Saturday, 15 September 2012


நான்

  பள்ளி பருவத்தில் தான் திட்டமிட்டு செய்த இரண்டு கொலைகளுக்காக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படும் கார்த்திக்.. தன் இளமை பருவத்தில் சிறையில் இருந்து வெளிவந்து இந்த சமூகத்தின் இயல்பான வாழ்க்கையுடன் தன்னை இணைத்துக் கொள்ள முற்பட… அவனது கொலைகார அடையாளத்தைக் கண்டு இந்த சமூகம் அவனை ஏற்க மறுக்கிறது.. தன் எதிர்காலம் குறித்த ஐயப்பாட்டுடன் சென்னை நோக்கி செல்லும் கார்த்திக்கு.. வேறு ஒரு மாணவனின் அடையாளத்தை பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.. கொலைகாரனாகிய நான்.. என்கின்ற அடையாளத்தை உதறி.. மாணவனாகிய நான் என்கின்ற அடையாளத்தில் குடிபுகுந்து… அந்த அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ள அவன் எதிர்கொள்ளும் போராட்டங்களே இந்த ”நான்”.

          விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக முதல்படம்.. சில பல இடங்களில் அவர் நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்பது தெரிகிறது.. நடிப்பு மோசம் என்று சொல்லமுடியாது என்றாலும்.. கடக்க வேண்டிய தூரம் அதிகம்.. சித்தார்த் அவரது பாத்திரத்திற்கு மிகச் சரியாக பொருந்திப் போகிறார். தீபா மஞ்சரியின் எதார்த்தமான நடிப்பு ஈர்க்கிறது.. அனுயாவிற்கு சொல்லிக் கொள்ளும்படியான ரோல் இல்லை.. என்பதால் சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை.. மக்கயாலா, தப்பெல்லாம் தப்பே இல்லை போன்ற பாடல்கள் படத்திற்கு பலம்.  இப்படி பாராட்ட பல அம்சங்கள் இருந்தாலும் சில உறுத்தல்களும் உண்டு.

      இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் என்பதால் நான் சொல்லப் போகும் சில விசயங்கள் உங்கள் சுவாரஸ்யத்தை கெடுக்கும். எனவே இதற்குப் கீழே எழுதிய விமர்சனத்தை படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

படம் பார்த்தவர்கள் மட்டும் படிக்க:

      முதல் உறுத்தல் என்னவென்றால் கார்த்திக்கின் கேரக்டர். அவரது அறிமுக காட்சியில் சொல்லப்படும் விசயம் என்னவென்றால் அவர் நன்றாக படிக்கின்ற மாணவன்.. தன் நண்பர்களின் மதிப்பெண் அட்டையில் தன் நண்பர்களுக்காக அவர்களது பெற்றோரின் கையெழுத்தை போட்டு மாட்டிக் கொள்கிறான். அதற்கு பெற்றோரை அழைத்து வரச் சொல்லி வீட்டுக்கு அனுப்பப்படும் கார்த்திக் தன் தாய் மற்றொரு நபருடன் படுக்கையை பகிர்வதை பார்த்து தன் தந்தையிடம் தெரிவிக்க.. தந்தை தூக்கில் தொங்குகிறார். தாய் மீண்டும் தவறு செய்ய.. அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் வைத்து கொளுத்துகிறார் கார்த்திக்.

      ஆரம்பகாட்சிகளில் தொடங்கி வேறு எந்த காட்சியிலும் நல்லவிதமான செயல்களில் (தன் நண்பனின் மதிப்பெண் பட்டியலில் அவனது பெற்றோரின் கையெழுத்தை போட்டது உட்பட) கார்த்திக் ஈடுபடுவதே இல்லை. ஆனால் அவனுக்கு தன் தாய் தவறு செய்கிறாள் என்று தெரிந்ததும் அவளை கொல்லும் அளவுக்கு கோபம் வருகிறது. தொடர்ந்து வரும் காட்சிகளில் பணம், படிப்பு தொடர்பான சான்றிதலை திருடுகிறான். நண்பன் தன் தாயைப் போன்ற அதே தவறான பழக்கம் கொண்டவன் என்று தெரிந்தும் அவனோடு ஒத்துப் போகிறான். (அவனை எதிர்க்க வேண்டாம்… ஆனால் அவனுக்கு சப்போட்டிவ்வாக பேசுவதாகவே காட்சிகள் உள்ளன..) பொய் சொல்கிறான், நாடகம் ஆடுகிறான், கொலையும் செய்கிறான், இவ்வளவு தவறுகளையும் எதற்காக செய்கிறான் என்றால் தான் ”சந்தோசமாக” வாழ வேண்டும்.. இங்கு கவனிக்கவும்… வாழ வேண்டும் என்பதற்காக அல்ல.. சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காக… செய்கிறான்.

          அவன் வாழ வேண்டும் என்று மட்டுமே நினைத்திருந்தால் அவன் சாதாரணமான ஒரு வாழ்க்கையைகூட வாழ்ந்திருக்கலாம்.. ஆனால் கார்த்திக் அவன் ஆசைபட்ட ஒரு வாழ்க்கையை வாழ துணிந்து இந்த தவறுகளை செய்யத் துவங்குகிறான். இது எதுவுமே அவனுக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் தன் தாய் செய்த தவறுக்காக அவளை அவன் கொலையே செய்திருக்கிறான். அது அவன் அறியாவயதில் செய்த தவறு என்று சப்பைகட்டு கட்டமுடியாது.. ஏனென்றால் அவன் வளர்ந்தபிறகும் தாயை வெறுக்கிறான். இந்த கேரக்டர் எப்படி இருக்கிறது தெரியுமா..? தன் ராஜ போக வாழ்க்கைக்காக ஒரு மாளிகையில் திருடிவிட்டு வரும் திருடன் ஒருவன்.. வழியில் பசிக்காக… திருடியவனை தர்ம அடி அடிப்பது போல் இருக்கிறது.. ஆனால் இதையெல்லாம் ஆடியன்ஸ் யோசிக்கமாட்டார்கள் என்பதற்காக அதை சரியென்று ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..

    மேலும் மந்திரப்புன்னகை, 18 வயசு, நான் என தொடந்து வரும் படங்களில் தாய் தவறு செய்கிறாள், தந்தை தற்கொலை செய்கிறார் என்ற மேம்போக்கான ஜோடனைகள் வெறுப்பையே தருகின்றது.. அதைப் பற்றி மேற்கொண்டு பேச விரும்பவில்லை.

    அடுத்ததாக என்ன உறுத்தல் என்றால் எதிர்பாராமல் அசோக் மரணமடைந்து விடுகிறான். அந்த நேரத்தில் அசோக்கின் அப்பாவிடம் இருந்து போன் வர.. பிணத்தை என்ன செய்வது.. போலீஸ் தன்னை சந்தேகிக்குமே என்ற குழப்பத்தில் இருக்கும் சலீமாக மாறிய கார்த்திக் எதுவும் யோசிக்க முடியாமல் போனில் அசோக் போல பேசி அவன் அந்த நேரத்தில் உயிரோடு தான் இருந்தான் என்பது போல் ஜோடிப்பது மிகச்சரி. ஆனால் அடுத்த நாள் அவனது அப்பா குடும்ப நண்பரிடம் ஒரு ஃபைலை போய் வாங்கி வா என்று சொல்லும் போது.. அவர் தன்னை பார்த்தது இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவன் அதை ஒப்புக் கொண்டு செல்வது என்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை..

      அங்கு தாந்தான் அசோக் என்று கூறிக் கொண்டு சென்றால் அதனால் எந்தவிதமான பிரச்சனைகள் ஏற்படும் என்பதை யூகிக்க அவனுக்கு நிரம்பவே நேரம் இருக்கும் போதும் அவன் அந்த முடிவை எடுக்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.. இது திரைக்கதையில் சுவாரஸ்யத்திற்கு வேண்டுமானால் பயன்பட்டு இருக்கலாம்.. ஆனால் அது நெருடலான விசயம் என்பதை மறுப்பதற்கு இல்லை.. ஏனென்றால் சில குழப்பமான தருணங்களில் அசோக்கின் குரலைப் போல் பேசி சமாளிக்கிறான் என்பது ஓகே..

     ஆனால் நான் தான் அசோக் என்று சொல்லத் தொடங்கினால் அதில் இருந்து தப்பிக்க இன்னும் பல கொலைகளை செய்தால்தான் முடியும் என்பது நிதர்சனமான உண்மை.. அல்லது அசோக் இறந்துகிடக்கும் இடத்திலேயே அவனது அப்பா அந்த பைலை வாங்கச் சொல்லி கேட்கிறார் என்று வைத்திருந்தால் கூட ஓகேதான்.. அல்லது அசோக்கின் நண்பன் நான்.. அவன் வேறு வேலையாக சென்று இருப்பதால் நான் வந்தேன் என்று சொன்னால் கூட ஓகேதான்.. ஏனென்றால் விசாரணையில் போலீசே சலீம் என்னும் கார்த்திக்கிடம் சொல்கிறார்.. ”கடந்த பதினைந்து நாட்களில் அசோக்கை பார்த்தவர் நீங்கள் மட்டும்தான்” என்று…

    வேறுமாதிரி சொல்வதென்றால் கார்த்திக் அந்த இடத்தில் அசோக்காக நடிக்க தீர்மானிக்கிறான் என்பது.. அந்த இடத்தில் இயக்குநர் உள் நுழைந்து விடுவதால் நிகழ்கிறதோ என்றே தோன்றுகிறது.. அதாவது அடுத்து வரும் காட்சிகளில் அசோக்கின் நண்பன் கொல்லப்பட்டு… அந்த கொலைப்பழியை அசோக்கின் மீது திருப்பி அதனால் தான் அசோக் தலைமறைவானான் என்று கதை நகர ஏதுவாக இருக்கும் என்று இயக்குநர்.. அந்த கார்த்திக் கதாபாத்திரத்தை அந்த முடிவு எடுக்க தள்ளுகிறார்.. என்று எடுத்துக் கொள்ளலாம்...

    அடுத்ததாக சலீமை சந்தேகப்பார்வை பார்க்கும் அதிகாரி அவனைப் பற்றி விசாரிக்க சொல்லி ஃபேக்ஸ் அனுப்ப.. பேக்ஸ் வந்து சேரும் அதே நேரத்தில் கையில் கட்டுடன் சென்னை ஹாஸ்பிடலில் இருக்கும் கார்த்திக்.. கையில் கட்டுகூட இல்லாமல் திருநெல்வேலியில் வந்து வீட்டு கதவைத் திறக்கும் காட்சி.. நல்ல நகைச்சுவை..

    அசோக் அப்பாவின் நண்பர் குடும்பம் பேப்பரில் கூடவா உண்மையான அசோக்கின் போட்டோவைப் பார்க்கவில்லை என்ற சந்தேகம் தோன்றும் போது தொடரும்… என்று போட்டு தப்பித்துக் கொள்கிறார்கள்…

    இப்படி சில குறைகள் இருந்தாலும் தமிழ்சினிமாவின் இன்றைய சூழலுக்கு இது ஒரு வித்தியாசமான கரு. இதை ஒரு நல்ல சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லராக கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.. ஒரு சில இடங்களில் தோன்றும் உறுத்தல்களைத் தவிர்த்து திரைக்கதையில் பெரிதாக எதும் பலவீனம் இருப்பதாக தெரியவில்லை.. கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டிய நல்ல முயற்சி.. இந்த நான்…

No comments:

Post a Comment