Sunday 9 September 2012

18 வயசு



   ரேனிகுண்டாவின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநரின் அடுத்த படம். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து ஒருவழியாக திரைக்கு வந்துள்ள படம்… திரை மறைவில் படத்தை வெளியிடும்முன் பல விசயங்கள் நடந்ததாக பேசப்படுகிறது.. முதல்படத்தில் ஒரு சமூகமானது எப்படி சமூக விரோதிகளை உருவாக்குகிறது என்பதை யதார்த்தவியலுடன் பதிவு செய்தவர்.. இரண்டாம் படம் என்பதாலோ என்னவோ கதைக்கு ஏன் சிரமப்பட வேண்டும் என்று ஒரு காதல் கதையை கையில் எடுத்திருக்கிறார்… திரைக்கதையை எப்படி விறுவிறுப்பாக்குவது என்று யோசித்தவர் புதிதாக ஒரு மனோவியாதியை கையில் எடுத்திருக்கிறார்… அருகில் உள்ள விலங்கைப் பார்த்து அதைப் போலவே நடந்துகொள்ளும் மனோவியாதி..
     தாயின் தவறான நடத்தையால் தந்தை தற்கொலை செய்துகொள்ள.. மகனுக்கு மனநலம் பாதிக்கிறது.. அவனது அப்பா அவனுக்கு கதைகளில் கூறிய காடு மலைகளையே நிஜ வாழ்விலும் கற்பிதம் செய்து கொண்டு வாழ்கிறான்.. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தாயையே மகன் கொலை செய்துவிட.. அவனை பிடித்து தண்டனை வாங்க துடிக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்.. மனநலம் பாதித்தவன் என்பதால் அவனை காப்பாற்ற துடிக்கும் ஒரு மனநல மருத்துவர்.. இதற்கு இடையில் தான் இழந்த எல்லா பாசத்தையும் ஒட்டு மொத்தமாக கொடுக்க ஒருத்தி வந்திருக்கிறாள் என்று எண்ணி அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நாயகன் துரத்தி துரத்தி காதலிக்கும் ஒரு பெண்.. இவர்களுக்கு இடையே நடக்கும் கதைதான் 18 வயசு..

      மீண்டும் காதல் கோஷம் போட்டுக் கொண்டு ஒரு படம்.. நம் மக்களுக்கு(என்னையும் சேர்த்தே…) படம் பார்ப்பதிலும் அதைப் புரிந்து கொள்வதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது.. அது தொடர்பாக ஒரு பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன்.. இத்திரைப்படம் பார்க்கும் போது எனக்கு இரண்டு விதமான அனுபவங்கள் ஏற்பட்டன.. ஒன்று என் காது கிழியும் அனுபவம்… சென்னை தியேட்டர்களின் டி.டி.எஸ்க்கு காதைக் கிழிக்கும் அளவு சக்தி இல்லையே என்று எக்கசக்கமாக யோசிக்காதீர்கள்… என் காதை கிழித்தவர் என் பின்னால் அமர்ந்திருந்த ஒரு சக பார்வையாளர்… பாவம் காதலில் பல(மான) அடி வாங்கியவர் போலும்… கசிந்துருகும் ஒவ்வொரு காதல் வசனத்திற்கும் விசிலடித்தே என் காதைக் கிழித்துவிட்டார்…
         மற்றொரு அனுபவம்.. என் வாழ்நாளில் முதன்முதலாக பக்கத்துக்கு இருக்கையை நகத்தால் கிழித்த அனுபவம்.. (முக்கால்வாசி இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன…) முதல் பாதியில் சில காதல்…! எபிசோடுகள் வருகின்றன… மிக மிக அபத்தமான காட்சிகள்… சமீபத்தில் நான் பார்த்த மிக மிக எரிச்சலூட்டும் காட்சிகள்… அவைதான் என்னை இருக்கையை கிழிக்கும் அளவிற்கு கொண்டு சென்றன.. என்றால் மிகையாகாது… எப்படியும் படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற கட்டாயம்.. (நானே ஏற்படுத்திக் கொண்டதுதான்) மோசமான காட்சிகளையே சலித்துக் கொண்டு அமர்ந்ததால்.. இரண்டாம் பாதி பரவாயில்லை ரகமாகவே தெரிந்தது… சற்று கூர்ந்து கவனிக்கும் போதுதான் தெரிந்தது.. இது மற்றொரு ஏமாற்றுவகைச் சினிமா என்பது…

     அதைப் பற்றி மேலும் பேசுவதற்குமுன் உங்களிடம் சில பிரத்யேகமான கேள்விகள்.. உங்கள் மனசாட்சியிடமே நீங்கள் பதிலளியுங்கள்.. முதலாவது கேள்வி பார்த்தவுடனே பிடித்துப் போகும் ஓரளவு அழகான ஒரு பெண்ணை நீங்களும் காதலிக்கிறீர்கள்… ஒரு வகை மனநோயால் பாதிக்கப்பட்ட இளைஞனும் காதலிக்கிறான்… அவன் உலகில் அதிகம் நேசிக்கும் ஒரு ஜீவன் அந்த பெண் மட்டும்தான்.. அவனுக்கென்று வேறு யாருமே இல்லை.. அவன் இருவரை கொலை வேறு செய்தவன் என்பதால்.. அந்த பெண்ணின் உயிருக்கும் இவனால் ஆபத்து ஏற்படலாம்… இந்த இரண்டு காதல்களில் எந்த காதல் வெற்றிபெற வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்….?
    இரண்டாவது கேள்வி மனநிலை பாதிக்கப்பட்ட உங்கள் நண்பன் தன் தாயால் புறக்கணிக்கப்பட்ட அன்பிற்காக ஏங்கி தவிக்கும் நிலையில் இருக்கிறான்.. அவனிடம் நீயும் என்னைப் போல் ஒரு பெண்ணை காதலி… அவளது அன்பு உன்னை மாற்றும் என்று அறிவுரை கூறுவீர்களா…? அல்லது அவனுக்கு தேவையான அன்பையும் அரவணைப்பையும் செலுத்தி மருத்துவ சிகிச்சை கொடுப்பீர்களா…?
    மூன்றாவது கேள்வி.. ஒருவன் மனநிலை பாதிக்கப்பட்ட தன் நண்பனைப் பார்த்து ஒரு பெண்ணை காதலிக்கச் சொல்லி தூண்டிவி்டுவான் என்றால் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் யாராக இருக்கும்…?
   இவைகளுக்கு நீங்களே பதிலளித்துக் கொள்ளுங்கள்… படத்தில் என்ன நடக்கிறது தெரியுமா… அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒரு காட்சியில் பாம்பு போன்ற உடலசைவுடன் தனக்கு உதவி செய்யும் மற்றொரு காதல் பைத்தியத்தை கடித்துவிடுகிறான்… (சுயநினைவின்றியே…) ஆனாலும் அந்த மனிதன் சாவதில்லை… ஏனென்றால் அவன் சாவவது போல் காட்சி அமைத்தால் திரைக்கதை வீக்காகிவிடும்.. பார்வையாளன் நாயகன் நாயகி சேர வேண்டும் என்று நினைக்க மாட்டான்… மேலும் மனோதத்துவ டாக்டர் வேறு ஒரு காட்சியில் அவன் செய்த இரண்டு கொலையும் எமோஷ்னலில் செய்தது.. வேறு யாரையும் அவன் கொல்லமாட்டான் என்று கட்டியம் வேறு கூறுகிறார்…

    இதனால் காட்சியமைப்புகள் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் மனநிலையையும் உண்மையை சிந்திக்க விடாமல் மாற்றி அந்த காதல்ஜோடி சேர வேண்டும் என்ற குரூரமான எண்ணத்தை நம்முள் மெல்ல மெல்ல விதைக்கிறது… சரி அவந்தான் மனநலம் பாதிக்கப்பட்டவன்.. இந்த பெண்ணுக்கு என்ன தலையெழுத்து.. அப்படியென்றால் அவளையும் அனாதை ஆக்குவோம்… சரி அவளும் அநாதை… இவ்வளவு அழகான அந்த பெண்ணை வேறு யாருமே காதலிக்கவில்லையா..? அது எப்படி நடக்கும்.. அவள்தான் தழிழ் கதாநாயகி ஆயிற்றே..? அவள் மேல் முதன் முறை மோதுபவனும்.. கண்ணுக்குள் காதல் பார்வைப் பார்ப்பவனும் கதாநாயகனாக மட்டுமே இருக்கமுடியும்…
    இப்படி உண்மை வேறொன்றாய் இருக்க… அதைப் பற்றி யோசிக்க விடாமல் படத்தில் வரும் காதல் பைத்தியம் கதாபாத்திரத்தை போல.. காதல் வாழ்க.. இந்த காதல் ஜெயிக்கணும் என்று நீங்களும்.. உங்கள் எண்ணங்களும் கொந்தளிக்குமானால்… இது உங்களை ஏமாற்றும் சினிமாதானே…
   மேலும் தவறான வழியில் சென்ற தாய்.. தந்தை சுத்த ஒழுக்கசீலர்… தந்தை அட்ட கருப்பு… பிள்ளையும் அதே போல்.. தாயோ செக்க சிவப்பு… இது போன்ற பொதுப்புத்தி சார்ந்த விவரணைகள் மேலும் வெறுப்படைய செய்கின்றது… மேலும் அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏன் அத்தனை வெறுப்பு நாயகன் மீது…. அதற்கு எத்தனைக் காரணங்கள் சொன்னாலும்.. அது கதையின் விறுவிறுப்புக்காக திணிக்கப்பட்ட கதாபாத்திரமாகவே தெரிகிறது.. அந்த கதாபாத்திரத்தை எடுத்துவிட்டால்.. திரைக்கதை படுமோசமாகிவிடும் என்பதும் உண்மை… மேலும் பல நாடகத்தனமான காட்சிகள்… ஒட்டவே இல்லை…
     அங்கங்கே ரேனிகுண்டாவின் சாயலும் இருக்கத்தான் செய்கிறது.. தாய் தந்தையை இழந்த நாயகன்.. நாயகியின் கற்பை சூறையாட துடிப்பவன்.. நாயகனை வெறி கொண்டு துரத்தும் போலீஸ்… போன்றவைகளை சொல்லலாம்.. சில இடங்களிலும் சில பிரேம்களிலும் குணா, காதல் கொண்டேன் படங்கள் மனதில் வந்து போவதை தவிர்க்கமுடியவில்லை.. ஒளிப்பதிவு முந்தைய படத்தைப் போல் மிகச்சிறப்பானதாக இருந்தது.. ஜானி கடக்க வேண்டிய தூரம் ரொம்பவே உள்ளது… கதாநாயகி சில காட்சிகளில் அழகாக தெரிகிறார்… செவ்வாழை மற்றும் சத்யேந்திரன் சம்பந்தபட்ட காட்சிகள் படத்திற்கு ப்ளஸ்..
     க்ளைமாக்ஸ் காட்சியின் போது கண்களை துடைத்துக் கொண்டும்.. காது கிழிய விசிலடித்த ஒரு சிலரைப் பார்க்கும் போது…. படத்தில் காதல் வாழ்க.. காதல் ஜெயிக்கணும்.. என்று சொல்லிக் கொண்டு அலையும் அந்த காதல் பைத்தியம் கதாபாத்திரம்தான் மனதில் நிழலாடியது…
     இறுதியாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்… அந்த அமைதியான சூழலில் குண்டுகள் முழங்குகின்றன.. சில பெண்மணிகள் அழுது கொண்டு இருக்கிறார்கள்.. ஒரு மெல்லிய இசை முழங்குகிறது.. வீரர்கள் அணிவகுப்பில் வந்து உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.. இறுதியில் ராஜபக்சே வந்து சிங்கள வீரர்களின் தியாகத்தை பாராட்டுகிறார்… அல்லது ஒபாமா நேட்டோ படைவீரர்களின் தியாகத்தை பாராட்டுகிறார்.. அந்த இடத்தில் அந்த சூழ்நிலையில் நீங்கள் நின்று கொண்டு இருந்தால்….. ஒரு வேளை உங்களுக்கும் அழுகை வரலாம்..
    ஆனால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வரும் போது உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.. உங்களது ரத்தம் கொதிக்காதா…? ஒரு பொய்யான நாடகத்தை நடத்தி என்னையும் கண்கலங்க வைத்தாயே.. என்று கோபம் வருமல்லவா…? அதுதான் இது போன்ற ஏமாற்று சினிமாவைப் பார்க்கும் போதும் வர வேண்டும்… ஏனென்றால் உங்களது கண்ணீர் அவ்வளவு மலிவானதன்று…. அதை இப்படி வீணாக்காதீர்கள்… தமிழ் சினிமா இயக்குநர்கள் நம் தமிழ் மக்கள் இன்னும் இது போன்ற காதல் பைத்தியங்களாகவே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்..
ஏமாறாதே…… ஏமாறாதே……

No comments:

Post a Comment