Tuesday, 8 October 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா:

சினிமா தவிர்த்த பிற தொழில்களில் இயங்குபவர்களுக்கு சமூகத்தின் மீதான தார்மீகப் பொறுப்பு இருக்க வேண்டுமா என்று எனக்குச் சொல்லத் தெரியாது.. ஆனால் குறிப்பாக சினிமா இயக்குநர்களுக்கு அது ஓரளவேனும் இருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அந்த தார்மீகப் பொறுப்பு கொண்டு இயங்கக்கூடிய இயக்குநர்களில் கோகுலும் ஒருவர் என்பது என் கணிப்பு. ஒரு இயக்குநரின் முதல் படத்தைப் பார்க்கும் போது நம்மால் ஓரளவுக்கு ஊகிக்க முடியும். இந்த இயக்குநரின் தேவை என்னவாக இருக்கிறது, பணமா, புகழா, தன்னை நிருபிக்க வேண்டும் என்ற ஆர்வமா..? இல்லை நல்ல படத்தை சமூகத்துக்கு கொடுத்திருக்கிறேன் என்கின்ற மன நிறைவா…? என்பதை. இயக்குநர் கோகுலின் முதல்படமான ”ரெளத்திரம்” ஒரு சராசரி படமாகவே இருந்தாலும் அதில் அவர் சொல்ல வந்த விசயம், அவரது பொறுப்புணர்ச்சியை ஓரளவுக்காவது புரிய வழிவகை செய்தது… ஆனாலும் தமிழ் சினிமா வணிகச் சந்தையில் விலை போகாமல் ரெளத்திரம் முடங்கிப் போனதால், வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிர்பந்தத்தில் தன் கொள்கை முடிவுகளை தளர்த்திக் கொண்டு, தன்னை வெகுஜன மக்களுக்கு பிடித்தவனாக மாற்றிக் கொண்டு நீ, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்று நம்மைப் பார்த்து கேட்பதைப் போல் தன் இரண்டாம் படத்துடன் களம் இறங்கி இருக்கிறார் கோகுல்..


“நாய் வாலை நிமிர்த்த முடியுமா..?” என்னதான் தன் கொள்கைப் பிடிப்பில் இருந்து இறங்கி வெகுஜன படங்களை நோக்கி இயக்குநர் வந்திருந்தாலும், இன்னும் அவரது கொள்கைகளை முற்றாக தளரவிட முடியவில்லை போலும்.. இதிலும் “say no to drinks” என்னும் ஒரு முக்கியமான சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தையே தாங்கி வந்திருக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் ஒரு பெண் தன் காதலன் குடிக்கமாட்டான் என்று சொல்வதை ஒரு க்ரிடிட்டாக கருதாமல், தகுதி குறைபாடாக கருதும் நாகரீக கலியுகத்தில், தன் காதலனின் பிறந்தநாளுக்கு பீர் பாட்டிலையே பரிசளிக்கும் பண்பாட்டு கலாசார காலத்தில், இப்படி ஒரு மோசமான கருத்தை சொல்கிறாயே, அதை நான் கேட்கக்கூட மாட்டேன் என்று காதுகளைப் பொத்திக்கொள்ளும் நம் போன்ற குரங்கு கூட்டம், படம் தொடங்குவதற்கு முன்பு வரும் முகேஷைப் பார்த்தால் முகம் சுளிப்பதைப் போல் படத்தின் பெரும்பாலான இடங்களில் தங்கள் முகம் சுழித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி. எதிர்வீட்டில் குடியிருக்கும் குமுதாவை (நந்திதா) காதலிப்பதாகச் சொல்லிக் கொண்டு டார்ச்சர் செய்ய.. அது அண்ணாச்சியான பசுபதியிடம் பஞ்சாயத்துக்கு வருகிறது… பஞ்சாயத்தின் பின்புலத்தில் சுமார் மூஞ்சி குமாரின் காதல் எபிசோடின் முன்கதை விரிகிறது.. வழக்கமான காரணமே இல்லாத ஒரு காதல்…. வழக்கத்துக்கு மாறாக காதலனை வெறுக்கும் நாயகி… அந்த ஒன்லைன் மட்டுமே சற்று சுவாரஸ்யம்… பஞ்சாயத்தில் பசுபதியின் தீர்ப்பு என்ன என்பதையும் அதனால் இவர்கள் வாழ்க்கை எப்படி மாறியது என்பதும் மீதிக்கதை…


இரண்டாவது ஹீரோ பாலாவாக அஸ்வின். மார்க்கெட்டிங்க் ஊழியர்.. இவருக்கு மேனேஜராக எம்.எஸ்.பாஸ்கர். எப்போதும் அஸ்வினை கொண்டு கேரம் பால் ஆடுபவர்.. இதுபோக அவரது காதலியாக க்யூட் சுவாதி.. இவர்களது காதலுக்கு மிகப்பெரிய எதிரியே அஸ்வினின் குடிப்பழக்கமும், அளவுக்கு அதிகமாக அவர் பேசும் பொய்யும் தான்… இந்த குடிப்பழக்கத்தால் அஸ்வின் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள… அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்ததா…? அல்லது பெரும்பிரச்சனையாக மாறியதா..? என்பது மீதிக்கதை


மூன்றாவது கதையாக நான் கடவுள் ராஜேந்திரனும், அவரது நண்பரும் சேர்ந்து பாரில் செய்கின்ற கொலை வருகிறது… அந்தக் கொலையை அவர்கள் ஏன் செய்தார்கள்…? அதன் பிண்ணனி என்ன..? அதன் முடிவு என்ன ஆனது என்பது மீதிக்கதை…

இப்படி சம்பந்தமே இல்லாத மூன்று கதைகளை வலுக்கட்டாயமாக ஒரு மையப் புள்ளியில் பிணைக்க முயன்றிருக்கிறார்கள்.. அதனால் தானோ என்னவோ திரைக்கதை ஒரு தெளிவு இல்லாமல் தாறுமாறாக அங்கும் இங்குமாக பயணிக்கிறது… Possibility யோட பொருந்தாமல் Probability யோடு பொருந்தக்கூடிய கதை… நல்ல கருத்துள்ள படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்ற இயக்குநர்கள் ஏனோ நல்ல திரைக்கதை அமைப்பதில் தடுமாறிவிடுகின்றனர்.. மேலும் படம் முழுவதும் இதை சீரியஸான படமாக கொடுப்பதா…? இல்லை காமெடிப் படமாகக் கொடுப்பதா…? என்னும் குழப்பம் நிலவியது போல் தெரிகிறது.. மேலும் ஒரு அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்த வேண்டிய காட்சிகள் எல்லாம் காமெடியால் வீரியம் இழந்து போவதால், குடி தொடர்பாகச் சொல்ல வந்த நல்ல விசயத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் பலர் அதையும் காமெடியாக எடுத்துக் கொண்டு தியேட்டரை விட்டுச் வெளியேறுகின்றனர்…


தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற பயத்தோடு படம் செய்திருக்கிறார்கள் என்பதை கதாபாத்திர தேர்வுகள் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது. விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, மேடைப் பேச்சாளர் ராஜா, ரோபோ சங்கர், லிவிங்க்ஸ்டன், சூரி, அஸ்வின், சுவாதி, எம்.எஸ்.பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், இது போக அந்த அயிட்டம் கேர்ள், ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு, அந்த மலையாளப் பெண் என்று ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம்… ஆனால் இந்த கதாபாத்திரங்களில் ஒன்று கூட சீரியஸ் கதாபாத்திரம் இல்லை… எல்லோருமே ப்ரேம்களில் காமெடி செய்து கொண்டே இருக்கிறார்கள்..

ஆனாலும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது கோகுல்-கார்க்கி கூட்டணியில் எழுதப்பட்ட சில சிறப்பான ஒன் – லைனர் வசனங்களும்… விஜய் சேதுபதி, பசுபதி மற்றும் சில துணை கதாபாத்திரங்களின் அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பும் தான்… அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி அலட்டிக் கொள்ளாமல் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்… பஞ்சாயத்து காட்சியில் மிகத் தெனாவெட்டாக பசுபதி முன்னால் உட்காருவதும், அவரையே காக்கா பிடிக்க முயலுவதும், ஒவ்வொரு ப்ளாஷ்பேக் முடிவிலும் ” ஆனா குமுதா ஹேப்பி அண்ணாச்சி…” என்று பசுபதியை குழப்பி சூடேற்றுவதுமாக மிக வித்தியாசமான சளைக்காத நடிப்பு… வாழ்த்துக்கள்..


இவருக்கு அதகளப் போட்டியாக மிரட்டி இருப்பது, பசுபதி தான்… சர்க்கரை நோயாளி தாதாவாக விரல் நடுங்க பேசுவதும், அந்த நடுக்கத்துக்கு நடுவிலும் விஜய் சேதுபதியை அதட்டி நடுங்க வைப்பதும், அந்தரங்க போட்டோவைப் பார்க்கப் போகும் ஆவலில் எச்சில் விழுங்குவதும், “இரண்டு வரி பாடுவான்னு நினைச்சா… முழு பாட்டு பாடுறாண்டா அவன்…” என்று பாடல்களையும் பகடி செய்து எகிறுவதும், தன்னை மளிகை கடை அண்ணாச்சி என்று விளித்ததை எண்ணி அசடு வழிந்து அந்த வார்த்தையை சொல்ல தயங்குவதுமாக தகிடுதத்தம் நடிப்பு… வெளுத்து வாங்கி இருக்கிறார் பசுபதி..

நந்திதாவுக்கும், சுவாதிக்கும் வழக்கமான நாயகர்களை காதலிக்கும் தொழில் முறை நடிப்புதான்.. புதிதாக சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.. ஆனால் அதிலும் விஜய் நந்திதா காதலை விட, சுவாதி அஸ்வின் காதலின் இணக்கமும், சுணக்கமும் வெகுவாக நம்மை கவர்கிறது. இவர்களை தவிர்த்துப் பார்த்தால் ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக வரும் நண்பரின் உடல்மொழியும் டயலாக் டெலிவரியும் க்ளாஸ்… ”ப்ரெண்டு.. லவ் மேட்டரு.. பீல் ஆயிட்டாப்ல… குவார்ட்டர் அடிச்சா.. கூல் ஆய்டுவாப்ல..” என்று அதே டயலாக்கை ரீப்பிட் அடித்தே ஸ்கோர் செய்கிறார்.. மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பும் சூப்பர்.. அஸ்வினைக் கரித்துக் கொட்டுவதும், பின்பு வெடித்து கரிசனம் காட்டுவதுமாக மிக யதார்த்தமான நடிப்பு… இது தவிர்த்து ரோபோ சங்கரும், நான் கடவுள் ராஜேந்திரனும் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றனர்…

மகேஷ் முத்துச்சாமியின் கேமரா கதைக்கு தேவையானதை செவ்வனே செய்திருக்கிறது… சித்தார்த் விபினின் பாடல்களும் பிண்ணனி இசையும் சுமார் ரகம்… மொத்தத்தில் ஒரு சீரியஸான படமாகவும் இல்லாமல், முழுக்க முழுக்க காமெடி படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் நின்று முழித்தாலும், பசுபதி, சேதுபதி போன்ற சில தனிப்பட்ட ஆளுமைகளின் நடிப்பாலும், தவறான எண்டர்டெயினராக இல்லாமல், தகுதியான எண்டர்டெயினராக இருப்பதால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் என்ற தகுதியைப் பெற்றுவிடுகிறான் இந்த பாலகுமாரன்…
“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…”

No comments:

Post a Comment