதைப் போலவோ அல்லது இனி அவனது வாழ்க்கையில் நடக்கப் போகும் நிகழ்வுகள் அவர் பார்க்கும் அளவுக்கு உவப்பாக இருக்கப் போவதில்லை என்பதால் அவர் தன் முகத்தை திருப்பிக் கொள்கிறார், என்பதை சொல்வதைப் போலவோ தான், புத்தர் சிலையை எடுத்துக் கொண்டு அவன் மடாலயம் விட்டுச் செல்லும் போது அவனது முதுகுக்குப் பின்புறமாக புத்தர் சிலை தொங்கிக் கொண்டு இருக்கிறது என்றுகூட அதை எடுத்துக் கொள்ளலாம்… புத்தர் எப்படி எடுத்துச் செல்லப்பட்டாரோ அதே நிலையில் தான் அடுத்த பருவத்தில் பூனை எடுத்து வரப்படும்… ஆக அப்போதே அவனது குணாதிசயம் பூனையைப் போல் சுயநலமாக மாறிவிட்டது என்பதாகவும் நாம் அதை எடுத்துக் கொள்ளலாம்…

இலையுதிர்கால பருவத்தில் வரும் அந்த பூனை ஒரு சுயநல குணாதிசயத்துக்கான குறியீடு… அதற்கு தன் தேவை மட்டுமே பெரிது.. அதனிடம் நாம் பாசமோ, நன்றியோ எதையுமே எதிர்பார்க்க முடியாது…. எப்போது அதற்கு பசிக்கிறதோ அப்போது நம்மிடம் வந்து குழையும்.. நாக்கால் வருடும்.. பசி தீர்ந்தால் நம்மை கண்டு கொள்ளாது, தன் இஷ்டத்து அது திரிந்து கொண்டிருக்கும் விலங்கு.. அந்த சுயநலத்தின் வெளிப்பாடாகத்தான், இளைஞன் தன் மனைவியை வழக்கமான கலாச்சாரத்தின் படி தனக்கான உடைமையாக அவளை கருதுகிறான்… அவளை காலம் முழுவதும் அவனே ஆள நினைக்கிறான்… அது இயலாமல் போகும் போது வஞ்சத்தில் கொலை செய்கிறான்… அந்தப் பூனையின் வாலில் வண்ணத்தை தோய்த்து எழுத வேண்டிய அவசியம் என்ன…? அதற்கு அடுத்த காட்சியிலேயே பிரஸ் கொண்டு அந்த சூத்திரங்களை குரு தீட்டுவார்… முதலிலேயே அந்த பிரஸை பயன்படுத்தி இருக்கலாமே… அந்தப் பூனையை துன்புறுத்துவது என்பது சீடனை நல்வழிப்படுத்துவதற்காக சூத்திரத்தை செதுக்க வைப்பதன் அடையாளம்… நன்றாக கவனித்தால் தெரியும்.. அந்தப் போலீஸ் கூட பூனையை கொஞ்சும் பக்குவம் அடைந்தப் பின்னரே குற்றவாளிக்கு மெழுகுவர்த்தியை உயர்த்தி உதவத் தொடங்குவார்….. ஆக அந்த பூனை என்பது அந்த இளம் பிராயத்தின் குணாதிசயத்துக்கான பிம்பம்..


அந்த இறுதிப் பருவத்தில் வரும் பாம்பு என்பது பாவத்துக்கான குறியீடு… கிறிஸ்த்துவ மதமும் அதைத்தான் கூறுகிறது…. தான் செய்த பாவங்களை எண்ணி வருந்துவதற்கான குறியீடு… அந்தப் பாம்பு எங்கிருந்து வந்தது என்பதும் மிக முக்கியமானது… குரு தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் போது நீரில் அவரிடம் இருந்து பிரிந்து வருகிறது… பழைய சிஷ்யனின் இடத்தை புதிய சிஷ்யன் பிடித்து இடம் மாற்றம் செய்துவிட்டு அதேவித தவறுகளை செய்வதைப் போலத்தான் குருவின் வாழ்க்கையும்.. இப்போது குருவாக இருக்கும் பழைய சிஷ்யன் தன் பாவங்களுக்காக வருந்தியதைப் போல், பழைய குருவும் சிஷ்யனாக இருந்தபோது இதுபோன்ற பாவங்களை செய்து அதற்காக வருந்தியவராக இருக்கலாமோ..? என்ற பிம்பத்தையும் திரைப்படம் தருகிறது… ஆக இங்கு எல்லோருமே தவறுகள் செய்துவிட்டு அந்த தவறுகளை எண்ணி வருத்தத்துடன் உலகைப் பார்க்கும் kyan-yin சிலையை பிரதிபலிப்பவர்களாகவே இருக்கிறோம்…. 


இது ஒரு ஆணின் வாழ்க்கையை கொண்டு வாழ்க்கையின் தருணங்களைப் பேசும் படமாகவே இருந்தாலும், இது பெண்களின் வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடியது தான் என்பதற்கான குறியீடுகள் தான் படத்தில் வரும் அந்த இரண்டு பெண்களுமே… எப்படி கோடையில் இளைஞன் காமத்தால் உளழுகிறானோ…? அதே அயற்சி அந்தப் பெண்ணுக்கும் உண்டு… அதுபோலத்தான் குளிர்காலத்தில் தன் தவறுகளை எண்ணி வருந்தும் சிஷ்யனைப் போல், தன் பாவத்துக்காக வருந்தும் அந்த முகம் தெரியாத பெண்ணின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது… ஆக இது ஒரு பெண்ணின் வாழ்வியலுக்கும் பொருந்தும் ஒரு படைப்பு தான்….


கடவுள் நம்பிக்கை உள்ள மனிதர்களுக்கும் சரி.. கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதர்களுக்கும் சரி… ஏன் கடவுள் தவறுகள் நடக்கும் முன்னரே தடுப்பதே இல்லை என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கும்… அந்தக் கேள்வி திரைப்படத்தில் கூட வரும்… சிறுவன் உயிரினங்களின் உடலில் கல்லை கட்டும் போது அதை தடுக்காமல் ஏன் குரு வெறுமனே கடவுளைப் போல் பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கிறார் என்பதான கேள்வி… சிஷ்யன் மடாலயத்தை விட்டு ஓடும் போதும் அவர் ஏன் அவனை தடுக்கவில்லை என்பதான கேள்வி… அன்று விழித்தவர் ஏன் அவர்கள் இருவரும் பலமுறை இரவில் அத்துமீறும் போது விழிக்கவில்லை என்ற கேள்வி..? ஆனால் சிஷ்யன் தன்னைத் தானே கொன்று கொல்ல முயலும் போது குரு அதைப் பார்த்துக் கொண்டு இருப்பதில்லை.. அவனைக் காப்பாற்றுகிறார்… அதற்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் கேள்விகள் எழும்…


நான் இதை எப்படி புரிந்து கொள்கிறேன் என்றால், இத்திரைப்படத்தில் குரு என்பது கடவுளுக்கான அம்சம் தான்… ஏனென்றால் சிறுவனை விசாரிக்கும் தருணத்தில் அவர் தன் மடியில் புத்த சிலையை வைத்து துடைத்துக் கொண்டிருக்கும் காட்சியை நினைவு கூறுங்கள்… அங்கு இருப்பது ஒரே ஒரு படகுதான்… அதை சிறுவன் தனியே எடுத்துச் செல்லும் போது அவர் எப்படி அங்கு வரமுடியும்… படகுகளை துடுப்பு போட்டும் அசையாமல் வைக்கும் அவரது சக்தி இப்படி எல்லாமே அவரை கடவுளுக்கான குறியீடாக காட்டுகிறதோ என்றும் நான் சந்தேகிக்கிறேன்…. ஆக உன் தவறுகளுக்காக உன்னையே நீ அழித்துக் கொள்வதை நான் (கடவுள்) விரும்பவில்லை… அப்படி உன்னை அழித்துக் கொள்வதற்காக இந்த வாழ்க்கையை நான் உனக்குக் கொடுக்கவில்லை… மேலும் உன்னை தவறுகளே செய்யாமல் தடுப்பதற்காகவும் நான் உனக்கு இந்த வாழ்க்கையை கொடுக்கவில்லை… உன் தவறுகளின் வாயிலாக நீ பாடம் கற்றுக் கொள்ளவே உனக்கு இந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டுள்ளது…. ஆக இந்த வாழ்க்கையே வாழ்வதிலும் கற்றுக் கொள்வதிலும் தான் இருக்கிறது… அதைத்தான் இங்கு எல்லா மனிதர்களுமே செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே இத்திரைப்படம் சொல்லவரும் மூலமாக இருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன்… மேலும் மதங்களை உருவாக்கியவர் கடவுளா..? அல்லது மனிதனா என்ற விவாதத்தை விட்டுவிடுவோம்… அதன் நோக்கம் கண்டிப்பாக மனிதனை தவறு செய்யவிடாமல் தடுப்பதுதான் என்பது கண்கூடு… அப்படி இருந்தும் எல்லா மதங்களும் பாவத்துக்கான மன்னிப்புகளையும், ஆக்ரோசமாக மாறும் மனதை பக்குவப்படுத்துவதற்கான சாஸ்திரங்களையும் சூத்திரங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதை நுட்பமாக கவனித்தாலே தெரியுமே… இந்த மதங்களை உண்டாக்கியவர்களும் மனதையும் அதன் உணர்வுகளையும் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினமான ஒன்று என்பதை உணர்ந்திருந்தார்கள் என்று…


வழக்கம் போல் கிம் கியின் இந்த திரைப்படத்திலும் வசனங்கள் மிகவும் குறைவு… கிம் கி டுக் இத்திரைப்படத்தில் முதிர்ச்சியுற்ற சிஷ்யன் கதாபாத்திரத்தில் தானே நடித்திருக்கிறார்… வயோதிக குருவாக நடித்திருக்கும் அந்தப் பெரியவர் ஒரு தொழில்முறை நடிகர்…. மிகச்சிறப்பான உடல்மொழியை அவர் வெளிப்படுத்தி இருப்பார்… மேலும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு இன்றளவும் உலகளவில் பிரமிப்பாக பேசப்படக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது… இசையும் அப்படியே… கிம் கி டுக் அவர்களை உலகளவுக்கு பிரபலமாக்கிய திரைப்படங்களில் இது ஒரு முக்கியமான திரைப்படம்… நீங்களும் கண்டிப்பாக இத்திரைப்படத்தைப் பாருங்கள்.. பரவசமான ஒரு அனுபவம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்..

அடுத்த பதிவு

BAD GUY (2001)

No comments:

Post a Comment