Thursday 5 February 2015

இசை :

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் திரைப்பட வரைவிலக்கணத்தின்படி, ஒரு திரைப்படத்தில் இருக்க வேண்டிய அம்சங்களான காதல், காமம், உணர்ச்சி (காம உணர்ச்சி அல்ல..) என எல்லா அம்சங்களையும் இணைத்து வந்திருக்கிறது இசை. இந்த இசையில் இருக்கின்ற பேரானந்தம் என்னவென்றால், எஸ்.ஜே.வின் முந்தைய மூன்று படங்களில் இல்லாமல் போயிருந்த திரைக்கதை சுவாரஸ்யம் அவருக்கு மீண்டும் திரும்ப கிடைத்திருப்பதுவே…. இசைத் துறையில் தன்னைவிட பல படிகள் வளர்ந்து கொண்டு செல்லும் தன் சிஷ்யப்பிள்ளையின் மீது குருவுக்கு ஏற்படும் பொறாமையும், அதனால் வெளிப்படும் குரோதமும், தான் விட்ட இடத்தைப் பிடிக்க, அந்த குரு செய்யும் குரோதம் கலந்த நடவடிக்கையும் தான் இசை.


இது போன்ற கதைப் பிண்ணனி தமிழ் திரையுலகுக்கு முற்றிலும் புதியதல்ல. இரு வேறு இசை கலைஞர்களுக்கு இடையிலான போட்டிகளை நம் தமிழ் திரையுலகம் ஏற்கனவே கண்டிருக்கிறது.. இந்த இசை திரைப்படம் அதிலிருந்து ஒரு புள்ளி விலகி இசையமைப்பாளர்களுக்கு இடையிலான வாழ்க்கையை கையில் எடுத்திருக்கிறது. மேலோட்டமாக பார்க்கும் போது இது தமிழ் சினிமாவின் இரண்டு இசை ஆளுமைகளுக்கு இடையிலான பனிப்போராக கூட வடிவம் கொடுக்கிறது.. எப்படி இருந்தாலும் இது எஸ்.ஜே சூர்யாவிற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகான கவனிக்கத்தக்க ஒரு மீள்வரவு என்பதில் சந்தேகமில்லை.

படத்தின் மையமே வெற்றிக்கு பின்னான தோல்வி என்பதால், திரைப்படமும் வெற்றி தோல்வி தொடர்பான ஒரு அடிப்படை வசனத்தில் இருந்து அற்புதமாக தொடங்குகிறது.. ஒவ்வொரு வெற்றியின் மகிழ்ச்சிக்கு பின்னரும் ஒரு தோல்வியின் வலி புதைந்திருக்கிறது.. அந்த வலியை தாங்கிக் கொண்டு தோல்வியுற்றவன், வெற்றியாளனுக்கு வெற்றியை பரிசளிக்கிறான் என்கின்ற அந்த வசனத்தை வரலாற்றின் பக்கங்களில் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி கடந்து வந்த பிரபலங்களின் பிண்ணனியில் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.. அந்த பிண்ணனியின் கடைசி வடிவமாக தோல்வியின் வலியை தாங்கிக் கொண்டு இருக்கும் அந்த இசையமைப்பாளரான சத்யராஜ் காட்சிப்படுத்தப்படுகிறார்..

தன் தனிப்பட்ட இசைத் திறமைகள் தனக்கு அள்ளிக் கொடுத்த கெளரவமும், அங்கீகாரமும், அவருக்குள்ளாக ஆணவத்தையும் அள்ளிக் கொடுக்க, அள்ளிக் கொடுத்த அந்த ஆணவத்தை, அவர் கொஞ்ச கொஞ்சமாக சிந்திக் கொண்டே, ” நான் துப்பினால் இசைடா..” என்று எகத்தாளமாக இயக்குநரை சீண்ட, அவரும் பதிலுக்கு, “துப்புங்க… ஆனா கொஞ்சம் புதுசா துப்புங்க..” என்று தன் கெளரவத்தை அவர் காட்ட, அந்த கெளரவத்தின் மீது துப்பிக் கொண்டே, அந்த துப்பலில் இருந்தே இசையமைக்கிறார் இசையமைப்பாளர் சத்தியராஜ். சமீபகாலத்தில் வந்த திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரத்திற்கான ஒரு மிகச்சிறந்த அறிமுகமாக இந்தக் காட்சியை நான் பார்க்கிறேன். ஒரு கதாபாத்திரம் அதற்குரிய குணாதிசயங்களோடு காட்சிப்படுத்தப்படுவது தமிழ் சினிமாவில் மிகவும் அரிதான ஒரு நிகழ்வு.. அது இங்கு நடந்திருக்கிறது..

தற்போது வாய்ப்புகள் குறைந்து போய், வெளியே அதிகம் தலைகாட்டாமல் வீட்டிற்குள்ளாகவே முடங்கிப் போய் இருக்கும் இசையமைப்பாளரான சத்தியராஜ், தனக்கு கிடைத்த அங்கீகாரங்கள் இசையின் மூலமாகவே கிடைத்திருக்க.. தனக்கு கிடைக்கும் அவமானங்களையும் இசை வடிவங்களின் வாயிலாகவே புரிந்து கொள்வதாக காட்சிப்படுத்தி இருக்கும் விதம் கவித்துவமானது.. தன்னிடம் வேலைக்காரராக பணிபுரியும் கஞ்சா கருப்பு காபியை எடுத்துக் கொண்டு மாடிப்படிகளில் நடந்து வரும் போதும், அந்த காஃபியை டீப்பாயில் வைக்கும் போதும், அந்த சத்தங்கள் கொடுக்கும் ஒலி வடிவங்களின் தாளகதிகளை அவர் தனக்கான அவமானமாக எடுத்துக் கொள்ளும் இடங்கள் ஒரு மனப்புழுக்கம் கொண்ட இசைக்கலைஞனை தத்ரூபமாக நம் கண் முன்னால் நிறுத்துகிறது..


படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா இல்லை, தான் தான் என்று சொல்லுவது போல் இருக்கிறது சத்யராஜ் என்னும் கலைஞனின் நடிப்பு. அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலுமே அந்தந்த காட்சிகளுக்கு தேவையான உணர்வுகள், நக்கல், எள்ளல், கோபம், குரோதம், ஏளனம் என ஒவ்வொரு வடிவங்களில் பொங்கி வழிகிறது.. இப்படிப்பட்ட ஒரு கலைஞன் மிகச்சிறப்பான படங்களில் நடிக்காமல், மிகச்சாதாரணமான படங்களை மட்டுமே ஒத்துக் கொண்டு, பெரும்பாலும் ஒதுங்கியே இருப்பது கலைத்துறையின் கொடுமை.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா படத்தின் ஆரம்பத்திலேயே மொத்தக்கதையையும் வாய்மொழியாக சொல்லிவிட்டு, படத்தைத் தொடங்கும் தனித்துவமான குணாதிசயம் கொண்டவர்.. அதுவே அவரது சில படங்களுக்கு குறையாகவும் இருந்திருக்கிறது.. ஆனால் இந்த இசை திரைப்படத்தில் அந்தக் குறைகள் இல்லை.. கதையை முன்னரே சொல்லிவிட்டாலும் கூட திரைக்கதையில் இருக்கின்ற சுவாரஸ்யங்கள் படத்தை காப்பாற்றிவிடுகின்றன. இயக்குநராக ஜொலிக்கின்ற எஸ்.ஜே வழக்கம் போல நடிகராக பல இடங்களில் படுத்தி எடுக்கிறார்.. (ஹீரோயினையும் சேர்த்து..) இவர் காமலயத்துடன் ஏங்கிக் கொண்டு பேசும் சில கணங்கள் கூட தாங்க முடியாத எரிச்சலையே கொடுக்கின்றது.. அந்த கரு கலைகின்ற காட்சியின் போது மட்டும் எஸ்.ஜேவின் நடிப்பு அமர்களமாக இருக்கிறது. அதை காட்சிப்படுத்தி இருக்கும்விதமும் சிறப்பு.. கதாநாயகியாக அறிமுகப்படுத்தி இருக்கும் சாவித்ரியின் அங்க வளைவுகளை காட்டியிருக்கும் விதத்தின் மூலம் போதை ஏற்றுகிறார் இயக்குநர்.. இந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் போல நடிக்கவும் வருவதால் கொஞ்ச காலமாவது கோடம்பாக்கம் பக்கம் பார்க்கலாம் என்று நம்புகிறேன்..

படத்தின் குறைகள் என்று பார்த்தால், படத்தின் முதல்பாதி முழுவதுமே குறைதான்.. சுவாரஸ்யமான திரைக்கதை என்று சொன்னாலும் கூட, அது முதல்பாதி திரைப்படத்தில் தெரிவதே இல்லை. படம் பார்க்கும் நாம் கதை கொஞ்சம் கூட நகருவது போல் தெரியவில்லையே என்று நெளியத் தொடங்குகிறோம்.. ஆனால் கதை நகர்ந்து கொண்டு தான் இருந்தது என்பதை இரண்டாம் பாதியில் விளக்குகிறார் இயக்குநர்.. இருப்பினும் அந்த முதல் பாதியின் நீண்ட நெடிய காதல், காம அத்தியாயங்கள் எரிச்சலைக் கொடுப்பதாலும், திரைப்படத்தின் தனித்தன்மையை கெடுத்து, இயக்குநர் மற்றும் நடிகரின் தனித்தன்மையை மட்டுமே காட்டுவதாலும் கண்டிப்பாக முதல்பாதி முழுவதுமே மைனஸ் தான்.. அதுபோல இரண்டாம் பாதி திரைப்படம் சுவாரஸ்யமாக இருந்தாலும், ஏகப்பட்ட லாஜிக் உதறல்கள்.. இந்த லாஜிக் உதறல்கள் எல்லாவற்றுக்குமே ஒரு பதிலை சொல்லி தப்பித்துக் கொள்கிறார் இயக்குநர்… படத்தின் நீளமும் மிகமிக அதிகம்..


இவை தவிர்த்து படத்தில் பேச வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம் படத்தின் க்ளைமாக்ஸ்.. நாம் யாருமே யூகிக்க முடியாத ஒரு க்ளைமாக்ஸ்.. ஆனால் இந்த க்ளைமாக்ஸ் எல்லோரையும் திருப்திப்படுத்தும் என்று சொல்லிவிட முடியாது.. என்னை இந்த க்ளைமாக்ஸ் ஈர்க்கவில்லை என்பதே உண்மை.. பல கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டிய சிக்கலான தருணத்தில் இருக்கின்ற ஒருவன், தூங்குவதைப் போல் நடித்து அந்த சிக்கலை தவிர்த்துவிடுவது என்ன மாதிரியான சுவாரஸ்யத்தைக் கொடுக்குமோ அதே மனநிலையைத் தான் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி கொடுக்கிறது.. எந்தவொரு திரைப்படமாக இருந்தாலும், அது உண்மையாகவே நடந்து கொண்டிருக்கிறது என்பதான உயிர்ப்புநிலையை பார்வையாளருக்கு அத்திரைப்படம் கொடுக்க வேண்டும்.. அதுவே அதன் பலம். ஆனால் இசை திரைப்படம் இறுதிகாட்சிகளில் அந்த உயிர்ப்புநிலையை தானே கொன்றுவிடுவதால் அதுவே அதன் பலத்தை குறைத்துக் கொள்கிறது..

இசையமைப்பாளராகவும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஆச்சரியப்படுத்துகிறார்.. இரண்டு பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.. அதைப் போலவே பிண்ணனி இசையும்.. இசைத்துறையிலும் ஓரளவுக்காவது முத்திரை பதிப்பார் என்று நம்பத் தோன்றுகிறது.. காடு சார்ந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சவுந்தரராஜன் தன் முத்திரையை பதிக்கிறார்.. எடிட்டர் ரியாஸ் இன்னும் சிலபல இடங்களில் துணிந்து தன் கத்தரியை போட்டிருக்கலாம்.. தவறிவிட்டார்..

மொத்தத்தில் திரைப்படம் சத்தியராஜ், கஞ்சாகருப்பு போன்றோரின் மிகச்சிறப்பான நடிப்பாலும், இயக்குநரின் சுவாரஸ்யமான இரண்டாம்பாதி திரைக்கதையாலும் உங்களுக்கு பிடித்து, க்ளைமாக்ஸ் காட்சியில் பிடிக்காமலும் போகலாம்…. அல்லது முன்னைவிட அதிகமாக பிடிக்கவும் செய்யலாம்.. எப்படி இருந்தாலும் அந்த முன்பாதியை கடப்பதற்கு பல்லைக் கடித்துக் கொள்ளும் ஒரு அசாத்தியமான பொறுமையும் வேண்டும்.. ஆனாலும் கண்டிப்பாக ஒரு முறை பார்ப்பதற்கான தகுதியான படம் தான் இசை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..





No comments:

Post a Comment