Saturday, 9 November 2013

பாண்டிய நாடு:

யதார்த்தமான சினிமாக்களை கொடுக்கின்ற முயற்சியில் ஆங்காங்கே ஏற்பட்ட சில சறுக்கல்களைத் தவிர்த்து, தொடர்ச்சியாக கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் சுசீந்திரன். இந்தப் படத்திலும் அந்த கவன ஈர்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியே.. யதார்த்தமான சினிமாவாக இருந்தாலும் அதை வணிகரீதியாக வெற்றி பெற வைக்கவும், கதாநாயக பிம்பங்களை நம்பி வரக்கூடிய சாதாரண பாமர மக்களையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தினாலும் யதார்த்தத்தின் எல்லைக் கோடுகளை சில இடங்களில் பாண்டிய நாடு மீறி இருக்கிறது.. இருப்பினும் அத்தைகைய மீறல்கள் கதையையோ, நமது கவனத்தையோ சிதைத்து அயர்ச்சியைக் கொடுக்காமல், நம்மை ஆசுவாசப்படுத்தி அனுப்புவதே பாண்டிய நாட்டின் சிறப்பு..


கதையில் எந்தவிதமான புதுமையும் இல்லை. தமிழ் சினிமா இதுவரை தொடாத களமும் இல்லை. ஆனால் மற்ற வழக்கமான திரைப்படங்களில் இருந்து பாண்டிய நாடு எந்த இடத்தில் மாறுபடுகிறது என்றால், கதாநாயகர்களின் தோள்களிலேயே மொத்த திரைக்கதையும் தொங்கிக் கொண்டு இருக்காமல், நாயகன் விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த், மற்றும் விஷாலின் தகப்பனாக வரும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோரையும் முன்னிலைப்படுத்தி அவர்களின் தோள்களிலும் பயணிப்பதில் தான் பாண்டிய நாடு ஒளி மங்கிய கற்களுக்கு இடையில் வைரமாக மின்னுகிறது.. வைரம் என்று உவமைப்படுத்துவதால் இது ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்பட்டு, ஒரு அற்புதமான கலைப் படைப்பாக அழியாமல் நம் மனதில் நிலைக்கும் போலும் என்று கற்பிதம் கொள்ள வேண்டாம்.. ஆனால் இளம் உதவி இயக்குநர்களுக்கு ஒரு சாதாரண கல்லை எப்படி பட்டை தீட்டுவது என்று பாடம் எடுத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன் என்பதாகக் கொள்ளலாம்.

சமரில் விஷாலின் நடிப்பைப் பார்த்து வெறுத்துப் போயிருந்த எனக்கு, இதில் விஷாலின் நடிப்பு ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது.. பயந்த சுபாவம் கொண்டவராக, பதற்றமான சூழலில் திக்கித் திக்கிப் பேசுபவராக, தன் எதிரியை நேருக்கு நேர் நின்று புடைத்தெடுக்கும் நாயக பிம்பமாக இல்லாமல், பதுங்கி நின்று கொண்டு பாய முயலும் புதுவிதமான விஷாலைப் பார்க்க முடிகிறது. அவரது சுபாவத்துக்கு ஏற்றார் போல் அவரை பெப்பி ஓட்டவிட்டிருப்பது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு இன்னும் பலம் சேர்க்கிறது. எல்லா ப்ரேம்களிலும் முழுவதுமாக ஆக்ரமிக்க எண்ணாமல், கதையின் தேவை உணர்ந்து விக்ராந்துக்குப் பின்னால் பம்மிக் கொள்வதும், ஆக்ரோசமாய் வெடிக்காமல் அடக்கி வாசித்திருப்பதுமாக, தயாரிப்பாளர் விஷாலிடம் ஆரோக்கியமான மாற்றங்கள்… வாழ்த்துக்கள்..
விஷாலின் தந்தையாக இயக்குநர் பாரதிராஜா.. தன் மகனின் சாவுக்கு நியாயம் தேடி அலையும் ஒரு பாசக்கார தந்தையை நம் கண் முன் நிறுத்துகிறார். அடி வாங்கிவிட்டு வந்து நிற்கும் தன் இளைய மகனை சீண்டுவதும், சிம்மக்கல் ரவியிடம் அடி வாங்கிவிட்டு வந்து நிற்கும் தன் மூத்த மகனைக் கண்டு பொருமுவதும், அர்த்த ராத்திரியில் தன் நண்பன் வீட்டுக்குச் சென்று கூலிப்படையைப் பற்றி விசாரிப்பதுமாக இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு ஒரு புதுவண்ணத்தைக் கொடுக்கிறது என்றால் அது மிகையல்ல.. இயக்கத்தில் மட்டுமின்றி தான் நடிப்பிலும் இமையம் என்பதை அந்த க்ளைமாக்சில் விஷாலின் கைகளை பிடித்துக் கொண்டு அகமகிழும் அந்த ஒரு காட்சியிலேயே நிருபிக்கிறார்..


விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த் சில படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும், மிகையான ஒப்பனைகள் இன்றி, மனதில் நிற்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.. இது போன்ற கதையோடு தொடர்புடைய கதாபாத்திரங்களில் இவர் கவனம் செலுத்தலாம்.. விஷாலை முன்னால் விட்டு பின்னால் நடப்பதும், சண்டை என்று வந்ததும் முந்திக் கொண்டு முன்னால் நிற்பதுமாக நிறைவான கதாபாத்திரம்..

நாயகியாக லட்சுமிமேனன். வழக்கமாக நாயகிகள் செய்யும் அதே வேலைதான்.. நாயகனை காதலித்து கைப்பிடிக்கும் கதாபாத்திரம். ஸ்கூல் டீச்சராக பாந்தமான அழகுடன் வளைய வருகிறார். காரணமே இல்லாமல் காதலிக்கவில்லை என்றும், காரணமே இல்லாமல் கல்யாணம் செய்து கொள்வோமா என்றும் கேட்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து இருக்கிறார்.. சூரிக்கு வழக்கம் போல் நாயகனின் காதலுக்கும் லட்சியத்துக்கும் உதவும் நண்பன் கதாபாத்திரம். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தவறிவிழும் அந்தப் பணப்பையை எடுத்துக் கொண்டு செல்லும் இடத்தில் மட்டும் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்..


வசனம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. காதலர்களுக்கு இடையிலான உரையாடலில் இளமை ததும்புகிறது.. மகனின் சாவில் மர்மம் இருப்பதாக எண்ணி, கையெழுத்து இட மறுக்கும் பாரதிராஜாவிடம், அந்த படிவத்தைப் பிடிங்கி கையெழுத்திடும் ரவுடி சொல்லும் அந்த வசனம்.. நம் சட்டத்தின் இருட்டறைகளை வெளிப்படுத்துகிறது.. இமானின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் மனதை நிறைக்கிறது.. அதிலும் குறிப்பாக அந்த பைவ் பைவ் பாடலிலும், ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான் பாடலிலும் துள்ளல் இசை.

பாண்டிய நாட்டின் வெற்றிக்கு நடைமுறை நிகழ்வோடு தொடர்புடைய அந்த கதைக்களம் இன்னும் பலம் சேர்க்கிறது. க்ரானைட் குவாரி ஊழல்களின் புழுதிக் காற்று இன்னும் கண்களை கலங்க வைத்துக் கொண்டு இருக்கும் சூழலில் அதே சூட்டோடு மதுரை மாஃபியாக்களின் வாழ்க்கையை கிட்டதட்ட அச்சு அசலாகத் தொட்டுக் காட்ட முயன்றிருக்கும், அசாத்திய முயற்சிக்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம்… சில நிஜ பிம்பங்களின் நிழல்களாக வளைய வரும் சிம்மக்கல் ரவியும், ராஜாவும் சிலரது கண்களை உறுத்தக்கூடும்.. சிம்மக்கல் ரவியாக நடித்திருக்கும் அந்த நடிகரின் உடல்மொழி அபாரம்.. தன் குருவின் இடத்துக்கு தான் வந்தவுடன் அவரது உடையில் ஏற்படுகிற அந்த மாற்றம் அச்சு அசலாக அந்த தாதாவின் தோரனையை அவருக்கு கொடுத்துவிடுகிறது. அந்த குன்னூர் அட்டெம்ட்டின் போது சிம்மக்கல் ரவியின் தாண்டவம் மட்டுமே அந்தக் காட்சிக்கு உயிர்ப்பைத் தருகிறது..


பல படங்களில் பார்த்த அதே காட்சிகள் தான்… ஆனால் அதை காட்சிப்படுத்தும் விதத்தில் அந்த பழைய காட்சியே புதியதாக மாறிப் போகின்ற வித்தையை பாண்டிய நாட்டில் பார்க்கலாம்… உதாரணமாக விஷாலும், விக்ராந்தும், சூரியும் சேர்ந்து கொண்டு அந்த ரவுடியின் கையாளை கொலை செய்ய முயலும் காட்சியையும், பாரதிராஜா மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தப்பிச் செல்லும் காட்சியையும், க்ளைமாக்ஸ் காட்சியையும் கூறலாம்.. திரைக்கதையில் ஆங்காங்கே இருக்கும் சுவாரஸ்யம் படத்துக்கு மிகப்பெரிய பலம்.. விக்ராந்தின் முடிவும், பாரதிராஜா மாட்டிக் கொள்வாரோ என்ற பதைப்பும், விஷாலும் வில்லனும் எங்கு சந்தித்துக் கொள்வார்கள் என்ற நிமிடங்களும் தான் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன…


ஆனால் அந்த சினிமாத்தனமான முடிவுதான்… வழக்கம் போல் நம் மனதை எல்லாம் சுமூகமாக முடிந்துவிட்டதாக நம்ப வைத்து, களிப்பில் ஆழ்த்தி அதைப் பற்றி மீண்டும் யோசிக்கவே விடாமல், பிற வேளைகளில் நம்மை மூழ்கடித்து திரைப்படம் தரவேண்டிய அந்த தாக்கத்தை தராமல், அப்படி ஒரு திரைப்படம் பார்த்ததையே மறக்கச் செய்துவிடுகிறது.. இருப்பினும் நாம் கொடுக்கின்ற காசுக்கும், நம் களிப்பிற்காகவும் அவர்கள் அதிகமாகவே உழைத்திருக்கிறார்கள் என்பது உண்மை…

No comments:

Post a Comment