Monday, 24 December 2012

கும்கி:”மைனா” புகழ் பிரபு சாலமனின் அடுத்த படம். மைனா திரைப்படத்தின் வெற்றி, கும்கி திரைப்படத்தின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற வைத்தது. படம் திரைக்கு வருவதற்கு முன்பே அவ்வபோது படத்தைப் பற்றிய பல தகவல்கள் கசிந்து கொண்டே இருந்தன. முதலில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் சரியில்லை என்பதால் மீண்டும் சில காட்சிகள் மாற்றப்பட்டு ரீ-சூட் செய்யப்பட்டது என்ற அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்திய படம். திரைக்கு வெளியே இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய படம், திரைக்கதையில் இல்லாத பரபரப்பால் கும்கி என்னும் கம்பீரத்தை இழந்து கோவில் யானையாக அசமந்தமாகவே நடை போடுகிறது..

படத்தின் கதை இதுதான். மலையடிவார கிராமம் ஒன்றில் அத்துமீறி நுழையும் காட்டுயானை ஒன்று மலைவாழ் மக்களையும் கொன்று, பயிர்களை அழித்து நாசம் செய்கிறது. மலைவாழ் மக்களுக்கு உதவ வேண்டிய அரசாங்கமோ, மலை கிராமத்தை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு குடிபெயர வழி செய்கிறது. அதை மறுக்கும் கிராமமக்கள் கும்கி யானையின் துணையுடன் காட்டு யானையினை விரட்டி இந்த முறை அறுவடை செய்கிறோம் என்று சவால்விட்டு ஒரு கும்கி யானையை அழைத்து வருகின்றனர். ஆனால் வந்தது கும்கி யானை அல்ல, வேறு வழியில்லாத காரணத்தால் இரண்டு நாள் சமாளிக்க வந்த கோயில் யானை என்பது ஊர்காரர்களுக்கு தெரியாது. கோயில் யானையின் பாகனான நாயகனுக்கு கிராம தலைவரின் மகள் மீது காதல். காதல் மீது உள்ள பற்றால் உண்மையான கும்கி யானை வர தயாராகும் போதும் அதை தடுத்து என் திருவிழா யானையை கொண்டே காட்டு யானையை விரட்டுகிறேன் என நாயகன் முடிவெடுக்க… இறுதியில் என்ன ஆனது…? ஊரும், அறுவடையும், மக்களும், கோயில் யானையும் பிழைத்தார்களா இல்லையா…? என்பது பதரவைக்காத க்ளைமாக்ஸ்.

விக்ரம்பிரபு தான் சிறுவயதில் இருந்து வளர்க்கும் மாணிக்கம் என்ற யானையை கொண்டு பிழைப்பு நடத்துபவன். அவனை ஒட்டிக்கொண்டே திரியும் தாய்மாமாவாக தம்பி ராமையாவும், உண்டியல் என்ற சிறுவனும். மார்கெட்டில் தம்பி ராமையாவின் பழக்கத்தால் ஊறுகாய், சிப்ஸ் எனத் திருடும் மாணிக்கத்திடம் கோபித்துக்கொண்டு பொம்மன்(விக்ரம் பிரபு) செல்ல.. அவன் பின்னாலேயே குழந்தை போல் ஓடிச் சென்று மன்னிப்பு கேட்டு பாசம் காட்டும் மாணிக்கம் நெகிழ வைக்கிறான்..

ஆனால் கும்கி யானை என்ற பெயரில் அவர்கள் யானையை கூட்டிக் கொண்டு ஆதிக் காட்டுக்குள் நுழைந்தவுடனே திரைக்கதை நொண்டியடிக்க ஆரம்பிக்கிறது.. இந்த காட்சியில் இருந்து கடைசி க்ளைமாக்ஸ் வரை நடக்கும் காட்சிகள் எல்லாமே கொம்பனைப் பற்றிய பில்டப்களும், ஊர்காரர்களுடன் காமெடி என்ற பெயரில் ராமையா நடத்திக் கொண்டிருக்கும் சொற்பொழிவுகளும், பல படங்களில் பார்த்து சலித்த காதல் எபிசோட் டிராமாக்களுமே.. பொம்மனான விக்ரம் பிரபுவிக்கும் மாணிக்கம் என்கின்ற அந்த கோயில் யானைக்கும் இடையிலான உறவும், அல்லி(லட்சும் மேனன்) மற்றும் பொம்மன் இடையிலான  உறவும் படத்தில் இன்னும் வலுவாக சொல்லப்பட்டு இருக்க வேண்டும்.. இரண்டுமே ஒட்டவில்லை… இறுதியில் வரும் யானை சண்டை க்ராபிக்ஸ் பயங்கர காமெடி…

காதலில் கூட வசீகரிப்பது போன்ற காட்சிகள் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. நாயகியை பார்த்ததும் காதலிக்கும் நாயகன், அவனை எந்த காரணமுமின்றி காதலிக்க தயாராகும் நாயகி, இப்படி பல படங்களில் பார்த்து அலுத்துப் போன அதே காட்சிகள். மைனா திரைப்படத்தில் தம்பி ராமையாவின் காட்சிகள் ரசனையாக வெகு இயல்பாக அமைந்திருந்தது. ஆனால் கும்கியில் அவர் பேசிக் கொண்டே இருப்பது பல இடங்களில் வெறுப்பாகவே இருக்கிறது. மைனாவுடன் ஒப்பிட்டு பேச பல விசயங்கள் படத்தில் உண்டு. விக்ரம் பிரபு பாடலின் போது தரையில் படுத்துக் கொண்டு காலைத் தூக்கி ஆட்டிக்கொண்டே இருப்பது, அழகு சார்ந்த காட்சிகளில் கேமரா அதிகமாக பயணிப்பது, மைனாவை செடி கொடிகளுக்கு இடையில் வைத்து கேமரா சுற்றி சுற்றி வருவது போல் இங்கும் அல்லியை கேமரா சுற்றி சுற்றி வரும் காட்சிகள்.. இப்படி நிறைய.. அதனை தவறு என்று சொல்ல முடியாவிட்டாலும்.. அவை படத்திற்கு எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை.

பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவுக்கு முதல் படம். குறை ஏதும் இல்லை. கொடுத்த கேரக்டரை செவ்வனே செய்திருக்கிறார். கன்னத்தில் சற்று சதை பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்… லட்சுமி மேனனுக்கு இரண்டாவது படம். பார்வையிலும், முக பாவனையிலுமே பல உணர்வுகளை எளிதாகவே கடத்துகிறார்.. தம்பி ராமையா, உண்டியலாக வருகின்ற சிறுவன், ஜீனியர் பாலையா மற்றும் உண்மையான கும்கி யானையின் பாகனாக வரும் யார் கண்ணன் முதலானோரும் கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்தி போகின்றனர்…
        
படத்தின் மையகருத்து என்ன…? காடுகளில் மனிதர்களும், அரசாங்கமும் செய்யும் அத்துமீறல்களால் வழிதடம் மாறி ஊருக்குள் வரும் காட்டு யானைகளா…? கிராம மக்களுக்கு உதவி செய்ய முன்வராமல் அவர்களை அவர்களது பூர்வீக இடங்களை விட்டு வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கும் அரசாங்கமா…? காட்டு யானையை கூட கரகரவென்று சுற்றி தூக்கி எறிந்துவிடலாம் என்ற தைரியத்தை கொடுக்கும் காதலா…? என்று கேட்டால் பிரபு சாலமன் தைரியத்தை கொடுக்கும் காதல் தான் என்று சொல்லுவார் போலும்… “லவ் பண்ணுங்க சார்…. லைஃப் நல்லா இருக்கும்…” என்று சொன்னவர்தானே….

படத்தின் ஆரம்பகாட்சிகள் ஒரு வசனம் வருகிறது…”முன்னெல்லாம் கொம்பன்(காட்டு யானை) எல்லக் காடு வரைய தான் வருவான்.. இப்ப இங்க வரைக்கும் வர்றான்னா என்ன அர்த்தம்யா.. நீங்க வழிநெடுக ஓட்டல கட்டி அவன் பாதைய மறிச்சிடுறீங்க… அவன் இங்க வாரான்….” இதுதான் உண்மையும் கூட… ஆனால் படம் பார்க்கும் ஆடியன்ஸ் மனதில் கொம்பன் என்கின்ற அந்த காட்டு யானையானது ஒரு கொடூர வில்லனாகவே சித்தரிக்கப்படுகிறது…. இது போன்ற காட்டு யானைகளின் வாழ்வியல் பாதிக்கப்படுவது முதலில் வந்த அந்த வசனத்தோடு முற்று பெற்றுவிடுகிறது. காட்டு விலங்குகளின் வாழ்வியல் என்கின்ற ஒரு உண்மை நிலவரத்துக்குள் மக்களை பயணிக்க அனுமதிக்காமல் படத்தின் திரைக்கதை ஏற்கனவே நாம் பழக்கப்பட்ட ஒருவகை காதல் சார்ந்த கமர்ஸியல் மசாலாவுக்குள் நம்மை தள்ளிக் கொண்டு செல்கிறது..

பிரபு சாலமன் இமான் இருவருக்குமான புரிந்துணர்வு இதிலும் சிறப்பாகவே இருக்கின்றது. பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்… பிண்ணனி இசையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.. சுகுமாரின் கேமரா வழக்கம் போல குறிஞ்சி நில அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது.

இப்படி பல குறைகள் இருந்தாலும், பெரும்பாலான ஆடியன்ஸ்க்கு படம் பிடித்தே இருக்கிறது.. நீதானே என் பொன்வசந்தத்தின் தோல்வியும், யானை தொடர்பான கதை என்கின்ற அம்சமும் மட்டுமே கும்கியின் வெற்றியை சாத்தியமாக்கி இருக்கும் என்று நம்பத் தோன்றுகிறது….

No comments:

Post a Comment