Saturday, 29 June 2013

அம்பிகாபதி:

அம்பிகாபதி அமராவதி இதிகாசம் நான் படித்ததில்லை. அதனால் இந்த அம்பிகாபதிக்கும் அந்த இதிகாசத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பதை நான் அறியேன். காசியில் வாழ்ந்து வரும் ஒரு இந்து அய்யர் குடும்பத்து பையன் ஒருவன் தன் முஸ்லீம் காதலிக்காக என்னவெல்லாம் செய்யத் துணிகிறான் என்பதே இந்த அம்பிகாபதியின் திரைக்கதை.


தனுஷ் காசியில் வாழ்ந்து வரும் குந்தன் என்னும் அய்யர் குடும்பத்துப் பையன் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்துகிறார். ராவண வதம் செய்ய பணம் வசூலிக்கும் வேட்டையில் தன் குட்டி வானரப் படையுடன் அருகிலிருக்கும் முஸ்லீம் வீட்டுக்குள் நுழையும் தோராயமாக 8 வயது நிரம்பிய குந்தனுக்கு, அங்கு தொழுகையில் இருக்கும் அதே 8 வயது நிரம்பிய ஸோயா என்ற பெண்ணைப் பார்த்தவுடனே காதல் துளிர்க்கிறது.


10ம் வகுப்பு படிக்கும் போது விடலைப் பருவ வேகத்தில் அவளிடம் தன் காதலைச் சொல்ல.. அவள் இவனைக் கன்னத்தில் அறைந்துவிட்டு செல்கிறாள். இவன் காதலைச் சொல்வதும் அவள் கன்னத்தில் அறைவதும் வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் 15 முறை தொடருகிறது. குந்தனின் பிடிவாதத்தால் அவனைச் சந்திக்க ஒத்துக் கொள்ளும் ஸோயா அவனது பெயரைக் கேட்க அவன் ஒரு முஸ்லீம் பெயரைச் சொல்லி விலகுகிறான்.
சந்திப்பின் போது அவன் படிக்கின்ற கவிதையில் மயங்கி ஸோயாவுக்கும் காதல் மலர.. அவன் நெஞ்சோடு சாய்ந்து அவன் மார்பைத் தடவ, நெஞ்சோடு ஒட்டிக் கொண்டிருந்த கயிறு, அவன் அய்யர் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட.. கண நேரத்தில் மலர்ந்த காதல், ”கயிற்றால்” கண நேரத்தில் கருகிவிடுகிறது. 16ம் முறையாக அவனை அறைந்துவிட்டு செல்கிறாள் ஸோயா. அடுத்த இரண்டு காட்சிகளில் குந்தனின் வன்முறையால் மீண்டும் அவர்களுக்கும் காதல் அரும்ப… அடுத்த காட்சியிலேயே அது ஸோயாவின் பெற்றோருக்குத் தெரிந்து மீண்டும் கருகிவிட.. ஸோயாவின் குடும்பம் அவளை ஆக்ராவுக்கு படிக்க அனுப்புகிறது. நான் உனக்காக காத்திருப்பேன் என்று வாக்களிக்கும் குந்தனை வேறு வழியின்றி பிரிந்து செல்கிறாள்.


முதல் முப்பது நிமிடக் கதை இது. பெரிதாக எதுவும் இல்லாமல் காதலை மட்டுமே பெரிதாகக் காட்டும் காட்சிக் கலவைகளால் பின்னப்பட்டு காதலை கற்றுக் கொடுக்க வந்த நம் கலாச்சாரப் படமாகவே அது எனக்கு தென்பட்டது. ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் அதன் கதை யதார்த்தத்தின் சூழலை தன்னைச் சுற்றி சுற்றிக் கொண்டது போல் ஸோயாவின் கதாபாத்திரம் பேசத் தொடங்கிய போதுதான் சற்று ஆசுவாசம் கிடைத்தது. ஆனால் அதை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்வது என்பதில் இயக்குநருக்கு ஏற்பட்ட குழப்ப முடிச்சுகள், இரண்டாம் பாதி முழுவதும் திரைக்கதையை மேடு பள்ளங்கள் நிரம்பிய கிராமத்து சாலைகளில் பயணிக்கச் செய்துவிடுவதால், பயணம் செய்த நமக்கு களைப்பே மிஞ்சுகிறது.

ஆக்ராவில் இருந்து 8 வருடம் கழித்து திரும்பி வரும் ஸோயாவுக்கு குந்தனை அடையாளமே தெரிவதில்லை. தன்னை அவளுக்கு நினைவு கூரவே குந்தன் பல பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. குந்தன் தன் நினைவு மீட்டல்களைத் தொடர்ந்து தன் காதல் வீணையை மீட்டத் தொடங்க ஸோயா பயங்கர அதிர்ச்சியுடன், மிக பக்குவமாக ”அது தன் அறியா பருவத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்தது. எனக்கு இப்போது உன்மீது காதல் இல்லை” என்பதை தெரிவிக்கிறாள். ஸோயாவின் பதிவு குந்தனிடம் மட்டும் தான் கனிவாக இருக்கிறது. தனக்கு விருப்பமில்லாத ஒருவனை திருமணம் செய்ய பெற்றோர் வலியுறுத்தும் போது அவளது பதிவு சற்று காட்டமாகவே இப்படி வெளிப்படுகிறது. ”நீங்க சொல்ற பையனைக் கல்யாணம் செஞ்சாலும், குந்தன் மாதிரி பிச்சைக்காரப் பயல கல்யாணம் செஞ்சாலும் ஒண்ணுதா…”

இப்படி பயணிக்கும் கதையில் ஒரு கட்டத்தில் தான் டெல்லியில் படிக்கும் போது தன்னோடு படித்த ஒருவன் தன் மனதை கவர்ந்ததாகவும், அவனைத் தான் காதலிப்பதாகவும் சொல்லும் ஸோயா குந்தனிடமே உதவி கேட்க… மீதி என்ன நடந்தது என்பதை விருப்பமிருந்தால் வெண் திரையில் கண்டு கொள்ளுங்கள்….


இயல்பாகவே மனித ம(இ)னம் சுயநலமிக்கது. தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தனக்கு விருப்பமில்லாத நபர்களிடம் கூட அவர்கள் விரும்புவது படி நடந்து கொள்ளவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தான் நாம் எல்லாருமே. இந்த உளவியல் சார்ந்த கருத்துப் பொதிவு அம்பிகாபதியில் அழகாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஸோயாவுக்கு குந்தன் மீது காதல் இல்லாவிட்டாலும், தன் காதலில் வெற்றிபெற குந்தனை அவள் அழகாக பயன்படுத்திக் கொள்கிறாள். குந்தன் மட்டும் அதற்கு சற்றும் இளைத்தவனும் இல்லை. ஸோயா மீதான தன் காதல் நிறைவேற, குந்தன் தன்னை காதலிப்பதாக சொல்லிக் கொண்டு, தன்னுடனே சிறுவயதில் இருந்து சுற்றிக் கொண்டு திரியும் தன் தோழி பிந்தியாவை பயன்படுத்திக் கொள்வதில் அவனும் தவறுவதில்லை.

இப்படி முதல்பாதியில் கதாபாத்திரங்களில் இருக்கும் ஒரு தெளிவும் நேர்த்தியும் இரண்டாம் பாதியில் இருப்பதில்லை என்பது படத்துக்கு மிகப்பெரிய தொய்வு. அதற்கு மிகப்பெரிய காரணம் படம் வாழ்வியல் தளங்களை விடுத்து அரசியல் தளங்களில் சமூக சேவைகளில் பயணிக்கத் தொடங்குவதுதான். ஒரு கட்டத்தில் “உன் பேரக்கூட நான் சொல்லமாட்டேண்டி… உன்ன விட்டா எனக்கு பொண்ணே கிடைக்காதா…” என்று ஸோயாவை விலகிச் செல்லும் குந்தன் அவன் பேசுவதற்கு ஏற்ப நடந்து கொள்வதும் இல்லை… ஸோயாவின் தேவை என்ன..? அந்த கதாபாத்திரம் எதை நோக்கி தன்னை நகர்த்துகிறது..? என்பதில் பெரும் குழப்பமே நிலவுகிறது. அவள் குந்தனை பழிவாங்க நினைக்கிறாளா…? தன் காதலனின் கனவை நிறைவேற்ற நினைக்கிறாளா…? இல்லை உண்மையாகவே சமூக சேவைகளில் நாட்டம் கொண்டவளாக மாறி இருக்கிறாளா..? இது எதுவுமே தெளிவாக இல்லை…


குந்தனாக தனுஷ்க்கு ஹிந்தியிலும் இது சொல்லிக் கொள்ளும்படியான படம். அவருக்கு தமிழ்படங்களில் ஏற்கனவே பரிச்சியமான கதாபாத்திரம் என்பதால் வெளுத்து வாங்குகிறார். க்ளைமாக்ஸ் காட்சியின் போது வாயில் இருந்து ரத்தம் கொப்பளிக்க அவர் பேசும் வசனங்களின் தொனியில் தான் ஒரு கைதேர்ந்த நடிகன் என்பதை வெளிக்காட்டுகிறார். வாழ்த்துக்கள் தனுஸ்.. ஆரம்ப காட்சிகளில் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து கொண்டு சின்ன சின்ன முக பாவனைகளில் வசீகரிக்கும் சோனம் கபூர், கையை அறுத்துக் கொண்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் போது தனுஸை அருகே அழைத்து முகத்தில் எச்சில் துப்பும் காட்சியை தவிர்த்து வேறெங்கும் பெரிதாக ஜொலிக்கவில்லை..

தோழி பிந்தியாவாக வரும் ஸ்வரா பாஸ்கரின் நடிப்பு கவனிக்க வேண்டிய ஒன்று. தன்னை விரும்பவில்லை என்பது தெரியும் போதெல்லாம் வெடிப்பதும், தன்னை கல்யாணம் செய்து கொள் என்று கெஞ்சுவதும், ஸோயாவைத் தேடிப் போகும் போதெல்லாம் “அவள நினைச்சே சாகப் போற…” என எச்சரிப்பதுமாக அருமையான நடிப்பு. சில கோணங்களில் சோனம் கபூரைவிட இவரே அழகாகவும் தெரிகிறார்.  நண்பனாக வரும் “மொகம்மத் ஆயூப்” சிறப்பாக நடித்திருக்கிறார். டைரக்டோரியல் டச் சென்று சொல்ல வேண்டும் என்றால், “குந்தனை திருடன் என்று எண்ணி பிடித்துவிட்டு அவனை போலீசில் பிடித்துக் கொடுக்காமல் நடுவே அமர்த்தி கல்லூரி தரப்பு மாணவர்கள் சுற்றி அமர்ந்து கொண்டு அவன் ஏன் திருடனாக மாறினான் என்று விவாதிக்கும் காட்சியை சொல்லலாம். அதில் இருக்கும் நக்கல் மிக அருமை. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை விட பிண்ணனி இசை அருமை.. அதுவே படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் இருக்கிறது. நடராஜன் சுப்ரமணியம் மற்றும் விசால் சின்ஹாவின் ஒளிப்பதிவில் காசியும் ஆக்ராவும் அத்தனை அழகு..மொத்தத்தில் ஆனந்த் எல்.ராய் ஒரு காதல்கதையை உணர்ச்சிபூர்வமாக சொல்ல முயன்று அதில் பாதி வெற்றியும் அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஏனென்றால் இது ஒன்றும் லாயக்கில்லை என்று ஒதுக்கிவிட முடியாத படம். அதற்கு முக்கிய காரணம் தனுஷ் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான்.

1 comment: