Sunday 23 December 2012

Rabbit proof fence:



 2002ம் ஆண்டு வெளிவந்த ஒரு முக்கியமான ஆஸ்திரேலிய நாட்டு திரைப்படம் இந்த ”ரேபிட் ப்ரூஃப் ஃபென்ஸ்” இது ஆஸ்திரேலிய மக்களின் கலாசாரத்தை வாழ்க்கையை அச்சு அசலாக காட்டும் ஒரு திரைப்படம். புனைவு கதையல்ல… ஒரு உண்மை சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம். என்னை வெகுவாக பாதித்த படங்களில் கண்டிப்பாக இந்தப் படத்திற்கும் இடம் உண்டு.

நீங்கள் சிறுவயதில் என்றாவது திருவிழா கூட்டத்திலோ அல்லது வேறு எங்காவதோ தொலைந்து போய் உங்கள் வீட்டையும் அம்மாவையும் தேடி அழுது இருக்கின்றீர்களா…? எவ்வளவு தவிப்புகள் நிறைந்த தருணம் அது.. ஆனால் இப்படி பெற்றோரையும் பிள்ளைகளையும் பிரித்து, தன் அம்மாவிடம் போக வேண்டும் என்று சொல்லி ஒரு குழந்தையை அழக்கூடிய நிலைக்கு ஒரு அரசாங்கமே தன் அதிகாரத்தைக் கொண்டு தள்ளினால் எப்படி இருக்கும்…? அதுதான் இந்த ”ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்”
ஆஸ்திரேலியா விடுதலை பெற்ற பின்னர், பழங்குடியின மக்கள் வாழ்ந்த பகுதிகளிலும் வாணிபம் செய்யும் நோக்கத்தில் வெள்ளை நிற ஆஸ்திரேலியர்கள் அங்கு சென்று குடியமர்ந்தனர். அவ்வாறு அவர்கள் குடியமர்ந்த போது வெள்ளை நிற ஆஸ்திரேலியர்களுக்கும் கருப்பின பழங்குடி மக்களுக்கும் இடையே உறவு ஏற்பட்டு அதனால் பிறந்த குழந்தைகள் ஹாஃப் காஸ்ட் (Half castes) என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு பிறக்கின்ற இந்த சந்ததியினர் எதிர்கால தலைமுறைக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்.. ஏனென்றால் அவர்களது ரத்தத்தில் aboriginal என்று சொல்லக்கூடிய பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்களும் கலந்து இருக்கும்.

இத்தகைய half castes இன குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி பழங்குடி இனத்திலேயே மீண்டும் திருமணம் செய்யும் போது aboriginal என்று சொல்லக்கூடிய பழங்குடியின பழக்கவழக்கங்கள் அதிகமாக பரவும் என்பதால், அதை தடுக்கவிரும்பி சிறுவயதிலேயே இது போன்ற half castes எனப்படும் கலப்பின குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து செல்ல அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என்று ஆஸ்திரேலிய அரசு சட்டம் இயற்றியது. இவ்வாறு பிரிக்கப்படும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் Moore எனப்படும் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட முகாமில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுவர். அவ்வாறு அவர்கள் வளரும் போது அவர்களுக்கு வெள்ளை ஆஸ்திரேலியர்களின் பழக்கவழக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படும். மத நம்பிக்கைகள், உணவு முறைகள் என அவர்கள் பிறந்ததில் இருந்து செய்துவந்து பழக்கவழக்கங்கள் அத்தனையையும் மாற்றி, அவர்களது கலாச்சாரமே மாற்றப்படும்..

திருமணவயதை இவர்கள் நெருங்கும் பட்சத்தில் இவர்கள் ஏதேனும் வெள்ளை நிற ஆஸ்திரேலியர்களின் வீட்டில் வேலையாளாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அந்த வீட்டில் உள்ள வெள்ளை ஆஸ்திரேலிய ஆண் அந்த கலப்பின பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசைபட்டால் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் வெறும் ஆசைநாயகியாக வைத்துக் கொள்ளலாம். கலப்பின ஆணுக்கும் இதே கதிதான். மொத்தத்தில் இந்த கலப்பின குழந்தைகளின் சந்ததிகள் வளரவே கூடாது. அவ்வாறு வளர்ந்தாலும் அதில் வெள்ளை ஆஸ்திரேலியனுக்கான ஜீன்கள் தான் அதிகம் இருக்க வேண்டும்.. அவர்கள் மீண்டும் தங்களது பழங்குடியின மக்களிடையே திருமணம் செய்துகொள்ள தடை விதிக்கப்பட்டது.

இந்த நடைமுறை 1970 ஆண்டு வரை வழக்கத்தில் இருந்தது. சிறு குழந்தைகள் வலுக்கட்டாயமாக பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக ஒரு முகாமில் அடைத்து வளர்க்கப்பட்டனர்.. அவர்கள் சாகும் வரை தங்கள் பெற்றோரை பார்க்க முடியாது. அவர்கள் இனமும் விருத்தியாகாது. ஏதேனும் வெள்ளை ஆஸ்திரேலிய ஆணோ அல்லது பெண்ணோ மனம் வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

1931ம் ஆண்டில் இது போன்று நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் ”ரேபிட் ஃப்ரூப் ஃபென்ஸ்”. மாலி, டெய்சி, கிரேஸி என்ற மூன்று சிறுமிகளும் half castes என அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்டு பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். பிரிக்கப்பட்ட அவர்கள் ஒரு விலங்குகள் அடைக்கும் கூண்டில் அடைக்கப்பட்டு ரயிலில் மேற்கு ஆஸ்திரேலியா நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கு மோரி ஆற்றங்கரையில் உள்ள ஒரு முகாமில் அடைக்கப்பட… அங்கு ஏற்கனவே இவர்களை போல பல குழந்தைகள் இருக்கின்றன..

இவர்கள் முகாமிற்கு வந்த அதே நாளில் முகாமில் இருந்து தப்பித்து தன் பாய் பிரெண்டை பார்க்க சென்ற சிறுமி, டிராக்கர் எனப்படும் aboriginal மனிதனால் பிடித்து வரப்படுகிறாள். தண்டனையாக அவளது தலைமுடி முழுவதுமாக அலங்கோலமாக வெட்டப்படுகிறது. அடுத்த நாள் காலையில் இந்த மூன்று சிறுமிகளும் தப்பி ஓடுகின்றனர். மற்ற இரண்டு சிறுமிகளையும் மூத்தவளான மாலி வழிநடத்தி செல்கின்றாள். டிராக்கர் தங்களை தேடிவந்து பிடித்து விடுவான் என அவர்கள் பயப்படும் போது, மழை நம் தடங்களை அழித்துவிடும், அவனால் நம்மை பிடிக்க முடியாது என்று நம்பிக்கை ஊட்டுகிறாள்.. சிறுமிகள் காணாமல் போனதை தெரிந்து கொண்டு டிராக்கர் குதிரையில் இவர்களை தேடி புறப்படுகிறான்… டிராக்கர் அவர்களை கண்டுபிடித்தானா…? அந்த மூன்று சிறுமிகளும் வீடு போய் சேர்ந்து தங்கள் தாயையும் பாட்டியையும் பார்த்தார்களா…? என்பதே கதை.

அவர்கள் பிரித்து செல்லப்பட்ட தூரம் 1200 மைல் தூரம். அவர்கள் தங்கள்  இருப்பிடத்தை கண்டறிய உதவும் ஒரே வழி, ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளில் இருக்கும் வயல்வெளிகளுக்குள் முயல் மற்றும் மேய்ச்சல் விலங்குகள் புகுந்துவிடாமல் இருக்க.. மூன்று இடங்களில் 3700 மைலுக்கு போடப்பட்டு  இருக்கும் வேலியான ரேபிட் ஃப்ரூப் பென்ஸ்”தான். இந்த வேலி இவர்களது ஊரின் வழியாகவும் செல்கிறது. அதைக் கொண்டே அவர்கள் தங்கள் இருப்பிடத்தை அறியவேண்டும்..

மாலியாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு அபாரம். அவளது உடல்மொழி நான் இதுவரை எந்த கதாபாத்திரத்திடமும் கண்டிராத ஒன்று.. இந்த மூன்று பிள்ளைகளையும் பிடிக்க பின்னால் துரத்திக் கொண்டு ஜீப் வரும்… மூன்று பிள்ளைகளும், அவர்களது தாயும் பாட்டியும் அந்த வனாந்தர பூமியில் அதிகாரியிடமிருந்து தப்பிக்க உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடுவார்கள்… அப்போது ஒரு பிண்ணனி இசை…… இப்படி ஒரு இசையை நான் என் வாழ்நாளில் கேட்டதே இல்லை… உயிரை பிழியக்கூடிய ஒரு இசை…. அந்த காட்சியை நான் பார்க்கும் ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக என்னையும் அறியாமல் கண்ணில் நீர் தளும்புகிறது…

இத்திரைப்படத்தை பார்க்கும் போது இனவெறி மற்றும் நிறவெறி எவ்வளவு மோசமானது என்பதும், பிற இனத்தின் வாழ்க்கையையும், கலாசாரத்தையும் இழிவானதாகவும் தன் இனத்தின், வாழ்க்கையையும் கலாசாரத்தையும் உயர்ந்ததாகவும் நினைக்கும் ஒரு குறுகிய மனப்பான்மைக்குள் தான் மனிதன் எப்போதுமே வாழ்கிறான் என்கின்ற உண்மையும் தெள்ள தெளிவாக புரிகிறது.

தன் இனம் இல்லாத மற்றொரு இனத்தையும் அதன் கலாசாரத்தையும் இருந்த சுவடே தெரியாமல் அழித்துவிட துடிக்கும் இத்தகைய மனப்பான்மையை என்னவென்று சொல்வது…? குடியமர சென்ற ஆஸ்திரேலிய ஆண்களோ, பெண்களோ பழங்குடியின மக்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாமே…? மூன்றாம் இனம் தோன்றி இருக்காதல்லவா..? அல்லது அப்படி செய்தவர்களை தண்டிக்காமல் பிறக்கும் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரிப்பது எப்படி நியாயம்…?

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இத்தகைய கீழ்தரமான செயல்களின் தொடர்ச்சியாகத்தான் இன்றும் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் சில வன்கொடுமைகள் காட்சி தருகின்றன… நாகரீகம் அடைந்த மனிதன் என்று சொல்ல உண்மையாகவே நா கூசுகிறது…. இத்தகைய விலங்கினும் கீழான மனிதர்களின் ஒரு பகுதியாகத்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை…

   இத்திரைப்படம் ஒரு அற்புதமான வாழ்க்கைப் பதிவு…. தவறவிடாதீர்கள் நண்பர்களே….

No comments:

Post a Comment